(1)
ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமியின் முதலாவது நாவல். புளியமரமே முக்கிய பாத்திரமாய் நாவலின் மையவோட்டம் எங்கும் தன் வேர்களையும் கிளைகளையும் பரப்பியபடி நாவல் முழுதும் நகர்கின்றது. எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், குதூகலங்களையும், வக்கிரகங்களையும்- காலத்தால் ஒரு ஊரில் ஏற்படும் மாற்றத்தை- பேசாய்ச் சாட்சியாய் பார்த்தபடி இருக்கிறது, புளியமரம். நாவலின் முடிவில் புளியமரம் அழிக்கப்பட்டாலும், தொடர்ந்தும் அந்தச் சந்தி புளியமர ஜங்ஷன் என்றே அழைக்கப்படுவதாய் குறிப்பிடப்படுவது, மனிதனைப்போலல்லாது புளியமரத்துக்கு என்றும் அழிவில்லை என்பதாய்த்தான் வாசிப்பவருக்குத் தோன்றும். அனேக நவீன கதைகளுக்குள் உட்பொதிந்து இருக்கும் - மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்வது- என்ற வினாவைத்தான் கதைமுழுதும் பாத்திரங்களினூடாக சு.ரா கேட்டபடி இருக்கின்றார். ஒரு கதைசொல்லியாக தன்னையும் சு.ரா நாவலில் இணைத்துக்கொண்டாலும், பிற பாத்திரங்களில் தன் ஆளுமையைக்காட்டாது அவர்களை தம் இயல்பிலேயே விடுகின்றார். அனேக பாத்திரங்களை பலங்களுடன் காட்டுவதற்கு முயற்சிப்பதற்குப் பதில் பலவீனங்களுடன் காட்டத்தான் சு.ரா அதிகநேரம் செலவழிக்கின்றார். அதற்கு அவரது எள்ளல் நடை மிகவும் துணைபுரிகின்றது.

(2)
சு.ராவின் புளியமரத்தின்கதையைப் போல, ஈழத்தில் எங்கள் ஊரிலும் ஒரு பழமைவாய்ந்த புளியமரம் இருந்தது. நாவலில் உள்ளதுபோல பல சம்பவங்கள் நான் அறிந்தும் அறியாமலும் அதைச்சுற்றியும் நிகழ்ந்திருக்கின்றது. நாவலிலுள்ள சிறுவர்களைப் போல, நாங்களும் கிளித்தட்டு, கிளிப்பொந்து போன்ற விளையாட்டுக்களை புளியமரத்தடியில் விளையாடியிருக்கின்றோம். பேய்கள், பிசாசுகள் எல்லாம் இரவில் நடமாடச்செய்யும் என்று இரவு நேரங்களில் புளியமரத்தடியை பயந்தபடி பலதடவைகள் ஓடிக்கடந்துமிருக்கின்றேன். பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் எத்தனையோ ஆண்டுகள் நிரம்பிய புளியமரத்தை வெட்டத்தொடங்கியபோது- ஊரிலிருந்தவர்களின் எதிர்ப்பில்- சில கிளைகள் தறிப்பதுடன் அழிவுவேலை நிறுத்தப்பட்டது. நாவலில் தாமோதர ஆசான் அப்படி ஒரு தடவை புளியமரம் தறிப்பதைக் காப்பாற்றுவதாய் ஒரு சம்பவம் சித்தரிக்கப்படும். எங்களூர்ப் புளியமரத்தடியிலும் (அருகில் வைரவர் கோயில் இருந்தது) கூட்டணியினரின், கொம்யூனிஸ்ட் கட்சியினரின் அரசியற்கூட்டங்களும், கலைப்பெருமனறத்தின் விழாக்களும் களைகட்டியிருக்கின்றன என்றும் சில வருடங்களுக்கு முன் கேள்விப்படவும் செய்திருந்தேன். பிறகொருபொழுதில், அருகிலிருந்த பாடசாலைக் கட்டடங்கள் எலலாம் இராணுவத்தின் குண்டுவீச்சால் சிதைந்துபோனபோதும் புளியமரம் நெஞ்சு நிமிர்த்தி நின்றதைப் பார்த்துச் சிலிர்த்துமிருக்கின்றேன். ஒரு புளியமரத்தின் கதையைப்போல ஒரு விரிவான தளத்தில் கதையை எங்களூர்ப் புளியமரம் தன்னகத்தில் வைத்திருக்காவிட்டாலும், அருகிலிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடியில் நடக்கும் உயர்தர மாணவர்களின் காதற்கதைகளையாவது தன் கிளைகளால் பார்த்து இரசித்து என்னைப் போன்றவர்களுக்கு பிற்கொருபொழுதில் கூறியிருக்க புளியமரம் விரும்பியிருக்கவும் கூடும். ஆனால் போர் அந்தச் சந்தர்ப்பதை என்னைப் போன்றவர்களுக்கு வழங்கிவிட விரும்பவில்லைப் போலும்.
