கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பியானிப்பூ (Peony) குறிப்புகள்

Wednesday, July 21, 2021

 

 1.

அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ்



செகோவின் வாழ்வு 44 வருடங்கள். அவர் மறைந்துகூட இப்போது ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அவரது கதைகளை இன்று வாசிக்கும்போதும் காலாவதியாகாது இருக்கின்றன. 'நாயுடன் நடந்த பெண்' செகோவின் பிரபல்யம் வாய்ந்த கதை. அதில் வரும் பாத்திரம் அன்னா என்ற பெயரில் இருப்பதால் மட்டுமின்றி, அந்தக் கதையின் சம்பவங்கள் பலதும் எனக்கு டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா'வை ஞாபகப்படுத்தியபடி இருந்தது (ஆங்கிலத்தில் ஏற்கனவே வாசித்திருந்தேன்). திருமணம் செய்த ஒரு பெண் விடுமுறைக்கு வரும்போது அவர் மீது காதலில் விழும் ஒரு ஆணின் கதை இது. பிறகு அவன் அந்தப் பெண்ணைத்தேடி அவர் வாழும் நகரத்துக்குப் போவதாய்க் கதை நீளும். இது விளாடீமிர் நபகோவுக்குப் பிடித்த செகோவின் கதைகளில் ஒன்று. இந்தக் கதையை செகோவ் எழுத ஏதும் காரணமிருக்கின்றதா என சற்று ஆராய்கின்றபோது இது செகோவின் வாழ்வில் நடந்த கதையென்றும், அந்தப் பெண்ணே செக்கோவ் பின்னர் திருமணம் செய்த ஒல்கா என்பதையும் அறியமுடியும்.


இதேபோல இன்னொரு கதையான 'சந்தோசமான மனிதன்' சுவாரசியமான ஒன்று. திருமணம் செய்த ஒருவன் ரெயினில் வருகின்றான். அவன் தற்செயலாக ரெயினின் வேறொரு பெட்டியில் தனது நண்பரொருவனைக் காண்கின்றான். அவனிடம் தான் திருமணஞ்செய்துவிட்டேன், தான் மிகவும் ஒரு சந்தோசமான மனிதன் என அடிக்கடி சொல்லிக்கொள்கின்றான். தன்னால் விரும்பியபோது சந்தோசத்தை உருவாக்கமுடியும் என்று சொல்லி நண்பனை மட்டுமில்லை அந்த ரெயின் பெட்டியில் இருக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றான்.


இதற்கு முன் அவன் ஒரு தரிப்பிடத்தில் ரெயின் நின்றபோது மது குடிப்பதற்காக இறங்கி சில குவளை மது அருந்த ரெயினும் புறப்பட இறுதி நேரத்தில் ரெயினுக்குள் ஏறியிருக்கின்றான். இதைக் கூறிவிட்டு நண்பனிடம் தனக்காய்க் காத்திருக்கும் மனைவியைக் காண இன்னொரு பெட்டிக்குப் போகும்போதுதான், அந்த மகிழ்ச்சியான மனிதனுக்கு தான் பிழையான எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருக்கும் ரெயினுக்குள் அவசரத்தில் ஏறிவிட்டேன் என்பது புரிகிறது. முட்டாள் முட்டாள் எனத் தன்னைத் திட்டிக்கொள்கின்றான். சந்தோசத்தை தன்னால் தானே உருவாக்கமுடியும் என்று சொல்கின்றவன் இப்போது சோர்ந்து போகின்றான். அந்த ரெயினுக்குள் இருக்கும் மற்ற மனிதர்கள் அவனுக்கு அடுத்து என்ன செய்கின்றார்கள் என்பது கதை.


செகோவிடம் இருந்து எப்படி எளிமையான கதைகளைச் சொல்வது என்பதை அறிந்து கொள்வதைப் போல, அந்த எளிமையிலிருந்து நம்மைப் பாதிக்கச் செய்யும் கதைகளையும் எழுதமுடியும் என்பதையும் கற்றுக்கொள்ளமுடியும். ஒரு சிறு உலகத்திற்குள் நாம் சுழன்று கொள்ளாது அல்லது அதுதான் 'மோஸ்தர்' என்று நம்பாது, வெளியே வந்து எப்படி நாம் வெவ்வேறு பின்னணியில் இருந்து மனிதர்களின் கதையைச் சொல்லலாம் என்பதற்கு செகோவ் நமக்கு நல்லதொரு உதாரணமாக இருக்கின்றார்.


