கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அடையாளங்களைப் புறக்கணித்தல்

Friday, March 28, 2008

-M.G.Vassanji யின் The Assassin's Songஜ முன்வைத்து-

1.
நம்பிக்கைகள் சிலதோடு வாழ்பவரை விட, அதீத நம்பிக்கைகள் எவற்றிலும் இல்லாது வாழ்பவரைச் சமூகம் அதிகவேளைகளில் புறக்கணித்துவிடுவதாகவே இருக்கின்றது. அதேபோன்று எந்த மதமும் எமக்குச் சம்மதமில்லை என்பவரையோ அல்லது எல்லா மதங்களும் எமக்கு ஒரே மாதிரியானது என்பவரையோ சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்வள்வதுமில்லை. 'உனக்குரிய தெரிவை, உனக்கான அடையாளத்தை தெளிவாய் முன் வை' என்றுதான் உலகம் வன்முறையான முறையில் கேட்கின்றது. எமக்கான தெளிவான அடையாளம் என்ற ஒன்றில்லாது எல்லாவற்றோடும் இயைந்தும் முரண்பட்டும் கொண்டிருக்கின்றோம் என்றால் ஏளனப் பார்வையை வீசியபடி மனிதர்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு எந்த மதமும் தமக்குரிய தனித்த அடையாளமில்லையெனவும் (அல்லது எல்லா மதமும் தமக்குச் சம்மதமென) நினைத்து வாழும் சூஃபி மாந்தர்களின் வாழ்வைப் பகிர முனையும் புதினந்தான் எம்.ஜி.வசாஞ்ஜி எழுதிய The Assassin's Song என்ற புதினம்.

இப்புதினத்தின் கதை, ஹசன் என்ற கதை சொல்லியின் மூலமாகச் சொல்லப்படுகின்றது. குஜராத்தில் ஒரு சிறுகிராமத்தில் வளரும் ஹசனின் வாழ்வோடு, அம்மக்களின் வாழ்வியல், கலாசாரம் போன்றவை விபரிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் சமாந்தரமாய் கி.பி 12ம் நூற்றாண்டில் ஒரு நாடோடியாக அலைந்து திரிந்த நூர் பஸால் (Nur Fazal) என்ற சூஃபியின் கதையும் மாறி மாறி அத்தியாயங்களுக்குள் சொல்லப்படுகின்றது. இவ்வாறாக மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து அலைந்து திரிந்து இந்தியாவில் தங்கியிறந்துபோன நூர் பஸால் சூஃபியின் வழித்தோன்றல்களே ஹசன் போன்றவர்களாவார்கள். இஸ்லாமிய மதத்தையோ அல்லது இந்து மதத்தையோ சாராது தமக்குரிய கலாசாரங்களுடன், தனித்த வழிபாட்டு முறைகளுடன் இருக்கும் சூஃபியின் கோயிலுக்கு ஹசனின் தந்தையாரே பொறுப்பாக இருக்கின்றார். பலவேறு இடங்களிலிருந்து மக்கள் தமது நோய, இன்னபிற கஷ்டங்களைத் தீர்க்கும் பொருட்டு ஹசனின் தந்தையாரையும், சூஃபியின் சமாதியையும் நாடி வருகின்றார்கள்.

ஒரு கட்டத்தில் பதின்மவயதிலிருக்கும் ஹசனை, அவரது தந்தையார் தனக்குப்பிறகு கோயிலை வழிநடத்தும் குருவாக (Saheb) அறிவிக்கின்றார். குஜராத்தில் பல்வேறு காலகட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரம் நடந்தபோதும் சூஃபி வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்நகரம் வன்முறையால் பாதிப்படைந்ததில்லை. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹசனின் மாமனார் ஒருவரான ராஜ்கோபால் பாகிஸ்தானுக்குச் சென்று தனது பெயரை இக்பால் என மாற்றி முஸ்லிமாக வாழத்தொடங்குகின்றார். ஹசனின் வளரிளம்பருவத்தில் இந்து - முஸ்லிம்களுக்கிடையில் அவர்கள் இருந்த ஊரில் கலவரக்கொதிப்பு மனோநிலை வெடித்துக்கிளம்பும்போது (அது விரைவில் அணைந்தும்விடுகின்றது), ஹசன், தனது தந்தையிடம் நாம் முஸ்லிம்களா அல்லது இந்துக்களா? எவரைத் தெரிவு செய்யவேண்டும்? என வினாவுகிறார். தந்தையார், நாம் எந்த மதத்திற்கும் உரியவர்களில்லை (அல்லது நாம் எல்லா மதங்களாகவும் இருக்கின்றோம்) என்று தெளிவுபடுத்துகிறார்.

