இருப்பின் இறகிழத்தலும், அபத்தத்தின் வசீகரமும்
1.
மிலான் குந்தேராவுக்கு இப்போது 90 வயதுக்கு மேலாகிவிட்டது. அன்றைய செக்கோஸ்லாவாக்கியாவில் (1929) பிறந்த குந்தேரா அவரது தாய்நாடு ஒரு நூற்றாண்டில் சென்று வந்த பல மாற்றங்களைப் பார்த்திருக்கின்றார். முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள், செக்கில் பிரசித்தபெற்ற புரட்சியான 'ப்ராக் வசந்தம்', அதன் பின்னர் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் செக்கின் மீது ஆக்கிரமிப்பு என்று பல சடுதியான மாற்றங்களில் குந்தேராவின் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஓர் இடதுசாரியாக இருந்த குந்தேராவினால் சோவியத் ஒன்றியம், செக்கின் மீது டாங்கிகள் கொண்டு நடத்திய ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்த எதிர்ப்பை, அது ஏற்படுத்திய பாதிப்பைப் பல்வேறுவிதங்களில் குந்தேராவின் படைப்புக்களில் நாம் அவதானிக்கமுடியும்.
குந்தேரா, அவரது நாற்பதுகளில் பிரான்சிற்கு குடிபெயர்ந்து பின்னர் கிட்டத்தட்ட பிரெஞ்சுவாசியாகவே ஆகிவிட்டார். அவரிடம் ஓரிடத்தில், தாய்நிலம் பிரிந்து வந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள் எனக் கேட்டபோது, 'உலக மகாயுத்தங்களின்போது ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பலருக்கு திரும்பவும் ஜேர்மனிக்குப் போகும் கனவுகள் இருந்தன. எனவே அவர்கள் அதையொரு தற்காலிக புலம்பெயர்வாகவே நினைத்திருந்தனர். தனக்கு அப்படி இல்லை. பிரான்ஸிற்கு வந்தபோது அது தனது (புதிய) தாய்நிலம் என்றே நினைத்திருந்தேன். ஒருபோதும் செக்கிற்குத் திரும்பிப் போகும் கனவு தனக்கு இருந்ததில்லை' என்கின்றார்.
ஒருகாலத்தில் மேற்கின் பகுதியாக இருந்த செக், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின் கிழக்கின் பகுதியாகவே மாறிவிட்டதென்கின்றார். தன்னை மேற்கின் கலாசார வழி வந்த ஒருவனாக நினைத்துக் கொள்வதால் இன்று 'கிழக்கின் பேரரசனாக' இருக்கும் செக் தன்னைக் கவர்வதில்லை என்கின்றார். இதை நாம் குந்தேராவின் Ignorance நாவலில், செக்கைப் பிரிந்துவந்த ஒரு பெண் இருபது ஆண்டுகளின் பின் தாய்நிலம் திரும்பிச்சென்று தோல்வியுடன் திரும்பி வரும் அபத்தத்தினூடாக நாம் அவதானிக்க முடியும்.
குந்தேரா, இதுவரை பத்து நாவல்களை அவரது தாய்மொழியான செக்கிலும், பின்னர் அவரின் புலம்பெயர்ந்த புதிய நிலப்பரப்பு மொழியான பிரெஞ்சிலும் எழுதியிருக்கின்றார். அவரது ஒரேயொரு (ஆங்கிலத்தில் வெளிவந்த) சிறுகதைத் தொகுப்பான 'Laughable Love' அவரது நாவல்களைப் போல மிகவும் பேசப்பட்ட ஒரு தொகுப்பாகும். அதில்தான் அவரது பிரசித்தி பெற்ற கதையான 'The Hitchhiking Game' வெளிவந்தது.
