கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு கதையும் சில குறிப்புக்களும்

Monday, January 24, 2005

சுமதி ரூபனின் இந்தக்கதை, புலம்பெயர்தேசத்திலிருந்து எழுதப்பட்டதில் நான் அண்மையில் வாசித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்பேன். சுமதி ரூபன் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களின் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர். சிறுகதைகள், கவிதைகள் எழுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகையாகவும், நல்லதொரு இயக்குநனராகவும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். வாழ்வதற்கான முயற்சிகளிலே தோற்றுக்கொண்டு, அதற்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில், இவ்வாறு படைப்பு முயற்சிகளில் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருப்பவர்களை அவதானிக்கும்போது நான் வியப்பதுண்டு. சுமதி ரூபனின் கவிதைகளில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லாதபோதும் (கிட்டத்தட்ட ஒரே விடயத்தைப் பேசுவதால் அப்படி இருக்கலாம்), அவரது பல சிறுகதைகள் என்னைக் கவருபவை. சில சிறுகதைகள் ஒருவித அதிர்ச்சியாக எழுதப்பட்டது போன்ற பாவனையில் இருந்தாலும், அதையும் மீறிய பல நல்ல கதைகளை என் வாசிப்பனுபவத்தில் பெற்றிருக்கின்றேன். அண்மையில் கூட, மித்ர பதிப்பகம் மூலம் சுமதி ரூபனின் சிறுகதைகள் தொகுப்பாய் வந்ததாய் அறிய முடிகிறது.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தற்கு என்ன காரணம் என்று முதலில் யோசிக்கும்போது, எனக்கு பரீட்சயமான (புலம்பெயர்) சூழலில் இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. அதில் வரும் பாத்திரங்கள் கூட மிகுந்த நம்பகத்தன்மையை உடையதாக படைக்கப்பட்டிருக்கிறது.

அநேக கதைகளில் வருவதைப்போலன்றி, இந்தக் கதையில் வரும் பாத்திரம் வசந்தமலருக்கு காரணம் எதுவுமில்லாமலே (கணவனை கெட்டவனாக காட்டவில்லை) தன்னிலும் வயது குறைந்த பையனோடு உறவு ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கையில் பல சமயங்களில் பலவிடயங்கள் இவை ஏன் நிகழ்கின்றன என்பதே புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. எத்தனை ஏன் போட்டுப்பார்த்து வலைவிரித்தாலும் பதில்கள் சிக்குவதில்லை. அவ்வாறுதான் வசந்தமலரும், முகுந்தனிற்கும் தனக்கும் எப்படி உறவு முகிழ்ந்தது என்று எண்ணி வியப்படைகின்றார், வாசிக்கும் நாமுந்தான்.

அதைவிட நுட்பமான பகுதி இதுதான்...
“தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்”
உறவில் மரபை மீறும் இருவருக்குமே தாலிக்கொடி பெரிய விடயமாகிறது. மேற்கத்தைய கலாச்சாரத்தில் முற்றாக மூழ்கி இருக்கின்றவனுக்கும், தாலிக்கொடியுடன் உறவு கொள்வது உறுத்துகிறது. வசந்தமலருக்கும், தனது கணவன் கட்டிய தாலியைக் கழட்ட மனம் மறுகுகிறது. இந்த முக்கியமான விடயத்தை சுமதி ரூபன் கதையின் ஓட்டத்தில் நாசுக்காய் சொல்லிப்போகிறார். நானறிந்தவரையிலும், தமிழே தெரியாத (அல்லது ஒன்றிரண்டு வார்த்தை) பேசுபவர்கள கலாச்சாரத்தில் பலவிடங்களில் மிக ஊறிப்போயிருப்பதைக் கண்டிருக்கின்றேன். இப்படியானவர்களிலிருந்து வந்த சாதியின் நாற்றமும், மதம் மீதான் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பலவேளைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அற்புதமாகப் போகின்ற கதை முடிவில் கொஞ்சம் சாதாரணமாகிப் போய்விடுவது மாதிரித்தோன்றியது. ஆனால் வசந்தமலரின் கணவன் குமார் வீசும் ஏளனச்சிரிப்பும், கண்களிலுள்ள வன்மமும் ஏதோ தவறுதலாக நடைபெற்று முடிந்துவிட்டது என்பதை வாசகரிடையே விட்டுச்செல்கிறது. அந்த மர்மப்புன்னகை இரண்டுவிதமாய் யோசிக்கவைக்கிறது. பார்த்தியா எனக்கு எல்லாம் நீஙகள் பொத்தி பொத்தி ஒளித்துவைத்திருந்த உறவு ஏற்கனவே தெரியும். வசந்தமலர் விபத்தில் செத்துவிட்டார் இனியென்ன செய்வாய் என்ற ஏளனம் மிதப்பது மாதிரி ஒரு புறமும், மறுபுறம் இப்படி ஒரு உறவு இருப்பதைக் கண்டுபிடித்து, விபத்து என்று சோடித்து வசந்தமலரின் கணவரே வசந்தமலரைக் கொலையும் செய்திருக்கலாம் என்று இருபிரிவாக நினைக்க வைத்தது முடிவு.

(அவசரத்தில் எழுதுகின்றேன். என் வாசிப்பில் பிழையிருந்தால் சுட்டிக்காட்டவும்)

மன்னிக்க வேண்டுகின்றேன்!

