கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அதிகாரத்தின் கிளைகளில் துளிர்க்கும் மனிதாபிமானம்

Friday, November 28, 2008

...Because they can destroy you, too, despite your talent and your faith. They decide what we play, who is to act and who can direct.
(from the movie, The Lives of Others)

அதிகார‌த்தை த‌ம‌க்காக்கிக் கொண்ட‌வ‌ர்க‌ள், பிற‌ரையும் த‌ம்மைப் போல‌வே சிந்திக்க‌வும் செய‌ற்ப‌ட‌வும் வைக்க‌ முய‌ல்கின்றார்க‌ள். அதேவேளை த‌ம‌க்கான‌ த‌னித்தேர்வுக‌ளின் அடிப்ப‌டையில் சுத‌ந்திர‌ வெளியில் சிற‌க‌டித்துப் ப‌ற‌க்க‌ விரும்புவ‌ர்க‌ளால் அவ்வாறு அதிகார‌வ‌ர்க்க‌த்தின் எல்லைக்குள் க‌ட்டுப்ப‌ட்டு இருக்கவும் முடிவதுமில்லை‌. என‌வே இவ்வாறான‌வ‌ர்க‌ளின் ஓர்ம‌த்தை அதிகார‌ வ‌ர்க்க‌ம் த‌ன‌க்குள்ள எல்லா வ‌ழிக‌ளாலும் அட‌க்க‌ப்பார்க்கின்ற‌து... தொட‌ர்ந்து த‌ம‌து விதிக‌ளை மீறிச் செல்ப‌வ‌ர்க‌ளை நோக்கி த‌ன‌து க‌ண்காணிப்பின் வ‌லைக‌ளை வீசிய‌ப‌டியிருக்கிற‌து. முன்னாள் சோவிய‌த்(து) ஒன்றிய‌ம், கிழ‌க்கு ஜேர்ம‌னி, சீனா, கியூபா போன்ற‌ இட‌துசாரித்துவ‌ம் மீது ந‌ம்பிக்கை வைத்த‌ நாடுக‌ள் ம‌ட்டுமன்று ஐக்கிய‌ அமெரிக்கா, ஐக்கிய‌ இராச்சிய‌ம் போன்ற‌ 'எல்லா ஜ‌ன‌நாய‌க‌ உரிமைக‌'ளும் த‌ங்கள் நாட்டிலிருக்கிற‌து என்கின்ற‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளும் த‌ம‌து நாடுக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளைக் கண்காணித்திருக்கின்றன/ இன்னமும் க‌ண்காணிக்கின்றன...சார்லி சாப்ளின், 'Beatles' ஜோன் லெனென் போன்ற‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ள். ஆக‌, எவ்வித வித்தியாசங்களுமில்லாது, அதிகார‌த்தை எவ‌ர் கைக‌ளில் வைத்திருக்கின்றார்க‌ளோ அவ‌ர்க‌ள் தம‌து அதிகார‌ங்க‌ள் மற்றும் தாம் சார்ந்திருக்கும் அமைப்புக்க‌ள் த‌க‌ர்ந்துவிடுமோ என்ற‌ ப‌ய‌த்தில், பிற‌ரைத் தொட‌ர்ந்து க‌ண்காணித்த‌ப‌டியிருக்கினறார்க‌ள் என்ற‌ உண்மை ந‌ம் அனைவ‌ருக்கும் விள‌ங்குகின்ற‌து.

The Lives of Others என்கின்ற‌ இப்ப‌ட‌ம் அதிகார‌த்திற்கும் ம‌னிதாபிமான‌த்திற்கும் இடையில் அல்லாடுகின்ற‌ ம‌னித‌ர்க‌ளின் க‌தையென்றே கொள்ள‌வேண்டும். அதிகார‌ம் என்ப‌து போதை த‌ருகின்ற‌ விட‌ய‌ம். அதிகார‌ப் போதை கூட‌ கூட‌ ம‌னிதாபிமான‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அங்கேயிருந்து ந‌க‌ர்ந்துவிடுகின்ற‌து. இப்ப‌ட‌த்தின் க‌தை கிழ‌க்கு ஜேர்ம‌னியில் நிக‌ழ்கிற‌து. ஒருவ‌ரை விசார‌ணை செய்வ‌தோடு ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கின்ற‌து. கிழ‌க்கு ஜேர்ம‌னியில் இர‌க‌சிய‌ப்பொலிசில் (Stasi) வேலை செய்யும் வெஸ்ல‌ர், மேற்கு ஜேர்ம‌னிக்கு ஓடிபோன‌ ஒருவ‌ரின் ந‌ண்ப‌னை விசாரிக்கின்றார். விசார‌ணைக்குட்ப‌டுத்த‌ப்ப‌டுப‌வ‌ன் தொட‌ர்ந்து த‌ன‌க்கு எதுவுமே தெரியாது என்ப‌தைத் திரும்ப‌த் திரும்ப‌ச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றான். அடுத்த‌ காட்சி, வெஸ்ல‌ர் புதிதாக‌ இர‌க‌சிய‌ப் பொலிசில் இணைக்க‌ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு எடுக்கின்றார். வ‌குப்பில் ஏற்க‌ன‌வே விசார‌ணை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌னின் குர‌ல் ஒலிநாடாவில் ஒலிக்கிற‌து. வெஸ்ல‌ர், 'இவ‌ன் உண்மை சொல்கின்றானா இல்லையா?' என வ‌குப்பில் கேட்கின்றார். ஒலிநாடாவை உன்னிப்பாக‌க் கேட்கும் மாண‌வ‌ர்க‌ளால் எதையும் உறுதியாய்ச் சொல்ல‌ முடிய‌வில்லை. ஆனால் விசார‌ணைக்குட்ப‌டுத்தப்பட்ட‌வ‌ன் பொய் சொல்கின்றான் என்று வெஸ்ல‌ர் உறுதியாய்ச் சொல்கின்றார். எனெனில் உண்மை சொல்கின்ற‌வ‌ன், ப‌ல‌முறை விசாரிக்கும்போது எதையாவ‌து கொஞ்ச‌ம் மாற்றியாவ‌து சொல்வான்; ஆனால் இவ‌ன் ஏற்க‌ன‌வே கூறிய‌தை அப்ப‌டியே திரும்ப‌ச் திரும்ப‌ ஒரே மாதிரியே சொல்கின்றான். என‌வே இவ‌ன் உண்மை பேச‌வில்லை என்கின்றார்.

அடுத்த‌ காட்சியில், த‌ன‌து ந‌ண்ப‌னாக‌ இருக்கும் இர‌க‌சிய‌ப் பொலிஸ் அதிகாரியின் அழைப்பின் பேரில் ஒரு நாட‌க‌த்திற்குச் செல்கின்றார் வெஸ்ல‌ர். அங்கே அமைச்ச‌ரொருவ‌ரும் பார்வையாளராக‌ வ‌ந்திருக்கின்றார். கிழ‌க்கு ஜேர்ம‌னி அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ அந்நாட‌க நெறியாள்கையாள‌ர் ஜோர்ஜ் மீதும் வெஸ்ல‌ருக்கு ச‌ந்தேக‌ம் வ‌ருகின்ற‌து. ஜோர்ஜ் வீட்டில்லாத‌ பொழுதில் அவ‌ர‌து வீட்டில் இர‌க‌சிய‌ இல‌த்திர‌னிய‌ல் உப‌க‌ர‌ண‌ங்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டு, ஜோர்ஜ் க‌ண்காணிக்க‌ப்ப‌ட‌த் தொட‌ங்குகின்றார். இர‌வு ப‌க‌லாய் ஜோர்ஜ் க‌ண்காணிக்க‌ப்ப‌ட்டு வெஸ்ல‌ரால் தின‌மும் அறிக்கைக‌ள் எழுத‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஜோர்ஜின் ந‌ண்ப‌ரும், அவ‌ர‌து நாட‌க‌ங்க‌ளில் ந‌டிக்கும் புக‌ழ்பெற்ற‌ ந‌டிகையான‌ கிறிஸ்ரினாவுட‌னான‌ ஜோர்ஜின் உட‌லுற‌வு சார்ந்த‌ அந்த‌ர‌ங்க‌ங்க‌ள் கூட அறிக்கையில் ப‌திவு செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத‌ற்கிடையில் நாட‌க‌ம் பார்த்த‌ அமைச்ச‌ருக்கு கிறிஸ்ரினா மீது உட‌ல் சார்ந்த‌ வேட்கை. இவ்வாறு அதிகார‌ வ‌ர்க்க‌ம் க‌லைஞ‌ர்க‌ளான‌ ஜோர்ஜ், கிறிஸ்ரினாவை பின் தொட‌ர்ந்து அவர்கள் அறியாதபடி க‌ண்காணிக்க‌ச் செய்கின்ற‌து.

