கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இண்டியா அரி - சிறு குறிப்புக்கள்

Friday, September 01, 2006

டென்வர், கொலராடோவில் 1975ல் பிறந்த இண்டியா அரி (India Arie), பாடுவதில் மட்டுமில்லாது அவரது வீரியமிக்க பாடல்வரிகளாலும் அதிகம் கவனம் பெறுபவர். 2000 ஆண்டளவில் இசையுலகிறகு வந்து இதுவரை மூன்று இசைத் தொகுப்புக்களை (Acoustic Soul ,Voyage To India, Testimony: Vol. 1, Life & Relationship) வெளியிட்டுள்ளார்.
india3
'எனது இசைத்தட்டை வெளியிடும்போது எந்த நிறுவனத்தினூடு வெளியிடவேண்டும் என்று அலையவில்லை; என்னை, எனது இசையை எவற்றோடும் சமரசம் செய்யாமல் வெளியிடவேண்டும் என்பதில் மட்டுமே அதிகம் கவனஞ்செலுத்தினேன்' என்று கூறுகின்ற இண்டியா அரி, சென்ற மாதமளவில் Testimony: Vol. 1, Life & Relationship என்ற தனது மூன்றாவது இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மகாத்மா காந்தியின் மீதிருந்த ஈர்ப்பினால் இண்டியா (India) என்ற பெயரையும், அரி (Arie) என்று தாயால் செல்லமாய் அழைக்கப்பட்டதை பிற்பகுதியாகவும் சேர்த்து இண்டியா அரி ஆகியிருக்கின்றார்.

2001ல் வெளிவந்த 'வீடியோ' என்ற பாடல்தான் இண்டியா அரியின் தனித்துவத்தை வெளிப்படுத்தியது. தனது பெண் என்ற அடையாளத்தை அந்தப் பாடலில் இண்டியா அரி தேட முயல்கின்றார்...

'நான் உனது வீடியோவிலிருக்கும் சாதாரண பெண் அல்ல
நான் ஒரு பேரழகியைப் போல வடிவமைக்கப்பட்டவளுமல்ல
ஆனால் நான் அறிந்துவைத்திருக்கின்றேன்
என்னை நானே எப்படி அளவிறந்து நேசிப்பது என்று
ஏனெனில் நானொரு அரசிளங்குமரி
எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை
இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ
அதை மட்டுமே நான் அணிவேன்'


இந்தப்பாடலோடு அண்மையில் பிரபல்யம் அடைந்த பிங்கின்(Pink), Stupid Girls ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிங்கும் தனது பாடலில் வெகுசன ஊடகங்கள் பெண் பற்றி கட்டமைக்கபடும் விம்பங்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அதில் ஒரிடத்தில் இப்படி வரும்...., 'என்னவாயிற்று? /அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாகும் இந்தப் பெண்ணின் கனவுக்கு/ அவள் இப்போது 50CENTன் வீடியோவில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்/' என்று.

தனிப்பாடலான 'வீடியோ' இண்டியா அரியை பிற பாடகர்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது என்றால், அவரது இரண்டாவது இசைத் தொகுப்பான் 'இந்தியாவுக்கான பயணம்' (Voyage to India), அவரை அதிக இசை இரசிகர்களிடம் அறிமுகம் செய்திருப்பதோடு கிராமி விருதுகளையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

'எதுவென்றாலும் நீ எனக்குச் சொல்லித்தந்தாய்
நானும் காரணங்களோடு கற்றுக்கொண்டேன்
நான் நம்புகின்றேன்; நாங்கள் நட்சத்திரங்களில் எழுதப்பட்டவர்கள்
'நாளை' எதை வைத்திருக்கின்றது என்று தெரியாது
நான் இந்தக் கணத்தில் வாழ்கின்றவள்
நான் ஆணெனும் உனக்காய் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றேன்
நீ, நான் - எனது பிரார்த்தனைகளில் கேட்கின்ற எல்லாமாயும் இருக்கின்றாய்
ஆகவே உன்னை எனது தேவதைகள்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும்
உனது அன்பு என் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றது
நீ எனது வாழ்வின் பிடிமானம்
நான் சிரித்துக்கொண்டிருப்பதற்கும் நீயே காரணம்
நீ ஒரு அழகிய வியப்பு!
'

என்று தனது இரண்டாவது இசைத்தட்டில் மலரும் புதிய உறவில் சிலிர்த்துப்போகின்ற இண்டியா அரி, மூன்றாவது இசைத்தட்டிலும் உறவுகளைப் பற்றியே பேசுகின்றார். தனது கடந்த (மூன்றாண்டு)கால உறவையும், பின் நிகழ்ந்த பிரிவையும் இறுதியாய் வந்த இசைத்தொகுப்பில் சொல்ல விளைவதாகவும், ஆனால் கசப்பான நினைவுகளில் தங்கிவிடாது வாழ்வின் இயல்பென வலிகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்வதையே தான் பேச விரும்புவதாகவும் அரி கூறுகின்றார். Wings of Forgivenessல்....

