கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சாருநிவேதிதாவின் படைப்புக்கள்

Tuesday, January 18, 2005

'என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு'
-in Zero Degree Novel


மேற்கூறப்பட்ட வார்த்தை எந்தளவிற்கு தமிழ்ச்சூழலிற்கு பொருந்துமோ தெரியாது. ஆனால்,அண்மைய கோணல் பக்கத்தில் கூட தனது படைப்புக்களில் அநேகமானவை சுயவரலாற்றுத்தன்மை கொண்டதே என்பதை சாருநிவேதிதாவே ஒப்புக்கொள்ளும்போது, சாருநிவேதிவாவின் படைப்புக்களை இந்த அளவுகோலை வைத்து அளக்கமுடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது.

சாரு நிவேதிதா முதலில் பிரான்சிலிருந்து வெளிவந்த (வெளிவந்துகொண்டிருக்கிறதா இன்னும்?) உயிர்நிழலின் (பிறகு எக்ஸிலில்)கோணல்பக்கங்களில் மூலமே எனக்கு அறிமுகமானார். கோணல்பக்கங்களில் பரவிக்கடந்த எள்ளல்தொனியும் எதற்கு பயப்பிடாத விமர்சனப்பாங்கும் அவரில் ஒரு மதிப்பு வரவைத்தது. பிறகு அவரது படைப்புக்கள் என்று தேடத்தொடங்கியபோது நேநோவை ஒரு புத்தக்கண்காட்சியில் கண்டு வாங்கினேன். டெல்கியைச் சுற்றி புனையப்பட்ட கதைகள் அதிகம் இருந்தாலும் அதில் பல சிறந்த கதைகள் இருப்பதை தயக்கமின்றி ஒத்துக்கொள்ளுவேன். இப்போது இந்தப்பதிவை எழுதுவதற்காய் மீண்டும் (நான்கு வருடங்களுக்கு பிறகு)இன்று அந்தத் தொகுப்பை எடுத்து வாசித்தபோதும் என் முன்னைய புரிதலில் பிழையில்லை என்றே நினைக்கிறேன். எள்ளலும் எக்காளமாய் சாருநிவேதிதாவைப் போல எழுதுகின்ற தமிழ் எழுத்தாளர்கள் மிகக்குறைவே. இந்திரா காந்தியின் மரணத்தின்பின் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியர்களைப் பற்றிக் கதைக்கும், 'பிளாக் நம்பர்: 27 திரிலோக்புரி', சாதியின் குறுக்குவெட்டுச் சொல்லும், 'உடல்', பிரியமுள்ள சித்தியின் கோரமரணத்தைச் சொல்லும்,'பிள்ளைப்பூச்சி', கதை என்று ஒன்று இல்லாமலே நம் மனதில் தனிமையின் வாதையை படியவிடும், 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்று பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. சாருநிவேதிதாவின் நகைச்சுவையை, 'பிரஸ்சில் இருக்கிறது' என்ற கதையை வாசித்துப்பாருங்கள். புரியும். இன்றும் அதை வாசித்து வயிறு குலுங்கச்சிரித்தேன்.

நேநோவின் வாசித்தபின், சாருநிவேதிதாவின் 'ஜீ(சீ)ரோ டிகிரி' நாவலையும் வாசிக்கவேண்டும் என்று தேடத்தொடங்கியபோது, ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. இந்த நாவல், மையமற்ற பல கதைகளைச் சொல்லிச்செல்கிறது. சிலவேளைகளில் ஒரு டயரியின் பக்கங்களோ என்று யோசிக்கவும் வைப்பவை. ஒரு நேரத்தில் வாசிக்கும்போது அற்புதம் என்றும், இன்னொருபொழுதில் அசிங்கம் என்றும் இரண்டு பிளவாய் என்னை எண்ண வைப்பது இந்த நாவல். முதலில் இந்த நாவலை வாசித்தபோது நாவலில் வெளிச்சமாக எழுதப்பட்ட பாலியல் விவகாரங்கள் சற்று திகைக்க வைத்தன. தமிழில் இதற்கு முன் இப்படி அப்பட்டமான விவரிப்புக்களை முக்கியமாய் oral sex & sexual positions விபரிக்கப்பட்டதை வாசிக்கவில்லையாதலால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தன.

