கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Untitled

Wednesday, May 11, 2005

ஒவ்வொருவரின் வருகைகளும்
கண்காணிக்கப்பட்டு
அவர்களின் முன்/பின் கதைகள்
மூச்சுக்கூட விடமுடியா
பெரும்புகையாய் கிளம்பும்
விழாக்கள்
மனதிற்கு உவப்பில்லாதவை

பிரியமானவர்களின் விருந்துகள்
புறக்கணிக்கமுடியாதன.

பிறரைக் காயப்படுத்தித்தான்
நம்பிக்கைகள்
வாழவேண்டுமென்பதில்லை
மனிதர்கள் முக்கியம்
எனக்கு.

நெளிநெளியான
வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை
அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை
இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல்
இருக்க முடிவதில்லை

சூழலின் இறுக்கந்தளர்த்தி
சிறுபுன்னகையுடன்
இவர்களை இரசிக்கத்தொடங்கினால்
விழாக்களின் உயிர்ப்பை
அறிந்துகொள்ளலாம்
சிலவேளைகளில்

இன்றைய விருந்தில்
தேனீக்களாய் பறந்துதிரிந்து
அறுசுவையுணவு பரிமாறிய
வளரிளம்பெண்கள் சிலிர்ப்பூட்டினர்
கோடைகாலத்து சிறுமழைபோல

அவர்களுடன் உரையாடுவதற்கான
காலமும் தனிமையும்
கனிந்தபோதும்
இப்படி
இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை
'வேசிகள்' என விளித்து
நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும்
என்னைப்போன்றவர்களின்
நினைவுவர
விலகிப்போகின்றேன்
புன்னகைகளுடன்

முகஞ்சுழிக்காது
அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்
அவர்களை
ஒரு மேசையில் அமர்த்தி
சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு
ஆறுதலாய்
உணவு பரிமாறும் ஆசை
எழுகிறது எனக்குள்

விழாவின் முடிவில்
எஞ்சியிருந்த
அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களை
ஒன்றாய் இணைத்து
நிலவினொளியில் பறக்கவிடுகையில்
குதூகலத்துடன்
ஆடத்தொடங்குகின்றான்
அண்ணாவின் மகன்

அவன் நடனம் கண்டு
கலகலவெனச் சிரிக்கும்
அந்தப்பெண்களை அவதானிக்கையில்
என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும்
பெண்களை
வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றது.

May 07/05
...dedicated to one of my brother's sons...

20 comments:

கறுப்பி said...

//இப்படி
இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை
'வேசிகள்' என விளித்து
நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும்
என்னைப்போன்றவர்களின்
நினைவுவர\\

Good for you, keep it up.

5/11/2005 03:41:00 PM
இளங்கோ-டிசே said...

கறுப்பி,
அய்யயோ, நான் எழுதியதற்கே நானே விளக்கம் கொடுக்கும் இழிநிலை' (நன்றி: பெயரிலி) கடைசியில் வந்துசேர்ந்துவிட்டதே.
'என்னைப்போன்றவர்கள்' என்று நான் குறிப்பிட வந்தது 'அவ்வாறு இருக்கும் ஆண்களை' மட்டுமே. இப்படீ இருப்பவர்களை, 'வேசிகள்' என்று எந்த ஆண் சொன்னாலும், அது முழு ஆண்களுக்குமே இழிவுதான் என்று அர்த்தப்படுத்தி, அந்தத்தவறில் அனைத்து ஆண்களுமே குற்றவாளியாக்கப்படவேண்டும் என்ற நினைப்பில்தான் 'என்னைப் போன்றவர்கள்' என்று எழுதியிருந்தேன்.

ஆக்ககுறைந்தது, முழுக்கவிதையும்(?) வாசித்திருந்தால், கவிதையைச் சொல்பவன் அந்த அர்த்தத்தில் சொல்லவரவில்லை என்பது புரியும் என்று நம்புகின்றேன். இல்லை அது தவறான அர்த்தத்தைத்தான் இந்த விளக்கத்தைத் தாண்டியும் கொடுக்கின்றதென்றால், வரிகளை மாற்றிவிடுகின்றேன் :-(((.

5/11/2005 03:59:00 PM
Anonymous said...

பதிந்தது:karthikramas

Yo bro where is my comment? ate it for breakfast?
Good Kavithai..


