கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு நாவல்: Memories of My Melancholy Whores

Tuesday, November 15, 2005

Memories of My Melancholy Whores by Gabriel Garcia Marquez



தொண்ணூறு வயது முதிய ஆணையும், பதின்நான்கு வயது நிரம்பிய பதின்மப் பெண்ணையும் முக்கியப் பாத்திரங்களாய் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரதி ஞாயிறு தோறும், உள்ளூர் பத்திரிக்கையில் பத்திகள எழுதுகின்ற, திருமணம் என்று எதுவும் இதுவரை செய்யாத ஆணுக்கு, தனது தொண்ணூறாவது பிறந்த தினத்தில், தன்னுடைய பிறந்ததின வெகுமதியாக கன்னி கழியாத ஒரு பெண்ணோடு பொழுதைக் கழிக்க விரும்புகின்றார் ('I wanted to give myself the gift of a night of wild love with an adolescent virgin'). இவர் திருமணஞ் செய்யாதவராக இருப்பினும், பெண்களோடு நிறையவும் சல்லாபித் திரிந்தவர். எனினும் காசு கொடுக்காமல் எந்தப் பெண்ணோடும் கட்டிலுக்கு போனதில்லை என்ற பெருமிதங்கொண்டவர் ('I have never gone to bed with woman I didn't pay'). தன்னை ஒரு அழகற்ற, கூச்சமுள்ள, காலத்தோடு ஒத்துப்போகாக ஆசாமி என்றும் சுயவிமரசனமும் செய்துகொள்கின்றார். இவர் அந்த ஊரிலுள்ள சிவப்பு விளக்குப் பகுதியிற்கு தனது இளமைக்காலத்தில் அடிக்கடி போய், 'வருடத்தில் அதிக நாள்கள் வந்த வாடிக்கையாளர்' என்ற 'பெருமைமிகு' பட்டத்தை இரண்டு முறை சூடியும் கொண்டவர்.

தனது தொண்ணூறாவது வயதுப் பரிசுக்காய், சிவப்பு விளக்கு பகுதியொன்றுக்குப் பொறுப்பான, இவரை நீண்டகாலமாய் அறிந்த ரோசாவுக்கு தொலைபேசி அழைத்து தனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறார். தன்னிடம் ஒரு பதின்நான்கு வயது கன்னி கழியாத பெண் இருக்கின்றார், ஆனால் அவரைத் தொழிலில் ஈடுபடுத்தினால், பொலிஸ் தன்னைச் சிறைக்குள் கொண்டுபோய் பூட்டிவிடும் என்று முதலில் மறுத்தாலும், தனது நீண்ட கால, அறிவுஜீவித் தோழருக்காய் ரோசா இறுதியில் சம்மதிக்கிறார்.

பதின்நான்கு வயது பெண்ணுக்கு, உடல் பாதிப்புக்குள்ளான தாயையும், தனக்குப் பின்னாலுள்ள சகோதரர்களையும் பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது. பகல் முழுதும் தையல் செய்து தெறிகள் பொருத்தும் தொழில் செய்தாலும் அதனால் வரும் வருமானம் போதாததால், தன் உடலை விற்றுப் பணம் சம்பாதிக்க முன்வருகின்றார். நமது காமம் கிளர்ந்த ஆண், இரவு சிவப்பு விளக்குப் பகுதிக்கு வருகின்றபோது, அந்தப் பெண் கட்டிலில் நிர்வாணமாய் படுத்திருந்தபடி கிட்டத்தட்ட உறக்க நிலைக்குப் போயிருப்பார். இவரும், அவளை மெல்லத் தடவியபடி பாட்டுக்கள் பாடியும் ச்ற்று நேரத்தில் உறங்கியும் போய்விடுவார். நமது தொண்ணூறு வயது ஆணுக்கு ஏதோ சில விடயங்கள் அந்தப் பெண்ணில் பிடித்துவிட தொடர்ந்து அந்த விடுதிக்குப்போக ஆரம்பிக்கின்றார். மேலும் அவரது பார்வையில் அந்தப்பெண், a tender young fighting bullயாய் தெரிகின்றார் ஏதோ ஒருபொழுதில் 'உண்மையான' காதல் அந்தப் பெண்ணில் வந்து நமது நாயகர் காதல் நதியில் நீராடத் தொடங்கி மகிழவும் செய்கின்றார் (ஒரு தலைக் காதல்?). பிறகு நமது நாயகர் தனது இறந்துபோன தாய் விட்டுப்போயிருந்த பெறுமதி மிக்க நகைகளை எல்லாம் அந்தப் பெண்ணுக்குச் சூடி உள்ளம் சிலிர்த்து தன்னை வாழ்வின் கணங்களில் உயிர்ப்பிக்கின்றார்.

