கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - இந்து சித்ரா

Wednesday, July 29, 2020


ஒரு கிழமை விடுமுறை. வழமையான நாட்களில் செய்யமுடியா வேலைகளைச்செய்து முடிக்கவேண்டிய பட்டியல் இருந்தும், மனம் ஏனோ "வேலை நாட்களிலும் ஓட்டம், இப்போ விடுமுறையிலுமா?" எனக்கேள்வி கேட்டது. இதைவிட்டால் ஆறுதலாக இந்த வேலையை முடிக்க முடியாது.மனமும் மூளையும் ஒரு மையப்புள்ளியில் கையை குலுக்கிக்கொண்டன.

பாதிநாள் வேலைக்காக, பாதிநாள் எனக்காகின.குணா கவியழகன் எமக்காய் அள்ளிவந்த புத்தகங்களின்முன் ஒரு தேடுதல்.எந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் மீண்டும் மூளைக்கும் மனத்திற்குமான பரிமாற்றம்.

இந்த நிலையை சுலபமாக்கியது என் கணவரின், "மெக்ஸிக்கோ நாவலை படித்துப்பாரும் உமக்கு பிடிக்கும்"என்ற பரிந்துரை.

அந்த நாவலுடன் சூரிய ஒளி என்னைச்சுட பல்கனியில் இதமாய் அமர்ந்தேன்.சுட்டுச் சென்ற காற்றையும் குருவிகளின் கீச்சு கீச்சு சத்தங்களையும் உள்வாங்கி,கண்களால் பச்சை மரங்களை ஒத்திக்கொண்டு இளங்கோ எழுதிய "மெக்ஸிக்கோ" எனும் நாவலின் பக்கங்களை விரித்தேன்.

என் முன்னே அழகாய் விரிந்தது அந்நகரம், காதலின் கொஞ்சலோடு. அந்த இரவுப் பொழுதுகளினுள் கலந்திருக்கின்ற கலாசார வடிவங்களைக்காதலில் தோய்த்து அந்த நேரத்திற்கு இன்னும் அழகு சேர்த்திருந்தார்.

இந்த நாட்டின் பெயர் கேட்ட மாத்திரத்தே இளங்கோ சொன்னது போல போதைவஸ்து ,மாஃபியா கூட்டம் ,துப்பாக்கி சூடுகள் இவைதான் அந்த மண்ணிற்கான பேசும் பொருளாயின. எந்த ஒரு நாடும் சகதியுடுத்திய பக்கங்களை கொண்டிருந்தாலும் அந்தந்த நாட்டிற்குரிய செழுமையையும் கொண்டுதான் இருக்கின்றன.

அதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவம் உள்ளது போல, நாடுகளும் தனித்துவம் கொண்டிருப்பது புவியியல் சிறப்பு.அதனை இளங்கோ பல இடங்களில் எம் கைபிடித்து ,பேனா கொண்டு ஒரு சுற்றுலா கூட்டிச்செல்கின்றார்.

மெக்ஸிக்கோ எனக்கு தெரியாத இடம். ஆனால்,அவர் கதை பேசிச்செல்கின்ற விதம் என் கற்பனையில் அதற்கு ஒரு வடிவம் தீட்டி என்கூடவே வருகின்றது.

சில நாவல்களுடன் எம்மை வலிந்து இணைக்க வேண்டியிருக்கும், இடையிடையே அந்த கதையைவிட்டு விலகியும் சென்றுவிடுவோம். ஆனால் இந்த நாவலெனும் ஆற்றுக்குள் ஒரடி வைத்தேன்,என்னை இழுத்து மூழ்க வைத்தது.

மெக்ஸிக்கோவைப் பற்றிச்சொன்னால் ஃபிரீடாவை பற்றிச் சொல்லாமல் நகரமுடியாது.அதிசயமான பிறப்புக்களில் அவளும் ஒருத்தி.பேசப்படவேண்டிய பெண் அவள்.

நாவலின் நகர்வு என் மனதில் ஒரு முடிவை பின்ன தொடங்கியது. ஆனால் அந்த முடிவின் மாற்றம் நினைத்தே பார்த்திராத ஒரு வளைவுக்குள் புகுந்து முடிகிறது. அதுவே இந்நாவலை வேறு ஓரிடத்தில் தூக்கி நிற்க வைத்துவிட்டது. என் மனதிற்கு பிடித்த நாவல்களுக்குள் இதுவும் நுழைந்து கொள்கிறது.

மெக்ஸிக்கோ நகரை பார்க்கும் ஆசையையும் தூண்டிவிட்டு முடிந்து போகிறது இக்கதை. எனது விடுமுறையை இனிதாக்கிய, இந்த நற்படைப்பைத் தந்த இளங்கோவிற்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

(via Yogakumari Lingeswaran)
Jun 11, 2020

சதுரங்கக் குதிரையும், புனலும் மணலும்..

