(எஸ்.பொ - பகுதி -03)
1.
எஸ்.பொவை முதன்முதலாக 2000ம் ஆண்டளவில் சந்தித்தபோது, அவரது 'ஆண்மை' தொகுப்பை ஏற்கனவே வாசித்திருந்தேன். 'ஆண்மை'யில் எந்தக் கதைக்கும் பெயரிடப்படவில்லை. ஆண்மை- 01 எனத் தொடங்கி ஆண்மை- 15 வரை கதைகள் அதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் அப்போதுதான் இலக்கியம் என்பது பாலகுமாரனைத் தாண்டியும் இருக்கின்றதென உணர்ந்து, தீவிரமாய்ப் பிறரையும் வாசிக்கத் தொடங்கிய காலம். எஸ்.பொ அந்தக்காலகட்டத்தில்தான் புலம்பெயர் இலக்கியத்தை தானே முன்னத்தி ஏராக நின்று, நகர்த்துவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பல்வேறு கண்டங்கள்/நாடுகளுக்குப் பயணித்துப் பாடுபட்டுக்கொண்டிருந்தார். அவ்வளவு நம்பிக்கையோடு இலக்கியத்தின் மீது இருந்த எஸ்.பொ என்ற முன்னோடியின் தீயின் சிறு'துளி'யாவது என்னைப் போன்றவர்களை அன்று தீண்டாமல் இருந்திருந்தால்தான் வியப்பாயிருந்திருக்கும்.
அந்தப் பயணத்தின்போது கனடாவுக்கு எஸ்.பொ வந்தபோது, அவரது தடித்த கண்ணாடிகளுக்குள் இருந்து தீட்சண்யமாக வெளிப்படுத்திய பேச்சை விட அவரிடம் நான் வாசித்த 'ஆண்மை'யைப் பற்றிக் கேட்க சில கேள்விகள் இருந்தன. நிகழ்வு முடிந்து வெள்ளைவேட்டி சரசரக்க நடந்து வந்தவரை இடைமறித்தேன். எல்லாக் கேள்விகளைக் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்காதபோதும், ஆண்மை-09ல் பராசக்தி அக்கா, அவன் அவ்வளவு சிறுவன் என்று தெரிந்தும் அவனின் உடலோடு விளையாடியது சரியா, எழுத்தில் இப்படி வைப்பது முறையா எனக் கேட்டேன். 'தம்பி, எழுத்தில் வைப்பது சரியா, இல்லையா என்பதைவிட, அப்படி எனக்கு நடந்தது அதைத்தான் எழுதினேன்' என்றார் எவ்விதத் தயக்கமும் இல்லாது. எஸ்.பொவுக்கா அல்லது இன்னொருவருக்கா இது நடந்தது என்பல்ல முக்கியம், புனைவின் சுதந்திரம் குறித்தும், உதறித்தள்ளவேண்டிய தயக்கங்கள் பற்றியும் நானாக இதை உணர எனக்குப் பல ஆண்டுகள் பின்னர் தேவைப்பட்டது.
ஆண்மையில் இது ஒரு முக்கியமான கதையல்ல. ஒருவகையில் இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் 'ஆண்மை' என்பது எதுவாக இருக்கும் என்று நேரடியாகவும் மறைமுகமாவும் பரிட்சித்துப் பார்க்க விரும்புகின்றதென எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு கதையும் இதுதான் 'ஆண்மை' என்று தெளிவாக வரையறுக்காமல் வழுக்கிச் செல்வதுதான் இந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் சலிக்காது வாசிக்க முடிவதற்கும் ஒரு காரணமாகின்றது.