இப்படி ஒரு பதின்மவயதுப் பெண்ணில் காதலில் விழுந்து தன்னைப் புதியதாய்ப் பார்க்கத் தொடங்குகின்றவருக்கு ஒரு துரதிஸ்டவசமன சம்பவம் நிகழ்கிறது. இவர் போய்க்கொண்டிருந்த சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு கொலை நடக்கிறது. அதன் பின் அந்த சிவப்பு விளக்குப் பகுதி மூடப்பட, பல நாள்களாய் இவரது 'காதல்' துணை பற்றி எதுவும் அறிய முடியாது அவதிப்படுகின்றார். அந்தச்சமயத்தில் அவர் ஆசையாய் அந்தப் பெண்ணுக்கு வாங்கி கொடுத்த சைக்கிள் ஒரு கோர விபத்தில் சிக்கியதைக் காண்கின்றார். தனது பிரியத்துக்குரிய பெண் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற பரிதவிப்புடன் தனது வயதையும் மறந்து வைத்தியசாலைக்கு ஓடுகின்றார். இறுதியில், பெண்ணின் காலின் பாதங்களை வைத்து அது தனது அந்தப் பெண் இல்லை என்று அடையாளங் காண்கின்றார். தொடர்து அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், இவர் அந்தப் பெண்ணை இரவு நேரங்களில் மட்டும் ஆடைகளின்றித்தான் கண்டவர். பகற்பொழுதில் ஆடைகளுடன் எப்படி இருப்பாள் என்பது இவருக்கும் ஒருபோதும் தெரிந்ததில்லை. எனவே தெருவில் கடந்துபோகின்ற பெண்களில் தனது 'காதலி' யாரென்பதை அடையாளங் காண முடியாமல் அவதிப்பட்டு பொழுதுகளைக் கழிக்கின்றார்.

இறுதியில் எல்லாம் வழமைக்கு வர, veteran brothel ரோசாவும் தனது தொழிலை மீளவும் செய்ய ஊருக்கு திரும்புகின்றார். தனது நீண்டகால வாடிக்கையாளருக்காய் அந்தப் பதின்ம்வயதுப் பெண்ணை எங்கையோ 'கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து' பெண்ணை இரவுக்குத் தயார்படுத்தி நமது நாயகரைத் தனது விடுதிக்கு அழைக்கின்றார். நாயகர் கட்டிலில் அந்தப் பெண்ணை நிர்வாணமாய்ப் பார்க்கின்ற போது, பெண்ணின் உடலில் மாற்றங்கள் தெரிந்து அந்தப் பெண், முன்பு கன்னி கழியாத நிலையில் இருந்த பெண் அல்ல என நினைக்கின்றார். சிவப்பு விளக்குப் பகுதியில் நடந்த கொலையை மூடிமறைக்க, ரோசா இந்தப்பெண்ணின் கன்னிமையை யாரோ ஒரு பெரும் வாடிக்கையாளருக்கு விற்றுவிட்டார் என்று குற்றஞ்சாட்டி, 'whore' என்று திட்டி அந்த அறையிலுள்ள பொருட்களை உடைத்துவிட்டு கோபத்தோடு விடுதியை விட்டு வெளியேறுகின்றார். தனது உண்மையான காதலை கதைசொல்லி தொண்ணூறாவது வயதிலாவது கண்டுபிடித்தாரா என்பது கதையில் நீள்கிறது. கதை இன்னும் முடியவில்லை;மேலும் தொடர்கின்றது.

