Love With a Chance of
Drowning, a memoir by Torre DeRoche
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 24 வயதான ரொரி, தனது வசதியான சூழலை விட்டு விலகி அமெரிக்காவுக்கு ஒரு வருடம் வசிப்பதற்காய் வருகின்றார். கிராபிக் டிசைனராக அமெரிக்காவில் வேலை பார்க்கும் ரொரி, தற்செயலாக ஒரு ஆர்ஜெண்டீனாக்காரரை ஒரு கிளப்பில் சந்திக்கின்றார். இவான் ஆர்ஜெண்டீனாவில் அன்று நிலவிய அசாதாரண சூழலினால் தனது பதினேழாவது வயதில் அமெரிக்காவுக்குப் பெற்றோரோடு புலம்பெயர்ந்தவர். ஆர்ஜெண்டீனாவில் நடக்கும் சித்திரவதைகளையும், காணாமல் போதல்களையும், கண்காணிப்புச் சூழலையும் கண்டு வளர்ந்த இவானுக்கு படகில் உலகைச் சுற்றும் ஆசை இருக்கின்றது. ஐடித்துறையில் வேலை செய்தாலும் அந்தக் கனவுக்காய் ஒவ்வொரு அடிகளையும் எடுத்து வைக்கின்றார்.
தற்செயலான ஒரு சந்திப்பு, இரவில் உடல் பகிரும் அனுபவம் எல்லாம் இணைந்து ரொரிக்கு இவான் மீது காதல் வருகின்றது. ரொரியுடன் ஆறு மாதங்களைப் பகிரும் இவான், தன்னோடு படகில் உலகைச் சுற்றும் பயணத்துக்கு அழைக்கின்றார். ரொரிக்கு கடல் என்பது மிகப்பெரும் பயத்தைக் கொடுக்கும் விடயம். அதைவிட கடலுக்குள் இருக்கும் உயிரினங்கள் அச்சத்தைக் கொடுப்பவை.
காதலைக் கடலில் செல்லவிட்டு நிலத்தில் பிரிவின் துயரில் இருப்பதா அல்லது காதலுக்காய் இருக்கும் பயத்தை விரட்டிவிட்டு காதலனுடன் பயணிப்பதா என்ற தேர்வுச் சுழலில் ரொரி சிக்கிக் கொள்கின்றார். வாழ்வில் இவ்வாறான சந்தர்ப்பம் வரப்போவதில்லை என இவானுடன் படகில் செல்ல இறுதியில் ரொரி தயாராகின்றார்.
படகை பாய்மரத்தோடு ஓட்டிப் பழக்கமேயில்லாத ரொரி அதற்கான சில வகுப்புக்களை எடுக்கும் போது நிகழும் அனுபவங்களை மிகுந்த நகைச்சுவையுடன் ரொரிஎழுதிச் செல்கின்றார். அது மட்டுமில்லாது கடலில் ஏதேனும் நடந்தால் எப்படித் தப்புவது என்று எல்லாவித முன்னேற்பாடுகளையும் வாசித்து இன்னும் குழப்பமடைகின்றார். இவரின் சந்தேகதங்களைத் தீர்க்க முடியா இவான் இறுதியில், ‘அன்பே, சில வேளைகளில் தப்ப முடியாது. கடலில் இறந்தால், இவ்வளவு இள வயதில் சாகசம் செய்யப்போய், காதலர்களாய்த் தான் இறந்தவர்களாயிருப்பேன், அது எல்லோருக்கும் வராது’ என்று ஆறுதற்படுத்துகின்றார்.
இது வரை நிலப்பரப்புக்களினூடாக நிகழும் பயணங்களை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு நருக்குள் நிகழும் இந்தப் பயணத்தை வாசிப்பது சுவாரசியமாக இருந்தது. ரொரியினது முதல் கடல் பயணம் இதுவென்பதால் ஒவ்வொரு நிகழ்வுகளையும் புத்துணர்ச்சியுடன் பார்த்து, அதை விபரமாக எழுதிச் செல்கின்றார். கலிபோர்னியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பசுபிக் சமுத்திரத்தைத் தாண்டி, அங்கே ரொரியின் குடும்பத்தைச் சந்திப்பதாகத் திட்டமிடப்படுகின்றது.
அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் பெரும்பாலான தீவுகள் பிரான்சின் காலனித்துவத்திற்குட்பட்டவை என்பதால் அந்த மக்களோடு பிரெஞ்சில் உரையாடுவது சற்று சிக்கலாக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அந்த மக்களோடு தொடர்பு கொள்கின்றார்கள். தீவுகளின் மக்கள் இவர்களை அழைத்து உணவு கொடுக்கின்றனர். வீடுகளில் வளர்க்கும் கஞ்சாவை இவர்களுக்குப் பகிர்ந்து புகைக்கின்றார்கள். அவர்களின் வீட்டு முற்றங்களில் இருந்தே கடலில் டொல்பின்கள் துள்ளிக் குதிக்கும் அழகை இரசிக்கின்றார்கள்.
