கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில பகிர்தல்கள்

Thursday, November 22, 2007

கனடாவில் பிடிக்காத விடயங்கள் எவையென்று கேட்டால் பட்டியலிடுவதற்கு நூற்றுக்கு மேலான விடயங்கள் உண்டு...ஆனால் பிடித்த விடயங்கள் எவையென்று யோசித்தால், ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்களையும், திரைப்படங்களையும் உடனேயே வாசிக்க/பார்க்க முடியும் என்பதையே முதன்மையான விடயமாய்ச் சொல்வேனென நண்பரொருவருக்குக் கூறிக்கொண்டிருந்தேன். நூலகத்திற்கு வாசித்து முடிக்கமுன்னர் திருப்பிக் கொடுக்கவேண்டிய நூற்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, வீட்டிலிருக்கும்போது ஒன்று, சப்வேயில் பயணிக்கும்போது இன்னொன்று, மதியவுணவுவேளைகளில் மற்றொன்று என இடாலோ கால்வினோவின் The Castle of Crossed Destinies , எம்.ஜி.வசாஞ்ஜியின் The Assassin's Song, உம்பர்ட்டோ ஈகோவின் The Mysterious Flame of Queen Loana என்று 'பன்முகமாய்' -இறுதியில் மிஞ்சப்போவது எதுவுமேயில்லையெனத் தெரிந்தாலும்- வாசித்துக்கொண்டிருக்கின்றேன். மற்ற இருவரும் தமது கதையுலகில் எளிதாய் அனுமதித்த அளவிற்கு, கால்வினோ, அடர்ந்த காடுகள் தாண்டி, மொழிகள் எதுவுமின்றி அமைதியாக்கப்பட்ட கோட்டையிற்குள் அவ்வளவு எளிதாய் நுழைய அனுமதிக்கின்றாரில்லை ( Tarot சீட்டுக்கள் அடுக்குதல்/குலைத்து மீள அடுக்குதல் முறை மூலம் கதை கூறப்படுகின்றது) என்பதால் எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறு நேற்று நூலகத்திற்குச் சென்றபோது, அங்கே வேலை செய்துகொண்டிருந்த -எந்நேரமும் புன்னகைத்துக் கொண்டிருக்கும்- பெண்ணின் சிரிப்பால் உந்தப்பட்டு, மார்க்வெஸ்ஸின், 'கொலராக் காலத்தில் காதல்' (Love in the time of Cholera) நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன்.

இத்திரைப்படம், பதின்மத்தில் இழந்த காதலிற்காய், ஐம்பது வருடங்களுக்கு மேலாய் காத்திருக்கும் ஒரு ஆணின் வாழ்வைக் கூறுகின்றது. பல விதமான திருப்பங்கள், சிக்கவிழ்க்கும் முடிச்சுகள், சுவாரசியமான முடிவு என வழக்கமான சினிமாவை எதிர்ப்பார்க்கும் ஒரு இரசிகருக்கு பார்ப்பதற்கு இப்படத்தில் எதுவுமேயில்லை. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்தைய வாழ்வுமுறைக்குப் பழக்கமானோர் இன்னொரு கலாசாரத்தை விளங்கிக்கொள்ளும் சகிப்புத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே இப்படத்திற்குள் நுழையமுடியும். இல்லாவிட்டால் காதலிற்காய் அழுகின்றவனையும், அம்மாவோடு அளவிறந்த அன்போடு இறுதிக்காலம் வரை இருப்பவனையும் அவ்வளவு இலகுவாய் ஏற்றுக்கொண்டு இரசிக்க முடியுமா என்ன?



கதையைக் கூறத்தொடங்கினால், அது நமது தமிழ்ச்சூழலிற்கு அண்மையாக வரக்கூடிய காதற்கதைதான். ஆனால் அதை முடியும்வரை பார்க்கமுடிவது மார்க்வெஸின் கதை சொல்லும் முறைமையும், கூடவேயிருக்கும் எள்ளலுந்தான். தனது தொலைந்துபோன காதலி திரும்பிவரும்வரை வேர்ஜினிட்டியோடு(?) இருப்பேன் என்று தொடகத்தில் சிவப்பு விளக்கிற்குப்பகுதியிற்குப் போய்க்கூட எவரோடும் உடலுறவுகொள்ள மறுக்கின்ற/அடம்பிடிக்கின்ற கதையின் நாயகன், பிறகு உறவுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையோ அறுநூற்றிற்கு மேற்பட்டவை ( நாயகனின் வார்த்தைகளில் இன்னும் திருத்தமாகக் கூறுவதனால் 622). இப்படியிருந்தாலும், தனது முதற்காதலியின் நினைவால் எவரையும் முறைப்படி 'திருமணஞ் செய்யாமல் இருக்கின்றார். நாயகி ஒரு வைத்தியரைத் திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவரின் கணவன் எப்போது சாவான், தான் தன் காதலியோடு சேர்ந்து எப்போது வாழலாம் என்று எதிர்ப்பார்க்கின்ற -அவளைக் கவர்ந்திழுந்துக்கொண்டுபோக விரும்பாத- ஒருவர்தான் எங்களின் நாயகன். ஒருகட்டத்தில் இவருக்குப் பயம் கூட வருகின்றது, தான் தனது காதலியின் கணவனைவிட விரைவில் வயது முதிர்ந்தவனாகிக்கொண்டிருப்பதாகவும், அவரிற்கு முன் தான் இறந்து காதலியோடு வாழ முடியாமற்போய்விடுமோ என்றும்.. நாயகன் தபால் அலுவலகத்தில் வேலை செய்பவர். தனக்கு இன்னும் கிடைக்காத காதலியை மனதில் இருத்திக்கொண்டு உபதொழிலாக பிறருக்கு காதற்கடிதங்களும் எழுதிக்கொடுப்பவர். நகைச்சுவை என்னவென்றால், இவர் யாருக்காகவே கடிதங்கள் எழுதுகின்றாரோ அவர்களின் -எழுதப்படிக்கத்தெரியாத- காதலிகளே இவரிடம் கொடுத்து -இவர்தான் அக்கடிதத்தை எழுதியதை அறியாது- இவர் வாயாலே திருப்பி வாசிக்கக் கேட்பது.

ஐம்பது வருடங்களுக்கு பின்னராவது அவரது முதற்காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதை படத்தை இனி பார்க்கப்போகின்றவர்களுக்காய் விட்டுவிடுவோம். படத்தின் ஒளிப்பதிவு மிக அற்புதமாய் இருக்கின்றது. இலத்தீன் அமெரிக்கா/மெக்சிக்கோ கலாசாரத்திலிருந்து வந்த ஒரு நெறியாள்கையாளர் எடுத்திருந்தால் இந்தப்படம் இன்னும் ஆழமாய் மனதைத் தொட்டிருக்குமோ என இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றியது. அதைவிட மார்க்வெஸின் மூலப்பிரதி எழுதப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலேயே பாத்திரங்களை உரையாடவிட்டிருந்தால் படம் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கலாம். ஏனெனில் சில ஆங்கில உரையாடல்கள் நாடகப்பாணியாய் அந்தரமூட்டுகின்றது (சொல்லப்பட்ட வார்த்தைகளை மீண்டும் சொல்வதிலுள்ள சிக்கல்போலும்). எனினும் அப்பாவியாய் நடமாடிக்கொண்டு 'மன்மதராசனாட்டம்' வாழ்க்கையை அதன்போக்கில் இரசிக்கும் கிழவருக்கும், பிரைடாவின் ஓவியங்களையும், கஜோலையும் கலந்து குழைத்த நாயகியின் வனப்புக்குமாய்...மிகவும் இரசித்துத்தான் பார்த்தேன எனத்தான் சொல்லவேண்டும்.

----------------

சில வாரங்களுக்கு முன், We Own the Night என்ற குப்பைப் படமொன்றைப் பார்த்திருந்தேன் (பொலிஸ்/இராணுவம் போன்றவற்றை அளவுக்கதிகமாய் புனிதமாக்கும் படங்கள் என்றால் ஏன் எரிச்சல் வருகின்றது என்பது உளவியலோடு சம்பந்தப்பட்டதென் நினைக்கின்றேன்). ஆகக்குறைந்தது எனக்குப் பிடித்த கியூபாக்காரியான இவா மெண்டிஸாவது (Eva Mendes) ஒரளவாவிற்காவது நடித்திருப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தால், baby baby என்று husky குரலில் ஃபீனிக்ஸின் (Joaquin Phoenix) வாலாய் மட்டும் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து, Honey, could you please shut up your mouth...Its so annoying என்றுதான் அவரைப் பார்த்தும் சொல்லவேண்டியதாகிப் போய்விட்டிருந்தது. இதற்கு மாறாய் திரையரங்கிற்கு வந்த நாளன்றே பார்த்த American Gangster நல்ல கதையம்சமான படம் என்பதைவிட, டென்சில் வாஷிங்டன், ரஸல் குரோ போன்றவர்கள் திறமையான நடிப்பால் படத்தை இறுதிவரை சலிப்பின்றி நகர்த்திக்கொண்டு சென்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். BETயில் (Black Entertainment Television) American Gangsters என்ற seriesல் இரத்தமும் சதையுமாய் வரும் gangstersகளின் கதைகளை ஒருவர் பார்த்திருந்தால், இந்தப்படத்தில் பார்ப்பதற்கு வித்தியாசமாய் அவருக்கு எதுவுமேயில்லை (இப்படம்கூட நியூயோர்க்கில் மில்லியன் கணக்கில் hustle செய்து வாழ்ந்த ஒருவரின் சொந்தக்கதையை அடிப்படையாகக் கொண்டதுதான்). என்னைப் பொறுத்தவரை படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் ஒன்றுதான்... வியட்நாம் போர்க்காலத்தில் இந்த gangster அங்கிருந்தே போதை மருந்துகளை நல்ல 'pure quality'யாய் கடத்தியெடுத்துக் கொண்டுவந்து அமெரிக்காவில் விநியோகிக்கின்றார். அதை கடத்த அனுசரணையாக இருப்பதும் அமெரிக்க இராணுவந்தான்...போதைப் பொருட்கள் வ்ந்து இறங்குவதும் அமெரிக்க இராணுவத்தின் விமாங்களில்தான். இதையேன் சொல்கின்றேன் என்றால், வியட்நாம் போர்க்காலத்தோடு மட்டும் போதைப்பொருட்களை கடத்துவது/ உள்ளூர் மக்களை ஓபியம் செடிகளை பயிரிட ஊக்குவிப்பதென்று நமது அமெரிக்க கதாநாயகர்கள் நின்றுவிடவில்லை, அந்த வள்ளல் தன்மை இன்றுவரை ஆப்கானிஸ்தான் என்று பரவிப்ப் பெருகியுள்ளதெனச் சுட்டிக்காட்டதான்.



