கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில இறகுகளின் பயணம்

Saturday, February 16, 2008

-மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவலை முன்வைத்து-

'We have art, so that we shall not be destroyed by the truth'
-Nietzsche

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கின்றதோ அதேயளவுக்கு அபத்தமாக அமைந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் கூறியது. நமது தனிப்பட்ட தேர்வுகளே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று சார்த்தரும் நிறைய எழுதினார். எமக்கான பொழுதுகளை எமது தேர்வுகள்தான் தீர்மானிக்கின்றன என்ற புரிதல் இருந்தாலும் நம்மால் வாழ்வின் அபத்தங்களை எளிதாய்த் தாண்டிப்போய்விட முடிகின்றதா என்ன? எனவேதான் தொடர்ந்தும் மனித மனங்களின் சிக்கலான புதிர் நிறைந்த ஆட்டங்களை நாம் சுவாரசியமாகப் பார்த்தபடியும் விவாதித்தபடியும் இருக்கின்றோம். வாழ்க்கையெனும் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் சில பாத்திரங்களின் அசைவுகளை மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நம்முன் விரித்து வைக்கின்றது. ஆட்டமொன்று நடக்கும்போது வெளியிலிருக்கும் நமக்கு இந்த நகர்வு சரியாயிருக்கிறது/தவறாயிருக்கிறது என்று தெரிந்தாலும் நம்மால் குறுக்கிட முடிவதில்லை போல, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் பாத்திரங்களும் அதன் போக்கில் நகரும்போது உறைந்த நிலையிலிருந்து நாம் ஆட்டத்தின் அனைத்து நகர்வுகளையும் அவதானித்தபடி நமக்குள்ளே ஒரு ஆட்டத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்கின்றோம்.

மைக்கல் ஒண்டாஜ்ஜியில் அநேக நாவல்களில் மிகப்பெரும் தனிமையையும், மர்மத்தின் சுழல்களும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதுபோல இந்நாவலிலும் அவற்றுக்கான இடங்கள் இருக்கின்றன. வட கலிபோர்ணியா நகருக்கு ஒதுக்குப்புறமாய் தோட்டக்காணிகளும், நிறையக் குதிரைகளும் இருக்கும் கிராமப்புறமே நாவலின் முற்பகுதியில் பின்னணியாகின்றன. ஆன் (Anne), ஆனின் தந்தையார், கிளேயர் (Claire) மற்றும் கூப் (Coop) என்ற நான்குபேரைச் சுற்றியே கதை ஆரம்பத்தில் சுழல்கின்றது. ஆனின் தாயார், ஆன் பிறக்கின்றபோது பிரசவித்திலேயே இறந்துவிடுகின்றார். அதேசமயத்தில் வைத்தியசாலையில் அநாதையாக இருக்கும் கிளேயரையும் ஆனின் தகப்பன் தத்தெடுத்து ஆனோடு சேர்த்து வளர்க்கத்தொடங்குகின்றார். ஆனும் கிளேயரும் இரட்டைச் சகோதரிகள் போல அக்கிராமத்தில் வளர்கின்றார்கள். இவர்களோடு சேர்ந்து ஐந்து வயது கூப்பும் வளர்கின்றார். கூப்பின் பெற்றோர்கள் வாடகை கொலைக்காரர்களால் எதோ ஒரு காரணத்திற்காய் கொல்லப்பட்ட, அநாதையாக்கப்பட்ட கூப்பும் ஆன், கிளேயரோடு சேர்ந்து வளரத்தொடங்குகின்றார். ஆன் புத்தகம் வாசிப்பில் ஆர்வமுள்ளவராகவும், கிளேயர் குதிரைகளோடு அதிகம் மினக்கெடுபவராகவும், கூப் வீடு/பண்ணையில் மராமத்துத்துப்பணிகள் செய்வதில் ஆர்வமுடியவராகவும் நாவலில் சித்தரிக்கப்படுகின்றார்கள். தாய் ஒருவரின் பாசம் என்பது எப்படிப்பட்டது என்று சிறுவயதிலிருந்தே அறியாது வளரும் இம்மூவருக்கும், ஆனின் தகப்பனே ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கின்றார். சகோதரர்கள் என்ற உணர்வோடு சிறுவயதில் வளர்கின்ற ஆன், கிளேயர், கூப்புக்கு வயது ஏற ஏற கிராமததுச்சூழலும், பருவமும் அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாய்ப் பிரிக்கின்றது. 15 வயது ஆனுக்கு 20வயதிலிருக்கும் கூப் மீது ஈர்ப்பு வர, பின்னாட்களில் உடல்களைப் பகிர்ந்துகொள்கின்ற காதலும் காமமும் கலந்த ஒரு உறவாய் அது மாறிப்போய்விடுகின்றது..

