தமிழ்ப் பெண்புலி

தமிழ்ப் பெண்புலி
திறனாய்வு

நெடுஞ்சாலை

நெடுஞ்சாலை
திரை

சிறுகதைகள்

சிறுகதைகள்
திறனாய்வு

கெளரி

கெளரி
க‌தை

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

Monday, July 25, 2005

அப்போது எனக்கு ஜந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளின் handle barல் ஒரு கையையும், மறுகையில் பை நிறைய இனிப்புக்களுடன் நேர்சரி வகுப்புக்கு போகின்றேன். வகுப்பு, மாணவர்கள் எதுவுமற்று வெறுமையாக இருக்கின்றது. ஆசிரியர் தொலைவில் வருவது தெரிகின்றது. 'இன்றைக்கு ஹர்த்தால் எல்லோ. வகுப்பு இல்லை என்று உங்களுக்கு முதலே தெரியுந்தானே' என்று அண்ணாவிடம் கூறுகின்றார். 'ஓம் தெரியும், இவன் தான் சிலநேரம் நேர்சரி வகுப்பு நடக்குமென்டு கூட்டிக்கொண்டு வந்தவன்' என்கிறார் அண்ணா. எனது முகத்தில் கவலையும் மனதில் வெறுமையும் நிரம்ப திரும்புகின்றேன். அன்று எனது பிறந்ததினம்.எங்கள் வீட்டு வரவேற்பறையில் வள்ளுவரும், அண்ணாவும், கலைஞரும்தான் எப்போதும் காட்சி தந்தபடி இருப்பார்கள். ஈழத்தில் இருந்தவரைக்கும் அப்பா ஒரு தீவிர நாத்திகராக இருந்திருக்கின்றார். திராவிடக் கட்சிகளின் மீது மிகுந்த அபிமானமும் நம்பிக்கை உடையவராக ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும். ஊரில் இருந்த வரைக்கும் (இப்போதும் கூட) தைப்பொங்கலையோ, வருடப்பிறப்பையோ அயலவர்கள் கொண்டாடியமாதிரி நாங்கள் கொண்டாடியதில்லை. அதற்குக் காரணம் அப்பா நாத்திகராக இருந்தது அல்ல. வேலையின் நிமித்தம் எமது தந்தையார் மட்டக்களப்பு, வன்னி, தீவுப்பகுதிகள் என்று மாறி மாறி அலைந்தபடி இருந்தவர். எல்லைக் கிராமங்களில் சிங்கள இனவாதிகளால் அந்த மக்கள்படும் துயரைக் கண்டதால், 'அவர்கள் அங்கே துன்பப்படுகையில் இங்கே எங்களுக்கு என்ன கொண்டாட்டம் குதூகலம் வேண்டிக்கிடக்கிறது' என்று கூறி விழாக்களைக் கொண்டாடும் எமது ஆசைகளை இல்லாமற்செய்துவிடுவார். அந்தக்காலத்தில், போரின் எந்தத் துளியும் தீண்டாது எங்கள் கிராமம் மிக இயல்பாயிருந்தது. பொங்கலுக்கு, வருடப்பிறப்புக்கு என்று பக்கத்து வீட்டுக்காரர்கள், கோலம் போட்டு வாழைகள் நாட்டி, வெளி முற்றத்தில் பொங்கிப் படைக்கும்போது அப்பாவை மனதுக்குள் திட்டியிருக்கின்றேன். கொண்டாட்டங்களின்போது அயல் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குதூகலத்தைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கின்றேன். எனக்கும் எனது பெற்றோர் கைவிசேடம், புது ஆடைகள் விழாக்களின்போது தரமாட்டார்களா என்றும் ஏங்கியிருக்கின்றேன்.போர் தீண்டாத எந்த ஊரையும் இன்றைய பொழுதில் ஈழத்தில் பார்க்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரைவிட்டு முற்றாகவே வெளியேற வேண்டி நிலை வந்தது. அதுவரை, சிங்கள் இராணுவம் தனது முகாமைவிட்டு கொஞ்சம் முன்னேறும்போது, அவ்வவ்போது வேறு கிராமங்களுக்கு சென்று விட்டுத் தங்கித் திரும்பிவருவதுதான் வழமையாக இருந்தது. பிறகு சண்டைகொஞ்சம் கடுமையானபோது இரவுகளில் பக்கத்து ஊரில் போய் படுத்துவிட்டு பகல்பொழுதில் ஊரிற்குத் திரும்பி வருவதுமாயும் இருந்தோம். தமிழர் பிரதேசங்களை கைப்பற்றிக்கொள்ள இராணுவம் இரவுநேரங்களையே அந்தக்காலத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழமையாக இருந்ததால், அப்படி பகல்/இரவு என் இரண்டுவிதமான விக்கிரமாதித்திய வாழ்க்கை முறைக்கும் நாங்கள் பழக்கமாயிருந்தோம். அதுவும் கார்த்திகை, மார்கழி போன்ற குளிரும் மழையும் கூடிய காலங்களில் விடிகாலையில் எழும்பி ஊருக்குத் திரும்பிப் போவது போல ஒரு அவதி கிடையாது.

