கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'

Sunday, March 15, 2020

1.

பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது, வாசிப்பதற்கெனச்  சில நாவல்கள் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் என்னைப் போன்ற 'புலம்பெயரி'களுக்கு அந்த நாவலின் சூழல், பாத்திர வார்ப்புக்கள் போன்றவை முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன. அதனால் பல நாவல்களை 'சும்மா' எழுந்தமானமாய் விருப்பின்றியே வாசித்திருக்கின்றேன். அன்றையகாலத்தில் வாசித்த Great Gatsby, To Kill a Mockingbird, Lord of the Flies போன்றவை மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.

எனக்குத் தெரிந்த நகரை, எனக்குப் பரிட்சயமான வாழ்வை, என்னைப் போன்ற மண்ணிற மக்களின் கதைகளைச் சொல்பவர்களாக, எம்.ஜி.வாஸன்ஜி, ஷியாம் செல்வதுரை போன்றவர்களைப் பிறகு கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போன்றவர்களின் பாத்திரங்கள் இவர்களின் நாவல்களில் இருக்கின்றார்களேயென, அவர்களை நெருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் தொடர்ந்து தேடித்தேடி வாசிக்க எனக்கு முடிந்திருந்தது.

தமிழிலும் முற்றுமுழுதாகப் புலம்பெயர்ந்த வாழ்வைச் சொன்ன புதினங்கள் என்று பார்த்தால் அரிதாகவே இருக்கும். அதுவும் இலட்சக்கணக்காய் தமிழர்கள் வாழும், நான் வாழும் ரொறொண்டோ நகரின் பின்னணியில் நிகழும் கதைகளைச் சல்லடைபோட்டுத்தான் தேடவேண்டியிருக்குக்கும். அப்படி, ஒரு விதிவிலக்கான புதினமாக தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' வெளிவந்திருக்கின்றது.

இலங்கையில் ஒரளவு வசதியாக மனைவி மங்களநாயகியுடனும், மூன்றுபிள்ளைகளுடன் இருக்கும் சிவப்பிரகாசம்  குடும்பத்தை நாட்டில் விட்டுவிட்டு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அவரைக் காசு கட்டிக் கூப்பிட்ட உறவினர்கள், அவரைச் சுரண்டுவதைக் கண்டு, உறவுக்காரரின் வீட்டிலிருந்து வெளியேறி, தனியே சென்று வாழத்தொடங்கின்றார். அப்படி இருந்தபடியே மனைவியையும், பிள்ளைகளையும் கனடாவுக்கு ஏஜென்சி மூலம் எடுப்பிக்கின்றார். அவர்கள் சிங்கப்பூரில் கொஞ்சக்காலம் சிக்கிக்கொள்ள, எப்போது அவர்கள் வருவார்களென்ற உற்சாகத்துடன் முதலில் எதிர்பார்த்திருந்த சிவப்பிரகாசம், இனி எப்போதாவது வரட்டுமென காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டுக் காத்திருக்கின்றார்.

ஒருமாதிரி மங்களமும், அவரின் மூன்று பிள்ளைகளும் கனடாவுக்கு வந்தாலும், அவர்கள் தான் இலங்கையிலிருந்து விட்டு வந்த குடும்பம் அல்ல என்பது சிவப்பிரகாசத்துக்குப் புரிகிறது. மங்களமும் கனடா வந்த கொஞ்சக் காலத்திலேயே, சிவப்பிரகாசத்தை எல்லாவிடயங்களிலும் முந்திச் செல்கின்றார். சிவப்பிரகாசத்துக்கு இதையெல்லாவற்றையும்விட  தனக்கான காமத்தை மனைவி தீர்ப்பதில்லையென்ற பெருங் கவலை இருக்கிறது. மங்களமோ அந்தக் காமத்தைத் துருப்பாகக் கொண்டே சிவப்பிரகாசத்தை மேவி மேவிச் செல்கின்றார். ஒருநாள் காமம் தறிகெட்டலைய, ஒரு முக்கிய விடயத்தைக் காரணங்காட்டி மங்களம் விலகிப்போக, சிவப்பிரகாசம் வன்முறையைப் பாவிக்கின்றார். அது பெருத்து, பிள்ளைகள் பொலிஸை அழைக்க, சிவப்பிரகாசத்தால் வீட்டுக்கு என்றென்றைக்குமாய் வீட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படுகின்றது.

சிவப்பிரகாசத்துக்கு திரும்பவும் தனிமை வாழ்க்கை. அதன் பிறகு அவர் தன் வாழ்வில் இரண்டு பெண்களைச் சந்திக்கின்றார். ஒரு பெண்ணோடு அவருக்கு விரும்பிய காமம் கிடைக்கின்றது. ஆனால் அந்தப் பெண்ணின் மகனின் வடிவில் அந்த உறவும் சிதைகின்றது. இன்னொரு பெண்ணோடோ வாசிப்பின் நிமித்தம் நட்புக் கனிந்து, நல்லதொரு உறவு முகிழும் சந்தர்ப்பத்தில் வேறொரு சிக்கல் வருகின்றது.

2.

நாவலில் நதி ஒரு முக்கிய படிமமாக வந்தபடியே இருக்கின்றது. ஸ்காபரோ ரூஜ் (Rouge) நதியின் வரலாறு, கனடாவின் பூர்வீகக்குடிகளிலிருந்து தொடங்கி தற்காலம் வரை விரிவாக விவரித்துச் சொல்லப்படுகின்றது. நதிகளே இல்லாத இலங்கையின் வறண்ட ஊரிலிருந்து வந்த சிவப்பிரகாசத்துக்கு நதியோடு இருந்தலென்பது பேரனுபவமாக இருக்கிறது. இந்த நாவலை, சிவப்பிரகாசம் சந்திக்கும் மூன்று பெண்களும், அவர்களினூடாகத் தன் வாழ்வைத் தரிசிக்கும் சிவப்பிரகாசமும் அவரின் தனிமையும் என்று ஒரு சுருக்கத்துக்காய்ச் சொல்லிக்கொள்ளலாம். சிவப்பிரகாசத்தின் வாழ்வினூடாக ரொறொண்டோ மாநகரில் தமிழரின் 90களுக்குப் பின்பான வாழ்க்கையின் குறுக்குவெட்டைப் பார்க்கமுடியும்.

சிவப்பிரகாசம் ஒரு பெண்ணோடு போய் வாழ்ந்துவிட்டார் என்பதற்காக முகங்களைத் திரும்புகின்ற உறவுகளும், நண்பர்களும், அதே சிவப்பிரகாசம் தன் மனைவியின் மீது வன்முறையைப் பிரயோகிக்கும்போது, எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பது நாவலின் சற்று விசித்திரமான பகுதியெனத்தான் சொல்ல்வேண்டும். ஒருவர் தனக்குப் பிடித்த ஒருவரோடு வாழ்வதற்கு ஏன் முகத்தை இந்த மக்கள் திருப்பிக்கொள்ளவேண்டும்? உண்மையில், அவர் வன்முறையைத் தன் துணையின் மீது பாவித்திருக்கின்றார் என்பதற்கு அல்லவா முகத்தைச் சுழித்திருக்கவேண்டும்.

சிவப்பிரகாசம் தன் இயலாத்தன்மைகளை அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், ஒருபோதும் பிற பெண்களை விளங்கிக்கொள்ள முடியாதவர் போன்றே, நாவலை வாசிக்கும்போது தெரிகிறது. அவர் அந்தக் காலத்தைய மனிதருமல்ல. அவருக்கு மூன்றாவதாக ஒரு பெண்ணோடு உறவு வரும்போது அவர் தனது அறுபதுகளின் மத்தியில் இருக்கின்றார். ஒரு பெண்ணோடு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை முடிவதில்லையென பிற பெண்களைத் தேடும் (அது பிழையுமல்ல) சிவப்பிரகாசத்துக்கு பெண்கள் தமது சொந்தக்காலில் சொந்த விருப்பில் எப்போதோ தமது வாழ்வை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை அறியாதிருப்பது சற்று வியப்பாய்த்தானிருக்கின்றது.

அதுபோலவே தனது காமக்கிறுதிகளை விளங்கிக்கொள்ளவில்லையென தன் மனைவி மீது வன்முறையைப் பாவிக்கின்ற சிவப்பிரகாசத்துக்கு, இன்னொரு தமிழ்ப்பெண்ணான வின்ஸி, அவரை மொன்றியலில் சிவப்பிரகாசம் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே காமத்தைத் திளைக்கக் திளைக்கக் கொடுக்கின்றவராக இருக்கின்றார். ஆக சிவப்பிரகாசம் அவ்வளவுமீறி வெட்கப்படும், காமமா ச்சீய் என்கின்ற அந்தக் காலத்தைய ஆசாமியும் அல்லவென வாசகர்க்கு விளங்கிவிடுகின்றது.

அதே சிவப்பிரகாசம், காமத்திலும் காதலிலும் திளைக்க நல்ல வாய்ப்பிருக்கும் கிநாரியை அணுக அல்லது கிநாரி அவரை அணுகுகின்றபோது மட்டும், திருப்பவும் அந்தப் பழைய காலத்து ஆள்போல நடந்துகொள்ளும்போது வாசிக்கும் எங்களுக்கு சற்று பொறுமையின்மை வருகிறது. வின்ஸிக்கு ஒரு மகன் இருக்கின்றபோதும், அந்த உறவுக்குப் போகத் தயார் நிலையிலேயே சிவப்பிரகாசம் இருக்கின்றார்,  ஆனால் கிநாரி என்கின்ற இன்னொரு ஆர்மேனியப் பெண்ணுக்கு ஒரு மகள் ஆர்மேனியாவில் இருக்கின்றாள் என்பதை அறியும்போது மட்டும், அவருக்குள் ஒரு விலகலும் தயக்கமும் வந்துவிடுகின்றது ஏன் என்பது எமக்குப் புரிவதில்லை.

இத்தனைக்கும் சிவப்பிரகாசத்துக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அத்தோடு கிநாரியின் மகள் பதினெட்டு வயதுக்கு அண்மையாக இருப்பவளும், அவளுக்கென்று காதலனை வைத்திருப்பவளும் கூட.  அவள் கனடா வந்ததன்பின், தாயோடு இருக்கும் காலம் கொஞ்சமாகவே இருக்கும். மகளைக் காரணங்காட்டி கிநாரியும், சிவப்பிரகாசமும் உரையாடுகின்ற இடமெல்லாம் ஒருவித நாடகீயத்தன்மையாகவே தோன்றுகின்றது.ஏனெனில் 55 வயதிலும், 65 வயதிலும் இருக்கும்போதாவது ஒரு இணை தமது முதுமையைப் பற்றியும், தமக்கான துணைகளைப் பற்றியும் பேசாது, மகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி தமக்கான உறவுக்குத் தடுப்பாணை போடுவார்களோ என்றே யோசிக்க முடிகிறது.

நாவலின் இன்னொரு பலவீனமாக, சிவப்பிரகாசம் மனைவி மங்களத்துக்கு அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபின், தன் பிள்ளைகளை ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதேயில்லை. ஒரே நகரத்திலே அவர்களோடு வாழ்ந்தபடி இருக்கும் சிவப்பிரகாசம், தனது பிள்ளைகளைக்  கண்டு பேசவேண்டும், பழகவேண்டுமென்று ஒருபோதும் ஆசைப்பட்டிருக்கவே மாட்டாரா? ஸ்காபரோ சிவிக் சென்ரரில் ஒரு இலக்கியநிகழ்வில் பங்குபெற வரும் சிவப்பிரகாசம் தற்செயலாக அருகிலிருந்த அங்காடிக்குள் தனது வளர்ந்த மகன் ஒரு வெள்ளைப்பெண்ணொடு காதல் செய்கின்றபோதே பார்க்கின்றார். அதற்குப்பிறகு அந்த மகன் அவரின் மூத்தமகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வரும்போது மட்டுமே சந்திக்கின்றார். மகனை இரண்டு முறை பார்த்தாரென்றால், அவரது மகள்களை ஒருபோதும் திருப்பிப் பார்க்காதவராகவே இந்த புதினத்தில் சொல்லப்படுகின்றது.

