
சற்று முன்னர்தான், ரொறொண்டோவில் தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடந்து முடிந்திருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட இருபத்தைந்து குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. படங்களின் நேரவளவு, ஒரு நிமிடத்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை பல்வேறு வகையான காலவளவுகளுக்குள் இருந்தன. எல்லாத் திரைப்படங்களையும் அறிமுகஞ் செய்தல் இயலாத காரியமாகையால் என்னைப் பாதித்த/நான் இரசித்த படங்கள் பற்றிய சில குறிப்புக்களைத் தரலாம் என்று நினைக்கின்றேன்.
கிச்சான்
இந்தப் படம் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தை பின்புலமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கி சற்றுப்பின்னரே நான் இதைப் பார்க்கத் தொடங்கியதால் முழுக்கதையும் தெரியாவிட்டாலும், ஏழ்மையின் காரணமாக படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சிறுவனொருவனின் வாழ்வைப் பதிவு செய்கின்றது இப்படம். அவனது தகப்பன் இராணுவத்தால் கொல்லப்படவும், தாய் வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்வதற்காய் கடல் கடந்து போகையில் இடையில் காணாமல்/எந்தத் தொடர்பும் இல்லாது போவதாயும் சிறுவனுக்கு ஆதரவாய் ஒரெயொரு வயது முதிர்ந்த பாட்டியொருவர் மட்டுமே இருப்பதாய்க் காட்டப்படுகின்றது. வருமானம் எதுவுமின்றி வறுமையால் அல்லறும் சிறுவன் தன் படிப்பை இடைநடுவில் நிறுத்தி இறுதியில் வேலைக்குப் போகின்றான். அவனது வயதுக்குரிய, மற்றச்சிறுவர்கள் செய்யும் எதையும் செய்யவியலாத இயலாமையைப் படம் அழகாக எடுத்துரைக்கின்றது. சிறுவனாக நடித்த பையனுக்கு விழாவின் இறுதியில் வழங்கப்பட்ட விருதில் சிறந்த நடிகனுக்கான பரிசு வழங்கப்பட்டது. உரிய அங்கீகாரம்தான்.
வெள்ளைப் பூனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவக்குமார், இடாலானோ கால்வினோவின் ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு இக்குறுந்திரைப்படத்தை எடுத்திருந்தார். ஒற்றை அறையுள்ள வீட்டில் ஒரு தம்பதியினரையும், எதுவுமே பேசமுடியாத கடும் நோயுற்றிருக்கும் ஆணின் தாயையும் சுற்றிக்கதை நகர்கின்றது. ஒரு தம்பதிகளுக்குரிய இடையில் எழும் இயல்பான பாலியல் உணர்ச்சிகளைக் கூட பிடித்தமான சூழ்நிலையில் காட்டமுடியாத ஒற்றை அறை வாசமும், வெவ்வேறு நேரங்களில் அவர்கள் செய்யும் வேலைகளும் அவர்களை அவர்கள்பாட்டில் சுய இன்பத்தில் அலைய விடுகின்றது. வெவ்வேறு நேரங்களில் அவர்கள் ஈடுபடும் சுய இனபத்தில் ஒரு வெள்ளைப்பூனை மட்டும் இரண்டு பேருக்கும் சாட்சியாக இருக்கின்றது. மிக இயல்பாய் எதையும் அளவுக்கும் மீறிப் பேசாமல் இந்தப்படம் பத்து நிமிடங்களுக்குள் சொல்ல வந்ததைக் கூறி நிற்கின்றது.தம்பதிகளில் ஒருவராக நடித்த லீனா மணிமேகலை மிக அற்புதமாய்ச் செய்திருந்த்தார். சிறந்த திரைப்படத்துக்கான விருதை இந்தப்படம் பெற்றதில் எதுவும் ஆச்சரியமில்லை.