ஜோர்ஜின் ந‌ண்ப‌ரொருவ‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌னி அர‌சால் வீட்டுக்காவ‌லில் எட்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். க‌லைஞ‌ரான‌ அவ‌ர் த‌ன‌து நாட‌க‌ங்க‌ளைச் சுதந்திரமாய் இய‌க்க‌முடியாத‌ ம‌ன‌வுளைச்ச‌லில் ஒருநாள் த‌ற்கொலை செய்துகொள்கின்றார். ஜோர்ஜும் அவ‌ர‌து சில‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இவ்வாறான‌ த‌ற்கொலைக‌ளை வெளியுல‌கிற்கு கொண்டுவ‌ர‌வேண்டும் என்று முய‌ற்சிக்கின்றார்க‌ள். ஜ‌ரோப்பாவில் ஹ‌ங்கேரியிற்குப் பிற‌கு கிழ‌க்கு ஜேர்ம‌னியிலேயே அதிக‌ம் த‌ற்கொலைக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌; ஆனால் கிழ‌க்கு அர‌சு 1977ற்குப் பிற‌கு த‌ற்கொலைக‌ளின் எண்ணிக்கையை க‌ண‌க்கிலெடுப்ப‌தைத் த‌விர்த்துக்கொள்ள‌த் தொட‌ங்கிய‌தையும் த‌ம‌து க‌ட்டுரைகளில் முன்வைக்க‌வேண்டுமென‌ விவாதிக்கின்றார்க‌ள். ஆனால் ஜோர்ஜின் பிற‌ ந‌ண்ப‌ர்க‌ள் கிழ‌க்கு அர‌சால் க‌ண்காணிக்க‌ப்ப‌டுவ‌தைப் போல‌, தானும் த‌ன‌து வீடும் க‌ண்காணிப்ப‌டுவ‌தில்லையென்ற‌ ந‌ம்பிக்கையில் ஜோர்ஜ் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளை த‌ன‌து வீட்டுகே அழைத்து இவை ச‌ம்ப‌ந்த‌மாய் விவாதிக்கின்றார். மேற்கு ஜேர்ம‌னியிலிருக்கும் ப‌த்திரிகையொன்று இவ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ளைப் பிர‌சுரிக்க‌ முன்வ‌ருகின்ற‌து. ஆனால் ஏற்க‌ன‌வே உப‌யோகத்திலிருக்கும் த‌ட்ட‌ச்சு இய‌ந்திர‌த்தை ஜோர்ஜ் பாவித்தால் கிழ‌க்கு அர‌சு இலகுவாய் எழுதுப‌வ‌ர்க‌ளைப் பிடித்து உள்ளே போட்டுவிட‌க்கூடும்; என‌வே தாங்க‌ள் த‌ரும் சிவ‌ப்பு மையுள்ள‌ த‌ட்ட‌ச்சு இய‌ந்திர‌த்தைப் பாவிக்கும்ப‌டி அவ‌ர்க‌ள் கூறுகின்றார்க‌ள். த‌ட்ட‌ச்சு செய்யாத‌ பொழுதில் ஒளித்து வைக்க‌ ஜோர்ஜ் வீட்டில் ஓரிட‌த்தைக் க‌ண்டுபிடிக்கின்றார்.

இவ்வாறு ஜோர்ஜும் அவ‌ர‌து நண்பர்களும் க‌ட்டுரைக‌ளை விவாதிக்க‌வும், எழுத‌வும் செய்யும்போது, தின‌மும் க‌ண்காணித்த‌ப‌டி அறிக்கைக‌ள‌ எழுதும் வெஸ்ல‌ர் என்ன‌ செய்தார்? க‌ட்டுரைக‌ள் வெளியுல‌கிற்குப் போகும்போது, கிழ‌க்கு அர‌சு என்ன‌ செய்த‌து? ஜோர்ஜின் தோழியான‌ கிறிஸ்ரியாவிற்கும் பின் தொட‌ர்ந்த‌ அமைச்ச‌ருக்கும் என்ன‌ நிக‌ழ்ந்த‌து? பேர்லின் சுவ‌ர் உடைந்த‌த‌ன்பின், ஜோர்ஜ் தான் எழுதும் நாவ‌லை ஏன் இர‌க‌சிய‌ப் பொலிஸிலிருந்த‌ வெஸ்ல‌ருக்கு காணிக்கை செய்கின்றார் என்ப‌வற்றை மிகுந்த‌ சுவார‌சிய‌மாக‌ப் ப‌ட‌மாக்கியிருக்கின்றார்க‌ள். இதைவிட‌ விய‌ப்பு என்ன‌வெனில் இத்திரைப்ப‌ட‌ம், இந்நெறியாள்கையாள‌ரின் (Florian Henckel von Donnersmarck) முத‌ற்ப‌ட‌ம் என்ப‌து. ஒளிப்ப‌திவு, இசை என்ப‌ன‌ அற்புத‌மாய் ப‌ட‌த்தோடு இன்னும் ஒன்றிவிட‌ச்செய்கின்ற‌ன. ஜோர்ஜ், பீத்தோவனின் ஒரு இசைத்துண்டை வாசித்து, 'இந்தக் கோர்வைத் தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், புரட்சியை முடிக்கமுடியாது போய்விடுமென்ற' லெனின் வார்த்தையைத் தனது தோழிக்கு நினைவுபடுத்தி, எந்த ஒரு கெட்டவன் கூட இந்த இசையைக் கேட்டால் அவனால் தொடர்ந்து கெட்டவனாக இருக்கமுடியாது என்று ஜோர்ஜ் கூறுவதை, வெஸ்லர் இசையை இரசித்தபடி கண்காணித்துக்கொண்டிருக்கும் காட்சி குறிப்பிட வேண்டியதொன்று.

இதில் முக்கிய‌மாய் வெஸ்ல‌ராய் ந‌டித்த‌ (Ulrich Muhe) ந‌டிப்பு அருமையான‌து. இர‌க‌சிய‌ப் பொலிஸில் வேலை செய்ய‌த்தொட‌ங்கி அவ‌ரும் ஒரு இய‌ந்திரமாய் மாறிப்போன‌து போல‌ அவ‌ர‌து தின‌ வாழ்க்கையின் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் காட்ட‌ப்ப‌ட்டிருக்கும். அதேபோன்று க‌லைஞ‌ராய் வ‌ரும் ஜோர்ஜ், கிறிஸ்ரினா வேறு வ‌ழியின்றி அமைச்ச‌ரின் விருப்புக்குக் க‌ட்டுப்ப‌ட‌வேண்டியிருக்கும்போது அதையும் ச‌கித்துக்கொண்டு கிறிஸ்ரினாவை ஏற்றுக்கொள்வ‌து... (அவ்வாறான ஒரு விவாதத்தின்போதே கிறிஸ்ரினா இவ்வாறு கூறுகின்றார்...Because they can destroy you, too, despite your talent and your faith. They decide what we play, who is to act and who can direct.) ஜோர்ஜின் ந‌ண்ப‌ர்க‌ள், கிறிஸ்ரினா மூல‌ம் தாம் க‌ட்டுரைக‌ள் எழுதிக்கொண்டிருப்ப‌து இர‌க‌சிய‌ப்பொலிஸிற்கு தெரிந்துவிட்ட‌து என்று குற்ற‌ஞ்சாட்டும்போது ஜோர்ஜ் கிறிஸ்ரினாவிற்காய் ப‌ரிந்து பேசுவ‌தென‌... அந்த‌ச் சூழ‌லுக்குள் எப்ப‌டி ம‌னித‌ர்க‌ள் ந‌ட‌ந்துகொள்வார்க‌ளோ அப்ப‌டியே இய‌ல்பாக‌ப் ப‌ட‌த்தில் காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌னர்‌.

அதிகார‌த்தைக் கையில் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ சில‌வேளைக‌ளில் ம‌னிதாபிமானிக‌ளாய் இருக்க‌ விரும்புகின்றார்க‌ள் என்ப‌தையும், அப்ப‌டி ஒருவர் ம‌னிதாபிமானியாய் இருக்க‌ முய‌ல்கையில் த‌ம‌க்கான‌ உய‌ர்ந்த‌ ர‌க‌ வாழ்க்கையைக் கூட‌த் தூக்கியெறிய‌த் த‌ய‌ங்க‌மாட்டார் என்பதே இப்ப‌ட‌த்தில் ஊடுபொருளாய் இருக்கிற‌து. ஒவ்வொரு காட்சியிலும் எந்த‌ப் பாத்திர‌ம் எப்ப‌டி மாற‌ப்போகின்ற‌து...யாரைக் காட்டிக்கொடுக்க‌ப்போகின்ற‌து... 'தேசத்துரோகியாய்' அடையாள‌ங் காட்ட‌ப்ப‌ட்டால் ஒவ்வொருத்தருக்கும் என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகின்ற‌து என்ற‌ ப‌த‌ட்ட‌த்திலேயே ந‌க‌ர‌வைத்து பார்ப்ப‌வ‌ரையும் க‌ண்காணித்த‌லில் வ‌லைக்குள் இருத்திவைப்ப‌தில்தான் இப்ப‌ட‌ம் முக்கிய‌மான‌ ஒரு ப‌ட‌மாய் த‌ன்னை நிலைநிறுத்திக்கொள்கிற‌து என‌த்தோன்றுகின்ற‌து. ஒரு காட்சியில், வீட்டுக்காவ‌லில் வைக்க‌ப்ப‌ட்டு எதையும் சுத‌ந்திர‌மாய் எழுத‌முடியாது த‌ற்கொலை செய்த‌ ப‌டைப்பாளி கூறுவார்....அடுத்த‌ பிற‌ப்பிலாவ‌து நான் விரும்பிய‌தை எவ‌ருக்கும் ப‌ய‌ப்பிடாது சுத‌ந்திர‌மாய் எழுதும் நிலை கிடைக்கவேண்டுமென. அவ்வாறான‌ ஒரு நிலைக்காய்த்தான் உல‌கெங்குமுள்ள‌ ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ள்/க‌லைஞ‌ர்க‌ள் இன்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌துதான் இன்னும் அவ‌ல‌மான‌து.


(எனது எல்லாப் பலவீனங்களோடும் சகித்துக்கொள்ளும் உனக்கு...)