எத்தனையோ நூற்றுக்கணக்கான புத்தங்களைச் சேகரத்தில் வைத்து, வாசிப்பில் பெரும் விருப்புக் கொண்ட ஒரு மனிதர் தனது பிள்ளைகளிடம் கூட கொஞ்சம்  கருணை காட்டாவிட்டால் அவர்  இவ்வளவு புத்தகங்களை வாசித்துத்தான் என்ன என்றும் இந்தப் புதினத்தை வாசிக்கும் எமக்கும் தோன்றுகின்றது.

3.

இவ்வாறான சில பலவீனங்கள் நாவலுக்குள் இருந்தாலும், சுவாரசியமாக வாசிக்கும் நடையில் தேவகாந்தன் எழுதிச் சென்றிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவரின் கடந்த சில நாவல்களைப் போல பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதாது, இந்த நாவலை நூறுபக்கங்களில் முடித்திருப்பதும் என்னைப் பொருத்தவரை மகிழ்ச்சியானது.

இந்த நாவல் தனிமையும், ஒரு மனிதரின் 'ஆன்மீக'த்தேடலும் என்றாலும், அதைவிட கூடத் துருத்திக்கொண்டிருப்பது சிவப்பிரகாசம் என்கின்ற ஆண் தன்னைத்தானே ஒருவகையில் நியாயப்படுத்திக்கொள்கின்ற பனுவல்போலவே தோன்றுகின்றது. அவர் இந்தநாவலில் சந்திக்கும் இரண்டாவது பெண்ணான வின்ஸி தன் மகனுக்காக சிவப்பிரகாசத்தோடான உறவைத் துண்டித்துவிடும்போதாவது, அவருக்கு தனது பிள்ளைகளின் நினைவு வந்திருக்காதா? எங்கேயோ தான்  தவறுவிட்டிருக்கின்றேன் என்று கலங்கியிருக்கமாட்டாரா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

நாவலின் இறுதியில் சிவப்பிரகாசத்துக்கு ஒரு தெளிவு வந்து முகங்கூட பிரகாசிப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. 'எவரது அன்பும் எவரது ஆதரவும் எவரது அரவணைப்பும் அவருக்கு இல்லாமல் போயிருக்கிறது. அது அறுதியான ஒரு தனிமைக்குள் அவரைத் தூக்கி வீசியிருக்கிறது' என்று கூறி  'ஒரு அனுக்கிரகம் ஒளிவெள்ளம்போல் அவரில் வந்து இறங்குகின்றது. அவர் பயணத்தின் திசையும், திசையின் மய்யமும் ஒரு புள்ளியாய் அவருக்குத் தரிசனமாகின்றன' எனச் சொல்லப்படுகின்றது. சிவப்பிரகாசத்துக்கு ஒரு தரிசனம் கிடைத்திருப்பது நல்லதுதான். அந்தத் தரிசனத்தில் அவர் சந்தித்த பெண்களையும், தனது பிள்ளைகளையும் விளங்கிக்கொள்கின்ற ஒரு பகுதியும் சேர்ந்தே நுழைந்திருந்தால் எவ்வளவு நல்லது போல நமக்கும் தோன்றுகின்றது.

தேவகாந்தனின் புதினங்கள் சிலது தொடக்கத்தில்  நன்றாகப் போய்க்கொண்டிருக்கும். ஒரு குதிரையைப் போலத் தன்பாட்டில் போகும் எழுத்தை,  பிறகு ஏதோ ஒருபுள்ளியில் சட்டென்று கடிவாளத்தைப் போட்டு இறுக்கி இழுத்துவிடுகின்றவராய் தேவகாந்தனின் எழுத்தைச் சில இடங்களில் அவதானித்திருக்கின்றேன். எழுத்து எங்கு அழைத்துச் செல்கிறதோ அப்போது கடிவாளத்தைக் கூட தூர எறிந்துவிடவேண்டியதுதான். அப்போதுதான் நாவல் தன்னளவில் தன்னை எழுதிச் சென்று எல்லைகளை மீறிச்செல்வதாக அமையும் எனச் சொல்வேன். இங்கேயும் தேவகாந்தன் நாவலின் மீது ஏறி கடிவாளத்தை இறுக்குகின்ற பல இடங்கள் இருக்கின்றன.

இவ்வாறான சில தடைகள்/இடைஞ்சல்களைத் தவிர்த்துப் பார்த்தால்,  புலம்பெயர் வாழ்வை - முக்கியமாய் ரொறொண்டோ மாநகரை- அடையாளப்படுத்தும் நாவல் என்றவகையில் இது முக்கியமானது. கொஞ்சப் பக்கங்களில் இந்த நாவலை முடித்ததாலோ என்னவோ இறுக்கமான நல்ல மொழிநடையும் இந்த நாவலுக்கு வாய்த்திருக்கின்றது. தேவகாந்தனைப் போல புலம்பெயர்ந்த தேசத்தில், எழுத்தில் இப்படி முழுமையாகக் கரைந்துகொண்டவர்கள் வெகு அரிதே என்பதால் அவர் மீது ஒருவகை மதிப்பிருக்கிறது. அந்த மதிப்பிருப்பதால்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களைக் கறாராக வாசிக்கவும் வேண்டியிருக்கிறது.
...................................

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2019)

மெக்ஸிக்கோ - சா.ரு. மணிவில்லன்

Saturday, March 14, 2020

னித மனம் புதிர்கள் நிரம்பியது. ஒரு புதிரை விடுவித்தால் மற்றொன்று, அதை விடுவித்தால் இன்னொன்று என நீண்டு கொண்டே செல்லக்கூடியது. இந்த புதிர்களை படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளனர். ஆனாலும் இந்த பயணம் முடிவே இல்லாமல் நீளக்கூடிது.
பிரபஞ்சன் நினைவு பரிசு போட்டியில் வென்ற நாவல்களில் ஒன்றான மெக்ஸிக்கோ நாவலை இன்று வாசித்து முடித்தேன். இதனை கனடாவில் வாழும் ஈழ தமிழரான இளங்கோ எழுதியுள்ளார். தமிழ் நாவல் பரப்பில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோர் பல உலக நாடுகளை பின்புலமாக கொண்டு பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நாவல் கனடா, மெக்ஸிக்கோ நாடுகளை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஆண் பெண் உறவு சிக்கல் என்பது பெரும்பாலும் ஒன்றுபோலதான் இருக்கிறது.
இரண்டு வேறு வேறு தேசங்களில் இருந்து அகதியாக வாழ நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். அவர்களின் உறவை சொல்வதின்னூடாக இந்த நாவலில் மாயா இன மக்களின் கலாச்சாரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவலின் இறுதியில் நாம் எதிர்பாராத திருப்பம். இப்போது நாம் வாசிப்பது ஒரு நாவலா இரண்டு நாவலா என யோசனை தோன்றுவதை தவிர்க்க முடியாது.
ஒரே மூச்சில் வாசித்துவிட தூண்டும் மொழி நடையை இளங்கோ கையாண்டுள்ளார். எளிமையான வர்ணனைகளின் மூலமே இடத்தை மற்றும் கதாபாத்திரத்தை நம்முள் தோன்றுபடி செய்துவிடுகிறார்.
டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த புத்தகத்தினை சிறப்பான முறையில் வடிவமைத்து வெலியிட்டுள்ளது.
தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சனின் நினைவை போற்றும் விதமாக நடந்த இந்த நாவல் போட்டி வரவேற்கவேண்டிய ஒன்றாகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வழக்கம்போல் இந்த நாவலை வாசிக்கும் வாய்ப்பை உருவாக்கிய நண்பர் Jega Deesan S - க்கு என் மனமார்ந்த நன்றிகள்.
.......................

இத்தாலி, இந்திய பாதயாத்திரைகள்

Friday, March 13, 2020


The Worrier's Guide to the End of the World  By Torre DeRoche

வாழ்க்கையில் எதுவும் நின்று நிலைப்பதில்லை. புத்தரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் தர்மச்சக்கரத்தின் சுழற்சியில் நம் வாழ்வு அசைந்து கொண்டிருக்கின்றது. ஓடிக் கொண்டிருப்பதுதான் நதியின் இயல்பெனில், மாற்றங்களில் ஓர் அமைதியைக் காண்பதற்கான பிரயத்தனங்களில்தான் மனிதர்களும் அலைந்துகொண்டிருக்கின்றார்களோ என எண்ணுவதுண்டு. எலிஸபெத் ஹில்பேர்ட் எழுதிய 'Eat, Pray, Love'  நூல் பயணம் செய்யும் பலருக்கு ஒரு 'பைபிளாக'வே இருந்திருக்கின்றது. ஆனால் எல்லாக் கனவுகளுக்கும் ஓர் எல்லையுண்டு. விவகாரத்துப் பெற்று பயணஞ்செய்த‌ எலிஸ்பெத், பாளியில் புதிய காதலைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் முடியும் அந்நூலின் பிறகான எஸிசபெத்தின் வாழ்க்கை நாம் எதிர்ப்பார்த்திருக்கவே முடியாத பல திருப்பங்களைக் கொண்டது.

ரொரியின், உலகைச் சுற்றிய பயணநூலான 'Love with a Chance of Drowning' வாசித்தவர்கள், அது எவ்வளவு அழகான காதலும், பயணமும் சார்ந்த வாழ்வென நினைப்பார்கள். ஆனால் மாற்றங்கள் அவர் வாழ்விலும் நிகழ்கின்றன. ஒரே வருடத்தில் தனது தந்தையைப் புற்றுநோயினால் இழப்பதுடன், அவருடைய ஒன்பது வருடக்காதலனும் பிரிய, ரொரியின். வாழ்க்கை தலைகீழாகிப் போகின்றது.

அந்த இழப்புக்களைப் பற்றியல்ல, அந்த இழப்புக்களிலிருந்து எப்படி மீண்டுவந்தார் என்பதை 'The Worrier's Guide to the End of the World’'  என்கின்ற நூலில் எழுதுகின்றார். முரண்நகையான விடயம் என்னவென்றால் ரொரியின் முதல்நூல் வெளிவந்த காலகட்டத்தில், அவர் இந்த இழப்புக்களைச் சந்திக்கின்றார். ஆனால் நூலை வாசிக்கும் வாசகர்களோ, 'காதலும், கடல்பயணமும் சேர்ந்த உங்கள் வாழ்க்கை, எங்களுக்கு உற்சாகத்தைத் தருகின்றது' என எழுதுகின்றார்கள். அவர்களுக்குத் தனது உண்மை நிலையைச் சொல்லவேண்டுமெனச் சில வாசகர்களுக்குத் தனது இழப்புக்கள் பற்றிப் பதில் கடிதங்கள் எழுதுகின்றதோடு இந்த  இரண்டாவது நூல் தொடங்குகின்றது.

ழப்புக்களோடு இருந்தால் சோர்ந்துவிடுவேன் என ரொரி ஜரோப்பாவுக்கான பயணமொன்றைச் செய்கின்றார். அப்போதுதான் அவர் நியூயோர்க்கில் சந்தித்த மாஷா என்கின்ற பெண் தான் செய்யப்போகும் பாதயாத்திரைகளைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகின்றது. மாஷா உலகு முழுதும் கால்களால் நடந்து சுற்றி வருவதே தன் கனவு என்கின்றார். ஐரோப்பாவுக்குச் சென்றிருந்த ரொரி, மாஷா தன் பாத‌யாத்திரையை இங்கிலாந்தின் கான்ரபெர்ரியில் தொடங்கி, பிரான்ஸைக் கடந்து இத்தாலிக்கு வந்துகொண்டிருப்பதை அறிகின்றார். அந்தப் பயணம் ரோமில் முடிவதாக இருக்கின்றது.

அடுத்து வாழ்வில் என்ன செய்வ‌து என அறியாது இருக்கும் ரொரியை, தன்னோடு பாதயாத்திரையைச் சேர்ந்து செய்ய மாஷா அழைக்கின்றார் ரொரியும் சம்மதிக்கின்றார். ஒழுங்கான தயார்ப்படுத்தல்களோ, உரிய காலணியோ இல்லாது மிலானிலிருந்து தொடங்கும் பயணத்தின் தொடக்கத்திலேயே பாதங்கள் காயமடைய, அது ரொரிக்கு உவப்பானதாக இருக்கவில்லை. தொடர்ந்து நீண்டதூரத்துக்கு நடக்கமுடியாத சூழ்நிலை வரும்போது, இடையில் ஒரு சைக்கிளை வாங்கி ரொரி ஓடிக்கொண்டுவர, மாஷா நடந்துவருகின்றார்.

இந்நூலின் முதல்பாதி முழுதும் இத்தாலியின் நிலப்பரப்புக்களினூடாக அவர்கள் இருவரும் நடந்துசெல்லும்போது நிகழும் சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன. ரோமுக்கான அடைதலில் அவர்களின் முதல் யாத்திரை முடிந்து  இருவரும் விடைபெறுகின்றனர். மாஷா தனது கணவனுடன் துருக்கியில் அடுத்த யாத்திரையைச் செய்யப் போகின்றார். ரொரி மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புகின்றார்.

சில மாதங்களின்பின் மாஷா இந்தியாவில் பாதயாத்திரை செய்யப்போகின்றேன்,  தன்னோடு  இணையமுடியுமா என  ரொரியிடம் கேட்கின்றார். அவர்கள் அப்படித் தேர்ந்தெடுப்பதுதான் காந்தி உப்புக்காய் தாண்டிவரை நடந்து சென்ற பிரபல்யமான சத்தியாக்கிரக நடை. ரொரியும், மாஷாவும் இதற்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றவர்களுமில்லை. எப்படி இந்தியாவில் பெண்கள் பாதயாத்திரை செய்வதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றதென அறிந்தவர்களுமில்லை. இருவரும் இந்தியாவிலிருக்கும் பயண நிறுவனங்களை இந்தப் பாதயாத்திரையின் நிமித்தம் தொடர்புகொள்கின்றனர். ஒருவரும் ஒழுங்கான தகவல்களைக் கொடுகின்றார்களில்லை. உண்மையில் காந்தி ஒருகாலத்தில் சென்ற தடத்தில் இப்போது அப்படி நடந்துசெல்வதில் எவரும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இல்லை. ஆனால் ரொரியும், மாஷாவும் வருவது வரட்டுமென இந்தியாவுக்குப் போய் காந்தி வாழ்ந்த ஆச்சிரமத்திலிருந்து பாதயாத்திரையைத் தொடங்குகின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் சூழல் இவர்களுக்கு சற்று அச்சுறுத்த, ஒரு பயண நிறுவனத்தை அணுகி தமக்கு பாதுகாப்புக்கு ஒரு 'செக்கியூரிட்டி'யை அனுப்பமுடியுமா எனக் கேட்கின்றன‌ர். ஒருவரை உங்களுடன் அனுப்புகின்றோம், ஆனால் அவர் உங்களுக்கு ஆபத்து வந்தால் தடுத்துநிறுத்துவார் என உறுதிசெய்யமுடியாது. உங்களுக்கான மொழிபெயர்ப்பாளராகவும், பாதை காட்டுகின்றவராகவும் அவர் இருப்பார் என ஒருவரை அந்தப் பயண நிறுவனம் அனுப்பிவைக்கின்றது..

காந்தியைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருந்த‌ ரொரி, இந்தப் பயணத்தின் மூலம் காந்தியைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்கின்றார். துணையாக கூடந்த இந்திய இளைஞன் தொடக்கத்தில் ஒத்த அலைவரிசைக்கு வராவிட்டாலும், அவரும் இவர்களைப் போன்ற ஒரு பயணியாக மாறி புகைப்படங்களை வரும் வழியெங்கும் எடுத்துவருகின்றார். ரொரி இந்தப் பயணத்தை நடந்து செய்ததாலோ என்னவோ, இந்தியாவின் அசல் முகம் இதில் விபரிக்கப்பட்டிருக்கின்றது. அதீதமான மனோரதியத்துக்கு இட்டுச்செல்லாமலும், ஆகவும் தரம் தாழ்த்தப்படாமலும் இந்தியாவின் இன்றைய நிலைமையை ரொரி நேர்மையாக எழுதியிருக்கின்றார்.

நடந்தே போகின்றோம் என்று சொன்னாலும் விடாது துரத்தும் ஓட்டோக்காரர்களின் தொல்லை, பெண்களாக இருப்பதால் உற்றுப் பார்க்கும் ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்கள், இவற்றை மீறி இவர்கள் ஏன் இப்படி தொலைதூரம் நடக்கின்றார்களென அறியத்துடிக்கும் மக்கள், உட்கிராமங்களில் இறங்கிச்செல்லும்போது இதுவரை வெள்ளைத்தோல் உள்ளவர்களைப் பார்க்காத கிராமத்தவர்களின் வியப்பு, பிறகு நேசமாகி  உணவையே பகிரும் அவர்களின் அந்த அப்பாவித்தனம், நடக்கும் திசையெங்கும் இவர்களைப் போர்வையாக மூடும் புழுதி என எல்லாம் இந்நூலில் நுண்மையாக விபரிக்கப்பட்டிருக்கின்றது.

