A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beah
உலகம் அழகியலோடு இருப்பது போன்றே பலவேளைகளில் நிறைந்த குரூரங்களோடும் சுழன்றபடியிருக்கின்றது. நம்மில் பலருக்கு நமக்கு மட்டுந் தெரிந்தது மட்டுமே 'உலகம்' என்ற எண்ணமிருக்கிறது. அந்தச் சிந்தனையானது பிறரை/பிறதை நாம் புரிந்துகொள்ளவும் விளங்கிக்கொள்வதற்குமான வெளியை ஒரு சுவரைப் போலத் தடுத்துவிடுகின்றது. சிலவேளைகளில் நாம் அறியாத/ நாம் வாழ்ந்து பார்க்காத, ஒரு உலகை இன்னொருவர் விபரிக்கும்போது அதை எப்படி முழுமையாக விளங்கிக்கொள்வதென்ற சிக்கல்களும் இருக்கின்றன. அதேபோன்று நாம் கடந்தகாலத்தில் அனுபவித்து, மறந்துவிட்டு நகர விரும்பும் விடயங்களை நிகழ்காலம் மீண்டும் ஏதோவொருவகையில் நினைவுபடுத்துகையில் எப்படி அவற்றை உள்வாங்கிக்கொள்வதென்ற அவதிகளும இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறான பதற்றங்களோடு வாசிக்கத் தொடங்கிய ஒரு நூல்தான் குழந்தை இராணுவத்தின் கதையைச் சொல்லும் A Long way Gone.
தனது குழந்தைமை எவ்வாறு காவு கொள்ளப்பட்டது என்று தனது கடந்தகாலத்தைச் சொல்லும் இஸ்மெயிலில் நினைவுகள் எங்களைச் சூறையாடிச் செல்கின்றது. அச்சிறுவனைப் போலவே என்ன செய்வதென்று குழம்பி வாசிக்கும் நாமும் அந்தச் சுழலில் தத்தளித்தபடி சிறு துரும்பாகி உள்ளிழுக்கப்படுகின்றோம். எவர் எவரினதோ நல்ன்களுக்காய் எதுவுமே அறியாது உலகமெங்கும் பலிக்கடாக்களாய் -இன்றும் -ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறார்களுக்குச் சொல்ல/நம்பிக்கை கொள்ள வைக்க எந்த வார்த்தைகளை நாம் வைத்திருக்கின்றோம் என்று நினைக்கும்போது மிகுந்த சோர்வு வருகின்றது. மனிதமற்று குரூரமாய்ப் போய்க்கொண்டிருக்கும் உலகைப் பார்க்கும்போது, இனி கருணைக்கும் அகிம்சைக்குமான காலம் கடந்துபோய்விட்டது போலத்தான் தோன்றுகின்றது.
சியராலியோனில் கிராமப்புறத்தில் வாழும் இஸ்மெயில் தனது பன்னிரண்டாவது வயதில் ராப் பாடல்களைப் பாடும் நிகழ்வில் பங்குபெற்றுவதற்காய் அடுத்த நகருக்குப் போகின்றான். அதுவே அவன் இறுதியாய்த் தனது கிராமத்தைப் பார்க்கும் நாள். எங்கோ தொலைவில் நடைபெற்றுக்கொண்டிருந்த போர் இவர்களின் கிராமத்தையும் அண்டிக்கொண்டிருப்பதை அறியாது இஸமாயிலும் அவனது மூத்த சகோதரன் ஜூனியரும் இன்னொரு நண்பனும் மகிழ்ச்சியுடன் நிகழ்விற்காய்ப் புறப்படுகின்றார்கள்.