Sunday, January 23, 2005

பொடிச்சி மற்றும் நண்பர்களுக்கு,
நான் தவறு செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன். எழுதிய நண்பர் தனிப்பட்டமுறையில் மிகநெருக்கம் என்பதாலும், இதைப் பிரசுரிப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும், அது அறம் சேர்ந்த விடயம் என்பதால் தவறிழைத்திருப்பதாய்தான் தெரிகிறது. எனெனில் அவரோடு இப்போது சிறிதுகாலமாக தொடர்பில்லாததால் அவரின் அனுமதியைப் பெறமுடியவில்லை. இந்தக்கடிதத்தில் அவரது சில தனிப்பட்ட விபரங்களைத் தவிர்த்தே பிரசுரித்துள்ளேன். எனினும் அவரால் விவாதத்தில் பங்குபெற முடியாதிருப்பதால் இதைப் பிரசுரித்தது பிழைதான். அந்த நண்பரிடம் இனி நேரில் காணும்போது மன்னிப்பையும் இந்தப்பதிவை அவரின் அனுமதி பெறும்வரை இங்கிருந்து அகற்றியும் விடுகின்றேன். மனதிற்கு மிகச் சங்கடகமாயிருக்கிறது.எல்லாம் சொதப்பி விட்டேன். மிகவும் மன்னிக்கவும்.

'ம்'

Friday, January 21, 2005

நாவலிருந்து சில பகுதிகள்

"...இனி நான் எழுதப்போவதைப் படிக்கும்போது நீங்கள் சலிப்படையக்கூடும். சாவை வாசிப்பதால் நீங்கள் சலிப்படைகின்றீர்கள். நீங்கள் புத்தகத்தைத் தூக்கி வீசுவதாலோ இனி வரும் சில பக்கங்களை படிக்காமல் தள்ளிவிடுவதாலோ ஒரு காலத்தைக் கடந்து விடமுடியுமென்று நினைக்கின்றீர்களா? அந்தக்காலத்தில் திரும்பவும் திரும்பவும் 'ஜெயவாவோ' முழக்கம் எங்களைச் சூழ்ந்து எழுந்தது. சிங்களத்தில் வெறிக்கூச்சல் வெலிகட முழுவதும் பரவிற்று.

நீளமான விசில்கள் சாவை ஒலித்தன. வெள்ளை நிறத்தில் 'ப்ப்ளின்' துணியில் முழங்கால்களை முட்டும் முழங்கால்களை முட்டும் காற்சட்டைகளும் மேற்சட்டைகளும் அணிந்திருந்த கைதிகள் வை.ஓ கட்டடத்தின் முகப்பிலிருந்த கம்பிகளால் பின்னப்பட்ட பிரதான கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்களில் முதலாவதாக சேபால ஏக்கநாயக்கா கோடரியால் கதவைக் கொத்தினான். வை.ஓ கட்டடத்தைச் சூழ்வும் சிங்கள்க் கைதிகள் சுவர்களில் தொற்றி ஏறினார்கள். அவர்கள் தங்களின் கைகளில் சசிறையின் கிடாரத்தில் சோறு கிளறும் இராட்சத அகப்பைகள், சிறைத் தச்சுத் தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கக்கூடிய உளிகள், மரம் அரியும் வாட்கள் கோடரிகள் போன்றவற்றை வைத்திருந்தார்கள். எங்களின் சிறைக்கூண்டுகள் அதிரலாயின. ஜெயவோவா!
(ப 98-99)

"...அவர்கள் மேலும் சில 'செல்'களை உடைத்துவிட்டார்கள். ஒருவர்ன் ஒரு முழுக்கையை இரத்தம் சொட்ட சொட்ட, தரையில் இழுத்துச் சென்றான். நவரத்திணசிங்கம் வெட்டப்படுகிறார். ரொபேர்ட்டின் உடல் அவர்களால் அலவாங்கால் புரட்டிப் போடப்படுகிறது. 'சிவசுப்பிரமணியத்தையும் கொன்று விட்டார்கள்' என்ற அலறல் கேட்கிறது. ஓவ்வொரு கோடரி வீச்சுக்கும் ஒவ்வொரு உளிக்குத்துக்கும் ஒவ்வொரு அலவாங்கு அடிக்க்கும் ஒரு ஜெயவேவாச் சத்தம் எக்காளத்தோடு எழுகிறது.

சிறையின் தரை முழுதும் உதிரச் சகதி. அந்தச் சகதியில் கொலைக்காரர்கள் நடக்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திரும்பத் திரும்பக் கால்கள் வழுக்கி விழுந்தார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? அதை நான் என் கண்களால் கண்டேன். எங்கள் செல்லின் கதவை உடைக்க முயன்றவர்கள் இரத்தத்தில் நிற்கமுடியாமல் தடுமாறினார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறி விழுகின்றார்கள்..."
(பக 95-96)

"....மாதா எங்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னான். 'கிட்டு மாமாக்கு உங்களின் ஆட்கள் குண்டு வீசியிருக்கிறார்கள்' என்று மறுபடியும் பக்கிரியை எழுந்திருக்கச் சொன்னான். பக்கிரியின் முகம் விகாரமாய்க் கிடந்தது. அவரின் வாயில் நீர் வடிந்தது.

மாதா தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப்போனான். பக்கிரி 'Fucking Weapons' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலை தன் கையால் பற்றி மெல்ல புறத்தே தள்ளிவிட்டார். எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் முன்னே எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்தே அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்..."
(ப 158)

......
ரோசாவசந்த் இந்த நாவலிருந்து சிலபகுதிகளைப் பதிந்ததைப் பார்த்த ஆவலில் நானும் சிலதைப் பதிகின்றேன். பொடிச்சி, மு.மயூரன், வெங்கடேஷ் (சூனாமியிற்கு நன்றியை இன்னமும் எடுக்கவில்லையா? hrrrr) போன்றவர்கள் வாசித்த தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கின்றார்கள்.