நாவலின் முடிவில் வரும் பட்டுப்போன புளியமரத்தைப்போல, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு (2004ல்), -ஊருக்குத் தொலைவில், மாடியொன்றில் நின்று பார்த்தபோது- எங்களூர்ப் புளியமரமும் பட்டுப் பாழாகியிருந்தது தெரிந்தது. என் ஊர்ச்சனம் இல்லா ஊரில் நானும் உயிர்த்திருக்க மாட்டேன் என்ற வைராக்கியமோ அல்லது குண்டு ஏதேனும் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொண்டதோ தெரியவில்லை. ஒரு பெரும் விருட்சமாய் நினைவில் தங்கியிருந்த புளியமரம், அகண்ட அடிப்பாகம் மட்டும் உயிர்ப்பிழந்து எஞ்சியிருததை நிஜத்தில் கண்டபோது மனது அந்தப்பொழுதில் கனக்கவும் செய்திருந்தது.
(3)
இந்நாவல் மிக மெதுவாகவே நகர்கின்றது (எழுதப்பட்ட ஆண்டு 1966 என்று கணக்கிலெடுத்து வாசித்தால் வேறுவிதமாய்த் தோன்றவும் கூடும்). ஜே ஜே சில குறிப்புக்கள் வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வின் எந்தத்துளியையும் இந்த நாவல் தராதது என்னளவில் மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அப்படியான ஒரு நிலைக்கு வருவதற்கு, ஜேஜே சிலகுறிப்புக்கள் வாசித்தபோது, சு.ரா குறித்து எந்த விம்பமும் இல்லாததும், எனது வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததும் ஒரு காரணமாகவும் கூடும். ஒரு புளியமரத்தின் கதை ஒருமுறை வாசிக்கக்கூடிய நாவல் என்று மட்டுமே கூறமுடியும். இந்நாவலை நோபல் பரிசு பெறத்தகுதியான தமிழ் நாவல் என்று யாரோ ஒரு விமர்சகர் கூறியதாய் பின்னட்டையில் எழுதியிருப்பது சற்று அதிகப்படியானதாகும். சு.ராவின் சிறந்த நாவல் என்று நான் நினைப்பது ஜேஜே சில குறிப்புக்களே தவிர இந்த நாவல் அல்ல.
'திருத்தமாக வேலை செய்யும் சில தோட்டிகளும் இருக்கத்தான் இருக்கிறார்கள்' (ப 76), 'தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி ...'(ப 66) , 'ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது புளியமரம்....இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்கு கற்பும், மனிதனுக்குக் கொள்கைளும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு'(..) போன்ற வாக்கிய அமைப்புக்களில் (உற்றுவாசித்தால் நிறையக் கிடைக்கலாம்) சு.ரா இன்னும் சற்றுக் கவனமாய் இருந்திருக்கலாம் போலத்தோன்றுகின்றது; ஆகக்குறைந்தது நான் வாசித்த ஜந்தாவது பதிப்பிலாவது.
7 comments:
//'திருத்தமாக வேலை செய்யும் சில தோட்டிகளும் இருக்கத்தான் இருக்கிறார்கள்' (ப 76), 'தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி ...'(ப 66) , //
1/10/2006 03:31:00 AMசு.ரா.வின் நாவல் பலவற்றுக்குள் அவரது மேல் சாதிய ஐதீகங்கள் நிறைந்திருக்கு.அதை இங்ஙனம் கட்டுடைத்து ஒதுக்கி பலவற்றை உதைத்துத் தள்ளி விடவேண்டும்.அங்ஙனம் செய்யும் பட்சத்தில் ஜே:ஜே:சில குறிப்புகள்கூட மிஞ்சாது.எனினும் இது அவசியம்!அவருக்குள் ஒழிந்திருக்கும் அதிகாரத்துவத்தை அம்பலப்படுத்தாமல் விட்டால் இலக்கியத்தின் இருப்பே கேவலமாகும்.
உங்கள் வாசிப்பு நேர்த்தியானது.
சிறிரங்கன், பின்னூட்டத்துக்கு நன்றி.
1/10/2006 10:06:00 AM.....
தகழியின், தோட்டியின் மகனை, தனது இருபதுகளில் மொழிபெயர்த்தவர் இவை குறித்து அவதானமாய் இல்லாது இருந்தது எனக்கும் வியப்பாய்த்தான் இருந்தது. நீங்கள் குறிப்பிடுகின்றமாதிரி, சிலவேளைகளில் ஜேஜே சில குறிப்புக்களை இன்னொருமுறை இப்போது வாசித்துப் பார்த்தால் வேறொரு வாசிப்பைத் தரவும் கூடும்.