Good Bye Lenin & changeling

Thursday, November 20, 2008


Goodbye Lenin: இது ஜேர்ம‌னி, கிழ‌க்கு‍ ‍மேற்கு ஜேர்ம‌னிக‌ளாக‌ பிரிந்திருந்த‌ பொழுதிலும், பெர்லின் சுவ‌ர் உடைக்க‌ப்ப‌ட்டு கிழ‌க்கும் மேற்கும் ஒன்றாக‌ச் சேரும் கால‌த்திலும் நிக‌ழ்கின்ற‌ க‌தை. த‌ந்தை ‍மேற்கு ஜேர்ம‌னியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ‌ ஓடிப்போய்விட்டாரென‌ச் சொல்லி, தாய் த‌னித்தே த‌ன‌து மக‌னையும் ம‌க‌ளையும் கிழ‌க்கு ஜேர்மனியில் வ‌ள‌ர்க்கின்றார். மேற்கு ஜேர்ம‌னிக்கு ஓடிப்போன‌ த‌க‌ப்ப‌னால் கிழ‌க்கின் அர‌சால் தாயார் விசார‌ணைக்கு உட்ப‌டுத்த‌ப‌டுகின்றார். அத‌ன் நிமித்த‌மும், கண‌வ‌ன் அருகில்லாத‌ கார‌ண‌த்தினாலும் தாய் உள‌விய‌லுக்கான‌ சிகிச்சையைச் சில‌வார‌ங்க‌ள் பெறுகின்றார். பிள்ளைக‌ள் வ‌ள‌ர்ந்து பெரிய‌வ‌ராகின்றார்க‌ள். தாயார் வீட்டிலேயே ஆடைக‌ள் தைத்து ம‌க்க‌ளுக்கு விநியோகிப்ப‌வ‌ராக‌, அப்ப‌குதிக்குழ‌ந்தைக‌ளுக்கு கொம்யூனிச‌ப் பாட‌ல்க‌ளைச் சொல்லிக்கொடுக்கின்ற‌ ‍ஒரு தீவிர‌ கொம்யூனிஸ்ட்டாய் இருக்கின்றார். கிழ‌க்கு ஜேர்ம‌னி உடைவ‌த‌ற்கான‌ கார‌ணிக‌ள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய்த் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிழ‌க்கு ஜேர்ம‌னி அர‌சுக்கெதிரான‌ ஒரு ஊர்வ‌ல‌த்தில் த‌ன‌து ம‌க‌ன் இராணுவத்தால் பிடிப‌ட்டுப் போவ‌தைக் க‌ண்ட‌ தாயார் அதிர்ச்சியில் ம‌ய‌க்க‌ம‌டைந்து கீழே விழுந்து கோமா நிலைக்குப் போகின்றார். ம‌க‌னும் ம‌க‌ளும் தாய் என்றேனும் ஒருநாள் திரும்பி விழிப்பார் என்ற‌ ந‌ம்பிக்கையில் அவ‌ரை வைத்திய‌சாலையில் வைத்து ப‌ராம‌ரிக்கின்றார்க‌ள். அதிச‌யமாய், எட்டு மாத‌ங்க‌ளிளின் பின் தாயார் சுய‌நினைவு பெறுகின்றார். ஆனால் அத‌ற்குள் 'எல்லாமே' நிக‌ழ்ந்துவிடுகின்ற‌ன‌. பெர்லின் சுவ‌ர் உடைக்க‌ப்ப‌ட்டு, இவ்வ‌ள‌வு கால‌மும் உள்ளூர் உற்ப‌த்திக‌ளால் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ அங்காடிக‌ளில் எல்லாம் முத‌லாளித்துவ‌ நாடுக‌ளிலிருந்து இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் நிர‌ப்புகின்ற‌ன‌. க‌ண்ணை மினுக்கும் விள‌ம்ப‌ர‌ப்ப‌ல‌கைக‌ள் ந‌க‌ரெங்கும் அல‌ங்க‌ரிக்க‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. இவ்வாறு இன்னும் ப‌ற்ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள்.

கோமாவிலிருந்து விழித்தெழும் தாயாருக்கு இன்னொரு அதிர்ச்சி (மார‌டைப்பு வ‌ந்தால்) வ‌ந்தால் உயிர் வாழ்த‌ல் க‌டின‌மென‌ வைத்திய‌ர் எச்ச‌ரிக்கின்றார். எல்லா அதிர்ச்சிக‌ளையும் விட‌, தாயாருக்கு சோச‌லிச‌ம் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் த‌க‌ர்ந்துவிட்ட‌து என்று தெரிந்துவிட்டால் தாங்க‌வே முடியாது என்ப‌து பிள்ளைக‌ளுக்கு தெளிவாக‌த் தெரிகின்ற‌து. அவ‌ரை வீட்டுக்கு அழைத்து வ‌ந்து (ந‌ட‌மாட‌மாட்டார், ப‌டுக்கையிலேயே இருக்கிறார்), தாயிற்குப் ப‌ழைய‌ சோச‌லிச கிழ‌க்கு ஜேர்ம‌னியோடு அறை த‌யாராகின்ற‌து. சே, மார்க்ஸ் எல்லாம் அறையினுள் தொங்குகின்ற‌ன‌ர். பிள்ளைக‌ளும் அவ‌ர்க‌ளின் காத‌ல்ன்/காத‌லியும் தாயின் அறைக்குள் வ‌ரும்போது முத‌லாளித்துவ‌ வ‌ச‌தியால் வ‌ந்த‌ ப‌க‌ட்டான‌ ஆடைக‌ளைக் க‌ழ‌ற்றிவிட்டு முன்பிருந்த‌ கால‌த்தில் இருந்த‌ ஆடைக‌ளை அணிந்த‌ப‌டியே ந‌ட‌மாடுகின்ற‌ன‌ர்.


தாயிற்கு தொலைக்காட்சி பார்க்கும் ஆசை வ‌ருகின்ற‌போது, தொலைக்காட்சிக‌ளைத் திருத்தும் வேலை செய்யும் ம‌க‌னும் ந‌ண்ப‌னும், தொலைக்காட்சி நிறுவ‌ன‌மொன்றிலிருக்கும் ப‌ழைய‌ செய்தி/நிக‌ழ்ச்சி ஒளிநாடாக்க‌ளைக் கொண்டுவ‌ந்து -தாயிற்குத் தெரியாது- விசிஆர் மூல‌ம் -நேர‌டியாக‌ நிக‌ழ்ந்துகொண்டிருப்ப‌துபோல‌- போட்டுக் காட்டுகின்றார்க‌ள். தாய் தான் விரும்பிச் சாப்பிடும் Pickels வேண்டும் என்கின்ற‌போது, இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌டும் Pickelsஸை, ப‌ழைய‌ க‌ண்ணாடிப் போத்த‌ல்க‌ளில் நிர‌ப்பி -எதுவுமே மாற‌வில்லை எல்லாமே அப்ப‌டியே இருக்கிற‌தென‌- ம‌க‌ன் காட்டுகின்றார். இதைவிட‌ கொக்கோகோலா விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கையை தாயார் ய‌ன்ன‌லினூடு பார்க்கும்போதும்..., குடியிருக்கும் வீட்டுக்கு மேற்த‌ள‌த்தில் மேற்கு ஜேர்ம‌னி தொலைக்காட்சி நிக‌ழ்ச்சி போவ‌தைத் தாய் கேட்கின்ற‌போதும், பிள்ளைக‌ள் இன்னும் ப‌ழைய‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியிருக்கிற‌தென‌ தாயிற்கு நிரூபிக்க‌ முய‌ற்சிக்கும் காட்சிக‌ள் மிகுந்த‌ ந‌கைச்சுவையான‌வை.
ஒருநாள் தாய், த‌ன‌து பேர‌ப்பிள்ளை எழுந்து ந‌ட‌ப்ப‌தைப் பார்த்து தானும் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கி வெளியே சென்று பார்க்கின்ற‌போது எல்லாம் மாறியிருப்ப‌து -விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கைக‌ள், ந‌வீன‌ கார்க‌ள்- க‌ண்டு அதிர்ச்சிய‌டைக்கின்றார். ஆனால் ம‌க‌ன் த‌ன‌து ந‌ண்ப‌ரொருவ‌னை தொலைக்காட்சி செய்தியாளாராக ந‌டிக்க‌ச்செய்து, மேற்கு ஜேர்ம‌னியிலிருந்து கிழ‌க்கு ஜேர்ம‌னிக்கு ம‌க்க‌ள், அங்குள்ள‌ அர‌சின் தொல்லை தாங்காது கிழ‌க்கு ஜேர்ம‌னிக்கு அக‌திக‌ளாக‌ அடைக்க‌ல‌ந்தேடி வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்று ந‌ம்ப‌வைக்கின்றார். பெர்லின் சுவ‌ர் உடைப்பையும் கிழ‌க்கு ஜேர்ம‌னி ம‌க்க‌ள‌ல்ல‌, மேற்கு ஜேர்ம‌னி ம‌க்க‌ளே உடைத்து கிழ‌க்கிற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ளென‌ ந‌ம்ப‌வைக்கின்ற‌ன‌ர். இறுதியில் தாய் இன்னொரு மார‌டைப்பு வ‌ந்து இற‌ந்துபோகின்றார். ஆனால் இன்ன‌மும் கிழ‌க்கு ஜேர்ம‌னி இருப்ப‌தாக‌வும், லெலினே த‌ங்க‌ளின் த‌லைவ‌ரென‌ ந‌ம்புப‌வ‌ராக‌வே இற‌ந்துபோகின்றார். இத‌ற்கிடையில் பிள்ளைக‌ளும், த‌ம‌து த‌க‌ப்ப‌ன் இன்னொரு பெண்ணிற்காக‌வ‌ல்ல‌, த‌ன‌து சுய‌விருப்பிலேயே மேற்கு ஜேர்ம‌னிக்குச் சென்று த‌ங்க‌ளையும் அங்கே வ‌ர‌ச்சொல்லியிருக்கின்றார் என்ப‌தை அறிகின்றார்க‌ள். த‌க‌ப்ப‌ன் அங்கே போயிருப்ப‌தால் விசா எடுத்துப்போகும்போது கிழ‌க்கு அர‌சு த‌ன்னை த‌ன‌து பிள்ளைக‌ளிட‌மிருந்து பிரிக்க‌க்கூடுமென்ற‌ ப‌ய‌த்தாலேயே தாய் கிழ‌க்கில் மிகுந்த‌ துய‌ர‌த்துட‌ன் த‌ங்கிவிடுகின்றார்.
இப்ப‌ட‌த்தில் கிழ‌க்கின் கொம்யூனிச‌ம் ப‌ற்றி நுண்ணிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், கொம்யூனிச‌ம் மீதான‌ சார்பு இருப்ப‌தை இப்ப‌ட‌த்திலிருப்ப‌தை ம‌றுத்துவிட‌முடியாது. இன்னுஞ் சொல்ல‌ப்போனால் ந‌ட‌ந்த‌தை ஏற்றுக்கொண்டு அதே ச‌ம‌ய‌ம் கிழ‌க்கு கொம்யூனிச‌த்தின் ந‌ல்ல‌ கூறுக‌ளையும் இப்ப‌ட‌ம் முன்நிலைப்ப‌டுத்த‌ விரும்புகின்ற‌து என்றுதான் சொல்ல‌வேண்டும். உதார‌ண‌மாய் மேற்கிலிருந்து கிழ‌க்கு ஜேர்ம‌னிக்கு அக‌திக‌ள் வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்று பிள்ளைக‌ள் தாயை ந‌ம்ப‌வைக்கின்ற‌போது, 'நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு உத‌வ‌வேண்டும், எங்க‌ள் வீட்டிலேயே சில‌ அக‌திக‌ளுக்கேனும் இட‌ங்கொடுக்க‌வேண்டும்' என்று அத்தாய் ப‌தைப‌தைப்ப‌தை முத‌லாளித்துவ‌ம் அவ்வ‌ள‌வாய்க் க‌ற்றுத்த‌ருவ‌தில்லை. அதேபோன்று ம‌க‌ன் சிறுவ‌ய‌திலிருக்கும்போது, விண்வெளிக்கு கிழ‌க்கு ஜேர்ம‌னியிலிருந்து போகும் விண்வெளி வீர‌ர் ஒருவ‌ர் ம‌க‌னுக்கு மிகு ஆத‌ர்ச‌மாய் இருக்கின்றார். அவ‌ரைப்போல‌வே தானும் ஒருநாள் ஆக‌வேண்டும் என்று நினைக்கும் ம‌க‌னுக்கு, அவ்விண்வெளி வீர‌ர் கிழ‌ககு ஜேர்ம‌னி உடைவுக்குப்பிற‌கு வாட‌கைக்கு கார் ஓட்டுப‌வ‌ராக‌ இருப்ப‌தைக் க‌ண்டு ம‌க‌ன் ம‌ன‌ங்க‌ல‌ங்குவ‌தில் தெரிவ‌து வீழ்ச்சியின் துய‌ர‌மே. எல்லாத் த‌வ‌றுக‌ளுக்கும்/பிழைக‌ளுக்கும் அப்பால் த‌ன‌து தாய்நாட்டை அத‌ன் இய்ல்போடு நேசிக்கின்ற‌ ஒரு சாதார‌ண‌ ம‌னுசியின் ப‌ட‌மென்றுதான் இப்ப‌ட‌த்தில் வ‌ரும் தாயைச் சொல்ல‌வேண்டும். இந்த‌த் தாயிற்கு மேற்கு ஜேர்ம‌னியிலிருந்து அக‌திக‌ள் வ‌ருகின்றார் என்கின்ற‌போதுகூட‌, அவ‌ர்க‌ள் அக‌திக‌ள் என்ற‌ள‌விலேயே க‌ருணை சுர‌க்கின்ற‌து; ஆனால் இவ்வாறிருக்க‌ அரசிய‌ல் பேசும் அநேக‌ ஆண்க‌ளால் முடிவ‌தில்லை. சில‌வேளைக‌ள் இந்த்தாயைப் போன்ற‌ சாதார‌ண‌ பெண்க‌ளில் கையில் அர‌சிய‌ல் அதிகார‌ங்க‌ள் இருந்திருக்குமாயின் இந்த‌ உல‌க‌ம் தேவைய‌ற்ற‌ போர்க‌ளில்லாது அமைதியாக‌ இருந்திருக்குமோ தெரிய‌வில்லை.