சாரு நிவேதிதா....இன்னும் கொஞ்சம்!

Thursday, January 20, 2005

இன்று நண்பர்களுக்கு எழுதிய, நண்பர்களாய் எழுதப்பட்ட பழைய கடிதங்களை எனது கணணியின் பதுங்குகுழியிலிருந்து எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். பழைய கள்ளைப் போல பழைய கடிதங்களும் மிகவும் ருசியானவை என்று புரிந்தது. தற்செயலாய் நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பரொருவருடன் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் குறித்து விவாதித்தபோது நண்பர் ஒருவர்(பெயர் குறிப்பிட பிரியமெனினும் அவரது தொடர்பு இப்போது இல்லாததால், அனுமதி வாங்கமுடியவில்லை) எழுதிய கடிதத்தின் பகுதி மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

"...சாருவின் நாவல்பற்றி நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து முற்றிலும் மாறானது என் கருத்து. பாலியல் விடயங்களை இவரல்ல முதலில் தமிழில் சொன்னது. அதற்கு கு.ப.ரா, ரகுநாதன், ஜி.நாகராஜன், ஜானகிராமன் என்று நீண்ட வரலாறு இருக்கின்றது. ஜி.நாகராஜன் வெளிக்கொணர்ந்த இருண்டபகுதிகள் தமிழிலக்கியத்திற்கு முக்கியமானவை. அவரது நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலில் ஒரு நாளின் பரப்பிற்குள், கசடையும், அன்பையும், கற்பையும், பிறள்வையும் அழகாக சொல்லியிருந்தார். குபராவின் ஆற்றாமை சிறுகதையில் ஒரு பெண்ணினது மனம் கற்பு என்ற கோட்டில் நின்று கொண்டு கடக்க விரும்பியும் கடக்க முடியாமல் ஊசலாடுவதை எடுத்துக்காட்டி, விடியுமா சிறுகதையில் கணவன் இறந்தபின்னர் ஒரு பெண்ணுக்கு விடிந்துபோவதாகக் காட்டி இருந்தார். இந்த விடிவு எதனைக் குறிக்கிறது என்பதே அந்தச் சிறுகதை இன்றும் சிரஞ்சீவியாக இருப்பதற்கான காரணமாக இருக்கிறது.

ஜானகிராமனின் அம்மா வந்தாள், அமிர்தம், மரப்பசு போன்ற நாவல்கள் எல்லாம் இதே உள்ளுடனைக் கொண்ட சிறந்த படைப்புகள்தான். மரப்பசுவில் அம்மணி எல்லோரையும் தொடவிரும்புகிறாள். வைப்பாட்டியாக வாழ்கிறாள். அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாள் சின்னவீடு வைத்திருக்கிறாள். கணவனுக்கும், பரபுருசனுக்குமாக ஒவ்வொரு பிள்ளை பெறுகிறாள். பின்னர் பிராயச்சித்தம் செய்ய பரபுருசனின் மூலம் பிறந்த அப்புவை வேதம் படிக்க அனுப்புகிறாள். இவை அந்தக்காலத்து மீறல்களும், அதற்காக கழுவாய் தேடிய நல்ல மனிதர்களின் உதாரணங்களுமாகும். காலத்தோடு ஒட்டிப் பார்க்கும்போது மேற்படி படைப்பாளிகள் சாருவைவிட உயர்ந்த கலைஆளுமை உடையவர்களாகவும், சமூக உய்வையும் விரும்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.

மேலே குறிப்பிட்டவர்களது காலம், பண்பாடு- வார்த்தைகளில் மிகவும் காப்பாற்றப்பட்ட காலம். இன்று சாருவிற்கு இந்த இறுக்கம் தேவைப்படாத அளவிற்கு சினிமாவும், தொலைக்காட்சிகளும், சர்வதேச வர்த்தக விரிவாக்கம் மூலம் உள்நுழைந்து கொண்ட பிற காலாச்சார அறிமுகங்களும் தளர்த்தி விட்டிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை இன்று தூசணம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணம். ஆகவே தூசணத்தை இலக்கியத்தில் கொண்டு வருவதால் எந்தவிதமான சாதனையும் சாரு செய்துவிடப் போவதில்லை. உள்ளடக்கம் பாலியல் கெடுபிடியை, மரபை மீறுவதாக அமைந்து அதன் பாசையும் வெளிப்படையான பாசையாகி, மீறலை நிகழ்த்துமாகில் சாருவின் சேவையை பாராட்டலாம். ஆனால் புதிது செய்து முகத்தில் வெளிச்சம் விழவேண்டுமென்பதற்காக வலிந்து இழுத்து உள்ளுடனையும் வெளிப்பாட்டையும் புரட்சிகரமானது என்ற பொய்ச் சவடால் விட்டு குரல் காட்டுவது காலத்தின் முன் காணாமல் போய்விடும். இவர் இந்த ரகம். ஒரு பெண்ணின் விரகதாபம் எப்படி இயல்பாகக் கிளம்பி இயல்பான சுய வடிசல்கள் மூலம் நிறைவு காண முடியும் என்ற அறிவே இவரிடம் இல்லை. இதற்கு மேற்படி நாவலில் சில அத்தியாயங்களே சாட்சி. அவற்றை விலாவாரியாக எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை.