இத்தொகுப்பில் முக்கிய கதைகளில் ஒன்றாக ஏழாம் கதையைச் சொல்வேன். அது நிச்சாமத்தில் நிகழ்ந்த சாதி வன்முறைக்கு எதிராக நின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் நெஞ்சுரத்தை மிகத்தெளிவாகப் புனைவில் முன்வைக்கின்றது. சாதிமான்கள் நடத்தும் தேநீர்க்கடைகளில் தேநீர் குடிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையும் போராட்டம் ஆதிக்க சாதிகளால் பொலிஸ் துணையுடன் வன்முறையாக்கப்படுகின்றது. நிச்சாமம் கிராமம் ஆயுதப்பொலிஸால் சுற்றிவளைக்கப்படும்போது, அதற்கு தலைமைதாங்கும் ஒருவர் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படப்போகின்றார்கள் என்பதன் நிமித்தம் சரணடைகின்றார். மணியம் என்கின்றவர் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவராக இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமைகளைக் காப்பாற்றுவதற்காக தன்னைக் கைது செய்யச் சொல்வதை எஸ்.பொ 'ஆண்மை' என்கின்றார். ஓர் உண்மையான போராட்டக்காரன் ஒருபோதும் அநியாய பலியெடுப்புக்களுக்குப் போகமாட்டான் என்பதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் தொடர்ந்து செல்வதற்கு இதைவிட வேறு சிறந்த வழியில்லை என்பதையும் இந்தக்கதையின் முடிவை வைத்து நாம் விளங்கிக்கொள்ளலாம்.
இந்தக் கதையை வாசிக்கும்போது நாம் வரலாற்றின் ஒரு குரூர காலத்தில் நுழைகின்றோம். நமக்கு ஒருபக்கத்தில் தமிழீழத்தைப் பெற்றுத்தருகின்றோம் என்று முழங்கியவர்களே, எப்படி தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு பொலிஸ்/அரசு அதிகாரத்தை ஏவிவிட்டார்கள் என்பதையும் நாமறிகின்றோம். இந்துக்கோயில்களில் மட்டுமில்லை இளவாலையில் இருக்கும் கத்தோலிக்கத் தேவாலயத்தில் வழிபடக் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடமிருக்கவில்லை என்பதையும் கண்டுகொள்கின்றோம். நிச்சாமம் சாதி எதிர்ப்பின் உச்சமாய்த் திமிர்ந்தபோது, அங்கே சாதிச் சண்டை நடக்கவில்லை, ( சீன மார்க்ஸிஸ்ட்டுக்களின்) ஷாங்காய் புரட்சி நடக்கின்றது என்று கொழும்பில் பேசிய தமிழ்த்தலைவர்களின் இரட்டை வேடங்களும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன.
இன்று அமெரிக்க ஹொலிவூட்காரர்கள் பலரின் தாத்தாமார்கள் ஒருகாலத்தில் பெரும் அடிமை வியாபாரத்தை நடத்தியும், தம் பண்ணைகளில் அடிமைகளையும் வைத்திருந்தார்கள் என்று அறிய வருகின்றபோது பல நடிகர்கள் தன் முன்னோர்களின் செயல்களின் நிமித்தம் மன்னிப்பைக் கேட்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இன்றளவும் அன்று சாதிமான்களாக இருந்து, அவர்களின் வாரிசுகளாக இப்போதிருக்கும் பிள்ளைகளிலும் பேரப்பிள்ளைகளிலும் எத்தனைபேர் வெளிப்படையாக அன்றைய சாதி வெறியின் பேரில் இந்த மன்னிப்புக் கோரலைக் கேட்டிருக்கின்றனர்? அது குறித்து குற்றவுணர்வையாவது கொண்டிருக்கின்றார்களா என்பது குறித்த கேள்விகளை நாம் கேட்கவேண்டியவராகின்றோம்.
2.
இந்த நிச்சாமக் கதைக்கு நிகராக, 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும் பத்தாவது கதையையும் சொல்வேன். இந்தக் கதை முற்றிலும் மட்டக்களப்பில் நிகழ்கின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதைசொல்லி, மட்டக்களப்புக்கு வேலை நிமித்தம் போய், அங்கிருந்த குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகுகின்றார். அவருக்கு, அந்த வீட்டில் பெற்றோரை இழந்து தாய்மாமனோடும், அம்மம்மாவோடும் இருக்கும் பெண்ணின் மீது மையல் வருகின்றது. காதலைத் தாண்டி 'தசை' ஆசை இன்னும் இந்தக் கதைசொல்லியைத் தொந்தரவு செய்கின்றது.
