கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்

Wednesday, April 25, 2007

- சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யை முன்வைத்து-

மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் - அவன் உத்தி பற்றிய விபரங்கள் எல்லாம் தெரியாமல் இருப்பது - அவனையே நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதிப்பதைப் போன்றது - ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசமான விடயம்!
-Maria Lusia Bombal on The Tree

உலக வாசக பரப்பில் ஒரு காலத்தில் அதிக கவனம் பெற்றிருந்த சோவியத்து படைப்புகள் பின்னகர்ந்து செல்ல அந்த வெற்றிடத்தை இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பின்னாட்களில் நிரப்பத் தொடங்கின. சர்ரியலிஸமும், பின்நவீனத்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட சூழலிருந்து புதுவகையிலான கதைசொல்லும் பாங்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் முகிழ்ந்தெழத்தொடங்கின. அங்கிருந்த பல நாடுகளின் சமநிலையற்ற அரசியற் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால், நேரடியாகக் கதைசொல்லும் முறைகளிலிருந்து விலகிய மாய யதார்த்தவாத கதைகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. 'கடல்கன்னி' என்று சாருநிவேதிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மிகுதி அனைத்தும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளாகும். ரஷ்யப்படைப்புக்களைப் போல இலத்தீன் அமெரிக்கா படைப்புகள் பெரும்பான்மையில் மானுடநேசிப்பே அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது. இயற்கையின் மீதான பாடலும், பூர்வீக மண் மீதான பற்றும் அநேக பிரதிகளின் ஓரங்களில் தொடர்ந்து கசிந்தபடி இருக்கின்றன.

மரியா லூயிஸாவின் (María Luisa Bombal) 'மரமும்', ஆர்த்துரே பியேட்ரியின் (Arturo Pietri) 'மழையும்' இத்தொகுப்பிலுள்ள அருமையான கதைகள். மரம் கதையில் ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்களுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறக்கும் பெண்ணே முக்கிய பாத்திரமாகின்றாள். ஐந்தும் பெண்களாக இருக்கின்றார்களே என்ற அலுப்பில் ஆறாவதாய்ப் பிறக்கும் பெண்ணிற்கு வெளி உலகம் பற்றி எதுவும் கற்பிக்காமல் வீட்டிற்குள் வைத்து அவளது பெற்றோர்கள் வளர்க்கின்றார்கள். அந்தப்பெண்ணும் வெகுளியும் அறியாமையுமாய் வாழ்வைக் கழிக்கின்றாள். தனது சகோதரிகள் அனைவரும் இசையிலும் இன்னபிறவற்றிலும் தேர்ச்சி பெற இவள் அது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி வளர்வதோடு, தனது வயதுக்கு சற்று அதிக வயதில் இருக்கும் லூயிஸையும் மணந்துகொள்கின்றாள். லூயிஸிற்கு வேலை என்பதே வாழ்வின் முக்கிய விடயம் என்பதைத்தவிர தனது இளம் மனைவியோடு சந்தோசமாய் பொழுதைக்கழிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இவளுக்கோ நண்பிகள் என்று நெருங்கிப்பழகவும் எவருமில்லை. தனியே, வெளியே சடைவிரித்திருக்கும் இறப்பர் மரத்தோடு சிநேகித்தபடி இருக்கின்றாள். தனக்குள் புதைத்து வைத்திருந்த கதைகளை எல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்தபடி நாட்களை நகர்த்துகிறாள்.