2.
Changeling : இது Angelina Jolie ந‌டித்த‌ Clint Eastwoodன் ப‌ட‌ம். 1930 கால‌ப்ப‌குதியில் லொஸ் ஏஞ்ச‌ல்ஸில், த‌ன‌து காணாம‌ற்போன‌ 9 வ‌ய‌து ம‌க‌னைத் தேடுகின்ற‌ தாயிற்கும் அதிகார‌ வ‌ர்க்க‌த்திற்கும் இடையில் நிக‌ழ்கின்ற‌ க‌தை. இர‌ண்ட‌ரை ம‌ணித்தியால‌த்திற்கு மேலாக‌ நீளும் இப்ப‌ட‌ம் அதீத‌ நாட‌க‌த்த‌ள‌த்தில் ந‌க‌ர்ந்து அலுப்பூட்ட‌ப்போகின்ற‌தோ என்ற‌ ப‌ய‌த்தை, அப்ப‌டியில்லையென‌ச் சுவார‌சிய‌மாக‌ இறுதிவ‌ரை சென்று முடிகின்ற‌ ப‌ட‌ம். தொலைபேசித்துறையில் வேலைசெய்துகொண்டு,த‌னித்திருந்து ம‌க‌னை வ‌ள‌ர்க்கும் தாய் (Single Mom) ஒருநாள் வேலையாய் இருந்து வ‌ருகின்ற‌போது ம‌க‌னைக் காணாது த‌விர்க்கின்றார். ம‌க‌னைத் தேட‌த்தொட‌ங்கும்போது பொலிஸ் அவ்வ‌ளவாய் உத‌வ‌வும் முன் வ‌ர‌வில்லை. ஏற்க‌ன‌வே சீர‌ழிந்திருக்கின்ற‌? (Corrupted) லொஸ் ஏஞ்ச‌ல்ஸ் பொலிஸ் நிர்வாக‌ம் அதி கெடுபிடிக‌ளால் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளில் கழுத்தை இறுக்கின்ற‌து. குற்ற‌வாளிக‌ள் என்று ச‌ந்தேக‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளையெல்லாம் நீதி விசார‌ணைக‌ளின்றி விரும்பிய‌ இட‌ங்க்ளில் ம‌ண்டையில் போடுகின்ற‌து. பொலிஸுக்கு த‌ன‌து ம‌க‌னைக் காண‌வில்லையென்று தேடுகின்ற‌ இத்தாய் அவ‌ர்க‌ளுக்கு நெருக்க‌டியைக் கொடுக்கின்றார். ஒருநாள் பொலிஸ் ஒரு சிறுவ‌னைக் க‌ண்டுபிடித்து கொண்டுவ‌ந்து, இதுதான் இத்தாயின் தொலைந்துபோன‌ ம‌க‌னென‌ பொதும‌க்க‌ளுக்கு அறிவிக்கிற‌து. ஆனால் அது த‌ன‌து உண்மையான‌ ம‌க‌ன‌ல்ல‌ என்று இத்தாய் ஒரு பாதிரியாரின் உத‌வியோடு த‌ன‌து ம‌க‌னைக் க‌ண்டுபிடிக்க‌ உத‌விசெய்க‌வென‌‌ பொதும‌க்க‌ளிட‌ம் ப‌கிர‌ங்க‌மாய்க் கேட்கின்றார். அதிகார‌ வ‌ர்க்க‌ம், த‌ன‌து பெய‌ர் இழுக்க‌ப்ப‌டுவ‌தை விரும்பாது, 'இது இவ‌ரது உண்மையான‌ ம‌க‌ன் தான், இவ‌ருக்குத் தான் பிள்ளையைப் ப‌ல‌மாத‌ங்க‌ளாய்க் காணாது சித்த‌ம் பிச‌கியுள்ள‌'தென‌க் கூறி உள‌விய‌ல் சிகிச்சை பெறுவ‌த‌ற்காய் ஒரு ம‌ன‌நோய் வைத்திய‌சாலையில் தாயை அடைக்கிற‌து. அங்கும் த‌ன‌க்கு ம‌னோநிலை ந‌ன்றாய் இருக்கிற‌து என்று அடிக்க‌டி இத்தாய் சொன்னாலும், 'நீ உன‌து பிள்ளையும், இப்போது க‌ண்டுபிடித்திருக்கும் பிள்ளையும் ஒருவ‌ரேதான் என‌ உறுதிப‌டுத்தி கையெழுத்திட்டால் ம‌ட்டுமே தாங்க‌ள் வெளியில் விடுவோம் என்கின்றார்க‌ள் அங்கிருந்த‌ வைத்திய‌ரும், பொலிஸும்.. ஏற்க‌ன‌வே இத்தாயாருக்கு உத‌விசெய்ய‌ வ‌ந்த‌ பாதிரியாரின் அய‌ராத‌ முய‌ற்சியால் இத்தாய் இறுதியில் ம‌ன‌நோய் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க‌ப்ப‌டுகின்றார். பிற‌கு பாதிரியார் ம‌ற்றும் ஓய்வுபெற்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் போன்றோரின் உத‌வியால் பொலிஸுக்கு எதிராய்த் தாய் வ‌ழ‌க்குப் போடுகின்றார். இத‌ற்கிடையில், குழ‌ந்தைக‌ளைப் பிடித்துக்கொண்டுபோய் த‌ன‌து பாலிய‌ல் இச்சையைத் தீர்த்து கொலை செய்யும் ஒருவ‌னிட‌ம் -வேறு வ‌ழியின்றி அவ‌னுக்கு உத‌விக்கொண்டிருக்கும்- ஒரு சிறுவ‌ன் பொலிஸில் பிடிப‌டும்போது அங்கே ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌த்தை பொலிஸூக்குச் சொல்கின்றான்., இத்தாயின் ம‌க‌னையும் தான் இப்பிள்ளை பிடிகார‌னிட‌ம் க‌ண்டேனென‌ ப‌ட‌த்தில் அடையாள‌ங்காடுகின்றான். எனினும் இத்தாயின் ம‌க‌னும் இன்னுஞ்சில‌ரும் ஒருநாளிர‌வில் த‌ப்பியோடினார்க‌ள் என்றும் இன்னும் உயிரோடு இருக்கின்றார்க‌ளா அல்ல‌து இல்லையா என்ப‌தும் தெரிய‌வில்லை என்றும் கூறுகின்றான் அச்சிறுவ‌ன். இச்சிறுவ‌னின் வாக்குமூல‌த்தால், இத்தாயின் ம‌க‌ன் வேறெங்கோ இருக்கிறான் அல்ல‌து இற‌ந்துபோயிருக்க‌லாம், இப்போது க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌தாய் இத்தாயிட‌ம் ப‌ல‌வ‌ந்த‌மாய் திணிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சிறுவ‌ன் பொலிஸ் சோடித்த‌ க‌தையேயென‌ நீதிம‌ன்ற‌த்திற்குத் தெரிகிற‌து.


இறுதியாய் அப்பாவியான‌ இப்பெண்ணை சித்திர‌வ‌தைக‌ள் செய்த‌ற்காய், அவ‌ரை விசாரித்த‌ பொலிஸ், அப்பொலிஸின் அதிகாரி என்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளிலிருந்து வேலையிலிருந்து வில‌க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இன்னொருமுறை மேய‌ர் ப‌தவிக்காய் போட்டியிட‌ இருந்த‌ மேய‌ரும் இவ்வ‌ழ‌க்கின் மூல‌ம் மீண்டும் போட்டியிட‌முடியாத‌ நிலை ஏற்ப‌டுகின்ற‌து. இத்தாயின் ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ற்கு அதிக‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தாலும், இத்தாய் இறுதிவ‌ரை த‌ன‌து ம‌க‌ன் த‌ன்னிட‌ம் வ‌ந்துவிடுவார் என்று ந‌ம்புவ‌தோடு ப‌ட‌ம் முடிகின்ற‌து. இக்க‌தை உண்மையிலே 1930க‌ளில் லொஸ் ஏஞ்ச‌ல்ஸில் ந‌ட‌ந்த‌ க‌தை என‌ப்ப‌டுகின்ற‌போது 30களில் அதிகார‌ வ‌ர்க்க‌த்தின் எல்லாவித‌மான‌ வ‌ன்முறைக‌ளைத் தாங்கிக்கொண்டு த‌ன‌க்கான‌ நியாய‌த்தைத் தேடிய‌ ஒரு பெண்ணின் க‌தை என்ற‌ளவில் முக்கிய‌ம் வாய்ந்த‌தாகின்ற‌து. இப்பெண்ணைப்போல‌ உறுதியாய் ப‌ல‌ இட‌ர்க‌ளைத்தாண்டிய‌ ப‌ல‌ பெண்க‌ள் வ‌ர‌லாற்றின் இருட்டுமூலைக‌ளுக்குள் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இவ்வாறான‌வ‌ர்க‌ளைப் பற்றிப் பேசுவ‌தைத் த‌விர்க்கும்போது நாம் அறிந்த அல்ல‌து ந‌ம‌க்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌லாறு என்ப‌து ஒருபோதும் முழுமைய‌டைவ‌தில்லை.


ப‌ட‌ங்க‌ளுக்கு நன்றி: விக்கிபீடியா

மாற்றுத் திரையும், மாறவேண்டிய‌ புல‌த்தின் த‌மிழ்த்திரை முய‌ற்சிக‌ளும்

Wednesday, November 12, 2008

- International Tamil Film Festival ம‌ற்றும் Regent Park Film Festival ஐ முன்வைத்து-

இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன் ரொர‌ண்டோவில் 7வ‌து ச‌ர்வ‌தேச‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ விழா ந‌டைபெற்ற‌து. உல‌கின் ப‌ல‌வேறு ப‌குதிக‌ளிலிருந்து குறும்/நெடும் ப‌ட‌ங்க‌ள் வ‌ந்திருந்த‌ன‌. வ‌ழ‌மைபோலில்லாது ஈழ‌த்திலிருந்து இம்முறை எந்த‌ப் ப‌ட‌ங்க‌ளும் வ‌ந்த‌தாய்க் காண‌வில்லை (அல்ல‌து ஒன்றிர‌ணடு வ‌ந்திருக்க‌லாம்). இன்றைய‌ ஈழ‌த்து உக்கிர‌மான‌ போர்ச்சூழ‌லை அவ‌தானித்தால் இவ்வாறு ப‌ட‌ங்க‌ளை எடுத்து அனுப்புத‌ல் என்ப‌து சாத்திய‌மில்லை என்ப‌து இல‌குவாய் விள‌ங்கும். இம்முறை திரைப்ப‌ட‌ விழாவிற்கு வ‌ந்திருந்த‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்த‌போது எந்த‌ப் ப‌ட‌மும் அவ்வ‌ள‌வாய் ச‌ல‌ன‌ம் செய்து ந‌க‌ர்ந்ததாய்க் காண‌வில்லை என்பதை வ‌ருத்த‌த்துட‌ந்தான் ப‌திவுசெய்ய‌வேண்டும். க‌ன‌டாவிலிருந்து இத்திரைப்ப‌ட‌ விழாவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் மிக‌ மோச‌மாய் இருந்த‌ன‌. புல‌ம்பெய‌ர் சூழ‌ல் நில‌வ‌ர‌ம் தெரிந்துகொண்டு இப்ப‌டி ஒரு க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌த்தை வைப்ப‌து ச‌ரியா என்று நெஞ்சு குறுகுறுத்தாலும் உண்மையைச் சொல்லித்தானாக‌ வேண்டும். 'எத்த‌னையோ க‌தைக‌ள் உங்க‌ளுக்குள் புதைந்து கிட‌க்க‌ என்ன‌வ‌கையான‌ ப‌ட‌ங்க‌ளை நீங்க‌ள் எடுத்துக்கொண்டிருக்கின்றீர்க‌ள்?' என்று இங்கே வ‌ந்த‌ ஒரு த‌மிழ‌க‌ இய‌க்குந‌ர் (த‌ங்க‌ர்ப‌ச்ச‌னா?) கார‌சார‌மாய்க் கேட்டதுபோல‌த்தான் இங்கே எடுக்க‌ப்ப‌டும் ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போது ந‌ம்மை நாமே அவ‌ச‌ர‌மாக‌வும் அவ‌சிய‌மாக‌வும் சுய‌விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌ வேண்டியிருக்கிற‌து.

திரைப்ப‌ட‌ம் என்ப‌து ஒரு கூட்டு முய‌ற்சி. அவ்வாறான முய‌ற்சியில் இற‌ங்கும்போது எத்த‌னையோ பேரின் உழைப்பும், நேர‌மும், ப‌ண‌மும் தேவைப்ப‌டும் என்ப‌து இம்முய‌ற்சிக‌ளில் ஈடுப‌டும் ப‌ல‌ருக்கு ந‌ன்கு தெரியும். இவ்வ‌ள‌வ‌ற்றையும் செல‌வ‌ழித்தும் ஏனின்னும் ந‌ம்மால் பிற‌ரைப் பாதிக்கின்ற‌ அள‌வுக்கு குறும்ப‌ட‌ங்க‌ள் எடுக்க‌முடிய‌வில்லை என்ப‌தைப் ப‌ற்றி யோசிக்க‌வேண்டிய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றோம். ஏற்க‌ன‌வே ப‌ல‌ இட‌ங்க‌ளில் குறிப்பிட்டிருந்த‌, 'கான‌ ம‌யிலாட‌ க‌ண்டிருந்த‌ வான்கோழியாய்' கோட‌ம்பாக்க‌க் க‌ன‌வில் முழுநீள‌த் திரைப்ப‌ட‌ம் எடுத்து த‌ங்க‌ளையும்/புல‌ம்பெய‌ர் சூழ‌லையும் நாச‌மாக்கிக்கொண்டிருக்கும் 'ந‌ல்ல‌வ‌ர்க‌ளை' ச‌ற்று ஒதுக்கிவிட்டு, அவ்வாறான‌ 'பேராசைக‌ள்' இல்லாது ந‌ல்ல‌ குறும்ப‌ட‌ங்க‌ளுக்காய் முய‌ற்சிப்ப‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி ம‌ட்டும் இப்போதைக்கு யோசிப்போம். தொட‌ர்ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ளாய் இத்திரைப்ப‌ட‌ விழாவுக்காய் க‌ன‌டாவிலிருந்து வ‌ரும் ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போது, அவ‌ற்றின் முக்கிய‌ பிர‌ச்சினையாக‌ இருப்ப‌து திரைக்க‌தைக‌ளின் வ‌ற‌ட்சி. அநேக‌மான‌ ப‌ட‌ங்க‌ள் 'குடும்ப‌ம்', 'இளைஞ‌ர் வ‌ன்முறை', 'புல‌த்தில் க‌லாசார‌த்தைக் காப்பாற்ற‌ல்' என்ப‌வ‌ற்றுக்க‌ப்பால் ந‌க‌ர‌ ம‌றுக்கின்ற‌ன‌. குடும்ப‌ம் என்று வ‌ரும்போது, க‌ண‌வ‌ன் X ம‌னைவி, பெற்றோர்க‌ள் X பிள்ளைக‌ள் என்ற‌ எதிர்நிலைக‌ளிலிருந்து வ‌ரும் பாத்திர‌ங்க‌ளே முக்கிய‌மாகின்ற‌ன‌. இளைஞ‌ர் வ‌ன்முறை என்று குறிப்பிடும்போது அதை விப‌ரித்துச் சொல்ல‌ வேண்டிய‌தில்லை. ;புல‌த்தில் க‌லாசார‌த்தைக் காப்பாற்ற‌ல்...' என்ப‌து இங்கே வ‌ள‌ரும் பிள்ளைக‌ளை எப்ப‌டித் த‌மிழ் க‌லாசார‌ம்(?) ப‌டி வ‌ள‌ர்த்த‌ல் என்ப‌து. அதிலும் முக்கிய‌மாய் மொழியைக் க‌ற்பித்த‌லும் பெரியோரை ம‌தித்த‌லும், ஊரைவிட்டுப்பிரிந்த‌ ந‌ன‌விடைதோய்த‌லுக‌ளுமே முக்கிய‌ பேசுபொருளாகின்ற‌ன‌. நிச்ச‌ய‌மாக‌ புதிய‌ க‌தைக‌ளைத் தேடித்தான் போக‌வேண்டும் என்ற‌ எந்த‌ நிர்ப்ப‌ந்த‌த்தையும் எவ‌ருக்கும் ஒரு முன் நிப‌ந்த‌னையாக‌ நாம் விதித்துவிட‌முடியாது. ஏற்க‌ன‌வே தெரிந்த‌ அல்ல‌து சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையைக் க‌ருவாக‌க் கொள்வ‌தில் த‌வ‌றேதுமில்லை. ஆனால் அவ்வாறு ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையைத்தான் ஒருவ‌ர் ப‌ட‌மாக்க‌ விரும்புகின்றார் என்றால், அவ‌ர் அதை எவ்வாறு பார்வையாள‌ரிடையே முன்வைக்கின்றார் என்ப‌து முக்கிய‌மாகின்ற‌து. அந்த‌ இட‌த்தில் வ‌ச‌ன‌மும், காட்சிக‌ளை வேறு கோண‌த்தில் எடுப்ப‌தும், தொகுத்த‌லும்(editing) முக்கிய‌மான‌ விட‌ய‌மாகின்ற‌ன‌.