ஊரில் இந்து முன்னணி அமைப்பு, ஒன்று சீன-இந்தியா எல்லை மோதலிற்குப் பின், 'இந்தியத் தேசியத்தை' முன்வைத்து வீரியம் பெறுகின்றது. அந்த இந்து முன்னணியின் தலைவர், தம்மிடம் இந்து கலாசாரம் மற்றும் இந்தியத் தேசியம் குறித்து அறிய, வகுப்புக்களுக்கு ஹசனை அனுப்பக் கேட்கும்போது, ஹசனின் தந்தையாரும் மறுக்காது அனுப்பி வைக்கின்றார். ஆரம்பத்தில் பாடங்களைக் கற்பித்தலாயிருக்கும் இந்து முன்னணியினரின் வகுப்புக்கள், பிறகு தடிகள், கத்திகளுடன் சண்டைப் பயிற்சி வகுப்புக்களாய் மாற்றம் பெறுகின்றன. ஹசனின் நடுப்பெயரில் வரும் முஸ்லிம் பெயரைத் தொடர்து கேலி செய்து வரும் இந்து முன்னணியின் தலைவர், ஒருநாள் பயிற்சி வகுப்பின்போது சண்டையில் ஒரு 'இந்து' மாணவனை ஹசன் வென்றது பிடிக்காது ஹசன் மீது காழ்ப்புக் கொள்ளத் தொடங்குகின்றார்.


இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் ஹசன், தான் நம்பிய சூஃபி வழிபாட்டில் சில அபத்தங்களைக் கண்டுகொள்கின்றார். முக்கியமாய் அவர்களின் கோயில், தந்தையார் என்ற எதுவும் 'பரிசுத்தமானதல்ல' என்ற புரிதல்களை வந்தடைகின்றார். தனது தந்தையும், முடிசூட்டப்பட்ட தனது எதிர்கால 'குரு' பதவியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானிக்கும் ஹசன், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின்பேரில் விண்ணப்பிக்கின்றார். எதிர்பாராத விதமாய் ஹவார்ட் வளாகத்திற்கு ஹசனுக்கு அனுமதியும் கிடைக்கிறது. ஹசன், தகப்பனின் விருப்பையும் மீறி அமெரிக்கா செல்கின்றார்; எனினும் திரும்பி வந்து தானொரு சாகிப்பாய் தனது முன்னோரான சூஃபியின் கோயிலில் பணியாற்றுவேன் என்ற வாக்குறுதியையும் தனது தந்தையிற்கு வழங்குகின்றார்.

அமெரிக்காவின் புதிய சூழலுக்கு தன்னைப் பழக்கப்படுத்துவதற்கு ஹசன் தொடக்ககாலங்களில் மிகவும் கஷடப்படுகின்றார். அதேவேளை எவரது கண்காணிப்புமின்றி தனது இயல்போடு இருக்கவிடும் அமெரிக்கச் சூழல் ஹசனுக்குப் பின்னாட்களில் பிடித்துப்போகின்றது. அவரின் பிற நண்பர்களில் அநேகர் குடியும், பெண் நண்பிகளுமெனத் திரிய, கீழைத்தேச நாடொன்றிலிருந்து வரும் ஹசனுக்கு இவற்றை எவ்வாறு எதிர்கொள்வதென்ற சிக்கல்கள் வருகின்றன. அதேசமயம், தான் தனது கிராமத்திலிருந்து அந்நியப்பட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கும் அவலமும் ஹசனுக்கு உறைக்கின்றது. இவ்வாறான அல்லாடல்களுக்கிடையில் ஒருநாள், 'தாயிற்குச் சுகமில்லை அவசரமாக வரவும்' என்ற தந்தியோடு ஒரு வழிப்பாதை ரிக்கெட்டும் கூடவே ஏற்பாடு செய்து ஹசனின் தந்தையார் அனுப்புகின்றபோது, இது தன்னை இந்தியாவுக்கு அழைத்து அங்கேயே இருத்தவிரும்பும் அப்பாவின் எண்ணமென்ற யோசனையில் ஹசன் இந்தியாவிற்குப் போவதை நிராகரிக்கின்றார். எனினும் தன் மீது மிகவும் பிரியம் வைத்திருக்கும் அம்மாவிற்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்ற சிந்தனை ஹசனைத் தினமும் அலைக்கழித்தபடி இருக்கின்றது. ஒரு கட்டத்தில் எங்கேயும் (அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ) தன்னை முழுமையாக பொருத்த முடியாத அவதியில் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகி மனநோய் வைத்தியரைப் பார்க்கத் தொடங்கின்றார்.