பிபிஸி செய்திகளைப் பார்த்துகொண்டிருந்தால், ஆப்கானிஸ்தானில் வளர்ந்துகொண்டிருக்கும் ஒபியத்தின் அளவு, அண்மைக்காலங்களில் எவ்வளவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது என்ற புள்ளிவிபரங்கள் தெளிவாக விளங்கும். இதைவிட நகைச்சுவை என்னவென்றால், நமது கனடாப்படையினர் ஆப்கானிஸ்தானில் 'தீவிரவாததை' ஒழிக்கும் கடமைகளில் தீவிரமாய் ஈடுபடுகின்றார்கள்தானே. அவர்கள் அங்கே எந்தக்கேள்விகளுமில்லாது 'தீவிரவாதி'களைச் சுட்டுக்கொன்றாலும், ஓபியம் போன்றவை வளர்கின்ற இடங்களைக்காண்கின்றபோது மட்டும் அது நமக்கான வேலையில்லையென நழுவிச்சென்றுவிடுகின்றாக்ள். அதுவும் நியாயந்தான், 'தீவிரவாதிகளை' கொல்லும்போது எவருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்காது (நாமும் இங்கிருந்து கொண்டு ஓ.. இன்றைக்கு 'தீவிரவாதிகள்' இறந்துபோனது கொஞ்சம் குறைவாய்/கூடுதலாய் இருக்கின்றதென இழக்கப்பட்ட மனிதவுயிர்களை எண்ணிக்கையால் மட்டும் மதிப்பிட்டபடி அடுத்த வேலைக்கு நகர்ந்து கொள்ளலாம்.) ஆனால் குளுகுளுவென்று மொட்டோடும் பூவோடும் செழுமையாக வளர்ந்த ஒபியம் செடிகளை நமது வீரர்கள் அழித்தால் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஓபியத்தை வளர்க்கச் சொன்னவனுக்கு, அதை ஏற்றுமதி செய்கின்றவனுக்கு, விநியோகிப்பவனுக்கு, வாங்கிப் புகைப்பவனுக்கு என்று இடியப்பச் சிக்கல் நிறைந்த வலை அல்லவா அது? எனக்கெனனவோ போகின்றபோக்கில் புஷ் போன்றவர்கள் எண்ணெய வியாபாரத்தை மறந்துவிட்டு, போதை மருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களை விரைவில் தொடங்குவார்கள் போலவிருக்கிறது. சிஜஏயினரும், கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் தாங்கள் போதை மருந்து வியாபாரத்திற்காய், அங்கிருக்க்கும் இடதுசாரி போராளிக்குழுக்களோடு தனவாமல், ஆபான்கனிஸ்தான் போன்ற இடங்களில் monopoly யாய் சர்வாதிகார ஆட்டங்களை நிகழ்த்தி ஆசுவாசப்படுத்தலாம் எனச் சந்தோசப்படவும் கூடும். கனடாவில், பாடசாலை மாணவர்களிடையே, சிகரெட் பிடிப்பதைவிட, போதை மருந்து பாவிக்கும் வீதம் அதிகரித்து வருகின்றதென அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.. எனவே ஆப்கானிஸ்தானில் கனடாப் படை இருப்பது கனடாவின் எதிர்காலத்திற்கு 'வளம்' சேர்ப்பதாய்த்தான் இருக்கும். இப்போதைக்கு கனடாப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிப்பெறுவதில்லையென உறுதியாய் நிற்கும் வலதுசாரிக்கொள்கையுடைய அதிவணக்கத்திற்குரிய பிரதமர் ஹார்ப்பரின் கைகளை நாமும் வலுப்படுத்தவேண்டியதுதான். இப்படியொரு குட்டி புஷ் கனடா மக்களுக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதா என்ன?

----------

வேல் என்றொரு வீணாய்ப்போன வீச்சரிவாள் படத்தைத் தியேட்டருக்குப் போய்ப் பார்த்தேன். எல்லாம் அஸினால் வந்த வினை. இப்படியான படங்களில்தான் அஸின் நடிக்கப்போகின்றார் என்றால், வேறு யாராவது நடிகைக்கு இரசிகனாய் மாறுவதைப் பற்றி யோசிக்கவேண்டி வருமென அஸினுக்கு எச்சரிக்கை செய்யவேண்டியிருக்கின்றது. தொப்புளை வஞ்சகமில்லாது காட்டிக்கொண்டிருக்கும் ஷ்ரேயாவுக்குக் கூட நடிப்பதற்கென படங்களில் சில காட்சிகளாவது உண்டு. அஸின் சேச்சியை விரைவில் ஆச்சிகளின்/அப்பத்தாக்களின் பட்டியலில் சேர்க்கவேண்டிய நிலைதான் வரும்போல. இதைவிட ஹரி என்ற இயக்குநரிற்கு தமிழகத்தில் யாராவது ஒருவர் கத்தியைக் காட்டி இனி வீச்சரிவாள் படம் எடுத்தாய் என்றால் சீவிடுவேன் என்று பயமுறுத்தினால் நாங்கள் கொஞ்சக்காலத்துக்கு நிம்மதியாய் இருக்கலாம்.



கற்றது தமிழ் குறித்து உயிர்மையில் சாரு எழுதியதை இடைமறித்து சிலதை எழுதலாம் என்று உயிர்மை வாசித்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு, எப்போதும் குறுக்கு கேள்விகள் கேட்டே காலம் வீணாகிக் கொண்டிருக்கின்றதென்பதால் கையரிப்பை அடக்க முயற்சித்தாலும் அடங்கமாட்டேன் என்கின்றது.. சாரு தனது விமர்சனத்தில் எழுதியது அவரது பார்வை என்ற விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அவர் பார்க்கும் பார்வையில் மட்டுமல்ல வேறு கோணங்களிலும் பார்க்கமுடியும் என்பதற்காகவேனும் சிலதைச் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் சாரு, ஏன் இந்த நாயகனுக்கு மட்டும் ஒரே துன்பமாய் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்று ஒரு கேள்வியைக் கேட்டு அலுப்படைந்துகொள்கின்றார் (தொடர்ந்து ஒரு மனிதனை கெடுதிகள் மட்டுமே துரத்திக்கொண்டிருக்குமா என்ன? (ப 16)). அதை, நாம் ஏன் அந்த நாயகனிற்கு மகிழ்ச்சியைக் கொண்டாடுவதை விட துன்பரமான நிகழ்வுகள்தான் அதிகம் பாதிக்கின்றது என்றொரு வாசிப்பாய்க் கொள்ளலாமே எனக் கேட்கவும் முடியுந்தானே. உதாரணத்திற்கு ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து தமிழகத்திலிருந்து வரும் அதிக விமர்சனங்களில், ஒரே அழுகையாய்/சோகமாய்தான் இவர்கள் படைப்புக்கள் இருக்கின்றதென்ற் stereo typed குரல்களை நினைவூட்டிக்கொள்ளலாம்.. இங்கே துன்பமாய்/துயரமாய் 'மட்டுமே' ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வு இருக்கின்றதென அர்த்தப்படுத்திக்கொள்ள் முடியாது. நமக்கும் சந்தோசிக்க/நெகிழ/கொண்டாட என நிறைய விடயங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனால் அவற்றைவிட நமக்கு நமக்கான துயரங்கள்தான் அதிகம் பாதிக்கின்றது. அதனாற்றான் படைப்புக்களில் அதிகம் துயரம் தெறிக்கின்றன என்றமாதிரியான உரையாடல்களுக்கும் சாத்தியமுண்டு. தமிழகத்தில் ஆரம்பத்தில் சோகத்தை/துயரத்தை அதிகமும் படியவிட்ட தலித் படைப்புகள் வந்ததையும் பிறகு கொண்டாட்டமான பக்கங்களுள்ள தலித் அத்தியாயங்கள் பதிவுசெய்யப்படும் சூழல் கனிந்துகொண்டிருப்பதும் நமக்கு முன்னாலிருக்கும் நிகழ்கால உதாரணங்கள் (மற்றும் நல்ல இலக்கியங்கள் முகிழ்ந்த நாடுகளில் எல்லாம் போர்க்காலத்தில் அல்ல, போருக்குப்பின்னால் தான் அவ்விலக்கியங்கள் வந்திருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. இடாலோ கால்வினோ கூட, தனது முதல் நாவலான The path to the spiders' nestsஐ மூன்றாவது முறையாகத் திருத்தி வெளியிட்ட முகவுரையில் கூட முதற்பிரதியிலிருக்கும் 'குறைபாடுகளுக்கு' இரண்டாம் உலகம்காயுத்தச்சூழலிருந்து தான் வெளியே வராததும் ஒரு காரணமென்று குறிப்பிடுகின்றார்). சரி கற்றது தமிழ்ற்கு மீண்டு/மீண்டும் வருவோம், எனவே இப்படியான பார்வையில் நாயகனை அதிகம் பாதிக்கும் துயரங்களை முன்னிலைப்படுத்துவதால் சந்தோசங்களின்/கொண்டாட்டங்களின் பக்கம் மறைக்கப்பட்டிருக்கலாமென ஒருவர் விபரிக்கவும் கூடும்.