மிலான் குந்தேராவுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் காஃப்கா பிடித்த எழுத்தாளர். செக் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னும், உங்களுக்கு யாரேனும் ரஷ்ய எழுத்தாளர்கள் பிடிக்குமாவென ஒரு நேர்காணலில் கேட்கப்படும்போது, லியோ தால்ஸ்தோய் தனக்குப் பிடித்த எழுத்தாளர் என்கின்றார். தாஸ்தவேஸ்கியை விட தால்ஸ்தோய் நவீனகாலத்து எழுத்தாளர் என்கின்றார். ஜேம்ஸ் ஜாய்ஸில்ன் ‘யுலிஸஸின்’ கட்டுப்பாடற்ற தன்னுரைக்கு (monologue) முன்னோடி, தால்ஸ்தோயின் ‘அன்னா கரீனா’ என்கின்றார். அன்னா கரீனா இறுதியில் பேசும் தன்னுரை உண்மையில் அசல் பிரதியில் கட்டுபாட்டற்ற தன்மையுடனும், பகுத்தறிவுக்கு(irrational) அப்பாற்பட்டு இருக்கின்றதென்றும், அதை பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அதன் இயல்புகெட்டு தர்க்கத்துக்கு உட்பட்ட தன்னுரையாக அன்னாவின் மனோநிலை மாற்றப்பட்டு வந்திருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அசல் மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர்கள் அப்படியே அந்தக் கட்டுப்பட்டில்லாத தன்னுரையை பிரெஞ்சுமொழிக்கு மாற்றினால், இவர்களுக்கு மொழிபெயர்க்கத்தெரியாது என்று யாரும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தினால் அப்படிச் செய்திருக்கலாம் எனச் சொல்லும் மிலேன் குந்தேரா, ஆனால் அதை அதன் இயல்பிலேயே கட்டுப்பாடற்றதன்மையோடு, தர்க்கமில்லாது மொழிபெயர்த்திருக்கவேண்டும் எனச் சொல்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ, மிலான் குந்தேரா தனது படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களில் மிகவும் நுணுக்கமாகப் பார்த்துத் திருத்தங்களை நிறையச் செய்கின்றவர் எனவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று எழுத்தாளர்கள் என்பவர்கள் அவர்களின் படைப்புக்களைத் தவிர்த்து, வெளியே தெரியத் தேவையில்லை என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டவர். முக்கியமாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் பிறருக்குத் தெரியவேண்டியதில்லை என்றும் கூறியவர் (இதை வலியுறுத்திய இன்னொருவர் ழாக் தெரிதா). இதனால் பொதுநிகழ்வுகளில் பங்குபெறவோ, தனது புத்தக வெளியீடுகளில் கலந்துகொள்ளவோ மறுத்ததோடு, புகைப்படங்களை வெளியிடவோ, நேர்காணலைக் கொடுக்கவோ தயங்கிய ஒருவராக இருக்கின்றார் மிலான் குந்தேரா.
2.
The Unbearable Lightness of Being
மிலான் குந்தேராவின் The Unbearable Lightness of Being மனித வாழ்வின் இருத்தலின் மீதும் குடும்பம் என்ற அமைப்பின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது. மூளை சத்திரசிகிச்சை நிபுணனாக இருக்கும் நாயகன் தோமஸ், ஒரு பெண் பித்தனாக (womanizer) இருக்கின்றான். அவனது வாழ்வும் தெரேஸா, சபீனா என்ற இரு பெண்களைச் சுற்றியே நகர்கின்றது. பெண்களோடு உடலுறவு கொள்வதற்கும் நேசிப்பதற்கும் தெளிவான எல்லைகள் இருக்கின்றதென நினைத்து வாழ்வை அதன்பாட்டில் கொண்டாடிக்கொண்டிருப்பவன்.
அவனது பெண்பித்து நிலைமையைத் தெரிந்துகொண்டு திருமணம் செய்கின்ற தெரேஸாவிற்கு திருமணத்தின்பின்னும் தோமஸ் ஒரு பெண் பித்தனாக இருப்பதை அறிந்து உளவியல்ரீதியில் சிதைவிற்குள்ளாகின்றார். பின்னாட்களில் ரஷ்யா(சோவியத் ஒன்றியம்) செக்கோசிலாவாக்கியா (பின்னாட்களில் செக்- ஸ்லாவாக்கியா) நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்கின்றபோது, சுதந்திரத்தை/உயிரைத் தக்கவைப்பதற்காய் சுவிஸிற்கு தோமஸும், தெரேஸாவும் தப்பியோடுகின்றார்கள் (அமெரிக்காவாயிருந்தாலென்ன, ரஷ்யாவாயிருந்தாலென்ன, இந்தியாவாயிருந்தாலென்ன அயல் நாடுகளில் மீது ஆக்கிரமிப்புச் செய்வதும், அந்நாடுகளில் கலாசாரங்களைச் சிதைப்பதும் அளவுகளில் அவ்வளவு வேறுபடுவதில்லை).