2.
ஹசன் தனது கலாநிதிப் பட்டத்தை முடிக்கின்றகாலகட்டத்தில் இந்திய-ஆங்கிலேய கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த மார்கியைச் (Marge) சந்திக்கின்றார். பிறகு, அந்தப்பெண்ணையே திருமணஞ்செய்து, அப்பெண்ணின் பெற்றோர்களிலிருக்கும் கனடாவின் வினிபெக் நகரில் கல்லூரி பேராசிரியர் வேலையையும் எடுத்துக்கொண்டு ஹசன் தனது குடும்ப வாழ்வைக் கன்டாவிலேயே தொடங்குகின்றார். தனது திருமண விடயத்தை மட்டும் இந்தியாவிலிருக்கும் பெற்றோருக்குத் தெரிவிக்கும் ஹசன், கொஞ்சம் கொஞ்சமாய்த் தனது இந்தியத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்கின்றார் (இக்காலகட்டத்தில் ஹசன் என்ற தனது பெயரை கிருஷ்ணா எனவும் மாற்றிக்கொள்கிறார்). ஹசனும் அவரது துணைவியாரும் அவர்களின் ஒரே மகன் மீது அளவற்ற பிரியங்களை வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் உதைபந்தாட்டம் ஆடியபின் சாலையை கடக்கும் சந்தர்ப்பத்தில் காரொன்றினால் அடிக்கப்பட்டு அவர்களின் பிரிய மகன் கொல்லப்படுகின்றான். நாம் இவ்வளவு காலமும் சந்தோசமாய் வாழ்ந்தோம் எனினும் எனது குழந்தை இறந்ததன் பிறகு என்னால் இங்கே வாழமுடியாதென ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு ஹசனின் துணைவியார் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வளவு காலமும் அழகாகவும் மகிழ்வாகவும் இருந்த இல்லற வாழ்வுக்கு தனது மகன் மட்டுமா ஒரே அடித்தளமாய் இருந்தாராவென குடும்ப உறவின் அபத்தம் குறித்து ஹசன் யோசிக்கத் தொடங்குகின்றார். தனது துணைவியார் அவரது -கடந்தகால- பாடசாலை நண்பரொருவனோடு வன்கூவரில் சேர்ந்து வாழ்கின்றார் என பின்னாட்களில் ஹசன் அறிந்துகொண்டாலும், அவர் தொடர்ந்து அதே நகரத்திலே தங்கியபடி, கல்லூரியில் கற்பித்தபடி, தனியாளாக வாழந்துகொண்டிருக்கிறார்.

ஒருநாள் வினிபெக்கில் தற்செயலாக சந்திக்கும் தனது ஊர்க்காரரால் ஹசனுக்கும் அவரது தந்தையிற்குமான உறவு மீண்டும் கடிதம் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகின்றது. தனது தாய் இறந்துவிட்டதை ஹ்சன் அறிகின்றார்; தந்தையும் தனது பேரக்குழந்தை இறந்த துயரைக் ஹசனுடன் பகிர்ந்துகொள்கின்றார். 70களில் இந்தியாவை விட்டு வெளியேறிய ஹசன் 2000 வரை இந்தியாவுக்குத் திரும்பி ஒரு முறைகூட போகாதிருக்கின்றார் என்ற அவலம் அவருக்கு உறைக்கின்றது. ஹசனின் தந்தையாரும் தான் சாக முன்னர் ஒருதடவையாவது ஹசனை மீண்டும் தனக்குப் பார்க்க விருப்பமிருப்பதாய்ச் சொல்கின்றார். இந்த நேரத்திலேயே குஜராத்தில் மீண்டும் -கோத்ரா இரெயினை எரித்ததோடு- கலவரம் மோசமாக நிகழத் தொடங்குகின்றது. அதுகுறித்து இணையம்/தொலைக் காட்சி மூலம் அறிகின்ற ஹசன் இதற்கு முன்னர் வன்முறை தீண்டப்படாத கிராமமாய் இருந்த தனது கிராமம் இந்தமுறையும் தப்பும் என நினைத்துக்கொள்கின்றார். எனினும் நிலைமை தலைகீழாகப் போகின்றது. தமது கோயிலில் அடைக்கலமான மக்களைக் காப்பதன் பொருட்டு உரையாட முன்வரும் ஹசனின் தந்தையை, இந்து வன்முறைக்குழு ஒன்று வெட்டிக்கொல்கின்றது. முஸ்லிமாய் மாறிப்போன ஹசனின் இளைய சகோதரன் மன்சூரை (முஸ்லிமாய் ஆனபின் ஒமர்) கோத்ரா இரெயின் எரிப்பில் ஒரு குற்றவாளியாகப் பொலிஸ் தேடத் தொடங்குகின்றது.