மார்க்வெஸ்ஸின் நாவல் என்று கூறப்பட்டாலும் இது 115 பக்கங்களை மட்டுமே கொண்டது. அழகான வசனங்களால எப்படிக் கதையைக் கோர்த்துக்கொண்டு போவது என்ற வித்தை மார்க்வெஸ்ஸிற்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கின்றது. நாவலில் முதலாவது வரியே, இப்படித்தான் தொடங்குகிறது, 'The year I turned ninety, I wanted to give myself the gift of a night of wild love with an adolescent of virgin'. தங்கு தடையில்லாத தொடர் வாசிப்பில் இதை இலகுவாய் ஒருவரால் வாசிக்க முடியும். மார்க்வெஸ் வாக்கியங்களில் செய்யும் நடனத்தின் மின்னல் கீற்றுக்கள் எப்போது வாசித்தாலும் புதுப்புது அர்த்தங்களைத் தரக்கூடியன. ஒரு இடத்தில் கதை சொல்லி தனக்கு அய்ம்பது வயதில் மாரடைப்பு வந்ததன் பிற்பாடு, தனக்கு ஒவ்வொரு வருடமும் கழியும்போது, வருடங்களில் அல்ல தசாப்தங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொள்வது, ஒரு சின்ன உதாரணம்.

இந்த நாவலில் கதைசொல்லிக்கு பெயர் என்று ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. அதுபோல அந்தப்பதின்ம வயதுப்பெண்ணுடைய உண்மையான பெயரும் வாசிப்பவருக்குக் கூறப்பட்டிருக்காது. ஒரு நாட்டுப்புறப்பாடலில் வரும் பெண் பாத்திரமான Damania என்ற பெயரைச்சூட்டி கதைசொல்லி அழைக்கின்றாரே தவிர அந்தப் பெண்ணின் உண்மையான பெயரை அறிய விரும்பாதவராகவே இருக்கின்றார்.

நாவலில் பதின்மவயதுப் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றாள் என்று குறிப்பிடப்படுகின்றதே தவிர, அவளைப் போன்ற பெண்கள் இரைகளாக்கப்படுவதன் சமூக, அரசியல் பின்தளங்களை அடையாளங்காண மார்க்குவெஸ் மறுத்துவிடுகின்றார். நாவலில் வாசிப்பில் ஆழ்ந்து போகாமல் சற்று விலகி நின்று பார்த்தால், கதைசொல்லி sexual predatorsல் ஒருவராகத்தான் இருக்கின்றார் என்பதை இலகுவாய அடையாளம் கண்டுகொள்ளலாம். கதை சொல்லி தனது சார்பில் நின்று ஒரு கதையைக் கூறியிருக்கின்றார் என்றால், பதின்மவயதுப் பெண்ணுக்கோ, veteran brothel ரோசாவுக்கோ தங்கள் கதைகளைச் சொல்வதற்கான வெளிகள் இருக்கின்றது என்பதை வாசிக்கும் நாம் மறுத்துவிடமுடியாது. அவர்களின் வெளியில் நமது கதை சொல்லியின் பாத்திரம் இந்த நாவலில் கூறப்பட்டதைவிட வேறொரு தளத்துக்கு நம்மை வழிநடத்திச் செல்லக்கூடியதான வாசிப்பைத் தரவும் கூடும். மேலும் தொண்ணூறு வயதுப் பாத்திரம் என்பதுவும் ஒரு படிமமாக சிலவேளைகளில் எனக்குத் தோன்றுகின்றது. ஆண்களிடம், அவர்கள் இறக்கும்வரை காமம் நதியாய் ஒடிக்கொண்டிருக்கின்றதென்பதையும், அந்த நதி நிற்காமல் ஒடுவதற்காய் நியாய அநியாயங்களையோ, பிறரைக் காயப்படுத்துவது குறித்தோ அக்கறைப்படாமல் நகரவும் கூடியவர்கள் ஆண்கள் போலவும், இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது தோன்றுகின்றது.

13 comments:

Anonymous said...

பதிந்தது:பாலா சுப்ரா

Thx for the succinct intro

15.11.2005

11/15/2005 11:56:00 AM
Anonymous said...

