கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி

Friday, September 30, 2005

Bodies in Motion by Mary Anne Mohanraj



"...Even in the middle of war, children were being born here, life was going on. Without sugar, sometimes without even rice, going on anyway, despite the grief and the pain. Sometimes, the blood on the sheets was only from a bridal night, sometimes, there was celebration, there was pleasure, there was joy."
-Mary Anne Mohanraj (Wood and Flesh)

(1)
இந்தத் தொகுப்பில் மேரி ஆன் மோகன்ராஜின் இருபது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளாக இருப்பினும் ஒரு நாவலுக்குரிய தன்மையுடன் சில பாத்திரங்கள் பல்வேறு கதைகளில் பல்வேறு சூழலில் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'கந்தையா', 'வல்லிபுரம்' என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட இரு குடுமபங்களின் பிள்ளைகளின் கதைகளும், பிறகு அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் கதைகளும் கூறப்படுகின்றன. கதைகள் 1939ல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், கொழும்பில், அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் நடப்பதாய் விரிந்தபடி இருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் இலகுவில் வாசிப்பவருக்கு புரியவேண்டும் என்பதற்காய் கதைகள் ஆரம்பிக்க முன்னர் குடும்ப மரம் (family tree) தரப்பட்டிருக்கின்றது.

தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் ஆகக்ககுறைந்தது பத்துக் கதைகளாவது நல்ல கதைகள் என்று துணிந்து கூறலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் (முக்கியமாய் பால்யநதி), தங்கமணியின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒருவிதமான அமைதியும் நிதானமும் படர்கின்றமாதியான வாசிப்பை மேரி ஆனின் படைப்புக்களிலும் பெற்றிருந்தேன். எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கூற முடியாத இரகசியங்கள் கசிந்தபபடியேதானே இருக்கின்றன. அவை குறித்து அறிய ஆவல் இருப்பினும் அவ்வாறு அறியமுற்படுகையில் தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இரகசியங்களை இரகசியங்களாவே வைத்துப் பார்க்கவே மனித மனங்களை விரும்பச் செய்கின்றன. இந்தக் கதைகளிலுள்ள கதாபாத்திரங்களும் தமக்குரிய தனிமைகளுடன், நம்பிக்கைகளுடன், துரோகங்களுடன், இரகசியங்களுடன் நடமாடுகின்றன. கதைகளை வாசித்துக்கொண்டுபோகும்போது எந்த பாத்திரத்தின் மீதும் மூர்க்கமாய் கோபப்படமுடிவதில்லை. ஏன் இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற இயலாமையுடந்தான் பார்த்துக்கொண்டிருக்க முடிகின்றது. 'உபபாண்டவத்தில்' வருவதுபோன்று, அந்த அந்தப் பாத்திரங்கள் உரையாடத் தொடங்கும்போது அவை தமக்கான நியாயங்களையும், அந்தப் பாத்திரம் குறித்து பிற பாத்திரங்கள் பேசும்போது வேறுவிதமான பார்வைகளையும் வாசிப்பவருக்குத் தருகின்றது. முக்கியமாய் மேரி ஆன் எந்தப் பாத்திரத்தின் மீதும் தனது பார்வையை (ஜெயமோகன் எழுத்துக்களில் இருக்கும் முக்கிய பலவீனமே இதுதான்) திணிக்காமல் அவற்றை அவர்கள்பாட்டில் பேசவிடுவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம். இந்தக் கதைகளில் என்னை(உடைந்தபோன பல 'நான்'களை), உங்களை, உஙளுக்குத் தெரிந்த பலரைப் பார்த்துக்கொண்டே போகலாம். குடும்பஙகளில் சாத்தியமாயுள்ள Heterosexual, Homosexual, Adultery, Teen Age Sex என்று எல்லாவிதமான உறவுகளும் பேசப்படுகின்றன. எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் காமம் ஒரு சிற்றாறைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றது. அது பலவேளைகளில் உறவுகளை பிணைப்பதாயும் (Bond?) சிலவேளைகளில் உறவுகளை முறிப்பதாயும் அமைகின்றது.

(2)


Mary Anne Mohanraj (2001)

பிள்ளைகளின் பிள்ளைகளைப் பற்றிக் கூறும் கதைகளில், Minnal in Winter கதை மிகவும் பிடித்த ஒன்று. பத்தொன்பது வயது மின்னல், புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றார். அவரது தாயார் கொழும்பில் இருந்தாலும் அவரது சித்தியொருவர் மாசூஸட்டில் இருக்கின்றார். வளாகத்துக்குள் தங்கியிருக்கும் மின்னலுக்கு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கும் ஸ்பானிய பெடியனுடன் காதல் முகிழ்ந்து, உறவின் நீட்சியில் கர்ப்பமும் தரிக்கின்றார். இதே சமயம், கொழும்பிலிருக்கும் தாய் மின்னலுக்கு நல்லதொரு திருமணப் பொருத்தம் வந்திருக்கின்றது, படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வருக என்று கடிதம் எழுதுகின்றார். இங்குள்ள உறவு குறித்து அம்மாவுக்கு கூறுவதா அல்லது அம்மா பார்த்த பையனைத் திருமணஞ்செய்வதா என்று மின்னல் குழம்பத்தொடங்குகின்றார். அந்த நேரத்தில் மாசூஸட்டில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போகின்றார். அவரது சித்தி ராஜியும் அந்தச்சமயத்தில் கர்ப்பிணியாய் இருக்கின்றார். இறுதியில் அம்மாவின் முடிவுக்கு உடன்படுவதில்லை எனவும், அதேசமயம் அந்த கருவைத் தாங்குவதில்லை எனவும் முடிவு செய்து தொடர்ந்து படிக்கப் போவதாய் கதை முடியும். இந்தக் கதை நகர்ந்துகொண்டு போகும் விதம் மிக அற்புதமானது. ஒரு பெடியனோடு படித்து கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தன்னை முழுதாய் எடுத்துக்கொள் என்று தன்வசம் இழப்பது....காதலில்/காமத்தில் கிறங்கிக்கிடப்பது...பிறகு கர்ப்பந் தரிக்கும்போது தன் எதிர்காலத்தை நினைத்து வருந்துவது.... என அனைத்தும் மிக இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கதையின் ஓரிடத்தில் மின்னல் யோசிப்பதாய் வரும், 'அம்மா இப்படி ஒரு பெடியனுக்கருகில் இருந்தால் எப்படியான உணர்ச்சிகள் பீறிட்டெழும் என்று சரியாக நீ எனக்குக் கற்றுத்தந்து மனந்திறந்து விவாதித்திருந்தால், இன்று இப்படியான சிக்கலில் மாட்டாமல் கவனமாயிருந்திருப்பேனென' என்று எல்லாம் அந்தப் பாத்திரம் யோசிப்பது பற்றி, ஒரு பதின்மவயதுப்பெண்ணின் மனநிலையில் இருந்து அழகாய் மேரி ஆன் எழுதியிருபபார். மின்னல் குழம்புபோது நாங்களும் குழம்பி, படிப்புத்தான் அனைத்தையும் விட தன் சுயத்தைப் பிரதிபலிக்கப்போகும் விடயம் என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும்போது வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித அமைதி படர்ந்துவிடுகின்றது.

Mint in Throat கதை, ஷிபாலி என்ற வளாகத்தில் படிக்கும் பெண் எப்படி கத்தி முனையில் ஒரு வெள்ளைக்காரப்பையனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றாள் என்பதையும் அதிலிருந்து மீண்டு எப்படி ஒரு நம்பிக்கையான ஒரு துணையை அடைகின்றாள் என்பதையும் கூறுகின்றது. ஒரு நாள் வகுப்பு முடிந்து வரும்போது கழுத்தில் கத்தியை வைத்து ஒரு வெள்ளைப் பெடியன் காசு தாவென்று கேட்கின்றான். தன்னிடம் காசில்லை என்று ஷிபாலி கூறுகின்றபோது மூர்க்கமாய் அவள் கன்னத்தில் அவன் அறைகின்றான். நிச்சயம் காசு கொடுக்காவிட்டால் தன்னைச் சிதைக்காமல் விடமாட்டான் என்று விளங்கிக்கொண்ட ஷிபாலி தன்னைத் தப்புவிக்க, 'you want sex?' என்று வினாவ blow job செய்ய வற்புறுத்தப்படுகின்றாள். கதையின் இடைநடுவில் ரெசிடன்டில்(residence) அவளது அறைக்கருகில் இருக்கும், ஜேம்ஸ் என்ற பையனைப்பற்றிக் கூறப்படுகின்றது. மிக நல்ல பெடியன்; அநேக பெண்களுக்கு மிகவும் பிடித்தவன். ஆனால் எந்தப் பெண்ணும் அவனோடு dating செய்யவோ அல்லது இரண்டாம் முறை dating செய்யவோ விரும்பாத பையனாக இருக்கின்றான். You are ladies' man என்று இனிக்கக் கூறுகின்றார்களே தவிர எந்தப் பெண்ணும் அவனைப் புரிந்து, சேர்ந்திருக்க விரும்பியதில்லை. நல்லவனாய்/அப்பாவியாய் இருப்பது கூட சிலவேளைகளில் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தமானது என்று இந்த பாத்திரத்தைக் கொண்டு மேரி காட்சிப்படுத்தியிருப்பார். இறுதியில் sexual assault செய்யப்பட்ட ஷிபாலி அவனிடம் போய்ச் சேருகின்றாள். அவன் மிக இதமாய் அவளுடைய பயம் போக்கி, கண்ணீர் துடைத்து, நிம்மதியாகத் தூங்க வைக்கின்றாள். ஷிபாலியும் இவன்தான் தனக்குரிய சரியான துணை என்று நினைத்துக்கொண்டு தூங்குவதாய் கதை முடிகின்றது.
.....
இதே ஷிபாலி பிறகு இன்னொரு கதையில், ஒரினப்பாலுறவுக்காரனான றொஷானை தனது பெற்றோர்கள் விரும்புவார்கள் என்ற காரணத்தினால் மணம் முடிக்கின்றாள என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். றொசானை திருமணஞ் செய்யமுன்னர் இப்படி ஒரு குறிப்பு எழுதிக்கேட்டுத்தான் மணந்து கொள்கின்றாள்; 'Sri Lankan female, straight but not into serious relationships, looking for gay south Asian male for sham marriage. Let's make our parents happy. You know you want to.
-shefali@upeen.edu'.

Challah கதையில், மருத்துவ மேற்படிப்பு படிக்கின்ற றொஷானுக்கும், கபீரியலுக்கும் இடையிலான சமபாலுறவு பற்றிக் கூறப்படுகின்றது. Bodies in Motionல், சாயா என்ற post-doc செய்யும் பெண்ணுக்கும் டானியல் என்ற வெள்ளைப் பேராசிரியருக்கும் இடையில் முகிழும் உறவையும், இறுதியில் அந்த உறவு முறிந்துபோய் பேராசிரியர் இன்னொரு பெண்ணைத்திருமணம் செய்வதாயும், சாயா வேறொரு நகரத்துக்கு விரிவுரையாளாராகப் போகின்றதாயும் முடியும். அழகாய் முகிழ்கின்ற உறவுகள் எல்லாம் ஏன் உடைகின்றன என்று எண்ணிப் பார்த்தால் இனம்புரியாத பீதியும் இருட்டுமே நம் மனதுக்குள் படரும். அந்த இருட்டிலும், நம்பிக்கையாய் சாயா தனது வாழ்கையில் நகர்வதாய் காட்டப்படுவது இதமாயிருக்கின்றது. இந்தக் கதையில் சாயாவுக்கு தனது தந்தை எப்படி இறந்தார் என்ற உண்மையை அறிய விரும்புகின்றவராகவும், ஆனால அவரது தாயார் அந்த இரகசியத்தை மறைத்தபடி இருக்கின்றவராயும் வரும்.

அந்த இரகசியம், Laksmi's Diary என்ற இன்னொரு கதையை வாசிப்பவருக்கு உடைத்துக்காட்டப்படுகின்றது. என்றாவது ஒருநாள் தனது மகள் சாயா வாசிப்பாள் என்று, நேரில் கூறத் தயங்கும் இரகசியத்தை சாயாவின் தாய் லக்ஷ்மி, டயரியில் எழுதி வைத்திருக்கின்றார். குடியும், இணைதலும்/பிரிதலும் என்று கணவனுடன் வன்முறைகளுடன் கழியும் வாழ்க்கையில், ஒரு நாள் குடிவெறியில் கார் ஓடிக் கொண்டு போகும்போது, லக்ஷ்மியும், அவளது கணவனும், சாயாவும் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். அந்த நேரத்தில் லக்ஷ்மி சாயாவின் தங்கையான சவீதாவை கர்ப்பமாய் வயிற்றில் தாங்கியபடி இருக்கின்றார். விபத்தில் சிக்கி மூர்ச்சையாகி இருந்த தனது கணவன் ராசாவை தனது சேலையை அவனது மூக்கில் இறுக்கிப் பிடித்து கொன்றுவிடுகின்றாள் லக்ஷ்மி . சிலவேளைகளில் விபத்தின் காரணமாய், முன்னரே இராசா இறந்திருப்பான என்று நினைத்தாலும், இராசாவை கொலைசெய்த குற்றவுணர்ச்சியுடனேயே லக்ஷ்மி தன் மீதி வாழ்நாள்களைக் கழிக்கின்றாள். உண்மையில் அவளை அப்படி செய்யத்தூண்டியதற்கு அவன் அப்படி ஒரு கொடுங் குடிகாரனாக மட்டும் இருந்தது காரணம் அல்ல. நள்ளிரவுகளில் கட்டிலை விட்டு அடிக்கடி இராசா காணாமற்போவதும், உடைகள் விலகப்படுத்துக்கொண்டிருக்கும் சிறுமி சாயாவை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதும், விரைவில் அது எங்கே போய் முடியும் என்று லக்ஷ்மிக்குத் தெளிவாய் விளங்கிய காரணமும் கூடத்தான், அவளை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது. (இராசாவின் இந்த 'நடத்தை' குறித்து எற்கனவே தனது தங்கையிடம் லக்ஷ்மி,இது குறித்து என்ன செய்வதென்று விவாதித்திருப்பாள்).

Gentleman என்ற கதை இராஜி, குயிலா, இராசா என்ற மூன்று பிள்ளைகளின் தகப்பனான சுந்தரின் பார்வையில் கதை கூறப்படுகின்றது. ஒருநாள் இராசா எவருக்கும் கூறாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகின்றான். இராஜி தன்னோடு படித்துக்கொண்டிருக்கும் வெளைக்கார இளைஞர்களுடன் டேட்டிங் செய்துகொண்டிருப்பதால் அவள் மீது நம்பிக்கை இழந்து, குயிலா மீது மட்டும் சுந்தர் நம்பிக்கை கொள்கின்றார். குயிலாவும் தகப்பன் சொல் தட்டாத மகளாக இருக்கின்றார். குயிலாவின் பதினேழாவது பிறந்த தினத்தில் தனது செல்ல மகளுக்கு கொழும்பில் திருமணம் செய்து வைக்கப் போவதாய் சுந்தர் அறிவிக்கின்றார். ராஜி, படிக்கவேண்டிய இந்த வயதில் தஙகைக்கு திருமணம் வேண்டாம் என்று தந்தையிடம் சண்டை பிடிக்கின்றாள். இளவயதில் திருமணம் செய்வது குறித்து பயமிருந்தாலும் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகின்றாள் குயிலா. கொழும்புக்குப் போய குயிலா திருமணம் செய்வதுடன் கதை முடிகின்றது.

நல்ல பிள்ளையாய், 'குழப்படி' செய்யாது, பெற்றோர் சொல் கேட்கின்ற பிள்ளைக்கும் (குயிலா) அமைதியான வாழ்க்கை கிடைத்தல் அவ்வளவு இலகுவல்ல என்றுதான் இன்னொரு கதையான The Emigrant கூறுகின்றது. குயிலா திருமணம் செய்த சில வருடங்களின் பின் ஜுலை (83) கலவரம் நடக்கின்றது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, கொழும்பில் 'வாழ்க்கைப்பட்ட' குயிலாவுக்கு தமிழ்- சிங்களப்பிரச்சினை எல்லாம் புதிதாயும் பீதி தருவதாயும் இருக்கின்றது. அத்தோடு வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு வடுவும் வந்து இந்தத்தருணத்தில் சேர்ந்துவிடுகின்றது. தனது கணவனுக்கு தன்னை திருமணம் செய்யமுன்னர், கிமாலி(Himali) என்ற பெண்ணுடன் உறவு இருந்தது என்பதுவும் அவர்களுக்கு றொஷான் என்ற பிள்ளை இருப்பதுவும் தெரியவர வாழ்க்கையின் கசப்பை குயிலா சுவைப்பதாய் கதை முடியும். குயிலாவின் பிள்ளையே, அமெரிக்காவுக்கு புலமைப்பரிசில் படிக்க வரும் மின்னல் (Minal in Winter) என்னும் பதின்மவயதுக்காரி. (வேறொரு கதையில் குயிலாவின் கணவன் தனது சிங்களத் துணைவியை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு மின்னல் இரண்டு வயதில் இருக்கும்போதே போய்விடுவதாக வரும்).

என்னைப் பாதித்த கதைகளில் ஒன்று Tightness in the chest. இராஜியினதும், விவேக்கினதும் கதை இது. இராஜி (குயிலாவின் அக்கா) வெள்ளைப் பையன் ஒருவனோடு serious உறவில் இருந்தபோது, அவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து தன்னை ஏமாற்றுகின்றான் என்று அறியவரும்போது அவனை உதறித் தள்ளிவிட்டு, தனது பெற்றோரிடம் தனக்கு ஒரு துணை தேடும்படி இராஜி கூறுகின்றாள். பெற்றோரும் கொழும்பில் வைத்தியராக வேலை செய்துகொண்டு இருந்த விவேக்கை மணம் செய்து கொடுக்கின்றனர். விவேக் ஒரு அருமையான இளைஞன்; அவனது பெற்றோருக்கு அவனே ஒரெயொரு பையன். இராஜிக்கு, இதற்கு முன் ஒரு உறவு இருந்தது என்பது சாடைமாடையாகத் தெரிந்தாலும் விவேக் அது பற்றி இராஜியிடம் விபரமாய்க் கூறும்படி வினாவியதில்லை. அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தபோது இராஜி மேற்கொண்டு என்ன படிப்பது என்று குழம்பியபோது அவள் ஒவியம் படிப்பது நல்லதென்று உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கின்றான். அவள் நிர்வாணமாய் ஆண் மொடல்களை நிறக்வைத்து படம் வரையும்போதோ அல்லது இப்படி அவர்கள் வரையும்போது 'நீயும் நிர்வாணமாய் காட்சி கொடுப்பாயா? என்று சஞ்சலம் அடைந்து கூட வினாவியதில்லை. சமையல் வேலைகளைப் பகிர்ந்தபடி, அவளுக்கு அவனுக்குப் பிடித்த சோறும் கோழிக்கறியும் வைக்க வராது என்று தெரிந்து அவளை வற்புறுத்தாமல் தானே சமைத்துச் சாப்பிடவும் செய்கின்றவன். எந்தப் பெண்ணையும் எதிர்த்துக் கதைக்கக்கூடாது என்று அவனது அமமா சிறுவயதில் சொல்லிக்கொடுத்ததை தொடர்ந்து கடைப்பிடித்தபடி இராஜியைக் காயப்படுத்தாமல் இருக்கின்றான். ஆனால் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருப்பதில்லை. நல்லவராகவும் நேர்மையானவராகவும் இருந்தால் கூட அனைத்தும் நியாயமாய் நேர்மையாய் ஒருவரது வாழ்வில் நிகழ்ந்துவிடும் என்பது இல்லைத்தானே? 'குழந்தை ஒன்றை பெற்றுக்கொள்வோமா?' என்று அவன் கேட்டதற்கு கோபப்பட்டு ராஜி வீட்டை வீடு போய் விடுகின்றாள். பிறகு சில நாள்களின் பின் திரும்பி வந்து, தான் இது குறித்து யோசிக்க மோட்டல்(motel) ஒன்றில் தங்கி நின்றதாகக்கூறுகின்றாள். அங்கே உனது முன்னாள் வெள்ளைக்கார நண்பன் வந்தானா என்று கூட எந்தக் கேள்வியும் கேட்கமல்தான் விவேக் இருக்கின்றான். இப்படி பிறகு, அடிக்கடி இராஜி வீட்டை விட்டு வெளியே போவதும் சில நாள்களின் பின் திரும்பிவருவதுமாய் இருக்கின்றாள். ஆனால் எந்தக் கேள்விகளையும் இராஜியை நோக்கி வெளிப்படையாகக் கேட்காமல் விவேக் தன்பாட்டில் இருக்கின்றான். இறுதியில் அவனுக்கு பொஸ்ரனில் வேலை மாற்றம் கிடைக்கிறது. பெயர்வதற்கு சில நாள்கள் முன், வைத்தியசாலையில் அவன் மீது ஈர்ப்பு வைதிருக்கும் வெள்ளைக்காரப் பெண்ணுடன் விவேக் உடலுறவில் ஈடுபடுகின்றான். இது இராஜியை பழிவாங்குவதற்கே தவிர, விருப்புடன் அல்ல. பிறகு இராஜியிடம் 'I had sex with another woman' என்கின்றான். இராஜி, 'Are you going to have sex with her again?' என்று வினாவ, ''No' என்று மறுமொழிகின்றான். 'ok then' என்றபடி இராஜி திரும்பி படுப்பதுடன் நிறைவுபெறுகின்றது, கதை. ஒரு குற்றத்தை/தகாத உறவை இன்னொரு குற்றத்தால்/தகாத உறவால் சமனாக்குவதாய் வாசிப்பவருக்குத் தோன்றும்வண்ணம் கதை எழுதப்பட்டிருக்கும். ஏன் இவ்வளவு நல்லவனாய் இருக்கும் விவேக்கை இராஜியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற வினா எல்லோருக்குள்ளும் எழுவதைப் போல, அத்தனை காலமும் வெள்ளையினப் பெண்ணின் ஆசையை நிராகரித்துக்கொண்டிருந்த விவேக், ஏன் இன்னொரு நகரத்துக்கு குடிபெயரும்போது மட்டும் சறுக்குகின்றான் என்ற வினா எழும்புவதையும் தவிர்க்கமுடியாது. வாழ்வு எப்பவும் மர்மங்களை/ விடை தெரியாக் கேள்விகளைத்தான் தன்வசம் வைத்திருக்க விரும்புகின்றது போல.

ஆனால் இதே இராஜியும் விவேக்கும் (மின்னல் பற்றி வரும் கதையில்) பல வருடங்களின் பின், மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இராஜி தனது முதற் குழந்தையை கருவாய்த் தாங்கி கொண்டிருபபதாயும் வரும்.

Seven cups of water என்ற கதை பெண் சமப்பாலுறவு பற்றியது. மங்கைக்கும், அவளது சகோதரனை திருமணஞ் செய்து கொண்ட சுசிலாவுக்கும் குறுகிய காலத்தில் முகிழும் லெஸ்பியன் உறவு பற்றியது. திருமணம் செய்த சுசிலா, மங்கையுடன் தங்கிநிற்கும் ஏழு நாள்களையும் ஏழு தண்ணீர்க் குவளைகளுக்கு படிமமாக்கி மேரி எழுதியிருப்பார். சுசிலா தனது கணவன் சுந்தருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, பிள்ளைகளுடன் வாழ்வதாகவும், மங்கை தனியாளாக வாழ்வதுமாயும் கதை முடியும். இந்த சமப்பாலுறவு அவர்களது பதின்மத்திலேயே நிகழ்வதாய் இருப்பதை வாசிக்கும்போது தனியாட்களாய் வளாகத்தில், உயர்கல்லூரியில் வசிக்கும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்) சிறுதுளியாய் ஒரு பருவத்தில் வந்து மறையக்கூடிய சமபாபாலுணர்வு ஈர்ப்புக்களை கதை நினைவுபடுத்தியது.

இன்னொரு கதையான Monsoon Dayயில் மங்கை தனித்து வாழ்வதாகவும் அந்த ஊர் மக்கள் அவர் மீது நிரம்ப மரியாதை வைத்திருப்பதாயும் வரும். மங்கைக்கும், அவருக்கு உதவியாக தங்கியிருந்து சமையல் செய்த பெண்ணுக்கும் உறவு இருந்ததாய் சாடைமாடையாகச் சொல்லப்படும். மங்கையிடம், பருவமடையும் தமது பெண்களை உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, அறிந்து கொள்வதற்காய் அந்த ஊர்ப்பெற்றோர்கள் பேச அனுப்புவதாயும் அதில் சம்பவங்கள் வரும். அதே சமயம் மங்கை, ஒரு பொழுது, 'இப்படி மர்மாய் வாழ்க்கை நடத்தியதால்' ஒரு இளைஞர் கூட்டத்தால் சுடப்பட்டு தப்பிப் பிழைத்திருப்பார். ஊர் மக்கள் எவ்வளவு வலிந்து கேட்டபோதும் அவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என்று மங்கை வாய் திறந்து கடைசிவரை பேசவேமட்டார்.

(3)

Mary Anne signing her recent book, 'Bodies in motion'

மேரி ஆனின் கதைகள் எந்த இடத்திலும் உரத்துப் பேசுவதில்லை. வாழ்வை அதன் மயக்கங்களுடன், வருத்தங்களுடன், நம்பிக்கைகளுடன், நம்பிக்கைத் துரோகங்களுடன் இயல்பாய் விரித்து வைக்கின்றன. கதைகளை வாசிக்கும்போது எவர் மீதும் அதீத கோபமோ வெறுப்போ வருவதில்லை. அவரவர்களின் இயல்புடன் அவரவர்களின் விருப்புக்களை ஏற்றுக்கொண்டு நகர்வதுதான் உன்னதம் என்கின்றமாதிரி இந்தக் கதைகளை வாசித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது.

தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் (இரண்டு வயதிலேயே மேரி ஆன் ஈழத்தைவிட்டு புலம்பெயர்ந்தவர்) மிக ஆழமான ஆய்வுகள் செய்து ஈழப்பிரச்சினையை சரியான விதத்தில் விளங்கிகொண்டிருக்கின்றார். 57 கலவரத்திலிருந்து 83ம் ஆண்டுக்கலவரங்கள் வரை தகவல்களை/சம்பவங்களை மிகத் துல்லியமாய்க் குறிப்பிடுகின்றார். எந்தப் பக்கமும் சாராமல் 'உண்மைகளை' உண்மையாய்/நேர்மையாக முன்வைக்கிறார். இராணுவம் வீட்டுக்கு வந்த பதினம வயதுச் சகோதரனைச் சுட்டுக்கொல்ல, அதைப்பார்த்து இயக்கத்துக்கு போய் சேர்கின்ற பதின்மவயதுத் தங்கை வருகின்றார். தங்களின் இரண்டு பிள்ளைகளும் இப்படிப் போயிவிட்டனரே என்று புலம்புகின்ற பெறறோர் வருகின்றனர். தனது மகள் இயக்கத்தை விட்டு விலகி வந்தால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்று யோசிக்கின்ற தகப்பனும் வருகின்றார். சுதந்திரமாய் தாம் எழுதும்/விமர்சிக்கும் (கடிதங்களை) புலிகள் பிரித்துப் படிப்பார்கள் (கண்காணிப்பார்கள்) என்ற பதட்டத்துடன் எழுதப்படுகின்ற சம்பவங்களும் சித்தரிக்கப்படுகின்றன. 83 கலவரத்தின் பயங்கரம், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கொழும்பில் திருமணஞ்செய்த குயிலாவின் பார்வையில் விவரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பதின்மத்தில் விரும்பிய சூழலில், தன்னை ஒரு ஆணிடம் இழக்கின்ற பெண், இப்படித் தான் விரும்பியதைத் தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரம் கிஞ்சித்தும் கூட இல்லாமல் தன்னைப் போன்ற பெண்கள், ஈழத்தில் இராணுவங்களின் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்று யோசித்து கலங்குவதாயும் வருகின்றது.

இவரது கதைகளிலும் பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் உடலுறவில் ஈடுபடுகின்ற பெண்கள் வருகின்றார்கள். ஆனால் எவரும் நமது பிற ஆண் தமிழ் எழுத்தாளர்களைப் போல சிதைக்கப்படாமல் அவர்களது இயல்புகளுடன் சித்தரிக்கப்படுகின்றார்கள் (முக்கியமாய் சாருநிவேதிதா மற்றும் சாணக்யா, இயலுமாயின் இந்தத் தொகுப்பபை வாசித்துவிட்டு தமது கதைகளில் சித்தரிக்கும் பதினமவயதுக்காரர்களை எப்படி எழுதியிருக்கலாம் என்று ஒருமுறை யோசிக்கலாம்). சிலவேளைகளில் பெண்களால்தான் பெண்களைப் பற்றி இயல்பாய்/சரியாய் எழுத முடியுமோ என்று எழும் எண்ணத்தையும் தவிர்க்க முடிவதில்லை. அதே மாதிரி, 'எப்போதோ புலம்பெயர்ந்துவிட்டேன் ஊரும் போய்விட்டது ஊர்க் கிடுகு வேலியும் போய்விட்டது' மாதிரி, ஈழ அரசியல் குறித்து மெளனஞ்சாதிக்கும், அ.முத்துலிங்கம் போன்றவர்களும் மேரி ஆனைப் பார்த்து தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ளலாம் (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இன்னொருவிதமாய் உண்மைகளை 'உண்மைகளாய்' திரிக்காமல் எப்படி எழுதுவதென்றும் இந்தத் தொகுப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்). இரண்டு வயதில் அமெரிககாவுக்கு புலம்பெயர்ந்து, அக்கறையுடன் ஆய்வு செய்து தனது வேர்களைப் பற்றி, அங்குள்ள அரசியலைத் தவிர்க்காது எழுத, மேரி ஆனால் முடிகின்றதென்றால் ஏன் அ.முததுலிங்கம் போன்றவர்களால் ஈழப்பிரச்சினை குறித்து, எதுவும் வெளிப்படையாகப் பேசாது இருக்கின்றனர் என்ற வினா எழும்புவதையும் தவிர்க்க முடிவதில்லை. மாயா அருட்பிரகாசத்துக்கோ (M.I.A) , மேரி ஆனுக்கோ தமிழரென்று அடையாளம் காட்டித்தான் தம்மை நிலைநிறுத்தவேண்டிய அவசியமில்லை. அவர்களை வாசிக்கும்/கேட்கும் மக்களில் தமிழ் சனத்தொகை மிகச்சிறிய தொகையே. மேலும் ஈழ அரசியலைப் பேசுவதால் பிரபலம் கிடைக்கும் என்பதைவிடவும் சர்ச்சைகள்தான் (அதிக இரசிகர்களை/வாசிப்பவர்களை இழக்கும் சந்தர்ப்பம்) அதிகம் வரும் என்று தெரிந்தும், தமது அடையாளங்களை/வேர்களை, தாம் பேசவிரும்பும் அரசியலை, மறைக்காது பேசும் இந்த இரு பெண்களும் நிச்சயம் பாராட்டுக்களுக்கும் மதிப்புக்கும் உரியவர்களே.


photos courtesy: http://www.mamohanraj.com

*எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்!

Sunday, September 25, 2005

4வது சர்வதேசத் தமிழ் குறுந்திரைப்பட விழா
international_shortfilm_a

சற்று முன்னர்தான், ரொறொண்டோவில் தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடந்து முடிந்திருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட இருபத்தைந்து குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. படங்களின் நேரவளவு, ஒரு நிமிடத்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை பல்வேறு வகையான காலவளவுகளுக்குள் இருந்தன. எல்லாத் திரைப்படங்களையும் அறிமுகஞ் செய்தல் இயலாத காரியமாகையால் என்னைப் பாதித்த/நான் இரசித்த படங்கள் பற்றிய சில குறிப்புக்களைத் தரலாம் என்று நினைக்கின்றேன்.

கிச்சான்
இந்தப் படம் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தை பின்புலமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கி சற்றுப்பின்னரே நான் இதைப் பார்க்கத் தொடங்கியதால் முழுக்கதையும் தெரியாவிட்டாலும், ஏழ்மையின் காரணமாக படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சிறுவனொருவனின் வாழ்வைப் பதிவு செய்கின்றது இப்படம். அவனது தகப்பன் இராணுவத்தால் கொல்லப்படவும், தாய் வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்வதற்காய் கடல் கடந்து போகையில் இடையில் காணாமல்/எந்தத் தொடர்பும் இல்லாது போவதாயும் சிறுவனுக்கு ஆதரவாய் ஒரெயொரு வயது முதிர்ந்த பாட்டியொருவர் மட்டுமே இருப்பதாய்க் காட்டப்படுகின்றது. வருமானம் எதுவுமின்றி வறுமையால் அல்லறும் சிறுவன் தன் படிப்பை இடைநடுவில் நிறுத்தி இறுதியில் வேலைக்குப் போகின்றான். அவனது வயதுக்குரிய, மற்றச்சிறுவர்கள் செய்யும் எதையும் செய்யவியலாத இயலாமையைப் படம் அழகாக எடுத்துரைக்கின்றது. சிறுவனாக நடித்த பையனுக்கு விழாவின் இறுதியில் வழங்கப்பட்ட விருதில் சிறந்த நடிகனுக்கான பரிசு வழங்கப்பட்டது. உரிய அங்கீகாரம்தான்.

வெள்ளைப் பூனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவக்குமார், இடாலானோ கால்வினோவின் ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு இக்குறுந்திரைப்படத்தை எடுத்திருந்தார். ஒற்றை அறையுள்ள வீட்டில் ஒரு தம்பதியினரையும், எதுவுமே பேசமுடியாத கடும் நோயுற்றிருக்கும் ஆணின் தாயையும் சுற்றிக்கதை நகர்கின்றது. ஒரு தம்பதிகளுக்குரிய இடையில் எழும் இயல்பான பாலியல் உணர்ச்சிகளைக் கூட பிடித்தமான சூழ்நிலையில் காட்டமுடியாத ஒற்றை அறை வாசமும், வெவ்வேறு நேரங்களில் அவர்கள் செய்யும் வேலைகளும் அவர்களை அவர்கள்பாட்டில் சுய இன்பத்தில் அலைய விடுகின்றது. வெவ்வேறு நேரங்களில் அவர்கள் ஈடுபடும் சுய இனபத்தில் ஒரு வெள்ளைப்பூனை மட்டும் இரண்டு பேருக்கும் சாட்சியாக இருக்கின்றது. மிக இயல்பாய் எதையும் அளவுக்கும் மீறிப் பேசாமல் இந்தப்படம் பத்து நிமிடங்களுக்குள் சொல்ல வந்ததைக் கூறி நிற்கின்றது.தம்பதிகளில் ஒருவராக நடித்த லீனா மணிமேகலை மிக அற்புதமாய்ச் செய்திருந்த்தார். சிறந்த திரைப்படத்துக்கான விருதை இந்தப்படம் பெற்றதில் எதுவும் ஆச்சரியமில்லை.

You 2
கணவனால் வன்முறைக்குள்ளாக்கப்படும் பெண், தனது பிள்ளையும் கூட்டிக்கொண்டு ஒரு சினேகிதியின் வீட்டுக்கு வருகின்றார். அங்கே தங்கியிருக்கையில் ஆண்கள் இல்லாது தனித்து வாழ்வோம் என்று எண்ணமும், இரு பெண்களுக்கும் இடையே முகிழும் அந்நியோன்னியமும் அவர்களை சமப்பாலுறவாளராக்குகின்றது. எனினும் இருபெண்களுக்கிடையில் ஒரு பெண் மேலாதிக்கவாதியாக படிப்படியாக மாறி இறுதியில் (கணவனின் வன்முறையால் வீட்டை விட்டுவந்த) மற்றப்பெண்ணை ஒரு பிரச்சினையின் நிமிர்த்தம் கை நீட்டி ஓங்கவும், 'நீயும் கூடவா?' என்று கேள்வியை பார்ப்பவரிடையே விட்டுச் செல்வதுடன் படம் முடிகின்றது. ஆண்-பெண்ணுக்கிடையில் மட்டுமல்ல, பெண்-பெண்ணுக்குமிடையிலான உறவில் கூட வ்ன்முறை/சுரண்டல்கள் வரலாம் என்ற சிந்திக்கக்கூடிய விடயத்தை தொட்டுச்செல்கின்றது. எங்கேயும் ஒரு ஆதிக்கம் வருகையில், அது வன்முறையாகத்தான் இறுதியில் உருவெடுக்கச் செய்கின்றது. அது ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்த்தால் என்ன? ஒரே மாதிரித்தான் இருக்கின்றது. இந்தப்படத்தில் சுமதி ரூபனும்(கறுப்பியும்), இன்னொரு பெண்ணும் நன்றாக நடித்திருந்தனர். சிறந்த திரைக்கதைக்கான விருதை சுமதி ரூபன் பெற்றிருந்தார்.

P9230037
சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்ற சத்தியாவும், சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்ற சுமதி ரூபனும்(கறுப்பி)

Rape
காலம் காலமாய் தமிழ்ப்பெண்கள் மீது ஏனைய இராணுவங்களால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளையும் சித்திரவதைகளையும் இது ஆவணப்படுத்துகின்றது. 50களில் ஆரம்பித்த கலவரத்தில் பாலியல் வன்புணரப்பட்ட பெண்களிலிருந்து, அண்மையில் (2001) மன்னாரில் வன்புணரப்பட்ட இருபெண்கள் வரை பேசப்படுகின்றது. 'சிறி' என்ற சிங்கள முத்திரையை, பெண்களை பாலியல் வன்புணர்ந்து முலைகளில் குத்தியிருந்து தொடக்கம், கர்ப்பிணிப்பெண்களை கூட்டாய் வன்புணர்ந்தது வரை பார்த்தவர்களின் நேரடிப்பேச்சால் ஆவணப்படுத்தப்படும்போது சொல்வதற்கு நிச்சயம் சொற்கள் எதுவும் நமக்கு எஞ்சியிருக்கப்போவதில்லை. அதிலும் கலவரம் ஒன்றில் ஜந்து இராணுவத்தால் வன்புணரப்பட்ட ஒரு பெண் தன் வாயால் நிகழ்ந்ததைக் கூறும்போது..... #%^$ U #$%$@! என்று swear பண்ணாமல் நிச்சயம் இருக்கமுடியாது. வெளியுலகத்துக்கு இதுவரை மறைக்கப்பட்ட, பல உண்மைகளை இது அம்பலத்தப்படுகின்றது. பாலியல் வன்புணரப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வாழ்வேன் என்று நம்பிக்கையாக எழுந்த அந்தப்பெண்மணியையும், பாலியல் வன்புணரப்பட்டாலும் நீங்கள் எந்தக்குற்றமும் செய்யவில்லை அந்த நிகழ்வை அசட்டை செய்து வாழ்வில் நீங்கள் கட்டாயம் நகரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காய், எழும் ஒரு திருச்சபை ஆயரின் வார்த்தைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் ஆதரவைத் தரும். பாலியல் வன்புணரப்பட்டாலும் அவர்களும் நம்மில் ஒருத்தர் என்ற புரிதலை பார்ப்பவரிடையே இந்த ஆவணப்படம் படியவிடுவது ஆறுதலாக இருக்கின்றது.

அந்த ஒரு நாள்
ஒரு பெண்ணுடைய adultery பற்றிக் கூறுகின்ற படம். தனது மனைவி இன்னொருத்தருடன் உறவில் ஈடுபட்டிருக்கின்றார் என்று ஏற்கனவே அறிந்து சந்தேகம் கொள்ளும் கணவனுக்கு, மன உளைச்சல்களால் அவதிப்பட்டு வேலை போய்விடுகின்றது. இறுதியில் அந்தப்பெண்ணைப் 'பழிவாங்கி' இரத்தக்கறைகளும் நிற்பதுடன் படம் முடிகின்றது. சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதை இது பெற்றிருந்தது. கனடாவில் எடுக்கப்பட்ட படம்.

P9230035
'உயிர்நிழல்' கலைச்செல்வன் நினனவுப்பரிசான சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதைப் பெறும் பற்றிக் பத்மநாதன்(வலது), கலைச்செல்வனின் சகோதரர் கவிஞர் திருமாவளவன் (இடது) மற்றும் நிக்கோல்

தீர்ந்து போயிருந்த காதல்
கவிதை நடையுடன் மூன்று நிமிடங்களில் காதலின் 'அழுகிய' கணங்களைச் சொல்கின்றது. வேலைக்குப் போகும் பெண் தாபத்துடன் வேலை முடிந்தவுடன் தனது கணவனுக்காய் வீட்டில் காத்திருப்பதும், அவன் நேரம் பிந்தி நள்ளிரவில் வருகின்றபோது அவளது காதல்/காமம் அவளை விட்டு விலகிப்போயிருப்பதையும், ஜடமாய் அவன் அரவணைப்பில் கசங்கிப்போவதையும் மிக இயல்பாய் கவிதை நடையில் கூறியிருந்தது. லீனா மணிமேகலையே இயக்கியும் நடித்தும் இருக்கின்றார். சிறந்த இந்தியத் திரைப்படத்துக்குரிய தேர்வில் இது விருதைப்பெற்றிருந்தது.

ரெட் வின்ரர்(Red Winter)
மூன்று இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் சுற்றி நகரும் கதையிது. படத்தின் முடிவில் மூன்று கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன. யாரோ ஒரு ஆண்தான் இந்தக் கொலைகளைச் செய்திருப்பான என்பதைப் பார்ப்பவரிடையே படியவிட்டு இறுதியில் மூன்று கொலைகளையும் சைக்கோவான பெண்ணே செய்திருக்கின்றாள் என்பதாய் முடியும். அற்புதமான ஒளிப்பதிவும், இசையும் இதற்கு மெருகூட்டுகின்றன. படத்தில் இடையில் பின்னணியில் காட்டப்படும் துண்டு துண்டான ஆங்கிலப்படங்களின் காட்சிக்கும், இதற்கும் தொடர்புகள் இருக்கின்றதென்று படம் பார்த்துக்கொண்டிருந்த தோழி ஒருவர் கூறியிருந்தார். எனினும் தமது மூலத்தை/அடிப்படையை மறைக்காமல், படம் முடியும்வரை பார்க்கக்கூடிய ஒரு நல்லதொரு திரில்லரைத் தந்திருக்கின்றார்கள் என்பதற்காய்ப் பாராட்டலாம். இதைச் சற்று நீளமான திரைப்படமாக (ஒரு மணித்தியாலத்துக்கு மேல்) எடுத்தார்கள் என்றும் இந்த விழாவுக்காய் 30 நிமிடங்களாய்ச் சுருக்கியதாயும் அந்தப் படத்தை இயக்கியவர் உரையாடும்போது கூறியிருந்தார். முடிந்திருந்தால் அந்தப்படத்தில் வழமையான சினிமாத்தனத்துடன் வரும் பாடல்களை (ஒரு பாடலையாவது) எடிட் செய்திருக்கலாம். விரைவில் ரொறண்டோவில் தியேட்டர்களில் முழுநீளத்திரைப்படமாக இத் திரைப்படம் காண்பிக்கப்படப்போவதாயும் அறிந்தேன். பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்சினி நன்றாகச் செய்திருந்தார்.

arun
அருண் வைத்தியநாதன் மற்றும் பற்றிக் பத்மநாதன்

இந்த விழாவில் வலைப்பதியும் நண்பர்களினதும் பங்களிப்பைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அருண் வைத்தியநாதனின் நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. சுமதி ரூபன் 'You 2' நடித்ததுடன், திரைக்கதையையும் அந்தப்படத்துக்கு எழுதியிருந்தார். வலைப்பதிவுகள் தமக்கென சொந்தமாக வைத்திருக்காவிட்டாலும், அவற்றை வாசிப்பவர்களும், ரொறண்டோவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களுமான ரூபன், சத்தியாவும் தமது திறமையைக்காட்டியிருந்தனர். ரூபன் 'You 2' மற்றும் 'ஐயோ' ஆகிய இருபடங்களை இயக்கிருந்ததும், சத்தியா 'ஐயோ' படத்தில் நடித்தமைக்காய் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
.........

* This heading is used thankfully from the flyer.

குழப்பம்

Monday, September 19, 2005

இரண்டு பெண்களும், சகிக்கமுடியாத ஒருத்தனின் அலம்பலும்

ஒரு நகரத்துக்குச் செல்கையில் அது தன் வாசல்களை அகலத்திறந்து உங்களை உச்சிமோரவும், அணைத்துக்கொள்ளவும் செய்கின்றது. அதே சமயம் சிலவேளைகளில் வலிகளையும், பிரிவுகளையும் வாரித்தந்து தன் கதவுகளை இறுக்கிமூடி உங்களை வெளியே எறிந்துவிடுகின்றது என்பதையும் இலகுவில் மறக்கமுடியாது. ஒரு மத்தியானவேளையில் அவன் மலையேறிக் கொண்டிருக்கின்றான். கோயில்களுக்குப் போவது அவ்வளவு பிரியமுடைய விடயமில்லையெனினும் கோயில் அமைந்திருக்கும் மலை சார்ந்த பிரதேசம் அவனுக்குள் ஒருவித நெகிழ்வையும், அமைதியும் கொண்டுவந்து சேர்க்கின்றது. மரங்கள் சூழ்ந்த ஒரு காட்டுப்பகுதியில் சனங்கள் பொங்கிக்கொண்டிருப்பது அவனுக்கு ஊரில் நடக்கும் சித்திராப்பெளணர்மிகளை நினைவுபடுத்துகின்றது. ஊரோடு கூடிக் குதூகலித்து, கும்மாளமிட்ட நாள்கள் அவை. ஊரின் ஞாபகங்கள் எப்போதாவது கிளறப்படுகையில், இலைகளில் தரப்படும் படையல் சோற்றின் மணம் இன்னும் உள்ளங்கையில் மணப்பதாய்தான் அவன் அதிக வேளைகளில் நினைப்பதுண்டு.

மிதமான வெயிலும் காற்றும் அந்தச் சூழலுக்கு இன்னும் இரம்மியத்தைத் தருகின்றது. வழமைபோல கோயிலுக்குள் நுழையாமல் சுற்றுப்புறங்களை நோக்கி தன் கால்களை நகர்த்தியபடி இருக்கின்றான். பாம்புப் புற்றுக்களும், சரிந்து விழுந்த மரங்களும் ஒரு அடர்ந்த காட்டுக்குள் வந்துவிட்டேன் என்ற பிரமையை அவனுக்குள் உண்டு பண்ணுகின்றது. இதையெல்லாம் இரசித்து ஒருவித குளிர்ச்சியான மனத்துடன் திரும்பி வருகையில் அவளை முதன்முதலில் அவன் காண்கின்றான். எல்லோரும் கோயிலுக்குள் போவதும் வருவதுமாய் இருக்கையில் அவள் மட்டும் கல்லொன்றின் மேல் தனித்து இருப்பது இவனுக்கு வித்தியாசமாய் தெரிகின்றது. கோயிலுக்குள் போவதற்கு பிரியப்படாத தன்னைப்போல ஒருவராக அவளும் இருக்கலாம் அல்லது 'இந்த நாள்களில் கோயிலுக்குள் செல்லுதல் ஆகாதெனும் சமூகம் விதித்த கட்டுப்பாடாகவும் இருக்கலாம் என்று அவன் தனக்குள் எண்ணிக்கொள்கின்றான். மலைக்கு இன்னொரு புறத்தில் இருக்கும் தியானம் செய்யும் ஆச்சிரமங்களை அவனுக்குப் பார்க்கப் பிரியமுண்டெனினும், அவளது சிவப்புத் துப்பட்டாவும் கேசமும் காற்றில் அலைவதையும், இரண்டாம், மூன்றாம் சூரியன்களாய் காலில் கொலுசுகள் தெறித்துக்கொண்டிருப்பதையும் பார்த்து, அந்தச்சூழலை விட்டுப்பிரிய மனதில்லாதவனாய் அங்கேயே நின்றுவிடுகின்றான்.

எதுவெனினும் அவனது மனம் வாசனைத் பதார்த்தங்களுடன் பொங்கிக்கொண்டிருக்கும் பொங்கலைப் போல இப்போது தித்திக்கத் தொடங்கிவிடுகின்றது. எதிர்முனைக் கற்களில் அமர்ந்துகொண்டு அவன் பார்க்கும்போது அவள் அவள் காற்றைப் பார்ப்பதுபோல இருப்பதுவும், அவன் எஙகையாவது பிராக்குப் பார்க்கும்போது அவள் நேர்ப்பார்வை பார்ப்பதுவும் ....இப்படியாக நிமிடங்கள் கழிகின்றன. அந்த சமயத்தில் அவளது தங்கை வந்து அவளுடன் அளவளாளவும்போதுதான், அவள் அவளது தங்கையுடனும், அம்மாவோடும் கோயிலுக்கு வந்திருக்கின்றாள் என்றும், அவர்களும் ஏதோ ஒரு நேர்த்திக்காய் பொங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுவும் அவனுக்குத் தெரியவருகின்றது. ஒரு வார்த்தையாவது அவள் விழிபார்த்து கதைத்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் துளிர்க்க ஆரம்பிக்கின்றது ஒரு அரும்பைப்போல. அவளுக்குள்ளும் அப்படியொரு விருப்பு இருந்திருக்கலாம். நண்பன் ஒருவன் இவனுடன் இடைநடுவில் இணைந்துகொள்ள, இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் நகைச்சுவைகளை அவளும் புன்முறுவலுடன் கேட்டு கொள்கின்றாள். எனினும் தானும் கேட்டுக்கொண்டிருப்பதை அவன்கள் கவனிக்கின்றார்களா என்று நோட்டம்விட, கேசத்தை காதுக்குள் ஒதுக்குவதை நுட்பமாய் செய்து இவன்களை கண்காணித்தபடி இருக்கின்றாள். இதைக் கவனித்துவிட்டு, தன் தலைமயிரையும் அவன் கோதிவிட்டு, 'எப்படி இருக்கிறது எனது ஸ்ரைல்?' என்று நண்பனிடம் கேட்க, 'மொட்டையாய் வெட்டிய இந்தத்தலையில் இப்படிக் கோதினால் ஸ்ரைல் வராது பேன் தான் வருமடா' என்று வழமைபோல நண்பன் தன் அறிவுஜீவித்தனத்தைக் காட்டுகின்றான். இப்போது அவள் இவன்களுடன் சேர்ந்து சிரிக்கத்தொடங்கிவிடுகின்றாள். நண்பன் விலகியபின்னும், சூழல் நன்கு இதமாய் கனிந்திருந்தபொழுதும், அவளுடன் இயல்பாய் பேசுவதற்கான வார்த்தையைத் தேடிதேடி அவன் களைத்துப்போகின்றான்.

அவனுக்குள், ஒரு பெண்ணை அவள் மனதை நோகடிக்காமல் எப்படி அணுகவது என்ற புதிர் இன்னும் அவிழ்ந்ததில்லை. அவன் எப்போதும் விரும்பும் தனிமை அவனை மனிதர்களிடம் இருந்து ஒதுக்கி வைத்தபடி இருக்கின்றது. ஒரு பெண்ணிடம், அவள் பிரியப்படாதபோது பேசி அவள் மனதைக் காயப்படுத்துவது, வன்முறை என்று புரிந்துவைத்திருக்கும் அவனுக்கு, அதுபோல் பேசப்பிரியப்படும் பெண்ணிடம் எதையாவது கதைக்காமல் உதாசீனப்படுத்திப் போவதுகூட இன்னொருவகையான வன்முறை என்பது புரியாமற்போகின்றது. தனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால், பெண்களை இன்னும் புரிந்துகொண்டிருக்கலாம் என்ற எண்ணம், நொண்டிச்சாட்டாய் அவனுள் வந்து மறைந்துபோகின்றது.

பொங்கி, எல்லோரும் சுவாமிகளுக்குப் படைத்துவிட்டு, உணவுகளை கோயிலுக்கு வந்தவர்களுடன் பகிரத் தொடங்குகின்றனர். பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பசி வயிறைக் கிள்ள, ஓடிப்போய அவனும் வரிசையில் நிற்கின்றான். அவளுக்கும் உணவு எடுத்துத் தரவா என்று கேட்க விருப்பம் இருந்தாலும் வழமைபோல அவளுடன் பேச விரும்புகையில் எழும்பும் சுவர் குறுக்கே வந்து தடுக்கின்றது. நல்ல அருமையான படையல் சோறு. பிறகு பொங்கல், வடை, பாயசம் என்றும் வரிசையாக உணவுகள் காத்திருக்கின்றன. அவளுக்கும் அவளது தங்கச்சி உணவு எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றாள். எஙகையோ பிராக்குப் பார்த்து அவள் சாப்பிடுகையில் கோப்பையில் இருந்து குழம்பு வழிந்து அவளது சுடிதாரில் ஊற்றப்பட்டு விடுகின்றது. அதைக் கவனிக்காது அவள் எதோ கனவுகளில் மூழ்கி இருந்திருக்கவேண்டும். அவன் சுட்டிக்காட்டிய பிறகு புரிந்து சிரித்துக்கொண்டு அதைத் துடைத்துக்கொள்கின்றாள். அதற்காய் அவள் விழிகளும், மெல்லியதாய் உதடுகளும் நன்றி சொன்னதா என்பது அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த விடயம்.

அவள், தான் அவனுடன் பேசப்பிரியப்படுவதற்கான கடைசி சமிக்ஞையை சங்கேதமாய் அவனுக்கு மட்டும் புரிகின்றவிதமாய் அனுப்புகின்றாள். தாயையும், தங்கச்சியையும் மலையின் உச்சியில் விட்டுவிட்டு, பொங்கிய பானையைத் தூக்கிகொண்டு மலையில் இருந்து இறங்கத்தொடங்குகின்றாள். தன்னிடம் பேசுவதற்காய் கட்டாயம் அவனும் இறங்கிவருவான் என்று நினைத்து பின்னால் பார்த்துப் பார்த்து நடந்தபடி இருக்கின்றாள். தான் விரைவாக நடந்தால் அந்த வேகத்துக்கு ஈடுகட்டி அவன் வராது விட்டிருவானோ என்ற காரணத்தினாலோ என்னவோ ஓய்வெடுப்பது போல இடையில் தங்கி நிற்கின்றாள். அவள் அப்படி இடைநடுவில் சடுதியாய் நின்றது இவனுக்கு திகைப்பாயிருக்கிறது. அவளைக் காணாதது மாதிரி இரண்டு அடிகள் ஒரேயடியாய் எடுத்துவைத்து எதுவுமே பேசாது தாண்டிப்போய்விடுகின்றான். மலையின் அடிவாரத்தில் தனது காரில் பானையை வைத்துவிட்டு உடனேயே திரும்பி மலையில் ஏறாது, இவன் ஒரு வார்த்தையாவது தன்னோடு நேரடியாகப்பேசிவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றாள். அவனோ வழமைபோல, படம்காட்டுவதற்கு இந்தச்சூழல் நன்றாகவிருக்கின்றது என்று கனவில் மிதக்கத்தொடங்கி, வாழ்வின் அழகிய தருணம் காரடியில் காத்திருக்கின்றது என்ற யதார்த்தத்தை மறந்துவிடுகின்றான் அல்லது மறுதலித்துவிடுகின்றான். அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் பேசினால் காதலுக்காய்த்தான் பேசுகின்றார்கள் என்று அவள்கள் நினைப்பார்கள் என்று யார் அவனுக்குக் கற்றுக்கொடுத்தது? பிடித்ததை பிடித்தமான இடத்தில் வெளிப்படுத்த எது அவனைக் கட்டுபடுத்திக்கொண்டிருக்கின்றது? சமூகத்தின் அழுக்குகளை கேலி செய்தபடி தானும் ஒரு அழுக்காவே இருக்கின்றான் என்பது மட்டும் பிறகு அவனுக்குப் புரிகின்றது. பெண்களை நன்கு புரிந்துவைத்திருக்கின்றேன் என்ற அவனது நம்பிக்கைகளை ஒரு பெண் சாதாரணமாய் உடைத்துப்போட்டுவிட்டுப் போயிருக்கின்றாள் என்பது ஒருபக்கம் வியப்பாகவும் மறுபக்கம் திகைப்பாகவும் அவனுக்கு இருக்கின்றது. பேசாது தனிமையில் இருப்பதால் மட்டும் எவரும் காயப்படுத்தப்படமாட்டார்கள் என்பது எல்லாச்சமயஙகளிலும் சரியாக இருக்கும் என்பதுவும் இல்லை - ஏன் பேசவேண்டிய தருணத்தில் பேசாமல் மெளனித்து இருப்பது கூட ஒருவகையான மனதை நோகடித்தல்தான் என்பதை யார் அவனுக்குப் புரியவைக்கப்போகின்றார்கள்?

நகரம் இப்போது அவனை பிரிவுடனும், பாகற்காய் கசப்புடனும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு தன் கதவுகளை இறுக்கி மூடிக்கொள்கின்றது.

(2)
அப்போதுதான் அவன் அந்தச் செய்தியை அறிந்திருந்தான். ஒரு மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் குதித்து ஒருபெண் தற்கொலை செய்திருக்கின்றாள் என்று. நன்றாக படித்துக்கொண்டிருந்த பெண், ஏதோ ஒரு சின்ன மனக்குழப்பதில் உடனே இந்த முடிவை எடுத்துவிட்டாள். தற்கொலைகள் செய்ய முயற்சிக்காதவர்கள் உலகத்தில் எவரேனும் உண்டா என்ன? அல்லது ஆகக்குறைந்தது தற்கொலைகள் செய்வது பற்றி நினைக்காமலாவது நாம் இருந்திருப்போமா? மூளையில் எல்லா நரம்புகளும் விறைத்து எதுவும் சிந்திக்க முடியாத நிலையில் இருந்த பெண்ணுக்கு, ஏன் ஒருத்தரால் கூட அவளைப்புரிந்துகொள்ள முடியாமற்போயிற்று? சாகும் பொழுதில் கூட, தெருவில் சந்தித்த யாரவது ஒருவர் தன்னை மறித்து தன் துக்கம் கேட்கமாட்டார்களோ என்று அந்தப்பெண பரிதவித்திருக்கக்கூடும் அல்லவா? தற்கொலைகள் செய்வது குறித்து அனேகமாய் இரண்டு முடிந்த முடிவுகளைதான் நாம் வைத்திருக்கின்றோம். 'கோழைகள்' அல்லது 'சமூகத்துக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் என்று. மேலும் தற்கொலைகளை எதிர்த்தவர்களில் பலர், தமது முடிவுகளை தற்கொலையாய்த்தான் இறுதியில் தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள் என்பது ஒரு எதிர்ம்றையான முரணும்கூட.

அவனுக்கு இந்தச் செய்தியை வாசிக்கும்போது, தான் கோயிலில் பேசமறுத்த பெண்ணின் முகம் நினைவுக்கு வருகின்றது. தான் செய்ததுபோலத்தானே, யாரோ ஒருத்தர் பேச மறுதலித்ததால்தான் ஒரு இளம்பெண்ணின் வாழ்வு வீணாய்போயிருக்கின்றதென்ற எண்ணம் அவன் நினைவுகளில் துயர் மேகங்களாய்ச் சூழ்கின்றது.

நாம் அநேகபொழுதுகளில் பேச விரும்புகின்ற பெண்ககளின் குரல்வளைகளை நெரித்துப் பேசவிடாமல்தானே செய்தபடி இருக்கின்றோம். சிரித்துப் பேசும் பெண்களை ஆட்டக்காரிகள் என்று நக்கலடிக்கும் நாங்கள், அவர்கள் சிரிப்பதால்தான் நம் வாழ்வு அலுப்பில்லாது நகர்கின்றது என்பதை இலகுவில் மறந்துவிடுவது எவ்வளவு விந்தையானது.

கோயிலின் வெளிப்புறத்தில் கண்ட, அந்தப் பெண்ணின் நீண்ட புருவங்களுடைய கண்கள் இப்போதும் அவனுக்கு நினைவில் இருக்கின்றதென்கின்றான். தற்கொலை செய்துகொண்ட அந்த மற்றப்பெண்ணின் விழிகளும் இறந்தபின் அப்படித்தான் அனைவரையும் வெறித்துப் பார்ததபடி இருந்திருக்குமோ?

(.......இரண்டு பெண்களுக்கும்)

வெள்ளாவியும் வெளுக்கவேண்டிய படைப்பாளியின் மனமும்

Thursday, September 15, 2005

வெள்ளாவி - விமல் குழந்தைவேல்

vellavi

(1)
வெள்ளாவி என்னும் இந்தப் புதினம், மாதவி என்னும் பெண்ணையும் அவளது மகளான பரஞ்சோதியையும் முக்கிய பாத்திரங்களாய்க் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட பஞ்சம சாதியினர்களில் ஒருவகையினரான வண்ணார் சமூகத்தில் கதைக்களன் நிகழ்கின்றது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்குரிய வறுமையுடன் வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த மாதவி அவளது மச்சான் முறையான செம்பனுடன் காதல் வயப்பட்டு, 'மயண்டையானப்புறகு புளியமரத்துக்கு பக்கத்துல இரிக்கிற கள்ளுப்பத்தை மறைவுல' ஒதுக்கியதால் கருவைத் தாங்குகின்றாள். ஊராருக்குத் தெரியாது கரு மாதவியின் வயிற்றில் வளர, ஒருநாள் மாதவி மணமாகமளே கர்ப்பந்தாங்கியிருக்கின்றாள் என்று அவளது தந்தைக்குத் தெரிய வர, ஊர் முன்னிலையில் வைத்து அடித்து யார் இதற்குக் காரணம் என்று கேட்கின்றார். முதலில் யாரென்று கூற மறுத்தாலும், வீட்டைச் சுற்றிக் கூடியிருந்த சனம் எல்லாம் அகன்றபிறகு, சொந்தக்கார கிழவியிற்கு மட்டும் தனது மச்சான் செம்பன்தான் இதற்குக் காரணம் என்று மாதவி உண்மையைக் கூறுகின்றாள். 'மச்சானெண்டாப்போல இப்படி மானாங்கெட்டு நடக்கச் சொல்லியிரிக்கோ' என்று மாதவியின் தகப்பன் கோபித்தாலும், 'சின்னஞ்சிறுசுகளண்டா ஒன்டா இருந்திற்றுதுகள். இப்ப என்ன நாளைக்கு கூப்பிட்டு கையில புடிச்சுக் குடுத்தா ஒண்ணாதெண்டு போட்டோ போகப்போறான். அவன் மச்சாண்டா. உதிரம்....உதிரம் உறவறியாமலோடா உட்டுரும்' என்று கிழவி சாந்தப்படுத்துகின்றாள்.

ஆனால் அடுத்த நாள் அவர்கள் நினைத்தபடி விடியவில்லை. விடிகாலையிலே உடுப்புத் தோய்க்க ஆத்துக்குப் போன செம்பனை முதலை கடிக்க அவன் இறந்துவிடுகின்றான்(!). யார் தகப்பன் என்று தெரியாமலே மாதவியினது மகள் பரஞ்சோதி பிறக்கின்றாள். செம்பனின் தாயாரும், தனது சொத்துக்கு மாதவி சொந்தம் கொண்டாடிவாளோ என்ற பயத்தில், உன் வயிற்றில் பிறந்த குழந்தை செம்பனுக்குப் பிறந்தற்கு என்ன சாட்சி என்று கூறி மாதவியை உதறிவிடுகின்றாள். தன் மகள் மாதவியினது வாழ்வு இப்படி நாசமாகிப் போய்விட்டதே என்ற கவலையில் மாதவியின் தகப்பனும் விரைவில் இறந்துவிட, எவருமற்ற அநாதைகளாக மாதவியும், பரஞ்சோதியும் ஆகிவிடுகின்றனர். உடுப்புத்தோய்த்து வரும் வருமானத்தில் அவளும் மகளும் வயிற்றைக் கழுவ முடிந்தாலும், பிறகு, 'சின்ன வயசுக்காரி, இல்லாமையும் கூட, என்னென்டு சொல்லத் தெரியாது. நடுச்சாமம் வாசலுக்கு வந்தாக்களோட ஒத்துப் போகத் தொடங்குகின்றாள்'.

தாயின் இந்த 'தொழில்' மகள் பரஞ்சோதிக்கு துண்டறப்பிடிப்பதில்லை. வெளியே தன்னோடு வாவெனத் தாய் கூப்பிட்டாலும் என்னையும் உன் வாடிக்கையாளருக்கு விற்கப்போகின்றியா என்று கடும் வார்த்தைகளால் தாயை முற்றுமுழுதாய் நிராகரித்தபடியே இருக்கின்றாள். இவர்களது சண்டைகளுக்கு சமாதானம் செய்து வைக்கவும், துணி துவைக்கும் வேலைகளுக்கும் ஒத்தாசை செய்வதற்கும் பக்கத்து வீட்டுக்காரனும் பரஞ்சோதிக்கு மச்சான் முறையான நாகமணி, உதவும் கரங்களை நீட்டுகின்றான். மாதவி, தன்னைப் போல இல்லாது பரஞ்சோதியாவது 'குடும்ப' வாழ்வு வாழவேண்டுமென்பதற்காய் நாகமணியை பரஞ்சோதியைத் திருமணஞ் செய்யச் சொல்கின்றாள். ஆனால் தன்னை விட கிட்டத்தட்ட இருபது வயது இளையவளான மாதவியைத் திருமணஞ்செய்வது அவ்வளவு நல்லதில்லை என்று கூறி மறுக்கின்றான். அத்தோடு அந்த கிராமத்திலிருந்து முதன்முதலாய் அரசாங்க வேலைக்கு நகரத்துக்குப்ப்போன சதாசிவத்தின் மீது பரஞ்சோதிக்கு ஈர்ப்பு இருக்கின்றது என்பதுவும் நாகமணிக்குத் தெரியும்.

உடுப்புத் தோய்த்துக்கொடுக்கும் உடையார் (வெள்ளாளர்?) வீட்டில், உடையாரின் பேரப்பிள்ளை ஒருத்தி சாமர்த்தியப்பட, சடங்கு பதினெட்டு நாள்கள் வரை நடக்கிறது. ஒவ்வொரு நாள் சடங்குக்கும் வண்ணார்தான் போய் ஆரம்பித்து வைப்பது அந்த ஊரின் சடங்காக இருக்கின்றது. மாதவியே உடையாரின் மனைவிக்குப் பிரியமான வண்ணாத்தியாக இருப்பதால் அவளே சடங்குகளை முன்நின்று செய்கின்றாள். வழமைபோல கடும்வேலைப்பளுவும், சாதிய இழிவுப்பேச்சுக்களும் மாதவியைக் காயப்படுத்துகின்றன. சடங்கின் இடைநடுவில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு உறவுக்காரி, எப்படி வண்ணாரத்தியின் காலில் சாமர்த்தியப்பட்ட பெண் விழுந்து வணங்கலாம்? என்று சாதியத்திமிரில் பேச, அதனால் ஏற்பட்ட சண்டையில் காயப்பட்ட மாதவி, உடையார் வீட்டுக்குப்போவதை நிறுத்துகின்றாள். வறுமையும், ஊராரின் வசைச்சொற்களின் காரணமாகவும் மாதவி நோய்வாய்ப்படுகின்றாள். இதுவரை எதிர்முனையாக தாயோடு மல்லுக்கட்டிய பரஞ்சோதி தாயின் நிலைமையைக் காணச்சகிக்காது தாயிற்குப் பதிலாக உடையார் வீட்டுக்குப் போய் சமையல் வேலைகளில் உதவி செய்யவும், துணிகளைத் தோய்த்துக்கொடுக்கவும் தொடங்குகின்றாள். ஒரு நாள் கண்ணகி அம்மன் கோயில் திருவிழாவுக்கு போய் தாயைப் பின்னிரவில் நடக்கும் கூத்தைப் பார்க்கக் கூறிவிட்டு பரஞ்சோதி அலுப்பின் காரணமாக வீடு திரும்புகின்றாள். சில மாதங்களின்பின் பரஞ்சோதி நாலைந்து மாதக் கர்ப்பிணியாக இருக்கின்றாள் என்று தெரிய வருகின்றது. ஆண் யாரென்பது கூடத் தெரியாமல் கர்ப்பிணியாவதை மாதவி நம்பத் தயாராகவில்லை. முருங்கக்கம்பால் சாத்து சாத்து என்று சாத்தினாலும் உண்மை வெளிவராததைக் கண்டு, மாதவிக்கு இந்த 'வன்புணர்வு' தன் மகள் அறியாமல் நடந்திருக்கின்றது என்பது தெளிவாகப் புரிகின்றது. திருவிழா முடிந்து வந்து, வீட்டில் படுத்த நாளில்தான் யாரோ ஒருத்தன் தன்னை வன்புணர்ந்திருக்கின்றாள் என்பது பரஞ்சோதிக்கு புரிகின்றபோதும்(?) அந்த நபர் யாராயிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் மாதவிக்குப் புரிந்துபோகின்றது. தன்னோடு விரும்பியபோதெல்லாம் சல்லாபிக்கும் அந்த உடையார்தான் தன் மகளோடும் தன் 'ஆண்மை'யைக் காட்டிவிட்டாரென்று. நேரே உடையாரின் முன்னாள் சென்று மாதவி நியாயங்கேட்டாலும், 'உனக்குத் தெரியாதோ....பப்பாசிப் பிஞ்சையும் அன்னாசிப் பிஞ்சையும் சப்பித் தின்னக்கொடு. ஒரு பங்கு சூரமீன் வாங்கி, ஆக்கித் தின்னக்குடு....ஒரு துவாலையோடு எல்லாம் போயிரும். இதெல்லாம் நான் உனக்குச் சொல்லித் தரோணுமா?' என்று நல்ல அறிவுரை கூறுகின்றார் உடையார். எதையும் செய்யமுடியா இயலாமையில் வீடு திரும்புகின்ற மாதவி படுத்த படுக்கையாகி சில நாள்களில் அவளும் இறந்துவிடுகின்றாள்.

'யார் இந்தக் குழந்தைக்குத் தகப்பன் என்று கூறு சேர்த்து வைக்கின்றேன்' என்று நாகமணி கேட்க, யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உடையார் வீட்டில் வந்து நின்ற பையன்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று மாதவி சந்தேகத்துடன் கூறியதும், 'இஞ்ச பார் பாய்ஞ்சோதி இந்த சந்தேகப்பட்ட கதையையெல்லாத்தையும் எனக்கிட்ட சொன்னதோட நிப்பாட்டிக் கொள். ஆருக்கிட்டயும் மூச்சு உட்டுடாத உன்னக் கையெடுத்துக் கும்பிடுறன்......கொளுத்திப் போட்டுறுவானுகள்' என்று நாகமணி கூறுகின்றான். சில மாதங்களின் பின் பிறந்த குழந்தையையும் மாதவியையும் தனது துணையாகவும், குழந்தையாகவும் நாகமணி ஏற்றுக்கொள்கின்றான். எனினும் உடையார்தான் இதற்கு எல்லாம் காரணம் என்ற உண்மை மாதவியின் இறப்போடு மறைந்துபோகின்றது.

vellavi2

(2)
இரண்டாம் பாகம் இவையெல்லாம் நிகழ்ந்து பதினைந்து வருடங்களுக்குப் பின் நடப்பதாய் விரிகின்றது. காலம், மட்டக்களப்புச் சிறை உடைக்கின்றவேளையாக இருக்கின்றது. ப‌ர‌ஞ்சோதி- நாகமணியின் 'பிள்ளை' அரவிந்தன் பெடியனாக வளர்ந்து நிற்கின்றான். சைக்கிள் வாங்கித் தராவிட்டால் இயக்கத்துப் போய்விடுவன் என்று பெற்றோரிடம் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றான். இயக்கங்கள், இயக்கங்களின் அடிப்பொடிகள் 'துரோகிகள், 'விபச்சாரிகள், 'சி.ஜ.டிகள்' என்று மாறி மாறி இந்தக் காலகட்டத்தில் மண்டையில் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அரவிந்தன் மீது மிகப்பிரியமாக இருக்கும் நாகமணி மனைவியின் பேச்சையும் கேட்காமல் பரஞ்சோதி சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கள்ளமாய் எடுத்து சைக்கிள் வாங்கிக்கொடுத்துவிடுகின்றான். தன் சேமிப்பைக் களவெடுத்து சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டான் என்று கடுமையாக நாகமணியிடம் கோபித்தாலும், நாகமணிக்கு அரவிந்தன் மீது இருக்கும் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்துபோயிவிடுகின்றாள். மகிழ்ச்சி அவ்வளவு நெடுங்காலம் நீடிக்கவில்லை. நாகமணியின் முதுகில் கட்டியொன்று பெரிதாக வளர்கின்றது. வேலை செய்யமுடியாது அவதிப்படுகின்றான் நாகமணி. ஆசுபத்திரியில் காட்டினால், இதுக்கு பெரியாஸ்பத்திரிக்குப் போய் அறுவைச் சிகிச்சைதான் செய்யவேண்டும் என்று வைத்தியர் கூறிவிடுகின்றார். சேமித்த பணத்தை சைக்கிள் வாங்கியதில் செலவழித்தாயிற்று. சொட்டுப்பணங்கூட இல்லை. சைக்கிளை விற்றுவிட்டு அப்பாவின் அறுவைச் சிகிச்சைக்கு காசு தாடா என்றால் நான் செத்தாப்பிறகு அதையும் செய்யுங்கள் என்று மகன் வீம்பாக தாயாரிடம் கூறிவிடுகின்றான். எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனபின் உடையாரிடம் கையேந்தலாம் என்று போகின்றாள் பரஞ்சோதி. தனியே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் உடையாருக்கு காமம் அந்தக்கிழட்டு வயசிலும் அரிப்பெடுக்கிறது. 'ஒரு இளந்தாரிப் பொடியனுக்கு நீ தாயெண்டு உன்னப் பார்த்தவன் ஆரும் சொல்லுவானோ? கோடியொரு வெள்ளைக்கு, குமரியொரு பிள்ளைக்கெண்டு உன்னக் கண்டத்துக்குப் புறகும் இன் ஆரும் சொல்லேலுமோகா? பட்டை களண்ட பாலக்கட்டை மாதிரி இந்த வயதிலையும் பளபளண்டு நீ எப்பிடி இரிக்காயெண்டு எனக்கெல்லோ தெரியும்?' என்று வழிகின்றார். நீ என்னோடு உடன்பட்டால் நீ கேட்ட பணம் வீட்டைபோகமுன்னம் வந்து சேரும் என்று பல்லிளிக்கின்றார் உடையார். 'வேண்டாம் போடியார் இது சரியில்ல. அம்மைபட்ட கக்சிசமெல்லாம் அம்மையோட போகட்டும். என்னையாவது வாழ உடுவாங்கெண்டுதான் நானும் வந்தேன்' என்கிறாள் பரஞ்சோதி. 'நான் திண்டுபார்த்து எறிஞ்சகொட்டை தானேகா நீ.... இப்பமட்டும் பத்தா பத்தினி மாதிரி கதைக்காய்' என்று தான் மட்டும் அறிந்த, பதினைந்து வருடமாய் ஒளித்து வைத்திருந்த 'உண்மையை' உடைத்துவிடுகின்றார் உடையார். 'தூ' என்று எச்சிலை உடையாரின் முகத்தில் துப்பிவிட்டு அந்தவிடத்தை விட்டு நகர்ந்துவிடுகின்றாள் பரஞ்சோதி. வீட்டைப்போய்ப்பார்த்தால் நாகமணி உடைந்துபோய் இருக்கின்றான். மகன் அரவிந்தன் சைக்கிளை கொண்டுபோய் விற்றுவிட்டு தகப்பனின் வைத்தியச் செலவுக்காய் காசுடன் ஒரு கடிதத்தையும் எழுதிவைத்துவிட்டு ஏதோ ஒரு இயக்கத்து போய்விடுகின்றான். அவன் இருந்தசமயம் ஒருபோது கூட அவன் சைக்கிள் ஓடியபோது தன் கோபத்தின் நிமிர்த்தம் பார்க்கவில்லை என்ற கவலை, பரஞ்சோதிக்கு மகன் இயக்கத்துப் போய்விட்டான் என்ற கவலையோடு சேர்ந்து நெஞ்சை அழுத்துகின்றது. எனினும் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருப்பது புரிய, கணவனை அழைத்துக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு விரைகின்றாள். என்றோ ஒருநாள், இயக்கத்துப் போன தன் மகன், உடையார் செய்த வண்டவாளங்களுக்கு புளியமரத்தடியில் வைத்து அடியடி என்று அடித்து தண்டனை கொடுப்பான் என்று நினைத்துச் சத்தம்போட்டு பரஞ்சோதி சிரிப்பதுடன் புதினம் நிறைவுபெறுகின்றது.

(3)
நாவல் என்றரீதியில் மட்டக்களப்பு வட்டார நடை வாசிப்பவருக்கு புது வாசிப்பனுபவத்தைத் தரும் என்றாலும், நாவல் முழுதும் எழுத்துப்பிழைகள் நிரம்பிக்கிடக்கின்றது. அத்தோடு சில stereo type வார்த்தைகள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. 'சோனகருக்குப் பன்றி பிடிகாததுபோல' என்ற உவமைகள் பலவிடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. 'சோனிகள்' என்ற வார்த்தைப் பிரயோகம் எல்லாம் வருகின்றது. நிறைய முஸ்லிம் நண்பர்கள் பலர் வாய்க்கப்பெற்ற விமல் குழந்தைவேல் இதை எல்லாம் போகின்றபோக்கில் எழுதிக்கொண்டுபோவது வியப்பாய் இருக்கின்றது. இவற்றை வாசிக்கும்போது எனக்கு வளாகத்தில் racism awareness என்று கூறிவிட்டு, 'கறுப்பர்கள் கோழி மட்டும் உண்பவர்கள்'; 'சைனீஸ்காரர்களுக்கு கார் ஓட்டத்தெரியாது;' 'பாக்கிகள் கறி வாசத்துடன் மணப்பவர்கள்' என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வு செய்ததுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் இப்படி எழுதுவது அதுவரை இப்படிப் பேசாதவர்/stereo typeயாய் புரிந்து வைக்காதவரை, இந்தா நீயும் இதையும் அறிந்துகொள் என்று விளம்பரப்படுத்துவது மாதிரித்தான் எனக்கு அந்தப்பொழுதில் தோன்றியது. அவ்வாறே இந்தப்புதினத்தில் இப்படி ஒருவித இனத்துவேசத்துடன் தமிழ்மக்கள் இருக்கின்றார்கள் என்று விமல் நியாயம் கற்பித்தாலும் ஒரு படைப்பாளி இது குறித்த அவதானமாய் வேறு ஒருவடிவத்தில் இந்த stereo type விசயங்களை அணுகவேண்டும் போல எனக்குப்பட்டது. நாவலில் பல விசயங்கள் ஒரு 'சினிமாப்பட' காட்சிகளைப் போல நடந்தேறிவிடுவதுதான் வியப்பாயிருக்கின்றது. மாதவியின் கருவுக்கு செம்பன்தான் காரணம் என்று அறிந்து அடுத்தநாள் ஊர் கூடி இவன் தான் காரணம் என்று கூறலாம் என்றால், செம்பன் அடுத்த நாள் காலையில் சொல்லி வைத்தாற்போல முதலை கடித்து இறந்துவிடுகின்றான். ஊர்த் திருவிழாவன்று வீட்டில் படுத்திருந்த பரஞ்சோதிக்கு தன்மீது வன்புணர்ச்சி செய்யப்பட்டதை கனவுபோல அதை நினைத்துக்கொண்டு நாலைந்து மாதங்களுக்குப்பின் தான் கர்ப்பிணியானபிறகுதான் இப்படியொரு சம்பவம் நடந்தது என்று பரஞ்சோதிக்குத் தெரியவருகின்றது. தனது பீரியட்கள் தடைப்பட்டு ஏதோ நடந்திருக்கவேண்டும் என்று நினைத்துப்பார்க்கக்கூடமுடியாத பேதையாக பரஞ்சோதி இருப்பது புதிராக இருக்கின்றது. உடையாரின் காம வக்கிரத்தையும், தான் வன்புணரப்பட்டதற்கு உடையார்தான் காரணம் என்ற உண்மை தெரிந்து பரஞ்சோதி நிலைகுலைந்து வருகின்ற சமயத்தில், சொல்லிவைத்தாற்போல மகனும் சைக்கிளை விற்றுக் காசை வைத்துவிட்டு இயக்கத்துப் விடுகின்றான் என்று அநேக சம்பவங்கள் நேர்கோட்டிலேயே (விதி?) நகர்கின்றன.

மேலும், இயக்கங்கள் வளரத்தொடங்கின காலத்தில் தனது காம ஆசையை வெளிப்படையாக காட்ட உடையார் அவ்வளவு முட்டாளா என்பது ஒரு புறமாக இருந்தாலும் எப்போதோ நடந்த அந்த 'உண்மையை' பரஞ்சோதிக்கு அவ்வளவு இலகுவில் வெளிச்சம் போட்டுக்காட்டமாட்டாத நபும்சகந்தான் உடையார் என்று அவரின் பாத்திரத்தை வாசித்த எவருக்கும் சாதாரணமாய்த் தோன்றும். அத்தோடு அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் இப்படி 'ஆண்மைத்தனம்' காட்டித்திரிந்தவர்களை எல்லாம் மண்டையில் போட்டுக்கொண்டிருப்பதாயும் அப்படிச் சில சம்பவங்கள் அந்த ஊர்ப் புளியமரத்தில் நடந்ததாயும் நாவலில் வருகின்றது. இவ்வளவு தெரிந்துகொண்டும் உடையார் இப்படி உண்மையை சாதாரணமாய்ப் போட்டு உடைபாரா? பல சம்பவங்கள் திரைப்படக்காட்சிகள் போல விரிகின்றபோது ஜெயமோகனோ அல்லது வேறு யாரோ ஒருவர் முன்பு எழுதியிருந்தது நினைவுக்கு வருகின்றது. வாழ்க்கையில் சில செக்கனின் எந்தக்காரணமுமின்றி ஒருவர் விபத்தில் சிக்கி இறந்துபோய்விடக்கூடும். ஆனால் அதை எழுத்தில் வைக்கும்போது வாசிப்பவர் நம்புவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதில்தான் ஒரு படைப்பின் ஆழமும் விரிவும் தங்கி இருக்கின்றது என்று. அதையேதான் விமல் குழந்தைவேலுக்கும் இந்தப்புதினத்தை வாசித்து முடிக்கையில் நினைவூட்டவேண்டும் போல எனக்கும் தோன்றியது. பிற நாவல்களுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது என்றாலும், பதின்மத்தில் வாசித்த செங்கை ஆழியானின் கதை(கள்), உடனே இந்த நாவலை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஞாபகத்து வந்தது. முக்கியமாய் படைப்பாளி தவறவிட்ட இடம் என்று நினைப்பது இதைத்தான்; தனது தாயின் வாழ்வைப் பார்த்து, தாயைப் போல தான் இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு அடிகளையும் கவனமாய் எடுத்து வைக்கின்றவளாய், மற்றும் தகப்பனின் பெயர் (சட்டப்பூர்வமாக?) தெரியாததால், சமூகத்தின் அனைத்து இழிச்சொற்களையும் கேட்டு வளர்கின்றவளாயும் இருக்கின்ற பரஞ்சோதி, எப்படி தான் வன்புணரப்பட்டதால் தங்கி நின்ற கருவை எவ்வித கேள்விகளும் இல்லாது ஏற்றுக்கொள்கின்றாள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் படைப்பாளி தர மறுக்கின்றபோது படைப்பும் சறுக்கத் தொடங்குவதாய் எனக்குத் தோன்றியது. இந்தப் பலவீனங்களையும் மீறி, கதை சாதாரணமாக இருந்தாலும், மட்டக்களப்பு வட்டார வழக்கு மொழி நாவலை முடிவு வரை வாசிக்கத் தூண்டுகின்றது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

செப்ரெம்பர் 11/05, இரவு நேரம்.

இது குறித்து, மதி எழுதிய பதிவுகளை இங்கே சுட்டிப்பார்க்கலாம்.
பதிவு 1
பதிவு 2