காந்தி உப்பு சத்தியாக்கிரகத்துக்காக நடந்த பாதையினூடாக நடப்பதால், காணுபவர்களெல்லாம் 'உங்களுக்கு காந்தியின் எந்தக்கொள்கை' பிடித்தது எனக்கேட்கும்போது காந்தியை அவ்வளவு வாசிக்காததால் தொடக்கத்தில் ரொரி அதைச் சமாளிப்பவையெல்லாம் சிரிப்பை வரவழைப்பவை. இன்றைய இந்தியாவில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டிருக்கும் காந்திய ஆச்சிரமங்கள் பலதில் தங்கி, காந்தி எவ்வாறு அந்நியமாகிக்கொண்டிருப்பதையும் ரொரி இந்நூலில் தொட்டுச் செல்கின்றார்.

இந்தியாவின் காலநிலை, சனநெருக்கடி இந்தப்பயணத்தில் ஒருவகை இடைஞ்சலைக் கொடுக்கின்றதென்றால், பாதயாத்திரையின் நடுவில் மாஷாவுக்கும், ரொரிக்கும் இடையில் முரண்பாடு வந்துவிட, அது பயணத்தை வேறொரு நிலைக்குக் கொண்டுசெல்கின்றது. இவர்கள் இருவருக்கும் ஒரு சமாதானத்தூதர் போல அந்த இந்திய இளைஞனே இருக்கின்றார். இறுதியாக அந்த இளைஞனும், இதுவரை தனக்குப் பிடிக்காத ஒரு தொழிலை டெல்கியில் உதறித்தள்ளிவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று அறிவதற்காகவே தங்களோடு இந்தப் பயணத்தைச் செய்கின்றார் என ரொரி அறிந்து கொள்கின்றார். மாஷாவுக்கும் இதுவரை வாழ்ந்த அமெரிக்க வாழ்வை உதறிவிட்டு துருக்கியில் போய் வாழ்ந்திடலாமா என்கின்ற குழப்பம் இருக்கின்றது. ஆக இந்த மூவரும் இந்தப் பாதயாத்திரையை தமது வாழ்வின் அர்த்தங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே, காந்தியை முன்வைத்துத் தொடங்கியிருக்கின்றனர் என நாம் இப்போது அறிந்துகொள்கின்றோம்.

காந்தியை  அவ்வளவு அறியாமல் இந்தப் பயணத்தைத் தொடங்கும் ரொரி காந்தியின் எல்லாப் பக்கங்களையும் பின்னர் அறிந்துகொள்கின்றார். காந்தியின் எளிமையும், விடுதலைக்காக அஹிம்சையைக் கைக்கொண்டதும் அவரை ஈர்த்தாலும், காந்தி பெண்களை முன்வைத்து செய்த பரிசோதனைகளும், காந்திக்குள் பெண்களைப்பற்றி இருந்த சனாதனமான எண்ணங்களும் ரொரியைத் தொந்தரவு செய்கின்றன. காந்தியை காந்தி என விளித்து இந்தியர்களிடம் பேசும்போது, அப்படிச் சொல்லக்கூடாது அவரை 'மகாத்மா' என்றோ அல்லது 'காந்திஜி' ன்றோ அழைக்கவேண்டுமென ரொரிக்குச் சொல்லப்படுகிறது. அதைக் கேட்டு அப்படியே பாவித்து எழுதுகின்ற ரொரி, இறுதியில் அப்படி எழுதாது, வெறும் காந்தியாக மட்டும் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகையில், காந்தியும் சில உன்னதஙகளை எட்டினாலும் அவரைப் புனிதப்படுத்தவேண்டியதல்ல, ஒருவகையில் அவரும் பலவீனங்களுள்ள சாதாரண மனிதரே என  ரொரி சொல்லாமல் சொல்கின்றார் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம்.

காந்தியைத் திருவுருவாக்கி தூர விலக்கி வைக்காது, அவரோடு உரிமையுடன் உரையாடலைச் செய்வதற்கு  ரொரிக்கு இது உதவுகிறது. காந்தியை மகாத்மா ஆகாதாக்காமல் ரொரியைத் தடுப்பது, காந்தியின் வர்ணாச்சிரம புரிதல்களும், சாரதாபாயையும் மனைவியாக வைத்துக்கொண்டு பிற‌பெண்களோடு அவர் படுக்கையில் செய்துகொண்ட சத்தியசோதனைகளும் ஆகும். காந்தியே இவற்றை வெளிப்படையாக தனது நூல்களில் பேசியதால் அவர் தன்னை மகாத்மாவாக ஆக்குவதை ஒருவகையில் தடுத்துநிறுத்தியிருக்கின்றார் எனவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு காந்தி நடந்தபாதையில் நடந்து, இறுதியில் தண்டியை  இவர்கள் மூவரும் அடைகின்றன‌ர். இடையில் சேரிகளும், மாடமாளிகைகளும் அருகருகில் இருக்கும் முரண்களையும் ரொரி விபரிக்கின்றார். ஏழை மக்கள் தம் வறுமைகளுக்கிடையிலும் மகிழ்ச்சியாக இருக்க, பிரமாண்டமான பலகைகளுடன் இங்கே 'ஆடம்பரவசதிகள்' கிடைக்குமென மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கஷ்டப்படும் பணக்காரத் தெருக்களையும் மெல்லியதாய் ரொரி பகிடி செய்கின்றார்.

தண்டியில் பயணத்தை முடிக்கும்போது, வைனுடன் கொண்டாடலாமென்றால் குஜராத் மதுவிலக்கு மாநிலம் என்பது இவர்களுக்குத் திகைப்பைக் கொடுக்கின்றது. எப்படியெனினும் மதுவுடன் கொண்டாடவேண்டுமென அயல் மாநிலத்துக்கு வாகனம் பிடித்துச் செல்கின்றார்கள். அதுவரை தெருக்களில் சாப்பிட்டுவந்த ரொரியின் உடலுக்கு எதுவுமே நடக்காது நன்றாகவே இருக்கின்றார், ஆனால் பயணம் முடித்து ஒரு நல்ல ஹொட்டலில் சாப்பிடும்போது உடலுக்கு ஒத்துவராது போகின்றது.  இதனால்,  ஏற்கனவே திட்டமிட்டமிருந்த இந்தியாவில் மற்ற இடங்களைப் பார்க்கும் பயணத்தையெல்லாம் ஒத்திவைத்து ஒரு வாரமளவில் ஓய்வெடுக்கவேண்டி வருகின்றது. இறுதியில் மூவரும் அவரவர் திசையில் பல்வேறு வகையான அனுபவங்களுடன் பிரிந்துசெல்ல இந்த நூல் முடிவடைகின்றது.
…………………………………………………………………………….

