கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புத்தகங்களுடனான சிநேகம்

Wednesday, December 06, 2006

'ரஷ்ய எழுத்தாளர்கள் என் கனவுகளைக் கவர்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி (மரணவீட்டின் குறிப்புகள்), டோல்ஸ்டோய், மிகயீல் ஷோலகவ் (கன்னி நிலம்), சிங்கிஸ் ஐத்மாத்தவ் (அன்னை வயல்), ஐவன் டெர்கனெவ் (அஸ்யா) ஆகியோர் என்னைப் பயங்கரமாகப் பாதித்தவர்கள். மற்றபடி அந்நியமொழி எழுத்தாளர்களென்றால்... விக்டர் ஹ்யூகோ (அவரது toilers of the sea யின் தாக்கத்திலிருந்து விடுபட பல வாரங்களாயின), ஒஸ்கர் வைல்ட், தோமஸ் போர்கே (இவரது சிறுகதைகள் மட்டும்தான் வாசித்திருக்கிறேன்), ஹெர்மன் ஹெஸ்ஸே (இவரது சித்தார்த்தா பலவிதத்திலும் என்னைச் சிந்திக்கத் தூண்டிய நாவல்), சினுவா ஆச்சிபி (சிதைவுகள்), சில இந்திய எழுத்தாளர்கள்.. தமிழ்மொழியல்லாதோர்.. (பெயர்கள் நினைவிலில்லை - சம்ஸ்காரா, நிழல்கோடுகள் என நாவல்கள் மட்டும் நினைவிருக்கின்றன). ...'
(நண்பரொருவரின் கடிதத்திலிருந்து....)

வீட்டில் அவ்வப்போது குடும்பத்தினரால் பொது அறிவு காணாது என்று நற்சான்றிதழ் பாத்திரம் பெற்றுக்கொண்டிருக்கின்றவன் நான். வலைப்பதிவிலாவது இந்தப் பலவீனத்தை மறைத்து கொஞ்சம் 'அறிவாளி' மாதிரி உரையாடலாம் என்ற ஆசையை அவ்வப்போது 'உனக்கெல்லாம் அரசியல் தெரியுமா?' என்று கேட்டு பலர் -'என்னை வளரவிடாது' - காலை வாரிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிவு வளரவேண்டும் என்றால் என்ன செய்வது? புத்தகங்களைத் தான் நிரம்ப வாசிக்கவேண்டும். சில மாதங்களுக்கு முன், ஒரு அன்பர் திட்டோ திட்டென்று திட்டி -முடிவுறாத அனுமான் வாலாய்- பதிவொன்றை எழுதியிருந்தார். கூட்டத்தோடு கோவிந்தா பாடுவோம் என்று இன்னொரு நலன்விரும்பி பழைய கறளெல்லாம் சேர்த்து வைத்து வசைக் கவிதையை உடைப்புச்செய்து கூடவே எழுதியிருந்தார். அம்மா வளர்கின்றேன் என்று விளம்பரம் ஒன்றில் காட்டப்படுவதுபோல குட்டு விழுவதில் 'சந்தோசம்' என்பதைவிட, 'உங்களின் வட்டத்திற்குள் நானில்லை' என்பதே அந்தப்பொழுதுகளில் எனக்கு நிறைவாயிருந்தது.

வசைக் கவிதையில் நலன்விரும்பி எனக்கு இரண்டு தெரிவுகளைத் தந்திருந்தார். ஒன்று அரசியலை ஒழுங்காய்ப் பேசு; இல்லையெனில் அம்மாவுக்கு தோசை சுட உதவி செய் என்று. அன்பர் சொன்னதை சும்மா தட்டிக் கழிக்கமுடியாது. 'மூலதனத்தை' எல்லாம் கரைத்துக் குடித்தவர் சொன்னால் ஏதோ பெரும் பின்புலம் இருக்கத்தானே செய்யும்? எனவே இல்லாத என் மூளையைக் கசக்கத் தொடங்கினேன். புலம்பெயர் தேசமொன்றில் நான் உயிர் வாழ்ந்துக்கொண்டிருப்பற்கு எனக்கு அரசியல் பேசுவது அவசியமா? இல்லை தோசைக்கு மா கரைத்து ஊற்றுவது முக்கியமா? உயிர் வாழ்வதற்கு உணவே அவசியம் என்று மூன்றோ நான்காம் வகுப்பில் சுற்றாடல் கல்வியில் கற்பித்த 'மனிதருக்கு அத்தியாவசியமானது உணவு உடை உறையுள்' என்பது இன்னமும் எனக்குள் பதிவாயிருந்தது இந்த நேரத்தில் கைகொடுத்தது.

