கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

‘வன்னி’ கிராபிக் நாவலை முன்வைத்து

Monday, June 30, 2025

 

 Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict  

 by Benjamin Dix & Lindsay Pollack

 

1.

வன்னி' (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கின்ற கிராபிக் நாவல் ஈழத்தில் நடந்த இறுதி யுத்ததைப் பற்றிப் பேசுகின்றது. செம்பியன்பற்றில் சூனாமியால்  2004 இல் பாதிக்கப்படும் ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த அன்ரனிதான் இதில் முக்கிய பாத்திரம். அவரின் குடும்பத்தினரும், அயலவரான சுஜி/நளாயினி குடும்பத்தினரும் செம்பியன்பற்றில் இருந்து பரந்தன், கிளிநொச்சி,விசுவமடு, No Fire Zone 1, No Fire Zone 2 என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை போவதுவரை இந்த நூல் விவரிக்கின்றது.

 

இதைக் கதையாக எழுதிய எழுதிய பெஞ்சமின், வன்னிக்குள் சூனாமி பேரழிவோடு சென்று, இறுதியில் யுத்த வலயத்துள் இருந்து வெளியேற்றப்பட்ட ஐ.நாவின் பணியாளராக இருந்தவர். அரச சாரபற்ற நிறுவனங்கள் வன்னிக்குள் இருந்து அரசால் கடைசியாக வெளியேற்றப்பட்ட 2008, செப்ரெம்பர் 16, காலை 10.45 எனத் துல்லியமாகச் சொல்கிறார் பெஞ்சமின். ஏனென்றால் அவ்வாறு வெளியேற்றப்பட்ட  இறுதிப் பணியாளர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கின்றார்

 

பெஞ்சமின் மீண்டும்  தனது சொந்தநாடு திரும்பியபோது, போரை நேரடியாகப் பார்த்ததால் PTSD யினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.  அந்தப் பாரத்தை ஏதோ ஒருவகையில் இறக்கிவைக்காவிட்டால், உளவியல் சிக்கலுக்குள் மூழ்கிவிடக்கூடுமென்ற அச்சத்திலே 'வன்னி'யை எழுதத் தொடங்கியிருக்கின்றார். 

 

பெஞ்சமின் கிளிநொச்சியில் இருந்து  பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, ஒரு கட்டுரையை போர் நடந்து கொண்டிருந்த அன்றைய காலத்தில் (2009) அநாமதேயமாக எழுதியிருக்கின்றார். அது அன்று தெல்ஹா (Telka) பத்திரிகையில்  'இரண்டு இராணுவங்களுக்கு இடையில்' (In between two armies) என்று தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுமிருந்தது.

 

பெஞ்சமின் வன்னிக்குள் நின்ற இறுதிக்காலங்களில் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சிலிருந்து தப்ப, பதுங்குகுழிக்குள் இருந்த நாட்களில் வாசித்த பாலஸ்தீனியம் (Palestine) பற்றியதும், யூதப் படுகொலை (Maus) பற்றியதுமான கிராபிக் நாவல்களே Vanni  நாவலுக்கு உந்துசக்தியெனச் சொல்கிறார்.

 

2.

அன்ரனியின் தகப்பனும், அன்ரனின் சகோதரனும் கொழும்பிற்குச் செல்லும்போது, 1983 இனக்கொலைகள் நடக்கின்றது. அதில் அன்ரனியின் தகப்பன் கொல்லப்பட்டு, அதிஷ்டவசமாக அன்ரனியின் சகோதரனான ரஞ்சன் தப்பி ஊர் திரும்புகின்றார். எனினும் படுகொலைகளை நேரடிச் சாட்சியமாகப் பார்த்த ரஞ்சன் ஒரு விடுதலைப்புலிப் போராளியாக மாறுகின்றார்.  ரஞ்சன் விடுமுறையின்போது வீட்டுக்குத் திரும்பும்போது அவரின் பெறாமக்களான மைக்கலும், தீபாவும் அவரோடு அன்பு பாராட்டுகின்றனர். போர் தீவிரமாகும் அன்ரனியின் பக்கத்து வீட்டு சேகரும் புலிகளின் இணைகின்றார். இவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடையும்போது இராணுவத்தால் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, கண்கள் துணியால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள்.

 

இவ்வாறே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட ரஞ்சனின் மனைவியின் சகோதரியான பிரியாவும், அவரது தோழியான கவிதாவும் (இவர்கள் இருவரும் புலிகளின் மருத்துவப்பிரிவில் வேலை செய்கின்றனர்) போரின் இறுதிக்கட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு 'காணாமற்' போகின்றனர்.

 

அன்ரனும் ரஞ்சனியும் காதலித்துத் திருமணம் செய்திருந்தாலும், வெவேறு சமூகப்பின்னணியில்  இருந்து வந்தவர்கள். ஈழநிலாவை அன்ரனின் தாயான ஈழநிலாவால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இவ்வாறு ஈழத்தில் சமூகங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளும் இந்த கிராபிக் நாவலில் சுட்டிக்காட்டப்படுவது முக்கியமானது. அன்ரனுக்கும் ரஞ்சனிக்கும் மைக்கல், தீபா என்கின்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். இறுதி யுத்தம் முடியும்போது இவர்கள் தமது குழந்தையான மைக்கலையும், பாட்டியான ஈரநிலாவையும் இழக்கின்றனர்

 

அன்ரனின் சகோதரரும் (ரஞ்சன்), மச்சாள் (பிரியா) புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இராணுவத்தில் சரணடைந்த அன்ரனை இராணுவம் கொடுமையான சித்திரவதைகள் செய்கின்றது. ஒரு கட்டத்தில் முள்வேலி முகாமில் தங்கியிருந்த அன்ரனின் மனைவியான ரஞ்சினியும், மகள் தீபாவும் இராணுவத்துக்கு -அவர்களின் உறவினர் ஒருவரால்- இலஞ்சம் கொடுக்கப்பட்டு முகாமிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றனர். அவ்வாறே ஒரு கட்டத்தில் மிகப்பெரும் பணம் கொடுத்து அன்ரனும் அகதி முகாமில் இருந்து வெளியில் தப்பிவருகின்றார்.

 

இவர்கள் பின்னர் கொழும்பிற்குச் சென்று, தமிழகத்துக்குத் தப்பிப் போகின்றனர். அங்கேயும் உரிய ஆவணம் இன்றி தமிழகப் பொலிஸின் கண்காணிப்பில் சிக்குகின்றனர். ஒருவழியாக அன்ரன் உறவினர் ஒருவரின் உதவியால் இங்கிலாந்துக்கு வந்து, தனது துயரக் கதையை இங்கிலாந்து குடிவரவு அதிகாரியிடம் சொல்கின்றார். இறுதியில் ரஞ்சனியும் தீபாவும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அன்ரனோடு சேர்வதோடு இந்த கிராபிக் நாவல் முடிகின்றது

 

அன்ரன் இப்போது இலண்டனில் வாகனச்சாரதியாக வேலை பார்க்கின்றனர். அவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவர் என அவரது காரில் ஏறும் பயணியொருவர் அறியும்போது, ‘இலங்கை நல்ல காலநிலையையும், அழகான கடற்கரைகளும் ஒரு நல்ல நாடு. நான் கூட விரைவில் இலங்கைக்குப் போக இருக்கின்றேன், நீ இலங்கைக்குப் போகவில்லையா என அந்தப் பயணி கேட்கின்றார். அதிலிருந்து அன்ரனின் கடந்தகாலக் கதை துயரக்கதை வாசகர்களாகிய நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றது

 

3.

ஈழப் போரின் கொடூரத்தைப் பதிவு செய்யவேண்டுமென சிறு காமிக்ஸ் புத்தகமாக 40 பக்கங்கள் அளவில் செய்யப் புறப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் கிட்டத்தட்ட 250 பக்கங்களில் கிராபிக் நாவலாக விரிந்திருக்கின்றது. இதை முன்வைத்தே பெஞ்சமின் தனது மானிடவியலுக்கான PhDயையும் செய்திருக்கின்றார். இந்த நாவலுக்காய், வரைபடக் கலைஞரான லிண்ட்சேயுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பியிருக்கின்றார். நாட்டின் நிலைமைகள் காரணமாக, 2012ல் இவர்கள் இருவரும் பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் அகதி மக்களோடும், பிறரோடும் கள ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். மேலும் இங்கிலாந்திலும், சுவிஸிலும், பிரான்சிலும், கனடாவிலும் போரில் தப்பிய ஈழத்தமிழர்களை இவர்கள் இந்த நாவல் தொடர்பாய்ச் சந்தித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் பாத்திரங்களாய் வருவதை, இலண்டனில் அன்ரனியின் கதையைக் கேட்கும் பக்கங்களில் நாங்கள் பார்க்க முடியும்

 

பெஞ்சமின் மீண்டும் 2017 இல் இலங்கை போய், அவர் பணியாற்றிய .நா கட்டட்டத்தை கிளிநொச்சியில் பார்க்கின்றார். போருக்கு முன்பும் பின்புமாக இருந்த வன்னியைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்த கிராபிக் நாவலின் பின்னிணைப்பாக பெஞ்சமின் எழுதியிருக்கின்றார். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அகதியும், தாங்கள் போருக்குள் இருந்ததைப் போன்ற பதற்றங்களோடே தமது அகதி மனுக்கோரிக்கைகள் ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என்று இருக்கின்றார்கள் என்ற தனது ஆய்வின் அடிப்படையை வைத்துச் சொல்கின்றார். அவ்வாறு அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற சிலரைக் கூட தான், இந்த நாவல் எழுதுவதன் பொருட்டு சந்தித்திருப்பதாகச் சொல்கின்றார்

 

மேலும் அன்ரனியைப் போன்று யுத்த்த்தால் பாதிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்க்கு அவர்களின் வாழ்வை மீண்டும் மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு எந்த வழிகளும் இல்லையென்கின்றார். இவர்கள், ஓர் அந்நிய கலாசாரத்தில், புதிய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதையும், அவர்களுக்கு பழக்கமற்ற அந்தந்த நாட்டு பண்பாட்டு விழுமியங்களை அறிந்து கொள்ள அவதிப்படுவது பற்றியும் பெஞ்சமின் இங்கே கவனப்படுத்துகின்றார். அன்ரனியைப் போன்றவர்கள் தமது இழந்த வீடுகளை மட்டுமல்ல, போரில் இறந்த தம் உறவுகள்/நண்பர்களின், நினைவுகளையும் தாங்கி உளவியல் சிக்கல்களில் இன்னமும் போர் முடிந்தபின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களென இதில் அடையாளப்படுத்துகின்றார்

