கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சிரியாவில் தலைமறைவு நூலகம்

Thursday, June 30, 2022

யுத்தமொன்று நிகழும்போது எப்போதும் உயிர் தப்புவது என்பதே பிரதான விடயமாக, நாளாந்தம் இருக்கும். ஆனால் அதேசமயம் வாழ்வின் மீதான பிடிப்பை இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விட்டுவிடாதிருக்க, அதுவரை கவனிக்கப்படாத பல விடயங்கள் அற்புதங்களாக மாறத் தொடங்கும். சிரியாவில் அரசு படை ஒரு பக்கம் தராயா என்னும் நகரை முற்றுகையிட, அதற்குள் அடிப்படை தீவிரவாத இயக்கங்கள் தோன்றி (வெளியில் இருந்து வந்து) சண்டைபிடிக்க, இந்த அரசு/அடிப்படைவாத இயக்கதைத்தாண்டி, அந்த மண்ணுக்குரிய மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடுகின்றார்கள். அவ்வாறு போராடும் மக்களில் இருந்து முகிழ்ந்த இளைஞர்களே ஒரு தலைமறைவு நூலகத்தைத் தொடங்குகின்றார்கள்.


நகரின் மீதான அரசின் முற்றுகை, மிலேச்சனத்தனமான குண்டுவீச்சுகளின் நிமித்தம் மக்கள் பெரும்பாலானோர் நகரை விட்டு அகதிகளாக வெளியேற, இறுதிவரை போராடுவோம் என்கின்ற ஓர்மத்தில் இருக்கின்ற இளைஞர்கள், குண்டுவீச்சுகளின்போது அனாதரவான புத்தகங்களைச் சேகரித்து சேகரித்து ஒரு நூலகத்தை யுத்தத்தின் இடையே அமைக்கின்றார்கள். அதுவரை வாசிப்பில் ஆர்வமில்லாத இளைஞர்கள் சிறுவர்கள் இந்த நூலகத்தைத் தேடி வருகின்றார்கள். நிறைய அரசியல்/இலக்கியம்/தத்துவமென உரையாடுகின்றார்கள். காலத்தின் நீட்சியில் அந்த நூலகமே அவர்களது உயிரைத் தப்ப வைக்கின்றது.


ருமுறை என்னிடம் நண்பரொருவர், நீ பல புத்தகங்களை உனது 15 வயதுக்குள் வாசித்திருக்கின்றாயெனச் சொல்கின்றாய், உண்மைதானா? எனக் கேட்டார். இப்போது பார்த்தால் என்னைப் போன்ற பலருக்கு, சாதாரண சிறுவர்க்குக் கிடைக்கும் குழந்தை/பதின்மம் கிடைத்திருந்தால் நான் இப்படி புத்தகங்களின் பக்கங்களுக்குள் போயிருப்பேனா என்பது சந்தேகந்தான். ஓர் இயல்பான சூழ்நிலையில்லா யுத்த சூழலில் எனக்கு அந்த கொடும் யதார்த்ததில் இருந்து தப்பி அடைக்கலம் புக, புத்தகங்களே உதவியிருக்கின்றன. அதனால்தான் 12/13 வயதுக்குள் சாண்டியல்யனின் 'கடல்புறா', 'யவனராணி'யிலிருந்து, செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம், செவ்வானம் போன்ற இடதுசாரிப் புனைவுகளையெல்லாம் அந்தக் காலத்திலேயே வாசித்து முடித்துவிட்டிருந்தேன்.

பின்னர் 14/15 வயதுகளில் வாசிகசாலையே இல்லாதுபோய், இடம்பெயர்ந்து மாலை நேரமாக இயங்கிய எம் பாடசாலையில் 'ஐன்ஸ்டீன் நடமாடும் நூலகம்' என்று நண்பர்களோடு சேர்த்து நடத்தியிருக்கின்றேன். நீண்ட வருடங்களின் பின் அண்மையில் ஒரு நண்பன் 'நீ நடத்திய நூலகத்தில் இருந்து கடைசியாக எடுத்த பெர்னாட் ஷாவின் ஒரு நூல் என்னிடம் இன்னும் இருக்கின்றதென்று சொல்ல, காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க என்னால் முடிந்தது. இப்போது பார்த்தால், நம் 14/15 வயதில் பெர்னாட் ஷாவையெல்லாம் அறிந்திருக்கின்றோம், வாசிக்க முயன்றிருக்கின்றோம் என்பது சற்று சிரிப்பைத் தரக்கூடியது. ஆனால் அதுவே உண்மை. ஒருவகையில் சிவரமணி ஒரு கவிதையில் சொல்வது போல 'எங்களுடைய சிறுவர்கள்/சிறுவர்களல்லாது போயினர்' என்கின்ற காலத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.