இவரது முதல்நாவல் வெளிவந்தபோது உங்கள் வயதுதான் எனக்கும். அன்று அதை வாசித்தபோது மிகவும் புரட்சிகரமாகவும், இப்படிப் பச்சையாக தமிழ்நாவலில் முன்னெப்போதும் (அப்போது சடங்கு படித்திருக்கவில்லை) காணமுடியாத எழுத்துக்கள் இளவயதிற்கு பிரியமாகவும் இருந்தது. ஆனால் நாவலின் முடிவில் வேறெதாவது காத்திரமான விடயம் மனதில் மிஞ்சியதா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் பாருங்கள், ஜானகிராமனையும், குபராவையும், சாருவின் எக்ஸிஸ்டென்சியலிசமும் ·பான்சி பனியனும் படிப்பதற்கு முன்பே படித்திருந்தேன். இன்று இதை ரைப்பண்ணும்போது மீட்டுப்பார்க்கும்போது ·பான்சி பனியனில் சூரியா கண்டடைந்த ஞானங்கள் எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. மாறாக, குபராவும், திஜாவும் படைத்த பாத்திரங்களும், அவற்றின் விடயங்களும் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே நிலையான பாதிப்புக்களை நல்ல படைப்புக்கள்தானே தோற்றுவிக்கும்.

சாருவின் கலகக்குரல்கள் தமிழிற்கு தேவையான ஒன்றுதான். ஆனால் அதற்கு அவர் (ஜெயமோகன் போல) தனக்குத்தானே சூட்டிக்கொள்ளும் முதன்மந்திரி வேசங்கள்தான் அருவருப்பானவை. மற்றும், இன்றைய தலித் படைப்பாளிகள் நுழைந்து வரும் பகுதிகள் பல, பாலியலின் வன்கதவை உடைக்கின்றனவே? சிவகாமியின் இரண்டு நாவல்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். மற்றுமொரு விசயம்- சாரு பாலியல் விடயங்களை எழுதுகிறார்தான் ஆனாலும் அவரது உள்மனம் சுத்த சுயம்புவான ஆண்மனம். பெண்ணை அவளது யோனியுடன் சேர்த்து சொத்தாக பெரிதுவக்கும் வியாபாரியின் புத்தி இவருடையது. இந்த நாவலைப் படித்து முடியும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்...."
..............
சாரு நிவேதிதாவின் போலித்தனம் பற்றி ரோசாவசந்த் விரிவாக எழுதியுள்ளார். நான் நேரடியாக அறிந்த இரண்டு விடயங்களைப் பதிவு செய்துவிடலாம் என்று நினைக்கின்றேன். முதலாவது சாருநிவேதிதா தனது கோணல்பக்கத்தில் ஜெயமோகனின் கனடாக் கூட்டத்தின்போது கவிஞர் சக்கரவர்த்தி மேளதாளத்துடன் இந்துத்துவா அடையாளங்களுடன் வந்து ஜெயமோகனை கிண்டல் செய்திருந்தார் என்று எழுதியிருந்தார். சக்கரவர்த்தி கூட்டத்திற்கு வரும்போது நானும் இன்னும் சில நண்பர்களும் வாசலில் நின்றிருந்தோம். சக்கரவர்த்தி கைகள், முகம் போன்றவற்றில் சந்தனம் இட்டிருந்ததைத் தவிர அவர் வேறொன்றிடனும் வரவில்லை. இது குறித்த,சாரு நிவேதிதாவின் கோணல்பக்கத்தை வாசித்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. என்னடாப்பா நானே நேரில் கண்டனான் இந்தாள் இப்படி எழுதுகிறதே என்று. சிலவேளை நான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த பெண்களை இரசித்துக்கொண்டிருந்ததால் மேளச்சத்தம் கேட்கவில்லையோ என்று நினைத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு நண்பருக்கும் மெயில் போட்டு இப்படி ஏதாவது நடந்ததா என்று கேட்டேன். நான் பெண்களை இரசித்துக்கொண்டிருந்தாலும் சக்கரவர்த்தியின் வரவையும் அவதானித்திருக்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக நண்பரும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது சம்பவம். சாரு நிவேதிதா தனது கோணல்பக்கத்தில் குறிப்பிட்டிருந்த கனடாத் தோழி பற்றியது. தற்செயலாய் ஒரு நிகழ்விற்கு (இலக்கியம் சம்பந்தமானது அல்ல) சென்றபோது அறிமுகமாகி அவரது பெயர் ஏதோ என் மூளையில் க்ளிக்காக நீங்கள் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராய் என்று கேட்க, வாசிப்பேன் என்று சொன்னபோது, உங்களையா சாருநிவேதிதா குறிப்பிட்டு எழுதினார் என்று வினாவ, கொஞ்சம் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். பிறகு அவ்வபோதைய தொலைபேசி/நேரடி உரையாடல்களின்போது, சாரு நிவேதிதாவுடனான நட்பு பற்றி தானாகவே கூறத்தொடங்கினார். அண்மையில் கூட ட்சூனாமி நிதிசேகரித்தலின்போது எங்களுடன் வந்திருந்தார். அந்த தோழிபற்றி சாருநிவேதிதா தனது பத்தியில் எழுதியபோது 6-7 மணித்தியாலங்கள் தொலைபேசியில் தொடர்ந்து கதைத்தது என்றெல்லாம் கூறியதாய் ஞாபகம். ஆனால் தோழி சொன்னதோ ஆகக்கூடியது 1 அல்லது 1 1/2 மணித்தியாலங்களே பேசியது என்று.
.....
கதைகளில் நாவல்களில் எதையும் புனைந்துகொள்ளலாம். உண்மை சம்பவங்கள் என வாசகரை நம்பவைத்து தனது பங்கிற்கு கற்பனையை எல்லாம் சாருநிவேதிதா கலந்தடிப்பதை எப்படியென்று சொல்வது?