 

பிபிஸியின் இலங்கைக்கான செய்தித் தொடர்பாளரான பிரான்ஸிஸ் ஹாரிசன், ஈழப்போர் தொடர்பாக 'Still Counting the Dead' என்ற நூலை எழுதியிருந்தார். அதன் அறிமுகநிகழ்வு கனடாவில் நடந்தபோது, பிரான்ஸிஸ், ஈழப்போரின்போது நடந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெவ்வேறு கலைவடிவங்களில் வெளிப்படுத்த முயற்சிக்கவேண்டுமெனக் கூறியிருந்தார். ஏனெனில் இந்த உலகுக்கு, நேரடிச் சாட்சிகளாய் நடந்தவைபற்றி புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் அறிய நிறைய இருந்தாலும், அங்கே நடந்த படுகொலைகள் பற்றி எவரும் அக்கறைப்படுவதாக காணவில்லை. எனவே நாம் வெவ்வேறு ஊடகங்கள்/தளங்கள் மூலம் வெளிப்படுத்த கவனம் செலுத்தவேண்டுமெனக் கூறியிருந்தார்

 

அந்தவகையில் இந்த 'வன்னி' என்னும் கிராபிக்ஸ் நாவல் வித்தியாசமான முயற்சி எனலாம். இதனூடாக போருக்கு முன்பான அமைதியான வாழ்க்கை மட்டுமின்றி, இறுதிப்போரின் உக்கிரமான ஒவ்வொரு காலகட்டமும் வரைகலை ஓவியங்களாக மாற்றப்பட்டு, மறக்கப்பட முடியாத நினைவுத்தடங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

 

***********

 

( நன்றி: 'எழுநா' - பங்குனி, 2025)

 

 

 

 

கார்காலக் குறிப்புகள் - 100

Sunday, June 29, 2025

 

சுவரொட்டிகளும், கதிர்காம வரலாறும்..
**********


காலையில் நடக்கும்போது ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். அது எங்கள் மாகாணத்தில் கொண்டுவரப்படும் சட்டமான Bill-5 எதிரான சுவரொட்டி. இங்குள்ள வலதுசாரிகள், பெரும் முதலாளிகளுக்கு 'சுதந்திர பொருளாதார வலயத்தை' அமைப்பதற்கான சட்டத்திருத்தம் இதுவாகும். இதன் மூலம் இந்த 'சுதந்திர பொருளாதார வலயம்' மாகாண சட்டங்களுக்கு உட்பட வேண்டியதில்லை. இதன் மூலம் காடுகளை அழிக்கவும், கனிமங்களைச் சுரண்டியெடுக்கவும் அனுமதி வழங்கப்படுகின்றது. இன்றைக்கு எமது மாகாணத்தில் இயற்கை வளங்கள் பெரும்பாலும் இங்குள்ள பூர்வீகக் குடிகளாலேயே காப்பாற்றப்பட்டு வருகின்றது. அவர்களிடம் கலந்துபேசாமல் இந்தச் சட்டசீர்திருத்தம் பெரும்பான்மையாக ஆட்சியமைத்த வலதுசாரிகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஈழத்திலிருந்து வந்த நமக்குச் சுவரொட்டிகள் எத்தகை மதிப்பு வாய்ந்தது என்பதை அறிவோம். அண்மையில் 'எழுநா' புத்தகமன்றத்துக்காக ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நாம் 70/80களில் வெளியிட்ட சுவரொட்டிகளை ஆவணப்படுத்தினாலே ஒரு பெரும் அரசியல் சித்திரம் தெளிவாகும் என்று சொன்னார். இவ்வாறான சுவரொட்டி கலாசாரத்தை (அல்லது அதற்கிணையானதை) நாம் சுவிஸில் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஏதாவது ஒரு புதிய சட்ட சீர்திருத்தத்தைக் கொண்டுவரும்போது ஆமா/இல்லையா என்று பொதுமக்களிடம் வாக்களிக்கப்படும்படி கோருவார்கள். ஒவ்வொரு கந்தோனும் (மாகாணமும்) அதற்குரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரும் அதிகாரம் இருக்கின்றது. ஆகவேதான் பல்வேறு மொழிகள் பேசப்படும் கந்தோன்கள் சேர்ந்து மிகச்சிறந்த சுயநிர்ணய உரிமையுள்ள நாடாக சுவிஸ்சிலாந்தை உருவாக்க முடிந்திருக்கின்றது.

சுவிஸில் இவ்வாறான சுவரொட்டிகளைத் தெருக்கள் எங்கும் காணமுடியும். அத்துடன் அரசியல் போராட்டங்களுக்கான அழைப்புக்களையும் கூட.
இந்த சுவரொட்டிகளைப் பற்றி நண்பரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, 80/90களில் வெளிவந்த புலம்பெயர்ந்த சஞ்சிகைகளில் வந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்களை ஒழுங்குபடுத்தினால் கூட, நமது தொடக்க கால புகலிட வாழ்க்கை பற்றி அறிக்கையிட முடியுமென நினைத்தேன்.

*

ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் கண்ணில்பட ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்' நூலை வாசித்துப் பார்த்தேன். அயோத்திதாசர் 1914 காலமாகியவர். நீண்டகாலம் வரலாற்றில் மறைந்து போயிருந்தவர். ஞான அலோசியஸ் அவரின் எழுத்துக்களை 1990களில் தொகுக்கின்றார். ராஜ் கெளதமன் அதைத் தொடர்ந்து 'அயோத்திதாசர் ஆய்வுகள்' என்று இத்தொகுப்புக்களை முன்வைத்து ஒரு விரிவான வாசிப்பை நிகழ்த்துகின்றார். அவரைத் தொடர்ந்து நா.தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் என்று எண்ணற்ற பலர் பண்டிதரை எடுத்துக்கொண்டு சமகாலத்திலும் அணையா விளக்காக அயோத்திதாசரை கொண்டுவந்தபடி இருக்கின்றனர். இன்றைக்கு தமிழ்ச்சூழலில் பெரியாரைப் போல, அயோத்திதாச பண்டிதரும் ஒரு முக்கிய ஆளுமையாக நிறுவப்பட்டுவிட்டார்.

ஈழத்தில் இவ்வாறு விரிவாக வாசிப்புச் செய்து மதிப்பிடவும் விமர்சிக்கவும் கே.டானியல், மு.தளையசிங்கம், விபுலானந்தர், நடேசய்யர், சிவத்தம்பி போன்ற பலர் இருக்கின்றார்கள். தளையசிங்கம், டானியல் போன்றவர்களின் முழுத்தொகுப்புக்கள் கூட வெளிவந்துவிட்டன. எனவே ஆய்வாளர்களுக்கு இந்தப் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தேடியெடுக்கும் கஷ்டம் கூட இல்லை. ஆனால் இற்றைக்கு எமது பொதுச்சமூகத்தில் இருந்து மட்டுமில்லை, பல்கலைக்கழகச் சூழலிருந்தும் தனித்துவமான ஆய்வாளர்கள் தோன்றவில்லை.

எனக்கு நம்பிக்கையான சில பல்கலைக்கழக நண்பர்களிடம் இந்தத் திசைகளில் அவர்களின் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்தகாலங்களில் கேட்டிருக்கின்றேன். ஆனால் இன்றைய இலங்கைப் பொருளாதாரச் சூழநிலைகளில் அவர்களால் முற்றுமுழுதாக இவற்றில் கவனஞ்செலுத்த முடியாத நாளாந்த வாழ்க்கைத் தத்தளிப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான ஆய்வாளர்கள் ஆறுதலாக ஆய்வு செய்து எழுதும் சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்கவோ, அவர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களை அமைக்கவோ இன்னமும் இல்லை.

எனினும் இவ்வாறானவற்றை செய்யும் சில நம்பிக்கைக் கீற்றுக்களைக் காண்கின்றேன். உதிரிகளாக இருப்பவர்களை, அவர்களின் நம்பிக்கைகள்/அரசியல் சார்பகளைத் தாண்டி ஏதோ ஒரு புள்ளியில் 'வேற்றுமையில் ஒற்றுமை' போல ஒன்றிணைத்து முன்னே சில காலடிகளையாவது நாம் வைக்கத்தான் வேண்டும்.

*
இன்று கதிர்காமம் (கந்தன்) முற்றுமுழுதாக சிங்களவர்களிடம் ஆகிவிட்டது. ஒருகாலத்தில் பெளத்தர்களும்
, சிங்களவர்களும் வழிபட்டு வந்த நுழைவாயில் இருந்த கந்தனின் வேல் கூட அகற்றப்பட்டுவிட்டது. கடல் கடந்து வாழ்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலம் என்பதால் இது 14ம் நூற்றாண்டிலே தமிழர்களால் கவனிப்புக்குள்ளான இடம் என்பதை நாம் நிறுவமுடியும். இதற்கு இன்னொரு ஆதாரமாக நடேசய்யரின் இலங்கை சுதந்திரமடைய முன்னர் 1946இல் எழுதிய 'கதிர்காமம்' என்ற நூல் நம்மிடையே இருக்கின்றது. இன்றைக்கு சிங்களர்கள் ஏகபோக உரிமை கொள்ள முயற்சிக்கும் கதிர்காமத்தை நாம் 70 ஆண்டுகளுக்கு முன்னே போய் கதிர்காமம் எப்படி இருந்தது என்று நிரூபிக்க நடேசய்யரின் 'கதிர்காமம்' என்ற ஆவணம், எமக்கு எழுத்தாக மட்டுமின்றி அந்தக்காலத்தைய புகைப்படங்களுடனும் சான்றாக இருக்கின்றது.

நடேசய்யர் கதிர்காகம் என்ற நிலப்பரப்பை சிங்கள - தமிழ் மன்னர்களுக்கு போர் நடந்த இடமாகவும், சிங்கள மன்னர்கள் தமிழர்களை வெல்வதற்காக கதிர்காமத் கடவுளிடம் அருள் வேண்டிச் சென்ற இடமாகவும் காண்கின்றார். 

இன்னொருவகையில் இந்து நூல்களில் இந்த இடம் முருகனும், சூரனும் போர் செய்த இடமாகவும், முருகன் சூரனை வென்று ஓய்வெடுத்த படைவீடாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இன்றிருக்கும் கதிர்காமம் பெளத்ததிலிருந்து இந்துசமயத்துக்கு மாறிய முதலாம் ராஜசிங்கனால் கட்டப்பட்டது என்கின்ற முக்கிய விடயத்தை நடேசய்யர் பதிவு செய்கின்றார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழர்களால் வழிபாடுகள் செய்யப்பட்ட இடத்தை சிங்களவர்கள் எடுத்துக் கொண்டபோது, பிரிட்டிஷ்காரர் காலத்தில் மீண்டும் அவர்களால் வழிபாட்டு இயற்றும் உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் நடேசய்யர் சொல்கின்றார்.