11.5.2005

5/11/2005 05:38:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக், மன்னிக்கவும். முதலில் பதிந்தபின் கவிதையில் சில மாற்றம் செய்து திரும்ப போஸ்ட் செய்யும்போது உங்களின் பின்னூட்டம் தவறவிடப்பட்டுவிட்டது என்று நினைக்கின்றேன். நான் உங்களின் பின்னூட்டத்தை நீங்கள் எழுதியவேளையில் வாசித்திருக்கவும் இல்லை. இப்போது நீங்கள் கூறியபின்தான் எனது மின்னஞ்சலை துழாவியபோது, உங்களின் பின்னூட்டம் அகப்பட்டது. கீழே தருகின்றேன்.
....
பதிந்தது:karthikramas

//வேசிகள்' என விளித்து
நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும்
என்னைப்போன்றவர்களின்//

கெட்ட பையா இனிமே உங்கூட கா..

11.5.2005

5/11/2005 06:06:00 PM
கிஸோக்கண்ணன் said...

//பிறரைக் காயப்படுத்தித்தான்
நம்பிக்கைகள்
வாழவேண்டுமென்பதில்லை
மனிதர்கள் முக்கியம்
எனக்கு\\
இதில் எனக்கு உடன்பாடில்லை. நம்பிக்கைகளோடு இலட்சியத்தினையும் கொள்கையினையும் சேர்த்துக் கொள்ளலாமா?

கல்யாணக் கொண்டாட்டங்களில் உணவு பரிமாறி, மணமக்கள்வரும்போது பூச்சொரியும் இளம் பணிப்பெண்களைத்தான் இங்கு நீங்கள் குறிப்பிடுகின்றீகள் என்று அடிக்குறிப்பிட்டால் படிப்பவருக்கு இலகுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

உங்கள் அண்ணாவின் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

5/11/2005 06:53:00 PM
Anonymous said...

ஒரு இனிமையான விழாவைப்பற்றி பேசும்போது, தேவையில்லாத வார்த்தைகள் எதற்கு? இப்படிப்பட்ட வார்த்தைகள் இல்லாதவை... கவிதைகள் என்ற கணக்கில் வர இயலாதவையோ...நீங்கள் நல்ல விமர்சகர் ஆயிற்றே!... உங்கள் கவிதைகளையும் விமர்சித்துக் கொள்ளுங்கள் உங்களுக்குள்.

5/11/2005 08:19:00 PM
இளங்கோ-டிசே said...

கிஸோ, நமது நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்கமுடியாதல்லவா? கோயிலுக்குப் போக விருப்பமில்லாதுவிட்டாலும், வாவென்று அம்மா கேட்கும்போது, கோயிலுக்குப் போவதில்லையா அல்லது தீபாவளி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு இருந்தாலும், தன்னோடு கொண்டாட வாவென்று கூறும் தோழியிடம் சேர்ந்து கொண்டாடுவதில்லையா? நிச்சயம் எனது நம்பிக்கைகளைவிட இந்தச்சந்தர்ப்பத்தில் அவர்களின் சந்தோசத்திற்குத்தான் முன்னிடம் கொடுப்பேன். சிலவேளைகளில் சமரசம் என்று நீங்கள் கூறிக்கொள்ளலாம். ஆனால் ஏலவே கூறியதுபோல, நம்பிக்கைகளைவிட சகமனிதர்கள் என்னளவில் எனக்கு முக்கியம்.
....
//ஒரு இனிமையான விழாவைப்பற்றி பேசும்போது, தேவையில்லாத வார்த்தைகள் எதற்கு? இப்படிப்பட்ட வார்த்தைகள் இல்லாதவை... கவிதைகள் என்ற கணக்கில் வர இயலாதவையோ...//
அப்படிப்போடு! நிச்சயம் எதையுமே நான் திணிக்கவில்லை மற்றும் இப்படிப்பட்ட வார்த்தைகளை நுழைத்தால்தான் கவிதையின் கணக்கில் சேர்ந்துக்கொள்ளப்படும் என்று நினைத்தும் எழுதியதில்லை. நான் எழுதுபவையே கவிதைகள்தானா என்ற சந்தேகமே நீண்டகாலமாக உள்ளது :-)). வாழ்வில் மிகநெருக்கமாயிருந்த ஒருபெண், தன்னை யாரோ ஒருவர் B... என்ற அழைத்துவிட்டார் என்று கூறியபோது, அந்தப்பெண் மீது வேறு சில காரணங்களால் இருந்த கடும்கோபத்தைக் கூட மறந்து, தேற்றிவிட்டுத்தான் வாழ்வில் நகர்ந்திருக்கின்றேன். மற்றும் நான் இந்த வார்த்தையை ('வேசிகள்': கவனிக்க நான் மேற்கோள் குறிக்குள்தான் கவிதையிலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன்) என்றேனும் ஒருநாள் யாராவது ஒருபெண் மீது பிரயோகிக்கப்போகின்றேன் என்றால், அது எனது குடும்பத்துப்பெண்களிலிருந்து, அருமையான தோழிகள்வரை அனைவரையும்
இழிவுபடுத்துகின்றேன் என்றே அர்த்தம் கொள்வேன்.
மற்றபடி, நீங்கள் கூறிய //ஒரு இனிமையான விழாவைப்பற்றி பேசும்போது, தேவையில்லாத வார்த்தைகள் எதற்கு?// உண்மைதான், ஆனால் இப்படி வார்த்தைகளைப் பிரயோகித்த மனிதர்களைப் பார்த்தபடி, அவர்கள் அப்படி இந்த வார்த்தையைச் சொல்வதை மிக இயல்பான விசயம்போல கதைப்பதைக் கேட்டபடி, இந்த மாதிரி விழாக்களில் ஒன்றுமே கெட்டது நடக்கவில்லை என்று இந்த விசயங்களைப் பேசாமல் இருப்பது இன்னும் அபயகரமானதல்லவா?