என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன். ஊரை விட்டு முற்றுமுழுதாக நீங்கிய நாள் நினைவுக்கு வருகின்றது. அகோரமான செல்லடிகளும், குண்டுத்த்தாக்குதலுடந்தான் ஆரம்பித்தது அன்றையபொழுது. இப்படி ஒரு பொழுது ஆரம்பிக்கிறது என்றால் நிச்சயம் எங்களுக்குத் தெரியும் ஆமிக்காரன் முன்னேறப்போகின்றான் என்று. இது ஒரு தாக்குதலுக்கான முன் ஆயத்தம் என்றும் சொல்லலாம். தடைகளை நீக்குவதற்கு இப்படி ஒரு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெறும். அத்தோடு எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவற்கும் ஆகவும் இருக்கலாம். 'ஆரம்பமே இப்படி என்றால் உச்சக்கட்டம் எப்படி இருக்கும் என்று உனக்குக் காட்டத் தேவையில்லை, பின்வாங்கிப் போய்விடு' என்று போராளிகளைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிப்பதன் மறுவடிவம்தான் விமானத்தாக்குதல்களும், ஆட்லறித் தாக்குதல்களும்.

துப்பாக்கிச் சூட்டுக்கள் எல்லாம் நெருங்கி வருகின்றமாதிரி இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் உரசிக்கொண்டு போகும் ஓசையெல்லாம் தெளிவாய்க் கேட்கின்றது. 'வீட்டை விட்டு போவோம் போவோம்' என்று பயத்தோடு அழுகை வரும் நிலையில் பெற்றோரிடம் நான் கெஞ்சுகிறேன். அவர்களுக்குப் புரிந்திருக்கக்கூடும், இதுதான் நாங்கள் எங்கள் ஊரில், வாழ்ந்த வீட்டில் கடைசியாக வாழப்ப்போகும் கணங்கள் என்று. அதனால் வீட்டைவிட்டு அவ்வளவு இலகுவில் நீங்கி வர பிரியப்படாதிருக்கின்றனர். 'சரி நீயும் அக்காவும் முதலில் போங்கோ, நாங்கள் பின்னாலை வாறோம்' என்று எங்களை அனுப்புகின்றனர் எமது பெற்றோர். ஒரு சைக்கிளின் பின் பாரில் கட்டப்பட்ட ஆடைப்பெட்டியுடன் நானும் அக்காவும் வீட்டினின்று நீங்குகின்றோம். வெளியே ஒழுங்காய் நடந்தே செல்லமுடியாத நிலை. நிமிர்ந்து நடந்தால் துப்பாக்கிச் சன்னங்கள் தலையைப் பதம் பார்த்துவிடும் போன்று அகோரமான யுத்தக்களம். சைக்கிளை உருட்டியபடி குனிந்து குனிந்து நடக்கின்றோம். ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்போம். பாரிய ஒலியுடன் ஒரு செல் விழுந்து வெடிக்கின்றது. எங்கள் வேலிக்கருகில் இருந்த பக்கத்து வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ எழும்புகின்றது. 'அய்யோ வீட்டில் நின்ற அம்மா அப்பா ஏதாவது நடந்திருக்குமோ?' என்று எனக்கு அழுகை வருகின்றது. திரும்பிப் போய்ப் பார்க்கவும் முடியாத நிலை. அக்கா சொல்கிறாள் கொஞ்சம் தூரம் போய் சைக்கிளை நிறுத்தி ரவுண்ட்ஸ் அடி குறையும்போது திரும்பி வந்து பார்ப்போம் இப்போது வேண்டாம் என்று.