ராஜசிங்கன் காலத்திலேயே கல்யாணகிரி என்ற சன்னியாசி கதிர்காமத்துக்கு இந்தியாவில் இருந்து வந்ததாகவும், அவரின் மூலம் இன்னும் பல சன்னியாசிகள் கதிர்காமத்தை நோக்கி வந்தார்கள் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. அப்படி வந்த மரபில் ஒரு சன்னியாசி அன்ன ஆகாரம் எதுவுமின்றி பால் மட்டும் குடித்து தியானம் செய்ததால் அவரை பால்குடி பாவா என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் 1898இல் கதிர்காமத்தில் சமாதியடைந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. அந்த சன்னாசியே அங்கிருக்கும் கல்யாண மண்டப நிர்வாகம் பற்றி மரணசாசனம் எழுதி வைத்ததோடு அது அப்போதைய ரிஜிஸ்டர் ஜெனரலாக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் காலத்தில் நடந்தென்றும் பதிவு செய்திருக்கின்றார்.

அதுபோலவே எப்படி முறையான தமிழ்/இந்து நூல்களில் கதிர்காமம் தெளிவாகப் பதியப்படவில்லையோ, அதைவிட சிங்களவர்கள் தமது எல்லா 'வரலாற்றை' எழுதிவைத்த மகாவம்சத்திலும் கதிர்காமம் குறித்து விரிவான பதிவுகள் இல்லை என்று நடேசய்யர் குறிப்பிடுகின்றார். புத்த பெருமானின் வரலாறு அல்ல, கந்த பெருமானின் சரித்திர வரலாறே சிங்களத்தில் 'கந்தகுமர் உபத' என்ற நூலில் காணப்படுகின்றது என்று நடேசய்யர் குறிப்பிடுவது சுவாரசியமானதாகும்.

இவ்வாறு நாம் வரலாற்றில் பின்னகர்ந்து இன்று சிங்களப் பெளத்தர்கள் ஏகபோக உரிமையாக எடுத்துவிட்ட கதிர்காமத்தின் வரலாறு அவர்கள் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும். அதுபோல இந்த நூலில் இறுதி அத்தியாயத்தில் நடேசய்யர் குறிப்பிடும் இன்னொரு விடயமும் முக்கியமானது. இதேயிடத்தில் ஒரு முஸ்லிம் ஞானி இருந்ததாகவும் அவரின் பெயர் கிதர்நபி என்றும், அவர் மூலமாகவும் மாலதீவில் முஸ்லிம் மதம் பரவியதாகவும் ஒரு குறிப்பைச் சொல்கின்றார். இதனாலேயே இந்தியாவிலிருந்து கூட முஸ்லிம்கள் கதிர்காமத்தைத் தேடி வருகின்றனர் என்று எழுதியிருக்கின்றார். அது மட்டுமின்றி வள்ளியமைக்கு அருகில் ஒரு சமாதி கட்டப்பட்டிருக்கின்றது என்றும். அது ஒரு முஸ்லிம் பெரியாரியுடையது என்றும், அந்தப் பெரியார், கதிர்காமத்தில் வாழ்ந்த முத்துலிங்க சுவாமி காலத்தவர் என்றும் அவரோடு சேர்ந்து தொண்டாற்றியவர் என்றும் சொல்கின்றார்.

இவ்வாறாக கதிர்காமம் என்பது இலங்கையில் பல்லின/மதக் கலாச்சார இடமென்று நாம் எளிதாக ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஆக 1940களில் எழுதி ஆவணபப்டுத்தப்பட்ட நூலிலிருந்து நாம் இந்த கதிர்காம வரலாற்றை கட்டவிழ்க்க முடிகின்றது என்பதுதான் ஆவணப்படுத்தல்களின் முக்கியத்துவம் என்கின்றேன்.

*************

 

( Jan 13, 2025)

கார்காலக் குறிப்புகள் - 99

Friday, June 27, 2025

 

டந்த ஞாயிறு தியானத்திற்காக புத்த மடாலயத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். நண்பர் Thug Life திரைப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு மோசமான திரைப்படத்தைப் பற்றி உரையாடுவது என்பதே அதற்கு விளம்பரம் கொடுப்பதாகத்தான் இருக்கும், உங்களுக்கு ஏதேனும் அதில் உறுத்திக் கொண்டிருந்தால் எழுதிவிட்டோ அல்லது காணொளியில் பேசிவிட்டோ நகர்வதே நல்லது என்றேன்.

ஒரு விடயத்தை உரையாடும்போது அதில் இருந்து கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத விடயங்களில் இருந்து கடந்து செல்வதே நமது பொழுதுகளை பிரயோசனமாக்கும். இதை நாம் சமூக வலைத்தளங்களிலும் எளிதில் பார்க்க முடியும். நாம் ஏதாவது எழுதும்போது உடனே எதிர்க் கருத்தைச் சொல்ல வருவார்கள். அதற்கு மறுத்துச் சொல்லப்போகும்போது விதாண்டவாதம் ஆகும். இருவருக்கிடையில் ஏதேனும் உரையாடல் நடந்தால் அதைக் கவனிக்கும் மூன்றாம் நபருக்கு புதிதாக அறிந்துகொள்ள ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அவ்வாறில்லாத உரையாடல்களில் இருந்து விலகுவதோ, அதை மெளனமாகக் கடந்து செல்வதோ அனைவர்க்கும் நன்மை பயக்கும்.

இந்த Thug Life இல் சமூக வலைத்தளங்கள் எரிந்துகொண்டிருந்தபோது, நான் அமைதியாகவே கடந்து சென்றேன். நண்பரிடமும், பாருங்கள் நீங்கள் கூட Thug Life ஐ இந்தளவுக்கு பேசுகின்றீர்கள். உங்களுக்குப் பிடித்த ஜெயமோகன் 'காவியம்' என்ற நல்லதொரு நாவலை தொடராக 45 அத்தியாயங்களுக்கு மேலாக எழுதிவிட்டார். இந்த சமூகவலைத்தளத்தில் அது குறித்து ஓர் உருப்படியான கட்டுரையோ/பதிவோ இந்த ஒரு மாதத்திற்குள் வந்திருக்கா என்று சொல்லுங்கள் என்றேன்.

'காவியம்' புதினத்தை வரவேற்கின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒரு கடும் உழைப்பு அதில் இருக்கின்றது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இத்தனைக்கும் என் இலக்கிய செல்நெறியென்பதே ஜெயமோகனுக்கு எதிர்த்திசையில் போகக் கூடியது. ஆனாலும் நான் தினம் விடாது 'காவியத்தை' வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஒரளவு வயதாகும்போது நாம் எதிர்மறை விடயங்களை விட ஆக்கபூர்வமான செயல்களுக்கு பொழுதுகளைச் செலவிட வேண்டும் என்ற விருப்பம் வந்துவிடுகின்றது. வாழ்வென்பதே எந்தக் கணத்தில் நின்றுவிடும் என்பது ஒருபுறமிருக்க, மிச்சமிருக்கும் வாழ்வை கொஞ்சமாவது பிடித்தமான விடயங்களின் திசையில் கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் வந்திருக்கின்றது.

அந்தவகையில்தான் இந்த வயதிலும் சலிப்பில்லாத அ.யேசுராசா, மாதம் ஒரு திரைப்படத்தை திரையிடுவதும், வடகோவை வரதராஜன் தனது நண்பர்களுடன் மாதமொரு முறை ஏதேனும் ஒரு தலைப்பில் துறை/அனுபவம் சார்ந்த ஒருவரை அழைத்து பேச வைப்பதும் மதிப்புக்குரிய செயல்களாக எனக்குத் தெரிகின்றது.

இந்த இலக்கிய உலகென்பது பிற எல்லாத் துறைகளைப் போலவே குழிபறித்தலும், பொறாமைகளும், கோபங்களும் கொண்ட ஒரு சூழல்தான். ஆனால் இதை விரும்பி ஏற்று வந்திருக்கின்றோம் என்றால், (அல்லது வேறு எதுவுமே எமக்குத் தெரியாது என்றால்), நாம் விரும்பிய துறைக்குள் இருந்து உருப்படியாக எதையாவது செய்து பார்க்கலாம். ஏனென்றால் பிடித்த விடயங்களில் நிகழும் இழப்புக்கள் கூட, ஒருபோதும் தோல்விகளாகி விடுவதில்லை.

'நூலகம்', 'எழுநா' போன்ற திட்டங்களின் பின்னால் இருந்து உழைப்பவர்களும் அந்தவகையில் மதிப்புக்குரியவர்கள். அவர்கள் மீது நமக்கு கேள்விகள்/விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களின் இருப்பை ஆவணப்படுத்துவதில் முக்கியமானனை. கடந்த சில வருடங்களாக மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்த 'எழுநா' இப்போது மீண்டும் புத்தகங்களைப் பதிப்பிக்கவும் முன் வந்திருக்கின்றது.

இலங்கையிலே அச்சிட்டு இலங்கை எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தும் இந்தத் திட்டம் மிக முக்கியமானது. ஏனெனில் நம்மவர்களில் பலருக்கு அரசியல் மட்டுமே முழுமூச்சாக இருக்கின்றது. அந்த அரசியலைக் கூட ஆவணமாக்கவேண்டும், எதிர்காலச் சந்ததிக்காய் எழுத்தாக்கி பதிப்பிக்க வேண்டும் என்கின்ற தொலைதூர நோக்கில்லை. பேச்சால் மட்டும் வானில் ஏறி நடனமாடுவதில் நாம் எல்லோருமே வல்லவர்கள். ஆடுவது தவறில்லை, ஆனால் அவ்வப்போது நல்ல விடயங்கள் நடக்கும்போது அவற்றுக்கு ஆதரவு கொடுப்பதால் நாம் எதிலும் குறைந்துவிடப் போவதில்லை.