இறுதியில் இந்தியாவுக்கு -30 வருடங்களின் பின் - ஹசன் பயணமாகின்றார். உருக்குலைந்து போன தனது கிராமத்தைக்கண்டு மனம் வெதும்புகின்றார். பொலிஸால் தேடப்படும் தனது சகோதரை இரகசியமாகச் சந்திக்கும் ஹசன், பொலிசிடம் அவரைச் சரணடையும்படி வேண்டுகின்றார். கோத்ரா எரிப்புச் சம்பவத்தில் தான் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்கின்ற மன்சூர், பொலிஸில் சரணடைந்தால், தன்னையும் என்கவுண்டர் முறையில் கோத்ராவில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களைப் போல பொலிஸார் கொன்றுவிடுவார்கள் எனப் பயப்பிடுகின்றார். இறுதியாக மன்சூர் தப்பியோடி பாகிஸ்தானுக்குப் போனதாய்ச் செய்தி ஹசனுக்கு வருகின்றது.

இதற்கிடையில் இதுவரை மறைக்கப்பட்ட நூர் பஸால் பற்றிய உண்மையை ஹசன் அறிந்துகொள்கின்றார் (சூஃபியின் வரலாற்றை அறியும் ஆதிப்பிரதிகள் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே வாசிக்கமுடிகின்றமாதிரி ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது). இன்று ஒரு ஞானியாக மதிக்கப்படும் நூர் பஸால் ஒரு Assassin என்பதை ஹசன் அறிகின்றார் (Nur Fazal the sufi, I concluded, had been an Assassin. Everything I read in the book in my hand seemed to confirm this (p 302)). ஈரானின் மேற்குப் பகுதியில் இஸ்மாயில்ஸ் (assassin) என்றொரு சமூகம் இருந்தது(?) எனவும், அவர்கள் பிற முஸ்லிம்கள் செய்யும் தொழுகையையும், ஷரியா போன்ற மதச்சடங்குகளையும் நிராகரிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் எனவும் ஹசன் அறிந்துகொள்கின்றார். இவ்வாறு assassin சமூகத்தில் பிறந்த நூர் பஸால் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்து அனுபவங்கள் பெற்று ஒரு ஞானியாகி இந்து அரசன் ஒருவனின் (விஸால் தேவ்) மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார். எனினும் இவரொரு Assassin யாய் இருந்தார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும், மிகுதி அனைவருக்கும் அவர் ஒரு சூஃபி ஞானியே (Pir Bawa).

இனி தனது வாழ்க்கையில் என்ன செய்வது என்று யோசிக்கின்ற ஹசன், இன்னமும் தன்னையொரு சாகிப்பாய் -சூஃபி ஞானியின் வழித்தோன்றலாய்- நினைத்துக்கொள்கின்ற மக்களுக்காய் தனது ஊரிலேயே தங்கிவிடத் தீர்மானிக்கின்றார். சீரழிக்கப்பட்ட சூஃபியின் கோயிலையும், மக்களின் வாழ்வையும் கட்டியெழுப்பப் போவதனான ஹசனின் நம்பிக்கைப்பார்வையினூடாக இப்புதினம் முடிகின்றது.