நாங்கள் சைக்கிளை உருட்டுகிறோம். வைரவர் கோயில் தாண்டி, அதன் பக்கத்தில் இருந்த கள்ளுக்கொட்டில் தாண்டுகையில் தேவதூதர்களாய் போராளிகள் வருகின்றார்கள். நாங்கள் போரை விட்டு விலத்தி ஓட ஓட அவர்கள் போரைத் தேடி வருகின்றனர். பலரின் கால்களைப் பார்க்கின்றேன். ஒழுங்காய் செருப்புக்கூட அணியாமல் வெறுங்காலுடன் பலர் இருக்கின்றார்கள். பயத்தின் எந்த ரேகையும் அவர்களின் முகத்தில் இல்லை. யாரையோ சந்திக்கப் போகும் நிதானத்துடன் நடந்து வந்துக்கொண்டிருக்கின்றார்கள். எதிரியைக் காணும்வரை எந்தத் தோட்டாவும் உபயோகிப்பதில்லை என்பதுபோல துப்பாக்கிகள் முதுகில் தூங்கியபடி இருக்கின்றன. அடுத்த கிராமத்தை அடைந்தபோது கொஞ்ச நேரத்தில் எமது பெற்றோரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் முகத்திலும் பயம் பொங்கி வழிகின்றது. எல்லோரையும் மீண்டும் உயிருடன் பார்த்தவுடன், எல்லோர் மனதிலும் ஒருவித நிம்மதி வந்துவிடுகின்றது. ஆனால் எனது சொந்தக்கிராமம் கைப்பற்றப்படுகையிலும் உயிரைக்காக்க வேண்டும் என்று ஓடுகின்ற எனது சுயநலத்துக்கும், எங்கையோ ஒரிடத்தில் பிறந்து உறவுகளைத் துறந்து எந்தத் தமிழ்ப்பிரதேசமும் கைப்பற்றப்படவோ, தமிழ் மக்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்று 'மரணத்திலும் வாழ்வைத் தேடி' போகின்றவர்களுக்கும் இடையிலான உள்மனயுத்தம் ஆரம்பிக்கின்றது. அது இன்று வரைக்கும் தொடர்கிறது. சாகும்வரை இது குறித்த ஒரு குற்றவுணர்வுடன்தான் வாழ வேண்டியிருக்கவும் போகின்றது.

ஈழத்தில் இருந்தவரைக்கும் எதிர்காலத்தில் மருத்துவம் படிப்பதே ஒரு கனவாக இருந்தது அல்லது அது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஒரு முறை யாழ் வைத்தியசாலையில் நோயின் நிமிர்த்தம், அனுமதிக்கப்பட்ட அண்ணாவைப் பார்ப்பதற்காய் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம். அந்தச் சமயம் செல்லடிபட்டு சிதைவுற்ற ஒருவரை இரத்தம் கொட்ட கொட்டக் கைகளில் ஏந்திவருகின்றார்கள். முகம் எது வயிறு எது என்று பிரித்துணரமுடியாது இரத்த நிறம் உடலை ஆடை போல மூடியிருக்கின்றது. ஒரு மரணத்தை முதன் முதலாய் அருகிலிருந்த பார்த்த சந்தர்ப்பம் அது. இப்படியும் ஒரு மரணம் நிகழுமா எனச் சிந்திக்கமுடியாத ஏழெட்டு வயதில் அது நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவத்தைப் பார்த்தபின் ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றேன். சத்தி வருகின்றமாதிரியான உணர்நிலையில் அந்த நாள் முழுதும் அலைந்திருக்கின்றேன். அந்தச் சம்பவத்தை பார்த்தபோது வாயில் வைத்திருந்த சூப்புத்தடி (Lollipop) அதற்குப் பிறகு பிடிக்காமல் போயிற்று அல்லது லொலிபாப்பை எப்போது பார்த்தாலும் அந்த சம்பவமே உடனே நினைவுக்கு வருவதாய் இருந்தது. அதன்பிறகு எனக்கு இரத்தம் என்பது மிகவும் பீதியடையும் ஒரு விடயமாகப் போய்விட்டது. ஒரு சில நொடிகளுக்கு மேல், இரத்தத்துடன் வரும் எந்தக் காட்சியையோ கதையையோ பார்க்கவோ கேட்கவோ என்னால் முடிவதில்லை. சிலவருடங்களுக்கு முன், கார் விபத்தில் சிக்கிக்கொண்ட நண்பன் அந்த விபத்துச்சம்பவத்தை விளக்கிக்கொண்டிருந்தபோது (காலில் பலமாய் அடிபட்டிருந்தான்) கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அருகில் நான் போயிருந்தேன். இன்னமும் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவமும், இரத்தமும் எப்படி என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றது என்பது வியப்பாக இருந்தது. அப்படியெனில் இதைவிட இன்னும் ஆழமான பாதிப்புக்களுக்கும், வன்முறைகளுக்கும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கும் ஆளானவர்கள் எப்படியெல்லாம் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற வினா எழுவதைத் தவிர்க்கவும் முடிந்ததில்லை.