Monday, July 13, 2020

1.

ன் செவ்வியல் படைப்புக்களை வாசிக்கவேண்டுமென்ற இடாலோ கால்வினோவின் பிரபல்யமான கட்டுரையொன்று இருக்கிறது. தமிழில் நிறைய புதினங்கள் 'கிளாசிக்' என்ற அடையாளத்தோடு அண்மையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. காலம் செல்லச் செல்ல செம்மது நன்கு சுவையேறுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழ்ச்சூழலில் பல படைப்புக்கள் காலத்தால் முற்பட்டது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே அவை செவ்வியல்  வடிவத்தை அடைந்துவிடுவது துரதிஷ்டவசமானது. உதாரணத்துக்கு எஸ்.பொ எழுதிய 'சடங்கை' நான் ஒரு கிளாசிக்காக கொள்வேன். ஆனால் 'தீ'யை செவ்வியல் என்ற அடையாளத்தைக் கொடுத்து வெளியிடும்போது அதை எஸ்.பொவை என் ஆசானாகக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவேன். இன்னும் கொஞ்சக் காலம் சென்றவுடன் அவரின் மோசமான நாவலாக நான் கருதுகின்ற 'மாயினி'யையும் ஏதேனும் பதிப்பகம் 'கிளாசிக்' வரிசையில் வெளியிட்டுவிடுவார்களோ என்று சற்று அச்சமாக இருக்கிறது.

அவ்வாறுதான் ஆ.மாதவனின் 'கிருஷ்ண பருந்தை' ஒரு கிளாசிக்காகக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. அதேவேளை அவரின் 'புனலும் மணலும்' நாவலை கிளாஸிக் வரிசையில் வெளிவந்திருப்பதைக் கண்டு சற்று ஆச்சரியமாக இருந்தது. அங்குசாமி என்ற மூப்பனைப் பற்றிய கதை கோட்டையாற்றுப் பின்னணியில் வைத்துச் சொல்லப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளி இன்று பல ஆறுகளில் நீர்வரத்து இல்லாமலும், ஒற்றையடிப்பாதையைப் போல 'சேணமிழுத்து'க்கொள்வதையும் கண்டுவருகின்றோம். இதற்கான ஒரு புள்ளியை இந்த புனலும் மணலும் தொட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
இன்று யானைக்கு அன்னாசிக்குள் வெடிவைத்து கொல்கின்ற 'நாகரிகமான' மனிதர்களாய் நாம் மாறியிருக்கையில், நீராடக்கொண்டுவந்த ஆனை, மணல் தூறப்பட்ட ஆற்றில் சிக்கித்திணறுகையில் அதைக் காப்பாற்ற தன்னுயிரையே அசட்டைசெய்து காப்பாற்றத் துடிக்கின்ற ஒரு மூப்பனாக அங்குசாமியை அங்குபார்க்கிறோம்.

இந்த நாவலின் சிக்கல் என்னவென்றால் அங்குசாமி ஏற்கனவே குழந்தை இருக்கும் தங்கம்மைத் திருமணம் செய்கின்றார். தங்கம்மையும் ஒருகட்டத்தில் நோயில் இறந்துவிட, மிகுந்த வன்மத்தை step daughterஆன பங்கியின் மீது காட்டுகிறார். இதை ஆ.மாதவன் ஒரு பாத்திரத்தின் பார்வையினூடாகக் காட்டியிருந்தார் என்றால்கூட ஒருவகையில் இப்படி மனிதர்கள் இல்லையா எனக் கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குரூபி, உருண்டைக்கண்கள், கிழிந்த உதடு, கறுப்பி என்று பல்வேறு இடங்களில் பங்கி சுட்டிக்காட்டப்படுகின்றார். அதுமட்டுமில்லாது பங்கியின் தாயான தங்கம்மைகூட தனது மகளை அவலட்சணமானவள் என்று எண்ணுவதாக படர்க்கையில் நின்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆக ஒருவரின் அங்கலட்சணங்களை பொதுப்புத்தியாக நின்று கதாசிரியரும் தன் பங்கிற்கு விபரிக்கும்போதுதான் நமக்குச் சிக்கல் வருகின்றது.