இரண்டாவதாக சாரு கவலைப்படுவது, நாயகன் சைக்கோவாக இருக்கின்றானா அல்லது சமூகம் மீதான கோபத்துடன் இருக்கின்றானா என்ற தெளிவை பாரவையாளருக்கு இயக்குநர் தரவில்லை என்பது. பின் நவீனத்துவத்தை கரைத்துக்குடித்தவர் என்று 'நம்பப்படுகின்ற' சாரு கூட இப்படியான தெளிவான எல்லைக்கோட்டை இயக்குநர் தரவேண்டும் என்று புலம்புவது நமக்கு புன்னகையை வரவழைக்கிறது. தெளிவான எல்லைக்கோடுகள் நமக்கு அவசியமா சாரு? கறுப்பு வெள்ளையாய் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு எல்லாவற்றையும் ஏதோவொன்றுக்குள் குறுக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராய்க் 'கலகம்' செய்யவேண்டிய எண்ணங்களுடைய நபரல்லவா நீங்கள்? சமூகம் மீதான அக்கறையுடையவன் அதன் மீதான சலிப்பின் நீட்சியில் சைக்கோவாக மாறமுடியாதா என்ன? அல்லது இரண்டும் கலந்த ஒரு மனிதவுயிர் யதார்த்ததில் சாத்தியப்படாதா என்ன? 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்ற மாதிரி, பாரிஸில் வாழாத வாழ்வென்ன என அடிக்கடி ஆதங்கப்படும் -பிரான்ஸில் வலதுசாரி தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தபின்னும் அந்த ஜடியா உங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை- உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியத்தோடு நிச்சயம் பரீட்சயமிருக்கும். இந்தப்பிரதியை வாசித்துப்பாருங்கள். அந்தப்பெணகள் ஒரு கொலையைத் தவிர்க்கமுடியாது ஆரம்பித்து பிறகு விளையாட்டாய் காரணங்களின்றி எல்லோரையும் போட்டுத் தள்ளுகின்றார்கள். அதொரு புனைவென ஒதுக்கித் தள்ளிவிடவும் கூடும். சரி அதை விடுங்கள். அண்மையில் அமெரிக்காவில் வளைகுடாப் போரில் பங்குபற்றி வந்தவர் I'm the God என்று கடிதங்களையனுப்பி காருக்குள்ளிருந்து பத்துக்கு மேற்ப்பட்டவர்களை போட்டுத்தள்ளி வாரக்கணக்குகளில் அந்த நகர் முழுவதையுமே கதி கலக்கிக்கொண்டிருக்கின்றாரே, அவர் சைக்கோகாவும் இல்லை, சமூகம் மீதான கோபத்திலுமில்லை என்றுதான் ஆரம்பப் பரிசோதனைகள் செப்பியனவே...எனவே எவரும் எப்படியிருக்கவும்/மாறவும் வாய்ப்புக்கள் உண்டு.

அதைவிடக்கொடுமையானது நீங்கள் இப்படத்தில் இப்படியான தெளிவில்லாததால் pleasure of the text இல்லை என்று குறிப்பிடுவது(இப்படத்தின் எந்த இடத்திலும் pleasure of the text என்பதே இல்லை. சம்பவங்களில் உள்ள நம்பகத்தன்மை கதையில் இல்லாமல் போனது இதற்குக் காரணமாய் இருக்கலாம் -p 21-). சாரு, நீங்கள் இதற்கு முன் விதந்தோத்திய குருவில் எந்த pleasure of the text கண்டீர்கள் என்று அகழ்ந்தெடுத்துச் சொன்னால் நாங்களும் உரையாடமுடியும். (வளர்மதி குறிப்பிட்டதுமாதிரி, பார்த்தின் pleasure of the text இலக்கியப்பிரதிகளை மட்டுமே கவனத்தில் கொண்டு எழுதப்பட்டது என்பதை விளங்கிக்கொண்டாலும்/ஏற்றுக்கொண்டாலும், சில ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் மட்டுமேயுள்ளதே படி; வேறொன்றையும் படிக்கக்கூடாது என்பது மாதிரி பார்த்தின் please of the textஐ வேறிடங்களில் பிரயோகிக்க முடியாததென்ற வளர்மதியின் குறிப்புகளில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஆனால் அதேசமயம் வளர்மதி கூறுவது மாதிரி ஒவ்வொன்றுக்குமான வித்தியாசங்களைப் புரிந்துகொள்கின்றேன். அதனூடாகவே பார்த்தின் pleasure of the text ஐ எழுதப்பட்ட பிரதியிற்கப்பால் வேறிடங்களிலும் பொருத்திப்பார்க்க முடியுமென நம்புகின்றேன். வளர்மதி நிச்சயம் நாம் இது குறித்து தொடர்ந்து உரையாடுவோம்).சாரு மகிழ்ச்சியாய்க் கொண்டாடிய குருவில், அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட இருவர் படத்தில் இருக்கும் erotic தன்மை கூட வரவில்லையெனக் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு, மோகன்லாலிற்கு ஐஸ்வர்யா அறிமுகமாமாகும் ஹலோ மிஸ்ர(ட)ர் எதிர்க்கட்சி என்ற பாடலும், பிரகாஷ்ராஜ் தபுவிற்கு(?) மரணப்படுக்கையிலும் மறக்காது கணமணி என்று கூறுகின்ற கவிதையும் வருகின்ற இருவர் காட்சிகளிலிருக்கும் pleasure of the text
குருவில் இல்லையென்றுதான் கூறுவேன். அத்தோடு, pleasure of the text 'கற்றது தமிழில்' இருக்கின்றது என்பதை இன்னொரு கோணத்தில் ...The pleasure of the text is on the contrary like a sudden obliteration of the warrior value, a momentary desqumation of the writer's hackels, a suspension of the "heart" (of courage) p30) என்ற பார்த்தின் வரிகளை வைத்தும் ஒருவர் உரையாடமுடியும். இவற்றை வேறு வகையான பார்வைகளும் சாத்தியமுண்டு என்று கூறுவதற்காய்க் குறிப்பிடுகின்றேனே தவிர சாரு அக்கறையுடன் எழுதிய அந்த விமர்சனத்தை நிராகரிக்கும் எண்ணமேதுமில்லை என மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

----------------------

அவ்வளவு அவசியமில்லையென்றாலும், சொல்லவேண்டுமென விரும்பிய இன்னொரு விடயம்....நான் நினைத்ததுபோலவே 'அம்முவாகிய நான்' படத்திற்கு காலச்சுவடு, உயிர்மை என் எல்லாவற்றிலும் நமது சிற்றிதழ் அறிவுஜீவிகள் விளாசியிருந்தார்கள். சிலர் எதையாவது கருத்தைச் சொல்ல/எழுதப்போகின்றார்கள் என்றால் அவர்கள் எப்படிச் சொல்லப்போகின்றார்கள் என்பது முன்கூட்டியே விளங்குவதுபோல, இந்தச் சிற்றிதழ்காரர்கள் தமிழ்ப்படங்களுக்கு எப்படியொரு விமர்சனம் எழுதுவார்கள் என்பது எளிதாகப் புரிந்துவிடுகின்ற ஒரு சூத்திரந்தான். 'அம்முவாகிய நான், ஒரு ஆணாதிக்கப்பிரதி என்பதிலோ விமர்சிக்கப்படவேண்டியதில்லை என்பதிலோ மாற்றுக்கருத்துக்களில்லை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண்களில் எத்தனைபேர் ஆணாதிக்க்கூறுகளில் அக்கறையெடுத்து விலத்தி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையே விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கின்றபோது, ஆண் குறிகளின் அசைவில் எல்லாமே அசைந்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமாவில் (அண்மையில் படமொன்றுக்காய் வெளிக்களப்படப்பிடிப்பிற்கு சென்ற நணபர் சொன்ன கதைகளிலிருந்தும்) ஆணாதிக்கக்கூறுகளற்ற ஒரு முழுமையான பிரதியை எழுதுதல் நிகழ்காலத்தில் சாத்தியமா என்பதை யோசித்துப்பார்த்தால் 'அம்முவாகிய நானை' முற்றாக நிராகரிக்கமுடியாது.

பருத்திவீரன், மொழி போன்ற படங்களை ஆகா என்று கொண்டாடிய சிற்றிதழ்களை/அறிவுஜீவிகளை லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் வைத்த விமர்சனப்புள்ளிகளை வைத்தே சிற்றிதழ்காரர்கள் கட்டியமைத்தவற்றை ஆட்டங்காணச்செய்யமுடியும். ஒரு ஆணின் பார்வையில் விளிம்புநிலை மனிதரையும் சகமனிதராய் -ஆணாதிக்கக்கூறுகளுடன் - ஏற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற அம்முவாகிய நானை.., இப்படி மூர்க்கமாய் சிற்றிதழ்க்காரர்களால நிராகரிக்கப்படவேண்டிய அவசியமே அற்றதுதான் எனத்தான் மீளவும் சொல்ல வேண்டியிருக்கிறது. (அண்மையில் இந்தியிலும், ராணி முகர்ஜியும், கொங்கனா சென்னும் நடித்த படமொன்று -பெயர் நினைவினில்லை- பார்த்திருந்தேன். முடிவு சற்று ஃபான்சியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாகும் ஒரு பெண்ணைப்பற்றிக் கதை என்றளவில் முக்கியமானதே)

அத்தோடு 'அம்முவாகிய நான்' வெள்ளி விழாக்கண்டு ஓடப்போவதோ அல்லது அதில் நடித்த பார்த்திபன் நட்சத்திர அந்தஸ்தோ இல்லாத நடிகராயிருப்பதால் இந்தப்படம் தமிழ்ச்சமூகத்தில் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. நாம் யாரை நோக்கி இன்னும் கடுமையாக விமர்சனங்களை வைக்கவேண்டும் என்றால் நட்சத்திர அந்தஸ்தோடு தமது படங்களில் பெண்களுக்கு கலாசாரத்தைப் போதிப்பவர்களுக்கும், கதாநாயகிகளுக்கு கையை உயர்த்தி அடிப்பவர்களுக்கும், ஒதுக்கியே விடப்பட்ட அரவாணிகளை வம்புக்கு இழுத்து கேலிச்செய்யும் காட்சிகளையும் 'நகைச்சுவை', 'தமிழ்கலாசாரம்' என்ற போர்வைக்குள் தந்துகொண்டிருக்கும் கதாநாயகர்கள்/பிரதிகள் மீதுதான். மேலும் விஜய, ரஜினி,சிம்பு போன்றோரின் ஸ்ரைலில் ஈர்க்கப்பட்டு அதைச் சிறுவயதிலிருந்தே பார்க்கும் குழந்தைகள் எப்படி இந்த விடயங்களையும் 'இயல்பாய்' உள்வாங்கி விளிம்புநிலை மனிதர்கள் குறித்து அக்கறையில்லாது வளரப்போகின்றார்கள் என்பதைக் குறித்தே நாம் உரையாடலகளை இடையறாது செய்யவேண்டியிருக்கின்றது.

