2019 இல் வெளிவந்திருக்கிற இளங்கோவின் முதல் நாவல் 'மெக்ஸிக்கோ'. மெக்ஸிக்கோவுக்கான ஒரு பயண அனுபவத்தைப் பதிவிறக்குவதுபோல் தொடங்கும் இந் நாவல், அதீதமாய்த் தென்படினும், உண்மையில் அது பதிவிறக்குவது * நவீன வாழ்வின் ஒரு முகத்தைத்தான். தன்னிலை ஒருமைப் பாத்திரமான 'நான்', அவர் மெக்ஸிக்கோவில் சந்திக்கும் ‘அவள்’, ஏற்கெனவே அவர் ரொறன்ரொவில் அறிமுகமாகிப் பிரிந்த துஷி, இறுதியாக கதையில் அறிமுகமாகும் மனநல வைத்தியர் ஆகிய நான்குமே நாவலின் பிரதான பாத்திரங்கள். 'நா'னும் 'அவ'ளும் நிறையவே ஓவியம், கவிதை, படைப்பெனப் பலவும்பற்றி , மிகவும் அறிவுஜீவித்தனமாகப் பேசிக் கொள்கின்றார்கள், தாம் வாசகரிடத்தில் போலியாகிக் கொண்டிருப்பதான பிரக்ஞையின்றி.
மெக்ஸிக்கோ - தேவகாந்தன்
In மெக்ஸிக்கோWednesday, November 30, 2022
மொழிவது சுகம் - நாகரத்தினம் கிருஷ்ணா
In சிறுகதை, In வாசிப்புMonday, November 21, 2022
'முள்ளிவாய்க்கால்' சிறுகதை, 'அம்ருதா' இதழ் நவம்பர் 2021
பிரமிளா பிரதீபனின் 'விரும்பித் தொலையுமொரு காடு'
In வாசிப்புSunday, November 20, 2022
நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், ஒரு நண்பர் அண்மையில் இங்கே (இலங்கையில்) வெளிவந்த நூல்களை நூற்றுக்கு மேலே நான் தரவுகளாக வைத்திருக்கின்றேன், ஆனால் யாரெனும் கேட்டால் அவற்றிலிருந்து ஒரு 10 நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கக் கடினமாக இருக்கின்றதென்றார். இலங்கையில் இருந்து எழுதுபவர்களின் நூல்களைப் பற்றிய என் வாசிப்பென்பது மிகவும் குறுகியது. இருந்தும் ஒரு சிலரின் நூல்களைச் சொல்லலாம் என்று உடனே எனக்கு ஞாபகம் வந்த ஒருவரின் பெயரைச் சொன்னேன். அதை மூன்றாவதான இன்னொரு நண்பர் தன்னை இந்தப் படைப்பாளி ஈர்க்கவில்லை என மறுத்துச் சொன்னார். ஆனால் அந்த உரையாடல் பிறகு வேறெங்கோ இழுபட்டு பொதுச்சூழலில் அதிகம் விவாதிக்கப்படும் எழுத்தாளர்களின் படைப்புக்களை விவாதிப்பதாக அது திசைமாறியது. நம் ஒவ்வொருத்தரின் விருப்பப்பட்டியலில் இருக்கும் பத்து இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பேசும் அந்த அரிய சந்தர்ப்பம் பின்னர் அம்மாலையில் நழுவிப் போயிருந்தது.
அப்போது நான் சொன்ன படைப்பாளி பிரமிளா பிரதீபன். அவரது அண்மைக்காலக் கதைகளைத்தான் நான் வாசித்திருந்தேன். பின்னர் இலங்கையில் கையில் கிடைத்த அவரது தொகுப்பான 'விரும்பித் தொலையுமொரு காட்டை' இப்போது முழுதாக வாசித்தபோதும், உதிரிகளாய் அவரின் கதைகளை வாசித்து நான் கண்டடைந்த வாசிப்பு அனுபவம் சரியானது என்பது இன்னும் உறுதியாயிற்று.
இலங்கையில் இருந்து இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய படைப்பாளியாக பிரமிளாவை நான் சிறுகூட்டமாய் இருந்த நண்பர்களுக்குச் சொன்னதை இப்போது பொதுவிலும் முன்வைப்பேன். இத்தொகுப்பில் 11 கதைகள் இருந்தாலும், ஆகக்குறைந்தது 5 கதைகளை எடுத்து விரிவாக நாம் பேசுவதற்கான ஆழமும், வெளியும் இவற்றில் இருக்கின்றன. இலங்கையில் இருந்து எழுதும் - முக்கியமாய் பிரமிளாவுக்கு முந்தைய தலைமுறையினர்- பலரைப் போல நேரடி யதார்த்தப்பாணியில் எழுதுவதை முற்றிலுமாக விலத்தி, ஒரு கனவு தன்மையில் இருந்து பிரமிளா பல கதைகளைச் சொல்வது என்னை வசீகரிக்கச் செய்திருந்தது.
சில கதைகளில் வான்கோ, ப்ரைடா, டாலி ('ஜில் ப்ராட்லி'), க்ளாட் மொனே ('கமீலோ டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள்') போன்றவர்களை அழைத்துக் கொண்டது மட்டுமின்றி, கதையின் பாத்திரங்களின் பின்னணியில் இவர்களைத் துருத்தலின்றி இயல்பாகவும் கொண்டுவரவும் செய்கின்றார் என்பது பிடித்திருந்தது. ஒரு கதை, அந்தக் கதைக்குள் வேறு கதைகள்/உசாத்துணைகள் என்று வாசகர்களை அலைந்து பார்க்க வைக்கும் இன்னுமின்னும் வெளிகளை பிரமிளாவின் கதைகள் பெருக்கியபடி இருக்கின்றன.
பிரமிளாவின் கதைகளில் நான் முக்கியமாய் அவதானித்தது, ஏற்கனவே இவ்வாறான பின்னணியில் கதைகள் சொல்லப்பட்டிருந்தாலும், அவர் இந்தப் பின்னணியை வேறு விதமாக அணுகிப் பார்க்கின்றார் என்பதேயாகும். அத்துடன் அவருக்கு இந்தத் 'தெரிந்த' விடயங்களைச் சுவாரசியமாக சொல்லும் ஒரு மொழியும் இயல்பாய் அமைந்திருக்கின்றது.
கடந்தமுறை இலங்கைக்கு வந்தபோது ஒரு எழுத்தாளரின் கதைத்தொகுப்பு ஒன்று பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் அதை ஆவலுடன் வாங்கி வாசித்தபோது இப்படி நேரடியாகச் சொல்லப்பட்ட கதைகளையா இவ்வளவு விதந்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று யோசித்தேன். அவ்வளவு எளிமையான கதைகள்; வாசிப்பவரை மேலும் யோசிக்காமல் எல்லா வெளிகளையும் அடைத்து விட்ட தொகுப்பு அது.
இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஒரு அரசமரமும் சில வெளவால்களும்', 'இது புத்தனின் சிசுவல்ல' வேறு தளங்களில் நிற்கும் கதைகளாக தம்மை ஆக்கிக்கொள்கின்றன. அதுபோல 'நீலி'யும், 'விரும்பித் தொலையுமொரு காடும்' ஒரு கட்டுரையாகிவிடும் ஆபத்தும் இருக்கின்றன. அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களின் உள்ளக்கிடக்கையை பதிவு செய்யும் விருப்பம் அதிகம் பிரமிளாவுக்கு இருந்தபோதும், அந்த உளப்பதிவு கட்டற்றதன்மையில் நிகழவிடாது நிறுத்திவிடும் தவிப்பும் இந்தக்கதைகளில் வெளிப்படும்போது அது தன்னியல்பிலே நிகழாது விடுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். மேலும் ஒரு தொகுப்பில் பரிசோதனைகளைச் செய்துபார்த்த கதைகள் என்று இவற்றை எடுத்துக் கொண்டு, நாம் கடந்து போய்விடலாம்; அஃதொரு பிரச்சினையுமில்லை.
அதேவேளை, சமகாலத்தில் ஒற்றைத்தன்மைக்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ளாதும், வாசகருக்கு கதைகளை வாசித்துமுடித்தபின்னரும் மேலும் சிந்திப்பதற்கான வெளிகளைக் கொடுத்தபடியும், மொழியை வசீகரமாய் வெளிப்படுத்தியபடியும் கதைகள் எழுதும் பிரமிளாவை இன்றைக்கு தமிழ்ச்சூழலில் ஒரு கவனிக்கத்தக்கதொரு படைப்பாளியாக முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கங்களுமில்லை.
********
(Oct 11 ,2022)
சாந்தனின் 'சித்தன் சரிதம்'
In வாசிப்புThursday, November 17, 2022
சாந்தன், எங்கள் வீட்டு நூலகத்திலிருந்த 'ஒரே ஒரு ஊரிலே' என்ற நூலின் மூலந்தான் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். அப்போது எனக்கு 11/12 வயதாகியிருக்கக் கூடும். எனவே அந்த வயதுக்குரிய விளங்கா வாசிப்பினூடாக அவரைக் கொஞ்சம் வாசித்திருந்தேன். பொறியியலாளராக கட்டுப்பெத்தையில் கல்வி கற்று, கொழும்பில் வேலையும் செய்த சாந்தன் 1977 இனக்கலவரத்தோடு யாழுக்குத் திரும்பினார். அதன்பிறகு யாழை விட்டு இன்றும் வெளியேற விரும்பாத ஒருவராக அவர் இருக்கின்றபோதும், அன்றைய சோவியத்து ஒன்றியம், கென்யா போன்றவற்றுக்குப் போயிருக்கின்றார். அந்தப் பயண அனுபவங்களை விரிவாக எழுதி நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார். யாழில் நடைபெற்ற என் புத்தக வெளியீடொன்றுக்கும் வந்திருந்தவர்.
'சித்தன் சரிதம்' என்பது நாவலெனச் சொல்லப்பட்டாலும் அது இன்னொருவகையில் சாந்தனின் auto fiction என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். சித்தன் என்ற பாத்திரத்தினூடாக அவரின் அரிவரி வகுப்பிலிருந்து யாழ் வெளியேற்றம்/மீள் குடியேறுதல் வரை கிட்டத்தட்ட ஒரு 50 வருடங்களில் தன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார்.
