'A Passage North'இல் கிரிஷான் என்கின்ற பாத்திரத்திற்கு ஒரு காதலி இந்தியாவில் இருப்பார். அவரைப் பிரிந்து வந்து நான்கு வருடங்களில் -நனவிடைதோய்தலாக- கிரிஷான் அவரது காதலியான அஞ்ஜமை நினைவுகூர்வார். இந்த நான்குவருடங்களில் நான் நன்கு முதிர்ச்சியடைந்துவிட்டேன், எனக்கு தசைகள் திரண்டு தோள்கள் விரிந்துவிட்டன, இந்த நிலையில் என்னைப் பார்த்தால் அஞ்ஜம் இப்போது என்னை அதிகம் நேசிப்பார் என்று கிரிஷான் நினைப்பார். அப்படி நினைக்கும்போது, அந்த நான்கு வருடங்களில் தன்னைப் போலவே அஞ்ஜமும் முதிர்ச்சியடைந்திருப்பார், ஒவ்வொரு மனிதரும் தாம் விட்டுவந்த காலத்தில் இருந்ததுபோல தமக்குத் தெரிந்த மனிதர்களும் இருப்பார்கள் என்று நம்புகின்றோம். ஆனால் நாம் இடைப்பட்ட காலத்தில் எப்படி மாறுகின்றோமோ அப்படித்தான் அவர்களும் மாறியிருப்பார்கள். அதை மறந்துவிடுகின்றோம் என்று கிரிஷான் பிறகு தனக்குள் இந்த நாவலில் நினைப்பார்.
வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை
In இன்னபிற, In பத்தி, In வாசிப்புFriday, November 19, 2021
படைப்பாளிகளின் பயணங்கள்
In இன்னபிற, In வாசிப்புMonday, November 15, 2021
ஒரு உண்மையான வரி இருந்தால் மட்டும் போதும் தொடர்ந்து நிறைய எழுதிச் செல்வதற்கென ஹெமிங்வே கூறுவார். அத்துடன் எழுத்து ஓரு கிணற்று ஊற்றைப் போன்றது, அதன் அடிவரை போய் சுவைத்து அதை வற்றச் செய்துவிடக்கூடாது என்றும் சொல்வார். நன்றாக எழுத்து வந்தால் கூட ஓரிடத்தில் நிறுத்திவிட்டு -ஊற்று எப்படித் திரும்பப் பெருக நேரம் எடுக்குமோ- அப்படி எழுத்தும் ஊற்றெடுக்க காலம் கொடுக்கவேண்டும் என்று இன்னோரிடத்தில் ஹெமிங்வே எழுதிச் செல்வார்.
இவ்வாறான படைப்புக்களை வாசிக்கும்போது நாம் அந்தக் காலத்து பழக்கவழக்கங்களை, நடைமுறைகளை, சிந்தனைப்போக்குகளை அறிந்துகொள்கின்றோம். அதுமட்டுமில்லாது எமக்குப் பிரியமான படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையைக் கூட ஒரளவு தெரிந்து கொள்ளமுடியும். அவ்வாறான ஒரு புத்தகமாக எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலகை வாசிப்போம்' என்ற நூல் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இதில் பெரும்பான்மையான கட்டுரைகள் எழுத்தாளர்கள் எழுதியவைகளையும், எழுத்தாளர்களைப் பற்றி பிறர் எழுதியவைகளையும் குறித்துப் பேசப்பட்டாலும், அநேகமான கட்டுரைகளின் அடிச்சரடாய் பயணங்கள் இருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
யாருமற்ற தீவுகளைத் தேடிப் போகும் டி.எச்.லோரன்ஸை, கிரேக்கத்திற்குப் போகும் ஹென்றி மில்லரை, ரஷ்யாவுக்குப் போகும் ஜோன் ஸ்டீன்பெக்கை, இந்தியாவுக்குச் செல்லும் குந்தர் கிராஸை என பலரைப் பார்க்கின்றோம். சிலர் பிற நாடுகள்/மக்கள் மீது வைத்திருந்த எண்ணங்களை இத்தகைய பயணத்தின் பிறகு மாற்றிக்கொள்கின்றார்கள். சிலர் தமது சிந்தனைகளை மாற்றிக்கொள்ளாது, தமது பார்வைக்கு அண்மையாக 'மற்றவர்கள்' வரவேண்டுமென ஆசைப்படுகின்றார்கள். எனினும் இவையெல்லாவற்றுக்கும் அப்பால் பெரும்பாலானோர் வாழ்வின் சாராம்சத்தை தேடுவதிலே இந்தப் பயணங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.
போர்ஹேஸினதும், மார்க் ட்வைனினதும் உலகப்பயணங்கள் ஒருவகையான அனுபவங்களை அவர்களுக்குக் கொடுக்கின்றதென்றால், தாகூருக்கு உலகப் பயணங்கள் இந்தியாவின் பெருமையைப் பிறருக்கு எடுத்துரைப்பதில் பெரும்பாலும் கழிகின்றது. ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்கோ தனது கனவுப் பயணம் என இந்தியாவுக்குத் தொடங்கிய பயணத்தில் இந்தியாவில் கால்வைக்காமலே அதைச் சுற்றியுள்ள, இலங்கை, பர்மா, இந்தோனேசியா என்று பிற நாடுகளுக்கு நீள்கின்றது. சில காதல்களைச் சொல்லிவிட்டால் அது மறுக்கப்பட்டுவிடுமோ அல்லது இழக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் சொல்லப்படாமல் விடுவதைப் போல, ஹெஸ்ஸே அவரின் நெருக்கமான கனவு உலகான இந்தியா, தனது நேரடிப் பயணத்தின் மூலம் கலைந்துவிடக்கூடுமென்ற அச்சத்தால் கூட இந்தியாவில் கால்வைக்காமல் கடந்துபோயிருக்கலாமோ எனத் தோன்றுகின்றது. இந்தப் பயணத்தை முடித்ததன் பின்னரே, ஹெஸ்ஸே தனது பிரபல்யமான 'சித்தார்த்தா'வை எழுதினார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதில் துர்க்கனோவ், ஹென்றி மில்லர், டி.எச்.லோரன்ஸ் போன்றவர்கள் காதலின்/காதலிகளின் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தவர்கள். அதிலும் திருமணமான பெண் மீது பித்துப் பிடித்தலைந்து அவளையே தன் காதலியாக, காலம் முழுக்க வரித்து வாழ்ந்த துர்க்கனோவ்வின் காதல் எல்லாம் உண்மையிலேயே 'விசித்திரமான காதல்'தான். இந்தத் தொகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியாவுக்கு வந்து பார்த்து எழுதிய படைப்பாளிகளை விமர்சனத்தோடு அணுகுவது முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. இவ்வாறான வாசிப்புக்களிலிருந்துதான் நாம் காலனித்துவம் குறித்த உரையாடல்களைத் தொடங்கமுடியும். ஆனால் மார்க் ட்வைனுக்குக் கொடுக்கும் ஒருவித சலுகையை, குந்தர் கிராஸுக்கு எஸ்.ரா கொடுப்பதில்லை. குந்தர் கிராஸ் பார்த்த வங்காளம் காலனித்துவத்தின் கண்கொண்டு என்றாலும், மார்க் ட்வைன் வரும்போது காலனித்துவவாதிகளே இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தார்கள் என்பதும், குந்தர் கிராஸ் வரும்போது இந்தியா சுதந்திரமடைந்துவிட்டதென்பதும் எஸ்.ரா கவனிக்க மறந்த புள்ளிகளில் ஒன்றென நான் நினைக்கின்றேன். மேலும் குந்தர் கிராஸுக்கு இந்தியா பிடிக்கவில்லையெனில் அவர் இந்தியாவுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கவும் தேவையிருக்காது. ஆக குந்தர் கிராஸுக்கு இந்தியா அதன் மறைக்கமுடியா வறுமையோடும், அழுக்குகளோடும் பிடித்திருக்கின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கின்றது.
அதுபோலவே ஹெர்மன் ஹெஸ்ஸேயின் 'சித்தார்த்தா' பற்றி, இது மேற்குலகினரின் கிழக்கு மீதான பார்வை, ஆகவேதான் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புத்தருடன் விவாதித்து முரண்பட்டு தனக்கான ஞானத்தைத் தேடிப் போகின்றான். ஒருவகையில் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புத்தரை மறுதலிக்க விரும்பும் மேற்கின் பார்வை என எஸ்.ரா பார்க்கும் பார்வையிலும் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. மேலும் துறவியாக வாழ்ந்து/ஞானம் பெற்ற மணிமேகலை,வள்ளலார் போன்றவர்கள், பசிப்பிணி போக்க மக்களிடையே வந்தவர்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, எதையும் மக்களுக்குச் செய்ய விரும்பாத ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா கீழிறங்கி இருக்கின்றார் என்று சொல்வதிலும் எனக்குச் சிக்கல்களுண்டு.
ஞானத்தின் வழிநிலைகள் பலது போல, ஞானம் அடைந்தபின் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளும் வேறுவிதமாக இருப்பதில் தவறேதும் இருப்பதாய்த் தெரியவில்லை. அந்தவகையில் பார்த்தால் பின்னர் வந்த இரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தியை, ஏன் ஓஷோவைக் கூட நாமோர் ஓரத்தில் ஒதுக்கித்தான் வைக்கவேண்டும். இன்னொருவகையில் நாம் ஸென் ஞானிகளை இதன் நிமித்தம் முற்றாகப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அவர்களில் அநேகர் சாதாரண மனிதர்களாய் எளிய வாழ்க்கையைத் தம்போக்கில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக அல்லவா இருந்திருக்கின்றார்கள்.
இதில் முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இருப்பினும், 15 கட்டுரைகளாவது மிக முக்கியமானதெனச் சொல்வேன். அதிலும் எழுத்தாளர்கள் செய்யும் பயணங்களையும், அவற்றினூடாக அவர்களின் வாழ்வின் நடைபெற்ற சுவாரசியங்களையும் அறிய விரும்புபவர்க்கும் இது முக்கியமான ஒரு கையேடாக இருக்கும். மேலும் வாசிப்பில் ஆர்வமுடையவர்க்கு இதிலிருக்கும் கட்டுரைகளுக்கு அப்பாலும், புதிய விடயங்களை அறிந்துகொள்ளமுடியும்.
ஹாவானாவுக்குப் போனபோது ஹெமிங்வே அடிக்கடி வந்து மது அருந்தும் பாரில் அவர் நாற்காலியில் மது அருந்தியபடியிருக்கும் ஒரு சிற்பத்தைப் பார்த்து நான் மகிழ்ந்ததுமாதிரி, வியன்னாவில் பீட்டர் ஆல்டென்பேர்க் என்ற கவிஞனுக்கு அவர் அடிக்கடி செல்லும் கஃபேயில் இப்போதும் அவர் இருந்து கோப்பி குடிப்பதுபோன்ற நிலையில் சிற்பம் செய்துவைத்திருக்கின்றார் என்பது போன்ற சுவாரசியமான விடயங்களையும் இந்நூலில் தெரிந்து கொள்ளலாம்.
ஆக ஒருவகையில் படைப்பாளிகளின் தனிப்பட்ட பயணங்களைத் தெரிந்து கொள்வதைப் போல, இதுபோன்ற சுவாரசியமான சின்ன விடயங்களும் நாம் மேலும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்துப் பார்ப்பதற்கான உந்துதலைத் தரக்கூடியதாக நமக்கு அமையலாம். 200 பக்கங்கள் இருக்கும் இந்த நூலை இரண்டு நாட்களுக்குள் அவ்வளவு சுவாரசியமாக வாசித்து முடித்தேன். அந்தவகையில் நல்லதொருதொகுப்பைத் தந்தமைக்காய் எஸ்.ராவுக்கு நன்றியைச் சொல்லியாக வேண்டும்.
*****************
வாசிப்பும் வாழ்க்கையும் வார்த்தைகளும்..
In அனுபவம், In இன்னபிறSunday, November 14, 2021
பயணங்கள் போய்த் திரும்பும்போது சென்ற நாடுகளின் ஞாபகங்களாய் எதையாவது எடுத்து வருவேன். கியூபாவில் தற்செயலாய்க் கண்டெடுத்த கடல்தாவரத்தின் சிறுகிளை, கொச்சினில் வாங்கிய கதகளியாட்ட முகம், இலங்கையின் ரக்ஸா முகமூடி என என் அறையை இவை அலங்கரித்தபடி இருக்கும். கழுத்தில் எதையும் அணியப்பிரியப்படாத என் கழுத்தில் நீண்டகாலமாய்த் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் இருந்தது, மெக்ஸிக்கோவில் மாயன் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட ஒரு கறுப்புச் சிறு உருவம்.
அதைவிட ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்புகளையோ கலாசாரத்தையோ பிரதிபலிக்கும் காந்தத்திலான பயண நினைவுச் சின்னத்தை (souvenir) வாங்கி வந்து பிரிட்ஜில் ஒட்டிவைப்பேன். குசினிக்குள் உலாவித்திரியும் ஒவ்வொருபொழுதும் இவை என் கண்களில்பட்டபடியே இருக்கும். சிலவேளைகளில் காலம் உறைந்துபோய் அந்த நிலப்பரப்புக்களில் உலாவிய பொழுதுகள் ஒளிரத்தொடங்கும். இப்போது வீடங்கும் காலமாயிற்றேயென மென்துயர் பரவ அவற்றைத் தடவிவிட்டபடி நகர்வேன்.
தாம் நினைக்கின்றபோது, மகிழ்ச்சியைத் தன் கைவிரல் அசைவில் உருவாக்க வரம் வாங்கி வந்தவர்க்கும், அதை நாய்க்குட்டியைப் போலக் கொஞ்சி விளையாடிக் கொள்பவர்களைப் பற்றியும் நான் பேசப் போவதில்லை. ஓஷோ ஓரிடத்தில் Boredom குறித்துப் பேசும்போது, உலகில் இரண்டுவகையான மனிதர்கள் மட்டுமே சலிப்புக்குள் ஒருபோதும் அமிழாது இருப்பவர்களெனச் சொல்கிறார். அவர்களில் ஒருவகையினர் முட்டாள்கள், மற்றவர்கள் ஞானம் அடைந்தவர்கள். சாதாரண மனிதர்கள் எல்லோரும் அலுப்புக்குள் நுழைந்து வராது இருக்கவே முடியாது என்கிறார். நான் சாதாரண மனிதன்.
சமூக வலைத்தளங்கள் உட்பட, தொலைபேசி அழைப்புக்கள் வரை என் நண்பர்கள் வெறுமைக்குள்ளும், சலிப்புக்குள்ளும் அகப்பட்டு வெளிவராது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிவேன். ஒரு பொழுது விடியும்போது என்னால் எனது படுக்கையிலிருந்து எழுந்து ஒரு சிறுவிடயத்தைச் செய்யக்கூட முடியவில்லை என்ற கேவலுடன் கதைப்பவருடன், மகிழ்ச்சி ஒரு நாய்க்குட்டியைப் போன்றது, சொடுக்குப் போட்டுக் கூப்பிடாமல் இப்படி ஏன் முறைப்பாடு செய்கின்றீர்களென நான் அவரிடம் சொன்னால் அது எவ்வளவு வன்முறையாக இருக்கும்.
ஏன் இந்த மனிதர்கள் மோசமாக இருக்கின்றார்கள், ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது, வாழ்வு ஏன் இந்தளவு வெறுமையாக இருக்கிறதெனத் தத்தளித்துக் கொண்டிருப்பவர்க்கு முன்னால் வாழ்வின் நாம் கற்ற எந்தப் பாடத்தைச் சொன்னாலும் அது எந்தப் பிடிமானத்தையும் ஏற்படுத்தாது. எதையோ பேசிப் பேசித்தான் அவர்களை இந்த விடயங்களில் இருந்து கடக்க வைக்க முடியும். அவ்வாறு உரையாடுவதன் மூலம் அவர்களின் தத்தளிப்புக்களை மட்டுமில்லை எங்களின் வெறுமைகளையும் சிலவேளைகளில் நாம் கடந்து போய் இருப்போம்.
ஆகவே மகிழ்ச்சியை நாய்க்குட்டியைப் போல வெளியில் உருவாக்குவதைவிட, அமைதியை உங்கள் மனதுக்குள் உருவாக்கவே விருப்புங்கள் எனச் சொல்வேன். அந்த நிம்மதி, மகிழ்ச்சியின் கதவு சட்டென்று எப்போதாவது - அது காதலாகவே, நட்பாகவோ, ஒரு நல்ல இசையின் வடிவமாகவோ- திறக்கும்போது உங்களால் அதை முற்றாக 'எஞ்சாய் எஞ்சாமி' என்று தன்னிலை மறந்து ஆடிப்பாடிட வைக்கும். ஆடுகின்றபோது ஏதேனும் மென் உணர்வுகள் நிரம்பி கண்ணீர்த்துளிகளைச் சிந்தி உங்கள் வெறுமையை உருக்கிவிடக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் கணத்தில் வாழ்வு எவ்வளவு அழகானதானதென ஒரு பறவையில் சிறகடிப்பைப் போல உங்களை உணரவைக்கவும் செய்யலாம்.
இந்த நோய்த்தொற்றுக் காலங்களில், நான் நெருங்கிப் பேசிய பல நண்பர்களிடையே அவர்கள் சமூகவலைத்தளங்களில் காட்டும் முகத்துக்கு அப்பால் இன்னொரு உலகம் இருப்பதைக் கண்டு திகைத்திருக்கின்றேன். அவ்வளவு கடினமான காலங்களைக் கடந்து வந்தவர்களாகவும், கடந்து கொண்டிருப்பவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு படைப்பைத் தமிழாக்கம் செய்தபோது, ஒரு நண்பர் அதைத் தன் பக்கத்தில் பகிர்ந்துவிட்டு, பிறகு அதை மறைத்துவிட்டு, தான் செய்த மொழியாக்கம் போல கொஞ்சம் திருத்தி மீண்டும் பகிர்ந்தபோது அவரின் பெயரைக் குறிப்பிடாது 'இப்படிச் செய்வது நியாயமா' என ஒரு சிறுபதிவைப் பொதுவில் எழுதியிருந்தேன். அந்த நண்பர் ‘உட்பெட்டி’யில் வந்து நிறைய விளக்கம் கொடுத்துக்கொண்டேயிருந்தார். ஒருகட்டத்தில் என்ன செய்வதாக இருந்தாலும், பொதுவில் பகிருங்கள், நான் அங்கே உரையாடத் தயாராக இருக்கிறேன் என்றேன். அதன்பிறகும் அவர் எனக்கு நண்பராக சமூக வலைத்தளத்தில் இருந்தார். பின்னர் சில வருடங்களுக்குப் பின் அவர் தனக்கான முடிவைத் தானே தேர்ந்தெடுத்து நம்மை விட்டுப் பிரிந்தபோது, என்னை அவரை அந்தச் சிறுபதிவைக் கூடப்போடாது காயப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று கலங்க வைத்திருந்த்து.
எந்த நண்பர்களோடு கதைத்தாலும் எனக்கு இது குறித்து குற்றவுணர்வு இப்போதும் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருப்பேன். சிலவேளை அவர் அந்த விடயத்தைச் செய்தபோது எந்தவகையான மனோநிலையில் இருந்தார் என்பது கூட எனக்குத் தெரிந்திருக்காது. அவர் அப்போதும் ஏதும் தளம்பலில் இருந்திருக்கலாம். நான் அதை ஏன் உணராது போனேன் என்கின்ற மனக்குறை இப்போதும் என்னோடே வந்தபடி இருக்கின்றது.
இந்த நோய்த்தொற்றுக்காலத்தில் சில நண்பர்களோடு நெருங்கிப் பழக வாய்த்திருக்கின்றதெனச் சொன்னேன் அல்லவா? அவர்களின் கடந்துவந்த கதைகளை எல்லாம் கேட்கும்போது சிலவேளைகளில் எனக்கு அவ்வப்போது வரும் வெறுமைகளும், துயரங்களும் ஒரு பொருட்டேயல்ல என்றே பலவேளைகளில் தோன்றுவதுண்டு. ஆக அவர்கள் தங்களைப் பகிரும்போது அது எனக்கான கற்றலாய், தேற்றலாய், தேறுதலடைதலாக அமைந்திருக்கின்றது. ஆகவேதான் ஒருவரைப் பார்த்து ' மகிழ்ச்சி நாய்க்குட்டி போல இருக்கும்போது, வாழ்வு சலிப்பாக இருக்கின்றது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்' என அறைகூவலாக மட்டுமில்லை, சின்ன முனகலாய்க் கூடச் சொல்லமாட்டேன்.
மேலும் இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருந்தால், அது ஒரு அற்புதமான மனோநிலையை - முக்கியமாய் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்' எனவும் சிலர் சொல்கின்றார்கள். என்னால் பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி'யை வாசித்துவிட்டோ, அப்புவின் 'வன்னி யுத்தத்தை' வாசித்துவிட்டோ பல நாட்கள் கடும் உணர்வுகளுக்குள் உழன்றுகொண்டுதான் இருக்கமுடிந்தது. அப்படியெனில் எப்போதும் இலக்கிய உலகம் மகிழ்ச்சியை மட்டுமா கொண்டுவரும்? அந்தக் கலங்காத உள்ளத்தை, இந்த உலகம் ஏன் இப்படி கொடூரமாக இருக்கின்றது என்று வெறுமையை உணரவைப்பதையெல்லாம் 'வாசிப்பு ஒரு அற்புதமான உலகம்' என்று சொல்லி பாவனை காட்டவும் என்னால் முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை. மற்றவர்களின் பாதைதான் எங்களின் பாதையென சட்டென்று நம்பிவிடாதீர்கள். 'நெடுஞ்சாலையில் என்னைக் கண்டால் யோசிக்காமல் உடனே கொன்றுவிடுங்கள்' என்று தன் பாதை எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அதைப் பின் தொடராதீர்கள் என்றுதான் கெளதம புத்தரும் (ஸென்) கூறுகின்றார். ஹெர்மன் ஹேஸேயின் 'சித்தார்த்தா'வில் வரும் சித்தார்த்தா, புத்தனைக் கண்டு சலிப்படைந்து நதிக்கரையில் வந்துதான் தனக்கான ஞானத்தைப் பெற்றுக்கொள்கின்றான். அவன் புத்தனின் பாதைதான் தனதென்று புத்தனிடம் அடைக்கலம் ஆகியிருந்தால், அவனுக்கான ஞானம் கிடைத்திருக்காது அல்லது ஆகக்குறைந்தது காலம் பிந்தித்தால் கிடைத்திருக்கும். புத்தனின் ஒவ்வொரு அடியையும் பிசகாது பின் தொடர்ந்தாலும், மற்றவர்க்கு எல்லாம் ஞானம் கிடைத்தபோதும், ஆனந்தாவிற்கு மட்டும் ஞானம் கிடைக்கவில்லை. புத்தரின் மரணமே ஆனந்தாவின் விடுதலையாகின்றது. அதன் பிறகே அவர் ஞானமடைகின்றார்.
ஆகவே, அழவேண்டியபோது அழுது, மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரித்து, தழுவத்தோன்றும்போது ஆரத்தழுவி வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வோமாக. துயரத்தையும், வெறுமையையும் அடைந்தபிறகு வரும் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்குமான பெறுமதி எத்தகையது என்பது அதை அனுபவித்தவர்க்குத்தான் நன்கு தெரியும்.
மேலும் எப்போதும் முத்தமிட்டுக்கொண்டிருந்தால் முத்தம் ஒரு அற்புதமான அனுபவமாகவா இருக்கபோகின்றது?
..........................
-இன்னும் வரும்-
(நன்றி: வியூகம்- இதழ்-08/ஒக்டோபர்- 2021)
சூரியன் உதிக்க, காடுகளில் உலாவும் ஒற்றன்!
In இன்னபிற, In வாசிப்புSunday, November 07, 2021
“Never fall in love?"
"Always," said the count. "I am always in
love.”
― Ernest Hemingway, The Sun Also Rises
காலை எழுந்ததிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. கோடையில் மழை என்பது வேறுவிதமானது. இலையுதிர்காலத்து மழையை உள்ளேயிருந்து பார்க்கமுடியுமே தவிர, ஆசை தீர நனையமுடியாது. வானம் சாம்பலாய் மூடி, நெடிதாய் வளர்ந்திருந்த மரங்களும், பசுமையாய்த் தரையில் படர்ந்திருந்த புற்களும், நனையப் பெய்யும் மழைக்கு ஒருவித அழகுண்டு. அந்த அழகு மனதுக்குள் நெகிழ்வைக் கொண்டுவரும். நெகிழ்வு பல நினைவுகளை விரும்பியோ விரும்பாமலோ ஊற்றாகப் பெருக வைக்கும்.
இப்படி சில வருடங்களுக்கு முன் கேரளாவில் தொடுபுழாவில் நின்றபோது அனுபவித்திருக்கின்றேன். அங்கே நின்ற இரண்டு வாரங்களும் தினம் மழைதான். தங்கி நின்ற இடம் மூவிலாறு பாய்கின்ற இடம். தினம் தினம் வெள்ளம் பாய்கின்ற இடம் மேலேறி வந்ததைப் பார்த்திருக்கின்றேன். அறையின் யன்னலைத் திறந்தால் பலாமரங்களும், வாழைமரங்களும் நனைந்து கொண்டிருப்பதைப் பார்ப்பது ஒருவகை அலாதியான அனுபவம். அதைவிட எப்போதாவது கொஞ்சநேரம் மழை நின்றவுடன் மழைநீர் ஊறிய செம்மண்தரைகளில் பாதம் பதிந்து நடந்து போவது எப்போதும் வாய்த்துவிடாது.
இவ்வாறான மழைக்காலங்களில்தான் பலருக்கு பலவித
நினைவுகள் ஊற்றெடுக்கத் தொடங்கும். தொலைத்துவிட்டு வந்த பால்யம், நீங்கிவிட்டு வந்த தாய்மண், கைநழுவிப்போன காதல்கள் என பல நினைவுகள் மழைநீர்க்கொப்புளங்களாய்
உருவாகி உடைந்து போகக்கூடும். எனக்கு இப்போதெல்லாம் இந்த மழை, செய்த பயணங்களையும், செய்யவிரும்பும் பயணங்களையும் நினைவுபடுத்தச் செய்கின்றன.
ஹெமிங்வேயின் 'சூரியனும் உதிக்கின்றது' (The sun also rises) நாவல் பயணத்தைப் பற்றித்தான் பேசுகின்றது. இந்தக் கதையில்
நண்பர்கள் பாரிஸில் இருந்து ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையைப் பார்க்கப்
போவதுதான் கதை. ஹெமிங்வேயிற்கு ஸ்பானியர்கள் மீதிருக்கும் ஈர்ப்பு பிறர்
எவரையும் விட அதிகமானது. ஆகவேதான் சிக்காகோவில் பிறந்த அவருக்கு பிடித்த இடங்களாக
ஸ்பெயின், கியூபா, புளோரிடா (இங்கும்
ஸ்பானியர்களே கூட வசிக்கிறார்கள்) இருந்திருக்கின்றன. இந்த இடங்களில்தான் அதிக காலம்
வாழ்ந்துமிருக்கின்றார்.
'சூரியனும் உதிக்கின்றது' நாவல், முதலாம் உலக மகாயுத்தம் முடிந்தபின் எழுதப்படுகின்றது.இரண்டு முறை ஏற்கனவே விவாகரத்துச் செய்துவிட்ட பெண்ணுக்காய் கிட்டத்தட்ட நான்கு நண்பர்கள் போட்டியிருக்கின்ற ஒரு சிக்கலான உறவையும் இந்தப் பயணத்தில் பார்க்கின்றோம். அமெரிக்க, இங்கிலாந்து ஆண்கள் இந்தப் பெண்ணுக்காய் நிஜச் சண்டை கூடச் செய்ய, இறுதியில் ஒரு இளைய ஸ்பானிய காளைச்சண்டைக்காரன் அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் இருவரும் மெட்றிக்குக்குப் போவதாக கதை நீளும். காதலுக்கும், காமத்திற்குமான ஒரு முரண்விளையாட்டை மட்டுமில்லாது, ஆண்களுக்கு உண்மையில் என்னதேவையாக இருக்கின்றதென்ற தேடலையும் இந்தப் புனைவில் பார்க்கின்றோம்.
ஆண் இயற்கைக்காட்சிகளில் கரையும்போதோ, மீன் பிடிக்கும்போதோ, வேட்டையாடும்போதோ மட்டுந்தான் பெண்களைப் பற்றிப் பேசுவதில்லை/நினைப்பதில்லை என்பது இந்த நாவலில் சூட்சுமமாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த நாவலின் நாயகனான ஜாக், போரில் காயம்பட்டு உடலுறவில் ஈடுபட முடியாத ஒரு நிலையில் இருக்கின்றான். அவனுக்கு பிரட் என்ற பெண்ணோடு வரும் காதல், உடலுறவு சார்ந்ததல்ல. ஆனால் பிரட்டுக்கோ காதலில்லாத காமமே வேண்டியிருக்கின்றது. ஆகவேதான் அவளால் தொடர்ந்து எல்லா ஆண்களோடும் உறவுகளை வைத்துக்கொண்டு எளிதாகப் போக முடிகின்றது. ஹெமிங்வே இந்தப் பயண நாவலினூடாக போரால் உள/உடல் பாதிக்கப்பட்ட ஆண்களை மட்டுமின்றி, போரின் பின் பெண்களுக்கு திறந்துவிடப்பட்டிருந்த பாலியல் சுதந்திரத்தைப் பற்றியும் பேசுகின்றார்.
பிரட்டுக்கு எத்தனை ஆண்களோடு உறவிருந்தாலும்,
ஜாக் அவரை கவர்கின்றார். தனக்கான கையறு நிலை
வரும்போதெல்லாம் ஜாக்கையே அவர் தேடிப்போகின்றார். இந்நாவலில் இறுதியில் மெட்றிக் நகரில்
பிரட், காளைச்சண்டைக்காரனான ரொமாறியோவினால்
கைவிடப்பட்டு, கையில் பணமும் இல்லாது திண்டாடும்போது, எத்தனையோ காதலர்கள் இருந்தபோதும் பிரட் ஜாக்கையே அங்கே வரச்சொல்லி
அழைக்கின்றார். அவர்கள் இருவரும் ரெயினில் போகும் பயணத்தோடே கதை முடிகிறது. இவர்கள் இருவருக்கும் இந்தக் காதல் ஒருபோதும்
முழுமையடையாது என்று தெரிந்தும், ஏன் மீண்டும் மீண்டும் சந்தித்தும், ஆறுதலாக ஒருவருக்கொருவர் இருக்கின்றார்கள் என்பதை, ஏனென்று நம்மை யோசிக்கவைக்கும்போதே, ஒரு முக்கிய நாவலாக இது ஆகிவிடுகிறது.
ஹெமிங்வே இப்படி ஒரு பயண நாவலை எழுதியது மாதிரி, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு 'பீட்' ஜெனரேசனைச் சேர்ந்த ஜாக் (Jack Kerouac) On the Roadஐ எழுதுகின்றார். அமெரிக்காவினுள்ளே பயணங்களைச் செய்வதும், மெக்ஸிக்கோவுக்குப் போவதுந்தான் அந்த நாவல். கிட்டத்தட்ட ஹெமிங்வேயின் நாவலைப் போல, இதிலும் நண்பர்கள், அவர்களின் மனைவிகள்/காதலிகள் என்ற பாத்திரங்களே முக்கியமாக இருக்கின்றன.
பயணங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதபப்பட்ட
இந்த இரண்டு நாவல்களும் வெளிவந்த காலங்களில் குழப்பமான முறையில்
ஏற்கப்பட்டு/மறுக்கப்பட்டும் வந்திருந்தாலும், அவை இன்று முக்கிய நாவல்களாகக்
கொள்ளப்படுகின்றன. எல்லா நாவல்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தீவிர வாசகர்கள்
இருப்பார்கள். அவ்வாறே பயணிகளாக
இருக்க விரும்புபவர்கள், பயணித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த நாவல்களை
தமக்குரியதாக எடுத்துக்கொண்டு புதிய நிலப்பரப்புக்களைப் பற்றி என்னைப் போலக் கனவு கண்டுகொண்டிருக்கவும்கூடும்.
ஆகவேதான் அசோகமித்திரனின் அவ்வளவு கவனிக்கப்படாத நாவலான 'ஒற்றனே' எனக்கு அவரின் மிகச்சிறந்த நாவலாக உணரமுடிந்தது. அது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு நாவல் அல்ல. ஆனால் அது அமெரிக்க என்கின்ற புதிய நிலபரப்புக்கு வரும் தமிழ் எழுத்தாளன் சந்திக்கும் சுவாரசியமான அனுபவங்களை கொண்ட நாவல். அங்கே அந்த எழுத்தாளன், வெவ்வேறுநாட்டு எழுத்தாளர்களோடு பழகும்போது வரும் அனுபவங்களே, ஒற்றனை இன்னும் எனக்கு நெருக்கமாக்கியிருந்தது.
ஹெமிங்வே 'சூரியனும் உதிக்கின்றது' நாவலை எழுதியபோது கிட்டத்தட்ட முதல் முப்பது பக்கங்களை அவரின் அன்றையகால நண்பரான ஸ்காட் (Scott Fitzgerald) திருத்தச் சொன்னதற்காய் முற்றாகவே பதிப்பாளரிடம் சொல்லி வெட்டியெறிந்திருக்கின்றார். ஆகவேதான் அந்த நாவல் சட்டென்று உடனேயே தொடங்குவதைப் போல வாசிக்கும்போது இருக்கும். நான் மெக்ஸிக்கோவை எழுதியபோது அதன் மூன்றாவது பகுதியை மற்றப்பகுதிகளில் கதை சொல்லிக்கொண்டிருப்பதுபோல எழுதியிருக்கவே மாட்டேன். நான் விரும்பியே அப்படிச் செய்தேன். அதை நான் மைக்கல் ஒண்டாச்சியிடம் இருந்து கற்றுக்கொண்டது. அந்தப் பகுதியில் எந்த உரையாடலுமே வராது.
இப்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் அனுக்
அருட்பிரகாசத்தின் நாவலான A Passage North இல், எந்தவகையான உரையாடலும் இல்லை. அதாவது மேற்கோள் குறிக்குள்
இட்டு எவரும் பேசிக்கொண்டிருப்பதில்லை. இந்நாவலை வாசிக்கும்போது, நல்லவேளை அனுக் தமிழில் எழுதவில்லை, இல்லாவிட்டால் இதை முழுமையாக வாசிக்காமலே இது நாவலல்ல,
கட்டுரைத்தொகுப்பு என நம்மவர்கள் முத்திரை
குத்தியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.
இவ்வாறாகப் பயணங்களைச் செய்தபடி அங்கு சந்தித்த
மனிதர்களினூடாக நாவலாக விரிந்த பிரியா விஜயராகவனின் 'அற்றவைகளால் நிரம்பியவள்' எனக்கு அப்படி நெருக்கமானது. அதுவும் மிகச் சிலராலே
வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த நாவல்களைப் பயணிக்கும் கனவுகளோடு
இருப்பவர்களும், பயணித்தும் கொண்டிருப்பவர்களும்
ஆரத்தழுவுவார்கள். தமக்குரிய கதைகளைச் சொல்லியிருக்கின்றார்கள் என்று பிறரோடு
பகிர்ந்தோ, எழுதியோ அதை வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.
ஏன் ஜெயமோகனின் காடு கூட ஒருவகையில் பயண நாவலெனச் சொல்வேன். கிரி காட்டுக்குள் அடைவதெல்லாம் புதிய அனுபவங்களும், மேன்மைகளுமே. அவன் எப்போது காட்டைவிட்டு வெளியே வருகின்றானோ, அதன்பின் அடைவது எல்லாம் வீழ்ச்சிகளே. ஆனால் அதிலிருந்து தப்பியவர் அங்கே வரும் ஐயர் என்கின்ற பாத்திரம். அது காட்டுக்குள்ளேயே இருந்து, சங்கப்பாடல்களில் கிறங்கி, இறுதியில் காட்டைவிட்டு வெளியே வராது ஒரு வாழ்க்கையை மனைவி குடும்பமென எல்லா லெளதீகக்காரணிகளையும் உதறித்தள்ளிவிட்டுக் காட்டையே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றது, தனக்கான ஒருவகையான நிம்மதியை அதன்மூலம் ஐயர் பாத்திரம் அடைந்துகொள்கின்றது.
எல்லோரையும் கவருகின்ற படைப்பு இந்த உலகில்
ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பதைப் போல, அவரவர் அவரவர்க்குப் பிடிக்கும் படைப்புக்களைத் தம்
வாழ்நாள் முழுக்க எடுத்துச் சென்றபடி இருப்பார்கள். நான் ஹெமிங்வேயை, ஜாக்கை, அசோகமித்திரனை, பிரியாவை எனது பயணங்களின்போது நினைப்பதைப் போல அவரவர் தம் வாழ்வின் தேடலினூடாகப் போகும்போது தமக்கான படைப்புக்களைக் காவிக் கொண்டுசெல்வார்கள்.
இன்னமும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. நான் பின்வளவு ஊஞ்சலில் இருந்து கால்களில் மழைச்சாரல்பட கைகளில் தேநீர்க்கோப்பையை வைத்தபடி இரசித்துக்கொண்டிருக்கின்றேன். இதை இப்போது உள்ளே வந்து எழுதாது விட்டிருந்தால் இன்னும் கூட சாரலையும், மழை வீழும் புற்களையும் வெளியே இருந்து இரசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் மனதுக்குள் பொழிந்துகொண்டிருக்கும் மழையும், காதலும், பயணங்களும் ஒருபோதும் நிற்பதில்லை.
**************************
(July 29, 2021)
வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்
In இன்னபிற, In வரலாறு, In வாசிப்புTuesday, November 02, 2021
1.
ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற வீணான விவாதங்களில் என்னை மூழ்கவைக்கும்போது, நூல்களைத்தேடிப் போய்விடுவேன். அவ்வாறு மீண்டும் வாசிக்கத் தொடங்கியது ராஜ் கெளதமன் எழுதிய 'தலித்திய அரசியல்'. இது ஒரு சிறு நூல். ராஜ் கெளதமன் சாதி ஒழிப்பிற்காய் அங்கே முன்வைக்கும் புள்ளிகள்தான் முக்கியமானது. அதிலும் அம்பேத்கார் X பெரியார் X அயோத்திதாச பண்டிதர் போன்றோரை எதிரெதிர் முனைகளில் வைத்து உரையாடாமல் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அதேவேளை அவர்கள் தவறவிட்டிருக்கக்கூடிய புள்ளிகளையும் அதில் அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார்.
மேலும் இந்த நூலில் ஏன் சாதி ஒழிப்பு இற்றைவரை முற்றுமுழுதாக சாத்தியப்படாததற்கான பல கோணங்களைச் சுட்டிக்காட்டி, வாசிப்பவர்களை அடுத்த நிலையில் என்ன செய்யமுடியும் என்று ஒரு திறந்த உரையாடலுக்கான அழைப்பதாலும் இந்த நூல் எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருந்தது.
இதற்கு இன்னொரு உதாரணமாய் இன்னொரு நூலை/உரையாடலை சொல்லலாம். அது அயோத்திதாசருக்கும் சிங்காரவேலருக்கும் 'தமிழன்' இதழில் நடந்த உரையாடலாகும். இதை 'அயோத்திதாசரும் சிங்காரவேலரும், நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்; வெளிவராத விவாதங்கள்' என்று ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த நூலில் காணலாம்.. 1899 இல் தமிழ்ச்சூழலில் மீண்டும் பெளத்தம் நுழையத்தொடங்குகின்றது. 'கர்னல்' ஆல்காட், அநகாரிக தர்மபாலா தலைமையில் இது ஏற்படுகின்றது. அயோத்திதாசர் சாக்கைய புத்தசங்கத்தையும், சிங்காரவேலர் மகாபோதி புத்தசங்கத்தையும் இருவேறு சங்கங்களாக நடத்துகின்றனர்.
இந்த இரண்டு சங்கங்களின் இடையிலான வேறுபாட்டுக்கு அயோத்திதாசர் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே மகாபோதி தங்களை உயர்ந்தவராகக் காட்டிக்கொண்டு 'காட்டுமிராண்டிகளாக' இருக்கும் தலித்துக்களை நல்ல மனிதர்களாக மாற்றபோகின்றோம் என்ற கருத்துக்களோடு இருப்பதெனச் சுட்டிக்காட்டுகின்றார். சிங்காரவேலர் மகாபோதி சங்கத்தில் இருக்கும் ஒரு சிலரின் இந்தத் தவறான கருத்துக்களை முன்வைத்து இப்படி கருதிக்கொள்ளல் தவறு, நாமெல்லோரும் ஒருகாலகட்டத்தில் ஒன்றாக இயங்கி பெற்றும்/கொடுத்தும் கொண்டவர்களெனச் சுட்டிக்காட்டி அந்த உரையாடல் நீள்கின்றது.
இதே காலகட்டத்திற்கு அண்மையாகத்தான் இந்த 'உயர்நிலையாக்கம்' செய்யும் முயற்சியில் பாரதியார் தலித் பிள்ளைக்கு பூணூல் அணிந்து பார்த்ததையும் நினைவுகொள்ளலாம். அன்று அயோத்திதாசரை பாரதியார் ஊன்றி வாசித்திருந்தால் அல்லது தலித் மக்களின் மனோவுணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் பாரதியார் இந்த விடயத்தை வேறுவிதமாக அணுகியிருக்கக்கூடும்.
எல்லா அறிவார்ந்த மனிதர்களும் சில விடயங்களில் மேலோங்கி இருப்பதைப்போல வேறு சில விடயங்களில் தவறுகளை/சரிவுகளைக் காணவும் கூடும். அதற்குத் தப்பாதவர் எவருமில்லை என்றே சொல்லலாம். காந்தி ஒரு மகாத்மாக்கப்பட்டவர் ஆயினும், அவர் தென்னாபிரிக்காவில் இருந்தபோது கறுப்பினமக்கள் மீது ஒரு இனவாதியாக கருத்துச் சொன்னவர் உட்பட, அம்பேத்கார் முன்வைத்த பூனா இரட்டைவாரி வாக்குரிமைத் திட்டத்தை நிராகரித்தவரை பல சரிவுகள் 'மகாத்மா' காந்திக்கும் இருக்கின்றது. இதன் மூலம் காந்தி முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவரல்ல என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே காந்தியின் இந்தத் தவறுகளும் நேர்மையாகச் சுட்டிக்காட்டப்படுவதும் அவசியமானது.
அவ்வாறே அயோத்திதாச பண்டிதரின் முக்கியத்துவத்தை விதந்துரைக்கப்படும்போது அவர் அருந்ததிய மக்கள் மீது கூறிய கருத்துக்களும் விமர்சிக்கப்படவேண்டியவையேதான். இவ்வாறான எதிர்மறை விடயங்கள் சுட்டிக்காட்டப்படும்போதே அவர்கள் இன்னும் மனிதத்தன்மையாகின்றார்கள். இதன்மூலமே அவர்களைத் திருவுருவாக்காமல் அவர்களை வழிபடுபவர்களிடமிருந்து காப்பாற்றி அடுத்த காலகட்டத்துக்கும் நாம் அவர்களை எடுத்துச் செல்லமுடியும்.
2.
'நான் பூர்வ பெளத்தன்' என்கின்ற டி.தருமராஜனின் நூல், பண்டிதர் அயோத்திதாசர் ஏன் தன்னை ஒரு பெளத்தனாக முன்வைத்தார் என்பதற்கான ஒரு சித்திரத்தை நமக்குத் தருகிறது. 'இந்துக்கள்' என்ற அடையாளத்துக்குள் ஒடுக்கப்படாதவர்கள் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் 'ஆதித் தமிழர்' என்ற அடையாளத்துக்குள் தம்மை உள்ளடக்கவேண்டும் என்று சனத்தொகைக் கணக்கெடுப்பின்போது வேண்டுகோளை ஆங்கிலேயரிடம் முன்வைக்கின்றார். அது நிராகரிக்கப்பட்டாலும் ஆதித்தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களைத் தொடர்ந்து கோட்பாட்டு உருவாக்கம் செய்ய பல தொன்மக் கதைகளைத் தேடிப்போகின்றார். ஆதித் தமிழர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்பதையும், பெளத்தம் தமிழ்ச்சூழலில் அழிந்துவிடவில்லை, அதன் தொடர்ச்சி உள்ளுறைந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதையும் வித்தியாசமான கோணங்களில் முன் வைக்கின்றார். அதன் நீட்சியில் பண்டிதர், தீபாவளி, போகிப்பண்டிகை, கார்த்திகை விளக்கீடு போன்றவற்றிற்கு புதிய கதைகளைப் பெளத்தத்தினூடாக முன்வைக்கின்றார்.
ஒருவகையில் இது இந்து வரலாற்றை கட்டவிழ்ப்பதுதான். பண்டிகைகள் கொண்டாடும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு, அது எப்படி மாற்றப்பட்டிருக்கலாம் என்று வேறொரு கோணத்தில் அணுகிப்பார்ப்பது. இராணவன் இராமனினால் கொல்லப்பட்டது நடந்ததுதான் எனக் கொண்டு, ஆனால் இராமாயணத்தில் சொல்லப்படும் இராவணன்தான் இராவணனா அவன் அதில் இருப்பதுபோல இல்லாதவனாக இருந்திருக்கலாம் என 'வாசித்து'ப் பார்ப்பது. ஆகவேதான் இற்றைக்கு பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் நம் சூழலில் இருக்கின்றன. இராமாயணத்தை ஒற்றைப்படையாக வாசிக்கும் நம்மை அப்படியெல்லாம் வாசிக்கத் தேவையில்லை என்று இவை இடையீடு செய்கின்றன. அவ்வாறான ஒரு வாசிப்பு முறையை பண்டிதர் 'பூர்வ பெளத்தன்' என்பதில் எடுத்துக்கொள்கிறார். அதை மிக நேர்த்தியாகப் பல்வேறுவழிகளில் செய்தும் காட்டுகிறார்.
3.
அவ்வாறு எழுத்தில் வாசிப்புமட்டும் செய்யாது ஒரு பெளத்தராகவும் இலங்கை சென்று பஞ்சசீலம் எடுத்து தன்னை மாற்றிக்கொள்ளவும் செய்கின்றார். இதில் ஒரு சுவாரசியமான புள்ளியென்னவெனில், தமிழ்நாட்டுக்கு வந்து பெளத்தத்தின் திரிபீடகம் போன்ற நூல்களை பண்டிதருக்குக் கற்பித்தவர் இலங்கையில் இருந்து வரும் தமிழரென்ற குறிப்பைப் பார்க்கின்றோம் (பார்க்க, ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த - அயோத்திதாசர் -சிங்காரவேலர் விவாதங்கள்). அப்படியெனில் இலங்கையில் 1900களிலேயே தமிழ்ப் பெளத்தம் உயிர்ப்புடன் ஏதோ ஒருவகையில் இருந்ததென்பதை அறிந்துகொள்கின்றோம். ஆனால் அதன் வேர்களை ஒருவரும் இற்றைவரை தேடிச்சென்று விரிவாக எழுதவில்லை என்று நினைக்கின்றேன். இன்னொருவகையில் அயோத்திதாசரின் கதையாடலை வாசிக்கும்போது நம்மிடையே எத்தனைவிதமான போராட்டவகைமாதிரிகளைக் கைகொண்டஎவரும் இவ்வாறு பழைய தொனமங்களை/புராணங்களைத் தேடிச்சென்று மகாவம்சத்தைக் கட்டவிழ்த்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்து பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் எழுந்திருந்தது.
ஏனெனில் நமக்குக் கிடைக்கும் குறிப்புகளின்படி, 1960களில் வைரமுத்து அவர்கள் தொடங்கிய இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம் பற்றியே நமக்கு ஒரளவு அறிய முடிகின்றது. இந்த இலங்கைத் தமிழர் பெளத்தம் பற்றி இலங்கையன் 'வாழ்வும் வடுவும்' நூலிலும், யோகரட்ணம் எழுதிய 'தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்' நூலிலும் நாம் அறியமுடிகின்றது. இலங்கையன் அவர்கள் தமிழர் சிறுபான்மை சபையில் செயலாளர் பதவியில் இருந்து 50களில் இயங்கியவர். பல்வேறு இழிவான பெயர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் அழைக்கப்பட்டபோது இதற்கு முன்னர் இயங்கிக்கொண்டிருந்த 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்', 'தாழ்த்தப்பட்டோர் சங்கம்', 'வடமராட்சி சேவா சங்கம்' ஆகியவற்றை இணைத்து 1940களில் 'அகில இலங்கை சிறுபான்மை மகாசபை' தொடங்கப்படுகின்றது.
இதை இப்போது அயோத்திதாசர் 1892இல் சென்னையில் கூட்டப்பட்ட மகாஜனசபையின் முன் தாழ்த்தப்பட்டவர்களா எங்களையும் நீங்கள் இந்துக்களாக நினைப்பின் எங்களை ஆலயங்களுக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கேட்ட சம்பவத்தோடு இணைத்துப் பார்க்கலாம். எப்படி தலித்துக்கள் கோயிலுக்குள் நுழைய முடியும் என்று ஆதிக்கசாதிகள் வெகுண்டதைப் பார்த்தபின்னர்தான், அயோத்திதாசர் பூர்வ பெளத்தர் என்ற கதையாடலுக்குள் நுழையவும், தன்னையொரு பெளத்தனாக மாற்றிக்கொண்டதும் நிகழ்ந்தெனக் கூடச் சொல்லலாம்.
4.
மீண்டும் இலங்கைச் சூழலுக்கு வருவோம். இவ்வாறு சிறுபான்மை தமிழர்சபை தீவிரமாக இயங்கியபோது அதற்குள் அரசியல்கட்சிகள் சார்ந்து பங்குபெறாது தனித்து ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்க்வேண்டும் என்ற தன்னைப் போன்றவர்களின் விரும்பியபோதும், பின்னர் அதை சில கட்சிகள் தமக்கானதாகச் சுவீகாரம் எடுக்கவிரும்பியபோது பிளவுகள் வந்தன என இலங்கையன் எழுதுகின்றார். பின்னர் இச்சபையிலிருந்தே 'சிறுபான்மைத் தமிழர் ஜக்கிய முன்னணி', 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்', இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம்' (1962), ஜக்கிய தேசியக் கட்சிசார் சிறுபான்மை தமிழர் இயக்கம் (1978) போன்றவை தோன்றியிருக்கின்றன. அதன்பின்ன்னர் 1960களில் மாவிட்டபுர ஆலயப்பிரவேசமும், நிச்சாம நிகழ்வுகளும் வரலாற்றுச் சம்பவங்களாகும்.
5.
பண்டிதர் ஆதிதமிழர்களுக்கான கதையாடல்களை உருவாக்கியதற்கு, நாம் அம்பேத்கார் 'இந்தியாவில் சாதிகள்' பற்றிய நூலில் எழுதியதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அம்பேத்கார் மனுவிலிருந்து சாதிகள் தொடங்கின்றன என்பதை மறுப்பதோடு, அதற்கு முன்னரே சாதிகள் பல்வேறு வகையில் வேர் பரப்பி இருந்ததையும், மனுவே இந்தச் சாதிப்பிரிவினைகளை நுட்பமாக ஒழுங்குபடுத்தியவர் என்பதை 1916இல் கொலம்பியாவில் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக்கட்டுரையில் கூறுகின்றார்; "சாதி பற்றிய சட்டதை மனு வழங்கவில்லை' அவனால் இயற்றவும் முடியாது என்பதே உண்மை. சாதி, மனுவிற்கு நெடுநாட்களுக்கு முன்பிருந்தே நின்று நிலவியது. அவன் சாதியை உயர்த்திப் பிடித்தவனாக இருந்தான். எனவே, அவன் சாதியைத் தத்துவத் தன்மை கொண்டதாக ஆக்கினான். ஆனால் மிக நிச்சயமாக அவன் இந்துச் சமூகத்தின் இன்றைய நிலையை ஏற்படுத்தவும் இல்லை; அவனால் ஏற்படுத்தவும் முடியாது. ...எந்த ஒரு தனி மனிதனின் எத்தனத்தாலோ, சக்தியாலோ அல்லது ஒரு வர்க்கத்தின் தந்திரத்தாலோ சக்தியாலோ சாதிக்கப்படமுடியாது' ('இந்தியாவில் சாதிகள் - ப35-36) என்பதன் மூலம் அம்பேத்கார் ஒற்றைத்தன்மையாக சாதியை மனுவில் வைத்துப் பார்ப்பதைத் தவிர்க்கின்றார் என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். ஆக மனு இவ்வாறு சாதியைத் தத்துவத் தன்மையாக ஆக்குவதற்கு பல்வேறு புராணங்களும்/தொன்மங்களும் உதவியிருக்கின்றது என்றால், அதேபோன்று சாதியை ஒழிப்பதற்கும் பண்டிதர் புதிய கதையாடல்களைத் தேடியிருக்கின்றார் என்பது விளங்குகின்றது.
இன்று பலர் பெரியாரையும் பண்டிதரையும் எதிரெதிர் முனையில் வைத்து உரையாடும்போது பண்டிதரும் பெரியாரும் இந்தியச் சுதந்திரத் தினத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது சுவாரசியமானது. பெரியாரிடமிருந்து அண்ணாத்துரை பிரிந்துபோனதற்கு பெரியார்-மணியம்மை திருமணம் மட்டும் காரணமில்லை, உண்மையிலே இந்திய சுதந்திர தினமே முக்கிய காரணி என்பதை 'ஆகஸ்ட் 15: துக்கநாள் - இன்பநாள்' என்று எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூலை வாசித்திருந்தவர்க்கு விளங்கியிருக்கும்.
அதேபோன்று அயோத்திதாசரும் இப்போதுதான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆங்கிலேயரால் சில விடயங்களாவது நிகழத்தொடங்கியிருக்கின்றன. இதைப் பொறுக்காத ஆதிக்கசாதிகள் 'இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை'க் கையிலெடுக்கின்றார்கள் என்று பண்டிதர் குறிப்பிட்டுமிருக்கின்றார். அதேவேளை பண்டிதர் இந்திய சுதந்திர நாளைப் பார்க்கமுன்னரே 1914இலேயே காலமாகினார் என்பதையும் கவனித்தாகவேண்டும். இந்தவகையில் பெரியாரும், அயோத்திதாசரும், ஆதிக்கசாதிகளின் கையில் கொடுக்கும் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதகமாகவே வந்துசேரும் என்பதை ஒரே கோணத்தில் நின்று கருதியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் கண்டுகொள்கின்றோம்.
....................................................
உதவியவை:
-தலித்திய அரசியல் ராஜ் கெளதமன்
-நான் பூர்வ பெளத்தன் - டி.தர்மராஜ்
-வாழ்வும் வடுவும் - இலங்கையன்
-அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் வெளிவராத விவாதங்கள் - பதிப்பாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
-இந்தியாவில் சாதிகள் - டாக்டர் B.R. அம்பேத்கார்
- தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - யோகரட்ணம்
- ஆகஸ்ட் 15: துக்கநாள் - இன்பநாள் - பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை
(நன்றி: கனலி, ஜூன் 2021)
கிளப்ஹவுஸ்
In இன்னபிறMonday, November 01, 2021
பேச்சு எப்போது எமக்கு அலுப்பாக இருக்கும்? எதிரே இருப்பவர் நமக்குத் தெரிந்த ஒன்றைப் பேசத்தொடங்கின்றார் என்றவுடன், அங்கே அறிய எதுவுமில்லையென கேட்பதற்கான ஆர்வம் இல்லாது போய்விடும். தெரிந்த ஒன்றைத் திரும்பத் திரும்பக் கேட்பதால் என்ன பிரயோசனம் இருக்கப்போகிறது.
ஆகவேதான் இலக்கியம்/அரசியல் குறித்து யாராவது பேசுகின்றார்கள்
என்றால் தூரப்போய்விடுவேன். அந்த ஒரு காரணத்தாலேயே இலக்கிய/அரசியல் சூம் கூட்டங்களுக்கே
போவதில்லை. கேட்பதற்கு மட்டுமில்லை, எங்கள் கூட்டங்களில் பேசுங்கள் என வந்த ஐந்துக்கு மேற்பட்ட அழைப்புகளைப் பணிவுடன்
மறுத்திருக்கிறேன். பிறர் பேசுவதையே அவ்வளவு கேட்கப் பிடிக்காத இடத்தில் போய்
இருந்து 'நான் பேசுகிறேன், நீ கேள்' என்பது இன்னும் எவ்வளவு கொடுமையாக இருக்கும்.
நேரில் நடக்கும் கூட்டங்களில் கூட, நமக்கு அறிவதற்கு ஏதுமில்லையென்கின்றபோது ஒரு விலகல்
வந்துவிடும். அப்போது கைகொடுப்பதெல்லாம் கையில் கிடைக்கும் நூல்களே. ஓரிரு
கூட்டங்களில் நாவல்களைக் கூட -எனக்கான உலகிற்குள் நுழைந்து- வாசித்து
முடித்திருக்கின்றேன்.
வாசிப்பவர்கள்/எழுதுபவர்கள்
சமூகவலைத்தளங்களுக்கு வரக்கூடாதென்று மூத்த எழுத்தாளர்களிலிருந்து இன்னும் பலர்
சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்தத் தளங்களுக்கு வருவதில்லை என்று
சொல்கிறார்கள். ஆனால் மரு வைத்துக்கொண்டு உருமறைப்புச் செய்து உலாவுகின்றார்கள்
என்கின்ற வதந்திகளும் உண்டு. சரி அதை விடுவோம். அவர்கள் அவ்வாறு சொல்வதில் அவ்வளவு தவறுமில்லை. எமது
வாசிப்பை/எழுத்தை மாற்றக்கூடிய அளவுக்கு சமூகவலைத்தளங்களின் பாதிப்பு
இருக்கின்றதென்பதை மறுக்கவும் தேவையில்லை.
2.
இப்போது சில வாரங்களாக நம் சூழலில் புதிய ஒரு
சமூகவலைத்தளமாக 'clubhouse' வந்திறங்கியிருக்கிறது. செவி இன்பமே பேரின்பம்
என்கின்றவர்களுக்கு இது ஒரு 'வரப்பிரசாதம்'. புதிதாய் வரும் எந்த ஒன்றையும் கண்ணை மூடிக்கொண்டு
உதறித்தள்ளவும் வேண்டியதில்லை, அப்படியே கேள்விகளற்று அரவணைத்துக்கொள்ளவும்
தேவையில்லை. சற்று சந்தேகத்துடன், இவ்வாறானவற்றை வரவேற்பதில் எந்தத் தவறுமில்லை.
பேசுவதில் கூச்சமுடையவர்க்கும், தங்களைப் பேச்சில் விற்பன்னர்களாக வளர்க்க
விரும்புகின்றவர்களுக்கான முக்கியதளம் இதெனச் சொல்லலாம். அதாவது இது ஒரு toastmaster
club போலவும், radio talk show host மாதிரியும் ஒரு தோற்றத்தைத் தருவது. Instagram புகைப்படங்கள்/காணொளிகளுக்கான காட்சித்தளம் என்றால்,
clubhouse என்பது கேட்பதற்கான ஒரு முக்கிய ஊடகமாக இனி மாறக்கூடும். ஏற்கனவே podcast இருக்கிறது. ஆனால் clubhouse மூலம் புதிய பேச்சாளர்கள் உருவாவர்கள். இது நேரடியாகவும் (live),
அதேசமயம் இங்கே பேசுவதைப் பதிவு செய்து ஆறுதலாக இருந்து பிறகு கேட்க இயலாது என்பதாலும் (?), இதன் spontaneous தன்மையாலும், இது சற்று வித்தியாசப்படுகிறது.
3.
வாசிப்பதில், எழுதுவதில் ஆர்வமிருக்கும் எனக்கு கிளப்ஹவுஸில் யாரேனும்
இலக்கியம் குறித்துப் பேசினால் பெரிதும் ஈர்க்கப்போவதில்லை. என்னைக் கவர்கின்றவை
எனக்கு அவ்வளவு பரிட்சியமில்லாத துறைகளாக இருக்கும். இதற்குள் நுழைந்தபோது
ஆங்கிலத்தில் "He's unemployed: Should I cancel this date" என்ற ஒரு தலைப்பில் பேச்சு போய்க்கொண்டிருந்தது. வழமையாக
மாலையில் நடக்கும்போது பாட்டுக் கேட்டு நடப்பேன். பிறகு ஜெயமோகன் ஓஷோ பற்றி என்ன
சொல்கின்றார் என்று கேட்டபடி நடந்திருக்கின்றேன். அது முடிய, அவரின் பகவத்கீதை உரையைக் கேட்கத் தொடங்கி, இடைநடுவில் அதில் ஆர்வமில்லாது போக, கிளப்ஹவுஸ் உதவிக்கு வந்தது.
"He's unemployed: Should I cancel this date" மிகுந்த சுவாரசியமாய்ப் போய்க்கொண்டிருந்தது. தலைப்பு இதாக
இருந்தாலும் அதில் ஒரு கறுப்பின ஆண் திபெத்திற்குப் போய் மலையேறியது, புத்தபிக்குவைச் சந்தித்தது, ஆன்மீகத்தில் ஆர்வம் வந்தது எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பெண்களே நிறையப் பேசிக்கொண்டிருந்தார்கள். அலுப்பே இல்லாது வரும் ஆண்களை இழுத்து
வைத்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அத்துமீறல் இல்லாது மெல்லிய
கேலி மட்டும் இருந்தது. பிறகு முதலாவது டேட்டில் எப்படி ஒருவரை அணுகுவது, எது பெண்களுக்குப் பிடிக்கும், எப்படி பெண்கள் ஒருவர் வேலையில் இருக்கின்றாரா/இல்லையா என
நுட்பமாக அறிகின்றார்கள் என role play செய்தெல்லாம் பேசிக்
காட்டிவிட்டு, அதை உடைத்து உடைத்து ஆராய்ந்தார்கள்.
அடுத்தநாள் தமிழக Solo Travelers பற்றிய ஒரு குழு,அவ்வளவு தகவல்கள்
அங்கே பேசிய பேச்சில் குவிந்து கிடந்தன. தமிழகம்/கேரளா நீர்வீழ்ச்சிகளைத்
தேடித்தேடி இப்போதே போய்ப் பார்க்கவேண்டுமென ஆர்வத்தையூட்டுமளவுக்கு அதில்
பங்குபற்றியவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அந்நிகழ்வை மட்டுறுத்திய பெண்கள் மிகுந்த பணிவுடன் (humble)
, இயல்பாகச் செய்திருந்தார்கள். பயணங்கள் என்பது
எங்கள் மனதை விரிவாக்கும் என்பதற்கும், எப்படி
ஒருவருக்கொருவர் உதவுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வு
நல்லதொரு எடுத்துக்காட்டு.
இன்னொருமுறை ஆங்கிலத்தில் ஒரு பயண நிகழ்வைக்
கேட்டுக்கொண்டிருந்தேன். அது பிறகு மேற்கிலிருக்கும் குடிவரவாளர், People
of Color இன் முதல் தலைமுறை எப்படி பெருநிறுவனங்களின்
கதவுகளை உடைத்து முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள் என்று பேச்சு இன்னொரு திசையில்
போக வேறொறு வடிவத்தை எடுத்தது. அதுவும்
சுவாரசியமாகத்தான் இருந்தது.
ஆக வாசிக்க/எழுத விரும்புகின்ற என்னைப்
போன்றவனுக்கு இந்த உரையாடல்கள் முக்கியமானவை. மேலும் மனிதர்களின் நட்புக்களை
அவ்வளவு உருவாக்காது ஒரு தனித்தீவாக இருப்பதில் சுகங்காண்பவனுக்கு இது
துள்ளிக்குதிக்க வைக்கும் மகிழ்ச்சியான தருணங்கள் என்றே சொல்வேன்.
4.
இதில் சிக்கல் என்னவென்றால், இலக்கியம்/அரசியல் பேசுவதில் தீராத ஆர்வம் கொண்டு முகநூலில் இயங்கிய நாம் கிளப்ஹவுஸ் சென்றும் அங்கே போய் ஓர் உருப்படியான உரையாடலை உருவாக்க முடியாது தவிக்கிறோம். நமக்குள் அடித்துக்கொள்கிறோம். நமக்குத் தெரிந்தது மட்டுமே இந்த உலகம் என்று இன்னும் தீர்மானமாக நம்பி மற்றவர்களைக் காயப்படுத்தவும் செய்கின்றோம். இதை கிளப்ஹவுஸுக்குள் போகாமலே அங்கே என்ன நடந்திருக்கின்றதென்று முகநூலில் பலர் பகிர்வதன் மூலம் காண்கின்றேன். இன்னும் கொதிநிலையைக் கூட்டுந்தளமாய் கிளப்ஹவுஸ்அரசியல்/இலக்கியம் சார்ந்து இருக்கிறது போலும். பலருக்கு மனவுளைச்சல்களைப் புதிதாய்க் கொண்டு வரவும் செய்கிறது.
இது புதுத்தளம். ஆகவே எல்லாவகை 'உருட்டல்களும்' இங்கே இருக்கும்.
முகநூலில் பலருக்கு இருக்கும் அடையாளப் பிரச்சினை அங்கும் அடையாள அரசியலாக
நுழையும். இவை குறித்த ஒழுங்கான உரையாடல் இப்போதைக்கு உருவாகப்போவதில்லை. தம்மைத்
தாமே நிரூபிக்கும் தன் முனைப்புக்களின். ஆர்ப்பரிப்புக்கள் அடங்கி அமைதி நிலை
வரும்போது கிளப்ஹவுஸ் நமக்கு எந்தவகையான ஊடகமாகப் போகிறது என்று சிலவேளைகளில்
நமக்குத் தெரியலாம்.
இப்போது இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர்,
ஒரு நண்பர் தன்னோடு சேர்ந்து கேட்க 'சென்னை இசை கிளப்' முகவரியை
அனுப்பினார். வேறெதுவோ செய்ய நினைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு மணித்தியாலத்துக்கு
மேலாய் அவர்கள் இழுத்து இருத்தி வைத்திருந்தார்கள். ஓரிடத்தில் சட்டென்று மனது
நெகிழ்ந்தது. அது எனக்குள் உருவாக்கி வைத்திருந்த கனவுகளை மீள நினைக்கவைத்தது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை நினைவூட்டியது. ஒருவகை அமைதி உள்ளே
பரவி நான் செய்ய விரும்பும் சில விடயங்களை விரைவில் தொடங்கவேண்டும் என்கின்ற
உந்துதலைத் தந்தது.
ஆனால் அங்கே பாடிய, இசைத்துக் கொண்டிருந்தவர்க்கு இது தெரியுமா? இல்லை. அவர்கள் தமக்கு நன்றாக வந்த இசையை நமக்கு
வழங்கினார்கள். ஆனால் நான் அதன் இழை பிடித்து என் கனவுகளின் வானத்தில்
பறந்துகொண்டிருந்தேன். அவ்வாறு (அவர்களுக்கு) விடிகாலை ஐந்து மணி வரை நீண்டிருந்த
இசையில் எத்தனை பேர் இன்னொரு உலகிற்குப் பயணித்திருப்பார்கள். எப்போதும் போல
எனக்கு ஒரு படைப்பில் குறைகள் விளிம்பில் மெல்லியதாய்த் தளும்பிக் கொண்டிருக்கவேண்டுமென
விரும்புவேன். இங்கும் நிறைய glitches. அதுவே இன்னும் இதை
அழகாக்கியது.
ஆகவே நீங்கள் பற்றவேண்டியதைப்
பற்றிக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம் வாய்த்தால் வானத்தில் ஏறி நடனமாடவும்
செய்யுங்கள். ஓரிடத்தில் இவ்வாறு பெற்றுக்கொள்பவர்களாக இருக்கும் நாம், இன்னொரிடத்தில் பிறருக்கு வழங்குபவர்களாகவும் இருப்போம்.
உங்களுக்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அதை மட்டும் நினைவில் வைத்திருந்தால்
போதும்.
மேலும் கிளப்ஹவுஸில் பெண்களைப் பேசவிட்டு
அமைதியாக இருந்து கேட்டுப் பாருங்கள். அது இன்னொருவகைப் போதை. மனதில் அமைதி பெருக,
அனுபவித்து உணர்ந்தவர்க்கு நான் என்ன சொல்ல
வருகின்றேன் என்பது புரியும்.
*********************
(ஜூன் 12, 2021)