ஒரு பூரணைநாளில் அந்தப் பெண்ணை அடையமுயல்கின்றபோது அவள் இடைநடுவில் நிறுத்துகின்றாள். கதைசொல்லி கோபத்துடன் யாழ்ப்பாணம் போய்விடுகின்றார். பெண்ணோ திரும்பி வரும்படி உருக்கமான கடிதங்களை எழுதுகின்றாள். எப்படியெனினும் உங்கள் மீதான காதலில் அடுத்த பூரணையில் என்னை முழுதாகத் தருகின்றேன் என்கின்றாள்.
கதை சொல்லி மீண்டும் மட்டுநகருக்குத் திரும்பிவருகின்றார். கோபத்தோடு இருக்கும் கதைசொல்லிக்குத் தன்னை முழுமையாகக் கொடுக்க அந்தப் பெண் தயாராகின்றாள். அந்தவேளையில் அந்தப் பெண்ணின் பரிபூர்ணமான மனது கதைசொல்லியை நடுங்கவைக்கின்றது அவளை விட்டுவிலகி ஓடுகின்றார். திரும்பி வாருங்களென அவள் கூப்பிடுகின்றாள். அப்போதுதான் கதைசொல்லி உண்மையைச் சொல்கின்றார். தனக்கு ஏற்கனவே மனைவி யாழில் இருக்கின்றாள். உன்னளவில் அழகில்லையென்றாலும் அவளின் காத்திருப்பைத் தாண்டி எதுவும் செய்யமுடியாது என்று இந்தப் பெண்ணின் தன்னைகொடுக்கும் பரிபூர்ண இழத்தலின் முன் சரணடைகின்றார். இத்தோடு கதை முடிந்திருந்தால் அது சாதாரணமாகிவிடும். எஸ்.பொ முடிக்கும் இடத்தைப் பாருங்கள்.
"மட்டக்களப்பாரின் மந்திரம் என்ன?
பாயோடும் ஒட்டும் பழிப்புரை என்ன?
இந்தக் கொச்சையான ஜோடிப்பிற்குப் பின்னால், எத்தனை அமரிகளுடைய கன்னிமை என் போன்ற யாழ்ப்பாண ஓநாய்களினால் குதறப்பட்டது?
அமரி நீ கார்த்திகை நட்சத்திரக்காரி. உன் மாப்பிள்ளை என்றாவது ஒருநாள் உன் வீடு தேடிவருவான்..
நான் மனிதனாய் மீளுயிர்ப்புப் பெற்ற திருப்தி, ஏனைய சோகங்களை விழுங்க, ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது."
எவ்வளவு அற்புதமான கதையாக ஒரு பெண்ணின் அந்தப் பரிசுத்த அன்பின் முன், தன்னை மீளுயிர்ப்புப் பெற்ற மனிதனாக கதைசொல்லியை மாற்றி இந்தக் கதையில் எஸ்.பொ முடிக்கின்றார். இந்தக் கதையை எஸ்.பொவைத் தவிர வேறொருவராலும் இவ்வளவு அருமையாக எழுதியிருக்கவே முடியாது. எழுத்து தன்னை மறந்து தானே நிகழ்த்திக்கொள்ளும் வித்தையை இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்தே உணரமுடியும்.
3.
இதேபோன்று இன்னொரு முக்கியகதையாக ஆண்மை-12ஐக் கொள்வேன். இந்தக் கதையில் தமிழ் - முஸ்லிம் உறவின் அரிய காலத்தைக் காண்கின்றோம். இப்படியெல்லாம் மனிதர்கள் ஒருகாலத்தில் வாழ்ந்திருக்கின்றார்களா என இனங்களுக்கிடையிலான முரண்கள் உச்சத்தில் இருக்கும் அவலகாலத்தில் அல்லவா இப்போது நாம் வாழ்கின்றோம்.
