எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது
நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.
ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.
உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?
உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக... பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி (மலையாளம்)
.......
வாமனன்
நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
ஓரடி பூமிமேல் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேசியைப்போல பேசுவது என்ன்?
குடையும் மறைப்புமில்லாமல்.
நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
இரண்டாவது அடி ஆகாயத்தில் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேட்டைக்கிறங்கிய
யட்சியைப்போல பேசுவது ஏன்?
மறைப்பும் குடையுமில்லாமல்.
நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
எனக்கு உன்மேல் நேசம்
ஆனால்
மூன்றாமடியை என் உச்சியில் அழுத்தி
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்ன இதன் அர்த்தம்?
முடிவடையாத அந்த விசாரணைக்கும்
காலடியிலிருந்து நழுவிய பூமிக்கும்
தலைமுறைகளிடமிருந்து மறைந்த ஆகாயத்துக்கும் மேலாக
நான் சொன்னேன்
எனக்கு உன்னிடம் நேசம்
குடையும் மறைப்புமில்லாமல்..
பயமும் பாசாங்குமில்லாமல்.
-சாவித்திரி ராஜீவன் (மலையாளம்)
........
(அஸின், பாவனா போன்ற மலையாளச்சேச்சிகளைப் பார்த்து மட்டும் ஜொள்ளுவிடாமல், மலையாள ஆக்க இலக்கியங்களையும் கொஞ்சம் அறிந்துகொள்க என்று மலையாளக் கவிதைகள் சிலவற்றை அனுப்பி வைத்த தோழியின் அன்புக்கு நன்றி.)
.....
உடலெழுத்து
வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.
(சுகிர்தராணி)
நன்றி: புதியகாற்று
சுகிர்தராணியின், ஆரம்பக்காலக் கவிதைகள் மற்றும் 'இரவு மிருகம்' தொகுப்பை வாசித்து அவரில் மதிப்பு இருந்தாலும், தொடர்ந்து ஒரே வித்மான கவிதைகளையே எழுதித் தள்ளுகின்றார் என்ற சலிப்பு அண்மைக்காலமாய் அவர் எழுதிவரும் கவிதைகளை வாசிக்கும்போது வருகின்றது. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமான வாசிப்பனுபவமாய் இந்தக் கவிதை -எனக்கு- தோன்றியது.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
மூன்று கவிதைகளுமே பெண்மனவெளியை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றன.இவை உணர்த்தும் விஷயங்கள் ஆண் / பெண் உறவு தளத்தில் மிக முக்கிய சிக்கல்களைத் தொட்டுச் செல்கின்றன.
11/23/2006 07:06:00 PMஇது ஒரு ஆணின் பார்வையிலிருந்து இயல்பாக வெளிப்படுத்தமுடியாத விஷயங்கள்
பெண் மொழி / எழுத்தில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் விஷயங்கள் அதன் தீவிரத்தை காட்டுகின்ற அதே சமயம் அதை விட்டு வெளியே வந்து கவிதை செய்ய விடுவதில்லை .... அப்படி கவிதை செய்யச்சொல்வது சரியுமில்லை ...எழுதுபவர் நெருக்கடி / உந்துதல் தொட்டு அமையும் கவிதையே வலுவாயிருக்கும்
வடிவத்திலும் அமைப்பிலும் சுகிர்தராணி கவிதை சிறப்பாக வந்துள்ளதாகப்
படுகிறது .
மலையாளக் கவிதைகளின் மூலத்தில் இன்னும் பலமாக இருந்திருக்கும் போல தோன்றுகிறது .(மொழிபெயர்ப்பு யார் ?).
அனிதா நம்பி என்பவர் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.
[நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் என்ற தொகுப்பில் ...ஜெயமோகன் மொ.பெ]
நன்றி டி.சே
பின்னூட்டத்திற்கு நன்றி கார்திக்.
11/24/2006 10:29:00 AM.....
/நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றன.இவை உணர்த்தும் விஷயங்கள் ஆண் / பெண் உறவு தளத்தில் மிக முக்கிய சிக்கல்களைத் தொட்டுச் செல்கின்றன.