பொழுதுபோக்கோ நகைச்சுவையோ என்ன இழவோ இவர்கள் தமக்கு விரும்பியதைத் தரட்டும். ஆனால் எதற்காக பெண்கள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மனிதர்களை தொடர்ந்தும் இழிவுக்குள்ளாக்குகின்றார்கள்? இவர்களும் இவர்களை இயக்கும் இயக்குநர்களுந்தான் தமிழ் சினிமாவின் தலைவிதியை நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதால் இவர்கள் மீதுதான் கடுமையான விமர்சனங்கள வைக்கப்படவேண்டும். பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்கள் அதிக கவனம் செலுத்தி வளர்த்துவிட்ட சூர்யா, விகரம், தனுஷ் போன்றவர்கள் வெட்டரிவாளோடு கமர்ஷியல் வேடம் போட்டு 'சூப்பர் ஸ்டார்களாகும்' வசனங்களோடு வருவது குறித்துத்தான் நாம் அதிகம் கவலைப்படவேண்டும் (விரைவில் ஜீவாவிற்கு அப்படியொரு 'அசம்பாவிதம்' நிகழாதிருக்க கோடம்பாக்கம் பிள்ளையார் காப்பாற்றுவராக).

உதவியவை/வாசித்தவை:
(1) உயிர்மை - நவம்பர்
(2) காலச்சுவடு - நவம்பர் & ஒக்ரோபர்
(3) Pleasure of the Text, Roland Barthes
(3) அய்யனார், இ.கா.வள்ளி, ஜமாலன் போன்றோரின் 'கற்றது தமிழ்' குறித்த பதிவுகள்
(4) சன்னாசியின், Living to Tell the Tale பதிவு
(5) Critisms and Truth, Roland Barthes
(6) தியேட்டரில் பார்த்த Love in the time of Cholera, American Gangster, Vel
(7) DVD யில் நல்ல தெளிவாய் இருந்த 'கற்றது தமிழ்', 'அம்முவாகிய நான்'
(8) ஒரு பெண் அடிக்கடி எழும்பி எழும்பி ஒழுங்காய்ப் பார்க்கமுடியாது மறைத்த கள்ளக்கொப்பி 'அழகிய தமிழ் மகன்'
'

18 comments:

Anonymous said...

சமீப காலங்களில், இது போன்ற முழுநிறைவைத் தரும் பதிவை வாசிக்க வில்லை. நன்றி. எதை எதையோ குறித்து எழுதவேண்டும் என்று நினைத்து, வாசித்து முடித்த உடன் சுத்தமாக மறந்து விட்டது. அதனாலே ஒண்ணும் பாதகமில்லை :-)

11/22/2007 02:17:00 PM
Raj Chandra said...

>>டென்சில் வாஷிங்டன், ரஸல் குரோ போன்றவர்கள் திறமையான நடிப்பால் படத்தை இறுதிவரை சலிப்பின்றி நகர்த்திக்கொண்டு சென்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்

- என்னைப் பொறுத்தவரை படம் தொய்வடைந்ததற்க்கு ரஸல் குரோ காரணம் என நினைக்கிறேன். கதை அமைப்பும் அங்கங்கே தொய்வு. ஒரு காட்சியில் ரஸல் பாத்திரம் வழக்கறிஞ்ர் பதவிக்குத் தேர்வுப் பெற்றுவிட்டதாக வருகிறது. முதல் வழக்கே அவர் கைது செய்த டென்சலின் வழக்கு (ரஜினிப் படம் பார்த்த நினைவு).

டென்சலின் பாத்திரம் அதைவிடக் குழப்பம். அவரைக் கொடூரனாகக் காட்ட நடுத்தெருவில் சும்மா கலாய்த்த ஒருவனை சுடுவது (பொன்னம்பலம் படம் பார்த்த நினைவு :)).

நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கதை அமைப்பு அப்படி. <> லெவலுக்கு யோசித்து எதையோ எடுத்திருக்கிறார்கள்.

வேல்?! அதுவும் தியேட்டரில்?!...ஒன்று கால்வினோ என்கிறீர்கள்..இல்லை வேல் என்கிறீர்கள்...நடுவிலே வரமாட்டீர்களா? :)...சும்மா விளையாட்டிற்க்குத்தான். உங்கள் பதிவிலிருந்து, குறைந்தது 3 - 4 புத்தகங்கள் படிக்க வேண்டியப் பட்டியலில் சேர்த்துவிட்டேன். நன்றி.

11/22/2007 05:03:00 PM
கானா பிரபா said...

//வேறு யாராவது நடிகைக்கு இரசிகனாய் மாறுவதைப் பற்றி யோசிக்கவேண்டி வருமென அஸினுக்கு எச்சரிக்கை செய்யவேண்டியிருக்கின்றது.//

தயவு செய்து பாவனா பக்கம் வந்திடாதேங்கோ ;-)

பதிவினை அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்தேன், மீண்டும் முதலில் இருந்து வருகின்றேன்.

11/22/2007 10:00:00 PM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படித்ததைப் பற்றிக் கொஞ்சமாகவும், பார்த்ததைப் பற்றி நிறையவும் உள்ள ப்திவு. நன்றாக இருக்கின்றது பதிவு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் - நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் / புத்தகங்கள் பல நான் இன்னும் படிக்காதவை.

உங்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்...

11/23/2007 05:24:00 AM
இளங்கோ-டிசே said...

பிரகாஷ், நினைவு வரும்போது நீங்கள் நினைத்ததை எழுதுங்கள். அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
.....
ராஜ் சந்திரா: நீங்கள் குறிப்பிட்டமாதிரி American Gangster படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். படத்தோடு கூடவே இருபது - இருபத்தைந்து நிமிடங்கள், வரவிருக்கும் படங்களுக்கான Trailersம் கூடவே சேர்த்துப்பார்த்த ஒரு தோழியும் ஆகவும் நீண்டுவிட்டதென அலுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் கடைசி நேரத்தில் படம்பார்க்க முடிவுசெய்து தியேட்டருக்குப் போனபோது படம் தொடங்கச் சரியாக இருந்தது. அதனால் அதிகம் அலுப்புத் தெரியவில்லையே தெரியாது. :-).

/ஒரு காட்சியில் ரஸல் பாத்திரம் வழக்கறிஞ்ர் பதவிக்குத் தேர்வுப் பெற்றுவிட்டதாக வருகிறது. முதல் வழக்கே அவர் கைது செய்த டென்சலின் வழக்கு (ரஜினிப் படம் பார்த்த நினைவு). /

படம் முடிகின்றபோது வருகின்ற வரிகள் இவையென நினைக்கின்றேன். இதைப் பார்த்துவிட்டு, டென்சில் வாஷிங்டனும், ரஸல் குரோவும் ஏற்கனவே கதைத்துத் தீர்மானித்து - நீ அப்ரூவராய் மாறு மிச்சத்தை நான் கவனித்துக்கொள்கின்றேன் என- செய்திருப்பார்கள் என்று நகைச்சுவையாக நானும் நண்பனும் கதைத்ததும், Catch me if you can படத்தை இதனோடு ஒப்பிட்டதும் நினைவிலுண்டு.

/வேல்?! அதுவும் தியேட்டரில்?!...ஒன்று கால்வினோ என்கிறீர்கள்..இல்லை வேல் என்கிறீர்கள்...நடுவிலே வரமாட்டீர்களா? :).../

சிவாஜி படம் பார்த்தது குறித்துக்கூட எழுதியிருக்கின்றேனே :-).
...........
/தயவு செய்து பாவனா பக்கம் வந்திடாதேங்கோ ;-)/

பிரபா, மீரா ஜாஸ்மின் பக்கம் போனால பிரச்சினையில்லையா?/
..............
ஜ்யோவ்ராம் சுந்தர்:வருகைக்கு நன்றி. நீங்களும் ஒரு வலைப்பதிவைத் தொடங்கலாமே.

11/23/2007 10:55:00 AM
Ayyanar Viswanath said...

டிசே
நிறைவான பகிர்தல்....மார்க்வெஸின் Love in the time of Cholera கைவசமிருக்கிறது திரைப்படமாய் வந்திருப்பதாய் தரப்பட்டிருக்கும் செய்தி கூடுதல் மகிழ்ச்சி.

கற்றது தமிழ் அடிப்படையில் ஒரு கவித்துவமான படம்..இதில் pleasure of text இல்லையென்கிற வாதத்தை விட அபத்தமானது வேரெதும் இல்லை.சாரு போன்றோர் வாசகனை இன்னும் முட்டாளாக அல்லது சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலமாய் வாசகனை மிரட்ட செய்து தன்னை ஒரு பிரம்மாண்டமாக காட்டிக்கொள்ளலாம் என்பது போன்ற ட்ரிக்கு களை இன்றளவும் பயன்படுத்தி வருவது சிரிப்பையே வரவைக்கிறது.தன் சார்ந்த கனவுகளிலிருந்து இவர்களை எழுப்பவாவது தொடர்ச்சியான எதிர் உரையாடல்களை வைக்க வேண்டியது அவசியமே என தோன்றுகிறது(/எப்போதும் குறுக்கு கேள்விகள் கேட்டே காலம் வீணாகிக் கொண்டிருக்கின்றதென்பதால்/)

வேல் போன்ற படங்களை பார்க்க விடாமல் செய்வதற்காகவாவது நான் வாழும் சூழலை சிலாகிக்க வேண்டியிருக்கிறது.. :)

11/24/2007 02:16:00 AM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/கற்றது தமிழ் அடிப்படையில் ஒரு கவித்துவமான படம்../

நான் இந்தப் படத்தை மிக மலினமான ஒரு குறுந்தகடில் பார்த்தேன் என்றாலும் அதில் ஒரு எழவு கவித்துவமும் தெரியவில்லை. இன்னமும் சொல்லப் போனால் அது முன்வைத்த அரசியல் குமட்டலை வரவழைத்தது...