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சுயவரலாற்றுத்தன்மை கொண்டது என்பதை, இந்தக்கதையை சாருநிவேதிதாவின் கோணல்பக்க எழுத்துக்களுடடன் ஒப்புநோக்கும் எவரும் இலகுவில் அறிந்துகொள்ளலாம். முக்கியமாய் பிற்பகுதியிலுள்ள அவந்திகாவின் கடிதங்களும், மகளுக்கான கடிதங்களும் கவிதைகளும். நாவலை இரண்டு மூன்று வாசித்தபின்னும் என் மனதில் தங்கி நிற்பவையும் இந்த இரண்டுந்தான். இந்த நாவலில் பல ஆண்பாத்திரங்கள் (சூர்யா, முனியாண்டி, கதைசொல்லி, etc) வருகின்றன. ஆனால் அவை எல்லாமே ஒரு மனிதனின் பல்வேறு பட்ட நான்களே.

சாரு நிவேதிதாவின் 'எக்ஸ்ஸ்டென்சியலிஸமும் ஃபேன்சி பனியனும்', கொழும்பில் நின்றபோது அக்காவின் புத்தக்கப்பரணிலிருந்து கண்டெடுத்து வாசித்தேன். அதில் சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. பாத்திர்ங்கள் பக்கங்களைப் போல விரிவடைந்துகொண்டேயிருக்கின்றனர். ஆர்த்தி பற்றி வரும் பகுதிகளைத் தவிர இன்றைய பொழுதில் அந்த நாவலை(?) வாசிக்கும்போது நினைவில் எதுவும் வரவில்லை.

எனது வாசிப்பு சாருநிவேதிதாவின் அண்மைக்கால படைப்புக்களிலிருந்து பின் நோக்கிச் செல்வதாய் உள்ளது. ஆனால் கால வரிசைப்படி வசித்திருக்கும் ஒருவர், 'எக்ஸ்டென்சியலிஸமும் ஃபேன்சி பனியனில்' வரும் சூரியாவையும், 'நேநோவைவில்' வரும் முனியாண்டியையும், நேநோவையும் , 'ஜீரோ டிகிரி' நாவலில் தரிசிக்கமுடியும்.