மறுநாள் அடுத்த நகரில் இஸமாயில் தங்கியிருக்கும்போது அவர்களது கிராமம போராளிக் குழுவொன்றால் தாக்கப்படுகின்றது. தமது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்றறிய விரும்பி திரும்பவரும் இஸமாயில் உள்ளிட்டவர்களை உள்ளே வரவிடாது போராளிகள் தாக்குகின்றார்கள். அதே போன்று, கிராமத்திலுள்ளவர்கள் தப்பிப்போனாலும் போராளிகள் சுட்டுக்கொல்கின்றார்கள். கைப்பற்றும் கிராமத்திலுள்ள மக்களை -இராணுவம் தங்களைத் தாக்க வந்தால்- மனிதக் கேடயங்களாய்ப் பாவிப்பதற்காய் அவ்வாறான ஒரு எச்சரிக்கை. இப்படி தமது பெற்றோர்/ஊரவர்களிலிருந்து பிரிக்கப்படும் இஸமாயிலும் அவனது நண்பர்களும் மற்றொரு நகரில் அகதிகளாய்த் தங்குகின்றார்கள். அந்த நகரையும் விரைவில் போராளிக் குழு கைப்பற்றுகின்றது. பாதுகாப்புக்கென கிராமத்திலிருக்கும் சொற்ப இராணுவமும் தப்பியோட, தெருவில் நிற்பவர்கள்/ கண்டவர்கள் என்று பொதுமக்களையெல்லாம் (இராணுவம் ஊடுருவியிருக்கும் என்ற நினைப்பில்) போராளிக்குழு கொல்கின்றது (உண்மையில் இப்படிக் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருக்கும் முழுமக்களையும் கொல்வதற்கான இன்னொரு காரணத்தை, இஸமாயில் குழந்தை இராணுவமான பின்னர் கூறுகின்றார்). உயிருக்குப் பயந்து, இஸ்மாயிலும், சகோதருமாய் ஏழு சிறுவர்கள் அகதிகளாய் ஓடத்தொடங்குகின்றார்கள். இஸமாயிலுக்கு பன்னிரண்டு வயது, சகோதரருக்கு பதினைந்து வயது; மிகுதிச் சிறுவர்கள் இந்த வயதுகளுக்கிடையில் இருக்கின்றார்கள்.
இவர்கள் ஏழு பேராய் அகதிகளாய் ஒவ்வொரு ஊரூராய் அலையத் தொடங்குகின்றார்கள். இவர்களைப் பராமரித்துக்கொள்ள தெரிந்த எந்தக் குடும்பமும் இல்லை. அதைவிட மிகுந்த பட்டினி. இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை, இவர்கள் இப்படி ஏழுபேராய் அகதிகளாய் அலையும்போது பிற கிராமத்தவர்கள் இவர்களைப் போராளிக்குழுவென்று (சிலவேளைகளில் உளவு பார்க்க வந்தவர்கள் என்று) துரத்துகின்றார்கள். சில இடங்களில் கொல்லக்கூட வருகின்றார்கள் கெஞ்சி மன்றாடித் தப்பியோடியபடியிருக்கின்றார்கள். ஒருகட்டத்தில் போராளிக் குழுவினால் பிடிக்கப்பட்டு இயக்கத்தில் சேர்க்கப்படுகின்றார்கள். மிகச் சிறுவனாக இருப்பதால் இஸமாயில் தப்பிவிட, அவரது சகோதரர் இயக்கத்தில் பலவந்தமாய்ச் சேர்க்கப்படுகின்றார். திரும்பவும் அகதியாய் ஓட்டம். கூடவிருந்த நண்பர்களைப் போரில் இழத்தல். திடீரென்று எங்கையாவது போர் வெடித்து உயிருக்காய்த் தப்பியோடும்போது அருகிலிருந்த நண்பர்களைப் பிரிதல். இப்படி திசை தெரியாது ஓடியோடி ஒரு கட்டத்தில் ஒரு காட்டிற்குள் இஸமாயில் நுழைந்துவிடுகின்றார். கிட்டத்தட்ட அந்த அடர்ந்த காட்டிற்குள் ஒரு மாத தனிமை வாசம். பசியில் கையில் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு உயிர் தப்பல். குருவி சாப்பிட்டு சாகாமல் இருக்கும் பெயரறியாப் பழங்களையெல்லாம் தானும் உண்டபடி எவரும் கூடவிருந்து கதைக்கவியலா மிகப் பெருந்தனிமை. அதிலிருந்து விடுபட்டு ஒருமாதிரியாக வெளியில் வருகின்றார். தொடரோட்டத்தில் தனது பெற்றோர் சகோதரர் இன்னொரு கிராமத்தில் தப்பி வந்திருக்கின்றார்கள் என்றறிந்து போகின்றபோது, அந்தக்கிராமத்திலுள்ள அனைவரையும் உயிரோடும்/கொன்றும் எரியூட்டிக் கிராமத்தைச் சூறையாடிவிட்டு போராளிகள் போயிருக்கின்றார்கள் என்பது பேரிடியாக விழுகின்றது. இறுதியில் போர் என்றைக்குமாய்த் தீண்டாத ஒரு நகரை நோக்கி -இப்படி அகதியாய் ஓடும்போது வாய்த்த புதிய நண்பர்களோடு- பயணிக்கின்றார். அங்கு முகாம் அமைத்திருக்கும் இராணுவம் இவர்களுக்கு அடைக்கலங்கொடுக்கின்றது. இராணுவத்துக்கு கூடமாட உதவிகள் செயதபடி இவர்களைப் போன்ற முப்பதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இருக்கின்றார்கள்.
ஏற்கனவே நிகழ்ந்ததுபோல இவர்கள் இருந்த கிராமத்தையும் போராளிகள் சுற்றி வளைக்கின்றார்கள். தினமும் முன்னணிப் போரரங்கிற்குச் செல்லும் இராணுவம் இழப்புக்களுடன் திரும்பி வருகின்றது. ஒரு கட்டத்தில் போராடுவதற்கு ஆளணி போதாமல் இச்சிறுவர்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றார்கள். ஒன்று தங்களோடு போரில் ஈடுபடவேண்டும் இல்லாவிட்டால் அந்தக் கிராமத்தை விட்டு போகவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இனி இப்படி இராணுவப் பாதுகாப்பிலிருந்த தங்களைப் போராளிகளும் சுட்டுக்கொல்லத்தான் போகின்றார்கள் என்ற நம்பிக்கையற்ற எதிர்காலத்தால் இராணுவத்தில் இஸமாயில் உள்ளிட்டவர்கள் சேர்கின்றார்கள். பயிற்சி கொடுக்கப்படுகின்றது. இஸ்மாயிலுக்கு பதின்மூன்று வயது என்றால், அவரைவிட எட்டு. பதினொரு வயதிலிருக்கும் சிறுவர்களுக்கும் கூட பயிற்சி/ஆயுதம் வழங்கப்படுகின்றது. ஏகே 47ஐ நிமிர்த்திவைத்தால் அதைவிடக் குள்ளமாய்த்தான் அந்தச் சிறுவர்கள் இருந்தார்கள் என்று இஸ்மாயில் விபரிக்கின்றார்.
ஒருநாள் போராளிக் குழுவை வழிமறித்துத் தாக்குவதற்காய் இச்சிறுவர்கள் அனுப்பப்படுகின்றார்கள். சண்டை ஆயத்தமாவதற்கு முன் இச்சிறுவர்களுக்கு வெள்ளைநிற போதைக் குளிசைகள் வழங்கப்படுகின்றன. சண்டை ஆரம்பிக்கின்றது. நடுங்கும் தேகத்துடன் மனிதவுடல்கள சரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார்கள். ஒரு ஆர்பிஜி அடியில் அருகிலிருந்த எட்டு வயதுச் சிறுவனின் உடல் பிய்த்தெறியப்படுகின்றது. இஸ்மாயிலின் இன்னொரு நெருங்கிய நண்பனும் கொல்லப்படுகின்றான். இனி எதுவும் செய்வதற்கு இல்லையென 'அசைகின்ற எல்லாவற்றையும்' கண்மூடித்தனமாய் சுடத்தொடங்குகின்றார் இஸ்மாயில். ஒன்று இரண்டு என்று இவரது துப்பாக்கி ரவைபட்டு மனிதவுடல்கள் சரிகின்றன. ஒவ்வொருமுறையும் தோட்டாக்கள் முடிந்து மீள நிரப்பும்போது, இறந்த நண்பர்களின் முகங்கள் தனக்குள் வெறியை இன்னுமின்னும் அதிகமாய் ஏற்படுத்தியது என்கின்றார்.
எதையும் தொடங்குவதுதான் கடினம். தொடங்கினால் எதுவுமே போதையாகிவிடும். அதுவும் அசல் போதை மருந்தும் எடுத்துக்கொண்டு கொல்வது இன்னும் மிகுந்த போதையாக இருக்கின்றது. பதின்மூன்றில் தொடங்கும் இந்த வேட்டை பதினாறு வயது வரை கிட்டத்தட்ட தினம் தொடர்ந்தாய் இஸ்மாயில் குறிப்ப்டுகின்றார். போராளிகள் தங்கியிருக்கும் கிராமங்களைத் தாக்குவது, போராளிகள் மற்றும் அங்கிருக்கும் மக்களை முற்றாக கொல்வது (தப்பவிடும் ஒவ்வொரு மனிதனும் தங்கள் உயிரைப் பறித்தெடுத்துவிடுவார்கள் என்று கற்பிக்கப்படுகின்றது). 'உங்கள் பெற்றோரைப் பலியெடுத்த போராளிகளை சும்மா விடக்கூடாது' என்று இவர்களின் குழுத்தலைவரால் ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்னாலும் உசுப்பேற்றப்படுகின்றார்கள். வெறித்தனமாய் 'எதிரிகளை'க் கொல்லும் திறமைக்காய் இஸமெயிலுக்கு ஜூனியர் லெப்ரினன்ட் பதவி கூட வழங்கப்பட்டு, அவர் வயதொத்த குழுவிற்குத் தலைமை தாங்குபவராகவும் பதவி உயர்த்தப்படுகின்றார். கிராமங்களைத் தாக்கி அங்கிருக்கும் உணவு இன்னபிற பொருட்களை சூறையாடுவது. போராளிகள் மீண்டும் அக்கிராமங்களில் தளம் அமைக்காமற் தடுக்கும்பொருட்டு கிராமங்களையே முற்றாக எரிப்பது... இப்படியாகத் தாக்குதல்களை நடத்துவதும், அவையிலலாத பொழுதுகளில் போதை மருந்து எடுத்துக்கொண்டு Commando, Rambo, First Blood போன்ற சண்டைப் படங்களைப் பார்த்து பொர் வெறியைத் தங்களுக்குள் உசுபேற்றிக்கொண்டிருப்பது என்று காலம் கழிகிறது.
தப்பியோடமுடியாது பிடிபடும் போராளிகளுக்கு இவர்கள் செய்யும் அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு முறை பிடிபட்ட போராளிகளை, கைகளை பின்பக்கமாய் கட்டிவைத்து, இச்சிறுவர்களில் யார் குறைந்த நேரத்தில் முதலில் துப்பாக்கிக்கத்தியால் கழுத்தைச் சீவிக்கொல்வது கொல்வது என்ற போட்டி நடக்கின்றது. இன்னொரு முறை கடும் இழப்புகளுடன் கைப்பற்றும் கிராமத்தில் பிடிபட்ட போராளிகளைக் கொண்டே குழிதோண்டவைத்து, அப்படியே அவர்களை அதற்குள் உயிரோடு புதைக்கின்றார்கள் இப்படி எந்தவொரு மனிதத்தன்மையுமில்லாது போர் இவர்களை ஆக்கிவிடுகின்றது. கொல்லப்படும் நணபர்களை நினைத்து கவலைப்பட முடியாதவளவுக்கு போர் வெறி சன்னதமாடுகின்றது. ஓரிடத்தில் போராளிகள் தங்கியிருக்கும் கிராமத்தைத் தாக்கப்போகும்போது இஸமாயிலின் நண்பனுக்கு ஒரு ஆசை வருகின்றது. தாங்கள் பார்த்த ரம்போ படத்தில் வரும் ராம்போ மாதிரி போரை நிகழ்த்தவேண்டும்ன்று, ராம்போ மாதிரியே உள்ளே ஊடுருவி மதியக் களைப்பில் கிடக்கும் ஜந்தாறு பேரை துப்பாகிக் கத்தியால் பின்புறமாய் போய் கழுத்தைச் சீவிக்கொலை செய்கின்றான். அதிலும் கொடுமை என்னவென்றால், ராம்போ படத்தில் செய்வதற்கும் இதற்கும் ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், ராம்போ கொன்ற உடல்களை மறைத்ததுபோல நண்பன் மறைக்கவில்லை அதனால் இன்னும் பலரை இப்படிச் சத்தமில்லாது கொல்லும் சம்பவம் இடைநடுவில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கின்ற இஸ்மாயிலின் குறிப்புகள். பிமபங்கள் கட்டியமைக்கும் உலகு எப்படி நிஜமாய் ஆகின்றது என்கின்ற குரூர உண்மையை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். மனிதர்களை எப்படிப் போர் மாற்றியிருக்கின்றது என்பதற்கு இந்நூலில் குறிப்பிடப்படும் சம்பவங்களைவிட வேறு என்னதான் வேண்டும்?
அதிஸ்டமோ என்னமோ தெரியாது, இஸ்மாயில் பதினாறு வயதில் UNICEFவால், அவர்களின் மறுசீர்வாழ்வு நிலையத்துக்காய்(?) (rehabilitation centre) சியராலியோனின் தலைநகருக்கு அனுப்படுகின்றார்கள்.அங்கேயும் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது. சென்ற முதல் நாளன்றே, இவர்கள் போராளிகள் பக்கத்திலிருந்து வரும் குழந்தைப் போராளிகளைச் சந்திக்கின்றார்கள். எவரையும் கொன்று பழகிய இவர்களுக்கு அவர்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. இவர்களின் பாதுகாப்பிற்கு என்றிருக்கும் பாதுகாவலர்களின் துவக்குகளைப் பறித்து இருதரப்பும் சுட்டுக்கொல்கின்றது. முதல் நாளே ஆறுபேர் மறுசீர்வாழ்வு நிலையத்தில் இறந்துபோகின்றார்கள். மிகுந்த மூர்க்கத்தனமாய் இவர்கள் அங்கே வேலை செய்யும் ஆண்களையும்/பெண்களையும் துரத்தியடிக்கின்றார்கள், பொருட்களை வீசியெறிகின்றார்கள். இன்னும் தினமும் போதை மருந்து எடுத்ததால் அதுவில்லாது இவர்களால் இருக்கவும் முடியவில்லை. தமது கையை, தலையை சுவரில் நிலத்தில் அடிக்கின்றார்கள். இரத்தம் பொங்கி தனது கையெலும்பு வெளியில் தெரியும்வரை சீமெந்து நிலத்தில் பலமுறை அடித்ததாய் இஸ்மெயில் குறிப்பிடுகின்றார்.. இரவுகளில் தூஙகமுடியாது தான் கொன்றவர்களில் நினைவுகள் வந்து, இரவிரவாய் மைதானத்தைச் சுறறியோடியதாய், வராண்டாவில் நடந்து திரிந்ததாய் -மிகுந்த உளவியல் சிக்கல்களுக்குள் ஆளானதாய்- இஸ்மாயில் எழுதுகின்றார்.
தான் எவ்வளவோ முயன்று குழந்தை இராணுவமாய் ஆவதற்கு முன்பான நல்ல நினைவுகளை திருப்பக்கொண்டுவர முயற்சித்தாலும், தொடர்ந்தும் போர்க்காட்சிகளே தனது நினைவிலும் கனவிலும் தொடர்ந்துகொன்டிருந்தது என்றார். இவ்வாறு பலவேறு உள்/உடல் சிக்கல்களில் உழன்றபோதும் அந்த மறுசீர்வாழவு நிலையத்திலிருந்த வாஞ்சை மிக்க மனிதர்களின் அன்பாலும் பராமரிப்பாலும் திரும்பவும் தனது போரில்லாத உலகிற்குத் திரும்பியிருக்கின்றேன் என்கின்றார். அவருக்கான சிகிச்சை முடிந்தபின் தனக்கு ஒருவரும் இல்லையென்று நினைக்கும் இஸ்மாயிலுக்கு அவரது மாமா ஒருவர் திரும்பக்கிடைக்கின்றார். அவர்களோடு தலைநகரில் வாழத்தொடங்கும்போது, ஜநாவின் குழந்தைகளுக்கான ஒரு மாநாட்டில் நியூயோர்க்கில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றது. பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் நேர்முகத்திற்காய் காத்திருக்கும்போது தானொரு குழந்தை இராணுவத்தினனாய் இருந்ததால், தன்னால்தான் சியராலியனோனில் எப்படிக் குழந்தைகளின் வாழ்வு சூறையாடப்படுகின்றது என்பதைச் சொல்வதற்கு அதிக உரிமையுண்டு என்று கூறியதால் ஜநா கருத்தரங்கிற்கு அனுப்பப்படுகின்றார். அங்கே லோறின் என்ற வெள்ளைப் பெண்மணியைச் சந்திக்கின்றார். ஜநாவிற்கு நியூயோர்கிற்குப் போகும்போது பனிக்காலமாகையால் குளிர்காலத்தில் இஸ்மெயில் படுகின்ற அவதிகள் இன்னொரு விதமானவை.
மீண்டும் சியராலியரோனிற்குத் திரும்பிவந்த சொற்ப மாதங்களில் இதுவரை போர் தீண்டாத தலைநகரையும் போர் தீண்டுகின்றது. தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை (96) கவிழ்த்துவிட்டு இராணுவத்தள்பதியும் போராளிக்குழுவும் நாட்டைக் கைப்பற்றுகின்றது. மீண்டும் போர், பட்டினி, கொலை, கொள்ளைகள், பாலியல் பலாத்காரங்கள். தான் எங்கை போனாலும் போர் தன்னைத் துரத்தாது விடாதுபோல என இஸ்மெயில் அந்தரிக்கின்றார்.. இதுவரைகாலமும் இவரை அரவணைத்து அன்பு காட்டிய மாமனும், போர்க்காலத்தில் நோயின் நிமித்தம் மருத்துவ வசதியில்லாது இறந்துபோகின்றார். ஏன் இப்படி தனக்குப் பிடித்தமான பிரியங்காட்டிய எல்லோரும் இறந்துபோகும்போது தான் மட்டும் உயிரோடு இருக்கின்றேன் என மிகுந்த துயரங்கொள்ளும் இஸ்மாயில் இனி இந்த நாட்டில் தான் தொடர்ந்திருந்தால் கொல்லப்படுவேன் அல்லது மீண்டும் இராணுவத்தில் சேர்ந்து மனிதர்களைக் கொல்லவேண்டிய நிலைவருமென்று நாட்டைவிட்டு தப்பியோடுகின்றார். நியூயோர்க்கிலிருக்கும் லோறினைத் தொடர்புகொண்டு தான் நியூயோர்க் வந்தால் தனக்கு அடைக்கல்ந்தருவாரா எனக்கேட்கிறார். சியராலியனோனை விட்டு Guinea விற்குத தப்பியோடுவதோடு இந்நூல் நிறைவுபெறுகின்றது.(எப்படித் தப்பியோடியது என்பது இன்னொரு அவதியான கிளைக்கதை).
1980ம் ஆண்டு பிறந்த இஸ்மாயில் தற்சமயம் நியூயோர்க்கில் வசித்து வருகின்றார். குழந்தைகள் போரில் ஈடுபடுவதற்கு எதிரான ஜநாவின் திட்டங்களில் பங்குபெற்றி உரையாற்றியும் வருகின்றார். தனது பெயரிலேயே ஒரு அமைப்பு நிறுவி போரில் ஈடுபட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காய் வேலைத் திட்டங்களையும் செய்துவருகின்றார். இது ஒரு இஸ்மாயிலின் கதை, இவ்வாறு இன்னுமின்னும் ஆயிரக்கணக்கான இஸ்மாயில்களின் கதைகள் புதையுண்டு கிடக்கின்றன. மீண்டும் போர் தொடங்கிய காலத்தில், அடைக்கலம் கொடுக்க இஸ்மாயிலுக்கு ஒரு மாமாவது இருந்தார். அவ்வாறு இல்லாத பலர், மீண்டும் சீர்திருத்த நிலையத்திலிருந்து இராணுவம்/போராளிக்குழுக்களில் இணைந்து போர்முனைக்குச் சென்றதாக இஸ்மாயில் குறிப்பிடுகின்றார். இஸ்மாயிலுக்கு போரைத்தாண்டிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததுபோல எல்லாச்சிறுவர்களுக்கும் வசதிகள் கிடைப்பதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். இன்று நியூயோர்க்கில் வசித்துக்கொண்டிருக்கும் தான் மூன்று விதமான உலகிற்குள் இன்னமும் சிக்கிக்கொண்டிருப்பதாய் இஸ்மெயில் கூறுகின்றார். குழந்தை இராணுவமாய்ச் சேருவதற்கு முன்பிருந்த ஒரு வாழ்வு, குழந்தை இராணுவமாய் இருந்த ஒர் உலகு, இதற்கு முன பரீட்சயப்படாத புலம்பெயர் வாழ்வு என மூன்று வகையான உலகுகள் தன்னை அடிக்கடி இடைவெட்டுவதாய்க் குறிப்பிடுகின்றார்..
ஊரில் தான் சிறுவராயிருந்தபோது, தமது கிராமத்து முதியவர் கூறியவொரு கதையை இஸ்மாயில் ஓரிடத்தில் நினைவுபடுத்துவார். வேட்டைக்குப் போகும் ஒருவன் குரங்கைச் சுடுவதற்காய்த் துப்பாக்கியைக் குறிபார்ப்பான். அப்போது அந்தக்குரங்கு கூறும், நீ என்னைச் சுட்டால் உனது தாயார் மரணிப்பார், என்னைச் சுடாமல் விட்டாலும் உனது உனது தந்தை மரணிப்பார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எது உங்களது தேர்வாக இருக்குமென அந்த முதியவர் கேட்டிருப்பார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று மிகவும் குழப்பி, இறுதியில் கதை சொன்ன முதியவரிடம், குரங்கை விட்டுவிட்டு மான் போன்றவற்றை வேட்டையாடி இதிலிருந்து தப்பிவிடுவோம் என்று சொன்னதாய் -சிறுவர்களாய் இருந்தபோது- சொல்லியிருந்தோம் என்று இஸ்மாயில் குறிப்பிட்டிருப்பார். இது சரியான பதிலில்லை எனெனில் துப்பாக்கியைக் குறிப்பார்க்கத் தூக்கிவிட்டாய் ஆகவே உனக்கிருக்கும் தேர்வு இரண்டேதான் (குரங்கைச் சுடுவது அல்லது சுடாது விடுவது) என்று அந்த முதியவர் கூறியிருப்பார். இப்போது வளர்ந்தபின் அக்கதையை மீள நினைக்கும்போது, தனக்கு அவ்வாறான இரண்டு தேர்வுகள் மட்டுமே இருப்பின் குரங்கையே தான் சுட்டிருப்பேன் என்கின்றார் இஸ்மாயில். எனெனில் குரங்கைச் சுடாது விட்டால் அது தனக்குப் பின் வருபவ்ர்களுக்கும் இவ்வாறான கேள்வியைக் கேட்டு அவர்களுக்குப் பிரியமான ஒருவரைப் பலிகொடுக்கப்போகின்றது ஆகவே கிடைக்கும் விளைவுகளை தான் மட்டும் அனுபவித்துவிட்டு பின் வரும் சந்ததிகளுக்கு இவ்வாறான் இரண்டு கொடும் தேர்வுகளைக் கொடுக்கவேண்டியிருக்காதுதானே என்கின்றார். குரங்கையொரு போராய் அல்லது குழந்தை இராணுவமாய்/போராளியாய் உருவ்கித்துப் பார்த்தால் நமக்கும் நிறைய விடயங்கள் விளங்கக்கூடும்