எம்.எஸ்(எம்.சிவசுப்பிரமணியன்) நேர்த்தியாக இந்தக் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கின்றார். என்ன சிலவேளைகளில் தமிழ் வாசகர்களுக்கு விளங்கவேண்டும் என்பதற்காய் மதுக்கடைகளையெல்லாம் கள்ளுக்கடைகளாக்கிவிடும்போது. ரஷ்யாவில் கள்ளுக்கடைகளா என திகைப்பு வந்தாலும் எதுவென்றாலும் போதை போதைதானேயென அதையும் இரசிக்கமுடிகிறது.



2.


மெளன வாக்கிய மாலை (கவிதை-காண்பியம்-தியானம்) - யோகி



ஆன்மீகத்தை வியாபாரப்படுத்தப்பட்ட மதங்களுக்குள்ளும், அதைப் பிரதிநிதிப்படுத்துகின்றோம் என்கின்ற போலிகளின் பேரிச்சலுக்குள்ளும் இடையில் இருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானது. மேலும் உள்ளுணர்ந்து கொள்வதை எல்லாம் எழுத்தாகவோ/பேச்சாகவோ வைக்கும்போது கூட அவற்றின் சாராம்சம் இழந்துபோகும் ஆபத்தும் உள்ளது. விசர்ச் செல்லப்பா எனப்படும் செல்லப்பா சுவாமிகள் பேசியது மிகக்குறைவு. ஏன் அவரின் தொடர்ச்சியெனப்படும் யோகர் சுவாமிகள் கூட அவ்வளவு பேசவில்லை. மிகவும் குறைவாகப் பேசிய ரமணர் கூட, நான் யார் என்றே தொடர்ந்து அவரைத் தேடி வந்தவர்களிடம் கேள்விகளாகக் கேட்க வைத்தவர். விசிறி சாமியார், தன்னைப் பற்றி வரும் ஓரிரு வரிகளை தொடர்ந்து மனனம்/பராயாணம் செய்தாலே போதும் என்று சொல்லியபடி தன்னையொரு பிச்சைக்காரன் என்று அறிவித்துக்கொண்டவர்.


அதைபோலத்தான் ஆன்மீகத்தை எளிதான வார்த்தைகளில் அல்லது ஏற்கனவே தேய்வழக்காகிப்போன சொற்களில் பேசும்போது நமக்குப் பெரும்பாலும் அர்த்தத்தைத் தராது போய்விடும் நிலைமையும் உண்டு. ஸென்னில் மலையைப் பார்க்கும்போது முதலில் மலை தெரியும், பிறகு அது இல்லாது போகும், ஞானம் கிடைத்தபின் மலை மலையாகவே தெரியும் என்று சொல்லும் கதை உண்டு. மலை மலையாகத் தெரிவதற்கு ஏன் நாம் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்று உடனே ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால் அந்த transformation - மலை/மலையில்லாது போதல்/மீண்டும் மலை தெரிதல்- என்பதற்கு சிலவேளைகளில் ஒரு ஆயுளே நமக்குப் போதாமல் கூடப் போகலாம். ஆகவே எளிமை என்பது எப்போதும் ஒரே 'எளிமை'யல்ல.


அவ்வாறுதான் யோகியின் கவிதைகளை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யோகி தன்னை முதலில் ஆன்மீகவாதியாக முன்வைக்க விரும்புகிறார் என இந்தத் தொகுப்புச் சொல்கின்றது. அவரின் கவிதைகள் எளிமைபோல, ஏற்கனவே பழக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் வந்துவிழுவதால் நாம் சாதாரணமாக வாசித்து கடந்துகூடப் போய்விடலாம். ஆனால் அவருக்கு அந்தச் சொற்கள் தரும் மெளனமும் ஆழமும் மிக நீண்டவையாக இருக்கலாம்.