சாருநிவேதிதாவின் படைப்புக்கள்

Tuesday, January 18, 2005

'என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு'
-in Zero Degree Novel


மேற்கூறப்பட்ட வார்த்தை எந்தளவிற்கு தமிழ்ச்சூழலிற்கு பொருந்துமோ தெரியாது. ஆனால்,அண்மைய கோணல் பக்கத்தில் கூட தனது படைப்புக்களில் அநேகமானவை சுயவரலாற்றுத்தன்மை கொண்டதே என்பதை சாருநிவேதிதாவே ஒப்புக்கொள்ளும்போது, சாருநிவேதிவாவின் படைப்புக்களை இந்த அளவுகோலை வைத்து அளக்கமுடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது.

சாரு நிவேதிதா முதலில் பிரான்சிலிருந்து வெளிவந்த (வெளிவந்துகொண்டிருக்கிறதா இன்னும்?) உயிர்நிழலின் (பிறகு எக்ஸிலில்)கோணல்பக்கங்களில் மூலமே எனக்கு அறிமுகமானார். கோணல்பக்கங்களில் பரவிக்கடந்த எள்ளல்தொனியும் எதற்கு பயப்பிடாத விமர்சனப்பாங்கும் அவரில் ஒரு மதிப்பு வரவைத்தது. பிறகு அவரது படைப்புக்கள் என்று தேடத்தொடங்கியபோது நேநோவை ஒரு புத்தக்கண்காட்சியில் கண்டு வாங்கினேன். டெல்கியைச் சுற்றி புனையப்பட்ட கதைகள் அதிகம் இருந்தாலும் அதில் பல சிறந்த கதைகள் இருப்பதை தயக்கமின்றி ஒத்துக்கொள்ளுவேன். இப்போது இந்தப்பதிவை எழுதுவதற்காய் மீண்டும் (நான்கு வருடங்களுக்கு பிறகு)இன்று அந்தத் தொகுப்பை எடுத்து வாசித்தபோதும் என் முன்னைய புரிதலில் பிழையில்லை என்றே நினைக்கிறேன். எள்ளலும் எக்காளமாய் சாருநிவேதிதாவைப் போல எழுதுகின்ற தமிழ் எழுத்தாளர்கள் மிகக்குறைவே. இந்திரா காந்தியின் மரணத்தின்பின் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியர்களைப் பற்றிக் கதைக்கும், 'பிளாக் நம்பர்: 27 திரிலோக்புரி', சாதியின் குறுக்குவெட்டுச் சொல்லும், 'உடல்', பிரியமுள்ள சித்தியின் கோரமரணத்தைச் சொல்லும்,'பிள்ளைப்பூச்சி', கதை என்று ஒன்று இல்லாமலே நம் மனதில் தனிமையின் வாதையை படியவிடும், 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்று பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. சாருநிவேதிதாவின் நகைச்சுவையை, 'பிரஸ்சில் இருக்கிறது' என்ற கதையை வாசித்துப்பாருங்கள். புரியும். இன்றும் அதை வாசித்து வயிறு குலுங்கச்சிரித்தேன்.

நேநோவின் வாசித்தபின், சாருநிவேதிதாவின் 'ஜீ(சீ)ரோ டிகிரி' நாவலையும் வாசிக்கவேண்டும் என்று தேடத்தொடங்கியபோது, ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. இந்த நாவல், மையமற்ற பல கதைகளைச் சொல்லிச்செல்கிறது. சிலவேளைகளில் ஒரு டயரியின் பக்கங்களோ என்று யோசிக்கவும் வைப்பவை. ஒரு நேரத்தில் வாசிக்கும்போது அற்புதம் என்றும், இன்னொருபொழுதில் அசிங்கம் என்றும் இரண்டு பிளவாய் என்னை எண்ண வைப்பது இந்த நாவல். முதலில் இந்த நாவலை வாசித்தபோது நாவலில் வெளிச்சமாக எழுதப்பட்ட பாலியல் விவகாரங்கள் சற்று திகைக்க வைத்தன. தமிழில் இதற்கு முன் இப்படி அப்பட்டமான விவரிப்புக்களை முக்கியமாய் oral sex & sexual positions விபரிக்கப்பட்டதை வாசிக்கவில்லையாதலால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தன.

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சுயவரலாற்றுத்தன்மை கொண்டது என்பதை, இந்தக்கதையை சாருநிவேதிதாவின் கோணல்பக்க எழுத்துக்களுடடன் ஒப்புநோக்கும் எவரும் இலகுவில் அறிந்துகொள்ளலாம். முக்கியமாய் பிற்பகுதியிலுள்ள அவந்திகாவின் கடிதங்களும், மகளுக்கான கடிதங்களும் கவிதைகளும். நாவலை இரண்டு மூன்று வாசித்தபின்னும் என் மனதில் தங்கி நிற்பவையும் இந்த இரண்டுந்தான். இந்த நாவலில் பல ஆண்பாத்திரங்கள் (சூர்யா, முனியாண்டி, கதைசொல்லி, etc) வருகின்றன. ஆனால் அவை எல்லாமே ஒரு மனிதனின் பல்வேறு பட்ட நான்களே.

சாரு நிவேதிதாவின் 'எக்ஸ்ஸ்டென்சியலிஸமும் ஃபேன்சி பனியனும்', கொழும்பில் நின்றபோது அக்காவின் புத்தக்கப்பரணிலிருந்து கண்டெடுத்து வாசித்தேன். அதில் சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. பாத்திர்ங்கள் பக்கங்களைப் போல விரிவடைந்துகொண்டேயிருக்கின்றனர். ஆர்த்தி பற்றி வரும் பகுதிகளைத் தவிர இன்றைய பொழுதில் அந்த நாவலை(?) வாசிக்கும்போது நினைவில் எதுவும் வரவில்லை.

எனது வாசிப்பு சாருநிவேதிதாவின் அண்மைக்கால படைப்புக்களிலிருந்து பின் நோக்கிச் செல்வதாய் உள்ளது. ஆனால் கால வரிசைப்படி வசித்திருக்கும் ஒருவர், 'எக்ஸ்டென்சியலிஸமும் ஃபேன்சி பனியனில்' வரும் சூரியாவையும், 'நேநோவைவில்' வரும் முனியாண்டியையும், நேநோவையும் , 'ஜீரோ டிகிரி' நாவலில் தரிசிக்கமுடியும்.

சாருநிவேதிதாவின் நாவல்கள்/கதைகள் பலவகைகளில் விமர்சிக்கப்பட்டுள்ளன. நேநோவில் இருக்கும், 'சிதைவு' கதை நடமாடும் பல உண்மையான மனிதர்களைப் பேசுகின்றது (சிலரை என்னால் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது). அவ்வாறு அந்தக்கதை எழுதப்பட்டதாலே பல பிரச்சினைகள் எழுந்ததாகவும் அறிகின்றேன். மற்றும் சாரு நிவேதிதாவின் எழுத்து நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கிய, ஆபிதின் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் நேநோவில் குறிப்பிடப்படுகின்றது. இன்னமும் களவாடி எழுதிய கதைகள் பற்றி விளக்கமாக சாருநிவேதிதா எதுவும் கூறாது மெளனங்காப்பது கீழ்த்தரமானது. எத்தனையோ ஆண்டுகாலமாய் ஆபிதின் மற்றும் அவரின் உறவுகளுடனான இருந்த நல்ல நட்பை சாரு நிவேதிதா இதன் மூலம் கேவலப்படுத்துகிறார் என்பதே என் தனிப்பட்ட கருத்து. அதனால் சாருநிவேதிதா தனது நட்பை நண்பர்கள் பலரும் கேவலப்படுத்துகிறார்கள் என்று கோணல்பக்கங்களில் எழுதும்போது நகைப்புத்தான் வருகிறது. சனதருமபோதினியில் எழுதப்பட்ட உன்னதசங்கீதத்திலும், இப்போது கோணல் பக்கத்திலுள்ள மதுமிதாவுக்கு சொன்ன பாம்புக்கதைகளிலும் அவர் சிறுமிகள் மீது வைத்திருக்கும் 'மதிப்பு' தெரிகிறது. சிறுபிள்ளைத்தனமாய், chat செய்வதையும், காதலில் (தமிழ்ப்படம் தோற்றது போங்கோ) அடிக்கடி வீழ்வது பற்றி எழுதும்போதும் இந்த ஆளை எந்த categoryக்குள் அடக்குவது என்று யோசிப்பதுண்டு. இது அவரது சொந்த விசயமாய் இருந்தாலும் அதை அவரே வெளியே கொண்டுவரும்போது இரண்டு வார்த்தை நான் சொல்வதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி வேறு பலரைப் போல உள்ளுக்குள் மறைத்து வேடம்போடாமல் தன்னை ஒப்புவிப்பதற்கும் ஒருவித தைரியம் வேண்டும் என்றே நம்புகிறேன். கோணல்பக்கங்களில் இப்படி பல கோமாளித்தளங்கள் இருந்தாலும், பல அற்புதமான பத்திகள் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா, வடஅமெரிக்கா இலக்கியம்/இலக்கியவாதிகள், இன்ன பிற என்று ஆழமாய் எழுதும் பத்திகள் முக்கியமானவை. குஜராத் கலவரம், பெரியார், ரோட்டுப்போடும் தொழிலாளர்கள், அலிகள் என்று பல பத்திகள் மிகக் கரிசனமாகவும், சமூகம் மீதான கறான விமர்சனப்பார்வையுடனும் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு படைப்பாளியை/படைப்புக்களை எந்த அளவிற்கு நேசிக்கிறேனோ அந்தவளவிற்கு வெறுக்கவும் செய்கிறேன் என்றால் அதில் முக்கியமானது சாருநிவேதிதாவின் படைப்புக்கள்.

(சிலவேளைகளில் மேலும் எழுதக்கூடும்).


வாழ்விக்க வந்த தாயே வாழ்வழித்தாய்

Tuesday, January 11, 2005

இந்தப்பாடலை CTR (www.ctr24.com) வானொலியில் இணையத்தின் மூலம் கேட்டேன். ட்சூனாமியின் ஈழத்தில் (அல்லது புலம்பெயர்ந்த தேசத்தில்) வெளியிடப்பட்ட இசைத்தட்டிலிருந்து ஒலிபரப்பப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். மிகவும் உருக்கமான குரலிலும், வலிமையான வசனத்திலும் இந்தப் பாடல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் ட்சூனாமியின் நேரடியான பாதிப்பு இல்லாது, சொந்த தேசத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தை மறக்கடிக்கும் பல்வேறு சூழ்நிலைக்காரணிகள் இருக்கும் இந்தச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாடல்கள்/செய்திகள்/சம்பாஷாணைகள் தாயகத்தை நோக்கி நம் மனதைத் நிச்சயம் திருப்பும்.