இது ஒரு ஆணின் பார்வையிலிருந்து இயல்பாக வெளிப்படுத்தமுடியாத விஷயங்கள் /
எனக்கும் அப்படித்தான் தோன்றியது கார்திக். ரோஸ்மேரியின் கவிதையை வாசிக்கும்போது, 90களின் பிற்பகுதியில் ஆழியாள் எழுதிய கவிதையொன்றின் வரிகள்தான் உடனே நினைவுக்கு வந்தது.
'...நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவேண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!
ஓன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்'
(http://aazhiyaal.blogspot.com/2005/03/blog-post_15.html)
மொழி, கலாச்சாரம் என்பவற்றைத்தாண்டி அநேக பெண்களின் ஒருமித்த எண்ணம் இப்படித்தான் இருக்கும்போலும்.
........
/மலையாளக் கவிதைகளின் மூலத்தில் இன்னும் பலமாக இருந்திருக்கும் போல தோன்றுகிறது .(மொழிபெயர்ப்பு யார் ?)./
மொழிபெயர்த்தது யாரென்று தெரியவில்லை. தோழிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றேன். பதில் கிடைத்தவுடன் பதிவிலிடுகின்றேன்.
.....
/அனிதா நம்பி என்பவர் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.
[நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் என்ற தொகுப்பில் ...ஜெயமோகன் மொ.பெ]/
இந்நூல் குறித்து கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்னும் வாசிக்கவில்லை. நாளையொரு புத்தகக்கண்காட்சி இங்கே நடைபெறவுள்ளது. கிடைத்தால் வாங்கி வாசிக்கவேண்டும்.
கார்த்திக் வேலு கூறியதுபோல மலையாளக் கவிதைகள் மூலத்தில் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் சிறப்பாக இருந்திருக்கும். சுகிர்தராணியின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவர் குறித்த முன்மொழிவுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் இறுக்கமான கட்டமைப்புடைய கவிதைகள். தான் ஒரு பெண் என்பதைக் கொஞ்சம் மறந்துவிட்டு எழுதலாமோ என்று சிலசமயம் தோன்றும். ஆனால், எப்போதும் அதை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு வேறெதனை எழுதுவது என்றும் தோன்றுவதுண்டு. டி.சே.! உங்களுக்கு அசின் என்றால் பிடிக்குமோ…?
11/24/2006 12:32:00 PMநதி,
11/24/2006 03:51:00 PMநமது தமிழ்ச்சூழலில் சுகிர்தராணி போன்றவர்கள் -எத்தனையோ கேலிகள்/விசமத்தனங்களைத் தாண்டி (தொலைபேசி abuses உட்பட) -தீவிரமாய் இயங்கிக்கொண்டிருப்பது பலருக்கு -முக்கியமாய் பெண்களுக்கு-உற்சாகமூட்டக்கூடியது. மாலதி மைத்ரியின் 'நீலி'யை வாசித்தபோது மாலதி தனது பழைய தொகுப்புக்களிலிருந்து இன்னொரு தளத்தை நோக்கி நகர விரும்புவதை உணர முடிந்தது. அது மாதிரி சுகிர்தராணியும் வேறொரு தளத்துக்கு நகர்ந்தால் நல்லது போலத் தோன்றியது. அவரது இன்றைய கவிதைகளை முன்வைத்து அதைத்தான் குறிப்பிட விளைந்தேன்.
/தான் ஒரு பெண் என்பதைக் கொஞ்சம் மறந்துவிட்டு எழுதலாமோ என்று சிலசமயம் தோன்றும். ஆனால், எப்போதும் அதை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு வேறெதனை எழுதுவது என்றும் தோன்றுவதுண்டு. /
இந்தப் புரிதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
குட்டி ரேவதி 'முலைகள்' என்று தனது தொகுப்புக்கு பெயரிட்டபோது வந்த எதிர்ப்பை பார்த்த ஒரு நண்பர் கூறினார், குட்டி ரேவதி இந்த எதிர்ப்புக்காகவே இன்னும் தீவிரமாய் இயங்குவார், விரைவில் இன்னொரு தொகுப்பை வெளியிடுவார் என்று. அப்படித்தான் பிறகு நிகழ்ந்தது. அதுபோலவே சுகிர்தராணி தான் எழுதும் கவிதைகளுக்கு வரும் விமர்சனங்களைப் பார்த்து அதற்கு எதிர்ப்புக்காட்டவேண்டும் என்று நினைத்துதான் இப்படி எழுதிக்கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை.
மணி இப்போது அதிகாலை இரண்டரையாகிக்கொண்டிருகிறது. இந்த நேரத்தில் எதேச்சையாக உங்கள் பதிவினைப் பார்க்க நேர்ந்தது.
11/24/2006 04:15:00 PMஉங்களுக்கு முதன் முதலில் பதிவிடத்தூண்டும் அளவுக்கு இந்தக் கவிதைகள் என்னை நிறய தூரம் இழுத்து வந்தது.
இத்தனை காலம் எழுதப் படாத உணர்வுகளை இன்னும் இன்னும் எழுதிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருபாதால்தான் தொடர்ந்தும் சுகிர்தராணியிடமிருந்து ஒரேவகையினதாக நீங்கள் குறிப்பிடும் கவிதைகள் வெளிப்படலாம் என எண்ணுகிறேன்.
ஆழியாழின் இந்தக் கவிதை எனக்கு நிறயப் பிடித்தது எனது மிகக் குறுகிய கவிதை வசிப்புகுள் நான் திரும்பத் திரும்ப படித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து மொழி பெயர்ப்பு கவிதைகளை உங்கள் பதிவில் எதிபார்த்திருகிறேன்.
/டி.சே.! உங்களுக்கு அசின் என்றால் பிடிக்குமோ…? /
11/25/2006 01:22:00 AMஇப்படிக்கேட்டு என்னை அவமானப்படுத்தி இருக்கக்கூடாது நதி :-). எதற்கும் இங்கே ஒருகாய் எட்டிப்பார்க்கவும், நேரமிருந்தால்....
http://elanko.net/?p=121
....
/(மொழிபெயர்ப்பு யார் ?)/
கார்திக், மொழிபெயர்த்தது சுகுமாரன். 'பெண் வழிகள்' என்ற தலைப்பிடப்பட்ட தொகுப்பில் இக்கவிதைகள் உள்ளனவாம்.
சோமிதரன் உங்களின் -எனது தளத்துக்கான- முதன்முதலான வருகைக்கு நன்றி.
11/25/2006 01:28:00 AM....
/தொடர்ந்து மொழி பெயர்ப்பு கவிதைகளை உங்கள் பதிவில் எதிபார்த்திருகிறேன். /
இயன்றளவுக்கு முயற்சிக்கின்றேன். நன்றி.
///மலையாளக் கவிதைகள் சிலவற்றை அனுப்பி வைத்த தோழியின் அன்புக்கு நன்றி.) ////
11/25/2006 02:39:00 AMசரியாத்தான் சொல்லியிருக்காங்க உங்க தோழி :)))))))))
மலையாளப் பெண்கவிஞர்களின் ஆக்கங்களை அறிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. சுகிர்தாரணி நீங்கள் சொல்வதுபோல் அடுத்ததளத்துகு (கொஞ்சம் வேகமாகவே) நகர்ந்தால் நன்றாக இருக்குமெனவே நான் நினைத்துக்கொள்கிறேன். ஒரே பொருளைச் சுற்றிசுற்றியே அவர் அதிகம் எழுதுவது போன்ற தோற்றமும் அதனால் அவர் எழுத்துக்களைப் படிப்பதில் ஓர் அலுப்பும் தோன்றிவருகிறது எனக்கு. மற்றபடி அவர் தொடும் தளங்களுக்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இச்சமூகத்தின் வக்கிரத்துக்கு இன்னுமொரு சான்று.
மலையாளக் கவிதைகளை இங்கிட்டமைக்கு நன்றி.
/தொடும் தளங்களுக்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இச்சமூகத்தின் வக்கிரத்துக்கு இன்னுமொரு சான்று./
11/26/2006 08:37:00 PMஉண்மை செல்வநாயகி. எல்லோருக்குமாய் பொதுவாய் எழுதுவதைக்க்கூட அதை எழுதும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையாகத்தானே நமது சமூகம் எடுத்துக்கொண்டு இன்னும் இடையூறுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
...
/சரியாத்தான் சொல்லியிருக்காங்க உங்க தோழி :)))))))))/
எனக்கு ஆதரவு தர எவருமில்லைப்போலும் :-).
WONDERFUL
11/27/2006 04:57:00 AMPost a Comment