படத்தில் தலைப்பைப் போல இது இரண்டு போப்புகளைப் பற்றிய படம். மரபுவாதியான ஜேர்மனியப் போப் பெனடிக்கிற்கும், மறுமலர்ச்சியைக் கொண்டுவர விரும்பும் ஆர்ஜெண்டீனிய போப் பிரான்ஸிற்கும் இடையிலான உறவையும், முரணையும் இந்தப் படம் முழுவதும் நாங்கள் பார்க்கின்றோம்.
போப் பெனடிக் போப்பாக இருக்கும் கடைசிக்காலங்களில் கார்டினலாக இருக்கும் பிரான்ஸில் ஆர்ஜெண்டினாவிலிருந்து தனது பதவியை இராஜினாமாய்ச் செய்வதற்காக ரோமுக்கு வருகின்றார்.அப்போது போப் பெனடிக் வத்திக்கானில் நடக்கும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றார். மரபுவாதியான பெனடிக் ஒருவகையில் சமகால உலகை விட்டு விலகிப்போய்க்கொண்டிருப்பவர். ஏற்கனவே இருந்த போப்புக்கள் வகுத்த வழிமுறையில் பாதை தவறாது பயணித்துக் கொண்டிருப்பவர்.
கத்தோலிக்க மதத்திற்குள், தேவலாயங்களுக்குள் பல சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கின்றன. தற்பால் உறவுகள், பாலியல் வன்முறைகள், இலஞ்சம் எல்லாம் வத்திகானைச் சுற்றிச் சுழல்கின்றன. பாவமன்னிப்பை வழங்கிவிட்டால் எல்லாம் யதார்த்தத்திற்கு வந்துவிடும் என போப் பெனடிக் நம்புகின்றார். கார்டினல் பிரான்ஸிலோ தேவாலயங்கள் பாவத்தின் கறைகளைப் பற்றி அக்கறைப்படுகின்றதே தவிர, அது ஏற்படுத்தும் காயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று மறுத்துப் பேசுகிறார். மேலும் தவறைச் செய்தவர்க்கு பாவமன்னிப்பை வழங்குவதன் மூலம் பாவத்தைச் செய்தவர் நிம்மதி அடைகின்றார். ஆனால் அவரால் பாவம் இழைக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைப் பற்றி தேவாலயம் கவலைப்படுகின்றதா என்கின்ற முக்கிய கேள்வியை எழும்புகின்றார்.
முரண் உரையாடல்களினால் இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்படுகின்றது. மரபுவாதியான போப் பெனடிக் நல்லதொரு பியானோ வாசிப்பாளர் என்பதையும், பீடில்ஸின் இரசிகர் என்பதையும் கார்டினல் பிரான்ஸில் வெளிக்கொண்ர்ந்துவிடுகின்றார். இந்தத் தடைகள் எதுவும் கார்டினல் பிரான்ஸிற்கு இருப்பதில்லை. டாங்கோ ஆடுபவராக, உதைபந்தாட்டத்தை தன்னை மறந்து இரசிப்பவராக, வறிய மக்களிடையே இறங்கி வேலை செய்பவராக அவர் இருக்கின்றார் . ஆனால் அவருக்கும் ஒரு இருண்ட காலம் என்பதை நாம் இத்திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் பார்க்கின்றோம்.
1970களில் ஆர்ஜெண்டீனா ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்குள் போகின்றது. இடதுசாரிகள், அரசவிழ்ப்பாளர்கள் மட்டுமின்றி, பாதிரிமார்களையும் கொடுங்கோல் ஜனாதிபதியின் இராணுவம் வேட்டையாடத் தொடங்குகின்றது. பல்வேறு தேவாலயங்கள் பைபிளை சற்று ஒதுக்கிவைத்து மார்க்கிசம் பற்றியும், புரட்சி பற்றியும் பேசத் தொடங்குகின்றன. பாதர் பிரான்ஸில் தனது நண்பர்களைக் காப்பாற்றுவதன் பொருட்டு அரசுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார். அந்தப் பொழுதுகளில் பாதர் பிரான்ஸின் இரண்டு பாதிரித்தோழர்கள் கடத்தப்படும்போது, பிரான்ஸிசே இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தவர் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றார். இந்தப் பொழுதிலேயே அவரது காதலியாகவும், பிறகு தோழியாகவும் மாறியவரை, கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்த காரணத்தால் பிரான்ஸிஸ்ல் இழக்கின்றார்.