இந்த 50 வருடக் காலத்தில் இலங்கையில் முக்கியமாக யாழ் மண்ணில் நடக்கும் அரசியல் மாற்றங்களை மேலோட்டமாகவும், அதைவேளை தனிமனிதர் ஒருவரை அது எப்படி பாதிக்கின்றதென்பதை ஆழமாகவும் சாந்தன், சித்தன் என்ற பாத்திரத்தினூடாக எழுதிச் சொல்கின்றார்.
இந்த நாவலில் வரும் சித்தனும், அவரது நண்பரான செகம் எனப்படும் செகராஸ்வரனும் சந்திக்கும் ஒரு நிகழ்வைக் குறிப்பிடவேண்டும். 90களில் வெளியுலகம் முற்றாகத் தடைப்பட்ட காலத்தில் இருவரும் புத்தகங்களைத் தேடித்தேடி பழைய புத்தக கடைக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். இத்தனை புத்தகங்களை யாழ்ப்பாணத்தவர் வாசித்திருக்கின்றனரோ என்று சித்தன் வியந்தாலும், அவருக்கு யாரோ விட்டுப்போன புத்தகங்களை இந்தப் புத்தகசாலையில் விற்கப்பட வாங்குவதில் தயக்கமிருக்கின்றது. செகம் தான், நாங்கள் வாங்கவிட்டால் வேறு யாரோ வாங்குவார்கள் இல்லாதுபோயினும் வீணாய் அழிந்துபோகும் என்று சித்தனின் குற்றவுணர்வைப் போக்குகின்றார்.
அப்படியான பொழுதில் தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' வாங்குகின்றார். ஏற்கனவே அதைத் தொடராக கல்கியில் வந்தபோது சித்தன் வாசித்திருந்தபோதும், நூலாக இப்போது வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டுசெல்கின்றார். அதன் முதல் பக்கத்தைத் திறந்தவுடன், 'என்னில் பாதியான என் பாசமிகு மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், 82'ம் ஆண்டு என எழுதப்பட்டிருப்பதைக் கண்டவுடன் சித்தன் பதறிப்போகின்றார். எவ்வளவு அந்தரங்கமான புத்தகமிது, இதை எப்படியாயினும் அவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அனுப்பிவைத்துவிடவேண்டுமென சித்தன் அவதிப்படுகின்றார்.
தன் மனைவிக்கு புத்தகம் கொடுக்கும் ஒரு கணவன் எப்படியிருப்பான். அதுவும் தி.ஜாவின் 'அன்பே ஆரமுதே' கொடுத்தவன் எவ்வளவு உயர்ந்தவன். மனைவியும் அப்படிப் புத்தகம் கொடுத்திருப்பாளா? அவர்களுக்கு இப்போது பிள்ளைகள் இருப்பார்களா? அவர்களுக்கும் புத்தகங்களி இந்தத் தம்பதிகள் பரிசளிப்பார்களா? எவ்வளவு உன்னதமான குடும்பம்? இப்படி நமக்கு வெளித்தெரியாமல் எத்தனைபேர் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்கள்?' என்று சித்தனின் சிந்தனை பல்வேறு திசைகளுக்குப் போகின்றது. ஒரு பழைய புத்தகம் எத்தனை நினைவுகளை ஒருவருக்கு அருட்டிவிடுகின்றது. இந்தப் புத்தகம் இப்படி பரிசளிக்கப்பட்டிருபதன் மகிமையால் அதை பிறபுத்தகங்களோடு சேர்த்து வைக்காமல், தனக்கென்று தனது அப்பு தந்த புத்தகங்களோடு இந்தப் புத்தகத்தை வைத்து அதற்கொரு மதிப்பளிக்கின்றார்.
இதை வாசிக்கும்போதுதான் நாங்கள் புலம்பெயர்ந்தபோது சங்கானை வரை கொண்டு போயிருந்த நூற்றுக்கணக்கான நூல்களை இறுதியில் அங்கே விட்டுவிட்டு வந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அங்கே எந்தக் கவனிப்பின்றி கரையான்கள் அரிக்கின்றது என்று கேள்விப்பட்டு நாங்கள் படித்த பாடசாலையினர் வந்து எடுக்கச் சொன்னபோது, அவர்கள் எடுத்தும் மிஞ்சிய புத்தகங்கள் வீணாய்ப் போயிற்றன எனப் பின்னர் கேள்விப்பட்டிருக்கின்றேன். அப்படியாயின் நான் சிறுவயதில் வாசித்த சாந்தனின் 'ஓரே ஒரு ஊரிலே', 'கிருஷ்ணன் தூது' போன்றவை அடையாளமின்றிப் போயிருக்குமா அல்லது யாரினதோ சேகரத்தில் இன்னுமிருக்குமா என்ற யோசனையும் சடைத்து வளர்ந்தது. ஒரு தனிநபர் அனுபவம் பொது உணர்வாக மாறி வாசிப்பவரையும் தனக்குள் உள்ளடக்குவதல்லவா கலை?
இந்த நாவலின் முதற்பகுதியை இன்னும் செம்மை செய்து சிலவற்றை சுருக்கியிருந்தால் இந்த நாவல் வாசிப்பின் தொடக்கத்தில் அலுப்படைய வைத்திருக்காது. ஆனால் பிற்பகுதியில் அது வாசிப்பில் சோர்வைத் தராமல் தன்னை மாற்றியமைத்து வேகமெடுத்துச் செல்வதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த நாவலை சாந்தன் 1997-1998 காலப்பகுதியில் எழுதி முடித்துவிட்டார் என்று குறிப்பிடுகின்றார். கையெழுத்துப் பிரதியில் இருந்ததை நூலாக மாற்ற இவ்வளவு காலத்தை அது எடுத்திருந்தாலும் இன்றும் காலத்தில் பிந்தங்காது வாசிக்கவேண்டிய பிரதியாகத் தன்னை முன்வைப்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டிய விடயம்.
நான் சாந்தனை அசோகமித்திரனின் வழிவந்த ஒருவராக நினைத்துக் கொள்பவன். தனது சிறுகதைகளுக்கும் அதிக பக்கங்களை விவரிக்க எடுக்காது சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொல்லி முடிப்பவர். அத்துடன் ஒரு தேர்ந்தெடுத்த மொழியையும் தனதாகக் கொண்டிருப்பதால் வாசகராகிய நமக்கு அவரின் கதைகளை வாசிக்கும்போது அலுப்புத் தெரிவதில்லை. இன்று சட்டென்று பிரபல்யமாகிவிட்ட குறுங்கதைகளை அவர் 1970களில் எழுதி, எஸ்.பொவின் முன்னுரையுடன் 'கடுகுக்கதைகள்' என்று வெளியிட்ட ஒரு முன்னோடியுங்கூட.
00000000000000
(Dec 21, 2021)
பிரியா விஜயராகவனின் 'ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்'
In வாசிப்புTuesday, November 15, 2022
1.
பிரியா விஜயராகவனின் முதல் நாவலான 'அற்றவைகளால் நிரம்பியவள்' தமிழில் மிக முக்கியமான நாவல். இற்றைவரை அது குறித்து பரவலாக உரையாடல் நிகழ்த்தப்படாமல் இருந்தாலும், அது ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யைப் போல இனி வருங்காலங்களில் செவ்வியல் பிரதியாக மாறிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுபோல பா.கண்மணியின் 'இடபமும்' தமிழில் தனக்குரிய இடத்தை விரைவில் எடுத்துக் கொள்ளும்.
இந்த இரண்டு புதினங்களும் தமிழில் இதுவரை சொல்லப்பட்ட கதைகளின் எல்லைகளை இன்னும் விரிவுபடுத்துகின்றன. புதிய களங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வதோடு மட்டுமின்றி, பல படைப்பாளிகளுக்கு கைவந்து விடாத மிகப்பெரும் விடுதலையுணர்வையும் இந்தப் பிரதிகள் வாசிப்பவர்க்குக் கடத்தி விடுகின்றன. இவ்வாறு விடுதலையுணர்வை வலிந்து திணித்து கவிதைகள் எழுதுபவர்களும், திரைபடங்கள் எடுப்பவர்களுமெனச் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு சர்ச்சைகளின் மூலம் தம்மை முன்னிறுத்துவதே முக்கியத்துவமே அன்றி, தமது படைப்புக்களின் மூலம் எதிர்முனையில் இருப்பவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருப்பதில்லை. ஆகவே தொடக்ககால சர்ச்சை/சலசலப்ப்புகளுக்கு அப்பால் அவ்வாறான படைப்புக்கள் வேறொரு தளத்துக்கு விரிந்து செல்வதில்லை.
பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளும்', கண்மணியின் 'இடபமும்' நம்மை முடிவுறாத உரையாடல்களுக்கு அழைத்துச் செல்கின்றன. இதுவரை ஆண்களால் கற்பனை செய்யப்பட்டு எழுதப்பட்ட பெண்கள் பற்றிய விம்பங்களைக் கலைக்கின்றன. எவ்வாறு நாம் மீண்டும் மீண்டும் பெண் பற்றிய கதையாடல்களைக் கட்டியமைத்தாலும், இந்தப் பிரதிகள் தொடர்ந்து குலைத்து குலைத்து அடுக்கியபடி இருப்பதால் இன்னமும் வசீகரிப்பதாகவும் இருக்கின்றன.
2.
'அற்றவைகளால் நிரம்பியவளை' தமிழில் மிக முக்கிய நாவலாக நினைக்கும் எனக்கு, தொடக்கத்தில் 'ஆட்டுக்குட்டியும், அற்புத விளக்கும்' அவ்வளவாக ஈர்க்கவில்லை. அற்புதமான படைப்பை எழுதிய பலரின் அடுத்த படைப்புக்கு வழமையாக நிகழக்கூடியதுதான் இது. ஏனெனில் வாசகர் ஏற்கனவே வாசித்துவிட்ட படைப்பை அடுத்துவரும் படைப்போடு அவரையறியாமல் ஒப்பிட்டுக்கொள்ளவே செய்வார். மேலும் அற்றவைகளால் நிரம்பியவள் போல பரந்த கதைப்பரப்பில் ஆட்டுக்குட்டியும் அற்புதவிளக்கும் நிகழ்வதில்லை. இதில் குறிப்பிட்ட சில பாத்திரங்களே வருகின்றன.
