நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

வளாக நாட்கள்

Thursday, February 02, 2006

இங்கே ring ceremony என்று ஒரு கொண்டாட்டம் பொறியியல் படித்து முடிப்பவர்களுக்கு வளாகங்களில் நடக்கும். கனடாவுக்கு மட்டுமே உரித்தான, தனித்துவமான விழா அது. அந்த நிகழ்வில், தவறுதலாய்க் கட்டி நொறுங்கிய ஒரு பாலத்தின் இரும்பிலிருந்து, மோதிரம் செய்து தருவார்கள். நீங்கள் அதை உங்களது சின்னவிரலில் அணிந்துகொள்ளலாம். இந்த நிகழ்வுக்காய் ரூட்யாட் கிப்ளிங்தான் (Rudyard Kipling) ஒரு பாடல் எழுதிக்கொடுத்திருக்கின்றார். விழா ஒரு மூடிய நிகழ்வாய், பொறியியல் படிக்கும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு நிகழும். நான்காம் வருடம் வரமுன்னர், மற்றப் பொறியியல் மாணவர்களுக்கும் விழாவைப் பார்க்க அனுமதி இருப்பதில்லை.

இந்த நிகழ்வு எங்களுக்கு நடந்தபோது சரியான உற்சாகத்தோடு போனேன். பின்னே, இப்படி ஒளிப்பு மறைப்பாய் இருந்தால், அங்கே கனக்க சுவாரசியமான விடயங்கள் இருக்கும் என்றுதானே எவரும் நினைப்பார்கள். ஆனால் அங்கே போனால் அலுப்பூட்டும் பேச்சுக்களும், ஒரு நீண்ட சங்கிலியை எல்லோரின் கையாலும் பிடிக்கச் சொல்லிவிட்டு, ஒரு உறுதிமொழியையும் எடுக்கவைத்திருந்தனர் (நீங்கள் படித்ததை எந்தப்பொழுதிலும் சமூகத்துக்குத் தவறாய்ப் பிரயோகிக்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் அந்த உறுதிமொழியில் அதிகம் தெரிந்தது). அந்த விழாவில் ஒருவர் பேசும்போது, தான் ஜப்பானில் வேலை செய்துகொண்டிருந்தபோது, நண்பர்கள் எவரும் இல்லையென்று சலித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு பெண் தனது சின்னவிரலில் இருந்த மோதிரத்தைக் கண்டுவிட்டு, are you from Canada என்று கேட்டு தன்பொழுதுகளைப் பிறகு 'இனிமையாக்கினார்' என்று கூறியதைவிட வேறெதுவும் நான் அங்கு சுவாரசியமாய்க் கேட்கவில்லை.

ஒரு திருமணவிழாவும், அங்கே மோதிரம் மாற்றும் நிகழ்வும்தான் அலுப்பான விடயம் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அதையும் விட இந்த் ring ceremony மிகவும் அலுப்பூட்டுவதாய் இருந்தது. இந்த மோதிரத்தைப் பெற்றபின், சென்றவருடம் கோப்பிக்கடையில் சில நண்பர்களைச் சந்தித்தபோது சுவாரசியமான தகவல்கள் சில கிடைத்தன. யார் யாரெல்லாம் மோதிரம் போட்டுக்கொண்டு திரிகிறார்கள் என்று பார்த்தபோது, ஒரு நண்பன் தான் போடுவதில்லை என்றான். ஏன் என்று கேட்டபோது, ரெஸ்ரோரண்டில் பாத்திரங்களை உரஞ்சிக்கழுவ இந்த இழவு பிடித்த மோதிரம் இடைஞ்சலாயிருக்கிறது என்றான். இன்னொருவன் தான் படிப்பதற்காய் பெற்ற லோனைக் கட்டும்வரை இதைப் போட்டுக்கொண்டு திரியப்போகின்றேன் என்றான் (மோதிரத்தை பார்த்து பார்த்து, கட்டிமுடிக்கவேண்டிய லோனை அடிக்கடி நினைவுபடுத்துவானாம்). எங்கேயாவது வேறுநாடுகளுக்குப் போனால் அணிந்துகொண்டு திரியலாம் என்று நினைக்கின்றேன் என்றேன் நான். ஏன் என்று கேட்டபோது, இல்லை இங்கைதானே எல்லோருக்கும் எங்களின் வண்டவாளம் தெரியும். வேறு நாட்டில் என்றால், சிலவேளை அந்த ஜப்பான் ஆசாமிக்கு நிகழ்ந்தது போல, யாராவது ஒரு பெண் ஓடிவந்து are you from Canada? என்றும் I love enginerds என்றும் கூறி என்பொழுதை வனப்பாக்க கூடுமல்லவா? என்றேன்.