இவ்வாறு குற்றஞ்சாட்டல்களுக்கும், இழப்புகளுக்கும் இடையில் ஆர்ஜெண்டீனா சர்வாதிகாரத்திலிருந்து ஒருமாதிரி விடுபடுகின்றது. வத்திகானின் பேச்சை இந்தக் காலங்களில் கேட்கவில்லையென ஒதுக்குப்புறமான மலைக்கிராமத்துக்கு எல்லாப் பதவியும் பறிக்கப்பட்டு, பிரான்ஸில் சேவைக்காக அனுப்பப்படுகின்றார். அங்கிருக்கும் மக்களோடு பழகி, அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குவதுடன், தன்னையும் மாற்றிக்கொள்ளும் பிரான்ஸிஸ் மீண்டும் ஆர்ஜெண்டீனா மக்களின் நன்மதிப்புக்கு உள்ளாகின்றார். பின்னர் வத்திகானால் கார்டினாலாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
இதே காலகட்டத்தில் 2013ல், பல்வேறு சர்ச்சைகளால் தனது வயதைக் காரணங்காட்டி போப் பெனடிக் தனது பதவியை இராஜினாமாய்ச் செய்யும்போது, அடுத்த போப்பாக, கார்டினல் பிரான்ஸிஸ் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அப்போது ஓரிடத்தில் போப் பிரான்ஸில் பெனடிக்கை நோக்கிச் சொல்வார், நீங்கள் பாரத்தை இறக்கிவைத்துவிட்டீர்கள், நான் இனிச் சுமக்கவேண்டி இருக்கின்றது' என்று.
பில்லியன்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவரான ஒரு போப்பின் பதவி என்பது மிகக் கடினமான ஒன்றுதான்.
போப் பெனடிக் தனது பதவியைத் துறக்கப்போகின்றேன் என்று சொல்லும்போது பிரான்ஸிஸ் அவரை ஓரிடத்தில் தடுப்பார். அப்போது போப் பெனடிக் சொல்வார், கடவுளின் குரலைக் கேட்கமுடியாத என்னால் இந்தப் பதவியில் தொடர்ந்து இருக்கமுடியாது என்று. அந்தக் கடவுளின் குரலை பிறகு போப்பாக வந்த பிரான்ஸிஸால் கேட்கமுடிந்ததா என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், அவர் ஏழைமக்களைத் தேடிப்போவதிலும், அவர்களோடு சாதாரணமாகப் பேசுவதன் மூலமாகவும் கடவுளின் குரலைக் கேட்கமுடியும் என நம்புவதாக போப் பிரான்ஸின் பாத்திரத்தினூடாக அறிந்துகொள்கின்றோம்..
இந்தத் திரைப்படம் நீண்டகாலமாக வத்திகான் மீதும், பாதிரிமார்கள் மீதும் வைக்கப்படும் முக்கிய எந்தக் குற்றச்சாட்டை நோக்கியும் நகரவில்லை என்பதை, அப்படி நகர்வதற்கு இடமிருந்தும் அங்கு போகவில்லை என்பதை ஒரு குறையாகத்தான் சொல்லவேண்டும். ஆனால் வத்திகானில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் ஒரு போப்பை நாம் இங்கே காண்கின்றோம். மரபுவாதியாக இருந்தாலும் இன்னொரு போப்பையும் அவரின் குறைபாடுகளுடன் சரி ஒருபக்கமாய் இப்படி இருந்துவிட்டுப் போகட்டுமென ஆறுதல்கொள்கின்றோம். அதிலும் மனம் உடைந்து போய் இருக்கும் போப் பெனடிக்கிற்கு, கார்டினல் பாவமன்னிப்பை வழங்கி ஆசிர்வதிக்கும் இடம் அவ்வளவு நெகிழ்வானது.
இறுதியில் இந்தத் திரைப்படத்தில் இன்னாளும், முந்தியதுமான போப்புக்கள் இருவரும் 2014ல் நடக்கும் ஆர்ஜெண்டீனா- ஜேர்மனி உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தைப் பார்க்கும் காட்சிகள் சுவாரசியமானது.. ஒருவகையில் இந்தத் திரைப்படம் போப்புக்களையும் சாதாரண மனிதர்களாக்கி நம்மைப் பார்க்க வைக்கின்றது. அவர்கள் அதிகாரம் நிரம்பியவர்களோ, திருவுருவாக்க வேண்டியவர்களோ அல்ல, இரத்தமும் சதையுமான நம்மைப்போலவே தவறுகளை விடக்கூடியவர்களும், மனம் வருந்தக்கூடியவர்களுமே என்ற நிலைக்கு இறுதியில் வந்தடைகின்றோம்.
அதுவே மதங்களையும், போப்புக்களையும் சற்று விலத்திப் பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு அவசியமான புள்ளியென நினைக்கின்றேன். ஆக, நாங்கள் எவருக்கும் உயர்ந்தவர்களுமல்ல, தாழ்ந்தவர்களுமல்ல என்ற புள்ளியை வந்தடைகின்றோம்..
................................................
(Dec 21, 2019)