அவருக்கு ஒத்தவரிசைகளில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் அந்த சொற்களை அதன் மேலோட்டமான அர்த்தங்களைத் தாண்டி வேறு அர்த்தங்களை அறிந்துகொள்ளவும் கூடும். இந்த நூல் அழகான வடிவமைப்பில் இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கின்றது. கவிதைகளை அப்படியே ஒரு நீண்ட ஒற்றையாக மாற்றிவிட, அதன் மறுபக்கத்தில் காண்பியக் காட்சிகள் விரிகின்றன.



3.

அயல் பெண்களின் கதைகள் - (சிங்களத்திலிருந்து தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்)


எனக்கு ஒரு சிங்கள நண்பர் இருக்கின்றார். அவரிடம் அவ்வப்போது இலக்கியம் சார்ந்து பேசுவதுண்டு. அண்மையில் கத்யானா அமரசிங்ஹாவின் 'தரணி' வாசித்துவிட்டு என்ன ஒரு நாவலென வியந்துகொண்டிருந்தார். அதற்கு அவர் சிங்களத்தில் ஒரு வாசிப்பும் எழுதியிருந்தார். தமிழிலும் 'தரணி' வந்திருக்கின்றதென்று நான் கூறியபோது, விரைவில் வாசித்துவிட்டு வா, நாம் அதைப் பற்றிப் பேசுவோம் என்றார்.


அந்தப் புத்தகம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ரிஷான் ஷெரீப் சிங்களத்திலிருந்து தமிழாக்கம் செய்திருந்த 'அயல் பெண்களின் கதைகளை' கடந்தமுறை சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்திருந்தேன். 5 சிங்களப் பெண்களின் 9 கதைகள் இருக்கின்றன. கத்யானாவின் 'நட்சத்திரப் போராளி', தஷிலா ஸ்வர்ணமாலியின்' பொட்டு', சுநேந்ரா ராஜ கருணாநாயகவின் 'குறுந்தகவல்' எனக்குப் பிடித்தமான கதைகள். ஒருவகையில் இந்தக் கதைகள் மூன்றும் தமிழ் மக்களைப் பேசுகின்றவையுங்கூட. எப்படி இந்தப் பெண்கள் நுட்பமாக கதைகள் எழுதுகின்றார்கள் என்பதோடு, நமக்கு நெருக்கமாய் நம்மைப் பற்றிய கதைகளைச் சொல்கின்றார்கள் என்பதும் சற்று வியப்பானது. போர் அனுபவங்கள் நிறைந்த தமிழ் மக்களாகிய நாம் எத்தனை விரிவான அனுபவங்கள் இருந்தாலும் ஏனின்னும் இவர்கள் அளவுக்கு நம்மால் கதைகளை வேறொரு பாதையில் நின்று சொல்லமுடியவில்லை என்ற ஏக்கமும் இவர்களை வாசிக்கும்போது வருகின்றது.


சிங்களப் பெண்களின் கதைகளுக்கு தொடர்பில்லாத இந்திய நகரத்துப் பெண்களின் அட்டைப்படம் ஏன் தெரிவுசெய்யப்பட்டது என்பது மட்டும் புரியவில்லை. இது எனக்கான கேள்வி மட்டுமில்லை, இந்த அட்டையைப் பகிர்ந்தபோது என் சிங்களத் தோழியும் இதையே கேட்டார். அதுபோல அவரும் நமது தமிழ்க்கதைகளை வாசிக்க ஆர்வமாகவே இருக்கிறார் (தமிழினியின் கதைகள் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவுமில்லை). சிங்களத்திலிருந்து தமிழுக்கு வருகின்ற மாதிரி, தமிழிலிருந்து சிங்களத்துக்கும் நேர்த்தியான மொழிபெயர்ப்புக்களை யாரேனும் தனித்தோ/கூட்டாகவோ செய்யலாம். இல்லாவிட்டால் ஒற்றைவழிப் பயணம் போல நாம் மட்டுமே நம்மோடு பேசிக் கொண்டிருப்பதைப்போல ஆகிவிடும்.

.................................


(Feb 23, 2021)

0 comments: