வெள்ளாவி - விமல் குழந்தைவேல்
(1)
வெள்ளாவி என்னும் இந்தப் புதினம், மாதவி என்னும் பெண்ணையும் அவளது மகளான பரஞ்சோதியையும் முக்கிய பாத்திரங்களாய்க் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட பஞ்சம சாதியினர்களில் ஒருவகையினரான வண்ணார் சமூகத்தில் கதைக்களன் நிகழ்கின்றது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்குரிய வறுமையுடன் வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த மாதவி அவளது மச்சான் முறையான செம்பனுடன் காதல் வயப்பட்டு, 'மயண்டையானப்புறகு புளியமரத்துக்கு பக்கத்துல இரிக்கிற கள்ளுப்பத்தை மறைவுல' ஒதுக்கியதால் கருவைத் தாங்குகின்றாள். ஊராருக்குத் தெரியாது கரு மாதவியின் வயிற்றில் வளர, ஒருநாள் மாதவி மணமாகமளே கர்ப்பந்தாங்கியிருக்கின்றாள் என்று அவளது தந்தைக்குத் தெரிய வர, ஊர் முன்னிலையில் வைத்து அடித்து யார் இதற்குக் காரணம் என்று கேட்கின்றார். முதலில் யாரென்று கூற மறுத்தாலும், வீட்டைச் சுற்றிக் கூடியிருந்த சனம் எல்லாம் அகன்றபிறகு, சொந்தக்கார கிழவியிற்கு மட்டும் தனது மச்சான் செம்பன்தான் இதற்குக் காரணம் என்று மாதவி உண்மையைக் கூறுகின்றாள். 'மச்சானெண்டாப்போல இப்படி மானாங்கெட்டு நடக்கச் சொல்லியிரிக்கோ' என்று மாதவியின் தகப்பன் கோபித்தாலும், 'சின்னஞ்சிறுசுகளண்டா ஒன்டா இருந்திற்றுதுகள். இப்ப என்ன நாளைக்கு கூப்பிட்டு கையில புடிச்சுக் குடுத்தா ஒண்ணாதெண்டு போட்டோ போகப்போறான். அவன் மச்சாண்டா. உதிரம்....உதிரம் உறவறியாமலோடா உட்டுரும்' என்று கிழவி சாந்தப்படுத்துகின்றாள்.
ஆனால் அடுத்த நாள் அவர்கள் நினைத்தபடி விடியவில்லை. விடிகாலையிலே உடுப்புத் தோய்க்க ஆத்துக்குப் போன செம்பனை முதலை கடிக்க அவன் இறந்துவிடுகின்றான்(!). யார் தகப்பன் என்று தெரியாமலே மாதவியினது மகள் பரஞ்சோதி பிறக்கின்றாள். செம்பனின் தாயாரும், தனது சொத்துக்கு மாதவி சொந்தம் கொண்டாடிவாளோ என்ற பயத்தில், உன் வயிற்றில் பிறந்த குழந்தை செம்பனுக்குப் பிறந்தற்கு என்ன சாட்சி என்று கூறி மாதவியை உதறிவிடுகின்றாள். தன் மகள் மாதவியினது வாழ்வு இப்படி நாசமாகிப் போய்விட்டதே என்ற கவலையில் மாதவியின் தகப்பனும் விரைவில் இறந்துவிட, எவருமற்ற அநாதைகளாக மாதவியும், பரஞ்சோதியும் ஆகிவிடுகின்றனர். உடுப்புத்தோய்த்து வரும் வருமானத்தில் அவளும் மகளும் வயிற்றைக் கழுவ முடிந்தாலும், பிறகு, 'சின்ன வயசுக்காரி, இல்லாமையும் கூட, என்னென்டு சொல்லத் தெரியாது. நடுச்சாமம் வாசலுக்கு வந்தாக்களோட ஒத்துப் போகத் தொடங்குகின்றாள்'.