சரி, இப்படி 'அன்பர்கள்' பாராட்டு வழங்கும்போது என் மானம் ரோசம் பொங்கியெழுந்தல்லவா இருக்கவேண்டும்? மானம் ரோசம் வீரம் இல்லாது தமிழனாய் இருப்பதில் என்ன பயன்? இது போதாது என்று வைத்த புனைபெயரில் 'தமிழன்' என்றும் சேர்த்து வைத்தல்லவா படம் காட்டிக்கொண்டிருக்கின்றேன். திண்ணையிலோ பதிவுகளிலோ எனக்கு பரீட்சயமான ஒரு நண்பர் 'தம்பி நீர் டிசே தமிழன் என்றால் நாங்கள் என்ன டிசே சிங்களவனா இல்லை டிசே ஆங்கிலேயானா?' என்று கேட்டார். நான் சும்மா விடுவேனா என்ன? தமிழில் எழுதும்போது நான் டிசே தமிழன், சிங்களத்தில் எழுதும்போது டிசே சிங்களவன், ஆங்கிலத்தில் எழுதும்போது டிசே ஆங்கிலேயன் ஆவேன் என்றேன். அவரும் தான் ஊக்குவித்த பெடியன் நல்லாய்த்தான் 'வளர்ந்துவிட்டான்' என்று தலையிடித்துக் கொண்டிருப்பார் என்பது வேறு விடயம்.

இப்படி பதிவுகளில் சிலர் வசைக்கவிதை/பதிவுகள் எழுதிக்கூட ஏன் எனக்கு -பெண்களுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போல- ஆண்களுக்குரிய 'குணங்கள்' எதுவுமே ஊற்றெடுத்துக் கிளம்பவில்லை என்பதுதான் மிகுந்த கவலையாயிருந்தது. போற வாற இடமெல்லாம் சைட் அடிக்கின்ற ஸ்பானிய பெண்கள்தான் எனது தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்களோ என்ற அச்சமே எனக்குள் எழுந்தது. ஆனால் இந்த மானம் ரோசம் எனக்கிருப்பின் அது வளாகத்தில் இருந்தபோதே பொங்கியிருக்கவேண்டும். பரீட்சைகளின்போது குறைய மார்க்ஸ் கிடைக்கும்போதெல்லாம், என் படிப்பில் பிழையில்லை prof ன் பேனையில்தான் தவறு என்று பெருந்தன்மையாக நினைப்பவன் நான். ஏன் பாடங்களில் சித்திபெறத் தவறினால் கூட.... அந்தப் பாடத்தைப் பழிவாங்கவேண்டும் என்று சிரத்தையாக திருப்பப் படிக்காமல், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றுதான் நகர்ந்து போயிருக்கின்றேன். எனவே என் அடிப்படையில்தான் பிரச்சினை இருக்கின்றததே தவிர, எங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் அல்ல என்று இப்போது புரிகின்றது.

சரி எதற்கும் இருக்கட்டும்; அன்பர்கள் அளவுக்க்குமீறி 'பாராட்டுப் பத்திரம்' வாசிக்கும்போது நானும் திருப்ப அவர்களுக்கு பா.பாத்திரம் கொடுப்பதற்கு உசாத்துணையாக இருக்கட்டும் என்று சில புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். புத்தகங்களுக்கு ஓடர்செய்து பல மாதங்களாகியும் என் கைகளில் வந்து சேரவில்லை. கனடீய அரசாங்கம்தான் புத்தகங்களைத் தடை செய்து வைத்திருக்கின்றதோ என்ற ஜயம் வந்தது. கனடாவில் நாற்பதோ, ஜம்பதோ வருடங்களுக்கு முன் சின்னதாய்க் கட்டியமைக்கப்பட்ட கம்யூனிசக் கட்சியை ஆட்சியில் இருந்த அரசாங்கம் தடை செய்தது என்று எங்கையோ வாசித்திருந்தேன். அதுபோல் தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் - மார்க்ஸ், மாசேதுங், மல்கம் எக்ஸ், சேகுவேரா, காஸ்ரோ போன்றவர்களின் படங்களைப் பார்த்துவுடன் பதுக்கி வைத்துவிட்டாகளோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுங்கத்திலிருந்த( customs?) யாரோ ஒரு நல்ல மனிதர்தான், எங்கள் கனடீய பிரதம உறங்கிக்கொண்டிருக்க்கும்போது இரவோடு இரவாய் அனுப்பியிருக்கவேண்டும். கைகளில் புத்தகங்கள் கிடைத்துவிட்டன.