துணைவனோடு பல்வேறு பிணக்குகள் வந்து போகின்றபோதும் அவனைவிட்டுப் பிரிந்துசெல்ல விரும்பாதவள், இறுதியில் அந்த இறப்பர் மரத்தை -நடக்கும் பாதைக்கு தடங்கலாயிருக்கின்றதென நகர ஊழியர்கள் வெட்டும்போது- இனி தன் துணைவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று வீட்டைவிட்டு வெளிக்கிடத்தொடங்குகின்றாள். இதுநாள்வரை அந்தப்பெண்ணின் திருமணவாழ்வின் எல்லா அபத்தங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளச்செய்தது அந்த இறப்பர் மரமே என்ற நினைப்பை வாசிக்கும் நம்மிடையே பதித்தபடி கதை முடிகின்றது. நாமெல்லோரும் எத்தனையோ வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்திக்கின்றபோதும் ஏதோ ஒன்றில் நாம் மீளப்போவற்கான நம்பிக்கைகளை குவித்துவைக்கின்றோம். அந்த இறுதி நம்பிக்கையும் தகர்கின்றபோது என்னசெய்வது என்று புரியாமல் திகைப்பதும், சிலவேளைகளில் அது தற்கொலை போன்ற வாழ்வின் இறுதிக்கணங்களைத் தேடிப்போவதாய் இருப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாய் இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய மரியா லூயிஸா கூட தனிப்பட்ட வாழ்வின் திருமணத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தனது கணவரைச் சுட்டுக்கொலைசெய்ய முயன்று, தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்த்துரே பியேட்ரியின் 'மழை' கதை மாய யதார்த்தக் கதைக்கு நல்லதொரு உதாரணமாய்க் கொள்ளக்கூடியது. மழை பொய்த்துப்போகின்ற ஒரு வறண்ட கிராமத்தில் வயோதிகத் தம்பதிகள் இருவர் வசிக்கின்றார்கள். என்றேனும் ம்ழை பெய்து பயிர்களின் வறட்சியும், தமது ஏழ்மையும் இல்லாமற்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் இந்தத் தம்பதிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டேயிருப்பவர்கள். இப்படியான ஒரு மனுசனோடு இத்தனை காலம், தான் எப்படி சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்ற வியப்புத்தான் அந்த கிழவிக்கும் அநேக நேரங்களில் வந்துபோய்க்கொண்டிருக்கும். வறட்சிமிகுந்த ஒருநாளில் கிழவன் ஒரு சிறுவனை வழியில் காண்கின்றார். அவனை வீட்டுக்கொண்டு வருகையில் -அவனது வருகையால்- சின்னச் சின்ன விடயங்களில் தமக்கிடையில் இருக்கும் அன்பை, மகிழ்வை, நெகிழ்வை அந்த முதிய தம்பதிகள் கண்டுகொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் இவ்வரிய தருணங்களைத் தங்களுக்குள் தவறவிட்டிருந்தோமே என்று சிறுவனை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். ஒருநாள் சிறுவன் காணாமற்போய்விடுகின்றான். கிழவன் அவனைத் தேடிக்கொண்டு மலையில் ஏறத்தொடங்குகின்றார். அவனது குரல் கரைந்துகொண்டிருப்பதாய் பிரமை நீள்கின்றதே தவிர அவனது உருவம அந்தக்கிழவனின் கண்களில் தென்படவேயில்லை. நேரமும் களைப்பும் கூடிச்செல்லச் செல்ல அந்த குரல் கூட இறுதியில் மறந்து/மறைந்து போகின்றது. இனியும் அந்தச் சிறுவனை தேடமுடியாது என்று நினைக்கின்றபோது மழை தூறலாய் நீண்டகாலங்களின் பிறகு பொழியத்தொடங்குகின்றது. பெருமழைபொழிந்து பயிர்கள் எல்லாம் செழித்துவளர்ந்து அந்த முதிய தம்பதிகளின் வறுமை போய்விடக்கூடுமென்ற நம்பிக்கை முகிழவதைப் பிரதியின் அடியில் மறைத்தபடி கதை முடிகிறது. உண்மையில் இந்தக் கதையில் சிறுவன் என்பதே ஒரு படிமம்தான். கதையில் அவன் இருப்பதில்லை. அந்த முதிய தம்பதிகளின் ஒரு நம்பிக்கையாய் அது படிமமாக்கப்படுகின்றது. சிறுவனின் இருப்பு உண்மையானதா அல்லது மாந்திரீகமானதா என்பதில் வரும் மயக்கம் இந்தக் கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.