3.
எம்.ஜி.வசாஞ்ஜி, இப்புதினத்திற்கு பின்னிணைப்பாய் -நூர் பஸால் என்ற பாத்திரம்- கற்பனையே என்றும் ஆனால் மத்திய காலத்தில் முஸ்லிம் ஞானிகள் இந்தியாவுக்கு வந்தது வரலாற்று உண்மையெனவும் குறிப்புகள் கொடுத்திருக்கின்றார். இந்தக் குறிப்புகளை ஒரு புறமாய் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இப்புதினம் இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றை நிராகரித்து வேறொரு பார்வையில் நாம் சிந்தித்துப் பார்க்கும் வெளிகளைத் தருகின்றதென்ற புரிதல்கள் எமக்கு வரக்கூடும். எழுதப்பட்ட வரலாற்றையெல்லாம் கலைத்து மாறி மாறி ஆடிப் பார்க்கும் ஆட்டம் என்பதே ஒரு சுவாரசியமான ஆட்டந்தானே. வரலாற்றை மட்டும் பார்த்துத் தேங்கிவிடாது, நிகழ்காலத்திலும் வந்திறங்குவதால் இந்தப் புதினம் இன்னும் அதிக கவனம் பெறுகின்றது. இன்னும், போகின்றபோக்கில் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டு ஆசிரியர் போகின்றாரே தவிர, இந்து, முஸ்லிம் மக்களைப் பற்றி அதிகம் காழ்ப்புணர்ச்சியின்றி - சார்புநிலை எடுக்காது- எழுதப்பட்டிருப்பது இதமாயிருக்கிறது. இப்புதினத்தில் பலரது பாத்திரங்கள் மர்மம் நிறைந்த வெளிகளாக விடப்பட்டிருக்கின்றன. கோத்ரா கலவரத்தில் ஹசனின் சகோதரர் சம்பந்தப்படவில்லையென்பதை மன்சூரைக் கொண்டே மறுதலிக்கப்படுகின்றதே தவிர, ஆசிரியர் எந்த ஒரு தெளிவான முடிவையும் வாசகரிற்கு கொடுக்காத இடைவெளியாக விடுகின்றார். அதேபோன்று ஹசனின் தகப்பனை வெட்டிக்கொல்கின்ற இந்து முன்னணிக்குழுவினர், சூஃபியின் கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்த -இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடில்லாத- மக்களை என்ன செய்தார்களெனற பகுதியும் பூர்த்திசெய்யப்படாதே இருக்கின்றது. (குஜராத்தில் கலவரம் நடந்தபோது, தாம் இந்துக்கள் என்று சொல்லித் தப்ப முயன்ற முஸ்லிம்களை ஆடைகளை அகற்றி அடையாளம் கண்ட அதிவன்முறையையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்). இந்நாவலை வாசித்து முடிக்கும்போது மத அடையாளங்களோடு இருப்பவரை விட, அவ்வாறு எந்த அடையாளங்களுமின்றி இருப்பவருக்கான உலகந்தான் இன்னும் அச்சமூட்டுவதாய்...., பாதுகாப்பில்லாதிருக்கின்றது என்ற உணர்வே மேலோங்குகின்றது.

இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருக்க விரும்பாத (அல்லது இரண்டாகவும் இருக்கவிரும்பும்) சூஃபிகள் சமூகம் பற்றிய இக்கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நினைவலைகள் பால்யங்களை நோக்கி ஓடத்தொடங்கியது. ஈழத்துக் கல்விமுறையில் மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை 'சமயம்' ஒரு கட்டாய பாடமாக இருக்கின்றது. நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாத பெற்றோராயிருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு சமயம் ஒன்றைத் திணித்து கற்பிக்கச் செய்யத்தான் வேண்டும். அத்தோடு தெரிவு என்பது ஒன்றாகவிருக்கும்போது, வெவ்வேறு சமயங்களில் கலப்புத் திருமணஞ்செய்த பெற்றோர் இரண்டு 'சமயங்களை'த் தெரிந்தெடுத்து பிள்ளைக்குக் கற்பித்துவிடவும் முடியாது. அதைவிட அபத்தமாய், 'சமயம்' என்கின்ற கட்டாயப் பாடத்தில் உங்களுக்குரியதாய் நினைக்கும் 'மதம்' குறித்துக் கற்பிப்பார்களே தவிர எல்லா மதங்களையும் அறிந்துகொள்கின்ற கற்கை நெறிகளும் நமது பாடத்திட்டத்தில் இல்லை. சமயத்தோடு இயைந்து வாழும் ஒவ்வொருவரும் தமது நாளாந்த வாழ்வில் தமது சமயம் குறித்து அறிவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. ஆனால் பிறமதங்கள் குறித்து அறிவைப் பரவலாக பெறுவதற்குரிய இடமாக இருக்கும் பாடசாலையோ அந்த வெளியை மறுத்து, 'உனக்குரியதான மதத்தை மட்டும் கற்க' என்று கூறுகின்றது. இவ்வாறான சூழலிலிருந்து வெளியேறும் மாணவர்கள் எங்ஙனம் மத நல்லிணக்கத்தோடோ, பிற மதங்கள் குறித்த சகிப்புத்தன்மையோடோ பாடசாலையிலிருந்து வெளியேற முடியுமென எதிர்பார்க்கமுடியும்? இன்னும், பதின்மங்களில் தமது சுய அறிவை வளர்த்துக்கொண்டு சமயத்தை மறுக்கவிரும்பும் மாணவருக்கு எந்த ஒரு தெரிவையும் எமது கல்விச் சமூகம் வழங்குவதேயில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தமானது.


(படங்கள்: chapters.ca)
(வைகறையிற்காய் எழுதப்பட்டது)

0 comments: