நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்

Thursday, August 04, 2005

உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.

அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் - அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.

அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். 'அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.'

அமரதாஸின் கவிதைகளில் ஆச்சரியப்படவைக்கும் ஒருவிடயம் எங்கும் நேரடியாக போரைப் பற்றிப் பேசவில்லை என்பதுதான். எழுதப்பட்ட சில கவிதைகளில் கூட, போர்க்களத்தில் நிற்கும் ஒருவன் தன் துணைக்கு தான் திரும்பி வருவேன் என்று ஆறுதல் கூறுகின்றதான கவிதைகளாய் இருக்கின்றனவே தவிர போர் குறித்து பெருமிதப்படும் கவிதைகள் அறவே கிடையாது. போரிற்குள் வாழ்ந்துகொண்டு அதன் அனைத்துக் கொடூரங்களையும் பார்க்கும் ஒருவனால் அது குறித்து பேசமுடியாது போலும். காதலியின் கடிதம் 01ல்...

'போர்முனையுள் உன் முனைப்பு
வேரறுந்த பூமரமாய் ஆகிறது என் நினைப்பு.

அழிக்கவோ அல்லது அணைக்கவோ முடியாத
என் நிழலாய் உன் இருப்பு
அந்தரத்து வாள் முனையில்
எந்தனது காத்திருப்பு'

என்றும்,
துயர்க்காலம் என்னும் கவிதையில்,

'அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைத்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.'

என்று ஆரம்பித்து இறுதியில்...

'வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து'

என்று மனதைப் பிசைவதாய்த்தான் முடிகிறது. பல கவிதைகள் படிமங்களால் வார்க்கப்பட்டு (புத்தகம் பற்றி, விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு) பல்வேறு அர்த்தங்களை வாசிப்பவர்களுக்குத் தருபவை. வன்னிக்கு சென்றவருடம் சென்றபோது அமரதாஸ¤டன் இரண்டுவாரங்கள் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. இயல்பான சூழ்நிலையில் பலவிடயங்களை மனந்திறந்து பேசக்கூடியதாக இருந்தது. இந்தத் தொகுப்பில் எழுதப்பட்ட அனேக கவிதைகள் போராட்டக்களத்தில் நின்றபோது எழுதப்பட்டவை என்று கூறியபோது வியப்பாயிருந்தது. வாசிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ நேரங்கிடைப்பதே அரிதாயிருக்கும் சூழலில் (மற்றும் போராட்டக்காலத்தில் வடபகுதிக்கு பிற இடங்களிலிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது) இந்தக் கவிதைகள் நவீனத்துவச் சாயல் படிய எழுதப்பட்டிருப்பதற்கு, அமரதாஸ் என்னும் ஒரு படைப்பாளியின் ஆளுமைதான் முக்கிய காரணமாயிருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.

அமரதாஸ¤டன் உரையாடியபோது அவர் நிறைந்த வாசிப்புள்ளவர் என்பதை இலகுவில் அவதானிக்க முடிந்தது. ஈழம் என்றில்லாமல் தமிழக/புலம்பெயர் படைப்புக்களில் அனேகமானவற்றை வாசித்திருக்கின்றார் அல்லது அறிந்து வைத்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் அமரதாஸ் நல்லதொரு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த படந்தான் Lutesong and Lament என்ற ஈழத்தமிழ்ப்படைப்புக்களின் ஆங்கிலமொழிபெயர்ப்பின் முன்னட்டையை அலங்கரிக்கின்றது. இன்று வன்னியிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் அனேக படைப்புக்களில் அமரதாஸினதும், கருணாகரனினதும் பங்களிப்பு ஏதோவொரு வகையில் இருக்கின்றது (அண்மைய உதாரணம்: புதுவை இரத்தினதுரையினது, பூவரசம் வேலியும் பூலூனிக் குஞ்சுகளில், ட்ராஸ்கி மருதுடன், அமரதாஸின் கைவண்ணமும் உள்ளது).

அமரதாஸிற்கு பயணஞ்செய்வதில் (எந்தப்படைப்பாளிக்குத்தான் விருப்பமிருக்காது) அலாதிப்பிரியமெனவும், அவ்வாறு பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை எனக்கும் காட்டியிருந்தார். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட படங்களைத் தொகுத்து, 'கோபுரங்களில் இருந்து' என்ற தலைப்பில் ஒரு புகைப்படக்கண்காட்சி வைக்கப்போவதாய் கூறியதாயும் நினைவு. அந்தக் கண்காட்சியில் முழுப்படங்களும் இந்துக்கோயில் கோபுரங்களின் சிலைகளை/சிற்பங்களை உள்ளடக்கப்போவதாய் கூறியிருந்தார். பாலியல் சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தில்தான் இவ்வாறான படைப்புக்கள் முகிழ்ந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமான முரண்நகை என்றார். கோபுரத்தில் உறங்கிக்கிடக்கும் அவற்றை யதார்த்திற்கு கொண்டுவந்து விரிவான உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கிலேயே கோபுரத்திலிருந்து என்று தலைப்பு வைக்க விரும்புவதாய் கூறினார். உண்மையில் அதுவரைகாலமும், இந்தியாவிலுள்ள கோயில்களில் மட்டுந்தான் இப்படி வெளிப்படையான பாலியல்/நிர்வாணம் சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அமரதாஸ் எடுத்த புகைப்படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டியது (கிட்டத்தட்ட மூன்று அல்பங்கள் அளவில் அவர் எடுத்த படங்கள் இருந்தன).தானா.விஷ்ணு யுத்ததிற்குள்ளே பிறந்து அதன் சகல பாதிப்புக்களையும் தன்னகத்தே உள்நிரப்பி வளர்ந்த ஒரு கவிஞன். அனைவரையும் போல, முதலாம் தொகுப்புக்கான பலத்துடனும் பலவீனங்களுடன் நினைவுள் மீள்தல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. போரும், காதலும் இவரது கவிதைகளின் அடிநாதமாய் ஒலித்தபடி இருக்கின்றன.

'ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

என்று 'இருளின் தனிமை வெளி' கவிதையில் காதற்பிரிவையும் தனிமையும் வாசிக்கும் நம்முள்ளும் படியவிடுகின்றார். இன்னொரு கவிதையான 'அடையாளப்படுத்தலில்' வாளை படிமமாக வைத்து எமது வாழ்வை மீட்டெடுக்கவேண்டியவர்கள் நாமன்றி வேறொருத்தரும் அல்ல என்கின்றார். அதற்காய்,

'நீயும் வாள் வைத்திருப்பது நல்லது
அப்பிள் வெட்டவோ
மற்றவரை ஆசிர்வாதிக்கவோ அல்ல
உன்னை ஆசிர்வதிக்க நினைப்பவனுக்கு
உன் அடையாளத்தைக் காட்டுவதற்கும்
உன் அடையாளத்தைத் தறிப்பவனின்
சிரம் நறுக்கவும்
நீ ஒரு வாள் வைத்திருத்தல் அவசியம்'
என்று குறிப்பிடவும் தவறவும் இல்லை. இந்தத் தொகுப்பில் பல நல்ல கவிதைகளும் சில சாதாரணக்கவிதைகளும் உள்ளன. இனிவரும் காலத்தில் இன்னும் ஆழமான கவிதைகளை, விரிவான தளங்களில் தானா.விஷ்ணு தருவார் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.நிலாந்தன் மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு வெளிவந்தபோதே அறியப்பட்ட ஒரு கவிஞர். பிறகு ஈழ அரசியல் நிலவரங்கள் குறித்து பத்திகள் எழுதி தனது பன்முக ஆளுமையை போர்க்காலத்திலும், இன்றைய 'சமாதான' காலத்திலும் வெளிப்படுத்தியவர்; வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர். 'யாழ்ப்பாணமே ஓ.... எனது யாழ்ப்பாணமே தொகுப்பு கவிதை நடையிலும், கதை வடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றது. யாழின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பித்து, 95ல் நிகழ்ந்த பெரும் இடப்பெயர்வையும், இறுதியில் யாழின் நுழைவாயிலை எட்டிப்பார்த்த ஓயாத அலைகள்-03 வரையும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற ஒரு கடிதம் யாழின் அன்றைய நிலையை (1996) விபரிக்கின்றது.

'இம்முறை மிக நீண்ட கோடை
ஓரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று.

இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட் ரக்குகளுக்குமுரியது

பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது

தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.

இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றிவளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.'

என்கின்றது. யாழ்ப்பாணத்து பெருமை சொல்லப்பட்டாலும், யாழ் மேலாதிக்கத்தனத்தையும் நிலாந்தன் சுட்டிகாட்டத்தவறவில்லை. '...இப்படி வீரம் விவேகம் விச்சுழி தந்திரம் சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம் புதுமைநாட்டம் விடுப்பார்வம் விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு திணுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி' என்கின்றார் யாழில் நடந்த மிகப்பெரும் இடம்பெயர்வும் அதனால் பாதிப்புற்ற மக்களின் துயரமும் அந்தக்காலகட்டத்தில் அங்கிருக்காதவரைக் கூட இந்தப் படைப்பை வாசிக்கும்போது கொஞ்சமாவது பரவச்செய்து கலக்கமுறச்செய்யும்.

இந்தப் படைப்பில் முக்கியமான குறிப்புக்களில் ஒன்றாய் இதையும் சேர்த்து வாசிக்கத்தான் வேண்டும். '....மேலும் இங்கையொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில்தான் 1995ல் எக்ஸ்சோடஸ் ஏற்பட்டது என்பது.' உண்மைதான். நாம் முற்பகலில் எதை விதைக்கின்றோமோ அதைத்தானே பிற்பகலில் அறுவடை செய்யவும் வேண்டியிருக்கின்றது என்பதுதானே யதார்த்தம். ஒரு புதிய வாசிப்பு முறைக்கு நிலாந்தன் இந்தப் படைப்பில் நம்மை அழைத்துச் செல்கின்றார் என்றபோதும், பைபிளின் பழைய ஆகமத்தில் கூறப்படும் யூதர்களின் இடப்பெயர்வை யாழ்ப்பாண இடம்பெயர்வுடன் ஒப்பீட்டு நோக்குவது சற்று உறுத்தச் செய்கின்றது. அது ஆதியில் நிகழ்ந்தது எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் அக்கிரமம்தான் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. இன்றைய பொழுதில் யூதர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தவிர்த்து வரலாற்றின் முந்தைய பக்கங்களுக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. எனினும் நாமும் யூதர்களைப் போல, பராம்பரியத்துடன் நூற்றாண்டுகளாய் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களைத் துரத்திய பாவச்செயலைச் செய்திருக்கின்றோம் என்பதை மறுத்துவிடவோ அல்லது அவ்வளவு இலகுவில் மறந்துவிடவோ முடியாது.

14 comments:

வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
சயந்தன் said...

கடந்த மாதம் வன்னியில் அமரதாசையும் நிலாந்தனையும் சந்தித்தேன். அமரதாஸ் தற்பொழுது தேசியத் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சிகள் செய்கின்றார். நிறைய குறும்படங்கள் மற்றும் ஆங்கிலப் படங்கள் சேகரித்து வைத்திருக்கின்றார். சுமதியின் (கறுப்பி) குறும்படங்கள் பார்த்திருக்கின்றார். (அவரது மகன் மிகச்சுட்டி)

நிலாந்தனின் வீட்டில் ஒரு அமைதியான இரவு இடியப்பம் மற்றும் முருங்கைக்காய் கறியுடன் உணவு சாப்பிட்டுக்கொண்ட பேசினோம். நிலாந்தனின் ஒவ்வொரு சொல்லும் கனதியாக வந்து விழுகிறது. வாரா வாரம் ஈழநாதத்தில் நிலாந்தன் எழுதும் பத்தி பிரபல்யம் ஆனது.

நிலாந்தன் அமரதாஸ் இருவருமே முன்னாள் போராளிகள். அதிலும் நிலாந்தன் ஷோபா சக்தியின் ஒரு நாவலில் (கொரில்லா என நினைக்கிறேன்.) பாத்திரமாக வருகின்றார். (ஒஷில்லா)

இன்னும்.. (இது வேலைக்காவாது.. தனியே ஒரு பதிவு போடுறது.. better)

8/04/2005 10:14:00 AM
-/பெயரிலி. said...

ஈழத்தை விட்டு நீங்கி ஆண்டுக்கணக்கானவர்களின் படைப்புகளையே ஈழத்துப்படைப்புகள் என அநேகர் முன்னிறுத்தும் வேளையிலே, இப்படியான அசல் மண்ணிலிருந்து வேரோடப்புடைக்கும் படைப்புகளை அறிமுகப்படுத்துவது மிக மிக அத்தியாவசியமானது.

8/04/2005 10:55:00 AM
Anonymous said...

அன்புடன் டீ.சே
பலவற்றை வாசிக்க வேண்டும் என்ற
ஆர்வம் இருந்தாலும் நேரம் அவற்றுக்கு
தடைபோடும் நிலையில்.உங்கள் இந்த
படைப்பு மூலம் எமது படைப்பாளிகளை
பற்றி நிறைய அறியமுடிந்தது.
நன்றி-நன்றி-நன்றி

அண்மையில் ஊர் போய் வந்த சயந்தனிடம் நிறைய விசயங்கள் இருக்கும்.பின் ஏன் தயக்கம்? எழுதவேண்டியது தானே?இடியப்பம்,முருங்கைக்காய் கறி சாப்பிட்டு எவ்வளவு நாளாஆயிட்டுது?
கொடுத்துவைத்தவர் நீங்கள்?

8/04/2005 11:25:00 AM
ஒரு பொடிச்சி said...

ஈழத்திலிருந்து வருகிற இந்த மாதிரி நூல்களை உலகத்தமிழர் நூலகஙகளிலேயே பார்க்கமுடியாது. உலகத்தமிழரது வாசகர்களும் கோசங்களைத்தான் விரும்புகிறார்களே ஒழிய அதுக்கப்பால வாழ்க்கையை பகிர்கிற இலக்கியங்களை அல்ல. கருணாகரன், அமராஸ் சில கவிதைகள் (வெளிச்சத்தில் வந்தவை) சிலவேளை உலகத்தமிழர் பத்திரிகை 'கவிதை'ப்பிரிவில் கண்டதுண்டு.'நிலாந்தன்' பத்திகள் ஊடாக தெரிந்தவர் ஆகையால் தற்போது அவரது படைப்புகளுக்கும் விமர்சனங்கள்/கருத்துகள் எழுதப்பட்டிருந்தது.

தனியே வன்னி-மையப்படுத்திய எழுத்தாளர்களை குறிப்பிடப்படுகிறது என்றாலும் + விமர்சனங்கள் இருந்தாலும் (முக்கியமாக நிலாந்தனின் 'யாழ்ப்பாணமே..ஓ..எனது யாழ்ப்பாணமே') கருணாகரன், அமரதாஸ், தானா.விஸ்ணு, போஸ் போன்றவர்கள் படைப்புகள் சமகாலத்தில் மிக முக்கியமானவை. தானா.விஷ்ணுவின் கவிதைகளை சமீபத்தில்தான் படிக்க முடிந்தது (இந்த 'முடிந்தது' எந்தவித முயற்சியும் இல்லாமல் 'தற்செயலாக' நிகழ்பவை என்று கொள்ளலாம்).
எங்களுடைய இரசனைகளை தேடல் துளியும் இல்லாமல் வைத்திருந்தபடி, நேரத்தையும் படைப்புகளையும் கிடைப்பதில்லை என்று சொல்லுவது ஒரு வசதி. இங்கு நாம் எல்லோருமே அங்குள்ள படைப்பாளர்கள் தமது படைப்புகளை கதவு தட்டி வந்து யாரும் தர அனுப்பி வைக்கவேண்டுமென நினைப்பதுபோல இருக்கிறது.
இந்த மாதிரி நூல்கள் பற்றி இணையத்தில் வருகிறபோது அதை உலகத்தமிழர் நூலகத்திற்கு உரியவர்கள் பரிந்துரைத்தால் அவை இங்கு வரும்.
இந்த பதிவுக்கு நன்றி டி.ஜே.

8/04/2005 12:35:00 PM
இளங்கோ-டிசே said...

சயந்தன், பெயரிலி, கரிகாலன், பொடிச்சி உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. விரிவாய் சிலவிடயங்கள் பிறிதொருபொழுதில்.

8/04/2005 08:24:00 PM
சுந்தரவடிவேல் said...

அமரதாஸ் போராளி என்று ஆரம்பித்தவுடன் போர்க்களங்களைப் பற்றி எழுதுவாரோ என்ற எண்ணம் எழும்பியது! எல்லோருக்குள்ளும் ஒரு காதலரும் ஒரு போராளியும் இருக்கவே செய்கிறார்கள்!
நிலாந்தனின் கவிதையை இதற்கு முன் எங்கோ படித்ததாய் ஞாபகம்.
நன்றி டிசே!
பொடிச்சி, //நேரத்தையும் படைப்புகளையும் கிடைப்பதில்லை என்று சொல்லுவது ஒரு வசதி.// உண்மை!
முன்பு படைப்புகள் கிடைக்கவில்லையென்று சொல்லிக் கொண்டிருந்தேன், இப்போது நேரம் கிடைக்கவில்லையென்று சாட்டுவேன் :))

8/05/2005 07:44:00 AM
கொழுவி said...

உமா ஜிப்ரான் கவிதைகள் வாசித்திருக்கிறீர்களா? வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வன்னியிலிருந்து எழுதிய மிகக் காத்திரமானவர்களுள் ஒருவர், மிக இளையவரும்கூட. இன்னும் போராளிகளான ஈரத்தீ, சூரியநிலா, மலைமகள் உட்பட பலர் இருக்கிறார்கள்."விசாலகன்" கவியரங்குகளில் பிரபலம்.
தமிழ்க்கவி அம்மாவும் இருக்கிறா.

8/05/2005 08:46:00 AM
இளங்கோ-டிசே said...

//ஈழத்தை விட்டு நீங்கி ஆண்டுக்கணக்கானவர்களின் படைப்புகளையே ஈழத்துப்படைப்புகள் என அநேகர் முன்னிறுத்தும் வேளையிலே, இப்படியான அசல் மண்ணிலிருந்து வேரோடப்புடைக்கும் படைப்புகளை அறிமுகப்படுத்துவது மிக மிக அத்தியாவசியமானது.//
பெயரிலி இது உண்மைதான். எம்மைப் போன்றவர்களைவிட, அண்மைக்காலம்வரை ஈழத்தில் இருந்த ஈழநாதன், வசந்தன், சயந்தன் மற்றும் இன்னும் ஈழத்தில் இருக்கின்ற மு.மயூரன் போன்றவர்கள் இவை குறித்து விரிவாக எழுதவேண்டும். படைப்புக்களோடு படைப்பாளிகளையும் இவர்களைப் போன்றோருக்கு அறிமுகம் இருப்பதால் விரிவான தளத்தில் எழுத முடியும்.
.....
சயந்தன்! நிலாந்தன், அமரதாஸ் குறித்து கட்டாயம் ஒரு பதிவு எழுதுங்கள்.

8/05/2005 09:19:00 AM
இளங்கோ-டிசே said...

பொடிச்சி, உலகத்தமிழர் நூலகம் குறித்த விசனம் உங்களைப்போல எனக்கும் இருக்கிறது. பல வருடங்களாய் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவும் இல்லை. இன்றும் பலர், முக்கியமாய் இளந்தலைமுறை தமிழ்ப்படைப்புக்கள் வாசிக்க ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு கோசங்களை மட்டும் எழுப்புகின்ற படைப்புக்களை அறிமுகப்படுத்தினால், ஓரிடத்திலேயே தேங்கிவிடும் அபாயமும் உண்டு. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனம் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
//கருணாகரன், அமரதாஸ், தானா.விஸ்ணு, போஸ் போன்றவர்கள் படைப்புகள் சமகாலத்தில் மிக முக்கியமானவை//
இவர்களோடு சித்தார்த்தனையும் சேர்த்துக்கொள்ளலாம், யாழில் இருந்தாலும் (கோண்டாவிலில் என்று நினைக்கின்றேன்). ஒரு தொகுப்பும் வெளியிட்டிருக்கின்றார். மீளுதல் என்ற பதிப்பகத்தை நண்பர்களுடன் தொடங்கி புத்தகங்களும் வெளியிடுகின்றார். இரண்டாவது புத்தகமாய் வந்ததுதான் தானா.விஸ்ணுவின் 'நினைவுள் மீள்தல்'. முதலாவது புத்தகம், ஜேம்ஸ் என்று A/L படித்துக்கொண்டு இருக்கும்போது செல்ல்ல்டியால் இறந்து போன ஒருவரின் தொகுப்பு. அதேபோன்று வன்னியிலிருந்து பல பெண்படைப்பாளிகள் முகிழ்ந்திருக்கின்றார்கள் என்பதுவும் கவனிக்கப்படவேண்டிய விடயம். மற்றும்படி, எனக்கும் கவலை உள்ளது. ஆகக்குறைந்தது இன்று வன்னி, யாழ் படைப்புக்களுடன் கொஞ்சமாவது அறிமுகம் இருக்கின்றமாதிரி, திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற படைப்புக்கள் பற்றி அதிகம் தெரியவில்லை என்று. திருகோணமலையில் இருந்து, யதீந்திராவால் வெளியிடப்ப்டும் யதீந்திரா சில இதழ்கள் மட்டுமே வாசிக்க கிடைத்தது. இன்னும் முஸ்லிம் சமுகத்திலிருந்து பல புதிய படைப்பாளிகள் நிச்சயம் தோறியிருப்பார்கள். றஷ்மி, இளைய அப்துல்லாவிற்கு பிறகு எழுதிய எந்தப்படைப்பாளிகள் பற்றியும் அறிய முடிந்ததுமில்லை.
//எங்களுடைய இரசனைகளை தேடல் துளியும் இல்லாமல் வைத்திருந்தபடி, நேரத்தையும் படைப்புகளையும் கிடைப்பதில்லை என்று சொல்லுவது ஒரு வசதி. இங்கு நாம் எல்லோருமே அங்குள்ள படைப்பாளர்கள் தமது படைப்புகளை கதவு தட்டி வந்து யாரும் தர அனுப்பி வைக்கவேண்டுமென நினைப்பதுபோல இருக்கிறது.//
இதை நானும் ஒத்துக்கொள்கின்றேன் :-(.

8/05/2005 09:45:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்திற்கு நன்றி, சுந்தரவடிவேல் மற்றும் கொழுவி.
..........
//உமா ஜிப்ரான் கவிதைகள் வாசித்திருக்கிறீர்களா? வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வன்னியிலிருந்து எழுதிய மிகக் காத்திரமானவர்களுள் ஒருவர், மிக இளையவரும்கூட. //
கொழுவி, உமா ஜிப்ரானின் கவிதைகளை 'மூன்றாவது மனிதன்', 'வெளிச்சம்' போன்ற இதழ்களில் வாசித்திருக்கின்றேன். 'செம்மணிக் கவிதைகள்' என்ற தொகுப்பிலும் உமாஜிப்ரானின் கவிதைகள் உள்ளது. நீங்கள் கூறிய பல போராளிப் படைப்பாளிகளை எனக்குத் தெரியாது :-((. ஆனால் மலைமளின் 'மலைமகள் கதைகள்', தமிழ்க்கவியின், 'இனி வானம் வெளிச்சிரும்' போன்றவை வாசித்திருக்கின்றேன். ஈழத்தில் இருந்து வெளியிடப்பட்டதில் 'இனி வானம் வெளிச்சிரும்' ஒரு முக்கியமான புதினம் என்பது எனது திண்ணிய வாசிப்பு எண்ணம். அதேபோன்ரு மலைமகள் உட்பட மூன்று போராளிகள் சேர்ந்து கூட்டாய் தொகுத்து எழுதிய மாலதி படையணியின் வரலாற்றைக் கூறும், 'விழுதுமாகி வேருமாகி' முக்கியமான போரியல் தொகுப்பு. அதில் குறிப்பிடப்படும் களமுனைகள், தாக்குதல் உத்திகள், இழப்புக்கள், துயரங்கள், வேதனைகள் - நான் கனவிலும் நினைத்துப்ப் பார்க்கமுடியாதவை.

8/05/2005 10:05:00 AM
Anonymous said...

உ.சேரன், வ. ஐ. ச. ஜெயபாலன், பொ. கருணாஹரமூர்த்தி, அ. முத்துலிங்கம், என். மகாலிங்கம், உ. அவ்ஔவை, ஷோபா சக்தி. எஸ். கணேசலிங்கன் போன்ற ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களைக் குறிப்பிட மறந்துவிட்டீர்களே? :-(

8/05/2005 10:30:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே இந்தப் பதிவு அவசியமானதொன்று இதற்காக நன்றி.நான் சிங்கப்பூர் மீண்டு வந்துவிட்டேன் செய்து முடிக்கவேண்டிய வேலைகள் சிலவற்றை செய்துவிட்டு ஆறுதலாக எழுதுகிறேன்.
அமரதாஸ்,தானா விஷ்ணு,தமிழ்க்கவி இவர்களுடன் இன்னொரு கலைஞர் முல்லை யேசுதாசன் இவரது நீலமாகிவரும் கடல் நூல் வாங்கி வந்துள்ளேன்.இவர்களுடன் நிலாந்தன்,கருணாகரணையும் சந்திக்கக் கிடைத்தது மகிழ்ச்சியான அனுபவம்.

இவர்களைப்போலவே தாமரைச் செல்வியும் முக்கியமான படைப்பாளி.எல்லாவற்றையும் ஆறுதலாக எழுதுகிறேன்

8/06/2005 03:43:00 AM
வசந்தன்(Vasanthan) said...

டி.சே,
ஈழத்துச் சைவக்கோயில்களில் பாலியற் சிற்பங்களை நீங்கள் பார்க்கவில்லையென்பது ஆச்சரியமாயிருக்கிறது.
என் சொந்தக் கிராமத்திலுள்ள ஒரு சைவக் கோயிலின் தேரில் இருப்பவை அப்பட்டமான புணர்ச்சிச் சித்திரங்கள். யாரும் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒருதடவை நண்பர்களுடன் (பத்து வயதில்) இதுபற்றிக் கதைத்தபோது யாரும் நம்பவில்லை. பின் நேரே கூட்டிச் சென்று காட்டித்தான் நம்பினார்கள். பின் வேறொரு சைவக் கோயில் தேரிலும் பார்த்தேன். அதன்பின் வேறு கோயில்கள் சிலவற்றில் (மருதடிப்பிள்ளையார் தேருட்பட) தேடி அவை கிடைக்கவில்லை.

4/01/2006 06:52:00 PM