இவ்வாறு தன் மீது வெறுப்பையும், வஞ்சினத்தையும் அங்குசாமி உமிழ்ந்தாலும், பங்கி 'அப்பா' என்று அன்பொழுகவே மாடசாமியை அழைக்கின்றார். பல்வேறு உதவிகளை அவருக்கு நோயும்/வயதும் ஏறும் காலங்களில் செய்து கவனித்தும் கொள்கிறார். இந்த நாவலை வாசித்து முடித்தபின்னும் மறக்கமுடியாதிருப்பது மனிதர்களின் இருண்டபக்கங்களை இருட்டாகவே, நம்மால் புரிந்து கொள்ளமுடியாததாகவே நாவலை ஆ.மாதவன் முடித்திருப்பதால் என்பதால் போல் தோன்றியது. அங்குசாமி என்கின்ற மூப்பன் ஏன் தனது மனைவியின் மகளான பங்கியை அப்படி வெறுக்கிறார்.

அதேவேளை அவரின் வாழ்வில் பிறகு வந்துசேரும் ஓரு பதின்மனான தாமோதரனை அதற்கு எதிர்மாறாக ஒரு மகனைப்போல அவ்வளவு நேசிக்கிறார் என்பதே மனிதமனங்களின் ஆழங்களுக்குள் நாம் போய்ப்பார்ப்பதற்கான ஒரு சிறுபுள்ளியை ஆ.மாதவன் முன்வைக்கின்றார் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு மனிதரும் நல்லவராகவும் கெட்டவராகவும் இரண்டு எதிர்மைகளையும் தனக்குள் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் இந்நாவலினூடாக அறிந்து கொள்கின்றோம். ஒருவகையில் இது Yin-Yang ஐப் போன்றது. நாம் இந்த இரண்டில் ஒன்றை மட்டுந் தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியாது, அதேவேளை ஏதோ ஒன்று சற்று மேலோங்கி வரும் காலத்தில் அதன் இயல்பாக நாம் அடையாளப்படுத்தப்பட்டு இந்த வாழ்வை வாழ்ந்து முடித்துவிடக்கூடுமென நாம் மூப்பன் அங்குசாமியின் வாழ்வினூடாகப் பார்க்கின்றோம். புனலும் மணலும் இன்று சூழலியல் சிக்கல்கள் உக்கிரமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வாசிக்கவேண்டிய நாவல் என்றாலும், அவரின் 'கிருஷ்ண பருந்தே' அவரின் மிக முக்கியமான படைப்பெனத் தயக்கமில்லாமல் சொல்வேன்.

2.

புனலும் மணலுமோடு ஒரே வரிசையில் வைத்துப் பேசமுடியாதென்றாலும், இவ்வாறு ஒரு தகப்பன் - 'மகள்' கதையைப் போல, ஒரு தாய் - மகன் கதையைச் சொல்கின்ற நாஞ்சில் நாடனின் 'சதுரங்கக் குதிரையையும்' கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். சிறுவயதில் தகப்பனை இழந்து, காலம் பிந்திப் பிறக்கின்ற நாராயணின் வாழ்க்கை தமிழ்நாடு - மும்பை என தனிமைக்குள் அலையத்தொடங்கின்றது அல்லது அமிழத்தொடங்கின்றது. நாவலை நகுலனுக்குக் காணிக்கை என்கின்றபோதே நமக்கு நாராயணின் கதையை தொடக்கத்திலேயே எளிதாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

நாராயணன் என்ற கதாபாத்திரத்தின் தளம்பலே, உண்மையிலேயே நாராயணன் தனித்து வாழ விரும்புகின்றாரா அல்லது புறக்காரணிகளால் அவருக்குத் திருமணம் நடக்காமல் போகின்றதா என்பதேயாகும். பல்வேறு காலகட்டங்களில் அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் உறவுகளும், நண்பர்களும் முயற்சிக்கையில் சிலது குறிப்பிட்ட காரணங்களால் பிறரால் நிராகரிக்கப்படுவதையும், அதேசமயம் பலவேளைகளில் நாராயணால் நிராகரிக்கப்படுவதையும் நாவலில் நாம் காண்கின்றோம். தனித்துவாழும் வாழ்வு நாராயணின் ஒரு தெரிவெனில் ஏன் அவரால் அதைக் கொண்டாடவோ, நிறைவாகவோ வாழமுடியாது இருக்கின்றது என்ற கேள்வியையும் இந்நாவலை முன்வைத்து நாம் கேட்டுப் பார்க்கலாம்.