'In the name of Buddha' திரைப்படம் வந்தபோது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்த்துக்கொண்டிருதேன். கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல் கண்களை மூடித்தான் பார்த்தேன் (தேங்காய் உரிக்கும் அலவாங்கால் இராணுவம் ஒரு ஆணைக் கொல்வது, சிறுவர்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டு அரைகுறையுமாக புதைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்குள் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது போன்ற காட்சிகள் ஆரம்பமானது மட்டும் தெரியும், பிறகு எனது உலகம் இருட்டாகிவிட்டது). கண்மூடி இருந்தவேளையில் எனது பின்சீட்டில் இருந்த ஒரு பதின்மவயதுப்பெண் தன் தாயிடம் கூறியது காதில் விழுந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற குரலில், 'அம்மா I can't watch this movie, I wanna go outside' என்கிறாள். தாய், 'பிள்ளை இப்படித்தான் எங்கட நாட்டில் நடக்கிறது. நீர் இதையெல்லாம் பார்க்கவேண்டும், அப்பத்தான் அங்கை நடக்கிறதெல்லாம் தெரியும்' என்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்க்கமுடியாத எனக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளியே போகவேண்டும் போல இருக்கிறது அல்லது இப்படியான காட்சிகளைப் பார்க்கவிரும்பாத பிள்ளையை வற்புறுத்தி அவரது மனநிலையைச் சிதைக்காதீர்கள் என்று அந்தத் தாயிடம் கூறவாவது வேண்டும் போலக்கிடக்கிறது. இறுதியில் அந்தப் பிள்ளை கண்ணை மூடிக்கொண்டு தாயின் தோளில் சாய்ந்துவிடுகின்றார்.

கனடா வந்ததன்பிறகும் எனது பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை. பதின்மவயதில் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, நண்பர்களும் நண்பிகளும் suprise நிகழ்வாய் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை கேக் வெட்ட வைத்திருக்கின்றனர். பிறகொரு சமயம் லண்டனுக்கு சென்றவேளை பாரீஸிலிருந்து வந்து சந்தித்த என் தோழியொருத்தியின் காதலன் கேக் வாங்கி, வெட்டும்படி கட்டாயப்படுத்தி இருக்கின்றான் (அருமையான அந்தச் சோடிகள், பெற்றோர்களின் சாதித்திமிர்களாலும் பெருமிதங்களாலும் பின்னாளில் பிரிந்துபோனது. போர்கூட சாதியை மாற்றிவிடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் அல்லது முரண்நகை). பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் விழாக்களிலும் ஆர்வமில்லாது இருந்த நான் பிறகு நண்பர்களுக்காய் ஒரளவுக்கு மாறியிருக்கின்றேன். தீபாவளியை ஏன் கொண்டாடக்கூடாது என்று நான் அடித்த லெக்சரில் வெறுத்துபோன ஒரு தோழி, 'உனக்கு எதிர்காலத்தில் வரப்போகும் துணைக்காய் இப்போதே வருத்தப்படுகின்றேன்' என்று நறுக்குத் தெறித்தாற்போல சொல்லிவிட்டு நகர்ந்திருக்கின்றாள். எனக்குப் பிரியமானவர்களுக்கு குதூகலத்தைத் தருகின்றதென்றால் அவர்களுக்காய் கொண்டாடங்களில் கலந்துகொள்வதில் தவறில்லையென்று இன்றைய பொழுதுக்கு என்னை மாற்றியிருக்கின்றேன்.

ஈழத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, சென்ற வருடம் ஈழத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வித அவசரமான திட்டமிடலில் நண்பர்களாய் செல்லவேண்டியிருந்ததால்தான் அது கூட சாத்தியமாயிருந்தது. இன்றும் ஊரைப் பார்க்கமுடியாது இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஈழத்துக்குப் போவதற்கு என்ன காரணம் வேண்டிக்கிடக்கிறது? அதனால் யாழில் மூன்றே நாள்கள் மட்டுந்தான் தங்கியிருந்தேன். இதுவரை காலமும் காலடி வைக்காத வன்னியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தது புதிய அனுபவமாயிருந்தது. அங்கே இருந்து கேட்ட விவாதித்த கதைகள் நாட்டைவிட்டு வெளியேறிய என் குற்றவுணர்வை இன்னும் பலமடங்காய் அதிகரிக்கச் செய்தன. அதுவும் பெண் போராளிகள் கூறிய கதைகளும் இடை நடுவில் மேலே சொல்ல முடியாது தவித்து அழுத கணங்களும் இன்னமும் கண்முன்னாலே நிற்கின்றது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கால் வைத்தபோது மூன்று வருடங்களுக்கு முன் உலகை வியக்க வைத்து போராளிகள் நடத்திய தாக்குதல் கண்முன் விரிந்தது. சனங்கள் ஆயிரக்கணக்கில் புழங்கும் (முக்கியமாய் வெளிநாட்டு மக்கள் மீது பாதிப்பு ஏற்பட்டால் எப்படி பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்று அனைவருக்கும் தெரிந்ததே) எந்த ஒரு பொதுசனத்துக்கும் பாதிப்பு இல்லாது மிகத்துல்லியமாய் இராணுவ, வர்த்தக விமானங்களைத் தகர்ந்திருந்தார்கள். குண்டு குண்டாய் போட்டு மக்களை கொல்வது முற்பகலில் செய்யின், உனது ஆணிவேருக்கே தீ கொளுத்துவோம் என பிற்பகலில் எதிரியை வினையறுக்கச் செய்தவர்கள் போராளிகள். 83ல் தமிழரைத் தலைநகரில் நூற்றுக்கணக்கில் குடல் உருவியும் கண்கள் பிடுங்கியும் கொன்றும், உயிரோடு ரயர்கள் போட்டு எரித்துக்காட்டியும் கெக்கலித்தது பேரினவாதம். ஒரு அரச இராணுவ அமைப்புக்கு நிகரான பலத்துடன் தமிழர்கள் ஒரு காலத்தில் நிமிர்ந்தபின், தமிழர்களை விட சிங்களப்பேரினவாதமே ஒவ்வொரு கறுப்பு ஜூலையும் நடுநடுங்கியபடி எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கத் தொடங்கியது. அவ்வாறான ஒரு கறுப்பு ஜீலையில் நடந்த பதிலடியே கட்டுநாயக்காவில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதல். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கியபோது இந்த இடந்தானே சென்றுபோன வருடத்தில் ஒரு நாள் உலகையே திரும்பிப்ப்பார்க்க வைத்ததென்ற பெருமை எனக்குள் பொங்கியது. ஆனால் அது தங்கி நின்றது கொஞ்ச நொடிகள்தான். சிதைந்த விமானத்தின் முன் மல்லாக்க விழுந்துகிடந்த போராளிகளின் முகங்கள்தான் பிறகு நினைவு முழுவதற்கும் பரவியது. அந்த இளைஞர்களில், சிறுவயதில் ஊரைவிட்டு அகன்ற நேரம் எதிர்ப்பட்ட போராளிகளின் முகங்களைக் கண்டேன். போரிற்குள் இருந்த எந்த ஒரு ஒருத்தனும்/ஒருத்தியும் போரை கொண்டாடிக் குதூகலிக்கமுடியாது. பிரியமான மனிதர்கள் இறக்க இறக்க இன்னும் கொல் கொல் என்று நரம்புக்கள் புடைக்க புடைக்க பேசிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள்.எண்பத்து மூன்றில் கறுப்பு ஜீலையில் (ஆடி இருபத்தைந்து) தொடங்கிய மரணங்கள் இன்றும் அதே நாளில் நீண்டுகொண்டிருப்பதுதான் எவ்வளவு துயரமானது. 2001ல் தங்களையே விலையாகக் கொடுத்த அந்தத் தோழர்கள் மரணித்த நாளில் பிறந்தநாள் வரும் எனக்கு மகிழ்வு கொள்ள என்ன வேண்டிக்கிடக்கிறது? மேலும் இன்றைய நாளில் ஒரு பிறப்பைப் பற்றிப் பேசுவதைவிடவும் மரணங்களைப்பற்றி பேசுவதுதான் நேர்மையாகவும் இருக்கும்.

நன்றி:புகைப்படங்கள்
கறுப்பு வெள்ளைப் படங்கள்: ஆடிக்கலவரம் 1983
சைக்கிள் படம்: ஈழவிஷன்
பெண்ணும் இராணுவமும்: In the name of buddha

32 comments:

வன்னியன் said...

அடடே!
இன்று தானா பிறந்தநாள்.
பதிவு நன்றாயிருக்கிறது.
கனமாகவுமிருக்கிறது.
நேற்றுத்தான் யூலைகளின் சம்பவங்களைத் தொகுத்து ஒரு பதிவு போட்டிருந்தேன்.

7/25/2005 09:26:00 AM
சுதர்சன் said...

//என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன்.//

:((

7/25/2005 09:41:00 AM
கிஸோக்கண்ணன் said...

டீசே, உண்மையில் இது வெறும் சம்பவங்களின் தொகுப்பல்ல. வரலாற்றுப் பதிவென்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் பந்தி பிரிச்சு எழுதியிருக்கலாமோ?

7/25/2005 09:42:00 AM
KARTHIKRAMAS said...

டீ.ஜே, காலையில் நச்சு நவிலலை பார்த்துவிட்ட வந்த எனக்கு உங்கள் பதிவு மிக் ஆறுதலாக இருந்தது. நன்றி.

7/25/2005 10:47:00 AM
Thangamani said...

//மேலும் இன்றைய நாளில் ஒரு பிறப்பைப் பற்றிப் பேசுவதைவிடவும் மரணங்களைப்பற்றி பேசுவதுதான் நேர்மையாகவும் இருக்கும்.//


இறுக்கமும் கனமும் நிறைந்த பதிவு!

7/25/2005 01:43:00 PM
NONO said...

சிறந்த பதிவு,!!!
வாழ்த்துக்கள்!!!

7/25/2005 02:54:00 PM
டிசே தமிழன் said...

பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரகளே!

7/25/2005 11:24:00 PM
Thangamani said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் . . .

7/26/2005 12:01:00 AM
`மழை` ஷ்ரேயா(Shreya) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீசே.

உண்மைகளும் உங்கள் கூற்றுகளும் கேள்விகளும் கனதியாக இருக்கின்றன. மற்ற மாதங்களிலும் விட ஜுலை சற்று அதிகமாகவே கறுப்புத்தான்.

7/26/2005 02:39:00 AM
Kannan said...

டிசே,

...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7/26/2005 05:11:00 AM
கயல்விழி said...

இப்படி கனதியான அனுபவங்கள் ஈழத்தமிழர் ஒவ்வொருதர் பின்னாலும் இருக்கிறது. வாசிக்கும் போது உருக்கிவிட்டது. கிட்டத்தட்ட இப்படி அனுபவங்களை நான் முதல் கேட்டிருக்கிறேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் D.J

7/26/2005 06:28:00 AM
Sarah said...

இது போன்ற விடயங்களை நான் எனது சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ பெருஞ்சித்திரனாரின், "முண்டையின் மகனே " என்ற பாடலும், ராஜீவின் கொலையில், இந்தியனாய் நான் அடைந்த நட்டத்தை விடவும், அந்தப் பெண்ணின் உயிர்த்தியாகம் என்னை அவளை வணங்க வைத்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மனம் நீங்கள் நினைப்பது போல் நினைப்பது இயல்புதான். என்ன செய்ய. முன்பு செய்யாமல் விட்டதைப் பற்றிக் கவலைப் படுவதை விட்டு விட்டு, இனி எப்பொழுதும் செய்வோம் என அஞ்சாமல் இருப்பது நன்றென்றே நினைக்கிறேன். இல்லையா? உங்களது பதிவைப் படிக்கையில் , கண்ணில் வரும் நீரை அடக்கத்தான் முடியவில்லை. என்ன செய்ய?. ஒரு சில சின்ன இழப்புகளுக்கே மக்கள் எவ்வளவு மனம் மாறிப் போய்விடுகின்றனர். இழக்கக்கூடாதவற்றை இழந்தால் பின் வரும் மனப் பிரட்சினைகள் ஏராளம். நாம் அப்படிப் பட்ட தேசத்தில் பிறந்து விட்டோம்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

" இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்து நீவிர்
தின்று இன்புற்று வாழ்வீர், தீமை எல்லாம் அழிந்துபோம் திரும்பி வாரா" - அவனின் வார்த்தைகள் மெய்யாகட்டும்.


சாரா

7/26/2005 06:34:00 AM
டிசே தமிழன் said...

நன்றி தங்கமணி, ஷ்ரேயா, கண்ணன், கயல்விழி, சாரா!
உங்கள் அன்பும் அரவணைப்பும் மனதுக்கு மிகவும் இதமூட்டுகின்றன. வாழ்விழந்துபோனவர்களை மீளக்கொணர முடியாது என்னும் காலத்தின் சாபம் இருந்தாலும், ஆகக்குறைந்தது இனியாவது எவரும் வாழ்விழந்துபோகாது, ஒரு சுமூகமான சூழல் அமையவேண்டும் என்பதே பெருவிருப்பாக இருக்கின்றது.

7/26/2005 09:27:00 AM
மதி கந்தசாமி (Mathy) said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பா.

என்றென்றும் நினைவில் நிற்கப்போகும் பதிவிது.

-மதி

7/26/2005 10:23:00 AM
KARTHIKRAMAS said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

7/26/2005 10:53:00 AM
THAMILACHCHI said...

HAPPY BIRTHDAY DJ

7/26/2005 06:28:00 PM
ravi srinivas said...

டி.சே உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.இவையெல்லாம் பழங்கதைகள், இன்று நம் கனவுகள் நிறைவேறிவிட்டன என்று கூறும் காலம் வரும் என்று நம்புவோமாக. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7/26/2005 06:48:00 PM
நற்கீரன் said...

உங்கள் உணர்வுகளை நிச்சியம் புரிந்து கொள்ள முடிகின்றது. அவரவர் வாழ்வில்தான் எத்தனை வித சோதனைகள்...

7/26/2005 09:36:00 PM
மு. சுந்தரமூர்த்தி said...

டிஜே,
என்ன எழுதுவதென்று தெரியவில்லை. நேற்றைய பாரமான நினைவுகளுடன் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கை வைத்தே இன்றைய பொழுதைக் கழிக்கவேண்டியுள்ளது உங்களைப் போன்றவர்களுக்கு. Nostalgiaவில் மூழ்கித் திளைக்கும் எங்களில் சிலருக்கு இது புரிபடாததும் இன்னொரு அவலம்.

7/27/2005 12:10:00 AM
Chandravathanaa said...

கனமான பதிவு

7/27/2005 01:59:00 AM
அப்துல் குத்தூஸ் said...

வருந்த வைக்கும் நினைவுகள். ஆழமான பதிவு. ஈழத்தமிழ் சகோதரர்களுக்காக என்னுடைய பிரார்த்னைகள் என்றென்றும் உண்டு...

7/27/2005 02:44:00 AM
டிசே தமிழன் said...

மதி, கார்த்திக், தமிழச்சி, இரவி, நற்கீரன், சுந்தரமூர்த்தி, சந்திரவதனா மற்றும் அபுதுல் குட்டூஷ் (உங்கள் பெயரை எழுதிய விதம் சரியா, நண்பரே?), உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
.....
//ஈழத்தமிழ் சகோதரர்களுக்காக என்னுடைய பிரார்த்னைகள் என்றென்றும் உண்டு...//
என்ற அப்துல் போன்ற நல்லிதயங்களின் பரிவு,
//இவையெல்லாம் பழங்கதைகள், இன்று நம் கனவுகள் நிறைவேறிவிட்டன என்று கூறும் காலம் வரும் என்று நம்புவோமாக//
என்று இரவி கூறுவதை என்றேனும் ஒருகாலத்தில் சாத்தியமாக்கட்டும்.

7/27/2005 09:52:00 AM
Padma said...

டீசே
இன்றுதான் படித்தேன். உயிர்க்கொலைகள், உணர்வுக்கொலைகள் அவை ஏற்படுத்தும் தாக்கத்தின் வைளைவுகள் பலகாலம் வரும் என்பதை சொல்கிறது பதிவு.
நேர்மைக்கு என் வணக்கம். பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

7/27/2005 10:19:00 AM
-/சுடலை மாடன்/- said...

இப்பொழுதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.

புலம் பெயர்ந்த ஒவ்வொரு ஈழத்தமிழரின் நினைவிலும் இப்படிப் பல கதைகள் இருக்க, பெரும்பாலோர் அதை விவரிக்கும் சக்தி கூட இல்லாமல் இருக்க, இந்தியத்தமிழர் பலர் உங்கள் உணர்வுகளை மதிக்காவிடினும், சக தமிழனென்றில்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையிலாவது உங்களுக்காக ஒரு புல்பூண்டைக் கூட அசைக்காவிடினும் உங்கள் இதயங்களைக் காயப்படுத்துவதும், உங்களுக்கு இன்னும் அறவழிப் போதனைகளை அளிப்பதும் முரண்நகை.

நான் கிராமங்களில் பள்ளிக்கல்வி முடித்து தூத்துக்குடியில் கல்லூரி படிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான் ஈழப்போராட்டத்தின் அறவழிப்போர் முடிந்து ஆயுதப் போர் ஆரம்பமானது. அதுவரை எனக்கென்று உண்மையான சமூக அக்கறை எதுவும் இருந்ததில்லை, என்னுடைய மற்றும் எங்கள் குடும்பத்துடைய கஷ்டங்கள்தான் பெரிதாகப் பட்டது, அதனால் மற்றவர் படும் துயரங்களைக் கூட என்னுடையவற்றோடு பொருத்திப் பேசுவதும், அதனடிப்படையிலேயே அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமுண்டு. 1983 ஜூலைக் கலவரங்களுக்குப் பின் தூத்துக்குடியில் குத்துயிரும், குலையுயிருமாக ஒதுங்கிய அகதிகளின் அவலங்கள் என் மனதை மிகப் பாதித்த முதல் நேரடி நிகழ்ச்சி. அது என் வாழ்க்கையிலும், சிந்தனையிலும் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை என்னுடைய எந்த துயரமும் அந்தக் கணத்தைத் தவிர என்னைப் பெரிதும் பாதித்ததில்லை. நீங்கள் சொல்லியபடியே சுயதேவைகளின் ஆக்கரமிப்பை ஒதுக்கி நம்மால் எதுவும் பெரிதாகச் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சிதான் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் டிஜே.

நன்றி - சொ. சங்கரபாண்டி

7/27/2005 11:01:00 AM
மயிலாடுதுறை சிவா said...

டிஜே
மனம் தொடும், உருக்கும் உண்மை சம்பவத்தை கண்முண் நிறுத்தி உள்ளீர்கள்.
பிறந்த நாள் பாராட்ட மனமில்லை. காலங்கள், சூழ்நிலைகள் மாறும் என்று நம்புவோம்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

7/27/2005 11:47:00 AM
Poorani said...

You had touched my feelings. I guess every srilankan Tamil will have almost the same view inside our hearts. It is so touching as we have guilty feelings and are away from our land and not single use by our selves

7/29/2005 05:25:00 PM
டிசே தமிழன் said...

பத்மா, சங்கரபாண்டி, சிவா, பூரணி உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி

7/30/2005 11:34:00 AM
Sri Rangan said...

இளங்கோ,இப்பதிவுகுறிது எதையெழுத?உணர்வுக்கும் வார்த்தைக்குமான மிக நீண்ட விரிசலில் எதையுரைப்பேன்?அற்புதம்,கனம்,சிறப்பு என்றென்னால் உரைக்கமுடியாது.எனது கிராமத்தையிழந்து தவிப்பவன் நான்.இன்றும் சிதைவுற்று காடாகிப்போன எனது வீடிரிந்த வளவையும்,தோட்டங்களையும் மீளக் குடியமரும் நிலமாக மாறுமாவெனுங் காச்சலில் இருப்பவன்.அந்தவலியை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே ஆசைப்படுகிறேன்.சிங்கள அரசின் கொடுமைகளை ஒவ்வொன்றாக அநுபவித்தவன் நான்.83 இல் நான்காம்மாடியின் வாழைத் தோட்டத்துக்குள் என்னைப் பாலியல் துன்புறுத்திய சிங்களப் பொலிசையும் என்னால் மறக்கமுடியாது.மலவாசல்கிழிந்து தொங்கும் சதையையும் அகற்ற முடியவில்லை.இதுதாம் நமது வாழ்வு.போராளிகளின் மறுபக்கம் எப்பவும் பல கதைபேசும்.களத்தில் நின்றபோதும்சரி,அகற்றப்பட்டபோதும் சரி இது தொடரும் வலி.

7/31/2005 05:33:00 PM
டிசே தமிழன் said...

//களத்தில் நின்றபோதும்சரி,அகற்றப்பட்டபோதும் சரி இது தொடரும் வலி//
உண்மைதான் சிறிரங்கன். உங்களைப் போன்றோர்கள் எம்மைப் போன்றவர்களின் நல்வாழ்வுக்காய் அனுபவித்த சித்திரவதைகள்/வலிகள்/இழப்புக்கள் அளப்பரியவை. நமக்கென்றொரு பொழுது விடியும் என்று நம்பிக்கை கொள்வதைத் தவிர வேறென்னத்தைச் சொல்ல :-(.

8/04/2005 01:13:00 AM
kulakaddan said...

DJ இன்று தான் உங்கள் ஒவ்வோரு பதிவாய் பார்த்துவருகிறேன். கடந்த மாதம் விடுமுறையில் போனதால் வலைபதிவுகளை பார்க்க முடியவில்லை. இப்போ வந்து தான் ஒவ்வொண்றாக பார்த்து வருகிறேன்.
உண்மையில் ம்னதை தொடும் பதிவு.

8/24/2005 11:54:00 AM
kulakaddan said...

DJ புத்தரின் பெயரால் படம் எங்கு கிடைக்கும். இதுவரை பார்க்க கிடைக்கவில்லை

8/24/2005 12:15:00 PM
டிசே தமிழன் said...

குழைக்காடன் பின்னூட்டத்துக்கு நன்றி.
......
In the name of Buddha இன்னவும் Home Video formattல் (VHS or DVD) வரவில்லை என்றுதான் நினைக்கின்றேன். இயலுமாயின் உங்குள்ள (ஆங்கில/பிறமொழிப்படங்கள் வாடகைக்குவிடும்) வீடியோ கடைகளில் விசாரித்துப் பாருங்கள், சிலவேளைகளில் கிடைக்கக்கூடும்.

8/26/2005 06:38:00 PM