You 2
கணவனால் வன்முறைக்குள்ளாக்கப்படும் பெண், தனது பிள்ளையும் கூட்டிக்கொண்டு ஒரு சினேகிதியின் வீட்டுக்கு வருகின்றார். அங்கே தங்கியிருக்கையில் ஆண்கள் இல்லாது தனித்து வாழ்வோம் என்று எண்ணமும், இரு பெண்களுக்கும் இடையே முகிழும் அந்நியோன்னியமும் அவர்களை சமப்பாலுறவாளராக்குகின்றது. எனினும் இருபெண்களுக்கிடையில் ஒரு பெண் மேலாதிக்கவாதியாக படிப்படியாக மாறி இறுதியில் (கணவனின் வன்முறையால் வீட்டை விட்டுவந்த) மற்றப்பெண்ணை ஒரு பிரச்சினையின் நிமிர்த்தம் கை நீட்டி ஓங்கவும், 'நீயும் கூடவா?' என்று கேள்வியை பார்ப்பவரிடையே விட்டுச் செல்வதுடன் படம் முடிகின்றது. ஆண்-பெண்ணுக்கிடையில் மட்டுமல்ல, பெண்-பெண்ணுக்குமிடையிலான உறவில் கூட வ்ன்முறை/சுரண்டல்கள் வரலாம் என்ற சிந்திக்கக்கூடிய விடயத்தை தொட்டுச்செல்கின்றது. எங்கேயும் ஒரு ஆதிக்கம் வருகையில், அது வன்முறையாகத்தான் இறுதியில் உருவெடுக்கச் செய்கின்றது. அது ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்த்தால் என்ன? ஒரே மாதிரித்தான் இருக்கின்றது. இந்தப்படத்தில் சுமதி ரூபனும்(கறுப்பியும்), இன்னொரு பெண்ணும் நன்றாக நடித்திருந்தனர். சிறந்த திரைக்கதைக்கான விருதை சுமதி ரூபன் பெற்றிருந்தார்.

சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்ற சத்தியாவும், சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்ற சுமதி ரூபனும்(கறுப்பி)
Rape
காலம் காலமாய் தமிழ்ப்பெண்கள் மீது ஏனைய இராணுவங்களால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளையும் சித்திரவதைகளையும் இது ஆவணப்படுத்துகின்றது. 50களில் ஆரம்பித்த கலவரத்தில் பாலியல் வன்புணரப்பட்ட பெண்களிலிருந்து, அண்மையில் (2001) மன்னாரில் வன்புணரப்பட்ட இருபெண்கள் வரை பேசப்படுகின்றது. 'சிறி' என்ற சிங்கள முத்திரையை, பெண்களை பாலியல் வன்புணர்ந்து முலைகளில் குத்தியிருந்து தொடக்கம், கர்ப்பிணிப்பெண்களை கூட்டாய் வன்புணர்ந்தது வரை பார்த்தவர்களின் நேரடிப்பேச்சால் ஆவணப்படுத்தப்படும்போது சொல்வதற்கு நிச்சயம் சொற்கள் எதுவும் நமக்கு எஞ்சியிருக்கப்போவதில்லை. அதிலும் கலவரம் ஒன்றில் ஜந்து இராணுவத்தால் வன்புணரப்பட்ட ஒரு பெண் தன் வாயால் நிகழ்ந்ததைக் கூறும்போது..... #%^$ U #$%$@! என்று swear பண்ணாமல் நிச்சயம் இருக்கமுடியாது. வெளியுலகத்துக்கு இதுவரை மறைக்கப்பட்ட, பல உண்மைகளை இது அம்பலத்தப்படுகின்றது. பாலியல் வன்புணரப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வாழ்வேன் என்று நம்பிக்கையாக எழுந்த அந்தப்பெண்மணியையும், பாலியல் வன்புணரப்பட்டாலும் நீங்கள் எந்தக்குற்றமும் செய்யவில்லை அந்த நிகழ்வை அசட்டை செய்து வாழ்வில் நீங்கள் கட்டாயம் நகரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காய், எழும் ஒரு திருச்சபை ஆயரின் வார்த்தைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் ஆதரவைத் தரும். பாலியல் வன்புணரப்பட்டாலும் அவர்களும் நம்மில் ஒருத்தர் என்ற புரிதலை பார்ப்பவரிடையே இந்த ஆவணப்படம் படியவிடுவது ஆறுதலாக இருக்கின்றது.
அந்த ஒரு நாள்
ஒரு பெண்ணுடைய adultery பற்றிக் கூறுகின்ற படம். தனது மனைவி இன்னொருத்தருடன் உறவில் ஈடுபட்டிருக்கின்றார் என்று ஏற்கனவே அறிந்து சந்தேகம் கொள்ளும் கணவனுக்கு, மன உளைச்சல்களால் அவதிப்பட்டு வேலை போய்விடுகின்றது. இறுதியில் அந்தப்பெண்ணைப் 'பழிவாங்கி' இரத்தக்கறைகளும் நிற்பதுடன் படம் முடிகின்றது. சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதை இது பெற்றிருந்தது. கனடாவில் எடுக்கப்பட்ட படம்.

'உயிர்நிழல்' கலைச்செல்வன் நினனவுப்பரிசான சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதைப் பெறும் பற்றிக் பத்மநாதன்(வலது), கலைச்செல்வனின் சகோதரர் கவிஞர் திருமாவளவன் (இடது) மற்றும் நிக்கோல்
தீர்ந்து போயிருந்த காதல்
கவிதை நடையுடன் மூன்று நிமிடங்களில் காதலின் 'அழுகிய' கணங்களைச் சொல்கின்றது. வேலைக்குப் போகும் பெண் தாபத்துடன் வேலை முடிந்தவுடன் தனது கணவனுக்காய் வீட்டில் காத்திருப்பதும், அவன் நேரம் பிந்தி நள்ளிரவில் வருகின்றபோது அவளது காதல்/காமம் அவளை விட்டு விலகிப்போயிருப்பதையும், ஜடமாய் அவன் அரவணைப்பில் கசங்கிப்போவதையும் மிக இயல்பாய் கவிதை நடையில் கூறியிருந்தது. லீனா மணிமேகலையே இயக்கியும் நடித்தும் இருக்கின்றார். சிறந்த இந்தியத் திரைப்படத்துக்குரிய தேர்வில் இது விருதைப்பெற்றிருந்தது.
ரெட் வின்ரர்(Red Winter)
மூன்று இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் சுற்றி நகரும் கதையிது. படத்தின் முடிவில் மூன்று கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன. யாரோ ஒரு ஆண்தான் இந்தக் கொலைகளைச் செய்திருப்பான என்பதைப் பார்ப்பவரிடையே படியவிட்டு இறுதியில் மூன்று கொலைகளையும் சைக்கோவான பெண்ணே செய்திருக்கின்றாள் என்பதாய் முடியும். அற்புதமான ஒளிப்பதிவும், இசையும் இதற்கு மெருகூட்டுகின்றன. படத்தில் இடையில் பின்னணியில் காட்டப்படும் துண்டு துண்டான ஆங்கிலப்படங்களின் காட்சிக்கும், இதற்கும் தொடர்புகள் இருக்கின்றதென்று படம் பார்த்துக்கொண்டிருந்த தோழி ஒருவர் கூறியிருந்தார். எனினும் தமது மூலத்தை/அடிப்படையை மறைக்காமல், படம் முடியும்வரை பார்க்கக்கூடிய ஒரு நல்லதொரு திரில்லரைத் தந்திருக்கின்றார்கள் என்பதற்காய்ப் பாராட்டலாம். இதைச் சற்று நீளமான திரைப்படமாக (ஒரு மணித்தியாலத்துக்கு மேல்) எடுத்தார்கள் என்றும் இந்த விழாவுக்காய் 30 நிமிடங்களாய்ச் சுருக்கியதாயும் அந்தப் படத்தை இயக்கியவர் உரையாடும்போது கூறியிருந்தார். முடிந்திருந்தால் அந்தப்படத்தில் வழமையான சினிமாத்தனத்துடன் வரும் பாடல்களை (ஒரு பாடலையாவது) எடிட் செய்திருக்கலாம். விரைவில் ரொறண்டோவில் தியேட்டர்களில் முழுநீளத்திரைப்படமாக இத் திரைப்படம் காண்பிக்கப்படப்போவதாயும் அறிந்தேன். பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்சினி நன்றாகச் செய்திருந்தார்.

அருண் வைத்தியநாதன் மற்றும் பற்றிக் பத்மநாதன்
இந்த விழாவில் வலைப்பதியும் நண்பர்களினதும் பங்களிப்பைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அருண் வைத்தியநாதனின் நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. சுமதி ரூபன் 'You 2' நடித்ததுடன், திரைக்கதையையும் அந்தப்படத்துக்கு எழுதியிருந்தார். வலைப்பதிவுகள் தமக்கென சொந்தமாக வைத்திருக்காவிட்டாலும், அவற்றை வாசிப்பவர்களும், ரொறண்டோவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களுமான ரூபன், சத்தியாவும் தமது திறமையைக்காட்டியிருந்தனர். ரூபன் 'You 2' மற்றும் 'ஐயோ' ஆகிய இருபடங்களை இயக்கிருந்ததும், சத்தியா 'ஐயோ' படத்தில் நடித்தமைக்காய் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
.........