'நெல்சன் மண்டேலாவால்
தன்னை ஒடுக்கியவர்களை மன்னிக்கமுடியுமென்றால்
நான் நிச்சயம் உன்னை மன்னிப்பேன், உனது தனித்துவத்திற்காய்.
.....
காந்தியால் persecutionஐ (தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) மன்னிக்க முடியுமென்றால்
நிச்சயமாய் உனது பரிதாபத்துக்காய் என்னால் உன்னை மன்னிக்கமுடியும்.
....
இயேசு அவருக்குச் செய்யப்பட்ட கொடூரங்களை மன்னிக்கின்றார் என்றால்
நிச்சயமாய் நாங்கள் இதற்கொரு முடிவு கண்டு நகரமுடி
யும்'

என்று மன்னிப்பதன் மகோன்னதத்தை அருமையாக கூறுகின்றார். அதே பாடலில்.....

'குற்றங்களும் இரகசியஙளும்
நிறைந்த கடலில்
நான் நீந்தத்தொடங்கினேன்
என்னை யாரென
அடையாளங்காண்பதற்காய்.....
யாருமற்ற ஒரு தீவில்
எனக்குரிய தனிமையில்
உயர்ந்த உண்மை எதுவெனக் கேட்டேன்...'

என்று கூறிவிட்டு, நமக்கு நாமே நேர்மையாக இருப்பதுதான் அதியுயர்ந்த உண்மையாக இருக்கும் என்று தனக்குச் சொல்லப்பட்டதாய் கூறிக்கொள்ளவும் செய்கின்றார்.
indianew
அதே போல இன்னோரு பாடலான 'I am not my hair', ஒரு பெண்ணின் தலைமயிரை வைத்து சமூகம் செய்யும் அரசியல் குறித்து பேசுகின்றது. (தமிழ்பெண்களுக்கு உள்ளது போன்றே) கறுப்பினப் பெண்களுக்கு அவர்கள் எப்படி தலைமயிரை கட்டமைக்கவேண்டும் என்ற நெருக்குதல்கள் இருக்கின்றன என்கிறார் அரி. ஒவ்வொரு பருவத்திலும் எப்படி எப்படி தனது தலைமயிர் அலங்காரங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன என்றும், பிறர் இவ்வாறான தலைமயிர் அலங்காரத்தை முன்மாதிரியாக வைத்து எப்படி எல்லாம் ஒரு பெண்ணைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்/பேசுகின்றனர் என்பதையும் இந்தப்பாடல் பேசுகிறது. இறுதியில் தனக்குரியதை தேர்வு செய்யும் உரிமை தனக்கு மட்டுமே என்று கூறுகின்றார். பெண்களின் தலைமயிரை வைத்து ஆண்கள் செய்யும் அரசியலை மிக அழகாக புற்றுநோய வந்த பெண்ணின் படிமம் மூலம் உடைத்துக்காட்டுகின்றார்.

மார்பகப் புற்றுநோயும், அதன் பின்பான சிகிச்சையும்
அவளது அழகையும் பெருமையையும் எடுத்துச் சென்றன
அவள் கடவுளிடம் உறுதிமொழி எடுத்தாள்
நான் உயிர்தப்பினேன் என்றால்
எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சந்தோசிப்பேன் என்று
தேசியத் தொலைக்காட்சியில்
அவளது கண்கள் மின்னலடிக்கின்றன வைரங்களாய்
அவளது வழுக்கைத் தலை ஒரு முழுநிலவாய் மினுங்குகின்றது
முழு உலகுக்குமாய் அவள் இப்போது பாடிக்கொண்டிருக்கின்றாள்...hey
'

indai2

வனப்புடன் இருப்பதாய் கட்டமைக்கப்படும் அமெரிக்க வாழ்வியலை, பிரேசில் நாட்டில் தான் சந்தித்த பையன் ஒருவனின் பார்வையால் அரி சீர்குலைத்துக்காட்டுகின்றார் இப்படியாக....,

'என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை
உணரவைத்தான்
பிரேசில் நாட்டில்
ஒரு ஒதுக்குப்புறத்தில் சந்தித்த
இளஞ்சகோதரன்;
அவனும் என்னைப் போலவே பாடவிரும்பினான்
அவனது வீட்டுக்கு யன்னல்களோ கதவுகளோ இருக்கவில்லை
ஒரு எளிய வாழ்க்கை வாழும் அவன் மிகுந்த ஏழ்மையாக இருந்தான்
இவற்றுக்கும் மேலாய் அவனுக்கு பார்வையும் இல்லை
ஆனால் அது அவன் 'ஒளி'யைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை
அவன் கேட்டான், அமெரிக்கா எப்படி இருக்குமென்று
எனது பதில் முழுதும் முறைப்பாடுகளாகவே இருந்தன
அவன் சொன்னான், இங்கே வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது...
அவன் எனக்கு சொல்லித் தந்தான்;
சொர்க்கம் என்பது எனது மனதின் உள்ளேதான் உள்ளது என்று.'