சாருநிவேதிதாவின் நாவல்கள்/கதைகள் பலவகைகளில் விமர்சிக்கப்பட்டுள்ளன. நேநோவில் இருக்கும், 'சிதைவு' கதை நடமாடும் பல உண்மையான மனிதர்களைப் பேசுகின்றது (சிலரை என்னால் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது). அவ்வாறு அந்தக்கதை எழுதப்பட்டதாலே பல பிரச்சினைகள் எழுந்ததாகவும் அறிகின்றேன். மற்றும் சாரு நிவேதிதாவின் எழுத்து நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கிய, ஆபிதின் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் நேநோவில் குறிப்பிடப்படுகின்றது. இன்னமும் களவாடி எழுதிய கதைகள் பற்றி விளக்கமாக சாருநிவேதிதா எதுவும் கூறாது மெளனங்காப்பது கீழ்த்தரமானது. எத்தனையோ ஆண்டுகாலமாய் ஆபிதின் மற்றும் அவரின் உறவுகளுடனான இருந்த நல்ல நட்பை சாரு நிவேதிதா இதன் மூலம் கேவலப்படுத்துகிறார் என்பதே என் தனிப்பட்ட கருத்து. அதனால் சாருநிவேதிதா தனது நட்பை நண்பர்கள் பலரும் கேவலப்படுத்துகிறார்கள் என்று கோணல்பக்கங்களில் எழுதும்போது நகைப்புத்தான் வருகிறது. சனதருமபோதினியில் எழுதப்பட்ட உன்னதசங்கீதத்திலும், இப்போது கோணல் பக்கத்திலுள்ள மதுமிதாவுக்கு சொன்ன பாம்புக்கதைகளிலும் அவர் சிறுமிகள் மீது வைத்திருக்கும் 'மதிப்பு' தெரிகிறது. சிறுபிள்ளைத்தனமாய், chat செய்வதையும், காதலில் (தமிழ்ப்படம் தோற்றது போங்கோ) அடிக்கடி வீழ்வது பற்றி எழுதும்போதும் இந்த ஆளை எந்த categoryக்குள் அடக்குவது என்று யோசிப்பதுண்டு. இது அவரது சொந்த விசயமாய் இருந்தாலும் அதை அவரே வெளியே கொண்டுவரும்போது இரண்டு வார்த்தை நான் சொல்வதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி வேறு பலரைப் போல உள்ளுக்குள் மறைத்து வேடம்போடாமல் தன்னை ஒப்புவிப்பதற்கும் ஒருவித தைரியம் வேண்டும் என்றே நம்புகிறேன். கோணல்பக்கங்களில் இப்படி பல கோமாளித்தளங்கள் இருந்தாலும், பல அற்புதமான பத்திகள் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா, வடஅமெரிக்கா இலக்கியம்/இலக்கியவாதிகள், இன்ன பிற என்று ஆழமாய் எழுதும் பத்திகள் முக்கியமானவை. குஜராத் கலவரம், பெரியார், ரோட்டுப்போடும் தொழிலாளர்கள், அலிகள் என்று பல பத்திகள் மிகக் கரிசனமாகவும், சமூகம் மீதான கறான விமர்சனப்பார்வையுடனும் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு படைப்பாளியை/படைப்புக்களை எந்த அளவிற்கு நேசிக்கிறேனோ அந்தவளவிற்கு வெறுக்கவும் செய்கிறேன் என்றால் அதில் முக்கியமானது சாருநிவேதிதாவின் படைப்புக்கள்.

(சிலவேளைகளில் மேலும் எழுதக்கூடும்).


3 comments:

Chandravathanaa said...

சாருநிவேதிதாவின் எல்லாப் படைப்புக்களுமே எனக்குக் கிடைக்கவில்லை.
கிடைத்த உன்னதசங்கீதம் ஆச்சரியத்தையும் வெறுப்பையும் தந்தது.
ஒரு பெண்குழந்தையின் மனதையும் செயலையும் இத்தனை வக்கிரப் படுத்தி...

உன்னதசங்கீதம் மூலம் சாருநிவேதிதாவின் பேனா முனை கூட பெண்களை நிர்வாணப் படுத்தி அணுஅணுவாகச் சித்திரவதை செய்து தனது வக்கிரத்தன்மையை காட்டியிருக்கிறது. பேனா முனையிலேயே இத்தனை வக்கிரமும் குரூரமும் தோய்ந்திருக்கும் என்றால் சிந்தனா சக்தி எவ்வளவு து¡ரம் வக்கிரப் பட்டிருக்கும்

1/18/2005 03:01:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

உயர்தர உல்லாச விடுதிகளில் விலையுயர்ந்த மேலைத்தேய மதுக்கிண்ணத்துள் உருகி வழியும் பனித்துண்டங்களைப் பார்த்தபடி சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களைப் பற்றி எழுதுபவர் சாருநிவேதிதா என்று ஒருவர் விமர்சித்திருந்தார்.இதற்காகத் தான் எழுத்திலிருந்து வாழ்க்கையையும் வாழ்க்கையிலிருந்து எழுத்தையும் புரிந்து கொள்ளாதே என்று எழுதி தப்பித்துக் கொள்கிறார் என நினைக்கிறேன்.ஆனாலும் உன்னத சங்கீதத்தை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வது என்பது என்னாலேயே விடைகாண முடியாத ஒன்று. சுதந்திரம் என்பதற்காக பொது இடத்தில் ஆடை உரிந்து நடப்பதுதான் நவீனத்துவம் அல்லது புதுமை என்றால்.உன்னத சங்கீதம் புதுமை

1/18/2005 04:38:00 AM
Anonymous said...

exactly....I like some of his writings..but I hate him so much also for his way of spoiling everything....he is an intellectual moron...
-Bala.

1/22/2005 04:15:00 PM