'நிசமாத்தான் சொல்றியா' என்பதையெல்லாம் கவித்துவத்தில் சேர்க்க முடியுமா என்ன (பதின்ம வயது காதலில் கூட இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி இருக்கும்.!).


/சாரு போன்றோர் வாசகனை இன்னும் முட்டாளாக அல்லது சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலமாய் வாசகனை மிரட்ட செய்து தன்னை ஒரு பிரம்மாண்டமாக காட்டிக்கொள்ளலாம் என்பது போன்ற ட்ரிக்கு களை இன்றளவும் பயன்படுத்தி வருவது சிரிப்பையே வரவைக்கிறது./

இப்படியெல்லாம் இடக்கையால் சாருவை / அவரது பங்களிப்பை புறந்தள்ளி விட முடியாதென்றே படுகிறது.

11/24/2007 12:08:00 PM
Ayyanar Viswanath said...

சுந்தர்

கற்றது தமிழ் முழுக்க முழுக்க கவிதைத்தனமான படம்.ஒரு நல்ல திரையரங்கில் இரண்டாவது காட்சியாய் பார்க்க முடிந்தால் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.அது முன் வைக்கும் அரசியல் குறித்த பல்வேறுவிதமான பார்வைகளை வலையில் பேசி எழுதி தேய்த்துவிட்டதால் இங்கே மீண்டுமொருமுறை மீள்பதிய சலிப்பாய் இருக்கிறது.எந்த ஒரு படம் குமட்டலை வரவைக்கிறதோ அது உங்களை அதிகமாய் பாதித்திருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாமில்லையா..

சாருவின் பங்களிப்பு என்னை எப்போதுமே ஈர்த்ததில்லை(புறந்தள்ளிவிடவுமில்லை)..தன்னை ஒரு இண்டலக்சுவலாக காண்பித்து கொள்ள முயலும் அவரின் மெனக்கெடல்கள் பல முறை எரிச்சலை கிளப்பியிருக்கிறது..உதாரணத்திற்கு இவரின் திரைப்பட விமர்சனங்கள்(இவர் பியர்ல் ஹார்பர்,டைட்டானிக் போன்ற படங்களை பார்த்து அழுதாராம்)
மேற்சொன்ன இரண்டு படங்களை பார்த்து அழுத அறிவுஜீவியிடமிருந்து திரைப்படம் சார்ந்த விமரினங்களை எப்படி எதிர்பார்க்க ?

11/24/2007 11:54:00 PM
வளர்மதி said...

DJ,

நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. ஆகையால் அவை பற்றி குறிப்பாக எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன்.

பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று, "கற்றது தமிழ்" திரைப்படம் முன்வைக்கும் அரசியல் மிகவும் மோசமானது என்பதில் எனக்கும் உடன்பாடு.டிசம்பர் "தீராநதி" இதழிலேயே இது குறித்து எழுத உத்தேசித்திருந்தேன், இயலவில்லை.

மற்றது, pleasure of the text என்ற கருத்தமைவு சார்ந்து தாங்கள் வெளிப்படுத்தி வரும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழில் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்தமைவுகளில் அதுவும் ஒன்று. இது குறித்து விரிவாக எழுதும் எண்ணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. விரைவில் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு ஏற்கனவே எழுதிய ஒன்றிலிருந்து - இங்கு பதிவிலிட்டிருக்கும் "எது பின்நவீனத்துவ நாவல் ... " என்ற கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்ட விரும்புகிறேன்:

"மூன்றாவது, pleasure of the text, வாசிப்புத்தன்மை (readability) பற்றியது. இரண்டும் ஒன்றே போல திரும்பத் திரும்ப தமிழில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டும் நேரெதிரானவை.

வாசிப்புத்தன்மை என்பது வாசகரை பிரதியோடு ஒன்றிப்போகச் செய்வது. பிரதியோடு சேர்த்து இழுத்துச் செல்லும் சுவாரசியத்தன்மை என்றும் சொல்லலாம். அத்தகைய பிரதிகளைத்தான் ரொலாண்ட் பார்த் readerly texts என்கிறார். இவ்வகையான பிரதிகளுக்கும், பொதுவில் வாசிப்பு நடவடிக்கைக்கும் பாலியல் இன்பத்திற்கும் இடையிலான உறவு கவனிக்க வேண்டியது. திருப்தியடையச் செய்தல் இரண்டிற்கும் பொதுவான பண்பு. இந்த வகையில், இதுபோன்ற வாசிப்புத்தன்மையுள்ள பிரதிகளை போர்னோ என்றே சொல்லிவிடலாம். ஆக, பிரச்சினை போர்னோ இலக்கியமாகலாமா என்பதல்ல. மேற்சொன்ன விரிந்த அர்த்தத்தில், இலக்கியம் போர்னோவிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியம் பற்றியது.

Pleasure of the text என்பது இந்த வாசிப்புத்தன்மையோடுகூட இயைந்து, ஆனால் மீறிச் செல்வது. சாதின் Justine நாவலில் வரும் லிபர்டைன் கதாபாத்திரம் ஒன்று, தூக்கு மாட்டிக்கொண்டு, நின்ற நிலையில் உறவு கொண்டு பாலியல் உச்சத்தை நெருங்கும் நேரத்தில் தொங்கி, ஆனால் உயிர் பிரிந்துவிடாமல், சரியான நேரத்தில் கயிற்றை அறுத்துக் கொள்வதில் அனுபவிக்கும் பேருவகை ( bliss ) போன்றது. வாசகரை சாதாரணமான கதைசொல்லலின் ஊடாக, சுவாரசியம் குன்றாமலேயே இழுத்துச்சென்று, ஆனால் திருப்தி கொண்டுவிட விட்டுவிடாமல், எதிர்பாராதவொரு தருணத்தில், மெய்மறந்தவொரு நிலைக்குள், செயலற்ற, செயல்படமுடியாத (வெளிப்பார்வைக்கு) ஒரு உறைநிலைக்குள், ஆழ்ந்த உள்முகமான இயக்கத்திற்குள் தள்ளுவது. இதற்கும் வாசிப்புத்தன்மையில் இருக்கும் சுவாரசியத்திற்கும், அது தரும் திருப்திக்கும் உள்ள தூரத்தை வாசகர்கள் 'உய்த்துணர' முடியும் என்று நம்புகிறேன்."

சாரு (அ. மார்க்சும் கூட) readability ஐயே pleasure of the text என்று புரிந்து குறிப்பிட்டு வருகிறார்கள் (குறிப்பாக, தீராநதி இதழில் பின்நவீனத்துவம் குறித்த பகிர்தல்களில் ... இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறியேன்) என்பது எனது கருத்து. இது விஷயமாக (அதாவது pleasure of the text ஐ readability - லிருந்து எப்படி வித்தியாசப்படுத்திப் பார்க்கிறீர்கள் என்பது குறித்து, வேறு கோணங்களிலிருந்தும்) உங்களது கருத்தை அறியக் காத்திருக்கிறேன்.

இன்னொரு விஷயம்: பார்த் pleasure of the text பற்றிக் குறிப்பிடும்போது, அதன் effect - ஆக, jouissance என்று குறிப்பிடுவதாக வாசித்த நினைவு. இதற்கும் pleasure என்று வழக்கில் புரிந்து கொள்ளப் படுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது குறித்தும் தாங்கள் கவனிக்க வேண்டுகிறேன்.

அப்புறம், இந்தக் கருத்தமைவை நாடகம், சினிமா போன்ற பிற புலங்களுக்கு "அப்படியே" பொருத்த முடியாது என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். தகுந்த "நெளிவு சுளிவுகளோடு" பிற புலங்களுக்குப் பொருத்த முடியுமா, அது சாத்தியமா என்பது குறித்த தெளிவுகள் எனக்கும் இல்லை; ஆகையால் முன்முடிவும் ஏதும் இல்லை.

என்றபோதிலும், நாடகம், சினிமா போன்ற புலங்களை அணுகுவதற்கு குறியியல் சார்ந்த பார்வைகள் தற்சமயம் மிகுந்த செறிவுடன் ஆளப்பட்டுவருவதை ஓரளவு அறிவேன்.
நாடகத்திற்கு ஒரு அறிமுகத்திற்கு, சாத்தியமானால், Elam Keir, The Semiotics of Theatre and Drama என்ற நூலை வாசித்துப் பாருங்கள்.

சினிமாவிற்கு இத்தகைய எளிமையான அறிமுக நூல் எதையும் குறிக்க இயலவில்லை. என்னை மிகவும் 'புல்லரிக்கச்' செய்தவை, தெல்யூசின் சினிமா குறித்த, தத்துவார்த்த நோக்கிலான இரண்டு நூல்கள்: 1)Cinema: The Movement Image 2) Cinema: The Time Image.

இயன்றால் வாசித்துப் பாருங்கள். சினிமா குறித்த நமது பார்வைகளை மிகச் செறிவாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.

மற்றது, நேரம் கிட்டும்போதெல்லாம் தங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். தொடர்ந்த கருத்துப் பகிர்தல்கள்தான் தற்சமயம் பல்வேறு காரணங்களால்
செய்ய இயலாமல் இருக்கிறேன்.

இணையத்தில் கழிக்கும் நேரமே மிகவும் குறைவு.
இந்த நிலைமை மாற இரண்டு மூன்று மாதங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது.

அதுவரையில் தயவு செய்து "பின்னூட்டமே போடுவதில்லை, உரையாடலுக்குத் தயாரில்லை" என்று வருத்தப் பட்டுக்கொள்ளாதீர்கள்.

நன்றிகள் :)

11/25/2007 04:23:00 AM
Narain Rajagopalan said...

ரொம்ப நாளாகி போச்சு இந்த பக்கம் வந்து டிஜே. இப்போது தான் பின்னாடிபோய் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைவாய் நிறைய விஷயங்கள் எழுதியிருக்கிறீர்கள். கற்றது தமிழ் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இந்தியாவின் [அல்லது உலகின்] சமச்சீரின்மை பற்றிய மிக முக்கியமான விஷயங்களை போகிற போக்கில் என்னளவில் எழுதிக் கொண்டு வருகிறேன். ஒரு படத்தினை முன் வைத்து இவ்வளவு சச்சரவுகள் என்னும்போதே படம் ஜெயித்து விட்டது என்று தான் பொருள். மற்ற படி ஒபியம் பற்றி செய்யப்படும் மறு பரீசிலனைகள் பற்றி அறிய இந்த பத்தி உதவும். Freaknomics படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர்களின் பதிவு சமூக அரங்கில் மிக முக்கியமாக தெரிகிறது. மற்றபடி ஒபியம், மரிஜுவானா பற்றி நான் என்னுடைய பதிவில் எழுதியிருப்பேன். இந்த சுட்டிகள் உதவும் என்று தோன்றுகிறது.
http://freakonomics.blogs.nytimes.com/2007/10/30/on-the-legalization-or-not-of-marijuana/
http://www.helenair.com/articles/2007/11/12/montana/a06111207_02.txt
http://blogs.salon.com/0002762/stories/2003/12/22/whyIsMarijuanaIllegal.html

11/25/2007 12:38:00 PM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/கற்றது தமிழ் முழுக்க முழுக்க கவிதைத்தனமான படம்/

எனக்கு அப்படித் தோன்றவில்லை; எப்படி உங்களால் இப்படிப் பட்ட தீர்மானங்களை முன் வைக்க முடிகிறது.???

/ஒரு நல்ல திரையரங்கில் இரண்டாவது காட்சியாய் பார்க்க முடிந்தால் ஒருமுறை பார்த்துவிடுங்கள்./

முயற்சி செய்கிறேன்.

/அது முன் வைக்கும் அரசியல் குறித்த பல்வேறுவிதமான பார்வைகளை வலையில் பேசி எழுதி தேய்த்துவிட்டதால் இங்கே மீண்டுமொருமுறை மீள்பதிய சலிப்பாய் இருக்கிறது./

எனக்குத் தெரிந்து சுகுணா மட்டுமே இப்படத்தின் அரசியலைத் தொட்டிருந்தார் (அதுவும் தவறாக.!!). வேறு பதிவுகள் வந்திருந்தால் தெரிவியுங்கள்.

/சாருவின் பங்களிப்பு என்னை எப்போதுமே ஈர்த்ததில்லை/

அப்படியா சொல்கிறீர்கள். தமிழ் புனைவிலக்கியத்தில் மிக முக்கியாமான ஒரு ஆளுமை அவர் என்பதாய் ஒரு பார்வை எனக்குண்டு. மட்டுமல்லாது தீவிரமான வாசகர் என்பதாகவும் ஒரு எண்ணம்.

/(இவர் பியர்ல் ஹார்பர்,டைட்டானிக் போன்ற படங்களை பார்த்து அழுதாராம்)
மேற்சொன்ன இரண்டு படங்களை பார்த்து அழுத அறிவுஜீவியிடமிருந்து திரைப்படம் சார்ந்த விமரினங்களை எப்படி எதிர்பார்க்க ?/

பியர்ல் ஹார்பர், டைட்டானிக் படங்களைப் பற்றிய சாருவின் விமர்சனம் நான் படித்ததில்லை (அழுதாரா என்ன.???!!!).
ஆனால் எல்லாருமே ஒரு காலகட்டத்தில் சினிமா பார்த்து அழுதவர்களாகத்தானிருக்க முடியம் என நினைக்கிறேன். அதற்காக அவர்கள் வைக்கும் விமர்சனத்தை ஒதுக்கி விட முடியுமா என்ன.?

இன்னும் விரிவாக இந்தப் படத்தின் அரசியல் பற்றி எழுத விருப்பம். நான் blog ஆரம்பிக்கமா என யோசனையில் இருக்கின்றேன். (ஆரம்பித்தால்) விரிவாக எழுதுகிறேன்...

11/25/2007 01:13:00 PM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/எனக்குத் தெரிந்து சுகுணா மட்டுமே இப்படத்தின் அரசியலைத் தொட்டிருந்தார் /
ஜமாலனின் விமர்சனமும் இப்படத்தின் அரசியலைப் பற்றி பேசியிருந்தது. இவை இரண்டைத் தவிர வேறு ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள்... (போன பின்னூட்டத்தில் இதைக் குறிப்பிட மறந்து விட்டேன்).

11/25/2007 11:51:00 PM
இளங்கோ-டிசே said...

வளர்,
என்னால் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் உங்களைப்போல உரையாடமுடியுமா தெரியவில்லை. இயன்றளவு வாசித்து விளங்கியவற்றை வைத்து எழுத முயற்சிக்கின்றேன்.

நீங்கள் குறிப்பிடும், pleasure of the textம், readabilityம் இரண்டும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை என்பதை ரோலாண்ட் பார்த்தின் pleasure of the textஐயும் (ஆங்கில மொழிபெயர்ப்பு), உங்களின் கட்டுரையையும் -உங்கள் பதிவில்- வாசித்தபோது தெளிந்துகொண்டேன். அதற்கு முன் அவ்வாறான வித்தியாசங்களை பெரிதாக விளங்கிக்கொண்டவன் அல்ல என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

எனவே, உங்களின் கேள்வியான...,
/இது விஷயமாக (அதாவது pleasure of the text ஐ readability - லிருந்து எப்படி வித்தியாசப்படுத்திப் பார்க்கிறீர்கள் என்பது குறித்து, வேறு கோணங்களிலிருந்தும்) உங்களது கருத்தை அறியக் காத்திருக்கிறேன்./

என்ற கேள்விக்கும் நீங்கள் கூறியதைத்தான் துணைக்கு அழைக்கின்றேன். கூடவே பார்த்தையும்...
பார்த்தின் வார்த்தைகளில் விரித்து மேலும் சொல்வதனால்,
If I read this sentence, this story, or this word with pleasure, it is because they were written in pleasure (such pleasure does not cotracdict the writer's complaints). But the opposite? Does writing in pleasure guarantee - guarantee me, the writer - my reader's pleasure? Not at all. I must seek out this reader (must 'cruise' him) without knowing where he is. A site of bliss is then created. It is not the the reader's 'person' that is necessary to me, it is this site: the possiblity of a dialectucs of desire, of an unpredictabiliy of bliss: the bets are not placed, there can still be a game (p4).

என்பதையும்... கூடவே இதையும் சேர்த்தே கொள்கின்றேன்.

/ /வாசிப்புத்தன்மை என்பது வாசகரை பிரதியோடு ஒன்றிப்போகச் செய்வது. பிரதியோடு சேர்த்து இழுத்துச் செல்லும் சுவாரசியத்தன்மை என்றும் சொல்லலாம். அத்தகைய பிரதிகளைத்தான் ரொலாண்ட் பார்த் readerly texts என்கிறார். இவ்வகையான பிரதிகளுக்கும், பொதுவில் வாசிப்பு நடவடிக்கைக்கும் பாலியல் இன்பத்திற்கும் இடையிலான உறவு கவனிக்க வேண்டியது. திருப்தியடையச் செய்தல் இரண்டிற்கும் பொதுவான பண்பு. இந்த வகையில், இதுபோன்ற வாசிப்புத்தன்மையுள்ள பிரதிகளை போர்னோ என்றே சொல்லிவிடலாம். ஆக, பிரச்சினை போர்னோ இலக்கியமாகலாமா என்பதல்ல. மேற்சொன்ன விரிந்த அர்த்தத்தில், இலக்கியம் போர்னோவிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியம் பற்றியது./ஆக, பிரச்சினை போர்னோ இலக்கியமாகலாமா என்பதல்ல. மேற்சொன்ன விரிந்த அர்த்தத்தில், இலக்கியம் போர்னோவிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியம் பற்றியது./

அதேபோன்று, erotic புத்தகங்களால் (so called erotic books) pleasureஐ தரமுடியாது என்று பார்த் விளங்கப்படுத்துவதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. நாம் அதொரு erotic புத்தகம் என்று சொல்லும்போதே எமக்குள் அதுகுறித்த விம்பங்கள் ஆரம்பத்திலேயே அவிழத்தொடங்கிவிடுகின்றன. எனவே ஒருவித சுவாரசியத்துடன் (exciting) நினைத்து வாசிக்கத்தொடங்கினாலும், இயற்கையாகவே எமக்குள் ஒருவித சோர்வு/அலுப்பு/அலட்சியம் ஏற்படத்தொடங்கிவிடுகின்றது (disappointment). ஆகவே இவ்வாறான புத்தங்கள் desires ஆன புத்தகங்களே தவிர, pleasure உடைய பிரதிகளெனக் கொள்ளமுடியாது என பார்த் முடிவுக்கு வருகின்றார்.

readability, pleasure of the text இரண்டும் வெவ்வேறு விதமானவை என்ற என்ற உங்களின் விளக்கம் விளங்குகின்றது. உங்களோடு ஒத்தே நிற்கின்றேன்.

இன்னும், இதையும் கூட
/Pleasure of the text என்பது இந்த வாசிப்புத்தன்மையோடுகூட இயைந்து, ஆனால் மீறிச் செல்வது./

உங்களின் வாசிப்பும் சரியானதே....பார்த் கூட, For if I say that between pleasure and bliss there is only a difference of degree, I am also saying that history is a pacified one: the text of bliss is merely the logical, organic, historical development of the text of pleasure. (p 20).

/இன்னொரு விஷயம்: பார்த் pleasure of the text பற்றிக் குறிப்பிடும்போது, அதன் effect - ஆக, jouissance என்று குறிப்பிடுவதாக வாசித்த நினைவு. இதற்கும் pleasure என்று வழக்கில் புரிந்து கொள்ளப் படுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது குறித்தும் தாங்கள் கவனிக்க வேண்டுகிறேன்./

இதற்கும் நன்றி. இந்தப்புள்ளியில் அவ்வளவு அவதானமில்லாது இருந்திருக்கின்றேன். குறிப்பிட்டமைக்கு நன்றி.