இன்னும் சொல்லப்போனால் ஒரு தாயுக்கும் மகனுக்குமான உறவைச் சொல்வதென்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் இந்தத் தாய் ஒற்றைப் பெற்றோராக (single mother) இருந்து இந்தக் கதையைச் சொல்கின்றார். முற்றிலும் புதிய நிலப்பரப்பான ஐரோப்பாவில் இருந்து வேலை செய்தபடி மகனைத் தனித்து வளர்க்கும் தத்தளிப்புக்களை எமக்குச் சொல்கின்றார்.
பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளில்' வரும் பெண் பாத்திரம் ஒரு சுதந்திரமான பெண். புதியவற்றை கண்டடைவதிலும் அனுபவிப்பதிலும் ஒருபோதும் தயங்காத ஒரு பாத்திரமே அற்றவைகளால் நிரம்பியவளான அஞ்சனா. ஆனால் இந்த நாவலில் வரும் பெண்ணோ அவள் விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட மனைவி/தாய் என்ற பாத்திரங்களுக்குள் அடங்கிவிடுபவளாகவும், அதேவேளை தனக்கான சுதந்திரத்தையும், தனிப்பட்ட வெளியையும் அடைவதில் திணறிக் கொண்டிருப்பவளாகவும் இருக்கின்றாள்.
இந்நாவலில் வரும் பெண் இரண்டு பெரும் சம்பவங்களால அலைக்கழிக்கப்படுகின்றாள். அவளுக்கு நெருக்கமான இருவரை கிட்டத்தட்ட இழக்கின்ற கையாலாகாத நிலைக்குச் செல்கின்றாள். ஒருவரை இறுதியில் என்றைக்குமாய் இழக்கின்றாள். இன்னொருவரை இறுதிக்கட்டம் வரை சென்றபோதும் காப்பாற்றிக் கொள்கின்றாள். தமிழ்ச்சூழலில் தனித்த பெற்றோராக இருந்து பிள்ளையை வளர்க்கும் -அதுவும் முக்கியமாய் புலம்பெயர்சூழலில் இருந்து- பெரும் பாரத்தையும், அவலத்தையும் எவரும் இந்தளவுக்கு விரிவாகச் சொன்னதில்லை. அது மட்டுமின்றி ஒரு பெண் கருவாவதிலிருந்து பெண்ணுறுப்பிலிருந்து பிள்ளை கிழித்து வெளியே வருவதுவரை இதில் மிக விரிவாக விபரிக்கப்படுகின்றது. நாமெல்லோரும் இப்படித்தான் பிறந்திருப்போம் என்றாலும் பிரியா இந்நாவலில் இதை அதன் வேதனையோடும், ஒரு புதிய உயிரைக் காணும் இனம்புரியா மகிழ்வோடும் எழுதும்போது நாம் நமது அன்னையரை ஒருகணமாவது நினைத்துப் பார்ப்போம். அவர்களை மானசீகமாகவேனும் நம்மை இந்தப் பூமியில் உலாவ விட்டிருப்பதற்காய் நன்றியுடன் அரவணைத்தும் கொள்வோம்.
இந்தப் புனைவை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தக் குறிப்பு அவ்வளவு தேவையற்றது. ஒரு நுட்பமான வாசகரால் அதை சொல்லாமலே புரிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமின்றி இந்த நூலில் இறுதி அத்தியாயத்தை புனைவுக்குள் சேர்க்காது, பிற்சேர்க்கையாக/பின்னிணைப்பாக இணைத்திருக்கலாம்
இற்றைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளும், குறிப்பிட்ட ஆளுமைகளின் நிழலுக்குள் நின்றும் எழுதப்படுபவையே அநேகமாய்ச் சிலாகிக்கப்படுகின்ற அவலச்சூழலுக்குள் பிரியா போன்றவர்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் எப்போது ஒரு நாவல் நம்மை அதற்குள் அசையாய்ச் சாட்சியாய் உள்ளிழுத்து தொடக்கத்திலிருந்து முடிவுவரை கூட்டிச்செல்கின்றதோ அது நல்லதொரு புனைவாக மாறிவிடுவதை எவராலும் தடுத்து விடமுடியாது. இவ்வாறான படைப்புக்களை காலம் தன் கரங்களால் மெல்ல மெல்ல ஏந்தி காலதீதத்திற்குள் அனுப்பிவைத்து விடுகின்றது.
பிரியாவின் இந்த நாவலை நான் வாசிக்கும்போது சில இடங்களில் கண்ணீர் கசிந்திருக்கின்றேன்; சட்டென்று புத்தகத்தை மூடி வைத்து நிர்மலமான வானத்தை வெறித்தபடி இருந்திருக்கின்றேன். இந்தளவு துயரங்களை சுமந்த அந்தப் பெண் பாத்திரத்தின் கரங்களை ஆதூரமாய்ப் பற்றியிருக்கின்றேன்.
இதைவிட ஒரு புனைவு வாசகருக்கு வேறென்ன வெகுமதியைத் தந்துவிடமுடியும்?
*******************************************
பதின்மூன்று உயிர்கள் (Thirteen lives)
In திரைமொழிThursday, November 10, 2022
2018 உலக உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றபோது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் உலகின் இன்னொரு மூலையில் நடந்ததைப் பலர் அறிந்திருப்போம். தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் 12 சிறுவர்கள் உதைபந்தாட்டம் முடிந்தபின், தமது பயிற்றுனருடன் ஒரு குகைக்குள் (Tham Luang cave) நுழைந்தபோது, சடுதியாக பெய்த மழையால் குகை நிரம்பி அவர்கள் மாட்டுப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட குகையின் நுழைவாயிலில் இருந்து 4 கிலோமீற்றர்கள் உள்ளே போயிருப்பார்கள்.
பெருவெள்ளத்தின் காரணமாக குகையின் உள்ளே எவரும் நுழைய முடியாது போகின்றது.. உலகின் சிறந்த நீரடி நீச்சல்காரர்களுடன், தாய்லாந்தின் சிறப்பு வாய்ந்த கடல்படையினரும் இணைந்து, இறுதியில் பத்து நாட்களுக்குப் பின்னரே சிறுவர்கள் இருக்கும் இடத்தைக் காண்கின்றார்கள்.
பத்து நாட்களுக்கு மேலே ஆகிவிட்டதால், உண்மையிலே இந்த நீரடி நீச்சல்காரர்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து இந்தச் சிறுவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என்றே நம்பியிருந்தார்கள். பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள ஒரு குழு, எந்த உணவும் இல்லாமல் 10 நாட்களாய், அதுவும் நிலத்தின் சமதரையில் அல்ல, அதைவிட கீழே 1000 அடிகளுக்குக் கீழே உணவும், சுவாசிப்பதற்கு ஒழுங்கான பிராணவாயும் இல்லாது தப்பிப் பிழைத்திருப்பது என்பது நிச்சயம் அதிசயந்தான்.
சிலியில் எண்ணெய் சுரங்கத்தில் 33 பேர் சிக்குப்பட்டு கிட்டத்தட்ட 70 நாட்களில் அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டபோதும், அவர்களுக்கான உணவு விநியோகம் விரைவில் கிடைத்துவிட்டது. இங்கே இந்தச் சிறுவர்கள் பத்து நாட்களுக்கு மேலாக குகையின் மேலாக வந்த மழைநீரை மட்டும் அருந்தியபடி தப்பியிருக்கின்றனர். அத்தோடு அவர்கள் தொடர்ந்து தியானமும் செய்து தம்மை மனதாலும் தளரவிடாது வைத்திருந்திருக்கின்றனர்.
அவர்கள் உயிரோடு இருந்தாலும் அவர்களை உயிரோடு காப்பாற்றிக் கொண்டு வரமுடியாது என்றே இந்தச் சிறந்த கடல் நீரோடிகள் நம்புகின்றனர். ஏனெனில் அவர்களாலேயே அந்த இடத்தை அடைய கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் எடுத்திருக்கின்றன. எவ்வித ஆழ்கடலோடும் அனுபவமற்ற சிறுவர்களை உயிரோடு கொண்டுவரமுடியாது என்று இவர்கள் நம்பிக்கை இழக்கின்றனர். குகைக்குள் இருக்கும் பிராணவாயும் குறைந்துகொண்டே போகின்றது. பருவமழைக்கான காலம அருகில் நிற்கின்றது. அப்படித் தொடங்கினால் வெள்ளம் மேலும் உள்ளே நுழைந்தால் அவர்கள் நிற்பதற்கே இடமில்லாதும் போய்விடும்.
இறுதியில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்களின் உதவியோடும், கிட்டத்தட்ட 17 நாட்டுக்கு மேற்பட்ட அனுபவம் பெற்றவர்களின் அறிவோடும் இந்தச் சிறுவர்கள் 18 நாட்களின் பின் காப்பாற்றப்படுகின்றார்கள். அதுகூட ஒரு சட்டத்துக்கு உட்பட்ட முறையால் அல்ல. எல்லாச் சிறுவர்களையும் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று ஒவ்வொருவராக- நீருக்குள் மயங்கியபடியே- இவர்கள் காப்பாற்றுகின்றனர்.
உள்ளூர்மக்கள் பல்வேறு குழாய்களை வைத்து மில்லியன்கணக்கான தண்ணீரைக் குகையில் இருந்து அகற்றுகின்றார்கள். அந்த தண்ணீரால் தமது விவசாய நிலங்கள் அழியும் என்று தெரிந்தும் அதைப் பாய்ச்சுவதற்கு தமது நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுக்கின்றார்கள். இவ்வாறு எல்லா மனிதர்களும் உதவி செய்ய அந்தச் சிறுவர்கள் அவர்களின் பயிற்றுனருடன் காப்பாற்றப்படுகின்றனர். இந்த மீட்புப்பணியின் இடையில் உதவச் சென்ற ஒரு தாய்லாந்து கடற்படைக்காரர் குகைக்குள்ளே இறக்கின்றார். இன்னொருவர் இந்நிகழ்வு நடந்த அடுத்த வருடம் இதனால் ஏற்பட்ட நோய்த்தொற்றின் மூலம் காலமாகின்றார்.
