1.
மனிதர்கள் எல்லோரும் ஒரு இதமான சூழலில் வாழ ஆசைப்படுகின்றோம். அந்தச் சூழலில் இருந்தபடியே நமக்கான அடுக்கடுக்கான கனவுகளைக் கட்டவும் தொடங்குகின்றோம். அந்தச் சுமுகமான சூழலும், கனவுகளும் சட்டென்று ஒருநாள் கலைக்கப்பட்டு விட்டால் என்னவாகும். இனவாதமும், அதன் நிமித்தம் கைதுசெய்தலும், சித்திரவதைகளும், நிலங்கள் சூறையாடப்படுவதும் நிகழ சொந்த நிலத்தில் இருந்து பல்வேறு கடன்சுமைகளுடன் தப்பியோடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவுகளே 'சொல்லப்படாத கதை'யாகும். கப்பலில் வேலை ஒன்று பெற்றுத்தருகின்றோம் என்று முகவரால் மும்பாயிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றவர் அதே முகவரால் கைவிடப்படுகின்றார்.
நாட்டு நிலவரத்தால் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகவும் முடியாது; பெற்ற கடனை விரைவில் திரும்பிக் கொடுக்கவும் வேண்டும். கப்பலுக்கென்று வேலைக்குப் போனாலும் கப்பலில் வேலை செய்த எந்த அனுபவமும் இல்லை.எப்படியோ ஒருமாதிரி இருக்கின்ற தகுதிகளை வைத்து கிறிஸிலிருந்து வியட்னாமுக்கு கோதுமை ஏற்றிச் சொல்லும் கப்பலில் இவருக்கு வேலை கிடைத்துவிடுகின்றது. இந்தச் 'சொல்லப்படாத கதை' கப்பல் கிரேக்கத்திலிருந்து வியட்னாமுக்கு சென்று, அங்கிருந்து திரும்புகின்ற அனுபவங்களைச் சொல்வதாகும்.
இவ்வாறான கப்பல்களில் வேலை செய்து, பயணித்த அனுபவங்களைச் சொல்லும் கதைகள் ஏற்கனவே சிலரால் பதிவு செய்யப்பட்டாலும், இந்த நூல் ஒரு புதிய திசையை நமக்குத் திறக்கின்றது. இதை எழுதிச் செல்கின்ற ஆனந்தப்ரசாத் தன்னை முழுமையாக எழுத்துக்குக் கொடுத்திருக்கின்றார் என்பதாலேயே இது எளிதாகச் சாத்தியமாகியிருக்கின்றது. புதிதாக ஒருவருக்கு ஏற்படும் கடல் அனுபவங்கள், பயிற்சியே இல்லாத ஒருவர் எப்படி கப்பலின் பணிகளைக் கற்றுக்கொள்கின்றார், 26 பேருக்கு மேலே இருக்கும் கப்பலுக்குள் மாதங்களாய்ப் பயணிக்கும் பணியாளர்களுக்கிடையில் ஏற்படும் நட்பும் முரணுமென எல்லாவற்றையும் அவ்வளவு விரிவாக எழுதிச் செல்கிறார் ஆனந்தப்ரசாத்.
இந்தக் கப்பல் பயணத்திடையே தாயகம் பற்றிய நினைவுகள் இடைவெட்டிப் போவதும் மிக அற்புதமாக விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாடகராகவும், வாத்தியக் கலைஞராகவும் இருந்து, நண்பர்களோடு புகைத்தலும், மதுவுமாக வாழ்வைக் கொண்டாடியபடி இருந்தவரை நாட்டு அரசியல் எங்கோ பெருங்கடலுக்குள் தூக்கி எறிகின்றது. ஒரு கழிந்துபோன அழகிய வாழ்வைச் சொல்கின்றபோது அதில் ஏக்கமிருந்தாலும், ஒருபோதும் அதைச் சொர்க்கமென சொல்லாது அந்த வாழ்வில் இருந்த எல்லாக் கசடுகளும் சேர்த்தே இங்கு சொல்லப்படுகின்றது. ஆனால் அதை மீறி இந்த வாழ்வு சுகிப்பதற்கேயென்று இந்த அனுபவங்களின் அடிச்சரடு நமக்கு நினைவுபடுத்தியபடியே இருக்கின்றது.