Pop, R&B, Rap பாடுபவர்களின் பாடல்களை ஓரளவு உற்றுக கவனிக்கின்றவன் என்றவகையில், இண்டியா அரியின் பாடல் ஒவ்வொன்றும் ஒரு கவிதைக்குரிய தனித்துவத்துடன் மிளிர்கின்றன என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம் என்று நினைக்கின்றேன் (Kanye Westன் பாடல்களிலும் இவ்வாறான நம்பிக்கைகள் துலங்குகின்றன). இண்டியா அரியின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கதையை அவற்றின் பின்புலங்களுடன்/அரசியல்களுடன் விரித்துச் சொல்ல முயல்கின்றன. அவற்றில் அதீத காழ்ப்போ, வெறுப்போ இல்லாது சமூகத்தின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்னும் ஆழமாய் நேசிக்க அரியின் பாடல்கள் கற்றுத் தருகின்றன என்பதுவும் முக்கியமானது. மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட நொய்ந்துபோன வார்த்தைகளை வைத்து பாடல்கள் இயற்றப்படுவதைத் தவிர்த்து தனக்குரிய தனித்துவங்களுடன் புதிய படிமங்களையும், அர்த்தங்களையும் தேடும் அரியின் பாடல்கள் கேட்கும் எவரையும் இலகுவில் வசீகரிக்கச் செய்வதில் வியப்பேதுமில்லைதானே.

9 comments:

Anonymous said...

அழகான மொழிபெய‌ர்ப்புகள்..நன்றி

--FD

9/01/2006 11:59:00 AM
இளங்கோ-டிசே said...

FD,
இண்டியா அரியின் பெயரிலுள்ள 'அரி', இந்தியமொழியிலிருந்து எடுக்கப்பட்டதாய் எஙகையோ வாசித்திருந்தேன். இண்டியா அரி, தனது தாயுடன் இந்தியாவில் வசித்தபொழுதுகளில் தனது தாய் சிங்கம் எனப்பொருள்பட 'அரி' என்று செல்லப்பெயரிட்டு அழைத்ததாய் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழில் அரி என்ற சொல்லுக்கு சிங்கம் என்று அர்த்தம் வருவதுமாதிரி வேறு எந்த இந்தியமொழியில் அரிக்கு சிங்கம் என்ற அர்த்தம் வரும் என்று உங்களுக்குத்தெரியுமா?

9/01/2006 12:41:00 PM
Anonymous said...

எனக்கு தெரிந்து, வடமொழியில் (சமஸ்கிருதம்) "கேச‌ரி" என்றால் சிங்கம்(அப்படியும் ஒரு அர்த்தம்). அப்படியே பல வட இந்தியமொழிகளும் இருக்கலாம். சின்ன வயசில் "வீரகேச‌ரி" என்று படித்ததாக ஞாபகம். ஆனால் வெறும் 'அரி' பற்றி தெரியவில்லை.

--FD

9/01/2006 01:38:00 PM
Anonymous said...

http://www.20000-names.com/pet_names_cats.htm

இங்கே அரியல் என்றால் ஹீப்ருவில் பெண்சிங்கக் கடவுள் என்று அர்ததமாம்.

அரி என்றால், அரிஸ்டாட்டிலின் டிமினுட்டிவ் என்று வ‌ருகிற்து விக்கியில்.

9/01/2006 01:44:00 PM
ஒரு பொடிச்சி said...

நன்றி; இந்தியா அறீ பற்றியும் எழுத வேண்டுமென நினைத்ததுண்டு..
'வீடியோ' பாடல் முன்பு கேட்டபோது மிகவும் பிடித்தது.. i luv ur brown skin என்ற அருமையான காதற் பாடலும்..

9/01/2006 10:07:00 PM
Anonymous said...

இத்தனை விடயங்களையும், படிப்பதற்கும், பார்ப்பதற்கும் உங்களுக்கிருக்கும் சூழலைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது :-)

9/02/2006 08:08:00 AM
இளங்கோ-டிசே said...

/ i luv ur brown skin என்ற அருமையான காதற் பாடலும்.. /
பொடிச்சி, அதுபோல Can I walk with you பாடலும் எனக்குப் பிடித்தமான ஒன்று.
....
பொறுக்கி :-).

9/03/2006 12:43:00 AM
இளங்கோ-டிசே said...

Chandravathanaa says:
September 6, 2006 at 8:40 am
அழகாக விபரித்திருக்கிறீர்கள்.


(missed comment: DJ)

9/13/2006 08:50:00 PM
Athisaya said...

எத்தனை இயல்பாய் யதார்த்தத்தோடு முரண்படாது வாழ்தலை பாடுகிறார் அரி்
இந்த எழுத்துக்களை சந்திப்பது திருப்தியாயிருக்கறது்நன்றியும் வாழ்த்துக்களும் இளங்கோ

7/20/2015 01:14:00 PM