அகஸ்ரோவின் (Augsutro Bastos) 'கைதி', ஈழச்சூழலில் வளர்ந்த நம்மைப்போன்றவருக்கு மிகப்பரிட்சயமான கதையாக இருக்கும். சால்டிவோர் என்ற பதின்ம வயதினனின் பார்வையில் கதை விரிகின்றது. பராகுவேயில்(?) நடக்கும் கெரிலாக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கட்டளையிடுகின்றது. கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ஒரு இராணுவப்பகுதியில் சால்டிவோர் வலுக்கட்டாயமாய் பதினெட்டு வயதில் இணைக்கப்படுகின்றான். கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பதுங்குமிடத்தையும் இராணுவம் சுற்றிவளைக்கின்றது. அந்த முகாமைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்கள் பலரைக் கொன்றபின், முக அடையாளம் கூட தெரியாது சிதைக்கப்பட்ட ஒரு கைதிக்கு காவலாய் இருக்கும்படி சால்டிவோரை இராணுவ அதிகாரி பணித்துவிட்டு அடுத்த மனிதவேட்டைக்கு தனது 'வீரர்களுடன்' புறப்படுகின்றார். இந்தப் பையன் பயந்தபடியே கைதிக்கு காவலுக்கு இருக்கின்றான். தன்னைப்போலவன்றி கிளர்ச்சியாளர் படையில் விரும்பிச்சேர்ந்த தனது அண்ணாவின் நினைவு அவ்விரவில் அப்பையனுக்கு வருகின்றது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டுமென்ற அண்ணாவின் நெகிழ்வான வார்த்தைகள் அவனது மனவெளியில் அலையத்தொடங்குகின்றன. வெளியே புறப்பட்ட இராணுவ அணி திரும்பி வரும்போது தனது அண்ணாவையும் இந்தமுறை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என்று சால்டிவோர் கவலைப்படுகின்றான். அ த்தோடு உருக்கலைக்கப்பட்டு அரையுயிரோடு இருக்கும் கைதி தன்னைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்று பயந்து, அந்தக்கைதியை ஒரு குழியினுள் அமிழ்த்தி தலைமட்டும் வெளித்தெரியும்படி ஓரிடத்தில் புதைக்கத் தொடங்குகின்றான். அடுத்த நாள் விடியலில் இராணுவ அணி சில கைதிகளோடு திரும்பிவரும்போது , சால்டிவோர் துப்பாகியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டிருக்கின்றான். இராணுவ அதிகாரி தப்பியோடிய சால்டிவோருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கட்டளை பிறப்பித்து அவனைத் தேட தனது இராணுவத்தை அனுப்புகின்றார். இறுதியில் தற்கொலை செய்த சால்டிவோரின் உடலை இராணுவம் காண்கின்றது. சால்டிவோர் இப்படிப் பயந்து ஓடி தற்கொலை செயததற்கு -கைதியாய் அரைகுறை உயிராய் இருந்து இறுதியில் இறந்துபோனது தனது சகோதரன் என்பதை கண்டு- அதை ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்தத்தின் கொடூரமே என்ற வாசிப்புக்குறிப்பை நம்மிடையே விட்டபடி கதை முடிகிறது.

இந்தக்கதையை வாசிக்கும்போது Hernando Tellez எழுதிய Lather and Nothing Else நினைவுக்கு வருகின்றது. அதில் ஒரு கிளர்ச்சியாளன் சவரம் செய்கின்ற தொழிலாளியாக இருக்கின்றான். அங்கே சவரம் செய்ய வருகின்ற இராணுவ கப்டன், பல கிளர்ச்சியாளர்களை கொடூரமான முறையில் கொன்றுகுவித்தவன் மட்டுமில்லாது, சவரம் செய்கின்றபோதும் அடுத்து நிகழப்போகும் -கிளர்ச்சியாளர்களைப் போட்டுத்தள்ளும்- நிகழ்வையும் விபரிக்கின்றான். ஒரு கத்தியின் நுனியில் அவனது கழுத்தை துண்டித்துவிடும் சந்தர்ப்பம் வாய்த்தும், அந்தக் கப்டனைக் கொலை செய்யாது கிளர்ச்சியாளன் தப்பவிடுகின்றான். அந்தக்கொடூரனைக் கொலைசெய்ய முடியாது தடுத்தது எதுவென எண்ணும்போது, கப்டனைப் போல தான் ஒரு 'தொழில்முறை' கொலைகாரன் இல்லையென்பது என்பது அந்தக்கிளர்ச்சியாளனுக்கு உறைக்கிறது. இல்லாவிடின் அவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடுவானா என்ன? கப்டனும் 'கொலை செய்வது அவ்வளவு இலகுவல்ல; எனது வார்த்தைகளை நீ நம்பலாம்' என்று கூறியபடி நகர அக்கதை முடிவுறும்.