ஈழத்தவராகிய நமக்கு ஒரு துயர் இருக்கின்றதென்றால், கப்பலில் பணி செய்கின்ற சிங்களவர்க்கும், வட இந்தியர்க்கும், கிறிக்காரர்களுக்கும் வேறு வகையான துயரங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அந்நியோன்னியத்தை வளர்த்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்குள் ஏற்படும் முரண்களைக் கூட, ஏதோ ஒருகணத்தில் உடைத்து மன்னிப்புக் கேட்டு ஒருவரையொருவர் தோளணைத்துக் கொள்கின்றார்கள்.
2.
வியட்னாமில் கோதுமை மாவை இறக்கும்போது தொடர்ச்சியான போரால் அழிவுற்ற ஒரு வியட்னாம் நமக்குக் காட்டப்படுகின்றது. அமெரிக்கர்கள் ஆக்கிரமித்து தோல்வியுற்றுப் போனாலும் அவர்கள் தென்வியட்னாமில் வீசிய இரசாயனக்குண்டுகளின் நிமித்தம் மரங்களே வளராது நிலங்களைப் பார்த்து ஆனந்தப்ரசாத் கலங்குகின்றார். வறுமையும், போரின் அழிவுகளால் ஏற்பட்ட அவலங்களாலும் வியட்னாமிலிருந்து பலர் தப்பியோடுகின்றார்கள். அவ்வாறு தப்பியோடுகின்றவர்களுக்கு ஒரு முக்கிய இடமாக இவ்வாறான கப்பல்கள் இருக்கின்றன.
இந்தக் கப்பலில் வேலை செய்கின்ற ஒருவர் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கொடூரத்தைச் சொல்கின்றார். ஆஸ்திரேலியாவிலிருந்து வியட்னாமுக்கு உதவச் சென்ற தங்கள் கப்பலில் கழிவகற்றும் குழாயில் மறைந்திருந்து தப்பிவந்த ஒரு இளம் தம்பதிகளையும், அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் பிறிஸ்பேனுக்கு அண்மையில் கப்பலின் கழிவுகளை அகற்றும்போது அங்கே உயிரிழந்து போனதைக் கண்டு நெஞ்சு வெம்மி அதற்குப் பின் ஆஸ்திரேலியக் கப்பல்களில் பணி செய்வதை நிறுத்திவிட்டார் என்கின்றார்.
வியட்னாமியர்கள் இப்படித் தப்பினார்கள் என்றால் பின்னர் ஈழத்தமிழர், ஆபிரிக்கர்கள், சிரியாக்காரர்களென படகுகளிலும், டிராக்குகளிலும் நாடுகளின் எல்லைகளைத் தாண்ட முயன்று இறந்துபோனவர்கள்தான் எத்தனை பேர். இதை எழுதும் இன்றைய நாளிலும் அமெரிக்காவில் ஒரு டிரக் மூலம் தப்பிவந்த இலத்தீன் அமெரிக்க குடிவரவாளர்களில் 50 இற்கு மேற்பட்டவர்கள் இறந்த சோகமென இன்னமும் இவை முடிவுறாது நடந்தபடியிருக்கின்றன.
கடலிலேயே வாரக்கணக்காய் மிதக்கும் இந்தக் கடலோடிகளுக்கு நிலத்தின் அருமை நன்கு விளங்கும். அதைவிட கடலில் பெருமை நன்கு தெரியும். ஆகவே அவர்கள் ஒருபோதும் கடலை அவமதிப்பதில்லை. தரையில் காலவைத்தவுடன் இந்தக் கடலோடிகளுக்கு மதுக்களும், மாதுக்களும் தவிர்க்கமுடியாது பேரின்பத்தைக் கொடுப்பதாக மாறிவிடுகின்றன.. பல்வேறு முதல் முயற்சிகளுக்கு கரைதட்டும் நிலங்களே வாய்ப்புக்களை அள்ளிக் கொடுக்கின்றன.
வியட்னாமின் வறுமையை அறிந்த ஆனந்தப்ரசாத் உள்ளிட்ட சில நண்பர்கள் இரு வியட்னாமிய பெண்களுக்கு கப்பலில் அடைக்கலம் கொடுத்து சிங்கப்பூர்வரை கள்ளமாய்க் கடத்தி வந்து இறக்க முயற்சிக்கின்றனர். அந்தப் பயணத்தின்போது நிகழ்வதெல்லாம் ஒரு புனைவுக்குரிய சிறந்த பகுதிகள். அதேவேளை அந்தப் பெண்கள் தங்கள் நன்றியை உடலின்பமாக இந்தக் கடலோடிகளுக்குக் கொடுக்கின்றனர். வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓட்டம். ஓரிடத்தில் இறங்கிவிட்டால் அனுபவங்களின் சேகரம் குறைந்துவிடும். அந்தப் பெண்கள் இறங்கும்போது நமக்குள்ளும் ஒரு துயர் எட்டிப் பார்க்கின்றது. ஆனால் எப்படியெனினும் ஏற்கனவே வாழ்ந்ததைவிட நல்லதொரு வாழ்வை வாழ்ந்துவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை வருகின்றது.
இந்த நூலில் நம் பலருக்குப் தெரிந்திருக்கக்கூடிய (புதுவை) இரத்தினத்துரையின் இளமைக்கால நினைவுகள் விபரிக்கப்படுகின்றன. இரத்தினதுரை, ஆனந்தப்ரசாத் உள்ளிட்டவர்களின் நண்பர்களாக திருமலையில் இருந்திருக்கின்றார். இடதுசாரி நிலைப்பாட்டில் ஆதரவுள்ள, குடியும் கும்மாளமாகவாழ்வைக் கொண்டாடுகின்ற ஒரு இளைஞனான இரத்தினதுரை இங்கே அறிமுகப்படுத்தப்படுகின்றார். பின்னர் சிங்கப்பூரில் வேலை செய்யப்போகின்ற இரத்தினதுரையை ஆனந்தப்ரசாத் இறுதிவரை காண்பதேயில்லையெனினும் புதுவையாரின் இன்னொரு பக்கத்தை இதுவரை எவரும் இவ்வளவு உயிரோட்டமாக எழுதியதை நான் வாசித்ததில்லை என்பேன்.
இந்த நூல் ஒரு கப்பல் பயணத்தை விபரித்தாலும், இதை மிக முக்கியமாக்குவது இதனூடாக அது அன்றையகால ஈழ அரசியலை மிக நுட்பமாகக் கவனப்படுத்துவதாகும். இது தனியே தமிழர்கள் மீது பெரும்பான்மையினரால் ஏவப்பட்ட இனவாதத்தையோ, கிழக்கின் நிலங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றது என்பதையோ, அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த கிழக்கின் இளைஞர்கள் எவராலும் கவனிக்கப்படாது எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதையோ மட்டுமில்லாது, தமிழர்கள் தங்களுக்குள் எப்படி சாதியில் பிறரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதையும் நிச்சாமச் சம்பவங்களினூடாக பதிவு செய்கின்றது.
'ஆமிக்காரர்கள் எங்கள் நூலகத்தை எரித்தார்கள், ஆனால் அதற்கு முன் எங்கள் தமிழாக்களே எங்கள் ஊரை எரித்தார்கள்' என்று கப்பலில் சந்திக்கின்ற நிச்சாமத்து குலம் அண்ணை தன் கதையைச் சொல்கின்றபோது நாம் என்றுமே கடக்கமுடியாத கறையை எதிர்கொள்கின்றோம். இங்கே இவற்றையெல்லாம் எழுதிச் செல்கின்ற ஆனந்தப்ரசாத் எந்த உண்மையையும் மறைக்காது எழுதிச் செல்வதே இந்த நூலை மிகுந்த கவனம் பெறச் செய்கின்றது.
ஒரு நூல் தன்னியல்பில் செல்லாது, சிலதைத் தேவையில்லாது வலியுறுத்தும்போதும், வேறு சிலதை மறைக்கும்போதோ நமக்கு அந்த எழுத்து மீது கேள்விகளும், விலத்தலும் ஏற்பட்டுவிடும் ஆனால் இந்த நூல் நமக்குரிய மேன்மைகளைப் போலவே நம் கீழ்மைகளையும் விபரமாகப் பேசுகின்றது. அவ்வாறு நிச்சாமத்தில் ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடைபெற்ற ஆயுதப்போராட்டமே நம் காலத்தில் நிகழ்ந்த முதல் நியாயமான ஆயுதப்போராட்டம் என்பதையும் பதிவு செய்கின்றது. அதேவேளை ஒடுக்கப்பட்டவர்களில் இருந்த மூத்தோர்கள் சாதிக்கெதிரான இந்த ஆயுதப்போராட்டத்தை அவ்வளவு ஏற்றுக்கொள்ளவில்லையென்பதையும் நியாயமாகப் பதிவு செய்கின்றது. அவ்வாறு நிச்சாமத்திலும், கன்பொல்லையும் சாதிக்கெதிராகப் பதின்மத்தில் வெகுண்டு எழுந்தவனை பின்னொருபொழுது ஆனந்தப்ரசாத் சந்திக்கின்றார்.
அந்தப் பதின்மனை, இந்தச் சாதிக்கெதிரான போராட்டத்தைத்தாண்டி இன்னொரு பெரும் போராட்டம் இருக்கின்றதென இயக்கமொன்று போராடக் கூட்டிச் செல்கின்றது. அப்படிப் போகின்ற அந்த இளைஞன், 'அண்ணை மண்ணுக்குப் போராடப் போன என்னை, எங்கடையாக்களையே கொல்லச் சொல்கின்றாங்கள்' என்று வெறுத்து தப்பியோடி வந்து இன்னொரு கப்பலில் வேலைக்கு அவன் வந்து அமர்ந்திருக்கின்றான்..
இதைவிட நாம் கடந்தகாலத்தின் முரணை/அபத்தத்தை எளிதாகச் சொல்லிவிடமுடியுமா? இல்லை, இதை நேரடியாக ஒரு அரசியல் களத்தில் சொன்னால் தங்களின் தரப்புக்கென்று ஒரு அரசியலை மட்டும் வைத்து இன்னும் மற்றமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கேட்கவா போகின்றார்கள். ஆனால் இவ்வாறான எழுத்து அவர்களின் மனச்சாட்சிகளை, அவர்கள் வைத்திருக்கும் rigidஅரசியல் கூறுகெட்டதனங்களை சலனமடையச் செய்யக்கூடும்..
ஆகவேதான் நான் எப்போதும் கலை இலக்கியங்களினூடாக அரசியலைப் பேசுவதன் முக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றேன். எல்லாத் தரப்பையும் ஓரிடத்தில் நின்று யோசிக்க வைக்க நேரடியாக அரசியல் பேசுவதைவிட இவ்வாறான மாற்றுவடிவங்கள் அதிகம் ஈர்த்துக்கொள்ளும். அவ்வாறானவர்களில் திறந்தமனதோடு இருப்பவர்களை முரண் உரையாடலை நட்போடு செய்ய இது அழைக்கும். இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்பேன்..
ஆனந்தப்ரசாத் திருமலையில் இருக்கும்போது அவரின் சைக்கிள் அடிக்கடி பழுதாகும்போது ஒரு சைக்கிள் கடைக்காரரிடம் போவார். அவர் ஒரு சுவாரசியமான மனிதர். சிலவேளை ஆனந்தப்ரசாத்திடம் பணம் இல்லாதபோது ஒரு பாட்டைப் பாடுங்கள் எனக்கேட்டு சைக்கிளைத் திருத்திக் கொடுப்பார். அந்த சைக்கிள்காரர் பின்னர் அந்த இடத்திலிருந்து காணாமற்போய்விடுவார். அவரை ஆனந்தப்ரசாத் கிறிஸிலிருந்து மத்தியதரைக்கடலுக்கு வரும்போது எரிபொருள் நிரப்பும் படகில் காண்கின்றார். இருவரும் ஆரத்தழுவி பழங்கதைகள் பேசுகின்றனர்.
அந்த சைக்கிள்காரரை இலங்கை இராணுவம் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்கின்றது. அவரின் சைக்கிள்கடைதான் இளைஞர்கள் இயக்கங்களுக்குப்போவதற்கு மையமாக இருக்கிறதென்பது இராணுவத்தின் நம்பிக்கை. ஆனால் அவரோ அப்பாவி. இறுதியில் பூஸா வரை கொண்டுசெல்லப்பட்டு அவர் ஆண்குறியில் கம்பி செருக்கபட்டு, பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உண்மையிலேயே ஒரு இறுதியில் அப்பாவியென விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதற்குள் அவரின் வாழ்க்கை போய்விட்டது. உடல்சார்ந்த இன்பங்களில் இனி ஈடுபடவே முடியாத அளவுக்கு எல்லாமே நிகழ்ந்துவிட்டது. ஒரேயொரு நிகழ்வால் ஒருவரின் வாழ்வு சூறையாடப்பட்டு விடுகின்றது.. இப்படி எத்தனையெத்தனை அப்பாவி மனிதர்களின் வாழ்வு இல்லாமற் போயிருக்கின்றது.
இந்த சைக்கிள்காரரை காலம் உதறித் தள்ளிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் ஆனந்தப்ரசாத்தின் எழுத்தின் மூலம் அவர் நினைவுபடுத்தப்படுகின்றார். அதைத்தான் எழுத்து செய்யும். அதற்குத்தான் இவ்வாறான 'சொல்லப்படாத கதை'கள் தேவைப்படுகின்றன. சிலவேளைகளில் அதற்காகத்தானே நாம் வாசிக்கவும் எழுதவும் செய்கின்றோம் அல்லவா?
**************
(Jun 28, 2022)