வையெல்லாம் சிரியாவில் தலைமறைவு நூலகத்தை வாசிக்கும்போது எனக்குள் தோன்றி மறைந்துகொண்டிருந்த நினைவுகள். இந்த இளைஞர்கள் யுத்தத்தின் நடுவில் கிட்டத்தட்ட 15,000 இற்கு மேற்பட்ட புத்தகங்களைச் சேகரிக்கின்றார்கள். இந்த நூலகத்திட்டத்தில் இணைந்த சிலர் பின்னர் இறந்துபோகின்றார்கள். சிலர் காயப்படுகின்றார்கள். இறுதியில் அரசின் நான்கைந்து ஆண்டு கடும் முற்றுகையின்பின், இறப்புகளும், பட்டினியும் வாட்டியெடுக்க, இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு அந்நகரம் சரணடையும்போது அவர்களின் எல்லாக் கனவுகளும் கலைந்து போகின்றன. ஆனால் புத்தகங்கள் கொடுத்த பெரும் நம்பிக்கைகளோடு 'இயல்பான' வாழ்க்கை தேடி வேறு நாடுகளுக்கு ஒவ்வொருவராகப் புறப்படுகின்றார்கள்.

இந்த நூலை இஸ்தான்(ம்)புல்லில் இருந்த ஈரானிய பின்புலமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளரான தெல்ஃபின் மினூய் எழுதியிருக்கின்றார். யுத்தகாலத்தில் இந்த நூலகத்தை நடத்திய இளைஞர்களோடு சமூகவலைத்தளங்களினூடாகத் தொடர்பில் இருந்திருக்கின்றார். எனவே பலவற்றை யுத்தங்களிடையே பதிவுசெய்கின்றார். தெல்ஃபின் சிரியாவுக்குள் ஒரு போதும் நுழையவில்லை. ஆனால் இந்த இளைஞர்களைப் பற்றியும், அவர்களின் கனவுகளைப் பற்றி அறிந்தபோது, உடனே இவற்றை எப்படியாவது ஒரு காலத்தில் நூலாகப் பதிவு செய்யவேண்டும், இந்த யுத்தகால இளைஞர்களின் வாழ்க்கை வெளியுலகத்திற்குத் தெரியவேண்டும் என்று தீர்மானிக்கின்றார். அதனால் நமக்கு இன்று அரிய புத்தகம் கையில் கிடைத்திருக்கின்றது.

தெல்ஃபின் இந்த இளைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் அதேநேரம் இஸ்தாம்புல்லின் மக்கள் மீது நடக்கும் குண்டுத்தாக்குதல்களையோ, பிரான்சில் அந்தக் காலப்பகுதியில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம், வாகனமோட்டி மக்களைக் கொன்ற அடிப்படைவாத இஸ்லாம் குழுக்களின் தாக்குதல்களையோ, பதிவு செய்ய ஒரு சிறுதுளி கூடத் தயங்கவில்லை. அதுவே இந்தப் புத்தகத்தை இன்னும் நமக்கு நெருக்கமாக்குகின்றது. ஆயுதமேந்தி ஓர் அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதென்பது வேறு, அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதென்பது வேறு என்பதை தெளிவாக இவ்வாறான சம்பவங்களை விருப்பு வெறுப்பின்றி அவர் பதிவுசெய்வதினூடாக நாம் காண்கின்றோம்.

நீங்களாக கற்பனை செய்யும் யுத்தம் அல்ல இது, அது போல இதை எளிதாக கறுப்பு/வெள்ளை என்கின்ற துவிதங்களுக்குள் அடக்கமுடியாது என்று தராயாவில் போருக்குள் நிற்பவர்களின் குரல்களை நாம் அறிகையில், யுத்தங்களின் நிமித்தம் உடனேயே ஒரு தரப்பின் சார்பில் நின்று நாம் பேசுவது எவ்வளவு அபத்தம் என்பதை அறிவதற்காகவேனும் இந்த நூலை - முக்கியமாக யுத்தம் பற்றி அறியாது, அதில் பாதிக்கப்பட்டவர்களின் மனோநிலை குறித்து சிறிதும் உணராது உடனே தமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப தீர்ப்பெழுதத் துடிப்பவர்கள்- நிச்சயம் வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரைப்பேன்.

******************
(பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்)

(Mar 20, 2022)