இப்படியாக இன்னும் பல கிளைக்கதைகள் உண்டெனினும்-உண்மையான- காரணங்கள் இரண்டே. பெரியாரைப் பாதிக்கின்ற எவரையும் மார்க்ஸும் பாதிக்கவே செய்வார். பெரியாரை விளங்கிக்கொள்கின்ற எவராலும் தலித்தியத்தையும் பின் நவீனத்துவத்தையும் இலகுவாய் அரவணைக்க முடியும். அந்த ஆர்வமே இவ்வாறான புத்தகங்களை வாங்கி வாசிக்கச் செய்தது.

இதைவிட இன்னொரு காரணம் உண்டு. தோழர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, பெரியாரைச் சிலாகித்த அளவுக்கு மார்க்ஸை சிலாகித்துப் பேசாதது அவருக்கு கவலை தந்திருக்கவேண்டும். அவர் இடதுசாரிப் பின்புலத்தில் வந்தவர். நான் பெரியாரை வியந்து கொண்டிருப்பதுபோல அவர் மார்க்ஸை வியந்துகொண்டிருப்பவர். பெரியாரைப் போலத்தான் மார்க்ஸும் சாதாரண மனிதர் என்று தெளிவுபடுத்தவோ என்னவோ மார்க்ஸ் எழுதிய காதற்கவிதைகளை எல்லாம் வாசிக்கத் தந்தார். 'மார்க்ஸை எங்கோ எட்டாத தொலைவுக்கு துரத்திவிட்டார்கள் நமது மார்க்சிசவாதிகள்...' என்றதற்கு 'மார்க்ஸை நேர்மையாக அணுகினால் அவர் நெருக்கமாகிவிடுவார்' என்றார். 'நிச்சயமாய் மார்க்ஸ் மீது காழ்ப்புணர்வில்லை; இன்றைய உலக அரசியலின் சிக்கலான சூழ்நிலைக்குள் கடைசி நம்பிக்கையாய் இருப்பது மார்க்ஸியமே தவிர வேறு எதுவுமல்ல; ஆனால் மார்க்ஸை வைத்து கொண்டாடுபவர்களே மார்க்ஸை நெருங்கவிடாது செய்துவிட்டார்கள்' என்றேன் (வசைக்கவிதை எழுதிய அன்பரும் யாரோ ஒரு எழுத்தாளரின் வாரிசு என்றுதான் பட்டமொன்று இறுதியில் தந்திருந்தவர்; தங்கள் மீதான விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ளாது வேறொருவருடன் சேர்த்து கழுவிலேற்றுபவர்களிடமிருந்து... எப்படி மார்க்ஸை கற்றுக்கொள்வதாம்?) மேலும் இணையத்துக்கு வந்ததன்பின் பெரியாரை ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட நண்பர்கள் தங்கமணி, ரோசாவசந்த் போல, மார்க்ஸை தங்கள் சொந்தக் கருத்துக்களுக்கு முண்டு கொடுக்க உபயோகிக்காது- மார்க்ஸை மார்க்ஸாக முன்வைத்து உரையாடியவர்களை இணணயத்தில் நான் இன்னும் காணவில்லை. அத்தோடு இவர்களிடமிருந்து மார்க்ஸை கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பிய சிலர் இன்னும் மிகமோசமான முறையில் மார்க்ஸை அணுகியதையும். தங்களுக்குள் இருக்கும் வலதுசாரி/சாதீய முகங்களைக் காட்டியதையும் பார்த்து 'தள்ளியிரும் பிள்ளாய்' என்று விலத்தித்தான் வரமுடிந்தது (கோபம் வருமென்றாலும் 'வறட்சியான மார்க்ஸியர்கள்' என்றுதான் அவர்களை அழைக்கமுடியும்).