5/12/2005 12:49:00 AM
Kannan said...

//முகஞ்சுழிக்காது
அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்
அவர்களை
ஒரு மேசையில் அமர்த்தி
சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு
ஆறுதலாய்
உணவு பரிமாறும் ஆசை
எழுகிறது எனக்குள்//

உங்களிடம் கொஞ்சம் பாடம் படிக்க உள்ளது ;-)

...

இங்கே ப்ரிகேட் ரோட்டில் ஒரு மாலை இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் என்னவோ சிரித்துப் பேசிக்கொண்டே என்னைக் கடந்தார்கள். அப்போது ஒரு பெண் மற்றவளிடம் சொல்கிறாள் "No, Bitch! I was gonna do it anyway..." அப்படி விளித்துக் கொள்வது தான் இப்போதைய fashion போல...

என்னவோ bitch, bitch என்று கதைக்கிறீர்களே? இதுதானைய்யா பெங்களூர்!

5/12/2005 01:06:00 AM
Anonymous said...

நான் போட்ட காமெண்ட் காணல.
DJ நீங்க தலைப்பை நீளமா வைச்சா ப்லொகர் சிக்கல் பண்ணும்.
-----------
இந்த கவிதை நல்லா இருக்கு.
இயல்பாவும்.

5/12/2005 08:52:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்கள் எழுதிய கறுப்பி, கார்த்திக், கிஸோ, அப்படிப்போடு, கண்ணன், பாரிக்கு நன்றி!
....
பாரி, நீங்கள் முதலில் எழுதிய பின்னூட்டம் blogger குழப்படி செய்ததால் தவறிவிட்டதென்று நினைக்கின்றேன் :((. (உமக்கு எத்தனை தரம், சொந்தமாய் ஒரு வீடு கட்டும் கட்டும் என்று சொன்னேன் என்று மதி, இதை வாசித்தால் அடிக்கத்தான் வருவார் :-)) ). கண்ணன், இதுவரை இந்தியா சென்றால், சென்னைக்கும், திருநெல்வேலிக்கும் போகலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படியே பெங்களூரிலும் தெரிந்த ஒருவர் இருப்பதால், அங்கேயும் போனால் குதூகலமாய் இருக்கும் என்று பட்சி சொல்கின்றது. என்ன வரவேற்கத் தயாரா :-). அதுசரி, உங்களுக்கு கையில் சற்று சுகவீனம் ஏற்பட்டதாய் உங்கள் நண்பரொருவர் எழுத வாசித்திருந்தேன். இப்போது சுகமா?

5/12/2005 11:19:00 PM
Kannan said...