ஒருநாள் இவ்வாறு நெருக்கத்திலிருக்கும் ஆனையும் கூப்பையும் காண்கின்ற ஆனின் தகப்பன் சன்னதமாடி மிக மோசமான முறையில் கூப்பைத் தாக்கத்தொடங்குகின்றார். கூப் எதையும் திருப்பிப் பேசாது ஆனின் தகப்பனின் அனைத்து வன்முறைகளையும் தாங்கிக்கொள்கின்றார். அந்தச் சம்பவத்தோடு ஆன் தனது பதினாறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போகின்றார்; அதன்பின் ஒருபோதும் அந்தக்கிராமத்துக்குத் திரும்பி வரவேயில்லை. அவ்வாறே கூப்பும் ஒரு நாடோடியாக நெவேடா பாலைவனங்களில் அலையந்து, பிற்காலத்தில் ஒரு நுட்பமுள்ள சூதாட்டக்காரனாய் மாறுகின்றார். கிளேயர் மட்டும் தனது தகப்பனைக் கவனித்தபடி ஒரு வழக்கறிஞரின் உதவியாளாராக அருகிலுள்ள ஒரு நகரில் வேலை செய்கின்றார். கிட்டத்தட்ட இருபது வருடங்களின் பின் கூப் சூதாட்டத்தின் நிமித்தம் ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கும்போது, கிளேயர் கூப்பை க்ண்டு உதவி செய்யப்போவதுடன் நாவலின் முதற்பகுதி முடிகின்றது.

இரண்டாம் பகுதியில், எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமிருக்கின்ற ஆன், பிரான்சிலிருக்கும் ஒரு எழுத்தாளரை (Lucian Segura) பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதும் நோக்கத்தோடு பிரான்சின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் அந்த எழுத்தாளர் வாழ்ந்த வீட்டுக்குப்போகின்றார். அங்கே தங்கியிருக்கும் காலத்தில் ரஃபேல் என்ற ஒரு ஆணோடு நெருக்கம் வந்து அவரோடு சேர்ந்து ஆன் வாழத்தொடங்குகின்றார். ரஃபேலின் சிறுவயது நினைவுகள் அந்த எழுத்தாளரோடு கழிந்திருக்கின்றதென்பது ஆனுக்கு இன்னும் ரஃபேலுடனான உறவு சுவாரசியமூட்டுகின்றது. இரண்டாம் பகுதி முழுதும் லூசியன் என்ற எழுத்தாளரைப் பற்றியும், ரஃபேலின் சிறுவயது நினைவுகள் பற்றியுமே பேசப்படுகின்றது. ஆச்சரியமாக எழுத்தாளார் லூசியனின் வாழ்வு மற்றும் பின்புலம் என்பவை ஆனின் இளவயது வாழ்வுக்கு நெருக்கமாய் இருக்கின்றது. தான் எதை எழுத/எண்ணத் தொடங்கினாலும் அது தனது சகோதரியான கிளேயரின் நினைவுகளோடே தொடங்கும் என்று நினைக்கும் ஆன் தனது கடந்த காலத்துக்கு போவதை ஒருபோதும் விரும்பாதவராக இருக்கின்றார். கிளேயரின் ஆளுமை தனது இருப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றதென்பதையும் ஆன் அறியாதவருமல்ல. ஆனோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் ரஃபேலோ அல்லது அதற்குமுன் ஆன் சந்தித்த ஆண்களோ, ஆனின் கடந்த கால வாழ்வு பற்றிக் கேட்கும்போது ஆன் அதைத் தவிர்க்கவே செய்கின்றார். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறான ஆண்களை மூர்க்கமாய் நிராகரித்தே ஆன் செல்கின்றார்.. அநேக பொழுதுகளில் கூப்பை, கிளாரவை நினைத்துகொள்ளும் ஆன திருப்பி அவர்களைச் சந்திக்கவோ தொடர்பில் இருக்கவோ விரும்பவில்லை என்பதோடு, ரஃபேலிடம் தனக்கு சகோதரிகள் எவரும் இல்லையெனத்தான் கூறவும் செய்கின்றார். அத்தோடு தனது கடந்தகாலத்தின் நிழல் தன்னோடு தொடர்ந்து வருவதைத் துண்டிக்கும் நோக்கத்தோடு தனது இளமைக்காலப்பெயரை மாற்றியே ஆன் வாழத்தொடங்குகின்றார்.

பிரான்ஸ் எழுத்தாளர் லூசியனின் வாழ்வும் ஒரு கிராமப்புறச் சூழலில் கழிகின்றது. லூசியனின் பதின்மவயதில் அவர்களின் வீட்டுக்கருகில் புதிதாய்த் திருமணமாகிய மேரியும் (Marie), ரமோனும்(Ramon) குடியேறுகின்றார்கள். ரமோன் சற்று முரட்டுத்தனமானவராக அதிகம் பேசிக்கொள்ளாதவராக இருக்கின்றார். மேரிக்கு, லூசியனின் வயதே (16) இருக்கின்றது. லூசியனின் தாயார் மேரியையும் தனது பிள்ளையாக நினைத்து வாசிக்கவும், நடனங்களைக் கற்றுக்கொடுக்கவும் செய்கின்றார். பிற்காலத்தில் லூசியன் திருமணம் செய்து முதலாம் உலகப்போரில் பங்குகொண்டு மீண்டும் தனது கிராமத்துக்கு திரும்பிவருகின்றபோது மேரி நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருப்பதையும், ரமோன் ஒரு குற்றத்தின் நிமித்தம் ஜெயிலில் இருப்பதையும் கண்டுகொள்கின்றார். பிறகு இறக்கும்வரை மேரியைத் தனது பராமரிப்பில் வைத்து லூசியன் காப்பாற்றுகின்றார். நாவலின் இடையில் ஏற்கனவே மேரிக்கும், லூசியனுக்கும் நட்புக்கு மேற்பட்ட ஒரு உறவு முகிழ்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. பிற்காலத்தில், போர்க்காலத்தில் diphtheria நோயால் பாதிக்கப்பட்டு அதிசயமாகத் தப்பி வருகின்ற லூசியன் அந்நோய் குறித்து விரிவாகக் குறிப்புகளும் எழுதுகின்றார். இறுதியில் அந்நோய் அவரின் கிராமத்தில் பரவும்போது அதன் காரணமாய் இறந்தும்போகின்றார். மேரி-ரமோனின் பிள்ளையான ரஃபேலே லூசியனோடு இறுதிக்காலத்தில் கழித்த ஒரு உயிருள்ள சாட்சியாக நாவலில் காட்டப்படுகின்றார்.

இந்த நாவலின் பல பாத்திரங்கள் -சாதாரண வாசிப்பில் எதிர்ப்பார்க்கின்ற - முழுதான வடிவத்தைத் தந்து முடிவான முடிவுகள் என்று எதையும் தருவதில்லை. வாழ்கை என்பது எப்போதும் ஓடிகொண்டிருக்கும் நதிதான். ஏதோ ஒரு கணத்தில் கால நனைக்கும் நம்மால் கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ, ஏன் நிகழ்காலத்தைக் கூட முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாது எனபதே யதார்த்தமானது. எனவே ஒவ்வோரு பாத்திரங்களும் ஏதோ ஓரிடத்தில் நாவலிருந்து நழுவிப்போய்விடுகின்றார்கள். நாவல் முடியும்வரை எப்போதாவது ஓரிடத்தில் திரும்பிவந்து தமது கதையை நிறைவுசெய்வார்கள் என்று நினைத்து வாசித்துமுடிக்கும்போது அவர்கள் மீண்டும் திரும்பியே வருவதில்லையென்கின்றபோது, அட இன்னும் அந்தப் பாத்திரத்தை ஆழமாய் வாசித்திருக்கலாமோ என்று எண்ண முடியாமல் இருக்க முடிவதில்லை. மேலும் நிகழ்காலத்தில் எம் முன்னே விழுந்து கிடக்கும் கடந்தகாலத்தின் சிறகுகள் ஒவ்வொன்றும் நமக்கான கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் என்கின்றபோதும், அந்தச் சிறகுகளைக்கொண்டு முழுப்பறவையும் அது பறந்துகொண்டிருந்த வெளியையும் முழுமையாக நினைவுபடுத்தலென்பது அவ்வளவு சாத்தியமானதில்லை. அவ்வாறான ஒரு நினைப்புடனேயே இந்நாவல் முழுதும் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றதோ என்று தான் யோசிக்கத்தோன்றுகின்றது.

ஆன், கிளார, கூப் ஒரளவு முக்கிய பாத்திரங்களே தவிர அவர்கள்தான் முக்கிய பாத்திரங்கள் என்றில்லை. மையங்களற்ற பாத்திரங்களைக்கொண்டு மையங்களற்ற வகையில்தான் ஒண்டாஜ்ஜி தனது போக்கில் இந்நாவலை எழுதிக்கொண்டே போகின்றார். மூன்றாம் பகுதி முழுதும் ஒவ்வொரு சிறுகதைகளாக தலையங்கமிட்டே எழுதப்பட்டிருக்கும். திடீதிடீரென்று ஒவ்வொரு பாத்திரங்களும் தமது நிலையில் நின்று கதையைச் சொல்லத் தொடங்கும்போது, விளங்கிக்கொள்வதற்கான வாசிப்புக்கான நேரம் நிறையக் கோரப்படுகின்றது. முதலாம் பகுதியில் மகள்களின் பாத்திரங்கள் (ஆன் மற்றும் கிளேயர்) பேச, தந்தை அதிகளவில் மெளனமாகிவிடுகின்றார். அதேபோல இரண்டாம் பகுதியில் மெளனமாக்கப்பட்ட தந்தைகளின் பிரதிநிதியாக நின்று தந்தையாகிய (லூசியன்) அதிகம் பேசத்தொடங்குகின்றார். எல்லாப் பாத்திரங்களும் தமக்கான தனிமையையும் இரகசியங்களையும் கொண்டிருப்பதால், அவற்றை வாசகர் தமக்கு விரும்பிய பாத்திரங்களாக நிரப்பிக்கொள்ளும் வெளியும் வாசகருக்கு இந்நாவலில் வழங்கப்படுகின்றது. உதாரணமாக பதினைந்து வயதில் ஓடிப்போகின்ற ஆன், 34 வயதில் ஒரு எழுத்தாளாராக நாவலில் மீண்டும் அறிமுகப்படுத்தபடுகின்றார். அந்த இடைப்பட்ட காலம் பற்றிய வெளியை வாசகர் தனக்கு உரியதாக வாசித்துக்கொள்ளும் ஒரு சூழலைப்போல நிறைய இடங்கள் நாவலுக்குள் இருக்கின்றன.

கூப்பை ஆபத்திலிருந்து கிளேயர் காப்பாற்றுகின்றபோது கூப் ஒருவித குழப்பநிலையில் இருக்கின்றார். கிளேயரை ஆன் எனவே அழைக்கவும் நினைவுகொள்ளவும் செய்கின்றார். பிறகு கூப்புக்கும் கிளேயருக்கும் என்ன நிகழ்ந்தது என்பதும், கிளேயர் தனத் தந்தையிடம் கூப்பை அறிமுகம் செய்வாரா என்பதும் நாவலில் திறந்தவெளியாக இருக்கின்றது. அதேபோல் அடிக்கடி தனது ச்கோதரி கிளேயரையும், கூப்பையும், தனது தந்தையையும் நினைவுபடுத்திக்கொள்கின்ற ஆன் மீண்டும் அவர்களைச் சந்திப்பாரா அல்லது கடந்தகாலத்தைத் துண்டிக்க தனது பெயரை மாற்றியதுபோல எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்ந்துகொண்டு போவாரா என்பதும் நிரப்பப்படாத வெற்றிடமாகவே இருக்கின்றது. நம்மிடம் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் வாழ்க்கையில் தெளிவான பதில்கள் இருப்பதில்லை போல இந்நாவலிலும் பல இடங்களில் எழும் கேள்விகளுக்கு எந்தத் தெளிவான முடிவுகளும் கிடைப்பதில்லை. நாம் சிலவேளைகளில் நமக்கான வாழ்க்கையைத்தான் திருப்பவும் வாசிக்கின்றோமா என்ற மனக்கிளர்ச்சியும் அலுப்பும் ஒரே நேரத்தில் வந்துபோவதை இந்நாவலை வாசிக்கும்போது தவிர்க்கவும் முடிவதில்லை.

9 comments:

-/பெயரிலி. said...

டிசே
நல்ல அலசல்

2/16/2008 11:39:00 AM
Anonymous said...

இந்த நாவலைப்பற்றி மதி எழுதியிருந்தார். அப்போது வாசிக்கவேண்டுமென்று நினைத்தது இன்னமும் கைகூடவில்லை.

2/16/2008 11:55:00 AM
Ayyanar Viswanath said...

/மேலும் நிகழ்காலத்தில் எம் முன்னே விழுந்து கிடக்கும் கடந்தகாலத்தில் சிறகுகள் ஒவ்வொன்றும் நமக்கான கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் என்கின்றபோதும், அந்தச் சிறகுகளைக்கொண்டு முழுப்பறவையும் அது பறந்துகொண்டிருந்த வெளியையும் முழுமையாக நினைவுபடுத்தலென்பது அவ்வளவு சாத்தியமானதில்லை/

எங்க வேணா பொருந்திப் போகிற அற்புதமான வார்த்தைகள் டிசே.. ரொம்ப நல்லா வந்திருக்கு

2/16/2008 12:03:00 PM
இளங்கோ-டிசே said...

பெயரிலி, பாமீஅ மற்றும் அய்யனார் நன்றி.
.....
|பாமீஅ| என்று தான் பாவிக்கும் பெயரை வேறொருவர் மேலே பாவித்து பின்னூட்டம் எழுதியிருக்கின்றாரென நண்பர் ஒருவர் -தனிப்பட்ட பின்னூட்டம்- எழுதியிருக்கின்றார்.

ஜயன்மீர் பெயருக்கா பிரச்சினை? எத்தனையோ பெயரிருக்கே ஏன் ஏற்கனவே ஒருவர் பாவிக்கும் பெயரில் எழுதி எல்லோருக்கும் குழப்பத்தைத் தருகின்றீர்கள்...? அல்லது அநாமதேயம் என்றாவது பாவிக்கலாமே.
....
மற்றது |பாமீஅ| என்ற பெயரில் முதலிலிருந்தே எழுதுபவருக்கு, முதலும் இப்படி நடந்திருக்கின்றது எனக்குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எனது வலைப்பதிவில் |xxxx|பெயரில்தான் அந்தப்பின்னூட்டம் வந்தது. அதைத்தான் பிரசுரித்தேன். பெயரை மாற்றும் சூத்திரம் எதுவும் நானறியேன் :-).

2/16/2008 07:16:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணை முதலில் தலைப்பில் இலக்கணப் பிழை இருக்கு திருத்துங்கோ சில இறகுகளின் பயணங்கள் என்றுதான் வரவேண்டும்.மைக்கல் ஒண்டாச்சி புத்தகம் எழுதினால் அதுக்கு டிசே விமர்சனம் எழுதுவார் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

2/16/2008 08:22:00 PM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், சில 'இறகுகள்' ஆரம்பத்தில் ஒன்றாய்ப் பயணஞ்செய்வதைக் குறிப்பிடத்தான் 'சில இறகுகளின் பயணம்' என்றெழுதினேன். பயனிலையாக முடியாதவிடத்து இவ்வாறு எழுதுவதில் தவறில்லையென நினைக்கின்றேன்.

2/17/2008 02:44:00 PM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மைக்கேல் ஒண்டாஜ்ஜி இதுவரை படித்ததில்லை. தேடிப் பார்க்க வேண்டும்.

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

2/18/2008 06:27:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி ஈழநாதன் & சுந்தர்.

2/18/2008 08:58:00 PM
Anonymous said...

//மைக்கல் ஒண்டாச்சி புத்தகம் எழுதினால் அதுக்கு டிசே விமர்சனம் எழுதுவார் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.//

:-)))

2/20/2008 10:52:00 AM