மேலைத்தேய தத்துவாசிரியர்களை/ஆய்வாளர்களை எல்லாம் போகின்றபோக்கில் உதிர்த்துவிட்டு செல்லும் இவர்கள் எத்தகைதூரம் அந்த ஆய்வாளர்கள் கூறியதை உள்வாங்கிக்கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதே. Noam Chomskyயை -சொற்பமாய்- வாசித்தவளவில் அவர் விவாதித்த தேசியவாதம்/தேசிய இனங்களின் பிரச்சினையைக் கூட - ஈழ இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள்- உள்வாங்கி தமிழில் விவாதித்தமாதிரி காணக்கிடைக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். பல்வேறு இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் பல இயக்கங்கள் சோசலிச சமதர்மமே முடிவான தீர்வு என்று ஈழத்தில் கூறிக்கொண்டிருந்தார்களாம். விசுவானந்ததேவனிடம் சேரப்போன சில இளைஞர்கள் கேட்டிருக்கின்றார்கள், எமக்கான அரசு எப்படி இருக்கும் என்று....? இலங்கை போன்ற நாடுகளுக்கு முற்றுமுழுதான கொம்யூனிசம் என்றைக்குமே சாத்தியப்படாது என்றுதான் எடுத்தவுடனேயே கூறியிருக்கின்றார் (அவரோடு இயங்கிய தோழர் ஒருவர்தான் கூறியது). இத்தனைக்கும் விசுவின் பாதிப்பில்தான் எஸ்.வி.ஆரோ அல்லது அ.மார்க்ஸோ அரசியல் எழுத்து இயக்கத்துக்கு வந்தவர்கள் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன். உடனே விசுவானந்ததேவன் இப்படிக்கூறிவிட்டார் எனவே அவர் கம்யூனிச துரோகி என்று அவரது காணாமற்போன உடலை கடலிலிருந்து கண்டுபிடித்து முத்திரை குத்தாதிருப்பார்களாக....!

இவற்றை ஏன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்....? வேறு ஒன்றுமில்லை, மீண்டும் சனி பிடித்துவிட்டது. அவ்வளவுதான்.

இனி இன்னும் இரண்டு பதிவுகள், நான்கு வசைக்கவிதைகள் பறந்து வரும். புன்னகைத்தபடியே, மார்க்ஸை மார்க்ஸின் பார்வையினூடாக மட்டும் பார் என்கின்ற தோழருடன் விவாதித்தபடி, வந்திருக்கும் புத்தகங்களை ஆறவமர வாசிக்கவேண்டியதுதான்.

நியூ புக்லாண்டிலிருந்து வந்து சேர்ந்த புத்தகங்கள்:
book2

(1) மார்க்சியத்துக்கு அழிவில்லை - ஞானி
(2) மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை - ஜோர்ஜ் தொம்ஸன் (தமிழில்: எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப்)
(3) அழகும் உண்மையும்: மார்க்ஸிசப் பார்வை- ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் (தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)
(4) அ.அயோத்திதாசர் ஆய்வுகள்- ராஜ் கெளதமன்
(5) ஆட்சியில் இந்துத்துவம் - அ.மார்க்ஸ்
(6) மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்
(7) தலித்தியமும் உலக முதலாளித்துவமும் - எஸ்.வி.ராஜதுரை
(8) குற்றவாளிக்கூண்டில் வட அமெரிக்கா -தமிழாக்கம்: அமரந்தா
(9) இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு - அ.மார்க்ஸ்
(10) இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.B.R.அம்பேத்கார் (தமிழில்:செங்கோபன்)
(11) ஆகஸ்ட் 15: துக்கநாள் -இன்பநாள் - பெரியார், அண்ணா, கேசரி (தொகுப்பு:எஸ்.வி.ராஜதுரை)
(12) ஆதி சங்கரரின் மக்கள் விரோத கருத்துக்கள் - பகவான்
(13) கற்பிதங்களின் தேசம் - குமரன்தாஸ்
(14) இந்து இந்தியா: அக்ரனியிலிருந்து அத்வானிவரை - எஸ்.வி.ராஜதுரை
(15) மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ரா.கிருஸ்ணய்யா
(16) இந்தியத் தத்துவங்களின் அரசியல்- ந.முத்துமோகன்
(17) காந்திய அரசியல் - வ.கீதா
(18) பூர்தியாவும் மார்க்சிசமும் - எஸ்.வி.ராஜதுரை
(19) புத்தர் சிரித்தார் - பாமரன்
(20) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

8 comments:

தமிழ்நதி said...