இவான் இதற்கு முன் கடல் பயணத்தைச் செய்தவர் என்றாலும், அவருக்கு பல்வேறு வகையான சிறுவிடயங்களை ஒழுங்காக செய்யத் தெரிவதில்லை. அவற்றைத் திருத்துகின்ற ரொரி, மாதங்கள் ஆக ஆக அவரும் ஒரு கடலோடியாகவே மாறுவதைப் பார்க்கின்றோம். சிறுபிள்ளைகள் போல இவர்களின் படகிலிருக்கும் கரைக்குப் போக உதவும் சிறுபடகை கடலுக்குள் தொலைத்தாலும், அதை மீள மீள கண்டுபிடிப்பதும், இன்னொரு நண்பராக அதை ரொரி மாற்றிக் கொண்டு அதைப் பற்றிக் கதை சொல்வதும் நமக்கு புன்னகையை வரச் செய்கின்றன.
இந்நூலில் ரொரி கடல் பயணத்தை மட்டுமில்லை, அவருக்கும் இவானுக்குமான காதலையும் சொல்கின்றார். எப்போதும் கடலில் அலைய ஆசைப்படும் இவான், இந்தப் பயணம் முடிந்தவுடன் தன்னோடு ஆஸ்திரேலியாவில் சேர்ந்து வாழத் தொடங்குவார் என நம்புகின்றார். எனினும் இவான் தொடர்ந்து தனக்கு கடல் பயணத்தைச் செய்ய ஆர்வமூட்டிய ஒரு முன்னோடியைப் பற்றித் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். அந்த முன்னோடி கடலுக்குள்ளேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தொடக்க காலங்களில் தன் மனைவியோடு கடல் பயணங்களைச் செய்த அவர், இறுதிக் காலங்களில் மனைவியைக் கரையில் விட்டு கடலில் வாழ்ந்து முடித்தவர் என்று சொல்கின்றார். அப்போது ரொரி, ‘அப்படி மனைவியைத் தவிக்க விட்டு கடலில் அலைந்தது சரியா?’ என இவானிடம் கேட்கின்றார். ‘சில வேளைகளில் மனைவியை விட அவருக்கு கடல் மீதான பெரும் விருப்பு இருந்திருக்கலாம், அதையும் விளங்கிக் கொள்ளலாம்’ என இவான் பதிலிறுக்கின்றார்.
கடல் பயணத்தின் போது பல்வேறு மனிதர்களை ரொரியும் இவானும் சந்திக்கின்றார்கள். சிலர் வருடக்கணக்காய் ‘கடல் ஜிப்ஸி’களாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு வகையில் கடலிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அவர்கள். ஒரு முறை பயணத்தின் போது கப்பலின் எஞ்சின் முற்றாக இடைநடுவில் நின்று விடவும், ஓட்டையும் ஓரிடத்தில் விழுந்து விடவும், ரொரிக்கு கடலுக்குள் தாங்கள் மூழ்கிவிடப் போகின்றோமோ என அச்சம் வருகின்றது. ஒரு மாதிரியாக பாய்மரங்களின் உதவியுடன் காற்றைக் கரம்பிடித்து நிலப்பரப்புக்குள் வந்து சேர்கின்றனர்.
மனிதர்கள் கடலில் வாழ்ந்தால் என்ன, நாளை விண்வெளியில் வாழ்ந்தால் என்ன, மனித உணர்வுகளிலிருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல. ஒருகட்டத்தில் ரொரி, இவானுக்குத் தன்னோடு நிலத்தில் வாழ விருப்பமில்லை, கடலிலே வாழ விருப்பம் என்பதை அவர் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்குப் பின்பான கடல் வரைபடத்தினூடாகக் கண்டுகொள்கின்றார். தன்னுணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காத காதலன் என கடல் பயணத்தை முக்கால்வாசித் தூரத்தில் ரொங்காத் தீவில் கைவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்கின்றார்.
இறுதி அத்தியாயத்தில் இவான் தன் பயணத்தை ஆஸ்திரேலியாவில் முடிக்கும் போது ரொரி அவருக்காக கரையில் காத்திருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. ஒரு பெரும் சாகசப் பயணத்தை ரொரியுடன் சேர்ந்து தொடங்கிய இவான், இறுதியில் கடலை விட ரொரியே தன் வாழ்வுக்கு முக்கியமென உணர்ந்ததாக, தான் தனித்துச் செய்த மிகுதிப் பயணத்தில் உணர்ந்ததாகச் சொல்கின்றார். தொடக்கத்தில் தனக்கிருந்த பயங்களை எல்லாம் தன் காதலுக்காய் விரட்டியொதுக்கிய ரொரி, இறுதியில் அந்தக் காதலை இடையில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தாலும் பெற்றுக் கொள்கின்றார்.
நமக்கு அவ்வளவு பரிட்சயமில்லாத கடல் பயணமும், மனிதர்கள் குறைவாய் வாழும் தீவுகளுமே இந்த நூலில் பெரும் பகுதியில் விபரிக்கப்பட்டிருந்தாலும், ரொரியின் அழகான வர்ணனைகளும், மெல்லிய நகைச்சுவையும் அலுப்பைத் தராது வாசிக்கச் செய்கின்றது. ஒரு வகையில், நாமெல்லோருமே நமக்கான பயங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். சில வேளைகளில், ரொரியைப் போல பயத்தைச் சற்று ஒதுக்கி வைக்கும் போது, புதிய உலகங்கள் நமக்காய் விரியத் தொடங்கவும் கூடும்.
............
நன்றி: 'தமிழினி'