நாராயணுக்கு அவரின் மாமாவின் இளையவயது மகள் கல்யாணி மீதே விருப்பு இருக்கிறது. கல்யாணிக்குத் திருமணம் நடந்து அவரின் மகள் திருமணமாகின்றபோதுகூட, கல்யாணி சார்ந்து இவருக்கு  உடல்சார்ந்து மோகக்கனவுகள் கூட வருகின்றன. ஆனால் நாராயணனுக்கு, கல்யாணியிலிருந்து நாவலின் இறுதியில் மும்பையில் சந்திக்கின்ற ராதாவரை ஈர்ப்பிருந்தாலும் ஏன் தன் உள்ளக்கிடக்கையை ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதே வாசிக்கும் எனக்கு அலுப்பைத் தந்திருந்தது. நாராயணைப் போன்றோர் இவ்வுலகில் நிறைய இருக்கக்கூடும். தனிமையில் இருந்தபடி, காமத்தைத் தீர்க்கின்ற காலங்கள் கனிகின்றபோதுகூட அதை எட்டி உதைத்தபடி வீம்பாக வாழ்கின்ற மனிதர்கள் மீது எனக்கு எவ்விதக் கேள்விகளுமில்லை. அவரவர்  வாழ்வு அவரவர்க்கு. ஆனால் என் அலைவரிசை ராஜ சுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தில்' வரும் கதைசொல்லிக்கு அண்மையாகச் செல்வது. வாழ்வு அவ்வப்போது பெரும் அதிர்ச்சிகளைத் தந்தாலும், தனக்கு என்ன வேண்டுமென அவற்றை நாடிச்செல்வது, அதைக் கொண்டாடியபடி தன் தனிமையையும் தனக்குள்ளேயே வைத்திருப்பது. இதன் அர்த்தம் தனித்திருந்து வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருப்பதால், வேறுவகையான சிக்கல்கள்/சோகங்கள் இல்லையென்பதல்ல. ஒருவருக்குத் தரப்பட்ட தேர்வின் நிமித்தம், அவர் அதனூடாக தன் வாழ்வை இயன்றவரை தனக்குப் பிடித்தமாதிரிக் கொண்டுசெல்வது, பிற/பிறரின் மீது அளவுக்கதிகமாக காரணங்களைச் சாட்டாது தம் வாழ்வின் தெரிவுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.

3.

.மாதவனின் புனலும் மணலும், நாஞ்சில் நாடனின் சதுரங்கக் குதிரையும் அவர்கள் எழுதிய நாவல்களில் உச்சமில்லை என்றாலும் வாசித்து விவாதிப்பதற்கான புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது என்பதையும் தெளிவாக இங்கு கூறிவிடவேண்டும். இன்னுமொரு அம்சம் என்னவென்றால் - நான் ஏற்கனவே பலதடவைகள் சொன்னதுதா ன் - இந்த இரு நாவல்களும் 200 பக்கங்ளுக்குள் முடிந்துவிடுகின்றவையாகவும் இருக்கின்றன. இவ்விரு நாவல்களில் எங்கு ஒவ்வொரு அத்தியாயத்தைத் தொடங்கி, எப்படி முடிப்பது என்று இதன் படைப்பாளிகளுக்குத் தெரிந்திருக்கின்றது. ஆ.மாதவனின் நாவலில் சில அத்தியாயங்கள் இரண்டு பக்கங்களும் இருக்கின்றன. அவ்வாறே அளவுக்கதிகமாய் எல்லாவற்றையும் விபரித்து எங்களைச் சோர்வடையச் செய்யாமலும் இந்த நாவல்கள் நகர்கின்றன.

இன்று எழுதப்பட்டும் பெரும்பாலான நாவல்களின் சிக்கலே வாசிப்பவரை பக்கங்களை எழுந்தமானமாகத் தட்டிச்செல்லும்படியான அலுப்பான நடையில் இருப்பது என்று சொல்வேன். வாசிக்கும் ஒருவரை, விபரிப்போ, பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலோ போதும் போதுமென்று பக்கங்களைப் புரட்டச்செய்தாலே அந்த நாவல் எங்கோ இடறிவிட்டதெனச் சொல்லலாம். எவ்வாறு ஒரு வாசகரை அலுப்படையச் செய்யாமல் எங்கே வெட்டி எங்கே புதிதாய்த் தொடங்குவதென்பதில் ஒரு நாவலாசிரியர்  நல்லதொரு திரைப்பட 'எடிட்டிங்' போல கவனமாக 'வெட்ட' வேண்டும். அதேபோல இந்த இரண்டு நாவல்களும் முடியும் இடங்களையும் அவதானித்தால் கூட, எப்படி ஒரு படைப்பை முடிப்பதென்ற உத்திகளும் நமக்குப் புலப்படும். ஒருவகையில் இந்த நாவல்களின் முடிவுகளே நம்மை இது குறித்து அதற்குள் இருக்கும் பலவீனங்களைத்தாண்டி வாசிக்கவும் உரையாடவும் வைக்கின்றன என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.
....................................

(ஆனி, 2020)