என்ன டி.சே.,
பெரிய பெரிய புத்தகங்களெல்லாம் வாசிக்கிறீர்கள்… வாசிக்கப் போகிறீர்கள். எனக்கு சித்தாந்தங்கள் என்றாலே பொதுவாக ஒரு ஒவ்வாமை. அம்மாவின் அதீத பக்தியால் கடவுளோடு நெருக்கமற்றுப்போனதுபோல, செயலற்று சும்மா எடுத்ததற்கெல்லாம் மாக்சியம், கொம்யூனிசம், பின்நவீனத்துவம் என்று சொற்சிலம்பம் நடத்திக்கொண்டிருந்தவர்களைப் பார்த்ததன் விளைவோ என்னவோ… ஆனால்… அறிந்துகொள்ளத்தான் வேண்டும். ‘மூலதனம்’ஐந்து பாகங்களும் வாங்கிவைத்துக்கொண்டு அவற்றை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு திரிகிறேன். சிரமப்பட்டாவது வாசித்து முடித்துவிடவேண்டும். சிலவேளை வாசிக்க ஆரம்பித்தால் நெருக்கமாகிவிடவும் கூடும். பொது அறிவு போதாது என்று வைதால் அதற்கொன்றும் அலட்டிக்கொள்ளாதீர்கள். மனிதரில் மனிதர் நேயம் கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்.

12/06/2006 10:18:00 AM
இளங்கோ-டிசே said...

நதி, முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும் :-). மற்றும்படி 'தத்துவங்களைவிட கணப்பொழுது வாழ்வே
சாலவும் சிறந்தது..' என்றுதான் விளங்கி வைத்திருக்கின்றேன்.

/மனிதரில் மனிதர் நேயம் கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்./ இதுவேதான் எனது விருப்பும் எனக்கான இருப்பும் என்று நம்புகின்றேன். நன்றி.

12/06/2006 12:19:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

க்ரியாவும் அடையாளமும் வெளியிட்ட அத்தனை புத்தகமும் இப்ப உங்கடை வீட்டை எண்டுறியள்.இதுகளோடை மண்டை உடைக்கிறதை விட தோழர் தியாகுவின்ரை சுயசரிதை வாங்கி வாசிச்சுப் பாருங்கோ இப்ப நல்ல கண்ணுவின்ரை சுயசரிதையும் புத்தகமா வருதாம்.உண்மையான மார்க்சியர்களுக்கும் சும்மாக்சியர்களுக்கும் வித்தியாசம் விளங்கும்.

அண்ணையாணைக் கேட்கிறன் உங்களுக்கு வசைபாடினவை மார்க்சீய வித்துவான்கள் ஏனண்ணை போய் பிரான்சிலையும்,ஜேர்மனியிலையும் குடியிருக்கினம் ஒரு உகண்டாவோ சோமாலியாவிலோ அல்லது இன்றும் மார்க்சிய நாடுகளாக இருக்கும் தென்னமரிக்க நாடுகளிலோ போய் குடியிருக்கேலை.அந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகள் எண்டு அவைக்குத் தெரியாதோ மார்க்கிலை உழைச்சது போக செமிக்கிறதுக்கு கொஞ்சம் மார்க்சையும் படிக்கிறவையின்ரை கதையையும் ஒரு கதையெண்டு நீர் படிக்கிற புத்தகங்களை படமெடுத்து வேற காட்டுறீர்.

பொறுங்கோ பாய்ஞ்சடிச்சுக்கொண்டு எனக்குப் பதில் சொல்ல வரட்டும் மிச்சமிருக்கு. இண்டைக்கு சிங்கப்பூர் டொலரிலை உழைச்சதுபோக நானும் சும்மா தான் இருக்கிறன் எவனாவது மாட்டுறானோவெண்டு பார்ப்பம்

12/06/2006 02:16:00 PM
செல்வநாயகி said...