செக்கில் இருந்தபோது ஒரு சுயாதீனப்புகைப்படப்பிடிப்பாளராய் இருந்த தெரேஸாவுக்கு, தொழில் தேடி சுவிஸில் அலையும்போது தோட்டங்களையும்/நிர்வாணப்படங்களையும் எடுத்தால் மட்டுமே பிரசுரிப்போம் என்கின்ற சுவிஸ் பத்திரிகைத் தொழில் வெறுக்கின்றது. மேலும் சுவிஸ் வந்தும், தோமஸ் பெண்பித்தனாக அலைவதைப் பார்த்து சோர்வு வந்து, தேரேஸா மீண்டும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருக்கும் செக்கிற்கு திரும்பிச்செல்கின்றார்.
ஏன் திரும்பிப்போகின்றாய் எனக் கேட்கப்படும்போது, செக்கில் தோமஸ் ஒரு பெண்பித்தனாக இருந்தபோதும் தான் தனித்தியங்க முடிந்திருந்தது. எனக்கு அவனது அன்பு மட்டுமே அப்போது போதுமானதாயிருந்தது. இப்போது எல்லாவற்றின் நிமித்தமும் தோமஸைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எனக்கு வேண்டியது அவனது அன்பு மட்டுமே, நான் தனித்தியங்கவே விரும்புகின்றேன் என்று தெரேஸா கூறுகின்றார்.
பெண் பித்தனாக தோம்ஸ இருந்தாலும், அவனுக்கு பிற உறவுகள் உடலுறவுக்காய்த் தேவைப்படுகின்றதே தவிர, நேசத்திற்கு எனப் பார்க்கும்போது அவனது தேர்வு தெரேஸாவாகவே இருக்கின்றது. தெரேஸாவோடான அன்பு அவனளவில் உணமையானது, அதை வேறு எவரும் ஈடுசெய்யவும் முடியாது. தெரேஸா செக்கிற்கு மீண்டும் போனதை அறிந்த தோமஸும் செக்கிற்குள் மீண்டும் நுழைகின்றான். சில அரசியல் காரணங்களால் மீண்டும் வைத்திய நிபுணராய் தொழில் செய்யமுடியாது கட்டடவேலை/வர்ணம் பூசுதல் என்பவற்றைத் தோமஸ் செய்துவருகின்றான்.
தெரேஸாவாலும் தான் முன்பு பணியாற்றிவந்த பத்திரிகையில் இயங்க முடியவில்லை. ஆரம்பத்தில் செய்துவந்த மதுபானப் பணியாளர் (bartender) வேலையைத்தான் செய்கின்றார் இதற்கிடையில் தோமஸ் மீண்டும் ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடுபடுவதை அறிந்து கோபத்தில் -ரஷ்ய உளவாளி என நம்பப்படுகின்ற- ஒருவரிடம் தன்னைத் தெரேஸா இழக்கின்றார். ஓர் இரவில் தனியே அந்த ஆடவனின் வீட்டிற்குப்போகும் தேரேஸாவை, அந்த நபர் உடலுறவுக்கு அழைக்க தான் அதற்காய் வரவில்லையென மறுக்கின்ற தெரேஸா, பிறகு தோமஸின் மீதிருக்கும் கோபத்தில் ரஸ்யரோடு இணங்கிப்போகின்றார். எனினும் அந்த உடலுறவு ஒரு பாலியல் வன்முறையைப் போலவே தெரேஸாவுக்குத் தெரிகின்றது.
இறுதியில் தான் முழுமையாக நேசம் கொள்ளக்கூடிய ஒருவர் தோமஸே என உணர்ந்து, தோமஸிடம் திரும்பிவந்து மீண்டும் செக்கிலிருந்து வேறு நாட்டுக்குப்போய்விடுவோம் என்கின்றார். எனினும் இவர்களிலிருவரின் கடவுச்சீட்டுக்களும் ரஷ்ய அதிகாரிகளால் பறிக்கப்பட்டதால் அவர்களால் வேறு நாட்டுக்குத் தப்பியோட முடியாது போக, ஒரு கிராமப்புறத்திற்குச் சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். இயற்கையோடு இயைந்து விவசாய வாழ்வு செய்து தமக்கான சந்தோசத்தை கண்டெடுக்கின்ற இவ்விணை, முடிவில் ஒரு ட்ரக் விபத்தில் இறந்துபோவதுடன் நாவல் முடிவடைந்து விடுகின்றது.
மிலான் குந்தராவின் இந்நாவல் இருத்தலியத்தையும், குடும்ப அமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்களை இலகுவில் ஈர்த்துவிடக்கூடிய தோமஸ் ஏன் திருமணத்துக்குச் சம்மதித்தான் என்று வாசிப்பவர்கள் யோசிக்கவேண்டியிருக்கின்றது. எவ்வாறு ஒருவன்/ஒருத்தியின் இருப்பு இருந்தாலும் (ஃபிரைடாவும் இங்கே நினைவுக்கு வருகின்றார்) அவர்கள் நம்பிக்கை கொள்கின்ற/சரணாகதி அடைகின்ற ஒரு இடம் இருக்கத்தான் செய்கின்றது. அதேயேதான் தோமஸ் தெரேஸாவிடம் தேடியிருக்கின்றான் போலும்.
Ignorance
மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாகஇருக்கிறது.
இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட, அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இருக்கின்றான். பாரிஸிலிருக்கும் இரினாவின் தோழிகள் மட்டுமில்லை, அவளின் காதலனும், செக் இப்போது சுதந்திரமடைந்துவிட்டதே, நீ ஏன் இன்னும் தாய்நிலம் போகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கேட்கின்றனர். தாய்நிலம் போகும் கனவு இல்லாத இரினாவை, இவர்களின் கேள்விகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
இறுதியில் செக்கிற்குத் திரும்புகின்றாள். இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த செக் மட்டுமில்லை, அவளின் நண்பிகளும் கூட அவளுக்குத் தொடர்பில்லாத/தெரியாத ஒரு உலகைப் பற்றிப் பேசுகின்றனர். அவளின் வருகையை அவர்கள் கொண்டாடுகின்றனரே தவிர, அவர்களுக்குத் தெரியாத அவளின் அந்த இருபது ஆண்டுகள் பற்றி அறிய எவருமே அக்கறை கொள்கின்றார்களில்லை. அது இரினாவிற்குத் துயரத்தை மட்டுமின்றி சலிப்பையும் கொண்டு வருகின்றது.
அவளது ஒரு தோழி மட்டுமே கொஞ்சம் இரினாவைப் புரிந்துகொள்கின்றாள். எல்லோரும் தங்கள் செக் நாட்டுக்கலாசாரத்தைக் காட்ட பியர்களை ஓடர் செய்து குடிக்கும்போது, இரினா பிரான்சிலிருந்து கொண்டு வந்த வைனின் அருமையை இந்தத்தோழியே கண்டுகொள்கின்றாள். 'நமது செக் மக்கள் கடந்து இருபது ஆண்டுகள் செக்கில் நடந்தத கொடுமையையே மறந்ததுமாதிரி புதிய வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நீ உனது புலம்பெயர்ந்த 20 வருடகால வாழ்க்கையை அறிவார்கள் என நினைக்கின்றாயா?' என அவள் கேட்கின்றாள்.
இரினாவின் தோழிகள் மட்டுமில்லை அவளின் காதலனான குஸ்தாவாவும் அவளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகின்றான். அந்த விலகல் நடக்கும் கட்டத்தில் இரினா அவளது இளமைக்கால காதலனான யோசப்பைக் காண்கின்றாள். அவளுக்கு அவனை ஞாபகம் இருப்பதுபோல, அவனுக்கு இவள் பற்றிய எந்த நினைவுகளுமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சேர்ந்து கதைத்து, மது அருந்திக் கொண்டாடியபோது, அவளுக்கென அவன் உணவகத்தில் களவாடிக்கொண்டு வந்து கொடுத்த ஆஸ்ட்ரேயை இரினா இன்னமும் கவனமாக வைத்திருக்கின்றாள். ஏன் அதை பிரான்சிற்குக் கூட புலம்பெயர்ந்து போனபோது கொண்டு சென்றிருக்கின்றாள்.
இருபது ஆண்டுகளில் யோசப்பிற்கும் நிறைய நடந்தேறிவிட்டது. வைத்தியர்கள் நிறைய இருக்கும் குடும்பத்தில் வந்த அவன், மிருக வைத்தியராக பின்னாட்களில் மாறியிருக்கின்றான். இரினாவைப் போல அவனும் ரஷ்யா ஆக்கிரமிப்பால் டென்மார்க்கில் குடிபெயர்ந்திருக்கின்றான். அவன் அவ்வாறு புலம்பெயர்ந்ததால் அவனது குடும்பம் ரஷ்யாப் படைகளால் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றார்கள். டென்மார்க்கில் போய் அங்கே டென்மார்க் பெண்ணை மணந்துவிட்டு, இப்போதுதான் 20 ஆண்டுகளின் பின் செக்கிற்குள் கால் வைக்கின்றான்.
இறுதியில் இரினாவுக்கும், யோசப்பிற்கும் செக் தமது பழைய செக் இல்லை என்கின்ற சலிப்பு வருகின்றது. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இருக்க முடியாது என முடிவு செய்கின்றனர். இரினாவின் காதலனான குஸ்தாவ்வோ அவளிடமிருந்து விலகிச் செல்வதோடு அல்லாது, அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லாத அவளின் குடும்பத்தோடும் நெருக்கமாகின்றான். இது இன்னும் பெரிய விலகலை இரினாவிற்குக் கொடுக்கின்றது.
தாய் நிலம் மீளும் இருவரின் அனுபவங்களும் கசப்பாக இருக்கின்றன. யோசெப், தன் மனைவியை நோயிற்குக் காவு கொடுத்துவிட்டான். ஆனால் நினைவுகளை அழிக்காது அவள் எப்படி உயிரோடு இருந்திருந்தால் ஒரு வாழ்வை அவன் அவளோடு சேர்ந்து வாழ்ந்திருப்பானோ அவ்வாறு ஒரு வாழ்வை தன் வீட்டினுள் வடிவமைத்து தானும் தன்பாடுமாய் தனித்து வாழ்ந்து வருகின்றவன்.
குஸ்தாவின் மீதான விலகல் இரினாவிற்கு யோசெப்பின் மீது ஈர்ப்பைக் கொடுக்கின்றது. யோசெப் ஒருகாலத்தில் அவனின் காதலனாக மாற இருந்தவன் என்பதால் நேசம் இன்னும் அடர்த்தியாக இரினாவுக்குள் இருக்கிறது. அவனோடு தன் உடலைக் பகிர்ந்த இரவின் பின்தான் இரினா அறிந்துகொள்கின்றாள், யோசெப்பிற்கு தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லை என்பது. அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றது.
மீளத் தாயகம் விரும்பும் கனவு மட்டுமில்லை, மீளப் புதிய காதலைக் கண்டடையும் கனவும் இரினாவிற்குக் கலைந்துபோகின்றது. புலம்பெயர்ந்த எல்லோர்க்கும் தாய் நிலம் மீளும் பெருங்கனவு இருந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உண்மையிலே அந்தக் கனவு அழகான கனவுதானா என்பதையே மிலான் குந்தேரா 'அறியாமை'யில் பல்வேறு விதமான இழைகளைப் பிடித்துப் பிடித்துக் கேள்விகளால் முன்வைக்கின்றார்.
கடந்தகால நினைவுகளை இல்லாமற் செய்வது கடினமானதுதான், ஆனால் அதைவிட நிகழ்காலக் கனவுகள் இன்னும் பாழ் என்கின்றபோது எந்த மனிதரால்தான் வாழ்வினை எதிர்கொள்ள முடியும்?
(இன்னும் வரும்)
நன்றி: வனம்