ஆக, இவையெல்லாம் நானும் உங்களோடு உடன்படுகின்ற புள்ளிகள்தான்.
-----------------------------

/ இந்தக் கருத்தமைவை நாடகம், சினிமா போன்ற பிற புலங்களுக்கு "அப்படியே" பொருத்த முடியாது என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். தகுந்த "நெளிவு சுளிவுகளோடு" பிற புலங்களுக்குப் பொருத்த முடியுமா, அது சாத்தியமா என்பது குறித்த தெளிவுகள் எனக்கும் இல்லை; ஆகையால் முன்முடிவும் ஏதும் இல்லை/

இந்தப்புள்ளியில்தான் நான் கொஞ்சம் முரண்படுகின்றேன். 'அப்படியே பொருத்தமுடியாது' என்பது புரிகின்றது. ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாதென்பதுதான் என் கேள்வி. பார்த்தின், pleasure of the text ஐ, சாரு கூட -written textற்கப்பால்- திரைப்படத்தில் பொருத்துகின்றார். எனவே என்னைத் திட்டத் தொடங்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் அவரைத் திட்டவேண்டும் :-).

எனது இந்த புரிதல்- பார்த் எழுதப்பட்ட பிரதிகளை (written textsற்கு) மட்டும் முன்வைத்து உரையாடிய pleasure of the text ஐ- திரைப்படம், நாடகம் இன்னபிற துறைகளுக்குக் கொண்டு செல்லாமா என்ற ஒரு பரிசோதித்துப்பார்ப்பதே..அவ்வளவே! (முழுதாகப் பொருத்தமில்லையென்றாலும், மரபு மார்க்சியர்கள், மார்க்ஸ் கூறிவிட்டார், எனவே வர்க்கப்பிரச்சினை முடிந்தால் எல்லாம் தீரும் என்று ஒற்றைக்காலில் நின்றுகொண்டு சாதியை 'தீண்டத்தக்கதாய்' நீண்டகாலமாய் விலத்திக்கொண்டிருந்த உதாரணத்தோடு கொஞ்சம் ஒப்பிட்டுக்கொளளலாம்)

சரி, நீங்கள் கூறிய readablity, pleasure of the text, bliss போன்றவற்றிற்கு நான் பார்த்த சில திரைப்படங்களை வைத்து உரையாட முயல்கின்றேன் (இப்படி பார்த்தைப் பொருத்தி நிச்சயமாகப் பார்க்கமுடியாது மிக அபத்தமானது என்றாலும் தலையில் தயங்காமல் குட்டுங்கள்; திருத்திக்கொள்கின்றேன்).

நான் அண்மையில் பார்த்த வேல், அழகிய தமிழ் மகன், கற்றது தமிழ் ஆகிய மூன்று திரைப்படங்களை எடுத்துக்கொள்கின்றேன்.

வேல், படத்தைப் பார்க்கும்போது, சூர்யா 'வில்லன்களோடு' சண்டையிட்டபடி, அடுக்குவசனம் மூச்சுவிடாது முதற்காட்சியில் பேசத்தொடங்கும்போதே, நான் பிரதியிற்கு வெளியில் வந்துவிட்டேன். அது எனக்கு குறைந்தபட்சம் readability text யாய்க்கூட இருக்கவில்லை. ஒருவித தொல்லையாகவே நான் அத்திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன் (வழமையாய் படங்கள் நல்லாயிருக்காவிட்டால், அருகிலிருக்கும் நண்பனோடு ஒவ்வொரு காட்சியிற்கும் ஏதாவது சொல்லிக்கொண்டு நக்கலடித்துக்கொண்டிருப்பேன்/போம். அன்றைக்கு என்று பார்த்து எனக்கு அருகிலிருந்த நண்பன், ஒரு சீரியஸான பேர்வழி, எனவே அவரின் இருக்கையைத்தாண்டி மற்ற நண்பனோடு சேர்ந்து 'பம்பலடிக்க' முடியாமற்போய்விட்டது).

அடுத்து, அழகிய தமிழ் மகனை படம்... இதை முடியும்வரை என்னால் பார்க்கமுடிந்தது. அதில் கொஞ்சம் pleasure of the text இருந்தது (but bliss missing). லொஜிக், சீரியஸ்தனமை எல்லாம் கவலைப்படாது எல்லாவற்றையும் நகைச்சுவையாக நினைத்து அதனோடு ஒன்றிப்பார்க்க முடிந்திருந்தது. எனவே அதொரு readability யும், சற்று pleasureம் இருந்த ஒரு பிரதியெனக்கொள்கின்றேன். ஆனால் இரண்டாவது முறையாகப் பார்க்கமுடியாது ரோலண்ட் பார்த்தும், Everyone can testify that the pleasure of the text is not certain: nothing says that this time same text will plesase us a second time: it is a friable pleausre, spilit by mood, habit, circumstance, a precarious pleasure என்கிறார். ( அதே சமயம், பார்த் the bliss of the text is not precarious என்பதையும் நினைவில் இருத்திகொள்கின்றேன்).

சரி, கற்றது தமிழில், pleaure of the text இருக்கிறதா என்பதற்கு வருகின்றேன். பார்த் என்ன சொல்கின்றார், The pleasure of the text is like untenable, impossible, purely novelist instant என்று கூறிவிட்டு நீங்கள் கூறுகின்ற Sade யின் libertine உதாரணத்திற்கு வருகின்றார். ...so relished by sade's libertine when he manages to be hanged and then to cut the rope at the very moment of his orgasm, his bliss (p 7).

சில உதாரணங்கள்...
கற்றது தமிழில், impossible, purely 'novelestic' instant என்பதை -இங்கே பல பேர் விமர்சித்த காட்சியான- எப்படி சும்மா, பீச்சில் கண்ட காதற்சோடிகளை மண்டையில் போடுகின்றான் என்பதை purely novelesitc moment என்றும், இறுதியில், தனது காதலியைக் கண்டதன்பிறகு தான் பதிவு செய்திருந்த வாக்குமூல video tapeஜ தொலைக்காட்சி நிறுவனமொன்றிற்குக் கொடுக்கின்றான் (அவன், அவளோடு சேர்ந்து நிம்மதியாக வாழப்போகின்றான் என்று முடிவு செய்திருப்பான் என்றால் அந்த வீடியோவைக் கொண்டுபோய், தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் கொடுத்திருப்பானா..என்ன?). அவன் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டான். தனது மரணம் மிக அருகில் நெருங்கிவிட்டதென்று (ஏற்கனவே தற்கொலையும் செய்யமுயன்றவன் என்பதையும் கூடவே வாசித்துக்கொள்ளலாம்). ஆனால் காதலியுடன் அவன் சேர்ந்தவுடன், அதேமாதிரியான முடிவுகளைப் பல படங்களில் பார்த்த ஒரு இரசிகருக்கு அப்படித் தோன்றப்போவதில்லை. அநேக இரசிகர்கள் எங்கையோ பிரபாகரும், அவனது காதலியும் சேர்ந்து நிம்மதியாக வாழப்போகின்றார்கள் என நினைக்கத்தொடங்கும்போது, 'impossible' முடிவை இத் திரைப்படம் கொண்டுவந்து தருகின்றது.

அதுபோல எனது பதிவில் ஏலவே குறிப்பிட்ட, /...The pleasure of the text is on the contrary like a sudden obliteration of the warrior value, a momentary desqumation of the writer's hackels, a suspension of the "heart" (of courage)/
என்ற பார்த்தின் வரிகளுக்கு ஏற்ப கற்றது தமிழ் நாயகனின் பாத்திர அமைப்பு அமைவதுபோல எனக்குத் தோன்றியது.

சாரு, நிராகரிக்கின்ற - கற்றது தமிழில் இருக்கும் குழப்பகரமான நிலையே pleasure of text இல்லாமல் செய்துவிட்டதென்பதை- நான் எதிர்ப்புள்ளியில் வைத்துப் பார்க்கின்றேன். இந்தக் குழப்பகரமான நிலையே இப்பிரதியை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றது. அவன் சைக்கோ நிலையிலா அல்லது அரசியல் பிரக்ஞையுடன் இருக்கின்றானா எனறு பல காட்சிகளில் வரும் 'குழப்பமே', புதிது புதிதான வாசிப்புக்களைத் தருகின்றது எனக்கொள்கின்றேன். பார்த்தும் , சாதாரண readabilty text என்றால் இரண்டாம் முறை பார்க்கும்போது அதே pleasureஐ தராது என்கின்றார். எனவே ஒவ்வொருமுறை பார்க்கும்போது புதிது புதிதான வாசிப்பின் எல்லைகளை திறந்துவிடுவதால் -என்னைப் பொறுத்தவரை- கற்றது தமிழில் pleasure of text (bliss யாய் அது சிறப்பாய் நீட்சியடையாது விட்டாலும் கூட) இருக்கின்றதென்றே கூறவிரும்புகின்றேன்.

மேலும், கற்றது தமிழின் முடிவு கூட என்னைப் பொறுத்தவரை

/வாசகரை சாதாரணமான கதைசொல்லலின் ஊடாக, சுவாரசியம் குன்றாமலேயே இழுத்துச்சென்று, ஆனால் திருப்தி கொண்டுவிட விட்டுவிடாமல், எதிர்பாராதவொரு தருணத்தில், மெய்மறந்தவொரு நிலைக்குள், செயலற்ற, செயல்படமுடியாத (வெளிப்பார்வைக்கு) ஒரு உறைநிலைக்குள், ஆழ்ந்த உள்முகமான இயக்கத்திற்குள் தள்ளுவது. /

என்ற உங்களின் வரிகளுக்குப் பொருந்தித்தான் போகின்றது. ஆகவே படத்தில் pleasure of the text இருக்கின்றதுதானே என்று நிறுவ முடியுந்தானே. இந்த முடிவை பேருவுவகை என்று சொல்லமுடியாதுதான். ஆனால் பெரும் அவதியை உள்மனதிற்குத் தந்து தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றதுதானே.