டிசே, பயமுறுத்துதல் என்ற தலைப்புக்குப் பொருத்தமாகவல்லவா செய்துகொண்டிருக்கிறீர்கள் இதுமாதிரிப் புத்தகங்களையெல்லாம் படிக்கிறேனென்று படம் எடுத்துப் போட்டுக்கொண்டு:))

///மனிதரில் மனிதர் நேயம் கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்./ //

இதை நம்பித்தான் நனெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறேனாக்கும். (படிக்காத என் சோம்பேறித்தனத்திற்குச் சொல்லும் ஒரு சாக்கு என நீங்கள் நினைத்தால்...........அது சரியென்றோ, சரியில்லையென்றோ நான் சொல்லமாட்டேன்:))

12/06/2006 03:51:00 PM
சின்னக்குட்டி said...

//விசுவானந்ததேவனிடம் சேரப்போன சில இளைஞர்கள் கேட்டிருக்கின்றார்கள், எமக்கான அரசு எப்படி இருக்கும் என்று....? இலங்கை போன்ற நாடுகளுக்கு முற்றுமுழுதான கொம்யூனிசம் என்றைக்குமே சாத்தியப்படாது என்றுதான் எடுத்தவுடனேயே கூறியிருக்கின்றார் //

டிசே... விசு சொன்னது மெத்த சரியானதாய் இருக்கும்.. இலங்கையை போன்ற முதலாளித்துவம் உச்சகட்டம் நிலையை அடையாத நிலையில உடனடி கம்னியூஸ்ட புரட்சி சாத்தியமில்லை என்று சொல்லியிருக்க கூடும்... இலங்கை இன்னும் ஒரு அரை நிலபுரத்துவ நிலமையில் இருப்பதனால் ஒரு புதிய ஐனநாயக புரட்சி பின் தான் சாத்தியம் என்ற நிலை என்று சொல்லியிருக்க கூடும்.. அதுக்காக..........மாக்சிசத்தை நிராகரித்ததாக

12/06/2006 06:07:00 PM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், தியாகுவின் சுயசரிதைப் புத்தகத்திற்கு என்ன பெயர்? அவர் எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் இன்னொரு தொடர் ஜூனியர் விகடனில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். நீங்கள் குறிப்பிடுவது வேறு எதுவோ என்று நினைக்கின்றேன்.
.....
அவரவர் எங்கிருந்தும் எழுதட்டும்; அது பெரிய பிரச்சினையில்லை. ஆனால் மார்க்சிசம் முழுவதையும் தாங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்ததாய் எழுதாவிட்டால் போதும். மற்றும்படி நீரும் கூடக்கதைக்கிறதைப் பார்த்தால் உமக்கும் -என்னைப் போல- சனிபகவான் அருள்பாலிக்கத் தொடங்கிவிட்டார் என்று நினைக்கின்றேன். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற மாதிரி களத்துக்கு விரைவில் போகலாம்...ஆனால் கொஞ்சம் பொறும் முதலில் உந்தப் புத்தகங்களை ஒழுங்காய் வாசித்துவிட்டு வருகின்றேன்.

12/06/2006 11:32:00 PM
அருண்மொழிவர்மன் said...

நியூ புக்லாண்ட் இன் இணைய முகவரி என்ன

12/07/2006 05:26:00 AM
இளங்கோ-டிசே said...

/பயமுறுத்துதல் என்ற தலைப்புக்குப் பொருத்தமாகவல்லவா செய்துகொண்டிருக்கிறீர்கள் இதுமாதிரிப் புத்தகங்களையெல்லாம் படிக்கிறேனென்று படம் எடுத்துப் போட்டுக்கொண்டு:))/
செல்வநாயகி, உங்களையுமா பயமுறுத்திக்கொண்டிருக்கின்றேன். போகின்றபோக்கைப் பார்த்தால் இனி ஒருவரும் என் வலைப்பதிவுப்பக்கம் வரமாட்டார்கள் போலும் :-(. படம் எடுத்துக்காட்டுவது எல்லாம் சிலர் தாங்கள் அந்தப் புத்தகம் வாங்கிவிட்டேன் இந்தப் புத்தகம் வாசித்துவிட்டேன் என்று எழுதி எனக்கு வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டிருப்பார்கள். ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வருமென்றுதான் இந்த பட்டியல் மற்றும் படம் :-)
...................
சின்னக்குட்டி கருத்துக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் இடையில் முறிந்த மாதிரித் தெரிகின்றது.....?
.....................
அருண்மொழி நியூ புக்லாண்ட்ஸின் இணைய முகவரி:
http://www.newbooklands.com/.

12/07/2006 09:48:00 AM