ஆனாலும் என்ன, இப்படி இந்த விழா அலுப்பாய் இருக்கும் என்று தெரிந்தோ என்னவோ தெரியாது, எங்கடை தமிழ்ப்பெடியள் புதுவிழா ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்கள். Ring ceremonyக்குப் பிறகு எங்களின் party இரவில் நடக்கும். ரிங் அணியும் அந்த வருடத்து மாணவர்கள், காசு போட்டு, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு விருந்து கொடுப்பது சம்பியதாயமாக எங்கள் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் நிகழும். Ring party என்று நாகரிகமாய் நாங்கள் அழைத்தாலும், அது உண்மையில் drink partyதான். பணம், ராப் பாடல்களில் பறக்கும் தாள்களாய்ப் பறக்க பறக்க,பாரில் குடிவகைகள் ஆறாய்ப் பெருக்கெடுக்கும். வழமையாய் இந்தப் பார்ட்டிகள், எங்கள் வளாக pubற்குள்தான் நடைபெறும். நாங்கள் செய்த வருடம், எங்களால் pubற்குள் இடம் எடுக்கமுடியாமற்போய்விடவே, வெளியே வேறொரு pubல் செய்வதாய்த் தீர்மானித்திருந்தோம். இந்த ரிங் பார்ட்டிக்கு, இதுவரை பங்குபெற்றாத பெண்களும் தாங்களும் இந்தமுறை வரப்போகின்றோம் என்றார்கள். ஆகா, iron ring ceremonyயோடு, ஒரு wedding ring ceremonyயும் எனக்கு வைக்கலாம் என்று வழமைபோலக் கனவுகாண நானும் தொடங்கிவிட்டிருந்தேன். அத்தோடு ஒரு தோழியிடம், இந்தமுறை குடி குடியென்று குடித்து போதையில் மூழ்கி எனது வீரத்தைக் காட்டுகின்றேன் பார் என்று சபதமும் செய்திருந்தேன்.

விருந்து அழகாய்த்தான் ஆரம்பித்தது. sex on the beachஜ எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தால், அங்காலை பெண்கள் தங்களுக்குள் ஆட்டம் போடத்தொடங்கியிருந்தார்கள். ஆகா எல்லாம் நான் நினைத்த ஒழுங்கில் நிகழ்கின்றது என்று புளங்காகிதம் அடைந்து இரண்டு மூன்று ஸிப் இழுத்திருப்பேன், நண்பர்கள் சிலர் வந்து 'நீதானே குடிப்பதில்லை (sex on the beach எல்லாம் குடி என்ற வகைக்குள் அவர்கள் அடக்குவதில்லை), இரவு உணவுக்காய் கொத்து ரொட்டி மற்றும் கறிகள் ஒரு வீட்டில் செய்யச் சொல்லியிருக்கின்றோம் எடுத்துக்கொண்டு வா'வென்றார்கள். நாசாமாய்ப்போறவங்களே வாழ்க்கையில் செட்டில் ஆவோம் என்று நினைத்தால், என்னை chef ஆக்கத் திட்டம்போடுகின்றீர்களே என்று திட்டிக்கொண்டுபோனாலும், ஒரு சின்ன சந்தோசம் மனதில் இருந்தது. எனென்றால், நாங்கள் கொத்து ரொட்டி செய்யச்சொன்ன வீட்டில் மற்றொரு யூனிவர்சிட்டியில் படிக்கிற ஒரு பெண் இருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை இழக்கச் செய்து இன்னொரு அரிய தருணத்தை உருவாக்கித் தருகின்றார் என்று மனதில் நினைத்துக்கொண்டு அவர்களின் வீட்டுக்குப் போனேன். அவர்களின் விட்டுக் கதவைத் தட்டியவுடனேயே, 'உவங்கள் அங்கே குடிக்கவும் கூத்தடிக்கவும் செய்ய, நாங்கள் இங்கை கிட்சினிற்குள் அவிந்துகொண்டிருக்கின்றோம்' என்று எல்லோரையும் பார்த்து பொதுவாய்த் திட்டவேண்டியதை, என்னையும் அவரது தாயாரையும் மாறி மாறிப் பார்த்து அந்தப்பெண் திட்டத்தொடங்கினார். நிரம்பக் குடித்து மயங்கிக்கிடக்கவேண்டும் என்ற சபதத்தைத்தான் நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தோடு இங்கு வந்தால், நீங்களும் இப்படிக் கூறுதல் நியாயந்தானா என்று கேட்க விரும்பினாலும், அந்தப்பெண்ணின் கையில் சுடச்சுட ஆவி பறந்துகொண்டிருந்த கொத்து ரொட்டி என் முகத்தைப் பதம் பார்த்துவிடுமோ என்ற பயத்தில் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கொத்து ரொட்டியையும், அந்தப்பிள்ளையின் திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு ஸ்நோவிற்குள்ளால் போனால், அங்கே எல்லோரும் குடித்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்கள். அதுவும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று வளாகத்தில் பதுங்கி பதுங்கித் திரிந்தவன்கள் எல்லாம், குடித்த கிளாசுகளை உடை உடையென்று கீழே போட்டு உடைத்துக்கொண்டு நல்ல மப்பில் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்க்க, என் வயிற்றில் எரிந்த நெருப்பு வெளியே உறைந்துகிடந்த ஸ்நோவைக் கூட உருகச்செய்துவிடும் போல இருந்தது.

வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நான் அதிகம் சேர்ந்து திரிந்த நண்பர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு பத்து வயது வித்தியாசம் இருக்கும். அதில் ஒருவர் எனது அண்ணாவுடன் யாழில் ரீயூசனில் படித்திருந்தார். இங்கே உள்ள கல்விமுறையில் எனக்குப் பிடித்த இரண்டு விடயங்கள், ராக்கிங் இல்லாததும், எவரும் எந்த வயதிலும் படிக்கலாம் என்பதுவும். அனேகமான தமிழ் பெடியங்கள், படித்துக்கொண்டிருக்கும்போது இடையில் தங்கள் துணையை, குடும்பத்தை கனடாவுக்கு அழைக்கவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது படிப்பை இடையில் நிறுத்தி, வேலை செய்துவிட்டு, பிறகு சில வருடங்களுக்குப் பிறகு படிப்பைத் தொடர்வார்கள். எனக்கு என்னைவிட வயது மூத்த நண்பர்கள் இருந்ததால் எப்போதும் செல்லப்பிள்ளையாக அவர்களுடன் இருப்பேன். போற வாற வழியில் கேர்ள்ஸை கண்டு மனஞ்சிலிர்த்தால் மட்டும், 'உன்ரை கொப்பருக்கு ரெலிபோன் அடித்து ஹலோ சொல்லட்டோ?' என்று மட்டும் 'அன்பாய்' அதட்டுவார்கள். அப்படி இருந்தாலும் பலசமயங்களில், 'அண்ணை எனக்கு இந்தப்பாடத்திலை கொஞ்சம் டவுட், அவாவிடம் கேட்டு கிளியர் பண்ணிவிட்டு வருகின்றேன்' என்று நைசாக நழுவியும் இருக்கின்றேன் ('கிளி'யர் பாடத்துக்கா அல்லது வேறெதுக்கா என்பது யாருக்குத் தெரியும்? ). அனேகமாய் பெண்களோடு கதைக்கின்ற இடமென்றால், uni food courtயாய் இருக்கும். Tim Hortonsனில் லைனில் நிற்கும் பெண்களைப் பார்த்துவிட்டு 'என்ன coffee வாங்கவா நிற்கின்றீர்கள்?' என்றுதான் கதையை என்னைப் போன்றவர்கள் ஆரம்பிப்போம். கலியாண வீட்டுக்குள் இருந்துகொண்டு, என்ன கலியாண வீட்டுக்கோ வந்திருக்கின்றியள் என்று கேட்பது போலத்தான் Tim Hortonsனில் நின்றுகொண்டு கோப்பி வாங்கவா நிற்கிறியள் என்பது. என்றாலும் பெண்களும் எங்களின் 'புத்திசாலித்தனம்' பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கும் தெரியும் எங்களில் அனேகம் பேர், தங்களை இரசிப்பதற்கு மட்டும் அல்ல, ஓசியாய் தங்கடை காசில் கோப்பி குடிக்கவும்தான் வழிந்துகொண்டு நிற்கின்றாங்கள் என்று.