* This heading is used thankfully from the flyer.
22 comments:
சுடச்சுட தந்திருக்கிறீர்கள் டீஜே. நன்றி!
9/25/2005 04:21:00 AMசத்தியாவிற்கும் ரூபனிற்கும் சுமதிக்கும் என்னுடைய வாழ்த்துகளை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்!
டீஜே - ரூபனின் இயக்கத்தில் சத்தியா நடித்த குறும்படத்தின் பெயர் 'ஐயோ'வா 'ஜயோ' வா?
கிச்சான் படத்தினை வாய்ப்புக்கிடைத்தால் முழுக்கவும் பாருங்கள். நான் டொராண்டோ வந்தசமயத்தில் இலவசமாக விநியோகித்தார்களாம். எனக்கும் ஒன்று கிடைத்தது. ஈழநாடு பத்திரிகைக்காரர்கள் விநியோகித்ததாகச் சொன்னார்கள்.
ரூபன் இயக்கிய 'You Two'வைப் பார்க்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றப்படங்களையும்..
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறும்படங்களின் முகப்புப் படங்களோ, வேறேதும் படங்களோ இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன். [முடிந்தால், இதே பதிவில். சன்னாசி, கீத்துக்கொட்டாயில் சேர்க்கும்போது நன்றாக இருக்கும்.]
-மதி
சுடச்சுடத் தருவது முக்கியமில்லை; சுட்டுத்தராமலிருப்பதே முக்கியம். அந்தளவிலே பதிவுக்கு நன்றி.
9/25/2005 06:58:00 AMஇனி, உமக்கான திரைப்பட மொழியையோ முழங்காலையோ உருவாக்கிவிட்டு வந்தபின்னாலேயே நாம் சிலராகவோ சில்லறைகளாகவோ பேசுவோம்.
-/இகம் மிக மர்மமனிதன்.
நல்ல விவரங்களுடன் கூடிய பதிவு. நன்றி டீஜே. கறுப்பிக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்து!
9/25/2005 07:23:00 AMவிவரங்களுக்காக நன்றி டீசே. உறவு என்றில்லை, இரண்டு நண்பர்கள் சேர்ந்து வசிக்கும் போதே இது போல ஒருவருக்கு ஆதிக்க மனப்பான்மை வருவதை காணலாம். You Two கிடைக்குமானால் பார்க்க வேண்டும். Friends என்றொரு தொடர் வந்தது. அதில் ராஸ் என்பவரின் முன்னாள் மனைவி ஒருபால் உறவு கொண்டு இன்னொஎருவருடன் வாழ சென்றுவிடுகிறார். அவரை காண வரும் ராஸை, தன் "கணவனாக நினைக்கும் பெண்" வருவதற்குள் வெளியேற்ற பல முயற்சிகள் செய்கிறார். அப்போது அவர் காட்டும் பதட்டமும், பயமும் இத்தைகைய உறவிலும் உள்ள ஆதிக்க மனப்பானமையையும் காட்டுகிறது.
9/25/2005 08:09:00 AMபதிந்தது:o
9/25/2005 12:24:00 PM"Winrer" alla. WinTer.
25.9.2005
பதிந்தது:theevu
9/25/2005 04:29:00 PMசுடு பதிவிற்கு நன்றி
27.9.2005
மதி, மர்மமனிதன்(?), தங்கமணி, பத்மா, ஓ மற்றும் தீவு உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி
9/25/2005 08:15:00 PM......
//ரூபனின் இயக்கத்தில் சத்தியா நடித்த குறும்படத்தின் பெயர் 'ஐயோ'வா 'ஜயோ' வா?//
மதி படத்தின் பெயர் 'ஐயோ'தான் நான் தான் என் இலக்கணத் திறமையால் மாற்றிவிட்டேன் :-( (மேலே திருத்தியும்விட்டேன்; நன்றி).
.........
//சுடச்சுடத் தருவது முக்கியமில்லை; சுட்டுத்தராமலிருப்பதே முக்கியம். //
இகம் மிக்க சக/சய மனிதரே! இது சுட்டுத்தர வாத்தல்ல என்றாவது புரிந்திருக்கின்றதே.நன்றி ப்ரோ நன்றி :-).
........
பத்மா, Friends Series அவ்வவ்போது பார்ப்பதுண்டெனினும் நீங்கள் குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
........
O! நான் ரெட் வின்ரர் என்றுதான் எழுதியிருக்கின்றேன். நீங்களும் அதைத்தான் குறிப்பிட்டதாய் தெரிகிறது. இது பிழையா சரியா என்று என்னோடு திரைப்படம் பார்த்தவர்களுடன் விசாரித்து எழுதுகின்றேன். ரெட் வின்ரர் என்று நான் நினைத்ததற்கு காரணம், இந்தக் கதை வின்ரர் காலத்தில் நடைபெறுவதாய் எடுக்கப்பட்டதாகும்.
டீசே,
9/26/2005 02:15:00 PMமுக்கிய நீரோட்ட திரைப்படங்கள் வரை மொழி மாறுபடாதவரை திரை மொழியை மாற்றிவிட்டோம் என்று சொல்வது அந்த அளவுக்கு சரியானதாகப் படவில்லை. ஆனால் முயற்சிகளை பாராட்டத்தான் வேண்டும். இம்முயற்சிகளும் பொதுத் திரைப்படங்களும் கலக்கும் காலம் வரவேண்டும்.
கார்த்திக் நீங்கள் கூற விரும்புவது என்னவென்று குழப்பம் சற்று இருப்பினும், இவர்கள் திரைப்படத்துக்கான புது மொழியை உருவாக்கிவிட்டாரக்ள் என்று அவர்கள் கூற வரவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். உண்மையில் கூறுவதென்றால், எல்லாத் துறைகளிலும் இருப்பதுபோல இவ்விழாவிலும் மிக மோசமான படங்களைப் பார்த்திருந்தேன் :-(.
9/26/2005 03:08:00 PM//இம்முயற்சிகளும் பொதுத் திரைப்படங்களும் கலக்கும் காலம் வரவேண்டும்.//
அதுதான் என் விழைவும் :-).
குழி அப்பத்துக்கு மன்னிக்கவும். சரியாகவே வாசித்துள்ளீர்கள்.
9/26/2005 03:23:00 PMவின்டர்.
9/26/2005 05:37:00 PM'ர'வின் உச்சரிப்பு: மரம், கரம்
'ட'வின் உச்சரிப்பு: பட்டம், திட்டம், வின்டர்
சரிதானே?
பதிவுக்கு நன்றி டிசே! கறுப்பிக்கும், சத்தியாவுக்கும் வாழ்த்துக்கள். குடுத்து வைச்ச ஆட்களப்பா, தமிழ்க்குறும்படவிழாவெல்லாம் போய் வாறீங்கள். இங்க ஒன்டுமில்ல. வசந்தன் - சயந்தனைத்தான் பிடிக்கோணும், கூட்டுச் சேர்ந்து நடத்த! :O)
9/26/2005 07:44:00 PMஅனானிமஸ், அருவி, ஷ்ரேயா பின்னூட்டங்களுக்கு நன்றி.
9/27/2005 09:51:00 AM....
அனானிமஸ் (இந்த அனானிமஸை எனக்கு முன்னரே தெரியும் போல)! இது டொராண்டோ/ரொறொண்டோ சிக்கல் போல :-). சிலவேளைகளில் இங்கே உச்சரிப்பது வேறுவிதமாய் இருந்தாலும், ஈழத்தில் பாவித்ததை/ஈழ இலக்கியங்களில் வாசித்தை இல்குவில் மாற்றமுடியாது இருக்கின்றது. இப்போது பல தமிழக் நண்பர்களின் எழுத்துக்களை வாசித்து வாசித்து/உரையாடி அவர்களின் சொற்பிரயோகமும் இயல்பாய் வரத்தொடங்கிவிடுகின்றது, கார்த்திக்குக்கு ஈழ எழுத்து நடை கலந்து வருவது போல :-).
.....
ஷ்ரேயா, ஆஸியிலும் ஒரு குறும்படவிழா நடக்கபோவதாய் வாசித்திருந்தேன். இயலுமாயின் சென்று பார்த்து வந்து பதிவாய் எழுதவும்.
டீஜே,
9/27/2005 11:51:00 PMநீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'Rape' என்ற குறும்படமும் தமிழ் வலைப்பதிவரொருவரால் உருவாக்கப்பட்டது.(கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் தெரிந்தது.)
யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணிபுரியும் ஸ்ரீகாந்தலக்ஷ்மி, 'ரேப்' குறும்படத்தையும் இன்னும் சில குறும்படங்களையும் எடுத்திருக்கிறார். அவருடைய மற்றக்குறும்படங்கள் திரையிடப்பட்டனவா என்று தெரியவில்லை. திரு.ராஜா லண்டனில் இருந்து அக்குறும்படங்களைக் கொண்டுவந்திருக்கிறார். நம் நண்பர்களிடம், ஸ்ரீகாந்தலக்ஷ்மியின் குறும்படங்கொ ஒரு டிவிடியில் பதிந்து தர ஏற்பாடுகள் நடக்கின்றன. மேலதிக விவரங்களைப் பிறகு தருகிறேன்.
கடந்த சில மாதங்களாக லண்டனில் தங்கியிருக்கும் ஸ்ரீகாந்தலக்ஷ்மி, இவ்வாரக்கடைசியில் ஊர் திரும்புகிறார். அவரிடம், அவருடைய குறும்படங்களைப்பற்றியும் பேசுமாறு கேட்க இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்களும் அவரிடம் கேளுங்கள்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்துடன் ஊர் திரும்புகிறார் ஸ்ரீகாந்தலக்ஷ்மி.
அவருடைய வலைப்பதிவுகள்
பழையது:
http://karuththuunn.blogspot.com
புதியது:
http://cinthanai.weblogs.us
-மதி
மதி, தகவலுக்கு நன்றி.
9/28/2005 05:56:00 PMபடத்தில் அவரது பெயரைத் திரையில் பார்த்தவுடன் இவரும் வலைப்பதிவரா? என்று அருகிலிருந்த தோழியொருவர் கேட்டிருந்தார். எனக்கு இவரது வலைப்பதிவுகளை வாசித்திருந்த ஞாபகம் இருந்தாலும் last name குழப்பத்தில் அவராய் இருக்காது என்று கூறியிருந்தேன்.
.....
இந்தக் குறும்படத்தை ஏற்கனவே நான் ஏதோ ஒர் மாத ஒளிவீச்சில் பார்த்த ஞாபகம் உண்டு.
டி.சே - நீங்க சுடச்சுடத்தான் தந்திருக்கீங்க. (நெறைய படத்துலயும் சுடச் சுடச்தான் செத்துகிட்டு இருந்தாங்க :) ). என்னால இப்படி ஆறி ஓய்ஞ்சுதான் வரமுடியுது.
9/28/2005 09:50:00 PMவந்த எடத்துலயும் உங்ககிட்ட நாலு வார்த்தை பேச முடியல. காலம்-25 விழாவுக்கு வருவீங்கன்னு நெனக்கிறேன். அப்பவாவது பேசலாம்.
நான் வந்த கொஞ்ச நேரத்திலும் படங்களைச் சரிவரப் பார்க்க முடியவில்லை. பொதுவில் பல படங்கள் வலிந்து எடுக்கப்பட்டது போல இருக்கிறது. வெகுஜன சினிமாவில்தான் அப்படியென்றால் இங்குமா? உதாரணமாக சுமதி ரூபனின் கதையில் தற்பால் சமாச்சாரம் தேவையே இல்லை. அதைக் கழித்துவிட்டுப் பார்த்தலும் அதேதான். அப்படியிருக்க இதெல்லாம் Shock Value க்காகப் பொருத்தப்பட்டது போல இருக்கிறது. நுணுக்கமா எழுத நேரம் கிடைக்கவில்லை.
நீங்க என்னிக்குமே பிஸிதானா வெங்கட் சார்?
9/28/2005 10:05:00 PMஅனானிமஸ் - இல்லீங்க. பிஸி என்று சொல்வதற்கு வெட்டி என்றும் பொருள் கொள்ளலாம்.
9/29/2005 06:08:00 AMஉண்மையில் பிஸியாக இருப்பவர்கள் இதேமாதிரி நிகழ்ச்சிகளுக்கு வரவே மாட்டார்கள். அதேமாதிரி பிஸியாக இருப்பவர்கள் உண்மையான பெயர்களில் கருத்துகள் எழுதிக்கொண்டு அதற்கு முகமற்றவர்களிடமிருந்து வரும் குத்தல்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்கள்.
வெங்கட், ஒரு படைப்பாளிக்கு எதையும் பேசும் சுதந்திரம் உண்டென்பதால், ஒரு படைப்பை நிராகரிக்கப்போகின்றோம் என்றால் அதற்கான காரணங்களை முன்வைத்துத்தான் நிராகரிக்கலாம் என்று தோன்றுகின்றது. You 2வை பயர் (fire) படத்தினுடைய நீட்சியாகத்தான் நான் பார்த்தேன். பயரில் ஆண்களின் வன்முறைக்கு சமப்பாலுறவு ஒரு தீர்வாக அமையலாம் என்று முன் வைக்கப்படுகின்றது. You 2வில் அப்படியான் பெண் சம்பாலுறவில் கூட அடக்குமுறைகளும் சுரண்டல்களும் இருக்கின்றது; முழுமையான தீரிவாக அமையாது என்று கூற வருவது போன்று எனக்குப்பட்டது. மற்றப்படி எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தி பெருங்கதையாடல்களுக்குள் அடக்கிவிடமுடியாது தானே. சிறு கதையாடல்களும் கவனிக்கப்பட்டு விவாதிக்கபடவேண்டியவையே.
9/29/2005 08:40:00 AM.....
சுமதி ரூபனின் சில கதைகள் shock valueக்காய் எழுதப்பட்டிருகின்றது என்ற பார்வை அவரது சிறுகதைகளை வாசித்தபோது ஏற்பட்டிருக்கின்றது. அதை அவரது சிறுகதைகளை முன்வைத்துத்தான் பேசமுடியும்; இந்தச் சமயத்தில் அல்ல.
அடடா சுட்டுடுச்சா சார். கோச்சுக்கப்படாது. நீங்க பெரிய மனசுபண்ணி குத்துற முகமத்தவங்களுக்குப் பதிலு தந்திருக்கீங்க. அதுக்கு டாங்சு சொல்லிடுறோம். முகமத்தவுங்களுக்கும் ஒரு முறை இருக்கில்லியா
9/29/2005 09:28:00 AMவெங்கட்
10/01/2005 04:56:00 PMஇன்றுதான் தங்கள் பின்னூட்டம் பார்த்தேன். n|ஸாக் வால்யூ என்று எதைக்
குறிப்பிட்டிருக்கின்றீர்கள் என்பது புரியவில்லை. எங்கு சென்றாலும் ஒருவர் ஒருவரை அடக்குவது
இருகத்தான் செய்கின்றது. வெறுமனே ஆண் பெண்ணைக் காட்டி அரைத்தமாரை அரைக்க எனக்கு
விருப்பமில்லை. ஒருபால் உறவு எமது சமூகத்தில் இல்லாத ஒன்றல்ல. ரொறொண்டோவில் இடம்
பெறும் விழாவிற்குச் சென்றால் எத்தனை இந்தியர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்பது
தங்களுக்குப் புரிந்திருக்கும்.
புல சொலல விரும்பாததை ஒரு சிலராவது சொல்ல துணிய வேண்டும் அதைத்தான் நான் செய்தேன். இது
தங்களுக்கு ஸொக் வால்யுவாகத் தெரிவதுதான் எனக்கு ஸொக்காக இருக்கிறது.
எல்லா ஆண்களும் ராமர் என்றும் எல்லா பெண்களும் பத்தினிகள் என்னும் படம் பண்ணும் காலம்
போய் விட்டது. எமது சமூகத்தில் அன்றாடம்
நிகழும் பல சர்ச்சைக்குரிய விடையத்தைத் தான் நான் படமாக்க விரும்புகின்றேன். கண்ணை மூடிக்கொள்ள எனக்கு இஸ்டமில்லை. மாறக நான் எமது சமுதாயதிற்கு மட்டுமான இதை எடுக்கவில்லை. எனது
குறும்படம் கனேடியக்குறும்பட விழா ஒன்றிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நான்
பெருமைப்படுகின்றேன். தமிழர்கள் பார்த்து மகிழத்தான் பல இந்திய நாடகங்கள் இருக்கின்றனவே. அந்த உலகம் எனக்கு வேண்டாம்.
பதிவுக்கு நன்றி
9/25/2007 12:29:00 AMPost a Comment