உண்மையிலே இந்நிகழ்வு ஒரு கூட்டு மீட்புப் பணி. மனிதர்கள் ஒன்று சேர்ந்தால் சாதிக்க எத்தனையோ அற்புத விடயங்கள் இருக்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். போரென்று வரும்போது அருகில் இருப்பவனையோ போட்டுத்தள்ளும் மனிதர்கள் இவ்வாறான மீட்ட்புப்பணிக்காய் உலகின் எங்கெங்கோ இருந்தெல்லாம் ஒன்று கூடுகின்றார்கள். சக மனிதர்களை தம் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றார்கள்.
இந்த நிகழ்வு நடந்தபோது நான் ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருந்திருக்கின்றேன். பிரேசில் பெல்ஜியத்திடம் தோற்றுவிட்டதென ஒரு கடல்நீரோடி முதன்முதலில் சிறுவர்களை உயிரோடு பார்க்கும்போது சொல்வார். அவர்களுக்கு அது பத்து நாட்களுக்குப் பின் வருகின்ற சிறு நம்பிக்கைச் சமிக்ஞை. எனக்கோ என் பிரியத்துக்குரிய உதைபந்தாட்ட அணி தோற்றுவிட்டதென்கின்ற அந்தக் கணத்தில் சற்றுக் கவலையோடு கடந்துபோகின்ற தருணம்.
இப்போது இதை மீள நினைக்கும்போதுகூட, ஏதேதோ எல்லாம் உலகின் இன்னொரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் அல்லவா?
*******************************
(Thirteen lives movie)
'அவ்வளவு வேகமாக நடக்காதே எல்லா இடத்திலும் மழைதான்'
In அனுபவம், In இன்னபிற, In வாசிப்புSunday, November 06, 2022
எனது குருவோடு
மழையில் நடக்கும்போது
அவர் சொல்வார்
'அவ்வளவு வேகமாக நடக்காதே
எல்லா இடத்திலும் மழைதான் '
- ஷுன்ரியு சுஸுகி (தமிழில்: க.மோகனரங்கன்)
பொழுது முழுதும் மழை பொழிந்து கொண்டிருக்கையில், கருமேகம் மூடிய பின்னணியில் விரியும் கோடையின் பசுமையில் இருப்பது உயிர்ப்பு.
காலையில் எழுந்தவுடன் மழையின் சாரல் கால்களில் படர, மேலே மூடிய ஊஞ்சலில் இருந்து மொட்டவிழ்த்துவிட்ட பூசணிப்பூக்களையும், அவரைப்பூக்களையும் பார்க்கையில் இந்த நாள் எமக்கே எமக்கானதென்று எளிதில் புரிந்துவிடும்.
காலம் நெகிழ்ந்து கரைந்துருக, எதுவும் செய்யாது அப்படியே அசையாது நடப்பதை அவதானிப்பதை, 'கோடை மலர மனது தளிர்க்கும் காலம்' எனவும் பெயரிட்டுக்கொள்ளலாம்.
தேய்வழக்குகளைக் கடந்துவர, தேய்வழக்குகளைப் பற்றிப் பேசிப் பேசித்தான் முதலில் கடக்கவேண்டும் என்று சொல்வதைப்போல, இதை எழுதும்போது தற்செயலாய் இளையராஜாவின் அந்திமழை பொழிகிறதின் பின்னணி இசை ஒலிப்பதையும் ஓர் உபகுறிப்பாய்ச் சேர்த்துவிடலாம்.
****
உலகின் இன்னொரு திசையில் இருப்பவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும்போது, மழை பெய்து தன்னை வாழ்த்துகிறதென மகிழக்கூடியவருக்கு, சற்று பின்னோக்கிப் பார்க்கும்போது தன் காலம் சிறிது விரயமாக்கிப் போய்விட்டதோ என்ற சிறுதுயர் அவருள் எட்டிப் பார்க்கிறது. தான் இன்று வந்து சேர்ந்த காலத்துக்கு, இளமையில் விளிம்பில் நின்று வாழ்த்திக்கொண்டிருக்கின்ற நானும், எனது நண்பரும் வந்துவிடுவோமென்று மறைமுகமாக நமக்கு அவர் உணர்த்துகிறார்.
'நீங்கள் வீணாக்கிவிட்ட காலமென்று நினைக்கின்றீர்கள், ஆனால் அதில் எதையோ நீங்கள் அடைந்திருப்பதால்தான் நாங்கள் உங்களைத் தேடி வந்திருக்கின்றோம்' என்கின்றேன்.
வீணடிக்கப்பட்ட வாழ்க்கையென்று எதுவுமே இல்லை. இன்னமும் வாழ்ந்து தீராத வாழ்க்கையொன்று இருக்கிறதென வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
இதே காலையில், புதிதாய் வந்திருக்கும் திரைப்படமொன்றை பார்த்துவிட்டு நண்பரொருவர் 'குரல் பதிவை' அனுப்புகிறார். 'இந்தப் படம் உனக்குப் பிடிக்கும், ஒருவகையில் நீ வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை, உன்னை இது நினைவுபடுத்தியது' என்றொரு செய்தி.
உண்மையில் நாங்கள் பிரமிப்புக்களைப் பார்ப்பதற்காய் நாம் வைத்திருக்கும் பிரமைகளை உடைத்துவிடவேண்டியிருக்கிறது.
நாங்கள் பிரமைகளை பிரமிப்புக்களாக நினைத்து, பிறரைப் பார்த்து ஏங்குகின்றோம். நம்மால் வாழ முடியாத ஒரு வாழ்க்கையென்று எதுவுமே இல்லை. நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்காத, பிறர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் மீது தொலைவிலிருந்து பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுவதும் இயல்பானது. ஆனால் அது நமது பிரமைகளே அன்றி வேறெதுவும் இல்லை.
நாம் வாழாத வாழ்க்கையிலும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையைப் போல தத்தளிப்புக்களும், மகிழ்வுறு தருணங்களும், சறுக்கிவிழும் பொழுதுகளும் இருக்கும். எனவே நமக்குக் கைகூடாதவை எல்லாம் அற்புதமானவை என்கின்ற பிரமைகளை விலத்தினால், நம் முன்னே இருக்கும் பிரமிப்புப்பான விடயங்கள் எளிதில் புலப்படும்.
****
வசந்தத்தில் வழமையாக மஞ்சளும், வெள்ளையுமான வர்ணங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளோடு புதிதாக செம்மஞ்சள் நிறத்தில் எனிப்படி ஒரு புதிய வண்ணத்துப் பூச்சி பறக்கிறது என யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? 'ஒநாய் குலச்சின்னத்தில்' மேய்ப்பர்கள் திறந்தவெளியில் இறந்தவர்களின் உடலை கைவிட்டுவர, மூன்றாம் நாளில் ஓநாய்கள் அவ்வுடலைத் தின்று எலும்புக்களை மிச்சம் வைத்தால் மட்டுமே நீத்தார் வானுலகு செல்கிறார்கள் என்று நம்பிக்கைக்கு நாம் குறுக்கீடு செய்யமுடியுமா? அல்லது திபெத்தியர்களின் ஒருபகுதியினர் இறந்தவர்களின் உடலை கழுகிற்கு காணிக்கை செய்வதன் மூலம், பறப்பவை எளிதாக நம் ஆன்மாவை வானுலகிறகு எடுத்துச் செல்லும் என்பதை எப்படி எப்படி தர்க்கரீதியாக நிரூபிப்பது. பறக்கும் ஓநாய்கள் இருக்கிறதென்று தீவிரமாக நம்பும் மொங்காலிய நாடோடிகளிடம் அப்படியில்லை என்று நிரூபித்து நாம் அடையப்போவது எதுவாக இருக்கும்?
வாழ்க்கை என்பதை நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளின் மூலமே கடந்துபோக விரும்புகின்றோம். அதற்கப்பால் வாழ்க்கையிற்கான அர்த்தங்களைத் தேடுவதன் மூலம் கண்டடைவது எதுவுமேயில்லை.
வேண்டுமானால் பிறரை/பிறதை அதிகம் தொந்தரவுபடுத்தாது ஒரு எளிய வாழ்வின் மூலம், வாழ்ந்துபோக முயற்சிப்பதை மட்டுமே நாம் செய்யக்கூடியது.
ஜெயமோகனின் காட்டில், நீலியின் மீது பித்து பிடித்தலைந்தது, எவருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்திடாத காட்டின் ஆதிக்குடிப்பெண்ணை அரிதாக சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்ற ஒருவன், ஏன் அவ்வளவு சாதாரண வாழ்வை இறுதியில் தேர்ந்தெடுக்கின்றான். சாதாரண வாழ்வை மட்டுமில்லை, தனது மாமா வாழ்ந்து, ஒரு அவலமான இறுதிமுடிவைச் சந்தித்த (கொலை) அதே வாழ்வின் பாதையில் ஏன் அவனும் பயணிக்க்கின்றான் என்பதில்தான் வாழ்வின் அவிழ்க்க முடியாத முடிச்சுக்கள் இருக்கின்றன.
காட்டின் அற்புதங்களைத் தரிசித்த அந்த ஒருவனுக்கு நேரில் முதன்முறை பார்க்கும் -பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும்- குறிஞ்சியைப் பார்த்தவுடன் வரும் வெறுமையை எந்தப் பெயரிட்டு அழைப்பது? குறிஞ்சிப்பூவைப் பார்த்தவுடன் நீலி மீதிருக்கும் அளவிறந்த நேசம் அவனுக்குள் சட்டென்று வடிந்துபோவதைப் போல நாம் நம் காதல்களின்போது பெரும்பாலும் உணராது கடந்து போயிருக்கமாட்டோமில்லையா?