(நன்றி: காலம் இதழ் - 54)

சிவா சின்னப்பொடியின் 'நினைவழியா வடுக்கள் '

ரு புத்தகம் பிடித்துவிட்டதாயின் புறச்சூழலையும் பொருட்படுத்தாது அதில் மூழ்கி வாசித்து முடித்துவிடுவது என் இயல்பு. 'நினைவழியா வடுக்கள்' அவ்வளவு முக்கியமான கடந்தகால அனுபவங்களைக் கொண்ட நூல் என்றாலும் மிக ஆறுதலாகவே வாசித்தேன். இவ்வாறு வாசித்த இன்னொருநூல் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'. நினைவழியா வடுக்களில் கூறப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் மனதை எங்கெங்கோ அலையவைத்து தொடர்ந்து வாசிக்க முடியாது செய்துவிடுகின்றது.

இன்று கடந்தகால நூல்களைப் பதிப்பிக்கின்றவர்களும், ஆய்வுகளைச் செய்பவர்களும் இந்த நூலை நிச்சயம் வாசிப்தோடு நின்றுவிடாது, இந்த நூலில் குறிப்பிடப்படும் அருமையான மனிதர்களையும் சம்பவங்களயும் மீள் வாசிப்பது/பதிப்பிப்பதன் ஊடாகத்தான் நமது வரலாற்றை சரிவரச் சொல்லமுடியும் என்பதை அறியவேண்டும்.

ஆறுமுகநாவலர்களும், இராமநாதன்களும், பொன்னம்பலங்களையும் விட, விபுலானந்தர்களும், ஹண்டி பேரின்பநாயங்களும், பொன்.கந்தையாக்களும், கந்த முருகேசனர்களும், (தேவராளி இந்துக்கல்லூரி) சூரன்களுமே நமக்கு முக்கியமானவர்கள். இந்த மனிதர்களின் வரலாற்றைப் பேசுவதன் மூலமே நாம் நமது கடந்தகாலக் கறைகளைக் கொஞ்சமாவது நீக்கமுடியும். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் போல, இவர்களை மீளக் கண்டுபிடிப்பதன் மூலமே  நாம்  உண்மையான செயற்பாட்டாளர்களாகவும், சமூகநீதி நோக்கிப் பயணிப்பவர்களாகவும் மாறமுடியும்.

இந்த நூலில் வரும் ஒன்றிரண்டு சம்பவங்கள்:

(1) சிவா சின்னப்பொடி பாடசாலைக்குப் படிக்கப்போகும்போது ஆதிக்கசாதி மேசை/வாங்கில் இருந்துபடிக்கும்போது, இவர்களைப் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் நிலத்தில் இருந்து படிக்க வேண்டிய சூழல். புதிய சீருடை அணிந்து போகும் சிவா சின்னப்பொடி, நிலத்தில் அப்படியே இருந்து படித்தால் பேப்பரைக் கொண்டுபோய்ப் படிக்கின்றார். அது அங்கே படிக்கும் ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. வாழைமட்டையால் விளாசுகிறார். அடிவாங்கியதைவிட தனது புதிய சீருடையில் 'கயர்' பிடித்துவிட்ட்து என்பது இன்னும் கவலையாக இருக்கின்றது.

ஒருநாள் ஆதிக்கச்சாதி மாணவன் வராதபோது, அந்த மாணவனின் மேசை,வாங்கில் வழமையாக நிலத்தில் அமர்ந்து படிக்கும் இவர் அமர்ந்துவிடுகின்றார். மற்ற மாணவர்கள் இவருக்கு அடி உதை கொடுத்து, அந்த கொடுமைக்கார ஆசிரியரைக் கூட்டிவர, ஆசிரியர் இவரின் தலையை சுவரில் மோதி அடிக்க, நெற்றி வெடித்து  இரத்தம் வரத்தொடங்குகின்றது. அந்தக் கோபத்தில் இவர் சிலேட்டை ஆசிரியர் மீது எறிந்துவிடுகின்றார்.

இது பிறகு பொலிஸ் கேஸாகி, இவரைப் பொலிஸ் கைது செய்வது வரை போகின்றது. இது நடக்கும்போது இவருக்கு 8 வயது. ஆசிரியர் எவ்வளவு சாதி வெறியராக இருந்தாலும் அதைக் கவனிக்காத பொலிஸ்/பாடசாலை இனி இவர் எங்கும் கல்விகற்கமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி பாடசாலைக்குப் படிக்கப் போகின்றார் என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.

(2) 1920களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கையோ, உள்ளாடைகளோ அணியமுடியாது. சேலையை குறுக்குக்கட்டாகத்தான் கட்டவேண்டும்.  அதை உடைப்பதற்கான ஒரு போராட்டம் நடக்கிறது. முதன்முதலில் இந்த ஊர் பெண்கள் இரவிக்கை அணிந்து வல்லிபுரம் கோயிலுக்குப் போகின்றார்கள் (1960 வரை வல்லிபுரம் கோயில் உட்பட பெரும்பான்மையான கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையமுடியாது என்பது வேறுகதை). வெளிவீதியில் இரவிக்கை போட்டு கும்பிடும் பெண்களை சாதி இந்துக்கள் தாக்குகின்றனர். பலரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு அம்மணப்படுத்தப்படுகின்றார்கள். தான் நிர்வாணமாக்கப்பட்ட துயரந்தாங்காத ஒரு 15 வயதுச் சிறுமி குளத்தில் விழுந்து தற்கொலை செய்கின்றார்.