அண்மையில் 'செம்மணி' புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டு, மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது பேசு பொருளானது. கிருஷாந்தியின் படுகொலையில் வாக்குமூலம் கொடுத்த சிங்கள இராணுவத்தினனின் மூலமே இந்தப் புதைகுழி பற்றிய மர்மம் அன்று துலங்கியது. கிருஷாந்தியின் படுகொலை நடத்தபோது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று கனடாப் பாராளுமன்றத்தின் முன் நாம் இதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளைச் செய்துமிருக்கின்றோம். ஆனால் இப்போது இருந்து யோசித்துப் பார்க்கும்போது செம்மணி படுகொலை குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து ஒரு உருப்படியான நூல் எதுவும் வந்திருக்கின்றதா? நாம் கிருஷாந்தி கொலை, செம்மணி புதைகுழி, அன்று பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்கள் குறித்து சரியாகப் பதிவு செய்திருக்கின்றோமா என்று பார்த்தால் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.

ஆனால் இலங்கையில் அண்மையில் உள்ளூராட்சி நடந்தபின், எதற்குமே உருப்படியில்லாத மாநகர சபைகளை யார் கைப்பற்றப்போகின்றார், எந்த தமிழ் அரசியல்வாதி எதைத் திருவாய் மொழிந்தார் என்பதை இந்த Thug Life போல எழுதுவதற்கோ/பேசுவதற்கோ தயங்கவே மாட்டோம். ஏனெனில் நாங்கள் மறத்தமிழர். மேலும் மறத்தமிழர் என்று ஓரினம் இருந்தால் எதிர்க்கோஷ்டி இருக்கவேண்டும் அல்லவா? அவர்களுக்கும் இந்த மறத்தமிழருக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இருப்பதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் உறைந்துபோன மூளையுடன் இருக்கும் அவர்களுடன் உரையாடுவதென்பது பாறையொன்றை நகர்த்துவதற்கு நிகர்த்தது.

மறத்தமிழரையும், எதிர்த் தமிழரையும் தாண்டியபடி காலம் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதற்கு கொஞ்சமாவது பங்களிப்பவர்களாக இந்தக் காலத்தில் நம்மை மாற்றியமைப்பதுதான் எமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால்!

*********

 

(Jun 12, 2025) 


கார்காலக் குறிப்புகள் - 98

Monday, June 23, 2025

 

 'விழுதாகி வேருமாகி' நூலை முன்வைத்து..
******



கடந்த சில நாட்களாக வேறொரு உலகில் உலாவிக்கொண்டிருந்தேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பரும் எப்போது இதிலிருந்து வெளியே வருவாயெனக் கேட்டபடியிருந்தார். இந்த நூலை நான் 20 வருடங்களுக்கு முன் வன்னிக்குள் நின்றபோது வாசித்திருக்கின்றேன். 600 பக்கங்களுக்கு மேல் நீளும் நூலென்பதால் அதையன்று முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் கடந்த 20 வருடமாக அந்த நூலைத் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது வாசிக்கக் கிடைத்திருந்தது.

அது விடுதலைப்புலிகளின் பெண்கள் அணியாகிய (2ம். லெப்.) மாலதி படையணியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறுகின்ற 'விழுதாகி வேருமாகி' என்கின்ற நூல். இந்த நூல் 1996 -2001 வரையான போராட்டக் காலத்தைப் பதிவு செய்கின்றது.

1995, சூரியகதிர் -01 மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், 1996 இல் வடமராட்சி/தென்மராட்சியைக் கைப்பற்ற சூரியக்கதிர்-02 நடவடிக்கையை எடுக்கின்றது. இந்தக் காலப்பகுதியிலே விதுஷா தலைமையிலான தனியே பெண்களைக் கொண்டமைந்த 'மாலதி படையணி' புலிகளால் கட்டியமைக்கப்படுகின்றது. மாலதி என்பவர் களத்தில் சாவடைந்த புலிகளின் முதல் பெண் போராளி.  அவர் 1987 இல் கோப்பாயில் இந்திய இராணுவத்துடனான மோதலில் களச்சாவடைந்திருந்தார். அவரின் பெயரிலே புலிகளின் பெண்கள் அணி தொடங்கப்பட்டது. மாலதி படையணி தமது முதல் களப்பலியை தென்மராட்சியில் கொடுக்கின்றது. ஒருகுறிப்பிட்ட காலம்வரை மரபு இராணுவத்தைப் போன்று இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தபோராடிக் கொண்டிருந்த மாலதி படையணி வன்னிக்குள் உள்ளெடுக்கப்படுகின்றனர். விரும்பிய கொஞ்சப்பேர் மட்டும் கொரில்லாப் படையாக தென்மராட்சிப் பகுதிக்குள் உலாவத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு தொடங்கும் மாலதி படையணியின் களங்கள் வன்னிக்குள் விரிகின்றன. இதன் பின்னரே 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாம் புலிகளால் தகர்க்கப்படுகின்றது. அது ஒயாத அலைகள் -01 எனப் பெயரிடப்படுகின்றது. அந்த முகாம் தாக்குதலில் பங்குபற்றிய மாலதி படையணி பின்னர் A9 நெடுஞ்சாலையை, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்க வைக்கத் தொடங்கிய 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்) நடவடிக்கையில் பல்வேறு முனைகளில் நின்று புரிந்திருக்கின்றது.

அவர்கள் மணலாற்றிலிருந்து மன்னார் வரை, புளியங்குளம் (கடும் சண்டை நடந்த அந்த இடம் அவர்களின் மொழியில் புரட்சிக்குளம்), ஒட்டுசுட்டான், மன்னன்குளம் என்று நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத கொடும் களங்களில் முன்னணியில் நின்றிருக்கின்றனர்.

இந்த நூலின் முக்கியம் என்பது புலிகள் ஓயாத அலைகள்-01, 02 என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பெரும் இராணுவ முகாங்களைத் தகர்த்ததையோ, அல்லது ஓயாத அலைகள் -03 என்று வன்னி பெரும் நிலப்பரப்போடு ஆனையிறவை வென்றதையோ, ஓயாத அலைகள் -04 எனப்பெயரிட்டு சாவகச்சேரி அரியாலை, நாகர்கோயில் என முன்னேறி செம்மணிப் பாலத்தடியில் நின்று இலங்கை இராணுவத்தின் யாழ் இருப்பை இறுக்கியதோ பற்றியதல்ல.

போர் என்பது எப்படி யதார்த்தத்தில் நடக்கின்றது என்பது பற்றிய நேரடி அனுபவங்களுள்ள போராளிகள் எழுதிய பதிவுகள் என்பதால்தான் இந்த நூல் மிக முக்கியமான நூலாக இருக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும்ம் நீங்கள் ஒரு நாயகியைக் காண்பீர்கள், சிலவேளைகளில் ஒரு அத்தியாயத்திலே பல வீரநாயகிகளைக் காண்பீர்களென்று இந்த நூலில் சொல்வதைப் போல பல போராளிகளின் வீரத்தை/தியாகத்தைப் பார்க்கின்றோம்.

ஒரு படையணியின் தோற்றத்தை, களத்தில் வெற்றி பெற்றதை/ முன்னேறும் எதிரியோடு எதிர்த்துப் போரிட்டதை மட்டுமின்றி இதை வாசிக்கையில் இந்தப் போரின் கொடுமைகளையும் நாம் பார்ப்பதுதான் என்னளவில் முக்கியமானது. நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மாற்றிவிடமுடியாது. ஆனால் இன்னொரு போர் எந்தப் பொழுதிலும் எங்களுக்குத் தேவையற்றது என்பது ஒரு முன்னுதாரணமாக இதைப் பார்க்கலாம்.

எப்படி 96இல் யாழ் மாவட்ட சாவகச்சேரியில் இருந்து போராளிகள் துரத்தப்பட்டார்களோ, அதை மாற்றி சில வருடங்களில் ஓயாத அலைகள் -04 உடன் சாவகச்சேரிக்குள் நுழைந்து நிலங்களை மீண்டும் கைப்பற்றத் தொடங்குகின்றார்கள். ஒருவகையில் அது அவர்களின் நீண்டநாள் கனவு. ஆனால் தொடர்ச்சியான இராணுவ முன்னேற்றங்களால் பேரழிவுடன் மீளவும் யாழை விட்டு பின்வாங்கிச் செல்வதோடு இந்த நூல் முடிகின்றது. இதை வாசித்து முடிக்கும்போது எப்படி ஒரு போர் நடக்கின்றது என்ற பயங்கரம் நம் முகத்திலறைந்து திகைக்க வைக்கும்.

இன்றும் போரை ஒரு வெற்றிக்களிப்பாகக் கொண்டாடுகின்றவர்களும், அதுபோல புலிகளின் என்றாலே எல்லாவற்றையும் வன்மமாக்கின்ற தரப்பும், பொறுமையுடன் இதை வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். ஏனெனில் வரலாற்றை மிகையாகப் புகழ்ந்தோ அல்லது இருட்டடிப்புச் செய்தோ நாம் கற்றுக்கொள்வதால் எதுவும் பிரயோசனம் இருக்கப் போவதில்லை. அப்படியான 'கற்றல்கள்' நமது தப்பித்தல்களுக்கும், தனிப்பட்ட விருப்புகளுக்கும் உதவுமே தவிர, வரலாற்றைத் தெளிவுறக் கற்பதற்கு உதவப்போவதில்லை.

வரலாறு என்பதை நாம் நினைத்தபடி மாற்றியமைக்க முடியாது என்பதற்கு இந்த நூலே நல்லதொரு உதாரணம். இந்த நூலில் விதுஷா, துர்க்கா, பால்ராஜ், தீபன், கருணா என்று பல தளபதிகளின் பேச்சுக்கள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். கருணாவின் தலைமையில் இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயந்தன் படையணியின் தீரத்தாலே பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட ஜெயசுக்குறு சமர் முறியடிப்பு   பல முக்கிய களங்களில் நிகழ்ந்தது என்பதை நாமறிவோம். ஜெயசுக்குறு சண்டையின் பின் புலிகளே ஒப்புக்கொண்ட உண்மை இது. இப்போது கருணா புலிகளின் ஆதரவாளர்க்குத் 'துரோகி'யாகிவிட்டார் என்கின்றபோதும், அன்றைய வரலாற்று உண்மையை/கருணாவின் மேற்கோள்களை வரலாற்றின் எந்தப் பக்கத்திலிருந்தும் எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்த நூலே ஒரு சாட்சியாக நிற்கின்றது.

இந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும்போராளிகளைப் பற்றிய பல நுண்ணிய அவதானங்கள் வந்தபடியே இருக்கும். ஒரு போராளி வாசிப்பதில் அவ்வளவு ஆர்வமுடையவர். களத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாட்டைச் சுற்றி வருகின்ற பேப்பரையே கவனமாகப் பிரித்தெடுத்து வாசித்துப் பார்க்கின்றவர். எப்போதும் அவரது காற்சட்டைப் பொக்கெட்டுக்குள் ஒரு புத்தகம் இருக்கும் என்ற விபரிப்பு இருக்கும். இப்படி நம் நினைவுகளை விட்டகலாத பல போராளிகள் இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வந்தபடியிருக்கின்றனர்.