இவ்வளவுதானாவென எழும் வெறுமையை இந்த மழையின் முன் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கும் புற்களைப் போல நாம் நம்மை முற்றாகக் கைவிட்டு வெளிவந்தாலன்றி இன்னொரு நாள் இனிதாக அமையப் போவதில்லை.
***
ஆக, அற்புதங்களை கண்டவர்களே சாதாரணத்திலும் மிகச் சாதாரணத்திலுமான வாழ்க்கையைப் பிறகொருகாலம் வாழும்போது, எளிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அற்புதங்கள் நிகழ்ந்துவிட கூடுமென்ற கனவுகளுடன் வாழ்வதிலென்ன குறைந்துவிடப் போகின்றது.
ஒரேநேரத்தில் மூன்று பெண்களால் தீவிரமாக நேசிக்கப்பட்ட ஒருவன் பின்னொருபொழுது அம்மூவரையும் கடந்து வந்திருப்பதையும் நானறிவேன். அவன் இவற்றிற்குப் பிறகும் காதல், எந்த அற்புதத்தை நிகழ்த்தப்போகின்றது என்று எண்ணினானோ தெரியாது. சிலவேளைகளில் நேசத்தின் மூலம் இறுதியாய் வந்தடையும் தாங்கமுடியா வெறுமையைச் சந்திக்கத்தான் அவன் இவற்றை உதறித்தள்ளி வந்தானோ, அதையும் நாம் அறியமுடியாது.
அது அவனது வாழ்க்கை. அவனது தெரிவு(கள்)!
இப்போது நமக்கு கருமேகங்கள் இழைத்த வானம் இருக்கிறது. பசுமை போர்த்திய கோடை இருக்கிறது. சொற்கள் மெளனத்தில் அமிழ்ந்த அமைதி இருக்கிறது. நேசிக்க மனிதர்கள் சிலர் அருகிலோ/தொலைவிலோ இருக்கிறார்கள்.
மேலும் வாழ்வதற்கு இன்னமும் மிச்சமாய் - கொஞ்சம் வாழ்க்கை,- புற்களில் தேங்கிய மழைத்துளிபோல இருக்கிறது.
'அவ்வளவு வேகமாக நடக்கவுந் தேவையில்லை, எல்லா இடத்திலும் அதே மழைதான். '
****************
புனைவுகளும், புனைவல்லாதவைகளும்..
In இன்னபிற, In வாசிப்புSaturday, November 05, 2022
சில நாட்களுக்கு முன் அபுனைவுகளை எழுதுபவரை விட, புனைவுகளை எழுதுபவர்களையே சமகாலத்தில் மதிக்கின்றார்கள் என்கின்ற ஒரு பதிவை வாசிக்க நேர்ந்திருந்தது. கடந்த தலைமுறையினர் பிற படைப்பு/படைப்பாளிகள் பற்றி நிறைய விமர்சித்து உரையாடி வந்தவர்கள், இப்போதைய புதுத்தலைமுறை தன் புனைவுண்டு தானுண்டு என்கின்ற மாதிரி அதில் எழுதப்பட்டிருந்தது. இன்றல்ல, அது ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழில் காத்திரமான விமர்சனத் தலைமுறை இல்லாமற்போய்விட்டது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மையே.
ஆனால், அந்தப் பதிவின் தொனியே புனைவு எழுதினால்தான் இனிக் கவனிப்பார்கள், இனி அபுனைவு எழுதி எல்லாம் நேரத்தை வீணாக்கத் தேவையில்லை என்கின்ற ஒரு சுயபச்சாபத்தின் சாயல் தெரிவதால், இங்கே சிலதை எழுதலாமென நினைக்கின்றேன்.வாழ்க்கையில் நாம் சுயபச்சாபத்திற்குள் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாம் அறிந்தோ/அறியாமலோ போகும் சுயபச்சாபத்தை வாழ்வில் ஒருவகையில் தவிர்க்கவும் முடியாது. ஆனால் எழுத்தில் சுயபச்சாபம் எழுவதை இயன்றளவு என்னைப் பொறுத்தவரை தவிர்க்க விரும்புவேன். நான் கவிதைகள் நிறைய எழுதி இலக்கியத்தில் நுழைந்த தொடக்க காலத்தில் இனி கவிதைகளை வாசிக்கமாட்டார்கள் என்கின்ற தொனி ஒலித்துக்கொண்டிருந்தது.
அப்போது இப்போது போல நாவல்கள் அல்ல, சிறுகதைத் தொகுப்புக்களே முக்கிய பேசுபொருளாகவும் இருந்தது. ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் கவிதைகள் குறைந்துவிட்டனவா? ஒவ்வொரு ஆண்டும் வெளிவருகின்ற நூல்களில் கவிதைத் தொகுப்புக்களை மிஞ்சுகின்ற வேறேனும் வகைமை இருக்கின்றனவா என்ன?
ஏன் இப்போது நமது வாசிப்புக்களை ஆக்கிரமித்துக்கொண்ட முகநூல்/இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தளங்களில் கூட, அதிகம் மேற்கோள் காட்டப்படுகின்ற வகையாக கவிதைகள்தானே இருக்கின்றன. ஆக ஏதோ ஒருகாலத்தில் ஏதோ ஒரு வகைமை 'பேசுபொருளாக' இருக்கின்றது என்பதற்காக 'ஊரோடு ஒத்தோடவேண்டும்' என்பது இலக்கியத்துக்கு ஒருபோதும் உதவாது. அப்படி இருந்தால் அது இலக்கியமுமில்லை.
அங்கீகாரத்துக்கும், பிரபல்யத்துக்கும் மட்டுமே இலக்கியச் சூழலுக்கு வந்திருப்பதாக ஒருவர் நினைத்தால், இதைவிட உருப்படியாகச் செய்ய எத்தனையோ காரியம் இருக்கின்றன எனச் சொல்வேன். நமது நாளாந்தங்களிலிருந்து இருந்தும், வாழ்வின் அர்த்தமின்மைகளிலிருந்தும் ஏதோ ஒருவகையில் நம்மை ஆற்றிக்கொள்ள புகலிடமென வரும் இலக்கியத்திலும், எழுத்தை ஒரு 'கச்சா'ப் பொருளாகக் கொண்டு நுகர்வோரைப் பற்றி அக்கறை கொள்வதால் நமக்கென நிம்மதி வந்துவிடப்போகின்றது.
தமிழ்ச்சூழலில் எப்போதும் அபுனைவுகளை விட, புனைவுகளே பரவலாகப் பேசப்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்தே நம்மில் பலர் அபுனைவுகளை எழுத வருகின்றோம். புனைவுகளோடு அபுனைவுகளை ஒப்பிட விருப்பமில்லையெனினும், அவையவைற்றுக்கென ஒருவகையான உழைப்பு இருக்கின்றது. புனைவு எழுதுகின்ற ஒருவருக்கு அபுனைவுகளை வாசித்து வருகின்றதால் வரும் படைப்புவெளி விசாலமாக இருக்கும் என்பதை நாம் அவர்களின் புனைவுகளை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் உணர முடியும்.
எல்லோருக்கும் சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கும். ஆனால் அதை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் சொல்ல இந்த அபுனைவு எழுத்துக்கள் நிச்சயம் வளம் செய்யும். மேலும் அபுனைவுகளை எழுதும்போது நம்மால் நிறையக் கருத்துக்களைத் தொகுத்துத் திரட்டிச் சொல்லமுடியும். அது நாம் புனைவாக எதையேனும் எழுதும்போது நிச்சயம் ஒற்றைப்படையாகச் சொல்லாது வாசகருக்கு விரித்துச் சொல்லும் பல்வேறு பாதைகளைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.
மேலே சொல்லப்பட்ட கட்டுரையில் அசோகமித்திரன் அதனால்தான் அபுனைவுகளைக் கைவிட்டு, இறுதிவரை கதைகளாக எழுதிக் குவித்தவர் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை அ.மியிற்கு முன்னர் கணையாழி இருந்ததைப் போல அவருக்கு ஒரு பத்திரிகை, இவ்வாறு எழுத பிற்காலத்தில் இல்லாததாலேயே அப்படி எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் அ.மிக்கு பத்திகள் எழுத எவ்வளவு விருப்பமிருந்தது என்பதை நாம் அவரது பத்தி எழுத்துக்களினூடு அவதானிக்கமுடியும். அபுனைவு எழுத்துக்கள் சிலவேளைகளில் எழுதும் காலங்களில் அவ்வளவு முக்கியம் பெறாதுபோனாலும் பிற்காலத்துச் சந்ததிக்கு அது நிச்சயம் உதவும்.
நான் எஸ்.பொவின் 'தீ' பற்றி வாசித்து அந்தக் காலத்தில் என்ன வகையான எதிர்வினைகள் நிகழ்ந்திருக்குமென்று பார்ப்பதற்கு எனக்கு அன்றையகாலத்தில் பிரமிள்-தளையசிங்கம்-எஸ்.பொ எழுதிய விமர்சனக்கட்டுரைகளே உதவியிருக்கின்றன. இன்றைக்கும் எஸ்.பொவின் புனைவுகளுக்கு நிகராக அவரது 'இனி' என்கின்ற அபுனைவுகளின் தொகுப்பை என் வாசிப்பில் முதன்மையாக வைத்திருக்கின்றேன். மேலும் அசோகமித்திரன், எஸ்,பொ, அ.யேசுராசா போன்ற பலர் எழுதிய பத்தியெழுத்துக்களின் தொகுப்பிலிருந்தே நான் வாழ்ந்தே பார்க்கமுடியாத இலக்கிய உலகின் போக்குகளைக் கற்றபடி இருக்கின்றேன். கடந்தகாலத்துக்குச் சென்று பார்க்க இவையே உதவுகின்றன.
ஏன் இன்றைக்கு சாரு நிவேதிதாவிற்கு வந்துசேர்ந்த வாசகர்களில் பலர் அவரின் கோணல்பக்கங்கள் என்கின்ற அபுனைவுகளின் தொகுப்பினூடாக வந்து சேர்ந்தவர்கள் என்றே நம்புகின்றேன். மேலும் இவ்வாறான அபுனைவுகள் அந்த எழுத்தாளரை மட்டுமில்லை, அவர் மேற்கோள் காட்டுகின்ற எத்தனையோ வேறு படைப்பாளிகளையும் நாம் கண்டைந்துகொள்ள முடிகிறதல்லவா? நான் கூட உயிர்நிழல்(?) சஞ்சிகையில் ராஜநாயகம் சாருவின் நூல்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையினூடாகத்தான் சாருவைக் கண்டடைந்தவன். இவ்வாறு ஒரு புது வாசகருக்கு இந்த அபுனைவுகள் தருகின்ற அனுபவங்கள் என்பது எண்ணிலடங்காதவை.
சென்ற வாரம் கொழும்பு புத்தகச்சந்தை நடந்தபோது குமரன் புத்தகசாலையில் அ.மார்க்ஸின் 'பின் நவீன நிலை' என்கின்ற 500 பக்கங்களுக்கு மேலுள்ள பெருந்தொகுப்பை கண்டவுடனேயே வாங்கிவிட்டேன். பில் போட்டுக்கொண்டிருந்தவருக்கு நான் அ.மார்க்ஸின் தொகுப்பை வாங்கியது சற்று ஆச்சரியமாக இருந்தது. அ.மார்க்ஸைத் தெரியுமா எனக்கேட்டார். அப்படியே அந்த உரையாடல் கொஞ்சம் போனது. இதையேன் சொல்கின்றேன் என்றால் எனக்கு புனைவுகளைப் போல, அபுனைவுகளை வாங்கி வாசிக்கவும் அதேயளவு ஆர்வம் இருக்கின்றதெனச் சொல்லவே!
கனடாவில் ஒரு நண்பர் இன்னொரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றார். அங்கே அனுக்கின் A Passage North அவரின் வீட்டில் இருந்திருக்கின்றது. அனுக்கின் புத்தகத்தை வைத்திருந்தவர் இதை மிக மெது மெதுவாகவே வாசிக்க வேண்டியிருக்கின்றது. அவ்வளவு கஷ்டமாக இருக்கின்றதெனச் சொல்லியிருக்கின்றார். எனது நண்பரோ, 'இளங்கோ ஏற்கனவே இதை வாசித்துவிட்டு அது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கின்றான்' என்று சொல்லியிருக்கின்றார். உண்மையில் அனுக்கின் இந்தப் புத்தகம் நிறையவே வாசிப்பு நேரத்தைக் கோரியிருந்தது. ஆனால் எனக்கு அந்தப் புத்தகம் பிடித்திருந்தது. அதைப் பற்றி எழுதவேண்டுமென்ற உற்சாகத்தை அந்தப் புத்தகமே தந்திருந்தது.
புத்தக விமர்சனம் எழுதினால் யாரேனும் நான் எழுதியதை வாசிப்பார்களா? அல்லது இந்த நேரத்துக்கு நான் எழுதி முடிக்கவேண்டிய நாவலுக்கு நேரத்தைக் கொடுத்திருக்கலாமென்றெல்லாம் எந்த யோசனையும் எனக்கு வரவில்லை. ஏனென்றால் எனக்கு அப்படி அதைப்பற்றி எழுதுவது பிடித்திருந்தது. அவ்வளவுதான்.
இப்படி அபுனைவை விட்டு புனைவுகளை எழுதுவதே சிறந்ததென்று சொல்லும் நண்பருக்கும் நான் சொல்ல விரும்புவது, உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள். ஆனால் இதுதான் இந்தக் காலத்தைய பேசுபொருள் என்று அதன் பின்னே சென்று வீணே உங்கள் நேரத்தையும் மனதையும் கஷ்டப்படுத்தாதீர்கள். அதனால் அடையப்போவது எதுவுமில்லை.
*************************
ஆனந்தப்ரசாத்தின் 'சொல்லப்படாத கதை'
In வாசிப்புThursday, November 03, 2022
1.
மனிதர்கள் எல்லோரும் ஒரு இதமான சூழலில் வாழ ஆசைப்படுகின்றோம். அந்தச் சூழலில் இருந்தபடியே நமக்கான அடுக்கடுக்கான கனவுகளைக் கட்டவும் தொடங்குகின்றோம். அந்தச் சுமுகமான சூழலும், கனவுகளும் சட்டென்று ஒருநாள் கலைக்கப்பட்டு விட்டால் என்னவாகும். இனவாதமும், அதன் நிமித்தம் கைதுசெய்தலும், சித்திரவதைகளும், நிலங்கள் சூறையாடப்படுவதும் நிகழ சொந்த நிலத்தில் இருந்து பல்வேறு கடன்சுமைகளுடன் தப்பியோடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவுகளே 'சொல்லப்படாத கதை'யாகும். கப்பலில் வேலை ஒன்று பெற்றுத்தருகின்றோம் என்று முகவரால் மும்பாயிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றவர் அதே முகவரால் கைவிடப்படுகின்றார்.
நாட்டு நிலவரத்தால் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகவும் முடியாது; பெற்ற கடனை விரைவில் திரும்பிக் கொடுக்கவும் வேண்டும். கப்பலுக்கென்று வேலைக்குப் போனாலும் கப்பலில் வேலை செய்த எந்த அனுபவமும் இல்லை.எப்படியோ ஒருமாதிரி இருக்கின்ற தகுதிகளை வைத்து கிறிஸிலிருந்து வியட்னாமுக்கு கோதுமை ஏற்றிச் சொல்லும் கப்பலில் இவருக்கு வேலை கிடைத்துவிடுகின்றது. இந்தச் 'சொல்லப்படாத கதை' கப்பல் கிரேக்கத்திலிருந்து வியட்னாமுக்கு சென்று, அங்கிருந்து திரும்புகின்ற அனுபவங்களைச் சொல்வதாகும்.
இவ்வாறான கப்பல்களில் வேலை செய்து, பயணித்த அனுபவங்களைச் சொல்லும் கதைகள் ஏற்கனவே சிலரால் பதிவு செய்யப்பட்டாலும், இந்த நூல் ஒரு புதிய திசையை நமக்குத் திறக்கின்றது. இதை எழுதிச் செல்கின்ற ஆனந்தப்ரசாத் தன்னை முழுமையாக எழுத்துக்குக் கொடுத்திருக்கின்றார் என்பதாலேயே இது எளிதாகச் சாத்தியமாகியிருக்கின்றது. புதிதாக ஒருவருக்கு ஏற்படும் கடல் அனுபவங்கள், பயிற்சியே இல்லாத ஒருவர் எப்படி கப்பலின் பணிகளைக் கற்றுக்கொள்கின்றார், 26 பேருக்கு மேலே இருக்கும் கப்பலுக்குள் மாதங்களாய்ப் பயணிக்கும் பணியாளர்களுக்கிடையில் ஏற்படும் நட்பும் முரணுமென எல்லாவற்றையும் அவ்வளவு விரிவாக எழுதிச் செல்கிறார் ஆனந்தப்ரசாத்.
இந்தக் கப்பல் பயணத்திடையே தாயகம் பற்றிய நினைவுகள் இடைவெட்டிப் போவதும் மிக அற்புதமாக விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாடகராகவும், வாத்தியக் கலைஞராகவும் இருந்து, நண்பர்களோடு புகைத்தலும், மதுவுமாக வாழ்வைக் கொண்டாடியபடி இருந்தவரை நாட்டு அரசியல் எங்கோ பெருங்கடலுக்குள் தூக்கி எறிகின்றது. ஒரு கழிந்துபோன அழகிய வாழ்வைச் சொல்கின்றபோது அதில் ஏக்கமிருந்தாலும், ஒருபோதும் அதைச் சொர்க்கமென சொல்லாது அந்த வாழ்வில் இருந்த எல்லாக் கசடுகளும் சேர்த்தே இங்கு சொல்லப்படுகின்றது. ஆனால் அதை மீறி இந்த வாழ்வு சுகிப்பதற்கேயென்று இந்த அனுபவங்களின் அடிச்சரடு நமக்கு நினைவுபடுத்தியபடியே இருக்கின்றது.
ஈழத்தவராகிய நமக்கு ஒரு துயர் இருக்கின்றதென்றால், கப்பலில் பணி செய்கின்ற சிங்களவர்க்கும், வட இந்தியர்க்கும், கிறிக்காரர்களுக்கும் வேறு வகையான துயரங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அந்நியோன்னியத்தை வளர்த்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்குள் ஏற்படும் முரண்களைக் கூட, ஏதோ ஒருகணத்தில் உடைத்து மன்னிப்புக் கேட்டு ஒருவரையொருவர் தோளணைத்துக் கொள்கின்றார்கள்.
2.
வியட்னாமில் கோதுமை மாவை இறக்கும்போது தொடர்ச்சியான போரால் அழிவுற்ற ஒரு வியட்னாம் நமக்குக் காட்டப்படுகின்றது. அமெரிக்கர்கள் ஆக்கிரமித்து தோல்வியுற்றுப் போனாலும் அவர்கள் தென்வியட்னாமில் வீசிய இரசாயனக்குண்டுகளின் நிமித்தம் மரங்களே வளராது நிலங்களைப் பார்த்து ஆனந்தப்ரசாத் கலங்குகின்றார். வறுமையும், போரின் அழிவுகளால் ஏற்பட்ட அவலங்களாலும் வியட்னாமிலிருந்து பலர் தப்பியோடுகின்றார்கள். அவ்வாறு தப்பியோடுகின்றவர்களுக்கு ஒரு முக்கிய இடமாக இவ்வாறான கப்பல்கள் இருக்கின்றன.
இந்தக் கப்பலில் வேலை செய்கின்ற ஒருவர் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கொடூரத்தைச் சொல்கின்றார். ஆஸ்திரேலியாவிலிருந்து வியட்னாமுக்கு உதவச் சென்ற தங்கள் கப்பலில் கழிவகற்றும் குழாயில் மறைந்திருந்து தப்பிவந்த ஒரு இளம் தம்பதிகளையும், அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் பிறிஸ்பேனுக்கு அண்மையில் கப்பலின் கழிவுகளை அகற்றும்போது அங்கே உயிரிழந்து போனதைக் கண்டு நெஞ்சு வெம்மி அதற்குப் பின் ஆஸ்திரேலியக் கப்பல்களில் பணி செய்வதை நிறுத்திவிட்டார் என்கின்றார்.
வியட்னாமியர்கள் இப்படித் தப்பினார்கள் என்றால் பின்னர் ஈழத்தமிழர், ஆபிரிக்கர்கள், சிரியாக்காரர்களென படகுகளிலும், டிராக்குகளிலும் நாடுகளின் எல்லைகளைத் தாண்ட முயன்று இறந்துபோனவர்கள்தான் எத்தனை பேர். இதை எழுதும் இன்றைய நாளிலும் அமெரிக்காவில் ஒரு டிரக் மூலம் தப்பிவந்த இலத்தீன் அமெரிக்க குடிவரவாளர்களில் 50 இற்கு மேற்பட்டவர்கள் இறந்த சோகமென இன்னமும் இவை முடிவுறாது நடந்தபடியிருக்கின்றன.
கடலிலேயே வாரக்கணக்காய் மிதக்கும் இந்தக் கடலோடிகளுக்கு நிலத்தின் அருமை நன்கு விளங்கும். அதைவிட கடலில் பெருமை நன்கு தெரியும். ஆகவே அவர்கள் ஒருபோதும் கடலை அவமதிப்பதில்லை. தரையில் காலவைத்தவுடன் இந்தக் கடலோடிகளுக்கு மதுக்களும், மாதுக்களும் தவிர்க்கமுடியாது பேரின்பத்தைக் கொடுப்பதாக மாறிவிடுகின்றன.. பல்வேறு முதல் முயற்சிகளுக்கு கரைதட்டும் நிலங்களே வாய்ப்புக்களை அள்ளிக் கொடுக்கின்றன.
வியட்னாமின் வறுமையை அறிந்த ஆனந்தப்ரசாத் உள்ளிட்ட சில நண்பர்கள் இரு வியட்னாமிய பெண்களுக்கு கப்பலில் அடைக்கலம் கொடுத்து சிங்கப்பூர்வரை கள்ளமாய்க் கடத்தி வந்து இறக்க முயற்சிக்கின்றனர். அந்தப் பயணத்தின்போது நிகழ்வதெல்லாம் ஒரு புனைவுக்குரிய சிறந்த பகுதிகள். அதேவேளை அந்தப் பெண்கள் தங்கள் நன்றியை உடலின்பமாக இந்தக் கடலோடிகளுக்குக் கொடுக்கின்றனர். வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓட்டம். ஓரிடத்தில் இறங்கிவிட்டால் அனுபவங்களின் சேகரம் குறைந்துவிடும். அந்தப் பெண்கள் இறங்கும்போது நமக்குள்ளும் ஒரு துயர் எட்டிப் பார்க்கின்றது. ஆனால் எப்படியெனினும் ஏற்கனவே வாழ்ந்ததைவிட நல்லதொரு வாழ்வை வாழ்ந்துவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை வருகின்றது.
இந்த நூலில் நம் பலருக்குப் தெரிந்திருக்கக்கூடிய (புதுவை) இரத்தினத்துரையின் இளமைக்கால நினைவுகள் விபரிக்கப்படுகின்றன. இரத்தினதுரை, ஆனந்தப்ரசாத் உள்ளிட்டவர்களின் நண்பர்களாக திருமலையில் இருந்திருக்கின்றார். இடதுசாரி நிலைப்பாட்டில் ஆதரவுள்ள, குடியும் கும்மாளமாகவாழ்வைக் கொண்டாடுகின்ற ஒரு இளைஞனான இரத்தினதுரை இங்கே அறிமுகப்படுத்தப்படுகின்றார். பின்னர் சிங்கப்பூரில் வேலை செய்யப்போகின்ற இரத்தினதுரையை ஆனந்தப்ரசாத் இறுதிவரை காண்பதேயில்லையெனினும் புதுவையாரின் இன்னொரு பக்கத்தை இதுவரை எவரும் இவ்வளவு உயிரோட்டமாக எழுதியதை நான் வாசித்ததில்லை என்பேன்.
இந்த நூல் ஒரு கப்பல் பயணத்தை விபரித்தாலும், இதை மிக முக்கியமாக்குவது இதனூடாக அது அன்றையகால ஈழ அரசியலை மிக நுட்பமாகக் கவனப்படுத்துவதாகும். இது தனியே தமிழர்கள் மீது பெரும்பான்மையினரால் ஏவப்பட்ட இனவாதத்தையோ, கிழக்கின் நிலங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றது என்பதையோ, அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த கிழக்கின் இளைஞர்கள் எவராலும் கவனிக்கப்படாது எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதையோ மட்டுமில்லாது, தமிழர்கள் தங்களுக்குள் எப்படி சாதியில் பிறரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதையும் நிச்சாமச் சம்பவங்களினூடாக பதிவு செய்கின்றது.
'ஆமிக்காரர்கள் எங்கள் நூலகத்தை எரித்தார்கள், ஆனால் அதற்கு முன் எங்கள் தமிழாக்களே எங்கள் ஊரை எரித்தார்கள்' என்று கப்பலில் சந்திக்கின்ற நிச்சாமத்து குலம் அண்ணை தன் கதையைச் சொல்கின்றபோது நாம் என்றுமே கடக்கமுடியாத கறையை எதிர்கொள்கின்றோம். இங்கே இவற்றையெல்லாம் எழுதிச் செல்கின்ற ஆனந்தப்ரசாத் எந்த உண்மையையும் மறைக்காது எழுதிச் செல்வதே இந்த நூலை மிகுந்த கவனம் பெறச் செய்கின்றது.
ஒரு நூல் தன்னியல்பில் செல்லாது, சிலதைத் தேவையில்லாது வலியுறுத்தும்போதும், வேறு சிலதை மறைக்கும்போதோ நமக்கு அந்த எழுத்து மீது கேள்விகளும், விலத்தலும் ஏற்பட்டுவிடும் ஆனால் இந்த நூல் நமக்குரிய மேன்மைகளைப் போலவே நம் கீழ்மைகளையும் விபரமாகப் பேசுகின்றது. அவ்வாறு நிச்சாமத்தில் ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடைபெற்ற ஆயுதப்போராட்டமே நம் காலத்தில் நிகழ்ந்த முதல் நியாயமான ஆயுதப்போராட்டம் என்பதையும் பதிவு செய்கின்றது. அதேவேளை ஒடுக்கப்பட்டவர்களில் இருந்த மூத்தோர்கள் சாதிக்கெதிரான இந்த ஆயுதப்போராட்டத்தை அவ்வளவு ஏற்றுக்கொள்ளவில்லையென்பதையும் நியாயமாகப் பதிவு செய்கின்றது. அவ்வாறு நிச்சாமத்திலும், கன்பொல்லையும் சாதிக்கெதிராகப் பதின்மத்தில் வெகுண்டு எழுந்தவனை பின்னொருபொழுது ஆனந்தப்ரசாத் சந்திக்கின்றார்.
அந்தப் பதின்மனை, இந்தச் சாதிக்கெதிரான போராட்டத்தைத்தாண்டி இன்னொரு பெரும் போராட்டம் இருக்கின்றதென இயக்கமொன்று போராடக் கூட்டிச் செல்கின்றது. அப்படிப் போகின்ற அந்த இளைஞன், 'அண்ணை மண்ணுக்குப் போராடப் போன என்னை, எங்கடையாக்களையே கொல்லச் சொல்கின்றாங்கள்' என்று வெறுத்து தப்பியோடி வந்து இன்னொரு கப்பலில் வேலைக்கு அவன் வந்து அமர்ந்திருக்கின்றான்..
இதைவிட நாம் கடந்தகாலத்தின் முரணை/அபத்தத்தை எளிதாகச் சொல்லிவிடமுடியுமா? இல்லை, இதை நேரடியாக ஒரு அரசியல் களத்தில் சொன்னால் தங்களின் தரப்புக்கென்று ஒரு அரசியலை மட்டும் வைத்து இன்னும் மற்றமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கேட்கவா போகின்றார்கள். ஆனால் இவ்வாறான எழுத்து அவர்களின் மனச்சாட்சிகளை, அவர்கள் வைத்திருக்கும் rigidஅரசியல் கூறுகெட்டதனங்களை சலனமடையச் செய்யக்கூடும்..
ஆகவேதான் நான் எப்போதும் கலை இலக்கியங்களினூடாக அரசியலைப் பேசுவதன் முக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றேன். எல்லாத் தரப்பையும் ஓரிடத்தில் நின்று யோசிக்க வைக்க நேரடியாக அரசியல் பேசுவதைவிட இவ்வாறான மாற்றுவடிவங்கள் அதிகம் ஈர்த்துக்கொள்ளும். அவ்வாறானவர்களில் திறந்தமனதோடு இருப்பவர்களை முரண் உரையாடலை நட்போடு செய்ய இது அழைக்கும். இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்பேன்..
ஆனந்தப்ரசாத் திருமலையில் இருக்கும்போது அவரின் சைக்கிள் அடிக்கடி பழுதாகும்போது ஒரு சைக்கிள் கடைக்காரரிடம் போவார். அவர் ஒரு சுவாரசியமான மனிதர். சிலவேளை ஆனந்தப்ரசாத்திடம் பணம் இல்லாதபோது ஒரு பாட்டைப் பாடுங்கள் எனக்கேட்டு சைக்கிளைத் திருத்திக் கொடுப்பார். அந்த சைக்கிள்காரர் பின்னர் அந்த இடத்திலிருந்து காணாமற்போய்விடுவார். அவரை ஆனந்தப்ரசாத் கிறிஸிலிருந்து மத்தியதரைக்கடலுக்கு வரும்போது எரிபொருள் நிரப்பும் படகில் காண்கின்றார். இருவரும் ஆரத்தழுவி பழங்கதைகள் பேசுகின்றனர்.
அந்த சைக்கிள்காரரை இலங்கை இராணுவம் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்கின்றது. அவரின் சைக்கிள்கடைதான் இளைஞர்கள் இயக்கங்களுக்குப்போவதற்கு மையமாக இருக்கிறதென்பது இராணுவத்தின் நம்பிக்கை. ஆனால் அவரோ அப்பாவி. இறுதியில் பூஸா வரை கொண்டுசெல்லப்பட்டு அவர் ஆண்குறியில் கம்பி செருக்கபட்டு, பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உண்மையிலேயே ஒரு இறுதியில் அப்பாவியென விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதற்குள் அவரின் வாழ்க்கை போய்விட்டது. உடல்சார்ந்த இன்பங்களில் இனி ஈடுபடவே முடியாத அளவுக்கு எல்லாமே நிகழ்ந்துவிட்டது. ஒரேயொரு நிகழ்வால் ஒருவரின் வாழ்வு சூறையாடப்பட்டு விடுகின்றது.. இப்படி எத்தனையெத்தனை அப்பாவி மனிதர்களின் வாழ்வு இல்லாமற் போயிருக்கின்றது.
இந்த சைக்கிள்காரரை காலம் உதறித் தள்ளிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் ஆனந்தப்ரசாத்தின் எழுத்தின் மூலம் அவர் நினைவுபடுத்தப்படுகின்றார். அதைத்தான் எழுத்து செய்யும். அதற்குத்தான் இவ்வாறான 'சொல்லப்படாத கதை'கள் தேவைப்படுகின்றன. சிலவேளைகளில் அதற்காகத்தானே நாம் வாசிக்கவும் எழுதவும் செய்கின்றோம் அல்லவா?
**************
கடல்புறாவும் பொன்னியின் செல்வனும் இன்னபிறவும்
In இன்னபிற, In வாசிப்புWednesday, November 02, 2022
1.
முகநூலில் ஏதேனும் காணொளிகளை நண்பர்கள் பார்க்க இணைப்பு அனுப்பும்போது, அது அடுத்தடுத்த காணொளிகளுக்குத் தாவிச் செல்லத் தொடங்கி விடுவதுண்டு. அவ்வாறு தற்செயலாக வாலியின் 80 வயது நிறைவில் அவரோடு பலர் உரையாடிய காணொளிகளைத் துண்டு துண்டுகளாகக் காட்டின. வாலியை நான் அவ்வளவாகப் பின் தொடர்ந்து சென்றவனில்லை. கண்ணதாசன் காலத்திலிருந்து கடைசிக்காலம் வரை வாலி அவருக்கான ஓரிடத்தை தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தவர் என்கின்ற மாதிரியான மேலெழுந்த தகவல்களே நானறிந்தவை. அவ்வப்போது அவர் வெகுசன இதழ்களில் எழுதிய கவிதைகள், அவை போன்ற கதைசொல்லல்களை வாசித்தபோதும் அவரைத் தொடந்து செல்ல வசீகரமான காரணங்கள் இருந்ததில்லை. மேலும் எமக்கு ஒருவர் மீது அதீத பற்றிருக்கும்போது அவரோடு போட்டியிடும் ஒருவரை தூர விலக்கிவைக்கும் மனோநிலையாகவும் இது இருக்கலாம். நான் என்னை ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தவனாகச் சொல்பவன். அவரின் இசைக்கு வைரமுத்துவே அன்றைய காலங்களில் நிறையப் பாடல்களை எழுதியதால் வைரமுத்துவைப் பின்தொடர்பவனுக்கு, வாலி அவ்வளவு ஆகாது போயிருக்கலாம்.
ஆனால் பிற்காலத்தில் எனக்குப் பிடித்த பாடலாசிரியர் வைரமுத்து என்பதை சின்மயி உள்ளிட்ட பெண்கள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்களால் கைவிட்டிருக்கின்றேன். அது வைரமுத்துக்கு மட்டுமில்லை, பாப்லோ நெரூடா வெள்ளவத்தையில் வைத்து ஒரு தமிழ்ப்பெண்ணுக்குச் செய்தததை 15 வருடங்களுக்கு முன் அறிந்தபோதும் அதுவரை பிடித்தமான நெரூடா எனக்குத் தொலைவில் போனதைக் கண்டிருக்கின்றேன். இதில் யார் சரி, அதையதை அந்தக் காலத்தில் வைத்துப் பார்க்கவேண்டும் என்கின்ற விவாதங்களுக்குப் போவது இரண்டாம்பட்சம். ஆனால் அவர்கள் என்னியல்பிலே என் விருப்பப்பட்டியலில் இருந்து உதிர்ந்து போய்விட்டார்கள். இன்றைக்கும் எனக்குப் பிடித்த வைரமுத்து எழுதிய ரஹ்மான் பாடலையோ, நெரூடாவின் கவிதையையோ பொது வெளியில் பகிரத் தயங்குபவனாகவே இருக்கின்றேன். நான் இவர்கள் மீது வைத்திருக்கும் தயக்கங்கள்/விமர்சனங்களை நன்கறிந்த நண்பர்களிடம் மட்டும் அவற்றைப் உள்வட்டத்திற்குள் பகிர்ந்துகொள்வேன். அவ்வளவே.
இந்த விலகல் இப்படி பிரபல்யம் வாய்ந்த நபர்களிடம் மட்டுந்தான் வருகின்றது என்பதில்லை. எனக்கு நேரடியாகவோ/ சமூக வலைத்தளங்கள் மூலமோ அறிமுகமான நண்பர்களைப் பற்றியும் இவ்வாறான விடயங்கள் சார்ந்து அறியும்போது என்னியல்பிலே விலகி வந்திருக்கின்றேன். அதற்காய் இவ்வாறானவர்களைப் போன்று ஆகும் agency என்னிடம் இல்லையென்றும் அர்த்தமாகாது.
வாலியின் காணொளியை துண்டு துண்டாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வாலி ஒரு குதூகலமான 'இளைஞராக' மட்டுமின்றி ஒரு genuine மனிதராகவும் தெரிந்தார். சிலரை நேரடியாகச் சந்திக்கும்போதோ அல்லது இப்படி காணொளியில் பார்க்கும்போதோ எந்தத் தயக்கமுமில்லாது தமது பலவீனங்கள் உட்பட எல்லாவற்றையும் தன்னியல்பிலே மனந்திறந்து பேசுவதைப் பார்க்கலாம். அவர்களே வாழத் தெரிந்த மனிதர்கள்; வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களை விளங்கிக்கொண்டவர்களென நினைப்பதுண்டு.
சர்ச்சைகள் வருவதற்கு முன்னர்கூட வைரமுத்துவை இப்படியொரு மனந்திறந்த மனிதராகப் பார்த்ததில்லை. அன்றைய காலங்களில் வைரமுத்து ஒருவிதமாக இறுக்கமான உடலையும், குரலையும் வைத்திருந்தபோது, எங்களாலேயே இதைத் தாங்க முடிவதில்லை.. அவரின் மனைவி பாவம் எப்படித்தான் தாங்குவாரோயென நகைச்சுவையாக எங்களுக்குள் பேசுவதுண்டு. எழுத்தில் கூட இப்படி தம் எழுத்தை தன்போக்கில் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் படைப்பாளிகள் இருக்கின்றார்கள் இல்லையா என்ன?
2.
சாண்டில்யனின் ஒரு தீவிர இரசிகர் என்பதால் கல்கி எதிர்முனையில் இருந்தார். சுஜாதாவின் சொற்ப படைப்புக்களை வாசித்ததுபோல கல்கியினதும் 'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' போன்றவற்றை வாசித்தேனே தவிர பொன்னியின் செல்வன் போன்றவற்றைத் தேடி வாசித்ததில்லை. பின்னரான காலங்களில் இதை வாசிக்க விரும்பியபோதும், அந்த மொழி நடையில் இருந்து விலகி வந்ததாலும் அதன் ஐந்து பாகங்களாலும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை.
என்னதான் பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் வாசித்தாலும், அது எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், எங்கள் சாண்டியல்னை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே நண்பரிடம் என்ன பொன்னியின் செல்வனின் ஒரு நல்ல யுத்த விபரணையும் இல்லைப் போலிருக்கின்றதே, எங்கள் கடல்புறாவைப் பாருங்கள், கடல்புறா கடலில் அதன் சிறகை விரிக்கும்போது வீரர்கள் அது கடலாக இருந்தாலும் எதிரிக்கலங்கள் மீது பாய்வார்கள், நாணேற்றி அம்புகளை எய்வார்கள், எரியம்புகளை அள்ளியெள்ளி வீசுவார்கள். உங்கள் பொன்னியின் செல்வனில் எல்லாமே சூழ்ச்சியும் வாதுமாக இருக்கின்றதே தவிர தமிழ் மறவர்களின் தோள் துடிக்கும் போர்க்காட்சிகளே இல்லை, அவமானம் என்றேன்.
இல்லை, இலங்கையில் அருண்மொழியும், வந்தியத்தேவரும் சண்டைபிடிக்கும் ஒரு காட்சி இருக்கின்றதென்றார். நானோ கடல்புறாவின் முதல் பாகத்தில் இளையபல்லவனும் காஞ்சனாதேவியும் கலிங்க மன்னனிடம் இருந்து தப்பும் ஒரு காட்சிக்கு இது கால் தூசிக்கும் வராதென்றேன். இளையபல்லவன் வாள் வீச, பாரசீக வீரன் அமீரும், சீன மறவன் அகூதாவும் துணையிருக்க, காஞ்சனாதேவி நாணேற்ற நடக்கும் சண்டைக்கு (அப்படி நடக்கும்போதுகூட நம் சாண்டில்யன் காஞ்சனாதேவியின் மார்புக்கச்சையை விபரிக்கும் இடம், தமிழ் மரபில் வீரமும் காதலும் இரண்டறக் கலந்திருப்பதை எப்படி இலாவகமாய்க் கொண்டு வந்திருக்கின்றார், கவனிக்க) கிட்டவாகக் கூட பொன்னியின் செல்வனின் ஒரு யுத்தகளத்தை உதாரணத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பொன்னியின் செல்வனை முழுதாக வாசிக்கின்றேன் என்றேன்.
இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு காஞ்னாதேவியும், மஞ்சளழகியும் சேர்ந்து வாழ்வை இரசித்த எங்கள் கருணாகரத் தொண்டமான் வேண்டுமா, இல்லை நந்தினிக்காக உயிரையை இழந்த ஆதித்த கரிகாலன் வேண்டுமா?
***********************
(Aug 04, 2022)