திரும்ப 1960களில் வல்லிபுரக் கோயிலுக்குள் நுழைய தாழ்த்தப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் தோழர்களின் துணையுடன் திட்டமிடுகின்றார்கள். அதற்கான ஆயத்தப்படுத்தல்கள் நிகழும் முதல்நாள் மாலையில், சிவா சின்னப்பொடியும் அவரையொத்த சிறுவர்களும் (10 வயதுக்குள்தான் ) இவர்கள் தமது மாட்டுவண்டியில் தொட்டதால் 'தீட்டுப்பட்டுவிட்டது' என்று சொல்லி மற்றவர்களைக் கொண்டு அடித்துத் துவைக்கும் கோயில் ஐயரின் மாட்டுவண்டிலுக்குப் போய் தீ மூட்டிவிடுகின்றனர். அதைச் செய்துவிட்டு ஓடிவருகையில் சிவா சின்னப்பொடியின் நண்பன் ஒருவர் பிடிபட்டுவிடுகின்றார்.

எப்படியும் சந்திரனை வழமைபோல கட்டிவைத்து அடித்துவிட்டு, விட்டுவிடுவார்கள் என்று இந்தச் சிறுவர்கள் நம்புகின்றார்கள். இப்படி ஒரு சம்பவத்தை தாங்கள் செய்ததை அறிந்தால் பெற்றோர் அடித்துத் துவைத்துவிடுவார்கள் என்பதால் தீ வைத்த சம்பவத்தையோ, நண்பன் பிடிபட்டுவிட்டதையோ எவருக்கும் சொல்லாமல் வீட்டுக்குள் பதுங்குகின்றனர். அன்று விடிகாலையில் சந்திரன் கிணறொன்றில் பிணமாக மிதக்கின்றார். ஒரு சிறுவன் என்றும் பாராது, கொலையைச் செய்ததும் நம் 'மான'த் தமிழரேதான்.

(3) சிவா சின்னப்பொடி பிறந்து 10 வருடங்களுக்குப் பிறகு இவருக்கு ஒரு தங்கை பிறக்கின்றார். பிரசவம் பார்க்க இணுவிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கை கழுவும்போது அங்கே இருக்கும் ஒருவர் சிவா சின்னப்பொடியின் தந்தையின் கையில் இருக்கும் பனையேறும் சிராய்ப்புக் காயத்தைக் கண்டுவிட்டு இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர், எப்படி சரிக்குச் சமானமாய் எங்களோடு இருந்து சாப்பிடமுடியும் என்று அலற, அந்த உணவகத்து முதலாளி உட்பட எல்லோரும் என்ன திமிருந்தால் இப்படிச் செய்வாய் என என்று அடித்து உதைக்கின்றார்கள்.

அதுமட்டுமில்லாது ஒரு டிரக்டர் அளவிருக்கும் விறகை வெட்டிக்கொடுத்தால்தான் இவர்கள் இருவரையும் விடுவோம் என்கின்றார்கள். ஏற்கனவே அடிவாங்கி வேட்டி உருவப்பட்ட தகப்பனும், இவருமாக அதை மணித்தியாலக்கணக்காய்ச் செய்கின்றார்கள். களைப்பின் மிகுதியில் சிறுவனான சிவா சின்னப்பொடி ஓய்வெடுக்கும்போது, அப்படி இருக்கமுடியாது என அவரை உதைக்கின்றனர். தடுக்கவரும் தகப்பனையும் மீண்டும் தாக்குகின்றனர். தன் தகப்பன் முதன்முறையாக (அவர் ஒரு கம்யூனிஸ்ட்காரர், பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்) அழுவதை அன்றுதான் பார்த்தேன் என்கின்றார். எந்தத் தகப்பனும் தன் பிள்ளையின் முன் அழ விரும்புதில்லை, அதுமட்டுமின்றி தன் பிள்ளையை இந்தச் சாதி வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற முடியாத துயரமும் சேர்ந்து அதன்பிறகு தகப்பன் மனம்/உடல் உடைந்துவிடுகின்றார்.  இன்னொரு பொழுதில் ஊரில் சாதிச் சண்டியர்கள் முகத்தை மறைத்து, சிவா சின்னப்பொடியின் தகப்பனைத்தாக்கி அவரின் காலை முறிக்கின்றனர்.

இவ்வாறான அனுபவங்களைப் பெற்ற  ஒரு மனிதர் எவ்விதக் காழ்ப்புணர்வும் இல்லாது எழுதுகின்றார் என்பதை யோசிக்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. நினைவழியா வடுக்களை நான் இந்த வருடத்தில் வாசித்த நூல்களில்  அதிகம் பாதித்த நூலெனச் சொல்வேன்.

மீண்டும் சொல்ல விரும்புவது இதைத்தான். சமூக செயற்பாட்டாளர்களாகவும், சமூகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புகின்றவர்களாகவும் இருக்கும் எவரும் தவற விடாது வாசிக்கவேண்டிய நூல் இது .  இற்றைவரை எல்லா அடையாளங்களையுன் உதறவிரும்பினாலும் மொழி என்பதில் மிகப்பெரும் காதல் கொண்டவனாகவே இருக்கின்றேன் (அதனால்தான் பெரியார் எல்லா அபிமானங்களையும் விட்டுவிடச் சொல்கின்றபோது, மொழியையுமா கைவிடவேண்டும் என யோசிப்பதுண்டு). ஆனால் இதில் சிவா சின்னப்பொடி தன்னைவிட தனது பிள்ளைகள் இந்தச் சாதியைத்தாண்டுவார்கள், பேரப்பிள்ளைகள் இன்னும் முன்னே போவார்கள் என்கின்றபோது, (அவர் நம் தாய்மொழியைக் கைவிடவேண்டும் என்று சொல்லாதபோதும்) சாதி ஒட்டிக்கிடக்கும் மொழியின் மீதான அபிமானத்தையும்  நாம் கைவிட்டால்தான் என்னவென்று தோன்றியது.
.......................................................

(Dec 09, 2019)