.....
ஆனால் யதார்த்தத்தில் சு.ரா சாதி அபிமானம் அதிகம் இல்லாது வாழ்ந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். வரலாற்றையெல்லாம் தங்கள் அதிகார ஊடகங்களில் மாற்றி எழுதிக்கொண்டிருக்கும் (உ+ம் வாஸந்தி தீராநதியில், நிறப்பிரிகைக் குழுவினர் வெ.சாமிநாதனின் சாதிவெறிக்கு இந்தியா ரூடேக்கு எதிர்ப்புக் காட்டியதை பிழைதான் என்று தங்களுக்குச் சாதகமாய்த் திரித்துக்கொண்டிருப்பது) பலரைப் பார்க்கும்போது சு.ராவின் மீது மதிப்புத்தான் வருகின்றது. சு.ராவை மட்டந்தட்டி தன்னை உயர்ந்தபீடத்தில் அமர்ந்த விரும்பி ஜெயமோகன் எழுதிய 40 பக்க கட்டுரையிலும், சு.ரா தலித்துக்களின் வளர்ச்சிகள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் மிகுந்த பரிவு கொண்டிருந்தார் என்று சில உண்மைகளையும் குறிப்பிடச் செய்கின்றார்.
டிசே,
1/10/2006 11:31:00 AMஎனக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தது.
//அருகிலிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடியில் நடக்கும் உயர்தர மாணவர்களின் காதற்கதைகளையாவது தன் கிளைகளால் பார்த்து இரசித்து என்னைப் போன்றவர்களுக்கு பிற்கொருபொழுதில் கூறியிருக்க புளியமரம் விரும்பியிருக்கவும் கூடும்.//
//என் ஊர்ச்சனம் இல்லா ஊரில் நானும் உயிர்த்திருக்க மாட்டேன் என்ற வைராக்கியமோ அல்லது குண்டு ஏதேனும் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொண்டதோ தெரியவில்லை.//
ஹ்ம்ம்ம்...
நீங்கள் கடைசியில் குறிப்பிட்டச் சில வரிகள் சுவையான உணவில் கல் நெருடியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். 'ஜேஜே' வாங்கிவைத்து ரொம்பநாளாகி விட்டது - படிக்கவேண்டும் என்ற தூண்டுதல் இப்போது வந்திருக்கிறது.
கண்ணன், எனக்குக் கூட அண்மையில் ஒருவர் ஜேஜே சிலகுறிப்புக்கள் வாசித்தேன் என்று கூறத்தான், சு.ராவின் ஒரு நாவலை வாசித்துப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் வந்தது. ஒரு நாளிலேயே வாசித்துமுடிக்க, 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' சரிப்படாது என்று (600 பக்கங்களுக்கு மேலே அது) எண்ணித்தான், ஒரு புளியமரத்தின் கதையை வாசித்துப் பார்த்தேன்.
1/12/2006 05:20:00 PM....
பயணம் இனிதாய்க் கழிந்து ஊர் போய்ச்சேர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நேரங்கிடைக்கும்போது,எனது மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சலை அனுப்ப முடியுமா?
//தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி ...'(ப 66) ,//
1/12/2006 05:32:00 PMநாவல் எழுதும்போதாவது (வெளியீடாகப் போவுதுன்னாவது) இதைத் தவிர்த்திருக்கலாம் மனுசர்.
இப்படியெல்லாம் கண்ட புளியமரத்தையும் "ஒரு புளியமராத்தோட" கம்பைர் பண்ணால் அப்புறம் அதுதான் நாவலோட வெற்றின்னு ஒரே போடா சாத்திடுவோம் ஆமாம் சாக்கிரதை ;-)
This comment has nothing to do with u r "புளியமரங்களின் கதை" . this is just to say thanks for visiting my blog and writting comments.
1/18/2006 04:24:00 PM//'திருத்தமாக வேலை செய்யும் சில தோட்டிகளும் இருக்கத்தான் இருக்கிறார்கள்' (ப 76), 'தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி ...'(ப 66) , 'ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது புளியமரம்....இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்கு கற்பும், மனிதனுக்குக் கொள்கைளும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு'//
2/02/2006 10:41:00 AMஓகோ சாதி இய்ய அடையாளம் இல்லாமல் வாழ்ந்தால்... என்னா வேணும்னாலும் எழுதலாமா?., வாழ்க்கை எத்தனை பேருக்குத் தெரியப் போகிறது?., எழுத்து எத்தனை பேரை அடையும்?.
Post a Comment