வளாகத்தில் Science Faculty உள்ள கட்டடத்தை நாங்கள் அந்தப்புரம் என்றுதான் அழைப்பதுண்டு. எனென்றால் அங்கேதான் விஞ்ஞானபீட, வரத்தகபீட மாணவிகள் எல்லாம் குழுமியிருப்பார்கள். அதுவும் மதியவேளைகளில் அங்கே போனால், யாராவது ஒரு தோழிகொண்டுவரும் சாப்பாடாவது கிடைக்காமற் போகாது. இதுக்காகவே, லெக்சர்களுக்குப் போகமறந்தாலும் மதியவேளைகளில் அந்தப்புரத்துக்குப் போவதை மட்டும் என்னைப் போன்றவர்கள் மறந்ததில்லை. உள்ளங்கையில் மட்டும் நிரம்பக் கூடியதாய் 'நிரம்ப' உணவு கொண்டுவரும் பெண்களின் உணவில் எங்களைப் போன்றவ்ர்கள் கைவைத்தால் அவர்களுக்கு இறுதியில் எது எஞ்சும் என்று உங்களுக்கு படம் வரைந்து விளக்கத்தேவையில்லை. வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும், எதிர்காலத்தில் இவங்களை மாதிரி ஆக்கள் மட்டும் புருஷனாய் வந்து தொலைக்கக்கூடாது என்று மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அதேபோல, என்னைப்போன்றவர்கள் நன்கு உறைப்புப்போட்டுச் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடமாட்டோம் என்று புரிந்துகொண்டு, நல்ல காரமாய் உணவைச் சமைத்துக்கொண்டுவந்துவிட்டு, 'வாருமன் சாப்பிட..' என்று நக்கல் சிரிப்புச் சிரிக்கும் 'அருமையான' தோழிகள் சிலரும் இருந்தார்கள் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

வளாகத்தில் படிக்கும்போது எனக்கு மிகக் கஷ்டமாய் இருந்த ஒரு விடயம். பல sources லிருந்து ஒரு masterpiecesஜ உருவாக்குவதான். நீங்கள் sources, masterpieces என்றவுடன் பயந்துவிடாதீர்கள். பழைய (past years) assignments, labs போன்றவற்றிலிருந்து profs லிருந்து பிடிபடாமல் எப்படி நல்ல மார்க்ஸ் வாங்க எங்களின் பிரதியை (masterpiece) எழுதுவது என்பதுதான் இதன் அர்த்தம். அதிக profs, அலுப்பில் syllabusஜ பல வருடங்களுக்கு மாற்றமாட்டார்கள். ஆரம்ப வருடத்தில் நாங்கள்தான் இப்படி 'group work' செய்கின்றோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் 'அறிவு' வளர வளரத்தான், எலலா மாணவர்களும் இன, மொழி, இன்னபிற வித்தியாசம் இல்லாமல் இதில் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவந்தது. அதுவும் சில மாணவர்கள், பரிசோதனைகள் (labs) செய்யும்போது, sorucesஜ bagsகளிலும், binderகளிலும் இருந்து எடுத்து பயமில்லாது அந்தமாதிரி வெளுத்துக்கட்டுவார்கள். soruceற்கு ஒருசமயம், masterpieceற்கு ஒருசமயம் என்று ஏன் இரட்டிப்பு வேலை செய்வான் என்று பரிசோதனைக்கூடத்திலேயே இரண்டையும் ஒன்றாய் செய்து கொடுத்து நிம்மதியாய் வீடு போய்ச்சேரும் இந்த 'intellectuals'ஜப் பார்த்து பெருமூச்சைத்தான் என்னைப்போன்றவர்கள் விடுவார்கள்.

இப்படி, soruce - masterpiece விவகாரம், நான்காம் வருடத்தில் வளாகம் முழுதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் வருடத்தில், ஆங்கிலப்பாடம் ஒன்று கட்டாயம் எடுக்கவேண்டும். அதற்கு இரண்டு கட்டுரைகளும் இறுதிப்பரீட்சையும் மட்டுமே இருந்தன. பூச்சியத்தையும் ஒன்றையும் வைத்து மண்டையைக் குழப்புவனுக்கு எல்லாம் இருபத்தாறு எழுத்துக்களைத் தந்து கட்டுரைகள் எழுது என்றால் எனன செய்வது? வழமைபோல அனேகருக்கு google கடவுள் அவதாரம் தந்தார். அவர் காட்சிதான் தந்தார். ஆனால் வரத்தை நாங்கள்தானே கேட்கவேண்டும். ஆனால் எங்களின் வகுப்பில் பலருக்கு தாங்கள் கடவுளாய் ஆகவேண்டும் என்ற ஆசை வந்து, கூகிளிலிருந்து கட்டுரைகளை அப்படியே இறக்கி எதையும் மாற்றாது சமர்ப்பித்தனர். அதுதான் பிறகு பிரச்சினையாகப் போய்விட்டது. நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் plagiarism என்று பிடிபட்டு பெரிய விவகாரமாகி பிபிஸி வரை எங்களின் 'புகழ்' பரவியது. நானும் கொஞ்சம் கூகிளிலும், மிச்சம் என்னுடைய சொந்த சரக்கிலும் கட்டுரையை (The Influence of Gender Issues on Deciding Potential Careers) எழுதி, புத்திசாலித்தனமாய் ஒரு தோழியிடம் அனுப்பி மெய்ப்பு பார் என்று அனுப்பியிருந்தேன். அவளுக்குத் தெரியாதா என்ன, எனது ஆங்கில அறிவின் உச்சம். எனவே ஆறுதலாக மெய்ப்பு பார்த்து கூகிள் வார்த்தைகளை எல்லாம் அழகாக மாற்றிவிட்டிருந்தாள். நல்ல மார்க்ஸும் கிடைத்தது. பிறகு இரண்டாவது கட்டுரை எழுத வந்தபோது, ஏன் கடவுளை -கூகிளை- கஷ்டப்படுத்துவான் என்று, சில outlinesஐ மட்டும் கட்டுரைக்கு எடுத்துக்கொடுத்து அவளிடம் கட்டுரையை நீயே எழுதித்தாவென்று இருந்துவிட்டேன். அவளும் தானெழுதும் கட்டுரைகளை விட கஷ்டப்பட்டு உழைத்து நல்லதொரு கட்டுரையைத் தயார்படுத்தி எனக்குத் தந்திருந்தாள். வழமைபோல் என்னுடைய நல்லபழக்கத்தால் அது சரியில்லை இது சரியில்லை என்று நொட்டைகளைத்தான் அவளுக்கு நன்றியாகத் திருப்பிக் கொடுத்திருந்தேன். அப்படி ஏதாவது 'நல்ல வார்த்தைகள்' எதுவும் கூறாவிட்டால், எனக்கு அன்று நித்திரையே வராது என்று அவளுக்கும் நன்கு தெரியும் என்பதால் இப்படியான சமயங்களில் அவள் ஒன்றும் திருப்பிக்கூறுவதில்லை.

வளாக வாழ்வில் நடந்த சுவாரசியமான பல சம்பவங்களில் ஒன்று, இந்த இணைய அரட்டை. பெடியங்கள் நள்ளிரவிலிருந்து விடிய விடிய இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். மற்றப்பக்கம் கதைக்கின்ற கேர்ள் கனடா, அமெரிக்கா என்றால் கொஞ்சமாவது பரவாயில்லை. தூக்கம் வருகின்றது என்று கூறி குறிப்பிட்ட நேரத்தில் போய்விடுவார்கள். உள்ளூரில் மட்டுமில்லாது சர்வதேசம் எங்கும் தோழிகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நேரப் பிரச்சினையால், இரவுத் தூக்கம் எல்லாம் இல்லாமற் போய்விடும். சிலபேர் சீரியஸாய் லல் பண்ணத் தொடங்கினால் நிலைமை பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அது கூடப் பரவாயில்லை, சிலர் என்ன செய்வாங்கள் என்டால், நண்பர்களின் பெயரை தங்களின் மெஸஞ்சரில் சேர்த்துவிட்டு, பெண்களின் பெயரில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இதுகள் அப்பாவிகள் மாதிரி உருகி உருகி கதைத்து, சிலதுகள் காதலிக்கின்ற நிலைமை வரை போயிருக்கிறதுகள். பிறகு நிலைமை சீரியாசாகப் போகின்றது என்று புரிந்து உண்மையைச் சொன்னால் எல்லாக் கனவுகளும் பொடிப்பொடியாகப் போய் முழுசிக்கொண்டு நிற்பதைப் பார்க்க பரிதாபமாய் இருக்கும்.

இணையம், இணைய அரட்டை குறித்து பல எதிர்மறையான விடயங்கள் இருந்தாலும், எனக்குத் தெரிந்த பல தோழர்கள், தோழிகள் தங்கள் காதல்களை, துணைகளை இணையத்தின் மூலம் கண்டுபிடித்திருக்கின்றார்கள். வெளியேபோய் ஒரு ஆணோடு கதைப்பது (dating போன்றவை இன்னும் முழுமையாய் அங்கீகரிக்கப்படாத எங்கள் சமூகத்தில்) இந்த அரட்டைகள் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள முடிவது நல்லதொரு விடயந்தானே. அண்மையில் ஒருவரின் வீட்டுக்குச் சென்றசமயத்தில் ஒரு பதின்மவயதுப் பையன் இணையஅரட்டை செய்வதைப் பார்த்தபோது, அவர்கள் பயன்படுத்தும் பல சொற்களின் (slangs) அர்த்தம் புரியாது முழித்துக்கொண்டிருந்தேன். என்னைப்போன்றவர்களுக்கான காலம்-இணைய அரட்டை- முடிந்துவிட்டதே என்ற கவலையில் ஒப்பாரி வைக்கவேண்டும் போலத்தோன்றியது. இப்போது webcam போன்றவையும் வந்துவிட்டதால் எவரும் எவரைம் இலகுவில் எமாற்றவும் முடியாது.

அந்தப் பையனோடு நின்றபோது, இரவு பத்து மணி இருக்கும்... சட சடவென்று இவன் வெளிக்கிட்டான், தலைக்கு ஜெல் வைத்து, sun glass, leather jacket எல்லாம் போட்டு அமர்களப்படுத்தினான். 'என்னடா எங்கையாவது வெளியில் (இரவிலையும் sun glass போடுகின்றவன் அறிவாளியாகத் தானிருக்கவேண்டும்) என்று வினாவ, 'இல்லை, என்ரை மச்சாள் ஜேர்மனியில் இருந்து சாட்டுக்கு வாற நேரம் அதான்' என்றான்....அதுக்குத்தான் இந்த ஆரவாரம், அமர்க்களம். 'cologne யும் மறந்துவிடாது ஸ்பிரே பண்ணடா, பிறகு மச்சாள் அங்கையிருந்துகொண்டு bad smell வருகிறது எண்டு சொல்லப்போறா கவனமடா' என்றேன் நான். அதைவிடச் சிரிப்பு, இவருக்கு பதினைந்து வயது, இவரது மச்சாளுக்கு இவரை விட ஜந்தோ அல்லது ஆறோ வயது அதிகம். இப்படி எல்லாம் இங்கே நான் 'அன்பாய்' எழுதுவது, நான் ஏதோ அவனுடைய மச்சாளின்ரை ஈமெயில் முகவரியைத் தாவென்று கேட்டபோது, அவன் தராது மறுத்த கடுப்பில்தான் என்று பிழையாக நீங்கள் விளங்கிக்கொள்ளக்கூடாது பாருங்கோ.