கடந்த சனிக்கிழமை ஒன்ராரியோ மாநகரசபையின் திறந்தவெளி அரங்கில், ஈரநினைவுகளின் ஒன்று கூடல் நட்ந்து முடிந்தது. ஏற்கனவே சனிக்கிழமை கனடாவில் ட்சூனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான துக்கதினமாய் பிரகடனப்படுத்தப்பட்டு, மத்திய மாநில அரசாங்கக்கட்டடங்களில் நினைவாராதனைகள் நிகழ்ந்தன. முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் எல்லாம் கனடா தமிழர் பேரவையால் செய்யப்பட்ட நிகழ்வில் பங்குபெற்றியிருந்தனர். Jack Leyton (New Democratic Party leader) புலிகளின் கட்டுப்பாடுகளிலுள்ள பகுதியில் நேரடியாக பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட ஐ.நா செயலாளர் நாயகம் கோ·பி அனான் குறித்த செய்தியையும், இலங்கை அரசாங்கத்தையும் கண்டித்துப்பேசியிருந்தார். (பொங்கு தமிழ் நிகழ்ந்தபோதும், ஏனைய அரசியல்வாதிகள் எல்லாம் சுருண்டு கிடந்தபோது, எவ்விதத்தயக்கமில்லாது வந்து ஈழத்தமிழர்களின் சமாதான முயற்சிகளுக்கான முழுஆதரவை Jack Layton தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்கது). ஈர நினைவுகளின் ஒன்றுகூடலில் இலங்கையில் வெளிநாட்டு உதவிகள் சரியாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக கனடீய பாராளுமன்ற மற்றும் அனைத்து மட்டங்களிலுள்ள அமைச்சர்களுக்கு தமிழ் மாணவர்களால் முன்வைக்கப்பட்டது.

ஈழ இலக்கியவாதிகள் பற்றி விமர்சிக்க பல காரணங்கள் இருந்தாலும் ஆபத்து/உதவி என்று வரும்போது நீளும் அவரது கரங்கள் நம்பிக்கையளிக்கக் கூடியவை. அய்ரோப்பாவில் இலக்கியச்சந்திப்பு நண்பர்கள் நிதிசேகரித்துக்கொண்டிருப்பதுவும், கனடாவில் அண்மையில் வெளியிடப்பட்ட என்.நடேசனின் புத்தகவெளியீட்டில் புத்தகம் விற்று வந்த பணம் முழுதும் ட்சூனாமி நன்கோடைக்கு அளிக்கப்பட்டதும் இதமான செய்திகளாகும். ஈரநினைகளின் ஒன்றுகூடலிற்கு சேரன் போன்றவர்கள் எல்லாம் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இலக்கியவாதிகள் என்றால் சும்மா எழுத்தோடு மட்டும் வாளாவிருப்பவர்கள் என்ற பிரேமிற்குள் நமது எழுத்தாளர்கள் இல்லை என்பது தெம்பூட்டக்கூடியதாகவிருந்தது.

கனடாவைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லவேண்டும். ட்சூனாமிக்காய் 4 மில்லியனின் தொடங்கிய நிதி 425மில்லியன் வரை உயர்ந்திருப்பதில் இங்குள்ள மக்களின் பரந்த இதயம் தெரிகிறது. ஈரநினைவுகளின் ஒன்றுகூடலில் தோழி ஒருவர் சொன்னமாதிரி, கனடாவின் அகண்ட நிலத்தைப்போல மக்களின் மனதும் பரந்துவிரிந்தது என்பது உண்மைதான். அமைச்சர்கள், பிரதம மந்திரி என்று எல்லோரும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களிற்கு செல்ல ஆயத்தமாவதிலும், கனடா நாட்டு நிவாரணம் சரியாக பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்பதில் பிடிவாதமாய் இருப்பதிலும். நம்பிக்கையின் மெல்லிய ஒளிக்கீற்று தெரிகிறது. வேலைக்கு போனபோது உனது தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவிற்கு வருந்துவதாய் ஏதோ சொந்த உறவுகள் போல ஆறுதல்களைச் சொன்ன மனிதர்களைப் பார்க்கையிலும், தனது நண்பி இறந்துவிட்டா அவாவின் funeralற்கு போகோணும், எண்டாலும் உங்கட நாட்டில் நடந்தது மிகவும் கோரம். சின்ன பிள்ளைகள் எல்லாம் கடலோடு போய்விட்டார்கள் என்று ஒரு co-worker சொன்னபோதும் எனக்கும் நெஞ்சு கனத்தது. இந்த நாட்டோடு ஒட்டமுடியாது என்று பல நூறு காரணங்கள் சொல்லி விமர்சிக்கும் என்னைப்போன்றவர்களை எதுவும் சொல்லவிடாமல் மனதைக் கலங்க வைக்கும் சில தருணங்களில் இதுவும் ஒன்று.

காலத்தின் முன் கையறு நிலையராய்...