இயக்கம் குறித்தும்,  அவர்கள் போராட்டத்தை நடத்திய விதம் குறித்தும் விமர்சனங்களை எவ்வளவு தீர்க்கமாக வைக்கின்றோமோ, அதையளவு இந்தப் போராளிகள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மறுதலிக்காது நாம் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரத்தான் வேண்டும்.

எவரெவரோ இன்றைக்கு இந்தப் போராட்டத்தை 'குத்தகை'க்கு எடுத்தமாதிரி போலிப் பெருமிதங்களில் எழுதியும்/பேசியும் கொண்டிருக்கும்போது, இந்த உண்மையான போராளிகளின் இரத்தமும் சதையுமான வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாசித்தல் அவசியம் என்பேன்.மேலும் சிங்களம் உள்ளிட்ட வேறு மொழிகளில்  இது மொழியாக்கப்பட்டு வருகையில் இந்தப் போராளிகள் பற்றிய பல எதிர்மறையான எண்ணங்கள் அவர்களிடையே உதிர்ந்து போகவும் கூடும்.

இறுதியாக இதற்கு முன்னுரை எழுதிய மாலதி படையணியின் தளபதியான விதுஷா சொல்வதைக் குறிப்பிட்டு இதை முடிக்கலாமென நினைக்கின்றேன்:

"எழுதுமட்டுவாளிலிருந்த எமது முன்னணிக் காவலரண் பகுதி. நேரம் 4.30 ஆகிக் கொண்டிருந்தது. முன்னரங்கின் அருகிலிருந்த மைதானத்துக்கு ஒவ்வொரு அணிகளும் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. எல்லோரும் கலகலப்பாகக் கதைத்துச் சிரித்தபடி..சிலர் விளையாட, சிலர் சூட்டுப் பயிற்சிக்கென ஆயத்தமானார்கள். போர்க்காலத்தில் சிறு ஒலியைக் கூட எழுப்பமுடியாத, தலைநிமிர்த்தி நடக்கமுடியாத பகுதி அது. இது போர் நிறுத்தக் காலம் என்பதால் பதுங்கிச்சூடு, எறிகணை வீச்சு என்ற எந்தவித நெருக்கடியுமின்றி முன்னரங்கப் பகுதியே கலகலப்பாக இருக்கின்றது.

ஒரு பனங்குற்றியில் அமர்ந்தவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த என் மனம் திடீரென எங்கோ போனது. இந்த மைதானத்தில் நின்றிருக்கவேண்டிய பலரைக் காணவில்லை. அவர்கள் துயில் நிலங்களில் அமைதியாக இருக்கின்றார்கள். இவர்கள் புதிய தலைமுறையினர். இவர்களை உருவாக்கிவிட்டவர்களும், உருவாக்கியவர்களும், அவர்களை உருவாக்கியவர்களும் எனப் பலர், காலம் தமக்கிட்ட பணியை முடித்துத் தம்முடைய கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் எம்மிடம் தந்த நிறைவோடு உறங்குகின்றார்கள். மைதானத்தில் படையணிப் போராளிகளின் சத்தங்களும், அவர்களது சுடுகலன்கள் எழுப்பிய ஒலிகளும், நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த ஊர்திகளின் இரைச்சல்களும் என்னை இந்த உலகுக்கு இழுத்து வரமுடியாமல் தோற்றுப் போயின."

இதைவிட இந்தப் போர் தந்த துயரங்களைச் சொல்லிவிட முடியாது. இதற்கப்பால் அவர்களுக்கென்று தளராத நம்பிக்கையும், பெரும் கனவுகளும் இருந்தன. அதுவே அவர்களைத் தொடர்ந்து போராடச் செய்திருந்ததையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

********

 

(நன்றி: 'அம்ருதா', ஆனி 2025)

கார்காலக் குறிப்புகள் - 97

Sunday, June 22, 2025

 

புலம்பெயர் வாழ்வைப் பற்றி பல்வேறு புதினங்கள் தமிழிலும், தமிழ் அல்லாத மொழிகளிலும் வந்திருந்தாலும், இந்த நாடுகளின் நாம் எதிர்கொண்ட இனவாதம் பற்றி ஆழமாகப் பேசியவை மிக அரிதானவையே. ஒரளவுக்கு இனவாதத்தையும், எதிர் காலனித்துவத்தையும் பேசிய நாவலென சங்கரி சந்திரனின் 'Chai Time at Cinnamon Gardens' சொல்லலாம்.

கனடா போன்ற நாடுகளில் இருக்கும் இனவாதம் உள்ளே புதைந்து கிடப்பவை. சரியான நேரத்தில் அவை தம் அசலான முகத்தை வெளியே காட்டும். இப்போது இங்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஹரி ஆனந்தசங்கரி மீது வன்மத்துடன் 'குளோபல் நீயூஸ்' ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கின்றது. அதன் தாக்கம் இப்போது பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கின்றது. அந்தச் செய்தியின் சாரம், ஹரி கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்காகவும், போர் முடிந்த பின் வந்த கப்பல்களில் வந்த ஈழத்தமிழர்களைச் சந்தித்து அவர்களின் அகதிக் கோரிக்கையை ஏற்க வாதாடியவர் என்பதால், ஹரி கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கத் தகுதியவற்றவர் என்று ஸ்டூவாட் பெல் எழுத, அதை வழமைபோல இங்குள்ள வலதுசாரிகள் எண்ணெய் ஊற்றி இன்னும் எரித்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த ஸ்டூவாட் பெல் ஒரு பத்திரிகையாளர் என்றாலும், அந்தளவுக்கு இனத்துவேஷம் நிறைந்தவர். இவர் இப்போதில்லை எனக்குத் தெரிந்து 20 வருடங்களுக்கு மேலாக கனடாவிலிருக்கும் தமிழ்ச் சமூகம் மீது இனத்துவேஷத்தைக் கொட்டிக் கொண்டிருப்பவர். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் நடந்தகாலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் நாஷனல் போஸ்ட் பத்திரிகைகளில் அவ்வளவு துவேஷத்தோடு வந்துகொண்டிருந்தது. என் நினைவு சரியென்றால், இவரோ அல்லது இவரின் சகபாடி யாரோதான் அன்றைய 'ரொறொண்டோ சன்' இல், விடுதலைப் புலிகள் தமது நிதிச் சேகரிப்பிற்காக, தமிழ்ப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தச் செய்கின்றார்கள் என்று எழுதியிருந்தார். அதையெதிர்த்து அன்று மாணவர்களாக இருந்த நாம் மறுப்புக்களையும், இந்தப் பத்திரிகை நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தோம்.

இங்கே புலிகளையோ, அல்லது கனடாவில் இருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றியோ விமர்சிப்பது தவறென்பது அல்ல. ஆனால் அதை வன்மத்தோடு முழுச்சமூகத்திற்கும் அடையாளமிட்டு எழுதுவது ஒரு பத்திரிகையாளருக்கு உரிய பண்பல்ல.

ஆனால் இப்படிப்பட்ட வலதுசாரி பத்திரிகையாளர்/அரசியல்வாதிகளோடு சேர்த்துக் கூடிக் குலாவி, தம்மை முன்னிலைப்படுத்தும் ஈழத்தமிழர்களும் இருக்கின்றார்கள் என்பது வேறுவிடயம். ஆகவே இப்படியான வலதுசாரிகளோடு உறவாடுகின்ற 'Prisoner #1056: How I Survived War and Found Peace' எழுதிய ரோய் ரத்தினவேல் போன்றவர்களின் 'அரசியல் சார்பு'களை அவர்கள் பதிவாக்கிய வாழ்வியல் அனுபவங்கள் எந்தளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு இப்படியானவர்களோடு சேர்ந்து நிற்பது குறித்து யோசிக்கவேண்டும் என்றும் விமர்சித்திருக்கின்றேன்.

"உலகில் பல நாடுகளை விடவும் கனடா ஒரு சிறந்த நாடென்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. இலங்கையில் இருக்கும் பேசும்/ எழுதும்/ நடமாடும் சுதந்திரத்தைவிட பன்மடங்கு சுதந்திரம் கனடாவில் இருப்பதை, ரோயைப் போலவே நானும் உணர்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் கனடா வாழ்வதற்கு நல்ல நாடென்றால், ‘எல்லோருக்குள்ளும் இனவாதம் இருக்கின்றது. எனவே வெள்ளையர்களை மட்டும் இனவாதிகள் எனச் சொல்லி எங்கள் பிள்ளைகளை வளர்க்கக் கூடாதுஎன்று நமக்கு வலியுறுத்திச் சொல்லும் ரோய், கனடாவில் இந்த வெள்ளையர்கள் இங்கிருக்கும் ஆதிக்குடிகளுக்கு என்ன செய்தார்கள்/ செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சொல்வதற்கும் நிறைய மினக்கெட்டிருக்க வேண்டும். அதைப் பற்றிய சிறு சலசலப்பைக் கூட இந் நூலில் காணவில்லை. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் கட்டமைக்கப்பட்ட நிறவாதம்தனி மனிதர்களை நீண்டகாலமாய் பாதிக்கின்றது எனும் உண்மையை ரோய் எளிதாய்க் கடந்து போகவும் செய்கின்றார். ரோய் கனடா வந்தபோது உணர்ந்த இனவாதச் சொற்களைத்தான், இந்த நாட்டில் பிறந்த அவரது பிள்ளையும் இப்போது கேட்கின்றது என்றால், இந்த நாடு ஏன் இன்னும் இவ்வாறான விடயங்களில் முன்னேறாமல் இருக்கின்றது என்றும் அவர் யோசிக்க வேண்டும் அல்லவா? ஆடைகளில் படும் அழுக்கைப் போல எளிதாக இவற்றைத் தட்டிக் கழித்து முன்னேறி விடவேண்டும் என்று ரோய் சொல்வது அநியாயமல்லவா?"
('கைதி #1056 : ரோய் ரத்தினவேல் அவர்களின் சுயசரிதை' - எழுநா)

 
*


இப்போது ஹரியின் அமைச்சுப் பதவியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டின் பின் தெளிவாக இருப்பது இனவாதம். ஹரியை மட்டுமில்லை இந்த இனவாதிகள் வழக்கறிஞரான அவரின் மனைவியான ஹரிணியையும் தாக்கியிருக்கின்றனர். ஆக நாம் இந்த நாட்டில் எத்தகை உயர்பதவி வகித்தாலும், இந்த வெள்ளையினவாதிகள் எந்தப் பொழுதிலும் எம்மை கீழிறக்கும் செயல்களில் ஈடுபடக்கூடிய 'லைசண்சை' வைத்திருக்கின்றார்கள். ஆனால் இதே இனவாதிகள் இங்குள்ள பூர்வீகக்குடிகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் என்ன செய்தார்கள் என்று கேட்டால் பெட்டிப் பாம்பாய்ச் சுருண்டுவிடுவார்கள்.

ஆகவேதான் கனடா போன்ற நாடுகளில் 'தொபுக்கடீர்' என்று விழுந்து தம்மை முற்றுமுழுதான கனடியர்களாக மாறப் பாவனை செய்கின்றவர்களைக் கொஞ்சம் கவனமாக இருங்களென எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது மட்டுமல்ல, எப்போது பாதிக்கப்பட்டாலும் அந்தக் குரல்கள் நீங்கள் மண்டியிட்ட வலதுசாரிகளிடமிருந்தோ/மிதவாதிகளிடமிருந்தோ வரப்போவதில்லை என்ற உண்மையை உணர்ந்திருங்கள்.

கனடாவின் குறைகளை விமர்சிக்கும் எங்களை,கனடா என்ற அடைக்கலந்தந்த நாடுகளின் மீது விசுவாமற்றவர்கள் என்று அடையாளமிட்டு திட்டாதீர்கள். இந்த நாடு உலகில் இருக்கும் எத்தனையோ நாடுகளை விட வாழ்வதற்கு அருமையான நாடுதான். அதற்காக இந்த நாடுதான் சொர்க்கமென்ற கனவுகளை பிறரிடம் விதைக்காதீர்கள்.

இறுதியில் 1983 இலங்கையில் நடந்த படுகொலைகளோடு கனடாவுக்கு வந்த அமைச்சரான ஹரியே தன்னை ஒரு அசலான கனடியன் என்று நிரூபிக்க conflict of interest screen இற்கு இப்போது தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்கின்றபோது சாதாரண கனடியர்களாக இருக்கும் எம்மை இந்த நாடும் இனவாதிகளும் எந்தநேரமும் எதுவும் செய்யலாம். ஒரு அமைச்சரே தன்னைப் பலிபீடத்தில் வைத்துதான் ஓர் அசலான கனடியன் என்று நிரூபிக்க வேண்டியிருக்கின்றது என்பது எவ்வளவு அவலமான சூழல். ஆகவேதான், இன்று நீங்கள் எவ்வளவு வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தாலும், எப்போதும் ஒடுக்கப்படும் விளிம்புநிலையினர் பக்கம் நின்று குரல்கொடுங்கள், அந்தக் குரல்களைப் பொறுமையாகச் செவிமடுங்கள் எனச் சொல்கின்றோம்.

*********

(1)  மேலதிக வாசிப்புக்கு: Public safety minister asks officials to ‘screen’ him fromconflict of interest

 புகைப்படம்: First Nations Treaty Women

கார்காலக் குறிப்புகள் - 96

Saturday, June 21, 2025

 

வேடன்
***

நானெனது இருபதுகளில் ராப் பாடல்களில் மூழ்கியிருந்தவன். ஏற்கனவே இலங்கையில் இருந்த ஒடுக்குமுறையின் நிமித்தம் கனடாவுக்குத் தப்பி வந்தவன். இந்தப் புதிய கனடா என்கின்ற பனி நிலத்திலும் ஓரமாக (முக்கியமாக பாடசாலை/பல்கலைக்கழகம்) வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது, கறுப்பினத்தவர்களின் ராப் கவர்ந்திழுக்காது இருந்தால்தான் வியப்பாக இருக்கும். ராப் பாடல்களின் மீதான பெருவிருப்பு பின்னர் உதிர்ந்துபோனாலும், அந்த உலகம் எனக்குள்ளே இருந்த கோபம்/வெறுப்பு/சலிப்பு போன்றவற்றைக் கடந்துவர அன்று உதவியிருக்கின்றது.

நான் ராப் பாடல்களைக் கேட்க தொடங்கிய காலத்தில் அரசியலை முன்னிறுத்திய ராப் பாடகர்களின் காலம் முடிந்து கொண்டிருந்த காலம். அது ராப்பில் மட்டுமில்லை இசையின் பல்வேறு வகைமைகளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. பெண்ணுடல்களை காட்சிப்படுத்தி கீழிறக்குவதுடன், போதைமருந்துகள்/பணத்தின் மீதான பெரும் பித்துடன் இசை உலகம் மெல்ல மெல்ல மாறிச் செல்லத் தொடங்கியது. இப்படி அதற்கு முன்னர் இருக்கவில்லை என்றல்ல அர்த்தம். ஆனால் 2000களின் பின் இந்த விடயங்கள் பாடல்களை ஆக்கிரமிக்க, மிக அரிதான இசைக்கலைஞர்களே அரசியல்/ அழகியல்/சமூகம் சார்ந்து பாடல்களைப் பாடியபடி இருந்தனர் (சிலவேளை எனக்கு வயதாகிவிட்டதோ தெரியவில்லை, புதிய தலைமுறை என்னை மறுத்து பேசக்கூடும்).

புலம்பெயர் சூழலில் அவ்வப்போது சில இளைஞர்கள் ராப் பாடல்களைப் பாடி, இசைத்தட்டுக்களை வெளியிட்டபோதும், அவர்களிடம் ஓர் தொடர்ச்சி இல்லாததால் அதை ஒரு பெரும் விடயமாகக் குறிப்பிட்டுப் பேச முடியாது போய்விட்டது. தமிழக/ஈழத்துச் சூழலில் ராப் பாடல்கள் வந்து சேர நீண்டகாலம் எடுத்திருந்தது. அந்தவகையில் ராப் பாடல்களின் சரியான மூலவடிவத்தை எடுத்துக்கொண்டவர் என்று தமிழகக் கலைஞர் அறிவைச் சொல்லலாம். ஆனால் அவரும் ஏதோ ஒருவகையில் தன்னிருப்பைத் தக்கவைக்க தமிழ்ச் சினிமாச் சூழலுக்குள் போக வேண்டியிருந்தது. நமது இலக்கியவாதிகளின் பெரும்பாலானோரின் கடைசிப்புகலிடம் (அல்லது இரகசிய ஆசை) சினிமாவாக இருப்பதைப் போன்று, சுயாதீன இசைக்கலைஞர்களும் இறுதியில் சென்றுசேர வேண்டிய இடமாக திரைச்சூழலே இருக்கின்றது.

அந்தவகையில் கேரளச் சூழலில் இருந்து வந்த வேடனை நான் பின் தொடர்ந்து வந்திருக்கின்றேன். அவரின் 'குரலற்றவரின் குரல்' பாடல் வெளிவந்தபோது அது அதிக கவனத்தைப் பெற்றது. அப்போது அவரை (5 வருடங்களுக்கு முன்) யாரெனத் தேடியபோது ஆதிவாசிகளின் பின்னணியில் இருந்து வருகின்றவர் என்று ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் பின்னால் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து 'அகதி'யாக இடம்பெயர்ந்த தாயுக்கும், திரிச்சூர் தந்தைக்கும் பிறந்தவர் என்பதை அறிந்துகொண்டேன். மிக வறுமையான 'ரெசிடென்ஸி' சூழலில் வளர்ந்த வேடன் வீரியமான அரசியலை தன் பாடல்களில் வெளிப்படையாகப் பாடத் தொடங்கினார்.

எப்படி ராப்பில் Tupac போன்றவர்கள் அரசு/பொலிஸ் உள்ளிட்ட அதிகாரத்தை கடுமையாக விமர்சித்து கறுப்பின மக்களை அரசியல்படுத்தினார்களோ, அப்படி ஒருவராக வேடன் வரக்கூடுமென நினைத்தேன். ஆனால் அவர் இடையில் வேறொரு பாதைக்குச் செல்லத் தொடங்கினார். ஒருகட்டத்தில் பல பெண்கள் தம்மீது அத்துமீறியதாக வேடனுக்கு எதிராக பேச வந்தார்கள். அவர்கள் அதை அறிக்கையாக வெளியிட்டு நீதி கோரியபோது, வேடன் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை எழுதினார். எனினும் அந்த மன்னிப்புப்பதிவு பொறுப்புக்கூறலற்ற மன்னிப்பு என பாதிக்கப்பட்ட பெண்கள் மறுதலித்தார்கள். இன்னொருபக்கம் ஒரு தலித்தாக இருக்கும் வேடன் மீது ஆதிக்கச்சாதிகள் செய்யும் சதி என்று பேசப்பட்டபோது, வேடனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தலித் பெண்ணாக இருக்கின்றார் என்றும் அப்போது பதில் கூறப்பட்டது.

இப்படி பாலியல் துஷ்பிரயோகங்களில் எந்த ஆணும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டதில்லை என்றவகையில் நடிகை பார்வதி வேடனின் மன்னிப்புக்கடிதத்திற்கு இன்ஸ்டாவில் 'லைக்' இட்டிருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த மன்னிப்பு பொறுப்புணர்ந்து genuine ஆனதல்ல என்றபோது, பார்வதி தனது 'லைக்'கை மீள எடுத்து அதற்காய் மன்னிப்பைக் கேட்டிருந்தார். எதற்கு இதையேன் விரிவாகச் சொல்கின்றேன் என்றால், எவ்வளவு நுண்ணியமாக இந்த விடயத்தை மலையாளப் பெண்கள் கையாண்டிருக்கின்றார்கள் என்பதற்காகும்.

*

ஒருவகையில் இந்த விடயங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானபோது வேடனுக்கு 25 வயதுக்குள்ளே இருந்தது. ஒரு முதிரா இளைஞன், சட்டென்று கிடைத்த தன் பிரபல்யத்தைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் என்று பார்க்காது, மலையாளப் பெண்கள் வெளிப்படையாக இது குறித்துப் பேசினார்கள். இந்த நேரத்தில் இவ்வாறான விடயங்களில் பெண்களுக்கு நமது தமிழ்ச்சூழல் கொடுக்கும் தோழமையுணர்வையும், எதிர்வினைகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு கலைஞனாக இதன்பின்னும் வேடன் வளர்ந்துகொண்டே இருந்தார். சுயாதீன பாடல்களை வெளியிட்டதோடு மட்டுமில்லாது, கடந்த வருடம் வந்து மிகவும் கவனத்தைப் பெற்ற திரைப்படங்களான மஞ்சுமல் பாய்ஸ், கொண்டல், All We Imagine as Light போன்றவற்றிலும் பாடியிருக்கின்றார்.

இன்னொரு வகையில் அவரது பாடல்கள் இன்னுமின்னும் அரசியல்மயமாகிக் கொண்டிருக்கின்றது. அதிகாரத்தை நோக்கி மிகக் காட்டமாகக் கேள்விகளை எழும்புகின்றார். அதன் நிமித்தந்தான் அவர் சில வாரங்களுக்கு முன்
'கஞ்சா கேஸ்'ஸில் வேடன் கைது செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. அப்படி கஞ்சா கேஸில் அகப்பட்டபோது அவர் அணிந்திருந்த சங்கிலி அசலான சிறுத்தைப் பல்லால் செய்யப்பட்டது என்று வன இலாக்காவினாலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வாறு சட்டமும்/அதிகாரமும் அவரைத் தொடர்ந்து தொந்தர்வு செய்து கொண்டிருக்கின்றது. அதற்கான காரணிகளை வேடனும் ஒருவகையில் உருவாக்கிக் கொண்டபடி இருக்கின்றார்.

இப்போது வேடன் ஒரு காதல் பாட்டைப் பாடியிருக்கின்றார். 3 வாரங்களில் 'MAUNA LOA' பாடல், 5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து வேடனுக்கு ஒரு பெருந்திரளான இரசிகர்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவருக்கு இப்போது ஒரு காதலி இருப்பதாகவும் பொதுவெளியில் சொல்லப்படுகின்றது. சிலவேளைகளில் இனியான காலத்தில் வேடன் ஒரு முதிர்ச்சியடைந்த ஆணாக, பெண்கள் சார்ந்த விடயங்களை அணுகவும் கூடும்.

*

வேடன் குறித்து இன்னொரு விடயத்தைச் சொல்லவேண்டும். நமது புலம்பெயர்/ஈழ சமூகம் பல விடயங்களில் தூங்கிக் கொண்டு சட்டென்று 'முழித்து'க் கொள்ளும் ஒரு சமூகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. நீங்கள் கலை/இலக்கியங்களில் எவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்தாலும் தடித்த தோலோடு, உங்களை உற்சாகப்படுத்த ஓரடி கூட எடுத்து வைக்காது. ஆனால் யாரேனும் அந்நியர்கள் அந்த கலைஞர்களை ஏற்றுக்கொண்டால் போதும். உடனேயே கும்பம்/மாலை வைத்து வரவேற்று இவர் நம்மவரென கூட்டம் கூட்டமாக வந்து பொதுவெளியில் அவர்களை வியந்தோத்தும்.

அப்படித்தான் யாரோ ஒரு புண்ணியவான் இப்படி வேடனை ஒரு பாடலில் கண்டுகொண்டுவிட்டார். 4 வருடங்களுக்கு முன் வெளிவந்த வேடனின் 'பூமி ஞான் வாழுமிடம்' (Bhoomi Njan Vazhunidam) பாடலில் பல்வேறு நாட்டு ஒடுக்குமுறைகள்/போராடும் இயக்கங்கள் உசாத்துணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதில் 'இலங்கையில் புலிகளினது தாகம் தீரா இனி நடப்போம்' என்ற வரிகள் வருகின்றது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்த வரிகளோடு, வேடனின் தாய் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெரிந்ததோடு, 'ஒரு யாழ்ப்பாணத்தமிழன் பாடுகின்றான்' என்று எல்லாப் பக்கத்திலும் காணொளியை வெளியிட்டு இப்போது 'தெறி'க்க விடுகின்றார்கள்.

வேடனின் இந்தப் பாடலிற்கு முன்னோடியாக மாயா அருள்பிரகாசத்தின் (MIA) பாடலான 'Sun showers' ஐ சொல்லலாம். மேலும் மாயா அதில் புலிகளின் பெண் போராளிகளைப் போல ஆடைகள் அணிந்து வந்து 'Like PLO/ I don't surrender' என்றேல்லாம் பாடுவார். புலிகளைப் போல ஆடையணிந்தாலும் அவர் அதில் வெளிப்படையாகப் பாடுவது பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியாகும். வேடனோ இதில் ஒடுக்குமுறை நடக்கும் ஒவ்வொரு இடத்தையும் ஒரிருவரிகளால் குறிப்பிட்டு பாடிவிட்டு எளிதில் விலகிச் செல்கின்றார்.

*

வேடனின் பாடலை ஈழத்தோடு இணைத்து பொதுவெளிகளில் புகழ்ந்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள், வேடன் மீது பாதிக்கப்பட்ட பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கலைஞர்கள் இயல்பிலே பலவீனமானவர்கள்/பிறழ்வானவர்கள் என்று சாட்டுச் சொல்லாது, அவர்களின் கலைப்படைப்புக்களினால் கிடைக்கும் புகழைப் போல, இந்தக் குற்றச்சாட்டுக்களையும் நேரடியாக அவர்கள் எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பிச் செல்லவும் முடியாது.

அது ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, தனக்கான ஓரிடத்தை இசையுலகில் இப்போது சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கின்ற, ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வேடனாக இருந்தால் கூட.

*******

 

(May 20 , 2025)

கார்காலக் குறிப்புகள் - 95

Monday, June 02, 2025

 

*நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
**********


எழுதுவதால் அல்லது ஒரு விடயத்தைப் பதிவு செய்வதால் என்ன பயன் என அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. எழுத்தை விட செயற்பாட்டில் இருப்பது என்பது கடினமானது. ஆகவேதான் செயற்பாடுக் களத்தில் இருப்பவர்கள் எப்போதும் எனக்குப் பிரமிப்பைத் தருபவர்கள். என்னால் ஒருபோதும் அப்படி களச்செயற்பாட்டில் ஈடுபடமுடியாது. அதற்கு ஓர் அர்ப்பணிப்பும், தொடர் தோல்விகளைகளைத் தாங்கும் உறுதியான மனப்பாங்கும் தேவை. ஆனால் நான் தொடர்ந்து அவ்வாறிருப்பவர்களுடன் உரையாட விரும்புகின்றவன். அவர்களைப் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகின்றவன்.

ஒரு பொலிஸ்காரர் ஒரு கொலையைக் கடமையின் பொருட்டு செய்கின்றார். ஆனால் அவருக்கு அந்தக் கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. இதன் நிமித்தம் வரும் குற்றவுணர்ச்சியினால் தொடர்ந்து அந்தக் கொலை குறித்து பேச முயல்கின்றார். ஒருவகையாக கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின் அந்தக் கொலை குறித்தும் தனது காவல்துறை பணி தொடர்பாகவும் வெளிப்படையாக ஒரு நூலை எழுதுகின்றார்.

இவ்வாறு ஒரு கொலையைப் பொதுவில் எழுதுவதன் மூலம் பொலிஸும் அரசும் தன் மீது குற்றப்பத்திரிகை வாசித்து ஜெயிலுக்கு அனுப்பும் என்று தெரிந்தும் உறுத்தும் மனச்சாட்சியின் காரணமாக உண்மைகளை எழுதுகின்றார். இந்தப் பொலிஸ்காரரின் விருப்பம் ஒன்றே ஒன்றுதான். தான் இதன் பொருட்டு ஜெயிலுக்குப் போகும்போது அந்தக் கொலையைச் செய்த தனது அதிகாரிகளும் தன்னோடு ஜெயிலில் அருகில் இருக்கவேண்டும் என விரும்புகின்றார். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்காமலே அவர் இறந்து போகின்றார். ஆனால் அவர் எழுதிய நூல் பல அதிர்வுகளை ஏற்படுத்தியதோடல்லாது, கொலை செய்யப்பட்டவருக்கான நீதியை நெடுங்காலத்துக்குப் பிறகு கோரி நிற்கும் ஓர் ஆவணப்பிரதியாக மாறியது.

அந்த நூலே 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்று ராமச்சந்திரன் நாயர் எழுதிய தன் வரலாற்று நூலாகும். 1970களில் நக்சலைட்டுக்களின் முன்னணித் தலைவரான வர்க்கீஸை கைதுசெய்து அநியாயமாக பொலிஸ் கொலை செய்கின்றது. நிராதயுதபாணியாக கைதுசெய்யப்பட்ட வர்க்கீஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கைதுசெய்து கொண்டுபோகும்போது, அவர்களின் உயரதிகாரிகளால் இடைநடுவில் திருப்பியனுப்பட்டு ஒரு பாறையின் மீது இருத்தப்பட்டு வர்க்கீஸ் கொல்லப்படுகின்றார். வர்க்கீஸைக் கொன்ற தோட்டாக்கள் ராமச்சந்திரனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்தவை.

தனது முடிவை முன்கூட்டியே அறிந்துவிட்ட வர்க்கீஸ் ராமச்சந்திரனின் தனக்கு ' மாவோடிஸ்ட்புரட்டி ஓங்குக' என்று முழங்க மட்டும் சாகமுன்னர் அனுமதி தரும்படி கேட்கின்றார். அதைச் சொன்னபடி இறக்கும் 27 வயது வர்க்கீஸுக்கும், ராமச்சந்திரனின் வயதே இருக்கின்றது. இந்தக் குற்றவுணர்வுடன் ராமச்சந்திரன் வாழ்ந்த பொலிஸ் வாழ்க்கையும், அங்கே நிகழும் அனைத்து அட்டூழியங்களையும் ராமச்சந்திரன் சொல்வதே இந்த நூலாகும்.

வர்க்கீஸ் வயநாட்டு ஆதிவாசிகளின் உரிமைகளுக்காகவும் போராடிய ஒரு மாவோயிஸ்ட். அவர் அழித்தொழிப்புகளின் மூலம் நீதியும் நியாயமும் வழங்கமுடிகின்ற போராளி. அவ்வாறு செய்த சில கொலைகளைக் கூட வர்க்கீஸ் ராமச்சந்திரனோடு ஒரு சொற்ப பகல் பொழுதில் ஒப்புக்கொள்கின்றார்.

அவருக்கு அதுவே சரியான வழியாகவும் இருக்கின்றது. ஒரு நாள் விடிகாலை 6 மணியளவில் கைதுசெய்த வர்க்கீஸை அன்றைய மாலை 6 மணியளவில் காட்டுக்குள் வைத்து கொன்றுவிட்டு, வர்க்கீஸ் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்று அவர் இறந்தபின் அவரின் கையில் ஒரு நாட்டுத்துப்பாக்கியை வைத்துவிட்டு பொலிஸ் வழமையான நாடகத்தை நிகழ்த்தி பொதுவெளிக்கு காட்சிப்படுத்துகின்றது.

வர்க்கீஸைக் கைதுசெய்த 5 பொலிஸ்காரர்களிடம் அவர்களின் மேலதிகாரி யார் வர்க்கீஸைச் சுட்டுக்கொல்ல சம்மதம் எனக் கேட்க, எல்லாப் பொலிஸ்காரரும் கையை உயர்த்துகின்றனர். ராமச்சந்திரன் மட்டும் கையை உயர்த்தாது, இப்படி கைதுசெய்யப்பட்ட வர்க்கீஸை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுதானே நியாயமானது என்கின்றார். இதனால் கோபமடையும் உயரதிகாரி, "இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும் அல்லது நக்சலைட்களுடன் நடந்த மோதலில் வர்க்கிஸூடன் மேலும் ஒரு கான்ஸ்டப்பிள் கொல்லப்படலாம்" என்கின்றார். இறுதியில் 'நான் வர்க்கீஸின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீஸை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன். "செய்கிறேன்", குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன். குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்" என ராமச்சந்திரன் எழுதிச் செல்கின்றார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ராமச்சந்திரனுக்கு பதவியுயர்வு வழங்கப்படுகின்றது. ஆனாலும் அவர் வெவ்வேறு காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் வந்தவர் என்றவகையில் பழிவாங்கப்படுகின்றார்; பல்வேறு வகையில் பந்தாடப்படுகின்றார். இவையெல்லாவற்றையும் பார்த்து சகித்தும் தனது வாக்குமூலத்தை எழுதியிருக்கின்றார் என்பதுதான் முக்கியமானது. அது ஒரு தனிமனிதன் தன் மனச்சாட்சிக்கு அடிபணிகின்ற அற்புதமான தருணமெனச் சொல்லலாம்.

இந்த நூலில் ராமச்சந்திரன் தன்னையொரு புனிதனாக முன்வைக்கவில்லை என்பதுதான் ஆறுதளிப்பது. அவர் இலஞ்சம் வாங்குகின்ற ஒரு அடிநிலைப் பணியாளராக இருக்கின்றார். அந்த இலஞ்சத்தின் பெரும்பகுதியை தனது மேலதிகாரிகளுக்குக் கொடுப்பவராக இருக்கின்றார். தனக்குப் பிடிக்காத மக்களை பொதுமக்களை (தமிழர் ஒருவர் உள்ளிட்ட) மீது பொய்வழக்கு போட்டு பழிவாங்குகின்றவராக இருக்கின்றார். அதற்காக வெட்கப்படுகின்றவராகவும் மன்னிப்புக் கோருகின்றவராகவும் இருக்கின்றார்.

அதுபோல பிற்காலத்தில் ஆதிவாசிகளின் பகுதியில் நடக்கும் நிலப்பறிப்பு போராட்டத்தில் காவல் நிற்கும்போது, அவர்களின் சிறுமிகள் உள்ளிட்ட பேரிளம் பெண்கள் வரை பாலியல் அத்துமீறுகின்ற பொலிஸ்காரர்களின் அட்டூழியங்களின் ஒரு மெளன சாட்சியாக இருக்கின்றவராக இருந்ததையெல்லாம் வெளிப்படையாக எழுதுகின்றார். மேலும் பொலிஸ்காரர்கள் அவர்களின் மேலதிகாரிகளுக்கு ஒரு அடிமைபோல அந்த அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்வதையெல்லாம் விபரமாக எழுதியிருக்கின்றார். அதன் நிமித்தம் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ்காரர்களுக்கான சங்கம் அமைப்பதற்குப் பாடுபட்டு அதைக் கட்டியமைத்தது பற்றிய முக்கிய விபரங்களை எழுதியிருக்கின்றார்.

இதில் எனக்கு அதிர்ச்சி தந்த இன்னொரு விடயம் என்னவென்றால், ராமச்சந்திரன் போன்றவர்கள் மேற்கு வங்காளத்துக்கு பாதுகாப்புப் பணியாக 70களில் அனுப்பப்படுகின்றார். அப்போது அங்கே நக்சலைட்டுக்கள் உச்சத்தில் இருந்த காலம். எதிர்க்கட்சியாக இருந்த மார்க்ஸியக் கட்சிதடைசெய்யப்பட்ட காலம். இவர்களைப் போன்றவர்களின் வேலை இந்த நக்சலைட்டுக்களைப் பிடித்து சிறையில் அடைப்பது. அதிகமானோர் இடைநடுவிலே கொல்லப்படுகின்றனர். இதில் கொடூரம் என்னவென்றால் அன்றைய காங்கிரஸ் கட்சிக்காரர் தினமும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் நக்சலைட்டுக்கள், அவர்களின் ஆதரவாளர் என்ற ஒரு பெரும் பட்டியலே அனுப்புவார்களாம். ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு போய் நக்சலைட்டுக்களைக் கைதுசெய்வதும், கொல்வதும் என செய்து கொண்டிருக்கின்றனர். ஆக எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகின்றதோ அது தனது கோரமுகத்தைக் காட்டியிருக்கின்றது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். எனக்கு இது இலங்கையில் 1983 தமிழர் மீதான படுகொலை கொழும்பில் நடந்தபோது சிங்களக்காடையர் தமிழர்களின் (தேர்தல்) பட்டியலோடு தமிழ் வீடுகளைத் தேடிப் போனதை ஞாபகப்படுத்தியது.

ராமச்சந்திரன் வெவ்வேறு இடங்களில் பொலிஸின் அட்டூழியங்கள் நடந்தபோது, தனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகின்றார். அவர்கள் இதெல்லாம் பொலிஸ் வாழ்க்கையில் சகஜம். கடந்துபோ' என்கின்றனர். அதையும் தாண்டி சிலவேளைகளில் ராமச்சந்திரன் மொட்டைக்கடிதம் மாதிரி பத்திரிகைகளுக்கு இந்த விடயங்களை எழுதி அனுப்புகின்றார். சிலவேளைகளில் அவை பிரசுரமாகின்றது. சிலவேளைகளில் குளத்தில் எறிந்த கல்லெறிந்தமாதிரி போகின்றது.

Ramachandran
இதை எழுதுவதற்கு ராமச்சந்திரன் ஒரு வறிய நிலையில் இருந்து வந்தது முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன் அவருக்குள் இயல்பாக இருந்த மார்க்ஸிச ஈடுபாடும் இதற்கு உதவி புரிந்திருக்கும். ஓர் அடிநிலைத்தொழிலாளியாக இறப்பர் தோட்டத்தில் பணிபுரியும் ராமச்சந்திரன் பின்னர் பொலிஸ்காரர் ஆகின்றார். வர்க்கிஸைக் கொன்றவுடன் வர்க்கீஸூன் மூலம் சேகுவாரா பற்றிய புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகின்றார். வர்க்கீஸைக் கைதுசெய்த ராமச்சந்திரன் நல்லதொரு வசதியான குடும்பத்தில் பிறந்த நீயேன் நக்சலைட்டாக மாறினாய் என்கின்றார். அதற்கு வர்க்கீஸ் ஆர்ஜெண்டீனாவில் வசதியாகப் பிறந்து மருத்துவருமான சே, ஏன் கியூபாப் புரட்சியில் பங்குபற்றி பொலிவியாவில் கொல்லப்படுகின்றான். அவனுக்கு இல்லாத வசதிகளா? என்று திரும்பிக் கேள்வி கேட்கின்றார். அதன்பிறகே வர்க்கீஸ் சேயை வாசிக்கின்றார். சிலவேளைகளில் தான் சே பற்றிய நூல்களை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசித்தேன் என்கின்றார்.

1970களில் கொல்லப்பட்ட வர்க்கீஸின் உண்மை விபரங்கள் வெளிவரவேண்டும் என்று ராமச்சந்திரன் விரும்பினாலும், அவருக்கு அதை எப்படி கொண்டுவருவதென்று தெரியவில்லை. 70களில் அவருக்குப் பழக்கமான ஒரு கம்யூனிஸ்ட் தோழரிடம் (வாசு), வர்க்கீஸுக்கு என்ன நடந்ததென்று எழுதிக் கொடுத்தபோதும் அது எங்கும் பிரசுரிக்கப்பட்டபோதும் அது வெளிவராதது இவருக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களின் பின் அந்தக் கடிதம் பிரசுரமாகின்றது. அதைத் தொடர்ந்து 1998இல் ராமச்சந்திரன் வெளிப்படையாக வாக்குமூலத்தைக் கொடுத்து, நூலாகவும் எழுதத் தொடங்குகின்றார்.

இந்த நூல் வெளிவந்து உண்மை வெளிச்சத்துக்கு வந்தபோதும், சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரிகள் எவரும் விசாரிக்கப்படாமலே வர்க்கீஸ் 2007 இல் இறந்து போகின்றார்.

இப்போது எழுதுவதால் அல்லது பதிவுசெய்வதால் என்ன பயன் என்ற கேள்விக்கு வருவோம். வரலாறு எப்போதும் அதிகாரவர்க்கத்திற்குச் சாதமாக இருப்பதில்லை. உண்மைகள் என்றோ ஒருநாள் வெளிவந்து தீரும் என்பது தேய்வழக்குச் சொல்லாடலாகிவிட்டாலும், 2010இல் இந்தக் கொலையைச் செய்ய கட்டளையிட்ட பொலிஸ் உயரதிகாரியான இலக்ஷ்மணாவிற்கு ஆயுள்தண்டணை வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆக, கொலை நடந்த 40 வருடங்களின் பின், இப்போது வர்க்கீஸும், ராமச்சந்திரனும் நிம்மதியடைந்திருப்பார்கள் அல்லவா?

ஒருவருக்கான நீதிக்காக அவரைக் கொலை செய்த இன்னொருவர் எழுதிப் பதிந்துவிட்டுப் போனதால், இன்று நீதி ஏதோ ஒருவகையில் வழங்கப்பட்டிருக்கின்றது. தனது வாழ்க்கைக் காலத்தில் ராமச்சந்திரன் இதை எழுதி வைக்காது போயிருந்தால், வர்க்கீஸுக்கு நீதி மட்டுமில்லை, அவருக்கு இறுதிக்காலத்தில் என்ன நடந்ததென்று எவருக்குந் தெரியாமல் போயிருக்கும். ஆகவேதான் எழுதுவதும்/பதிவுசெய்வதும் முக்கியமென திரும்பச் திரும்பச் சொல்கின்றேன்.

********

* நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திரன் நாயர், தமிழில் குளச்சல் மு.யூசுப்

(May, 2025)