இன்று மெல்லப்பின்னோக்கி வளாக வாழ்வைப் பார்த்தால் அந்த வாழ்வில் அனுபவித்திருக்கவேண்டிய அரிய பல தருணங்களைத் தவறவிட்டாலும், கழித்து வந்த வருடங்கள் மிகவும் இதமாயிருக்கிறது. எத்தனையோ பிரச்சினைகள், பிணக்குகள், வேதனைகள் என்று அலைந்திருந்தாலும், இன்று நினைவில் நிற்பது நல்ல நினைவுகளே. அதுதான் வாழ்வின் அதியற்புதம் போலும்.

(இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் Shakiraவுக்கு)

13 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சரீஈஈஈ... ஒண்டு கேள்விப்பட்டனான். சில பேர் தங்களோடு தங்கட குடும்பத்தையும் வேற ஊருக்கு 'யூனிக்குப் போறன்' எண்டு மாற வைச்சவையெண்டு கேள்விப்பட்டனானே...

வதந்திகளை நம்பாதீர் வகையறாவில போற செய்தியோ இது? ;)

-மதி

2/02/2006 09:34:00 AM
SnackDragon said...

Ë §º, ¿øÄ À¾¢×.
¦ÅðÊí Ã¢í ¦ºÃ¢§Á¡É¢ ±ýÉÅ¡îÍ ¸¨¼º¢Â¢ø ±ýÚ
±Ø¾§Å þø¨Ä§Â? ;-) ¦ºýº§Ã¡?

2/02/2006 09:56:00 AM
இளங்கோ-டிசே said...

தங்கத்தீ..... அது ஒரு safetyக்குத்தான். தனியே போயிருந்து, பெடியன் கெட்டு சீரழிந்துவிட்டான் என்று 'சமூகம்' கூறக்கூடாது என்பதற்காகத்தான். ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு இந்த 'அரசியல் சாணக்கியம்' கூட உங்களுக்குத் புரியாமற்போய்விட்டதே!

2/02/2006 09:57:00 AM
இளங்கோ-டிசே said...

டீ சே, நல்ல பதிவு.
வெட்டிங் ரிங் செரிமோனி என்னவாச்சு கடைசியில் என்று
எழுதவே இல்லையே? ;-) சென்சரோ?
(Karthik's comment...converted into unicode: DJ)

2/02/2006 10:23:00 AM
Anonymous said...

அவர்களுக்கும் தெரியும் எங்களில் அனேகம் பேர், தங்களை இரசிப்பதற்கு மட்டும் அல்ல, ஓசியாய் தங்கடை காசில் கோப்பி குடிக்கவும்தான் வழிந்துகொண்டு நிற்கின்றாங்கள் என்று

Bro, dont reveal such top secrets :)

2/02/2006 10:27:00 AM
வானம்பாடி said...

டீசே, நல்ல ரசனைக்கார ஆளாய்தான் இருக்கிறீர். :)

2/02/2006 10:30:00 AM
Anonymous said...

Hi dj this is karupy

did you get my mails about "Thirai" subscription? pls write to me. Leena keep calling me.

2/02/2006 10:41:00 AM
இளங்கோ-டிசே said...

//வெட்டிங் ரிங் செரிமோனி என்னவாச்சு கடைசியில் என்று
எழுதவே இல்லையே? ;-) சென்சரோ?//
கார்த்திக்,
அந்தச் சோகத்தை ஏன் கேட்கின்றீர்? கொத்துரொட்டி வாங்கிக்கொண்டுவரமட்டும் அல்ல, பிறகு அதைப் பகிர்ந்து செர்வெட் பண்ண்வும் என்னைப் போன்ற சிலரைத்தான் விட்டவங்கள். அதாவது பரவாயில்லை. பிறகு குடித்து மயங்கிக் கிடந்தவர்களை எல்லாம், உரிய இடங்களுக்கு ஒழுங்காய் அனுப்புகின்ற பொறுப்பையும் தந்து அந்த இனிய நாளையும் நாசமாக்கிப்போட்டாங்கள் :(.
......
//Bro, dont reveal such top secrets :)
அநானிமஸ், அது மட்டுமல்ல, வளாக வண்டவாளஙகளைச் சொன்னாப்பிறகுதான், இங்கே -வலைப்பதிவுகளில்- பல பேராசிரியப்பெருந்தலைகள் இருக்கின்றார்கள் என்பது உறைத்தது. எனவே அந்த நண்பர்கள், 'இது நிஜமல்ல, அனைத்தும் கற்பனையே' என்று இந்தப்பதிவை எடுத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். :-).

2/02/2006 11:23:00 AM
இளங்கோ-டிசே said...

சுதர்சன் நன்றி :-). அய்யயோ 'அந்தப்பதிவை' ட்ராப்ட்டாய்த்தான் வைத்திருந்தேன். எப்படி பப்ளிஷ் ஆனதென்று தெரியவில்லை. அந்தப்பதிவை ஒழுங்காய் எழுதித் திருத்திப் போடுகின்றபோது உங்களின் மற்றப் பின்னூட்டத்தையும் அதனோடு இணைத்துக்கொள்கின்றேன். இப்போதைக்கு மன்னிக்கவும்.
....
கறுப்பி, திரை இதழ் சந்தா குறித்து, இன்றிரவுக்குள் உங்களுக்குத் தனிப்பட்ட மெயில் அனுப்புகின்றேன். அவ்வவ்போது வந்து உங்கள் வலைப்பதிவுகளில் எழுதலாமே. எத்தனைபேர் நீங்கள் வலைப்பதிவுகளில் இல்லாது, பொழுதுபோகவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியுமா :-)?

2/02/2006 11:34:00 AM
அருண்மொழிவர்மன் said...

தாலாட்டும் ஞாபகங்களை மீட்டி இருக்கிறீர்கள். என் போன்ற எப்பொதோ தொலைத்த வாழ்வை இப்பொதும் தெடுவோர்க்கு அற்புதமாக அமைந்த பதிவு

இன்னொரு பதிவில் பூநாறி மரம் பற்றி எழுத் இருந்தீர்கள். கொக்குவில் ,பிரம்படி லேன்க்கு அண்மையில் அம்மரம் உள்ளது

9/12/2006 02:57:00 AM
யாத்ரீகன் said...

சுவாரசியமாய் சொல்லி இருக்கியள்.. :-)

9/12/2006 08:55:00 AM
மலைநாடான் said...

டி.சே!

வளாக நாட்கள் என்பது வசந்த காலங்கள்தான். அந்தப்பருவம்தாண்டிவிட்டாலும், அது ஒரு கனாக்காலம்தான்.
நல்லதோர் மீள்நினைவு.

முடியுமாயின் எனக்கு ஒரு தனிமடலிட முடியுமா?
malainaadaan at hotmail.com

9/12/2006 01:10:00 PM
இளங்கோ-டிசே said...

அருண்மொழி, யாத்திரீகன் & மலைநாடான் பின்னூட்டங்களுக்கு நன்றி.
......
/இன்னொரு பதிவில் பூநாறி மரம் பற்றி எழுத் இருந்தீர்கள். கொக்குவில் ,பிரம்படி லேன்க்கு அண்மையில் அம்மரம் உள்ளது./
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு போனபோது அதை அழகுக்காய் கரையோரங்களில் வளர்த்திருந்தார்கள். ஊரில் எங்கள் வளவுக்கிலும் பூநாறி மரம் இருந்திருக்கிறது. இப்போது ஊரில் வீடிருந்த இடமே எங்கே என்று தேடவேண்டிய நிலையில் பூநாறி மரமெல்லாம் பற்றிப் பேசுவது....கற்காலம் போலத்தன் தோன்றுகின்றது :-(.
.....
/என் போன்ற எப்பொதோ தொலைத்த வாழ்வை இப்பொதும் தெடுவோர்க்கு.../
&
/வளாக நாட்கள் என்பது வசந்த காலங்கள்தான். அந்தப்பருவம்தாண்டிவிட்டாலும், அது ஒரு கனாக்காலம்தான்/

எந்தப் பருவம் என்றாலும் கடந்தால் கடந்ததுதானே, எவ்வளவு முயற்சித்தாலும் திருப்பிப் பெறமுடியாது அல்லவா? நாம் தீர்மானிக்கும் பாதைகளைப் பொறுத்து இனிமையான நினைவுகளோ அல்லது மிகப்பெரும் துயரங்களோ ஒவ்வொரு பருவத்துக்கும் வர்ணங்களைப் பூசி பூசிவிடுகின்றன போலும்.

9/13/2006 11:54:00 AM