டிசே,

//என்ன வரவேற்கத் தயாரா//

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? கண்டிப்பா வாங்க, பின்னிரலாம்!

ஒரு பழைய பதிவில் இருந்து...

கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு
href="http://eeshop.unl.edu/rsi.html">RSI
வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்)



தட்டச்சுவதைக் குறைத்தது, உடற்பயிற்சி, யோகா என்று (அவ்வப்போது) செய்வது, இருக்கையில் நீண்ட நேரம் உட்காராமல் எழுந்து கொஞ்சம் நடை பயிலுவது என்று வலி குறைந்திருந்தாலும் முற்றிலும் விட்ட பாடில்லை. RSI பக்கத்து சுட்டியை தயவு செய்து படித்துப் பாருங்கள்.

5/13/2005 12:49:00 AM
கறுப்பி said...

கவிதையின் புரிதல் பற்றியதல்ல நான் கூறவந்தது ஆண்கள் (சிலர்?? பலர்??) சுதந்திரமாக வாழும், இருக்கும் பெண்களை எப்படிப் பார்க்கின்றார்கள் என்றும் தாங்கள்?? அப்படிப்பட்டவரல்ல அவர்களைப் புரிந்து கொண்டு நட்போடு இருக்கு முயலும் ஒருவர் என்றும் கூற வருகின்றீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். தங்கள் நல்ல மனதுக்கு முதலில் நன்றி. அடுத்து இயல்பாய் சிரித்துப் பழகும் பெண்களுக்கு மிக நல்ல மனது கொண்ட ஆண்களில் கரிசனை தேவை இல்லை. அவர்களுக்குத் தெரியும் ஆண்கள் பெண்கள் (நல்ல) உட்பட எப்படித் தம்மைப் பார்க்கின்றார்கள் என்று. அவர்களின் பார்வையையும் தாண்டி வந்ததால்தான் அவர்கள் சுதந்திரமாக சிரித்துப் பழகுகின்றார்கள். (இல்லாவிட்டால் தலைகுனிந்து ஒரு மூலையில் தம்மைப் பொருத்திக் கொள்வர்)
என்னுடைய அனுபவத்தில் சுதந்திரமாய் தாம் நினைத்த, விரும்பிய படி வாழும் பெண்களை நாங்கள் கொச்சைப் படுத்தாது முழுமனதுடன் நண்பிகளாக ஏற்றுக் கொள்கின்றோம் எனும் ஆண்களுக்கும் "வேசி" என்று அவர்களை அழைப்பவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. நான் சாதி பார்ப்பவனில்லை. தலிக்கள் எங்கள் வீட்டிற்கு வரலாம், எம்மோடு சரிசமனாக இருந்து சாப்பிடலாம் எனக்கு மிகவும் நல்ல மனது என்பது போல்தான் இருக்கின்றது உங்கள் கருத்தும். புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

5/16/2005 01:21:00 PM
இளங்கோ-டிசே said...

கறுப்பி,
நான் கூறவந்தது வேறு. நீங்கள் சொல்ல விழைவது வேறு. எனினும் உங்கள் கருத்துக்கு நன்றி.
.......
நான் எழுதியதோடு சம்பந்தப்பட்ட ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
//அவர்களுக்குத் தெரியும் ஆண்கள் பெண்கள் (நல்ல) உட்பட எப்படித் தம்மைப் பார்க்கின்றார்கள் என்று. அவர்களின் பார்வையையும் தாண்டி வந்ததால்தான் அவர்கள் சுதந்திரமாக சிரித்துப் பழகுகின்றார்கள். (இல்லாவிட்டால் தலைகுனிந்து ஒரு மூலையில் தம்மைப் பொருத்திக் கொள்வர்).//
உண்மையாக இருக்கலாம். நான் எனது 'கவிதையில்?' கூறியது, இப்படியான சுதந்திரமான பெண்களை அல்ல, விழாக்களில் பண்புரியும் பெண்களை மட்டுமே. அவர்கள் அப்படி அங்கே பணிபுரியும்போது, என்ன சொன்னாலும் முகத்தைச் சுழிக்காது சிரித்தபடிதான் பணிவிடைகள் செய்யவேண்டும் எனபது விதி. அதைத்தான் பல ஆண்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள் என்று குறிப்புணர்த்தவே முயன்றேன். நீங்கள் கூறக்கூடும், இப்படியான பணிக்கு வரும் பெண்கள் இப்படியெல்லாம் ஆண்கள் சேட்டைகள் செய்வார்கள் என்று ஏற்கனவே அறிந்துவிட்டுத்தான் வருகின்றார்கள் என்று. எப்படியெனினும், மற்ற சாதாரணபெண்கள் போல, ஏதும் பிடிக்காவிட்டால்கூட அவர்கள் தங்கள் எதிர்ப்பை/கோபத்தைக் காட்ட எந்தச் சந்தர்ப்பமும் இப்படியான விழாக்களில் பணிபுரியும் பெண்களுக்கு வராது என்பதே யதார்த்தம் (இல்லாவிட்டால் பேசிவிட்டு வேலையைத்துறக்கத்தான் வேண்டும்).

5/16/2005 06:24:00 PM
இளங்கோ-டிசே said...

கண்ணன்,
நீங்கள் சுகமாயிருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. அத்துடன் RSI இணைப்புக்கும் நன்றி. உங்களைப் போல அல்லவெனினும், எனக்கும் விரல்களில் பெரும் உழைவு அவ்வப்போது வரும். தாங்கமுடியாது நரம்பியல் நிபுணரிடம் போனபோது அவர், முழங்கால், முழங்கை, விரல்கள் என்று எல்லா இடத்திலும் உலோகக்கோலால், ணங் ணங் என்று அடித்துப்பார்த்துவிட்டு, ஒரு பிரச்சனையுமில்லை என்று மட்டும் கூறினார் :-(.

5/16/2005 06:38:00 PM
Anonymous said...

உங்கள் கவிதை மிக அழகானது.

உண்மையை உள்ளபடி உரைத்திருக்கிறீர்கள். விளைவாக மனதில் பட்டதையும் சொல்லியிருக்கிறீர்கள்.
இதிலெங்கே வந்தது கருத்துப்ப்பிழை, சொற்பிழை, பொருட்பிழை ?

ஒருவேளை கவிதையின் அழகில் உள்ளடக்கத்தை கோட்டை விட்டுவிட்டேனோ :-)

கடந்து சென்ற யாரோ....

5/16/2005 06:42:00 PM
Anonymous said...

பதிந்தது:சக்தி

எனக்கு வாதம் பண்ண ஒரு வரிகளும் கிடைக்கவில்லை, கவிதை நன்றாக இருக்கின்றது.

17.5.2005

5/17/2005 11:00:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்கள் இட்ட, கடந்து சென்ற யாரோ ;-), மற்றும் சக்தியிற்கு நன்றி.
ச்கதி, நீஙகள் பிரம்ப்டனில்தானே இருக்கிறீர்கள். ரொரொண்டோவில் ஒரு வ்லைப்பதிவு நடைபெறுவது அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். கலந்துகொள்ளலாமே :-).

5/19/2005 10:06:00 AM
Narain Rajagopalan said...

//என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும்
பெண்களை
வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றத//

Mamae.. nee namma allu. varen. varen. 2 weeks kazhichu vandhu kalayaren. mathathu ellam, thooki podu. ippothaikku, en laptopla "vaa vaa nee vaarangati poo" ;-)

[i dont have eK. installed here. so sorry for the english comment ]

5/21/2005 05:08:00 AM
இளங்கோ-டிசே said...

நரேன், பின்னூட்டத்திற்கு நன்றி.
மும்பையிற்கும், பெங்களூரிற்கும் பயணப்படுவதை விரைவில் முடித்து, பதிவுகள் எழுதுங்கள். வேலை விசயம் என்று கூறிவிட்டு, மும்பைத் தெருக்களில், மல்லிகா ஷெரவத்தையும், தியாவையும் தேடியலையவதாய் கேள்விப்பட்டேன். மேலதிக உதவி தேவையென்றால், எனக்குக் கூறுஙகள். நானும் வந்து உஙகளோடு 'தேடலில்' என்னையும் இணைத்துக்கொள்கின்றேன் :-).

5/24/2005 11:54:00 AM
நளாயினி said...

நல்ல அழகான கவிதை. கவிதையை வாசித்துவிட்டு மெய்சிலிற்துப்போனேன்.

நளாயினி

3/08/2007 06:37:00 PM