2.
சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யில் ஆறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்கக் கதாசிரியரான Ronald Sukenickன் கதையைத் தவிர மிகுதி அனைத்துக் கதைகளும் வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றன. Ronald Sukenickன் 98.6 நாவலின் வாசிப்பு, தனது சீரோ டிகிரி நாவலில் ஒரு தெறிப்பாய் இருக்கிறது என்று சாரு எங்கையோ குறிப்பிட்டது நினைவிலுள்ளது. அடிக்கடி சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களை மாற்றிக்கொண்டிருக்கின்ற சாரு ஓரிடத்தில் குறிப்பிட்டது; தமிழில் தானும், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஸ்ணனும் 'மட்டுந்தான்' கதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பது ஞாபக அலைவரிசையிலுள்ளது. தொன்மங்களுக்குள்/செவ்வியல் பிரதிகளுக்குள் ஆழமும் விரிவுமான வாசிப்பைச் செய்யாது நவீனத்தோடு மட்டும் தொங்கி நின்ற படைப்பாளி என்று சுந்தர ராமசாமியை ஜெயமோகன் நிராகரிப்பதை ஒருபுறத்தில் நாம் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் தமிழின் தொன்மங்களுக்குள் நுழைந்து விரிவான வாசிப்பைச் செய்யும் ரமேஷ்-பிரேமின் எழுத்துகள் ஜெயமோகனின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நாகர்கோயிலும், பாண்டிச்சேரியும் 'தொலை'வில் இருப்பதைத் தவிர வேறொரு காரணமும் என்னளவில் தெரியவில்லை. அல்லது செவ்வியலில் இருந்து மீள்வாசிப்பை தன்னைப்போன்ற இந்துத்துவ 'நவீனமாதிரிகள்' மட்டுந்தான் செய்யமுடியும் என்ற எண்ண்ம் ஜெயமோகனிற்கு இருக்கின்றதோ தெரியவில்லை. ஜெயமோகனை விடுவோம்; தமது 'கிரணம்' இதழ்கள் மூலம் தளம் அமைத்துக்கொடுத்து ரமேஷ்-பிரேமை அணைத்து வளர்த்த சாருவிற்கு- உலக இலக்கிய வாசிப்பைத் தன்னைத்தவிர வேறொருவரும் விரிவாகச் செய்யவில்லையென அடிக்கடி குதூகலிக்கும் ஒரு படைப்பாளிக்கு- ரமேஷ்-பிரேமின் படைப்புகள், கண்களைச் சிறிது கூட உறுத்தவில்லையா என்பதுதான் வியப்பாயிருக்கிறது. எஸ்.ராமகிருஸ்ணன் போன்றோர் கூட மாய யதார்த்த கதைகள் எழுதி -இதெல்லாம் நமக்குச் சரிவராதென- மீண்டு/மீண்டும் யதார்த்தவாத கதைசொல்லல் முறைக்குத் திரும்பியிருக்கின்றவேளையில் தொடர்ந்து பலவித பரீட்சார்த்த முயற்சிகளில் கதை சொல்லல் முறைகளையும் கால அடுக்குகளையும் குலைத்துப் போட்டபடி நகர்ந்தபடியிருக்கும் ரமேஷ்-பிரேமின் கதைகளை நம் இலக்கிய விமர்சகர்கள் மிக இலகுவாய் புதைத்துப்போட்டு நகர்ந்துகொண்டிருப்பதில் இலக்கிய அரசியலைத் தவிர வேறெதனைக் காரணமாய்ச் சொல்லமுடியும்?

இத்தொகுப்பில் இருக்கும் சாருவின் உறுத்தாத மொழிபெயர்ப்புகள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. சைபர் ஸ்பேஸிற்கும், சாட்டில் கதைத்த பெண்கள் சென்னை வரும்போது நேரில் தன்னைச் சந்திக்க மறுத்த 'கன்னித்தீவுக்கதைகளை' பத்திகளில் எழுதி, வாசிக்கும் நமது தலையைச் சொறியவைக்கும் (பேன்/சொடுவால் அல்ல) சாரு, இவ்வாறான மொழிபெயர்ப்புகளைச் செய்தாலே பல வாசகர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். எனினும் நோநோவை எழுதிய, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நேர்த்தியாக மொழிபெயர்த்த/வாசிப்புச்செய்த சாருவை வரும்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கைகள் மிக அரிதாகத்தான் துலங்குகின்றன என்பதுதான் அவலமானது.

16 comments:

தென்றல் said...

தங்களின் வாசிப்பின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, டிசே தமிழன்!

உங்களின் இந்த பதிவை இரசித்தேன்!

4/25/2007 12:57:00 PM
Anonymous said...

vaasiththeen..

--FD

4/25/2007 01:53:00 PM
பூனைக்குட்டி said...

நல்ல அறிமுகம் டிசே. நன்றிகள்.

4/25/2007 03:02:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.

4/25/2007 10:45:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகமிது. இன்னும் வாசிக்கப்படாமல்.... ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. :-)

4/26/2007 12:43:00 AM
இளங்கோ-டிசே said...

சுரேஸ்கண்ணன், நீங்கள் இப்படிக்கூறத்தான் அமரந்தா மொழிபெயர்த்த சிலுவையில் தொங்கும் சாத்தானும், நிழல்களின் உரையாடல்களும் இன்னும் வாசித்து முடிக்கப்படாமல் இருப்பது நினைவுக்கு வருகிறது :-(. ஆனால் மொழிபெயர்ப்பு என்றவகையில் கலைச்செலவன் மொழிபெயர்த்த Sergio Ramirezன், 'எங்கள தநதையரைப் புதைப்பதற்கு' (To bury our fathers) அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்திருந்தது. இவ்வாறான ஒரு சிக்கலான நாவலை எப்படி இவ்வளவு அற்புதமாக கலைச்செலவன் மொழிபெயர்த்தார் என்ற வியப்பு இன்னமும் எனக்குண்டு.

4/26/2007 01:52:00 PM
Anonymous said...

பதிவுக்கு நன்றி, டிசே!

இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் மீது - ஆபிரிக்க படைப்புகள் மீதானதைப்போலவே - அளவுகடந்த மோகமுண்டு எனக்கும். மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும் மனமதிர வைப்பவை. நீங்கள் குறிப்பிட்டிருந்த கைதி எனும் சிறுகதை வேறெங்கோ வாசித்ததாக நினைவு.

அருமையான பதிவு.. இருந்தாலும் என்னமோ குறைவது போலிருக்கிறதே...:-))))

ரமேஷ் - பிரேமின் சிறுகதை முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தது உண்மையிலும் உண்மை. கவிதைகளில் கூட அவர்கள் மிகை யதார்த்தவாதத்தினைப் பரீட்சித்திருப்பதை சக்கரவாளக் கோட்டத்தின் அனேக கவிதைகளில் காணலாம். கவிதையிலும் கதைசொல்லல் முறையைக் கையாண்டிருப்பது பிரமிக்கத்தக்கதே..

மற்றும்படி, இந்த இலக்கியவாதிகளைப் பற்றி என்னத்தைச் சொல்லித்தான் என்ன..:-(((

4/30/2007 05:18:00 AM
இளங்கோ-டிசே said...

வருகைக்கு நன்றி நண்பரே.
.....
இலக்கிய அரசியல் குறித்து பேசுவதைக்குறைக்கவேண்டும் என்று ஒவ்வொரு முறை நினைப்பதும் பிறகு/ம் பேசத்தொடங்குவதும்..... என்ன செய்ய? நானா எழுதுகின்றேன் எதுவோ என்னை எழுதத்தூண்டுகிறது என்றொரு அறிக்கை விடவேண்டியதுதான் :-).
.....
/இருந்தாலும் என்னமோ குறைவது போலிருக்கிறதே...:-))))/
என்ன செய்ய, மற்றவர்களின் கருத்தையும் கேட்கவேண்டியிருக்கிறதே :-).

4/30/2007 11:02:00 AM
இளங்கோ-டிசே said...

சாருவின் சில குறிப்புகள்
(1)writercharunivedita (01.06.2007 3:37:02): ok...am i writing only the chatting stories? have u not read my thappu thaalangal, isai kalagam kaadhal, raasa leela (N0ovel) and zero degree etc? i have written a truck load of articles and fiction

writercharunivedita (01.06.2007 3:37:36): but u say that i write only kanni theevu kadhaikal...which is very atrocious
....................
(2)
writercharunivedita: my books are being published by uyirmmai pathippagam. recently uyirmmai had published my novels raasa leela, zero degree, and collection of articles thappu thaalangal, isai kalagam kaadhal.
writercharunivedita: now uyirmmai is going to publish all the articles i have been writing for the last 30 years ....this wd come around 12 volumes
writercharunivedita: so, my request is pl dont judge my writing thru the articles published in my web site only
writercharunivedita: i am not writing about the nri girls who chat with me and dont meet me
writercharunivedita: pl read the novel raasa leela completely and make your criticisms
writercharunivedita: i am open to any criticism but one shd make it after reading the text thoroughly
writercharunivedita: this is my humble request
writercharunivedita: you can make this comment public
writercharunivedita: all my writings are open and notthing is personal
..............

6/03/2007 12:12:00 AM
இளங்கோ-டிசே said...

இக்கட்டுரை குறித்து சாருவிற்கு லிங்க் கொடுத்து மெஸன்சரில் தெரியப்படுத்தியிருந்தேன். அதற்கான அவரது கருத்தே மேலே உள்ளது.
....
முதலாவது பகுதியை சாரு எனக்கு அனுப்பியபோது, உங்களின் எண்ணத்தை பின்னூட்டத்தில் பிரசுரிக்க அனுமதிப்பீர்களா (அப்போதுதான் இக்கட்டுரையை வாசித்தவர்கள் உங்களது கருத்தை அறியமுடியும்)என்றபோது, தான் எழுதிய எதையும் பொதுப்பார்வைக்கு வைக்கலாம் என்று அனுமதி தந்திருந்தார். அதற்கு சாருவிற்கு நன்றி.
....
அவர் அண்மையில் வெளியிட்ட -குறிப்பிட்ட -நூல்களையும் வாசித்து நேரங்கிடைக்கும்போது எழுதவே விரும்புவேன். நன்றி சாரு.

6/03/2007 12:14:00 AM
Anonymous said...

/i have written a truck load of articles and fiction/

So what! I have also worked with counting trucks loading trash and rash in my profession :-)

6/03/2007 12:16:00 AM
இளங்கோ-டிசே said...

சாரு நிவேதாவின் பிற படைப்புகள் குறித்து மூன்று வருடங்களுக்கு முன் எழுதியவை.
http://djthamilan.blogspot.com/2005/01/blog-post_17.html

http://djthamilan.blogspot.com/2005/01/blog-post_17.html

6/03/2007 12:21:00 AM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்த இடுகையை உங்கள் elanko.netல் முன்பு பார்த்து பின்னூட்டம் இட்டுள்ளேனோ என்று சந்தேகமாயுள்ளது. அங்கு சென்று பார்த்தால் அது இல்லை.

இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மழை கதை எனக்கு மிகப் பிடித்தமானது. மொத்தத் தொகுதியுமே அருமையான உறுத்தாத மொழிபெயர்ப்பில் இருக்கும். Readability எப்பொழுதுமே சாரு எழுத்துக்களில் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள 'கன்னித்தீவு கதைகளை' எழுதும்போது தான் அவர் ராசலீலாவையும் எழுதுகிறார் (புனைவுகளில் கிசுகிசுத்தன்மை தேவையா என்பது ஒரு புறம் இருக்கட்டும்). அதனால் எனக்கு நம்பிக்கையிருக்கிறது...

12/28/2007 05:54:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

இந்த இடத்தில் எங்கள் தந்தையரைப் புதைப்பதற்காக நாவலையும் தொட்டுச் சென்றதற்கு நன்றி.வாசித்து நீண்ட நாட்களாகிவிட்டது திரும்ப மீள்வாசிப்பு செய்யவேண்டும் என்று நினைத்து நாட்கள் தள்ளிப்போய் விடுகின்றன.கடல்கன்னி பலராலும் அறியப்படாத சாருவின் நூல் இங்கே அவர் வந்திருந்தபோது உடைந்து உடைந்து திசைமாறிய உரையாடல்களில் கடல்கன்னியும் இருந்தது

மற்றும்படி சாரு அரட்டைகளை விட்டுவிட்டு இவ்வாறான நல்ல இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று நீங்கள் கூறுவதை மறுக்கின்றேன்.அரட்டை இலக்கியத்தைப் படித்துவிட்டு அதுபற்றி விவாதிக்க சிங்கப்பூரில் கூடிய கூட்டத்தை நான் அதற்கு முன்னர் வேறு கூட்டங்களில் பார்த்ததில்லை.ஆகவே படைப்பவன் எதையாவது படைக்கட்டும் படிப்பவன் அன்னமாக தனக்குத் தேவையானதைப் பொறுக்கி எடுத்துப் படித்தால் சரி என்பது தான் எனது மனநிலை.

சாரு ஆயிரம் கால்களுடன் யானையைப் பார்த்தேன் என்று சொன்னால் அதை நம்புகிறீர்களோ இல்லையோ அதை நம்புவது மாதிரிக் காட்டிக்கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் நல்லதொரு கதை சொல்லியை நீங்கள் இழந்துவிடுவீர்கள் என்று சாருவின் நண்பர் ஒருவரை கடந்த வாரம் சந்தித்தபோது சொன்னார்(அவர் யாரென்று சொல்லமாட்டேன் அது கிசுகிசு)

12/28/2007 08:07:00 AM
இளங்கோ-டிசே said...

சுந்தர்:
சாருவின் மொழிபெயர்ப்புக்களின் முழுத்தொகுப்பொன்று (?) உயிர்மை வெளியிடவுள்ளதாக வாசித்திருந்தேன். வருமாயின் நல்லதே. ராசலீலாவை வாசித்துவிட்டீர்களா? வாசித்திருந்தால் ஒரு பதிவாய் எழுதி பகிர்ந்துகொள்ளுங்களேன். நான் இன்னும் ராசலீலாவைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். வரும் வருடத்திலாவது கையில் கிடைத்துவிடும் என நம்புகின்றேன்.
.......

/சாரு அரட்டைகளை விட்டுவிட்டு இவ்வாறான நல்ல இலக்கியங்களைப் படைக்கவேண்டும் என்று நீங்கள் கூறுவதை மறுக்கின்றேன்.அரட்டை இலக்கியத்தைப் படித்துவிட்டு அதுபற்றி விவாதிக்க சிங்கப்பூரில் கூடிய கூட்டத்தை நான் அதற்கு முன்னர் வேறு கூட்டங்களில் பார்த்ததில்லை.ஆகவே படைப்பவன் எதையாவது படைக்கட்டும் படிப்பவன் அன்னமாக தனக்குத் தேவையானதைப் பொறுக்கி எடுத்துப் படித்தால் சரி என்பது தான் எனது மனநிலை./

ஈழநாதன்:
ஒரு எழுத்தாளர் எதையும் எழுதும் சுதந்திரத்தில் தலையிடவோ அல்லது குறுக்குவதோ கூடாதுதான். அது ஒருவித வன்முறைதான்.

இது சாருவின் எழுத்தின்பால் எழுந்த அக்கறையே. இங்கே எத்தனைபேர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்,அவர்களுக்கெல்லாம் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கப் போவதில்லை. சாருவைப் போன்ற சிலருக்குத்தான் சொல்கின்றேன்/றோம். சிலவேளைகளில் அருகிலிருக்கும் நண்பர்கள் தேவையில்லாத விடயங்களுக்கு நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கும்போது, இது தேவையற்றது எனச் சொல்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

12/29/2007 12:48:00 PM
Anonymous said...

ஈழநாதன்,

ஆயிரம் கால்களுடைய யானைக் கதைகள் பேசியதில் உங்களின் மின்னஞ்சல் முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ வாங்க மறந்துவிட்டேன். எனக்கு ஒரு தனிமடலிட முடியுமா?

12/29/2007 01:29:00 PM