பதிந்தது:சன்னாசி

சமீபத்தில்தான் இதை நானும் படித்தேன் - நானும் எழுதவேண்டுமென்றிருந்தேன்; நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறீர்கள். இதேபோன்றதொரு கனவுபூர்வமான உறவுகள், யசுநாரி கவாபத்தாவின் House of sleeping beauties மற்றும் ஜே.எம்.குட்ஸீயின் Waiting for the barbariansலும் வரும். சமூக, அரசியல் தளங்கள் என்பவை இருந்தே ஆகவேண்டுமென்பதுமில்லை என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. மேலும், மார்க்வெஸ்ஸின் பெரும்பாலான எழுத்துக்களில் காமம் என்பது ஒரு அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமே தவிர, அதற்குத் தேவைக்கதிகமான மரியாதையோ, அது "கிடைக்காததால் வரும் அத்தியாவசியத்தன்மை மீதான போலியான வெறுப்போ" இருந்ததில்லை என்று நினைக்கிறேன். Innocent Erendira and her wicked grandmother, ஒரு நூற்றாண்டு காலத் தனிமையில் அரேலியானோவுக்கும் அமராந்த்தாவுக்குமிடையில், அவரது பல்வேறு சிறுகதைகளில், பேட்டிகளில் என்று அது ஒரு இயக்கு சக்தியாகவே எழுதப்படுகிறது.

//ஆண்களிடம், அவர்கள் இறக்கும்வரை காமம் நதியாய் ஒடிக்கொண்டிருக்கின்றதென்பதையும், அந்த நதி நிற்காமல் ஒடுவதற்காய் நியாய அநியாயங்களையோ, பிறரைக் காயப்படுத்துவது குறித்தோ அக்கறைப்படாமல் நகரவும் கூடியவர்கள் ஆண்கள் போலவும், இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது தோன்றுகின்றது.//
இதை யோசித்துப் பார்க்கமுடியாத/உணர இயலாதவொரு அபத்த நிலைமையில் இருக்கும் பால்பேதமற்ற வயோதிகம் அனைத்துக் கலாச்சாரங்களிலும் உள்ளது என்றுதான் நினைக்கிறேன்; அதை நியாய அநியாயங்களுக்குள் அடக்க முயல்வது வன்முறை என்னும் அளவுகோலைக் கொண்டு நிகழ்வுகளை அளக்க முயல்வதால் ஒருவேளை இருக்கலாம். லோலித்தா போன்ற நாவல்களுக்கும் இதே போலான விமர்சனங்கள் உண்டு. The Barbarian invasions படத்தில் வரும் வயோதிகர் பாத்திரம்தான் இதைப் படித்ததும் என் நினைவுக்கு வந்தது.

வெகு விரைவில் படித்து முடித்துவிடக்கூடிய புத்தகமும் கூட - அறிமுகத்துக்கு நன்றி.

15.11.2005

11/15/2005 12:12:00 PM
-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

டிஜே, அடங்கின கதைச்சுருக்கம். இந்த பதின்மவயதினரிலே ஈர்க்கப்படுவதை கம்பிவித்தையிலே நழுவாமற் சொல்வதிலே இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் வெற்றி காண்கின்றனர் (அமெரிக்கர் அல்லாத நபுகோவின் லோலிட்டா நான் கதையாக வாசித்ததில்லை) என்றே சொல்லவேண்டும். அதையொட்டி உன்னத சங்கீதம் இசைக்கவிரும்புகின்றவர்கள்தான் பிசகிவிடுகின்றனர் :-(

11/15/2005 12:17:00 PM
இளங்கோ-டிசே said...

சன்னாசி,
நீங்கள் குறிப்பிட்ட, House of sleeping beauties பற்றியும் இந்த அறிமுகத்தில் எழுதி, பிறகு எடிட் செய்திருந்தேன். நான் அந்த நாவலை வாசிக்கவில்லையாயினும் கேள்விப்பட்டிருக்கின்றேன். தூங்குகின்ற அழகிகளுடன் ஒரு கட்டிலில் அவர்களைத் தொடாமலோ, உறக்கத்தை கலைக்காமலோ உறங்கிவிட்டு அவர்கள் எழும்பமுன்னர் அவ்விடத்தை நகரவேண்டும் என்றமாதிரியாய் கதை போகும் என்று தமிழ் மொழிபெயர்ப்பிற்கான விமர்சனம் ஒன்றில் வாசித்திருந்தேன். இந்த நாவலை வாசிக்கும்போது அதன் சாயல் இருப்பது போலத் தோன்றியது.

// மார்க்வெஸ்ஸின் பெரும்பாலான எழுத்துக்களில் காமம் என்பது ஒரு அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமே தவிர, அதற்குத் தேவைக்கதிகமான மரியாதையோ, அது "கிடைக்காததால் வரும் அத்தியாவசியத்தன்மை மீதான போலியான வெறுப்போ" இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.//
மார்க்ஸ்வெஸின் எழுத்துக்கள் குறையத்தான் வாசித்திருக்கின்றேன், என்றாலும் நீங்கள் கூறியதை நானும் முற்று முழுதாக ஒப்புக்கொளின்றேன். இந்த நாவலில் கூட பெண்ணுடல் குறித்து விபரிப்பதற்கான வெளி இருந்தாலும் அளவோடு எதையும் துருத்தாமல் மார்க்வெஸ் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதைத்தான் நானும் வாசித்தளவில் விளங்கி வைத்திருக்கின்றேன்..

//இதை யோசித்துப் பார்க்கமுடியாத/உணர இயலாதவொரு அபத்த நிலைமையில் இருக்கும் பால்பேதமற்ற வயோதிகம் அனைத்துக் கலாச்சாரங்களிலும் உள்ளது என்றுதான் நினைக்கிறேன்; அதை நியாய அநியாயங்களுக்குள் அடக்க முயல்வது வன்முறை என்னும் அளவுகோலைக் கொண்டு நிகழ்வுகளை அளக்க முயல்வதால் ஒருவேளை இருக்கலாம்.//
இதையும் ஏறுக்கொள்கின்றேன். எல்லாவறையும் ஒரு நாவலில் படைப்பாளி அடைக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பது கூட ஒருவகை வாசிப்புவன்முறை என்றாலும், அப்படியும் ஒரு வாசகர் யோசிக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இதைக் குறிப்பிட விளைந்தேன்.

11/15/2005 12:38:00 PM
இளங்கோ-டிசே said...

அடடா பெயரிலி முந்திவிட்டார்.
//அதையொட்டி உன்னத சங்கீதம் இசைக்கவிரும்புகின்றவர்கள்தான் பிசகிவிடுகின்றனர் :-( //
அதேதான் பெயரிலி.
....
Balaa, Sannaasi, Peyarili: Thankx for your comments.

11/15/2005 12:42:00 PM
Anonymous said...

லோலித்தாவின் மைய இழை எனப் பொதுவாகக் கூறப்படுவது, young America debauching old Europe என்பதே. கதையின் நாயகன் ஹம்பர்ட் ஹம்பர்ட், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவன், லோலித்தா எனப்படும் டோலோரஸ் ஹேஸ் என்னும் கதாநாயகி ஒரு அமெரிக்கச் சிறுமி. பாலியல் என்பது ஒரு உருவகமாகத்தான் பெரும்பாலும் பட்டது நான் படித்தவரையில்; அது பின்பு வேறு விதமாக விமர்சிக்கப்பட்டதும், நபக்கவ்வை ப்ளேபாய் பத்திரிகை பேட்டி எடுத்ததும் வேறு விஷயங்கள். குடியேறியாக ரஷ்யாவிலிருந்து வந்த நபக்கவின் ஆங்கிலத்தின் அபாரமான வீச்சும் பாடற்தன்மையும் பல அசல் ஆங்கில எழுத்தாளர்களிடமே காணக்கிடைக்காத ஒன்று - குறிப்பாக லோலித்தா, Ada: A family chronicle போன்ற நாவல்களில். நபக்கவின் Despairஐ, ஃபாஸ்பைண்டர் ஒரு அற்புதமாக படமாக எடுத்திருப்பார்.

11/15/2005 02:17:00 PM
-/பெயரிலி. said...

சன்னாசி, இது குறித்து அண்மையிலே NPR இலே நபுகேவ் Wellesley College இலே இருந்தபோது, அவரோடு பழகிய ஒருவர் செவ்வி கொடுத்தார். நீங்கள் சொல்வதுபோலவே, லொலிட்டாவுக்கு நேரடியான அர்த்தமிருக்காமல், அதற்கப்பாலே உருவக/குறியீட்டு அர்த்தத்தினைச் சுட்டிச் சொன்னார். இணைப்பு கிடைத்தால், தருகிறேன்

11/15/2005 03:18:00 PM
Thangamani said...

அறிமுகத்துக்கு நன்றி ப்ரோ!

11/15/2005 07:19:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

ப்ரோ நான் படிக்கவேண்டிய சுமையைக் கூட்டிக்கொண்டே போவதற்காக உம்மை நரகத்திற்குப் போக வாழ்த்துகிறேன்.

உமக்குப் புத்தக விமர்சனம் நன்றாக வருகிறது கவிதையைப் போலவே

11/15/2005 08:27:00 PM
Jayaprakash Sampath said...

டி.சே. : அருமையான பதிவு. இப்படி முக்கியமான நூல்கள் அனைத்துக்கு, தமிழிலே ஒரு பதிவு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்ற வைத்து விட்டது உங்கள் பதிவு

சன்னாசி : நீங்கள் சொல்கிற நாவல் எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, ஆங்கில வாத்தியிடம் இருந்த 'லொலீட்டாவை' சுட்டுக் கொண்டு போய் படித்து பாதியிலேயே போட்டு விட்டது ஞாபகம் இருக்கிறது. ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிற ஆசாமி, சின்ன வயசில், அன்னாபெல் என்ற சிறுமியிடம் கொண்டிருந்த மோகம், பின்னர் திருமணம், மனைவிக்கு வேறொரு ஆளுடன் 'தொடுப்பு', விவாகரத்து, பின் பேராசிரியராக அமெரிக்காவுக்குப் போகும் போது, வீட்டு ஓனரின் பதினாலு வயசுப் பெண்ணிடம் ஏற்படும் lust, அவளை மடக்க முயற்சி செய்வது என்று வந்த கனமாகப் போய்க் கொண்டிருந்த போது சட்டென்று நிறுத்தி விட்டு, கையில் கிடைத்த ஷெல்டன் நாவலை ( dooms day conspiracy) வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த ஆள் ஏதோ வினோதமான ஆராய்ய்சி எல்லாம் செய்வான் என்று நினைப்பு ( பூச்சி சேகரித்தல்? ). கொஞ்ச நாள் முன்பு 'ஒரு பொடிச்சி' யின் , ஒரு பதிவிலே சனியின் , சாரி, சாநியின் உன்னத சங்கீதம் பற்றி பேச்சு வந்த போது, மீண்டும் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எழுநூறு ரூபாய் அசோகமித்திரன் குறுக்கே வந்துவிட்டார். கலாசார காவலர்கள், தமிழ்நாட்டின் கற்புக்கு பொறுப்பேற்று குண்டாந்தடியுடன், சுற்றிக் கொண்டிருக்கும் போது , நாம வேற ஏன் பெடோ·பைல் நாவலை எல்லாம் படிச்சு, நம்ம பங்குக்கு தமிழ்நாட்டை 'கெடுக்கணுமா' என்று என்று தோன்றுகிறது... லொலீட்டா வை பத்தி நீங்க ஏதாச்சும் விரிவா எழுதியிருக்கீங்களா? உங்க சிபாரிசு என்ன? தமிழ்நாட்டை ரேப் பண்ணலாமா? :-)

icarus1972us@yahoo.com

11/15/2005 11:37:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

Dear DJ

I was expecting a review in blog about this fiction. Thax for the quick review.

- Suresh Kannan

11/16/2005 02:31:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
......
லோலிதாவையும், நாவலாய் வாசிக்காது (பெயரிலியைப் போல) திரைப்படமாகவே பார்த்திருக்கின்றேன். சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீததற்கான விமர்சனத்துக்கு யமுனா இராஜேந்திரன் லோலிதாவை உதாரணம் காட்டி உயிர்நிழலில் எழுதியது நினைவிலுண்டு.

11/16/2005 09:44:00 AM