பாணந்துறையில் கடை நடத்தி வரும் வேலாயுதபிள்ளை இனக்கலவரத்தில் அவரின் கடையோடு வைத்துக் கொளுத்தப்படுகின்றார். அவரோடு நண்பராக இருக்கும் ஹஜியார், அவரின் மகனான கணபதிக்காக அந்தக் கடையை மீளவும் கட்டிக்கொடுக்க, அடுத்த தலைமுறையான கணபதியும், ஹஜியாரின் மகனான அஸாருத்தீனும் நல்ல நண்பர்களாகின்றனர். ஹஜியாரின் குடும்பத்தில் கணபதியும் ஒரு மகனாகின்ற அளவுக்கு நெருக்கமாகின்றான். ஆயிரம் பேரைக் கொன்ற அங்குலிமாலாவையும் மன்னித்த கருணாமூர்த்தி புத்தரின் அஹிம்சையைச் சொல்லிக்கொண்டிருந்தபோதும், சிங்களப்பேரினவாதம் பாடங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக அங்குலிமாலாவின் கதை இந்தக் கதையில் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இப்போது வருடம் 1983. அஸாருத்தீன் கொழும்புக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வர, பாணந்துறையில் இருக்கும் கடைக்கு சிங்களக் காடைக்குழு தீ வைக்கப் போக, அதை தடுத்து நிறுத்த கணபதி ஓடுகின்றான். கொழும்பிலிருந்து பாணந்துறைக்கு, கொழும்பில் நடந்த கலவரத்தைச் சாட்சியாகப் பார்த்துவிட்டு பதறிவரும் அஸாருத்தீன், தாயிடம் ஏன் கணபதியை கடைக்கு அனுப்பினீர்கள் என வைதபடி, அவனைக் காப்பாற்ற இன்னொரு 'தொப்பியையும், ஜூப்பாவையும்' எடுத்துக்கொண்டு கணப்தியை முஸ்லிமாக மாற்றிக் காப்பாற்றத் தெருவுக்கு ஓடுகின்றான். அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்ததென்று ஒரு கதையை எஸ்.பொ சொல்லிவிட்டு, பிற்சேர்க்கையாக வாசகனுக்கு இன்னொரு முடிவையும் சொல்கின்றார். ஒரு காலத்தில் வரலாற்றை, ஆனால் அந்த வரலாற்றின் முடிவை வேறுவிதமாக எழுதவேண்டுமென ஆசைப்படும் எஸ்.பொவை இந்தக் கதையில் நாம் பார்க்கின்றோம்.
ஒருவகையில் புனைவைவிட உண்மையே தன்னை தொந்தரவு செய்கின்றது என, இந்த இனவெறித்தாக்குதல்கள் நடந்தபோது தான் நைஜீரியாவில் வாழ்ந்துகொண்டிருந்தேன் என எஸ்.பொ வாசகருக்காக ஒரு குறிப்பையும் தருகின்றார். இந்தக் கதையை இப்போது வாசிக்கும்போது புத்தரின் காருண்யத்தைத் தனதாகக் கொண்ட சிங்களப் பேரினவாதம் எப்படியெல்லாம் தமிழர்களின் மீது நடந்துகொண்டதோ அதுபோல நாமும் பின்னர் முஸ்லிம் மக்களை எப்படி எங்களிலிருந்து பிரித்து விலத்திவைத்தோம் என்பதையும் இந்தக் கதையை முன்னிட்டு வாசித்துப் பார்க்கலாம்.
நிச்சாமம் கதையில், மிகத் தெளிவாக தேசியப்போராட்டத்தை நிகர்த்து சாதிப்போராட்டம் இருக்கின்றதென எஸ்.பொ முன்வைக்கின்றார். அதேவேளை எஸ்.பொ பிற்காலத்தில் தமிழ்த்தேசியத்தையும் மிக உறுதியாக முன்வைத்தவராக இருந்தபோதும், இறுதிவரை எழுத்திலும், பேச்சிலும் முஸ்லிம்களின் வடபகுதி வெளியேற்றத்தை தவறான விடயமெனக் கண்டித்தபடியே இருந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மக்களின் மீதான சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைகளை எஸ்.பொ தொடர்ச்சியாக வலியுறுத்த வந்ததை ஏற்றுக்கொண்டாலும், பிற்காலத்தில் எழுதிய 'மாயினி' நாவலில் பண்டாரநாயக்க குடும்பத்தை மிகக் கொச்சையான எள்ளல்களால் கீழிறிக்கியும் வைத்தது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். அப்படி எழுத எங்களுக்கு எஸ்.பொ தேவையில்லை. இங்கே சமூகவலைத்தளங்களில் எழுதும் அரைகுறை வாசிப்புள்ளவர்களே போதும் என்பேன்.
*****************
(2019)