உண்மையில் எனக்கு கற்றது தமிழில் இறுதிக்காட்சியைப் பார்க்கும்போது, ஊட்டி, கொடைக்கானலில் 'சமூகக் காரணிகளால்' தற்கொலை செய்துகொள்ளும் காதற்சோடிகள் தான் உடனே நினைவுக்கு வந்தனர். அப்படி தற்கொலை செய்து கொள்ளும் சில சோடிகள், தற்கொலைக்கு முன், விடுதியில் தங்கி உடலுறவில் ஈடுபட்டு இறந்திருக்கின்றார்கள் என்று சில குறிப்புகள் சொல்லியிருக்கின்றன. உடலை ஒரு textயாய் வைத்துப் பார்த்தால், அந்த உடலுறவு 'சாதாரண pleasure' தருவதைத்தாண்டி மீறிச்செல்லக்கூடிய ஒன்றுதான். எனினும் தமிழ் மனதின் புனித விம்பங்கள் குறித்த பயத்தில் அதை இயக்குநர் தவிர்த்திருக்கவும் கூடும்.
----------
மற்றும்படி, நீங்கள் குறிப்பிட்டமாதிரி, சாரு, கற்றது தமிழில் விமர்சனத்தில், pleasure of the text ஐ, readabilityயிற்குள் சேர்த்து வைத்தே பார்க்கின்றார் என்றே நினைக்கின்றேன். அ.மார்க்ஸின் தீராநதிக்கட்டுரையை வாசித்தது நினைவு. ஆனால் அதில் எழுதப்பட்டது குறித்து தெளிவாய் நினைவினில்லை. தோண்டிப்பார்க்கின்றேன்.

11/28/2007 11:20:00 AM
இளங்கோ-டிசே said...

அய்யனார், சுந்தர், வளர்மதி & நரேன்: பின்னூட்டங்களுக்கு நன்றி.
....
அய்யனார் கூறும் பல புள்ளிகளில் எனக்கும் உடன்பாடுண்டு. சுந்தரும், வளர்மதியும் கற்றது தமிழ் முன்வைக்கும் அரசியல் பற்றி எழுதும்போது, எனக்கும் சிலதைச் சொல்ல விடயங்கள் இருக்குமென நம்புகின்றேன் :-).
....
வளர்..., நாடகம், திரைப்படம் சம்ப்ந்தமாய் நீங்கள் குறிப்பிட்ட நூலகளிற்கு ந்னறி. வாசிக்க முயல்கின்றேன்.
/அதுவரையில் தயவு செய்து "பின்னூட்டமே போடுவதில்லை, உரையாடலுக்குத் தயாரில்லை" என்று வருத்தப் பட்டுக்கொள்ளாதீர்கள்./
எனது பதிவில் அப்படியொரு தொனியில் நான் எழுதி இருந்தால் மன்னியுங்கள். இலங்கை, இந்தியாவில் இருப்பவர்களுக்கு இணைய வச்தி இன்னபிற அசெள்கரியங்களை நானும் அறிவேன். எனவே இப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன்.
.....
நரேன்: சுட்டிகளுக்கு நன்றி. உங்களின் பதிவுகளைத் தொடர்து வாசித்து வருகின்றேன். பெண்ணியவாதிகளுக்கு அழைப்பு விடுத்ததைக்கூட வாசித்துவிட்டேன். பாவனாவிற்கு மயங்காதவர் எவரும் உண்டா என்ன :-)?

/ஒரு படத்தினை முன் வைத்து இவ்வளவு சச்சரவுகள் என்னும்போதே படம் ஜெயித்து விட்டது என்று தான் பொருள்/

அஃதே உணமையாம்!

11/28/2007 11:47:00 AM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/பீச்சில் கண்ட காதற்சோடிகளை மண்டையில் போடுகின்றான் என்பதை purely novelesitc moment என்றும்/

என்னங்க இது, இப்படியெல்லாம் கூட சொல்ல முடியுமா என்ன.? எனக்கு 27 வயசு வரைக்கும் ஒருத்தியும் கிடைக்கல; அதனால காதலர்களைக் கொல்வேன்னு டுபுக்குனு ஒருத்தன் சுடுவான்னா அது அராஜகம் இல்லையா.?

இதே மாதிரி நான் மருதமலை படத்திற்கு எழுதிய சிறு குறிப்பு :

இறுகிப் போன அதிகாரப் படிநிலைகள் கொண்டது போலீஸ் எனும் அமைப்பு. அதில் தனக்கு மேல் அதிகாரியான வடிவேலுவை அர்ஜூன் கிண்டல் / கேலிக்கு உட்படுத்துகிறார். இப்படத்தை நாம் அதிகாரப் படி நிலைகளைக் கேள்விக்குள்ளாக்கும் படமாக வாசிக்கலாம்.

/ஒரு படத்தினை முன் வைத்து இவ்வளவு சச்சரவுகள் என்னும்போதே படம் ஜெயித்து விட்டது என்று தான் பொருள்/

அஃதே உணமையாம்!/

இதைவிட சிவாஜிக்கு அதிக அளவில் சர்ச்சை வந்ததே-)))

11/29/2007 01:13:00 AM
இளங்கோ-டிசே said...

சுந்தர், 'அராஜகம்' என்பது நாம் இருக்கும்/புழங்கும்/அனுபவிக்கும் சூழ்லைப் பொறுத்து வேறுபடக்கூடியதே. சுள்ளிக்காடு பாலச்சந்திரன் சுயசரிதை நூலில், பாலச்சந்திரன் ஒரு ஆபிரிக்கன் பெண்ணைச் சந்திக்கும்போது அவரது கையொன்றில் பல விரல்களைக் காணாதது குறித்த சம்பவமொன்றை விபரித்திருந்திருப்பார்.. அந்த ஆபிரிக்கன் பெண்மணி, தனது பிள்ளைகள் போரினால் கொல்லப்பட்டபோது அவர்கள் ஒவ்வொருவரின் ஞாபகமாய் தனது விரல்களைப் பிடுங்கியிருப்பார். அந்தச் சூழல்/கலாசாரம் புரியாத எமக்கு அதொரு காட்டுமிராண்டித்தனமாய்த்தான் தெரியும். அவருக்கு அது வேறுவிதமானது.

எதையும் நாம் முதலில் ஆரம்பிக்கும்போதுதான் (குடிக்க/புகைக்க/காதலிக்க) மிகவும் தயக்க்மாயும், கடினமாயும் இருக்கும். ஆனால் அவை பழகியபின் அது சாதாரண விடயமாகிப்போய்விடும். கற்றது தமிழில் பிரபாகர் முதற்கொலையைச் செய்துவிட்டவுடன், அவருக்கு கொலைகள் செய்வதற்கான பயமில்லாமற்போய்விட்டிருக்கும் என எடுத்துக்கொள்ளவும் முடியுந்தானே. . எனவே சின்னச்சின்னக் காரண்ங்களுக்காய் அவர் மனம் பிறழ்கின்றபோது கொலைகளைச் செய்வது -கதையின் ஓட்டத்தில்- ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இருபத்தேழு வயதில் ஒருத்தி கிடைக்கவில்லை அப்படிச் சுடுவது நம்மைப்பொறுத்தவரை நமது பார்வையில் அராஜகம் தான். ஆனால் யதார்த்தத்தில் தமது நண்பர்களுக்கு காதலிகள் கிடைத்திருக்கின்றார்களே தமக்குக் கிடைக்கவில்லையேன புகைந்துகொண்டிருந்த பலரை அறிவேன். பெண்ணின் நிமித்தம் சண்டை பிடித்தவர்களையும் வாழ்வைத் தொலைத்தவர்களையும்/இழந்தவர்களையும் நான் அறிவேன். ஏன் எனக்குக் கூட குறிப்பிட்ட வயதில், சப்வே இன்னபிற இடங்களில் காதலியைக்கொஞ்சிக்கொண்டிருக்கும் சோடிகளைப் பார்த்து பொறாமைகூட வந்திருக்கின்றது. இப்படியான ஒரு நிலையின் ஒரு extreme கட்டத்தில் பிரபாகரைப் பார்க்கின்றேன். பிறருக்கு தமதுகோபத்தைக் காட்ட விருப்பமிருந்தாலும் சட்டம்/ஒழுங்கு/ஒழுக்கம் குறித்த பயங்களாவது இருக்கும். ஆனால் ஏற்கனவே கொலைகளைச் செய்த பிரபாகருக்கு அது பெரிய விடயமாய் இருக்கப்போவதில்லை. எனவே தனக்கு பிடிக்கவில்லையென்று எதை/எவற்றை நினைக்கின்றாரோ உடனே போட்டுத்தள்ளுகின்றார் (நாமும் சிலவேளைகளில் தொந்த்தரவுபடுத்தும் விடயங்களை எழுதி எம்மை ஆசுவாசப்படுத்துவதில்லையா?)

மருதமலை பற்றிய உங்களின் உதாரணம் விளங்கவில்லை. ஆனால் அவ்வாறான ஒரு பார்வையிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று நிரூபிக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுந்தான். மறுப்பேதுமில்லை. :-).

/இதைவிட சிவாஜிக்கு அதிக அளவில் சர்ச்சை வந்ததே-)))/
சிவாஜியை விட பாபாவிற்கு இன்னும் அதிகமாய் சர்ச்சைகள் -அரசியல் மட்டத்தில் கூட- வந்திருந்தனவே :-). எனக்கு கற்றது தமிழ் படம் தொடர்ந்து தொந்தரவுபடுத்திக்கொண்டிருப்பதுபோல (பலரால விதந்தேந்தப்பட்ட பருத்திவீரன் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை) ஒருவர் தனக்கு சிவாஜி அதிகம் பாதிக்கின்றதென தனக்கான காரணங்களோடு இருக்கும்போது மறுக்கவும் முடியாதுதானே!

11/29/2007 10:46:00 AM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் சொன்னது போல் என்னுடைய பதிவில் 'கற்றது தமிழ் முன்வைக்கும் வன்முறை அரசியல்' பற்றிய சில குறிப்புகளை எழுதியுள்ளேன். எழுதி பல காலம் ஆனதால் மொழி கைகூடவில்லை.

இந்த காலச்சுவடு இதழில் வெளியான பெருமாள் முருகனின் கற்றது தமிழ் பற்றிய விமர்சனம் படித்தீர்களா.? வலையிலும் வாசிக்கக் கிடைக்கிறது...

12/10/2007 10:40:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி சுந்தர். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளையும் வாசித்தேன். உங்களின் பதிவின் பின்னூட்டத்தில் சிலவற்றையாவது எழுதிவிட முயல்கின்றேன்.

12/11/2007 11:54:00 AM