Sunday, January 02, 2005

Tsunami - Aftermath

இறுதியாய் புலிகளின் சமாதானச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வடகிழக்கில் கிட்டத்தட்ட 19000 மக்கள் இறந்தும், 11000 பேர் காணாமலும் போயிருக்கின்றனர். சூனாமியால் ஏற்பட்ட இழப்பு 30000ற்கு அதிகமாகிவிட்டது என்று தெரிகிறது. இதைவிட தெற்குப்பகுதியிலும் ஆயிரக்கணக்கில் மக்களை இழந்துவிட்டோம். இருபது வருட போரில் இறந்துபோனவர்களைப் போல அரைமடங்கான மக்களை ஒரு நாளில் இயற்கையினால் தொலைத்துவிட்ட கொடுமையை சென்ற ஆண்டு தன் கரிய கரங்களால் எழுதிவிட்டுப் போய் விட்டது.
.................
இன, மத பேதமில்லாமல் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று வரும் செய்தி ஆறுதலிக்கிறது. முஸ்லிம் மக்களுக்காய் குறிப்பிட்ட தொகையை தமிழர் புனர்வாழ்வுக்கழக்கம் வழங்கியிருப்பதும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சிங்களக்குடும்பங்களுக்கு நிவாரணப்பணிகளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முன்னின்று செய்வதும் நம்பிக்கை தரும் விடயங்கள். ஈழத்தில் ஏனைய பகுதியில் வாழும் சிங்களமக்களும் (not the damn politicans and racists) விரிந்த மனதுடன் உதவிகளை தமிழ் மக்களுக்கு செய்துகொண்டிருப்பபதுவும் குறிப்பிடத்தக்கது. புலிகளின் கடற்படை சிறப்புத்தளபதி சூசை ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு சிங்களக் குடிமகன்தான் தங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சடலங்களை அப்புறப்படுத்துவதில் முன்னின்று உழைத்துக்கொண்டிருப்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்திருந்தார்.
.................
சூனாமியின் aftermathதான் இன்னும் பயங்கரமாய் இருக்கும்போல இருக்கிறது. முக்கிய பிரச்சினை தொற்றுநோய்கள் பரவும் அபாயம். சரியான வழியில் சுகாதாரச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், சூனாமியால் இறந்தவர்களைவிட இன்னும் அதிகமானவர்களை இழக்கவேண்டிய அபாயம் உண்டு என்று அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் எச்சர்த்துள்ளது. மற்றது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் கடந்துசெல்லவேண்டிய உளவியல் பிரச்சினைகள். ஒரு செய்தியில் எழுதப்பட்டது போல, "..But psychological and behavioral problems are certain to become more important as the authorities gain control over the life-threatening issues.." என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அத்தோடு இப்போது இரண்டு விதமான பிரச்சினைகளைக் கேள்விப்பட்டேன். இந்த அனர்த்தத்தால் அநாதைகளாகப்போன இலங்கைச் சிறார்களை மேற்குலக நாடுகளிலிருந்து பலர் சுவீகரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது. நல்ல உள்ளங்கள் பல இருந்தாலும், சரியான தகவல் இல்லாமல் adoptationஜ அனுமதிக்க முடியாது. இதைச் சாட்டாக வைத்து child abusers குழ்ந்தைகளை தத்தெடுக்க முயலக்கூடும். எனவே சரியான வரைமுறைகள்/சட்டதிட்டங்கள் இல்லாமல் இலங்கையில் குழந்தைகளைத் தத்தெடுத்தல் தற்போதைக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான ஒரு அதிகாரி கூறியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் மற்றொருவிதமான செய்திதான் கொடுமையானது. இந்த அசம்பாவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் பெண்களை/சிறார்களை பாலியல் வல்லுறகளிற்கு உட்படுத்த பலர் முயல்வதான சம்பவங்கள். ஒரு உதாரணத்திற்கு, "..Since Friday, two other cases of suspected abuse of children were reported, including one by a man who attempted to molest his granddaughter..". UN சிறார்களுக்கான அதிகாரியும் இதுகுறித்து எச்சரிகை விடுத்துள்ளார்."In the aftermath of displacement and shock you do see an increase of abuse and violence against women and children," said Ted Chaiban, head of the U.N. children's agency in Colombo." பலவிதமான கோணங்களுடன் பலப்பிரச்சினைகளைப் பாதிக்கப்பட்டோர் சந்திக்கவேண்டி வரப்போகிறது என்பதை மேற்கூறிய சம்பவங்கள் கட்டியங்கூறுகின்றன.
.................
இவ்வளவு காலமும், தான் இலங்கையில் கால்பதிக்கவில்லையென்று சும்மா ஒளிச்சுபிடிச்சு காட்டிய நம்ம அண்ணாச்சி அமெரிக்காவிற்கு இது நல்ல சந்தர்ப்பம். ஏற்கனவே அமெரிக்காக் கொமாண்டோக்கள் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளித்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரிந்த செய்தி என்றாலும், இது வெளிப்படையாக அமெரிக்க காலூன்றுவதற்கான நல்ல தருணம். சூனாமி பேரழிவிற்கு உதவுவதற்காய் 1500 அமெரிக்க Marines இலங்கைக்கு போகப்போவதென்ற செய்தி மிகவும் அச்சமூட்டுவதாகவே உள்ளது. திருகோணமலைத் துறைமுகத்திற்கான அமெரிக்காவின் தந்திரக்கண் நமக்கொன்றும் தெரியாதல்ல. இப்படி உதவி என்று போய் ஈழத்திலேயே நிரந்தரமாய் தங்கி நமக்கு உபத்திரம் பிறகொருபொழுதில் தரக்கூடும். இப்பவே எமது எதிர்ப்புக்குரல்களை இங்கும் ஈழத்திலும் காட்டாவிட்டால் பாரிய பின்விளைவுகள் வரக்கூடும். உதவியை அமெரிக்கா ஐ.நாவின் உபபிரிவுகளான UNICEF, WHO போன்றவற்றின் மூலம் வழங்க நாம் கட்டாயப்படுத்தலாம். அமெரிக்கா என்றால் நாயைக் காணமுன்னமே எடுடா கல்லென்று அலறுகின்ற ஜே.வி.பியும் அடக்கிவாசிக்கும்போது நாற்காலிக்கனவுகளின் 'அற்புதம்' விளங்குகின்றது. சந்திரிக்காவைப்பற்றிஒன்றும் கூறத் தேவையில்லை. யார் வந்தாலும், என்ரை நிறைவேற்று அதிகார சனாதிபதி நாற்காலிக்கு வேட்டு வைக்காவிட்டால் போதுமென்பது அவரது இன்றைய கொள்கை.
.................
என்னவோ எல்லாம் நடக்குது போங்கோ!