தாயின் இந்த 'தொழில்' மகள் பரஞ்சோதிக்கு துண்டறப்பிடிப்பதில்லை. வெளியே தன்னோடு வாவெனத் தாய் கூப்பிட்டாலும் என்னையும் உன் வாடிக்கையாளருக்கு விற்கப்போகின்றியா என்று கடும் வார்த்தைகளால் தாயை முற்றுமுழுதாய் நிராகரித்தபடியே இருக்கின்றாள். இவர்களது சண்டைகளுக்கு சமாதானம் செய்து வைக்கவும், துணி துவைக்கும் வேலைகளுக்கும் ஒத்தாசை செய்வதற்கும் பக்கத்து வீட்டுக்காரனும் பரஞ்சோதிக்கு மச்சான் முறையான நாகமணி, உதவும் கரங்களை நீட்டுகின்றான். மாதவி, தன்னைப் போல இல்லாது பரஞ்சோதியாவது 'குடும்ப' வாழ்வு வாழவேண்டுமென்பதற்காய் நாகமணியை பரஞ்சோதியைத் திருமணஞ் செய்யச் சொல்கின்றாள். ஆனால் தன்னை விட கிட்டத்தட்ட இருபது வயது இளையவளான மாதவியைத் திருமணஞ்செய்வது அவ்வளவு நல்லதில்லை என்று கூறி மறுக்கின்றான். அத்தோடு அந்த கிராமத்திலிருந்து முதன்முதலாய் அரசாங்க வேலைக்கு நகரத்துக்குப்ப்போன சதாசிவத்தின் மீது பரஞ்சோதிக்கு ஈர்ப்பு இருக்கின்றது என்பதுவும் நாகமணிக்குத் தெரியும்.
உடுப்புத் தோய்த்துக்கொடுக்கும் உடையார் (வெள்ளாளர்?) வீட்டில், உடையாரின் பேரப்பிள்ளை ஒருத்தி சாமர்த்தியப்பட, சடங்கு பதினெட்டு நாள்கள் வரை நடக்கிறது. ஒவ்வொரு நாள் சடங்குக்கும் வண்ணார்தான் போய் ஆரம்பித்து வைப்பது அந்த ஊரின் சடங்காக இருக்கின்றது. மாதவியே உடையாரின் மனைவிக்குப் பிரியமான வண்ணாத்தியாக இருப்பதால் அவளே சடங்குகளை முன்நின்று செய்கின்றாள். வழமைபோல கடும்வேலைப்பளுவும், சாதிய இழிவுப்பேச்சுக்களும் மாதவியைக் காயப்படுத்துகின்றன. சடங்கின் இடைநடுவில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு உறவுக்காரி, எப்படி வண்ணாரத்தியின் காலில் சாமர்த்தியப்பட்ட பெண் விழுந்து வணங்கலாம்? என்று சாதியத்திமிரில் பேச, அதனால் ஏற்பட்ட சண்டையில் காயப்பட்ட மாதவி, உடையார் வீட்டுக்குப்போவதை நிறுத்துகின்றாள். வறுமையும், ஊராரின் வசைச்சொற்களின் காரணமாகவும் மாதவி நோய்வாய்ப்படுகின்றாள். இதுவரை எதிர்முனையாக தாயோடு மல்லுக்கட்டிய பரஞ்சோதி தாயின் நிலைமையைக் காணச்சகிக்காது தாயிற்குப் பதிலாக உடையார் வீட்டுக்குப் போய் சமையல் வேலைகளில் உதவி செய்யவும், துணிகளைத் தோய்த்துக்கொடுக்கவும் தொடங்குகின்றாள். ஒரு நாள் கண்ணகி அம்மன் கோயில் திருவிழாவுக்கு போய் தாயைப் பின்னிரவில் நடக்கும் கூத்தைப் பார்க்கக் கூறிவிட்டு பரஞ்சோதி அலுப்பின் காரணமாக வீடு திரும்புகின்றாள். சில மாதங்களின்பின் பரஞ்சோதி நாலைந்து மாதக் கர்ப்பிணியாக இருக்கின்றாள் என்று தெரிய வருகின்றது. ஆண் யாரென்பது கூடத் தெரியாமல் கர்ப்பிணியாவதை மாதவி நம்பத் தயாராகவில்லை. முருங்கக்கம்பால் சாத்து சாத்து என்று சாத்தினாலும் உண்மை வெளிவராததைக் கண்டு, மாதவிக்கு இந்த 'வன்புணர்வு' தன் மகள் அறியாமல் நடந்திருக்கின்றது என்பது தெளிவாகப் புரிகின்றது. திருவிழா முடிந்து வந்து, வீட்டில் படுத்த நாளில்தான் யாரோ ஒருத்தன் தன்னை வன்புணர்ந்திருக்கின்றாள் என்பது பரஞ்சோதிக்கு புரிகின்றபோதும்(?) அந்த நபர் யாராயிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் மாதவிக்குப் புரிந்துபோகின்றது. தன்னோடு விரும்பியபோதெல்லாம் சல்லாபிக்கும் அந்த உடையார்தான் தன் மகளோடும் தன் 'ஆண்மை'யைக் காட்டிவிட்டாரென்று. நேரே உடையாரின் முன்னாள் சென்று மாதவி நியாயங்கேட்டாலும், 'உனக்குத் தெரியாதோ....பப்பாசிப் பிஞ்சையும் அன்னாசிப் பிஞ்சையும் சப்பித் தின்னக்கொடு. ஒரு பங்கு சூரமீன் வாங்கி, ஆக்கித் தின்னக்குடு....ஒரு துவாலையோடு எல்லாம் போயிரும். இதெல்லாம் நான் உனக்குச் சொல்லித் தரோணுமா?' என்று நல்ல அறிவுரை கூறுகின்றார் உடையார். எதையும் செய்யமுடியா இயலாமையில் வீடு திரும்புகின்ற மாதவி படுத்த படுக்கையாகி சில நாள்களில் அவளும் இறந்துவிடுகின்றாள்.
'யார் இந்தக் குழந்தைக்குத் தகப்பன் என்று கூறு சேர்த்து வைக்கின்றேன்' என்று நாகமணி கேட்க, யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உடையார் வீட்டில் வந்து நின்ற பையன்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று மாதவி சந்தேகத்துடன் கூறியதும், 'இஞ்ச பார் பாய்ஞ்சோதி இந்த சந்தேகப்பட்ட கதையையெல்லாத்தையும் எனக்கிட்ட சொன்னதோட நிப்பாட்டிக் கொள். ஆருக்கிட்டயும் மூச்சு உட்டுடாத உன்னக் கையெடுத்துக் கும்பிடுறன்......கொளுத்திப் போட்டுறுவானுகள்' என்று நாகமணி கூறுகின்றான். சில மாதங்களின் பின் பிறந்த குழந்தையையும் மாதவியையும் தனது துணையாகவும், குழந்தையாகவும் நாகமணி ஏற்றுக்கொள்கின்றான். எனினும் உடையார்தான் இதற்கு எல்லாம் காரணம் என்ற உண்மை மாதவியின் இறப்போடு மறைந்துபோகின்றது.
(2)
இரண்டாம் பாகம் இவையெல்லாம் நிகழ்ந்து பதினைந்து வருடங்களுக்குப் பின் நடப்பதாய் விரிகின்றது. காலம், மட்டக்களப்புச் சிறை உடைக்கின்றவேளையாக இருக்கின்றது. பரஞ்சோதி- நாகமணியின் 'பிள்ளை' அரவிந்தன் பெடியனாக வளர்ந்து நிற்கின்றான். சைக்கிள் வாங்கித் தராவிட்டால் இயக்கத்துப் போய்விடுவன் என்று பெற்றோரிடம் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றான். இயக்கங்கள், இயக்கங்களின் அடிப்பொடிகள் 'துரோகிகள், 'விபச்சாரிகள், 'சி.ஜ.டிகள்' என்று மாறி மாறி இந்தக் காலகட்டத்தில் மண்டையில் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அரவிந்தன் மீது மிகப்பிரியமாக இருக்கும் நாகமணி மனைவியின் பேச்சையும் கேட்காமல் பரஞ்சோதி சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கள்ளமாய் எடுத்து சைக்கிள் வாங்கிக்கொடுத்துவிடுகின்றான். தன் சேமிப்பைக் களவெடுத்து சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டான் என்று கடுமையாக நாகமணியிடம் கோபித்தாலும், நாகமணிக்கு அரவிந்தன் மீது இருக்கும் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்துபோயிவிடுகின்றாள். மகிழ்ச்சி அவ்வளவு நெடுங்காலம் நீடிக்கவில்லை. நாகமணியின் முதுகில் கட்டியொன்று பெரிதாக வளர்கின்றது. வேலை செய்யமுடியாது அவதிப்படுகின்றான் நாகமணி. ஆசுபத்திரியில் காட்டினால், இதுக்கு பெரியாஸ்பத்திரிக்குப் போய் அறுவைச் சிகிச்சைதான் செய்யவேண்டும் என்று வைத்தியர் கூறிவிடுகின்றார். சேமித்த பணத்தை சைக்கிள் வாங்கியதில் செலவழித்தாயிற்று. சொட்டுப்பணங்கூட இல்லை. சைக்கிளை விற்றுவிட்டு அப்பாவின் அறுவைச் சிகிச்சைக்கு காசு தாடா என்றால் நான் செத்தாப்பிறகு அதையும் செய்யுங்கள் என்று மகன் வீம்பாக தாயாரிடம் கூறிவிடுகின்றான். எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனபின் உடையாரிடம் கையேந்தலாம் என்று போகின்றாள் பரஞ்சோதி. தனியே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் உடையாருக்கு காமம் அந்தக்கிழட்டு வயசிலும் அரிப்பெடுக்கிறது. 'ஒரு இளந்தாரிப் பொடியனுக்கு நீ தாயெண்டு உன்னப் பார்த்தவன் ஆரும் சொல்லுவானோ? கோடியொரு வெள்ளைக்கு, குமரியொரு பிள்ளைக்கெண்டு உன்னக் கண்டத்துக்குப் புறகும் இன் ஆரும் சொல்லேலுமோகா? பட்டை களண்ட பாலக்கட்டை மாதிரி இந்த வயதிலையும் பளபளண்டு நீ எப்பிடி இரிக்காயெண்டு எனக்கெல்லோ தெரியும்?' என்று வழிகின்றார். நீ என்னோடு உடன்பட்டால் நீ கேட்ட பணம் வீட்டைபோகமுன்னம் வந்து சேரும் என்று பல்லிளிக்கின்றார் உடையார். 'வேண்டாம் போடியார் இது சரியில்ல. அம்மைபட்ட கக்சிசமெல்லாம் அம்மையோட போகட்டும். என்னையாவது வாழ உடுவாங்கெண்டுதான் நானும் வந்தேன்' என்கிறாள் பரஞ்சோதி. 'நான் திண்டுபார்த்து எறிஞ்சகொட்டை தானேகா நீ.... இப்பமட்டும் பத்தா பத்தினி மாதிரி கதைக்காய்' என்று தான் மட்டும் அறிந்த, பதினைந்து வருடமாய் ஒளித்து வைத்திருந்த 'உண்மையை' உடைத்துவிடுகின்றார் உடையார். 'தூ' என்று எச்சிலை உடையாரின் முகத்தில் துப்பிவிட்டு அந்தவிடத்தை விட்டு நகர்ந்துவிடுகின்றாள் பரஞ்சோதி. வீட்டைப்போய்ப்பார்த்தால் நாகமணி உடைந்துபோய் இருக்கின்றான். மகன் அரவிந்தன் சைக்கிளை கொண்டுபோய் விற்றுவிட்டு தகப்பனின் வைத்தியச் செலவுக்காய் காசுடன் ஒரு கடிதத்தையும் எழுதிவைத்துவிட்டு ஏதோ ஒரு இயக்கத்து போய்விடுகின்றான். அவன் இருந்தசமயம் ஒருபோது கூட அவன் சைக்கிள் ஓடியபோது தன் கோபத்தின் நிமிர்த்தம் பார்க்கவில்லை என்ற கவலை, பரஞ்சோதிக்கு மகன் இயக்கத்துப் போய்விட்டான் என்ற கவலையோடு சேர்ந்து நெஞ்சை அழுத்துகின்றது. எனினும் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருப்பது புரிய, கணவனை அழைத்துக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு விரைகின்றாள். என்றோ ஒருநாள், இயக்கத்துப் போன தன் மகன், உடையார் செய்த வண்டவாளங்களுக்கு புளியமரத்தடியில் வைத்து அடியடி என்று அடித்து தண்டனை கொடுப்பான் என்று நினைத்துச் சத்தம்போட்டு பரஞ்சோதி சிரிப்பதுடன் புதினம் நிறைவுபெறுகின்றது.
(3)
நாவல் என்றரீதியில் மட்டக்களப்பு வட்டார நடை வாசிப்பவருக்கு புது வாசிப்பனுபவத்தைத் தரும் என்றாலும், நாவல் முழுதும் எழுத்துப்பிழைகள் நிரம்பிக்கிடக்கின்றது. அத்தோடு சில stereo type வார்த்தைகள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. 'சோனகருக்குப் பன்றி பிடிகாததுபோல' என்ற உவமைகள் பலவிடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. 'சோனிகள்' என்ற வார்த்தைப் பிரயோகம் எல்லாம் வருகின்றது. நிறைய முஸ்லிம் நண்பர்கள் பலர் வாய்க்கப்பெற்ற விமல் குழந்தைவேல் இதை எல்லாம் போகின்றபோக்கில் எழுதிக்கொண்டுபோவது வியப்பாய் இருக்கின்றது. இவற்றை வாசிக்கும்போது எனக்கு வளாகத்தில் racism awareness என்று கூறிவிட்டு, 'கறுப்பர்கள் கோழி மட்டும் உண்பவர்கள்'; 'சைனீஸ்காரர்களுக்கு கார் ஓட்டத்தெரியாது;' 'பாக்கிகள் கறி வாசத்துடன் மணப்பவர்கள்' என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வு செய்ததுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் இப்படி எழுதுவது அதுவரை இப்படிப் பேசாதவர்/stereo typeயாய் புரிந்து வைக்காதவரை, இந்தா நீயும் இதையும் அறிந்துகொள் என்று விளம்பரப்படுத்துவது மாதிரித்தான் எனக்கு அந்தப்பொழுதில் தோன்றியது. அவ்வாறே இந்தப்புதினத்தில் இப்படி ஒருவித இனத்துவேசத்துடன் தமிழ்மக்கள் இருக்கின்றார்கள் என்று விமல் நியாயம் கற்பித்தாலும் ஒரு படைப்பாளி இது குறித்த அவதானமாய் வேறு ஒருவடிவத்தில் இந்த stereo type விசயங்களை அணுகவேண்டும் போல எனக்குப்பட்டது. நாவலில் பல விசயங்கள் ஒரு 'சினிமாப்பட' காட்சிகளைப் போல நடந்தேறிவிடுவதுதான் வியப்பாயிருக்கின்றது. மாதவியின் கருவுக்கு செம்பன்தான் காரணம் என்று அறிந்து அடுத்தநாள் ஊர் கூடி இவன் தான் காரணம் என்று கூறலாம் என்றால், செம்பன் அடுத்த நாள் காலையில் சொல்லி வைத்தாற்போல முதலை கடித்து இறந்துவிடுகின்றான். ஊர்த் திருவிழாவன்று வீட்டில் படுத்திருந்த பரஞ்சோதிக்கு தன்மீது வன்புணர்ச்சி செய்யப்பட்டதை கனவுபோல அதை நினைத்துக்கொண்டு நாலைந்து மாதங்களுக்குப்பின் தான் கர்ப்பிணியானபிறகுதான் இப்படியொரு சம்பவம் நடந்தது என்று பரஞ்சோதிக்குத் தெரியவருகின்றது. தனது பீரியட்கள் தடைப்பட்டு ஏதோ நடந்திருக்கவேண்டும் என்று நினைத்துப்பார்க்கக்கூடமுடியாத பேதையாக பரஞ்சோதி இருப்பது புதிராக இருக்கின்றது. உடையாரின் காம வக்கிரத்தையும், தான் வன்புணரப்பட்டதற்கு உடையார்தான் காரணம் என்ற உண்மை தெரிந்து பரஞ்சோதி நிலைகுலைந்து வருகின்ற சமயத்தில், சொல்லிவைத்தாற்போல மகனும் சைக்கிளை விற்றுக் காசை வைத்துவிட்டு இயக்கத்துப் விடுகின்றான் என்று அநேக சம்பவங்கள் நேர்கோட்டிலேயே (விதி?) நகர்கின்றன.
மேலும், இயக்கங்கள் வளரத்தொடங்கின காலத்தில் தனது காம ஆசையை வெளிப்படையாக காட்ட உடையார் அவ்வளவு முட்டாளா என்பது ஒரு புறமாக இருந்தாலும் எப்போதோ நடந்த அந்த 'உண்மையை' பரஞ்சோதிக்கு அவ்வளவு இலகுவில் வெளிச்சம் போட்டுக்காட்டமாட்டாத நபும்சகந்தான் உடையார் என்று அவரின் பாத்திரத்தை வாசித்த எவருக்கும் சாதாரணமாய்த் தோன்றும். அத்தோடு அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் இப்படி 'ஆண்மைத்தனம்' காட்டித்திரிந்தவர்களை எல்லாம் மண்டையில் போட்டுக்கொண்டிருப்பதாயும் அப்படிச் சில சம்பவங்கள் அந்த ஊர்ப் புளியமரத்தில் நடந்ததாயும் நாவலில் வருகின்றது. இவ்வளவு தெரிந்துகொண்டும் உடையார் இப்படி உண்மையை சாதாரணமாய்ப் போட்டு உடைபாரா? பல சம்பவங்கள் திரைப்படக்காட்சிகள் போல விரிகின்றபோது ஜெயமோகனோ அல்லது வேறு யாரோ ஒருவர் முன்பு எழுதியிருந்தது நினைவுக்கு வருகின்றது. வாழ்க்கையில் சில செக்கனின் எந்தக்காரணமுமின்றி ஒருவர் விபத்தில் சிக்கி இறந்துபோய்விடக்கூடும். ஆனால் அதை எழுத்தில் வைக்கும்போது வாசிப்பவர் நம்புவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதில்தான் ஒரு படைப்பின் ஆழமும் விரிவும் தங்கி இருக்கின்றது என்று. அதையேதான் விமல் குழந்தைவேலுக்கும் இந்தப்புதினத்தை வாசித்து முடிக்கையில் நினைவூட்டவேண்டும் போல எனக்கும் தோன்றியது. பிற நாவல்களுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது என்றாலும், பதின்மத்தில் வாசித்த செங்கை ஆழியானின் கதை(கள்), உடனே இந்த நாவலை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஞாபகத்து வந்தது. முக்கியமாய் படைப்பாளி தவறவிட்ட இடம் என்று நினைப்பது இதைத்தான்; தனது தாயின் வாழ்வைப் பார்த்து, தாயைப் போல தான் இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு அடிகளையும் கவனமாய் எடுத்து வைக்கின்றவளாய், மற்றும் தகப்பனின் பெயர் (சட்டப்பூர்வமாக?) தெரியாததால், சமூகத்தின் அனைத்து இழிச்சொற்களையும் கேட்டு வளர்கின்றவளாயும் இருக்கின்ற பரஞ்சோதி, எப்படி தான் வன்புணரப்பட்டதால் தங்கி நின்ற கருவை எவ்வித கேள்விகளும் இல்லாது ஏற்றுக்கொள்கின்றாள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் படைப்பாளி தர மறுக்கின்றபோது படைப்பும் சறுக்கத் தொடங்குவதாய் எனக்குத் தோன்றியது. இந்தப் பலவீனங்களையும் மீறி, கதை சாதாரணமாக இருந்தாலும், மட்டக்களப்பு வட்டார வழக்கு மொழி நாவலை முடிவு வரை வாசிக்கத் தூண்டுகின்றது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
செப்ரெம்பர் 11/05, இரவு நேரம்.
இது குறித்து, மதி எழுதிய பதிவுகளை இங்கே சுட்டிப்பார்க்கலாம்.
பதிவு 1
பதிவு 2
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
பதிந்தது:karthikramas
9/15/2005 10:29:00 AMundefined
15.9.2005
நல்ல அறிமுகம் என்று சொல்ல வந்தேன்.
9/15/2005 10:31:00 AMhttp://mathy.kandasamy.net/musings/?p=154
9/15/2005 11:36:00 AMhttp://mathy.kandasamy.net/musings/?p=155
நன்றி அனானிமஸ். மதி எழுதிய ஒரு பதிவை நானும் ஏற்கனவே வாசித்திருந்தேன். சுட்டிகள் தந்தமைக்கு நன்றி. மேலே இணைத்துவிட்டேன்.
9/15/2005 11:59:00 AMகதையின் பிரச்சனைகள் 2
9/15/2005 12:05:00 PM1. பழைய வீரகேசரிப்பிரசுரக்கதைகளை ஞாபகமூட்டுவது (பாலமனோகரன், செங்கை ஆழியான்)
2. இருப்பவர்களின் கதையை அப்படியே சொல்லிவிட்டதாகக் கேள்வி; அப்படியிருப்பின், :-(
நல்லதொரு அறிமுகம் டீஜே.
9/15/2005 12:06:00 PMநான் எழுதியதை அறிமுகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆயினும் அனோனிமஸ்ஸுக்கும் டிஜேக்கும் நன்றி.
-மதி
what a creative cover design :(
9/15/2005 12:20:00 PM//what a creative cover design :( //
9/15/2005 03:11:00 PMஇரவி, முன்னட்டை விமல் குழந்தைவேலின் நண்பரும், கவிஞரும், ஓவியருமான றஷ்மியினால்தான் செய்யப்பட்டது. கதையைப்போல முன்னட்டை அமைப்பும் நேர்கோட்டில் (straight explanation) இருக்கவேண்டும் என்று ஆசிரியர் விரும்பியிருக்கலாம் போல.
Nanri DJ
9/15/2005 04:52:00 PMபதிந்தது:மு. சுந்தரமூர்த்தி
9/15/2005 09:31:00 PMடிஜே,
அறிமுகத்துக்கு நன்றி.
வாத்துக்கள் தெற்கு நோக்கிப் பறக்கும் குளிர்காலம் வரும் வரை மற்றவர்களின் பதிவுகள் பக்கம் தலைவத்துப் படுப்பதில்லை என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
//...மாதவி சிரிப்பதுடன் புதினம் நிறைவுபெறுகின்றது.//
'..பரஞ்சோதி சிரிப்பதுடன்?'
//விமல் சொக்கநாதனுக்கும்//
விமல் குழந்தைவேல்?
15.9.2005
மிக்க நன்றி சுந்தரமூர்த்தி. இப்படி பிழை பிழையாக எழுதுவது ஒரு அறிமுகத்துக்கு நல்லதில்லை :-(. திருத்திவிட்டேன்.
9/15/2005 11:26:00 PM.......
பின்னூட்டங்கள் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
thanks for this post.
9/16/2005 02:48:00 AM- Suresh Kannan
நன்றி சுரேஷ் கண்ணன்.
9/16/2005 02:52:00 PM........
மதி, நான் தான் உங்களுக்கு ஒருவகையில் நன்றி கூறவேண்டும். நீங்களும் பத்மநாப ஐயரும் இந்தப்புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்த வீட்டுக்காரர்களிடம்தான்(வழமைபோல) அபகரித்து வாசித்திருந்தேன். புத்தகத்தைத் தந்தவர்கள் 'காணமற்போன புத்தகங்கள்' பட்டியலில் இதையும் ஏற்கனவே சேர்த்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் :-).
அந்த வீட்டுக்காரர்கள்,
9/16/2005 03:34:00 PMபட்டியல் எழுதத் தொடங்கிச்சினம் எண்டால் அது சீனப்பெருஞ்சுவர் போல நீளும் எண்டு நினைக்கிறன்! சரிசரி, இந்த விண்டருக்கு தயாராய் இரும். ஐஞ்சறு வருஷத்துக்கு முந்தி, ஒரு கியூபன் பெடியனை வீட்டுக்குள்ள புகுந்து தூக்கினாங்களே! அதுமாதிரி, ரஜ கஜ துரக பதாதிகளோட உடமையாளர்கள் வருவினம். அவை பாவம் போனாப்போகுது எண்டு சொன்னாலும், வரவைக்கிறது என்ற வேலை!
முஸுப்பாத்தி தவிர்த்து: இப்படி நிறைய அறிமுகங்கள் எழுதுமைசே. சும்மா படங்காட்டுறதைவிட்டு இதுகளைச் செய்யும்.
-மதி
நன்றி மதி.
9/18/2005 10:03:00 PMஇங்கே கூடத்தான் (மேலே) படங்காட்டியிருக்கின்றேன் :-)
இந்தமாதிரிப் படங்காட்டினால் ஒருத்தரும் ஒண்டும் சொல்லாயினம். நல்லாருக்கு எண்டுதான் சொல்லுவினம். என்னைமாதிரி.
9/18/2005 10:48:00 PMஅடுத்த பதிவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்!
-மதி
Post a Comment