உதார‌ண‌த்திற்கு இளைஞ‌ர் வ‌ன்முறையைப் பேசும், இத்திரைப்ப‌ட‌ விழாவுக்கு வ‌ந்த‌ ஒருப‌ட‌த்தை (குருதி) எடுக்க‌லாம். ஆள் தவ‌றாக‌ அடையாள‌ங் காண‌ப்ப‌ட்டு ஒரு அப்பாவி இளைஞ‌ன் வ‌ன்முறைக்குழுவொன்றால் கொல்ல‌ப்ப‌டுவ‌துதான் அக்க‌தையின் சார‌ம் (இவ்வாறு ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ந்துவிட்ட‌ன‌; ஆகவே இது ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌ க‌தை). ஒரு அப்பாவி இளைஞ‌னின் கொலையின்பின‌ நிக‌ழும் இன்னொரு உள‌விய‌ல் பிர‌ச்சினை குறித்து இப்ப‌ட‌ம் ச‌ற்றுத் தொட்டுச் செல்கின்ற‌து. அதாவ‌து த‌ம‌து பிள்ளையைப் ப‌ரிதாப‌மாய்ப் ப‌லிகொடுக்கின்ற‌ பெற்றோர், ம‌க‌னை இழ‌ந்த‌ க‌வ‌லையுட‌ன், ச‌மூக‌த்திட‌மிருந்து, இப்ப‌டியொரு 'ஊதாரிப்' பிள்ளையை வ‌ள‌ர்த்த‌ற்காய் வீண்ப‌ழி கேட்க‌வும் வேண்டிய‌வ‌ராகின்றார்க‌ள். இந்த‌த் திசையிலிருந்து -பெற்றோர்-ச‌மூக‌ம் என்ப்வ‌ற்றுக்கூடாக‌ கொலையின் பின்னான‌ (after murder) ஒரு உள‌விய‌ல் பிர‌ச்சினையைப் பின் தொட‌ர்ந்து ஒரு பாதிப்பை இப்ப‌ட‌ம் ஏற்ப‌டுத்தியிருக்க‌லாம்; ஆனால் இப்ப‌ட‌த்தில் அது தேவைய‌ற்ற‌ உரையாட‌ல்க‌ளால் குழ‌ப்ப‌ப்ப‌டுகின்ற‌து. இந்த‌ விட‌ய‌த்தைப் பின்த‌ள்ளி வ‌ழ‌மைபோல‌ இளைஞ‌ர் வ‌ன்முறைக்கு மீண்டும் தாவிப்போக‌ அலுப்பே மிஞ்சுகின்ற‌து. முக்கிய‌மாய் இக்குறும்ப‌ட‌த்தில் வ‌ச‌ன‌ங்க‌ளால் எல்லாவ‌ற்றையும் காட்டிவிட‌லாம் என்ற‌ க‌ட்ட‌த்திலிருந்து இப்ப‌ட‌த்தை எடுத்திருந்த‌வ‌ர்க‌ள் ந‌க‌ர்ந்திருக்க‌வேண்டும். பேசாம‌லே -காட்சிக‌ளாலே- பெரும் பாதிப்புக்க‌ளை குறும்ப‌ட‌ங்க‌ளில் ஏற்ப‌டுத்திப் போக‌லாம் என்ப‌தை இப்பட‌த்தில் ம‌ட்டுமில்லை, க‌ன்டாவில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ திரையிட‌லுக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌ எல்லாப் ப‌ட‌ங்க‌ளிலும் இஃதொரு பெரும் பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌து.

திரையிட‌லுக்கு வ‌ந்த‌ க‌னடாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ இன்னொரு ப‌ட‌ம் (ச‌ல‌ன‌ம்) மிக‌ ஆபாச‌மாய் இருந்த‌து. 'ஆபாச‌ம்' என்ப‌து வ‌ழ‌க்கிலுள்ள‌ ஆபாச‌த்தை இங்கு குறிப்பிட‌வில்லை. சில‌ சின்ன‌த்திரை நாட‌க‌ங்க‌ளில் இவ்வாறான‌ ஆபாச‌ம் அள‌வுக்கு மீறியிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌லாம். க‌தை; இரு ச‌கோத‌ர‌ர்க‌ள், மூத்த‌ ச‌கோத‌ர‌ரின் துணைவியார் க‌ன‌டாவுக்கு வ‌ருகின்றார். விமான‌ நிலைய‌த்தில் அழைத்து வ‌ருவ‌திலிருந்து குறும்ப‌ட‌ம் முடியும் வ‌ரை ப‌ட‌ம் ஒருவித‌ வ‌க்கிர‌மாய்ப‌ட‌ம் போவ‌துட‌ன், இறுதியில் க‌ஸ்தூரிராஜா த‌ர‌வ‌ழிக‌ள் ப‌தின்ம‌ர்க‌ளை முக்கிய‌ பாத்திர‌மாக்கிக கொண்டு எடுக்கும் ப‌ட‌ங்க‌ளில் வ‌ரும் போத‌னையைப் போல‌வே இப்ப‌ட‌மும் முடிகின்ற‌து. காரின் rear mirror ல் சைட் அடிப்ப‌திலிருந்து, அண்ணியார் குளிய‌ல‌றையில் நின்று த‌லையிழுப்ப‌தை பின்னால் நின்று இர‌சிப்ப‌திலிருந்து, முருங்கைக்காயை ஒரு'வ‌கையாய்' ச‌ப்பிச் சாப்பிட்ட‌ப‌டி அண்ணியின் முருங்கைக்காய் ந‌ன்றாக‌விருக்கிற‌து என்று சொல்வ‌துவ‌ரை தெரிவ‌தெல்லாம் மிகுந்த‌ வ‌க்கிர‌மே த‌விர‌ வேறொன்றுமில்லை. அதைவிட‌ மிக ஆபாச‌மாய் இருப்ப‌து முடிவில் அந்த‌த் த‌ம்பிக்கு அண்ணி அவர்க‌ளின் இற‌ந்துபோன‌(அல்ல‌து ஊரிலிருக்கிற?) தாயாரை நினைவுப‌டுத்துகின்றாராம் என்று சொல்லி முடிப்ப‌து. 'அண்ணிய‌ல்ல‌ நீங்க‌ள் அம்மா அம்மா' என்று பின்ன‌ணிக்குர‌ல் வ‌ருகையில் இப்ப‌ட‌த்தை எடுத்த‌வ‌ருக்கு செவிட்டில் அறைந்தால் என்ன‌ என்ற‌மாதிரி இருந்த‌து. அட‌ நாச‌மாய்ப்போன‌வ‌ர்க‌ளே அம்மாவையும் ‍ -இப்ப‌டி அண்ணியைப் பார்ப்ப‌துபோல‌த்தான்- பார்ப்பீர்க‌ள் என்றால், ச‌மூக‌ம் அம்மா-ம‌க‌ன் என்றில்லை வேறொரு உற‌வு மாதிரிய‌ல்ல‌வா பார்த்திருக்கும் என்ப‌து புரியாம‌லா போய்விட்ட‌து என்றுதான் கேட்க‌த் தோன்றுகின்ற‌து. க‌னடாவிலிருந்து அல்ல‌, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளிலிருந்து ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளிலிருந்து ஒன்றிர‌ண்டு ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுத்து க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌து கூட‌க் க‌டின‌மாய்த்தான் இருக்கிற‌து. சென்ற‌வ‌ருட‌ம் ‍தொழில்நுட்ப‌ விட‌ய‌ங்க‌ள‌ த‌விர்த்து‍ திரைக்க‌தையைக் க‌ட்டிறுக்க‌மாய்ப் ப‌ட‌மாக்கிய‌ (சிற்ந்த‌ குறும்ப‌ட‌த்துக்கான‌ விருதைப் பெற்ற‌) 'ந‌தி'யையெடுத்த‌ பாஸ்க‌ரிட‌மிருந்து கூட‌ மிக‌ச் சாதார‌ண‌மான‌ -அலுப்பான‌- ப‌ட‌மே இம்முறை வெளிவ‌ந்திருக்கின்ற‌து. எவ‌ரில் அதிக‌ம் ந‌ம்பிக்கை கொள்கின்றோமே அவ‌ர்க‌ளே சாணேற‌ முழ‌ம் ச‌றுக்கின்ற‌ க‌தையாய் புல‌மபெய‌ர் ப‌ட‌ச்சூழ‌லை ஆக்கிவிடுகின்ற‌ன‌ர் (அல்ல‌து த‌ங்க‌ள் த‌லையில் தாங்களே ம‌ண்ணை அள்ளிக்கொட்டிவிடுகின்றார்க‌ள் என்றும் சொல்லலாம்). திரையிட‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளில் ஒர‌ள‌வு ந‌ம்பிக்கை த‌ந்த‌து, எக்ஸில் த‌யாரிப்பில் பிர‌தீப‌ன் இய‌க்கிய‌ 'முற்ற‌த்தில் ஒரு மாம‌ர‌ம்' (A mango tree in front yard). ப‌டிம‌ங்க‌ளால் ஈழ‌த்துப் பிர‌ச்சினையைக் காட்ட‌ முயன்ற‌மைக்காய்ப் பாராட்ட‌லாம். இன்னும் எடிட்டிங்கில் கூட‌க் க‌வ‌ன‌ஞ் செலுத்தியிருக்க‌லாம்; சில‌ காட்சிக‌ள் தேவையில்லாம‌ல் நீள‌ப்பார்க்கின்ற‌ன‌. இவ‌ற்றை விட‌ மிக‌ அவ‌ல‌ம் என்ன‌வென்றால் த‌மிழ‌க‌த்திலிருந்து ஈழ‌த்தின் அவ‌ல‌த்தைப் ப‌திவாக்கிய‌ 'சிலோன்' என்ற‌ ப‌ட‌த்துக்கு நிக‌ராய்க் கூட‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் எவ‌ராலும் இன்றைய‌ ஈழ‌த்து உக்கிர‌ போர்க்கால‌த்தைப் ப‌திவு செய்துவிட‌ முடிய‌விலை என்ப‌துதான். 'சிலோன்' இர‌ண்டு வேறு நில‌ப்ப‌ர‌ப்பைக் காட்டுகின்ற‌து. த‌மிழ்நாட்டில் ஒரு ப‌குதியில் சிறுவ‌ர்க‌ள் குழு கிரிக்கெட் விளையாடுகின்ற‌து; மேலே விமான‌ம் போக‌ கையைக் காட்டி ஆர்ப்ப‌ரிக்கிகின்றார்க‌ள். ஒரு மகிழ்ச்சியான‌ சூழ்நிலையைப் பின்ன‌ணி இசை வ‌ழ‌ங்குகின்ற‌து. ச‌ட்டென்று க‌மரா கிளிநொச்சிக்குத் திரும்புகின்ற‌து. அங்கேயும் ஒரு சிறுவ‌ர் கூட்ட‌ம்; உதைபந்தாட்ட‌ம் விளையாடுகின்ற‌து. ஆட்ட‌த்தின் ந‌டுவில் உல‌ங்கு வானூர்தியின் ச‌த்த‌ம் கேட்கின்ற‌து. சிறுவ‌ர்க‌ள் ஆட்ட‌த்தை விட்டுத் திசைக்கொருவ‌ராய்ச் சித‌றி ஓடுகினறார்க‌ள். இப்போது ஒரு சிறுவ‌னை ம‌ட்டும் க‌ம‌ரா பின் தொட‌ர்கின்ற‌து. பியானோவின் ஒற்றைத் த‌ந்தி பின்ன‌ணியில் அதிர்கின்ற‌து ஓடிப்போய் ப‌துங்குகுழிக்குள் ப‌துங்கும் சிறுவ‌னின் விழிக‌ள் எங்கும் ம‌ர‌ண‌த்தின் நிழ‌ல் ப‌டிகின்ற‌து. காதில் கையைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றான். உல‌ங்கு வானூர்தி இம்முறை தாக்குத‌ல் எதையும் ந‌க‌ராது ந‌க‌ர்கின்றது. ம‌ர‌ண‌பீதியில் இருக்கும் சிறுவ‌னின் விழிக‌ள் 'அப்பாடா' என்ற‌மாதிரி நிம்ம‌திக்குத் திரும்புகின்ற‌து. அவ்வ‌ளவுதான் ப‌ட‌ம்... 3 அல்ல‌து 4 நிமிட‌ங்க‌ள். எந்த‌ உரையாட‌லுமில்லை. ப‌ட‌ம் முடிந்த‌பின்னும் அச்சிறுவ‌னின் ப‌த‌ட்ட‌ம் பார்ப்ப‌வ‌ரின் உள்ள‌த்தில் ப‌டிந்துவிடுகின்ற‌து. இம்முறை விமான‌த்தாக்குத‌லுக்கு உள்ளாகாம‌ல் த‌ப்பிய‌ சிறுவ‌னுக்கு, நாளை என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌து அவ‌னுக்கும் தெரியாது; ந‌ம‌க்கும் தெரியாது. எதையும் செய்ய‌முடியாத‌ குற்றவுண‌ர்ச்சி ந‌ம்மைச் சூழ்ந்த‌ப‌டியே இருக்கிற‌து. இம்மாதிரிக் குறும்ப‌ட‌ங்க‌ளை -எல்லாவ‌ற்றையும் உரையாட‌ல்க‌ளால் நிக‌ழ்த்திக்காட்டும்- புல‌ம்பெய‌ர் ஈழ‌த்துப் ப‌டைப்பாளிக‌ள் நிச்ச‌ய‌ம் பார்க்க‌வேண்டும். உரையாட‌ல்க‌ளைக் குறைத்து காட்சிக‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும்போது அது த‌மிழ‌றியாத‌ பிற‌ரைக் கூட‌ subtitle இல்லாது பாதிக்கும். 'எம‌க்கான‌ திரைப்ப‌ட‌ மொழியை உருவாக்குவோம்' என்ற‌ ந‌ம்பிக்கைச் சொற்க‌ளிடையேதான் சுயாதீன‌த் திரைப்ப‌ட‌க் க‌ழ‌க‌ம் ஏழாவ‌து ஆண்டாய் திரைப்ப‌ட‌ விழாவை ந‌ட‌த்திக்கொண்டிருக்கின்ற‌து. ஆனால் ப‌த்தாண்டு ஆனாலும் நாம் எம‌து த‌னித்துவ‌த்தை வ‌ந்த‌டைவோமா என்ப‌து -இவ்வாறான‌ புல‌மபெய‌ர் குறும்/நெடும்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போது- கேள்விக்குறியாக‌ இருப்ப‌துதான் அவ‌ல‌மான‌து.

உப‌குறிப்பு: இத்திரைப்ப‌ட‌ விழாவுக்கு ந‌டுவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌ இருந்தாலும், இவை என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ளே த‌விர‌, தேர்வுக்குழுவின் எண்ண‌ங்க‌ளைப் பிர‌திப‌லிக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌மில்லை.
-------------------

இத்திரைப்ப‌ட‌ விழா முடிந்து அடுத்த‌ வாரத்தில், Regent Park Film Festival பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்த‌து. Regent Park என்ப‌து ரொர‌ண்டோவில் ஏழ்மையான‌ ப‌குதி ம‌ட்டுமில்லை, நிறைய‌ புதுக்குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் வ‌ந்துசேர்கின்ற‌ இட‌முங்கூட‌. ரொர‌ண்டோ பெருந‌க‌ரில் (metro) எழுகின்ற‌ அதியுய‌ர் வ‌சதி கொண்டோக்க‌ளின் (Condos) நிமித்த‌ம் இப்பகுதி ம‌க்க‌ள் ப‌குதி ப‌குதியாக‌ அக‌ற்ற‌ப்ப‌டுகின்ற‌ அபாய‌ம் அண்மைய‌ வ‌ருட‌ங்க‌ளில் இருந்து கொண்டுவ‌ருகின்ற‌து என்ப‌தோடு திரையிட‌லுக்கும் அநேக‌மாய் விளிம்புநிலை ம‌க்க‌ளின் க‌தைக‌ளைக் க‌ருவாக‌க் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ளே முத‌ன்மைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. நான்கு நாட்க‌ள் ந‌டந்த திரையிட‌லில் இர‌ண்டு நாட்க‌ள் சில‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த‌து. பார்த்த‌வ‌ற்றில் பாதித்த‌ சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையாவ‌து குறிப்பிட‌வேண்டும்.

Amazing Truth About Queen Raquela பிலிப்பைன்சில் பிற‌ந்த‌ ஒரு திருந‌ங்கையின் க‌தை. பாலிய‌ல் தொழில் செய்து வாழ்ந்துகொண்டிருக்கும் இத் திருந‌ங்கை web cam மூல‌ம் போர்னோ இணைய‌மொன்றில் ஷோ செய்ய‌த்தொட‌ங்குகின்றார். அத‌ன் நீட்சியில் இவ்விணைய‌த்த‌ள‌த்தை ந‌ட‌த்திவ‌ரும் ‍‍நியூயோர்க்கிலிருக்கும் மைக்க‌லுக்கும் இவ‌ருக்கும் ஈர்ப்பு வ்ந்து அவ‌ரைச் ச‌ந்திப்ப‌த‌ற்காய் பாரிஸ் புற‌ப்ப‌டுகின்றார். நேர‌டியாக‌ப் பாரிஸ் செல்வ‌தற்கு விஸா எடுப்ப‌த‌ற்கு க‌டின‌மாயிருப்ப‌தால், ஜ‌ஸ்லாந்திலிருக்கும் இன்னொரு திருந‌ங்கை இவ‌ருக்கு உத‌வ‌ முன்வ‌ருகின்றார். ஜ‌ஸ்லாந்துக்கு விஸா எடுத்துவ‌ந்து பாரிஸுக்கு பிற‌கு ப‌ய‌ணிக்க‌லாம் என்ப‌து இவ‌ர்க‌ளின் திட்ட‌ம். ப‌ட‌ம் ர‌கீலா எப்ப‌டி பிலிப்பைன்ஸிலிருந்து விஸா எடுத்து பாரிஸ் செல்வ‌துவ‌ரை நீள்கின்ற‌து. ஒரு திருந‌ங்கையாக‌ இருந்துகொண்டு இன்னொரு நாட்டுக்குச் செல்வ‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌மே வ‌ராது என்றிருக்கும் ரகீலாவுக்கு அவ‌ர‌து க‌ன‌வு நிறைவேறப்போவ‌தை அவ‌ரின் ந‌கைச்சுவைக்கும், விய‌ப்புக்குமிடையால் க‌ம‌ரா பின் தொட‌ர்ந்த‌ப‌டியே இருக்கின்ற‌து. எவ்வித‌ அதீத‌ உண‌ர்ச்சிக‌ளோ, தேவையில்லாத‌ காட்சிக‌ளோ இல்லாது ர‌கீலாவின் இந்த‌க் ந‌ன‌வாகும் க‌னவுப்ப‌ய‌ண‌ம் அருமையாக‌ எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும். த‌ன‌க்கான‌ எல்லா அவ‌ல‌த்தையும் ம‌றைத்த‌ப‌டி ரகீலா பார்ப்ப‌வ‌ரைத் த‌ன‌து ந‌கைச்சுவைத்த‌ன‌ங்க‌ளால‌ கொண்டாட்ட‌மான‌ ம‌னோநிலைக்கு ந‌க‌ர்த்திக்கொண்டேயிருப்பார். திருந‌ங்கைக‌ளை இன்னும் நெருக்க‌மாய் அணுக‌ வைக்கும்ப‌டியாக‌ அலுப்புத் த‌ட்டாது அற்புத‌மாய் இப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ர‌கீலாவின் தாயார் ஓரிட‌த்தில் 'என‌க்கு நான்கு பிள்ளைக‌ள், ஒருவ‌ர் திருந‌ங்கை, இன்னொருவ‌ர் லெஸ்பிய‌ன், இர‌ண்டு பேர் Straight...என‌து குடும்ப‌ம் எல்லோரையும் உள்ளாட‌க்கிய‌ நிறைவான‌ குடும்ப‌ம் என்று சிரித்த‌ப‌டி சொல்லுவார். ர‌கீலாவும் ஓரிட‌த்தில் (கிட்ட‌த்தட்ட‌ ) இப்ப‌டிச் சொல்வார். நாங்க‌ளும் உங்க‌ளைப் போல‌வே பிற‌ந்த‌வ‌ர்க‌ள்; ஆகவே உங்க‌ளைப் போல‌வே வாழ்வை வாழ்ந்துபார்க்க‌வே ஆசைப்ப‌டுகின்றோம் ஏன் புரிந்துகொள்ள‌ ம‌றுக்கின்றீர்க‌ள் என்ப‌து நாம் எல்லோரும் அவ‌ர்க‌ளைப் புரிந்துகொள்வ‌த‌ற்கு/யோசிப்ப‌த‌ற்கான‌ ஓர் ஆர‌ம்ப‌க் கேள்வி.


La Corona (The Crown) என்ற‌ மெக்ஸிக்கோ ப‌ட‌த்தை இடையிலிருந்தே பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து. எனினும் இவ் ஆவ‌ண‌ப்ப‌ட‌த்தை (அல்ல‌து ப‌ட‌த்தின் முக்கிய‌ பேசுபொருளை) ப‌ற்றி எங்கேயோ ஏற்க‌ன‌வே வாசித்த‌தாய் நினைவிலுண்டு. ப‌ல‌வேறு கார‌ண‌ங்க‌ளுக்காய் சிறைக்குள் செல்லும் பெண்க‌ளின் (கெரில்லாக்க‌ளாக‌, திருட‌ர்க‌ளாக‌, பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளாக‌) ஒவ்வொரு செல்லிருந்தும் (Cell) தெரிவு செய்து அனுப்ப‌ப்ப‌டும் பெண்க‌ளுக்கு சிறைக்குள் நிக‌ழும் 'அழ‌குராணிப் போட்டி' ப‌ற்றிய‌ க‌தையிது. அப்பெண்க‌ளிடையே ந‌ட‌க்கும் போட்டிக‌ள்/பொறாமைக‌ள்/ந‌ட்புக‌ள்/ கொண்டாட்ட‌ங்க‌ள் என்ற‌ப‌டி ப‌ட‌ம் ப‌ல்வேறு ம‌னோநிலைக்கு எங்க‌ளை அழைத்துச் செல்கின்ற‌து. நிஜ‌த்தில் இப்ப‌ட‌த்தில் அழ‌குராணியாய் முடிசூட‌ப்ப‌ட்ட‌ பெண் விடுத‌லையான‌ சில‌ நாட்க‌ளில் கொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌தாய் ப‌ட‌ம் முடிந்த‌பின் ந‌டைபெற்ற‌ உரையாட‌லில் சொல்ல‌ப்ப‌ட்டிருந்த‌து.

Bevel Up என்ற‌ க‌ன‌டாவில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம், வீட‌ற்றுத் தெருவில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ளையும், பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ளின் போதைப்பொருள் பாவ‌னைக‌ளையும் ப‌ற்றிப் பேசுகின்ற‌து. இந்த‌ ப‌ட‌த்தை ஒரு பின் ந‌வீன‌த்துவ‌ ம‌னோநிலையில் அணுக‌முடியாவிட்டால் இப்ப‌ட‌த்தினுள்ளே போக‌முடியாது. அதாவ‌து ந‌வீன‌த்துவ‌ம் முன்வைத்த‌ 'எல்லோரும்/எல்லாமும் சுபீட்ச‌மாக‌ இருக்கும்' என்ற‌ utopian ம‌னோநிலையை நீங்க‌ள் முத‌லில் உத‌றித்த‌ள‌ள‌வேண்டும். அத்தோடு ந‌ல்ல‌து X கெட்ட‌து என்ற‌ துவித‌ எதிர்முனைக‌ளையும் நீங்க‌ள் ப‌டத்தினுள் நுழையும் பொழுதிற்கு ம‌ட்டுமாவ‌து ம‌ற‌ந்திருக்க‌வேண்டும். தெருத் தாதிக‌ள் (Street Nurses) எவ்வாறு இவ்வாறான‌ வீட‌ற்ற‌வ‌ர்க‌ளையும், போதை ம‌ருந்து ப‌ழ‌க்க‌த்திலுள்ள‌வ‌ர்க‌ளையும், பாலிய‌ல் தொழில் செய்ப‌வ‌ர்க‌ளையும் ச‌க‌ ம‌னித‌ர்க‌ளாய் நேசித்து எப்ப‌டி அவ‌ர்க‌ளின் சுகாதார‌த்தை இய‌ன்ற‌ள‌வு ப‌ராம‌ரிக்க‌ முய‌ல்கின்றார்க‌ள் என்ப‌தையே இப்ப‌ட‌ம் காட்சிப்ப‌டுத்துகின்ற‌து. இத் தெருத்தாதிக‌ள் இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை எந்த‌ப்பொழுதிலும் 'நாங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் X நீங்க‌ள் கெட்ட‌வ‌ர்க‌ள்' என்ற‌ ம‌னோநிலையில் அணுக‌வேயில்லை. த‌ங்க‌ளைப் போல‌ ஒருவ‌ராக‌வே அவ‌ர்க‌ளையும் நினைத்து அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை எல்லாம் நினைவில் வைத்து, பாதுகாப்பான‌ செக்ஸிற்கு கொண்ட‌ம்க‌ளை விநியோகிப்ப‌வ‌ர்க‌ளாக‌, போதை ம‌ருந்து உட்கொள்ளும்போது பாதுகாப்பான‌ ஊசிக‌ளை, பிற‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளைப் பாவிக்க‌ச் சொல்லி சிநேகித‌ பூர்வ‌மாய் உரையாடுகின்ற‌வ‌ர்க‌ளாய் -இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை- அணுகுகின்றார்க‌ள். பார்த்துக்கொண்டிருக்கும் ந‌ம‌க்கு, இவ‌ர்க‌ள‌ இப்ப‌டிச் செய்வ‌து, இன்னும் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளை செய்ய‌ ஊக்குவிப்ப‌தான‌ ஒரு ஒரு பார்வையைத் த‌ர‌ச்செய்ய‌க்கூடும். ஆனால் இது 'இனிதான உல‌க‌ம் இனியில்லை' என்ற‌ utopian க‌னவை உடைத்து ய‌தார்த்த‌த்தைப் பார்க்குகின்ற‌ பிற‌கான‌ ந‌வீன‌த்துவ‌ நிலையென‌ எடுத்துக்கொள்ள‌வேண்டும். இத்தெருவோர‌ தாதிக‌ள் எவ‌ருக்கும் ஆலோச‌னைக‌ள் சொல்லி தாங்க‌ள் உய‌ர்ந்த‌ இட‌த்திலிருப்ப‌தாய்க் காட்டிக்கொள்ள‌வில்லை (அதை இவ்வாறான‌ விளிம்பு நிலைம‌னித‌ர்க‌ள் கேட்டுக்கொள்ள‌ப்போவ‌துமில்லை என்ப‌தே ய‌தார்த்த‌முமாகும்). ஆனால் அதேச‌ம‌ய‌ம் க‌ட்டுப்பாடில்லாது போகும்போது அவ‌ர்க‌ளுக்கு விளையும் விபரீத‌ங்க‌ளை போகின்ற‌போக்கில் அவ‌ர்க‌ளுக்கு உறைக்கின்ற‌மாதிரிச் சொல்கின்றார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌த்தை ஓரு ப‌க்க‌ம் ஒதுக்கிவைத்து நாம் இப்போது 'வ‌ழ‌மையான‌' பொதுப்புத்திக்குத் திரும்புவோம். பொதுப்புத்தியின் குர‌ல் இவ்வாறான‌ ம‌னித‌ர்க‌ளைப் ப‌ற்றி என்ன‌ சொல்லுமென்றால், 'இவ‌ர்கள் எல்லாந் தெரிந்துகொண்டே இதைச் செய்கின்றார்க‌ள். கைவிட‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்களாக‌வே இவ‌ர்க‌ள் இருக்க‌ட்டும்; இவ‌ர்க‌ளால் ச‌மூக‌த்தில் ப‌ல‌னேதுமில்லை' என்றே சொல்லும். இதே பொதுப்புத்தியில் குர‌ல்க‌ளிலிருந்துதான் நிறைய‌ப்பேர் இவ்வாறான‌ பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளைத் தேடிப்போகினறார்க‌ள்.... கொண்டாட்ட‌ங்க‌ள்/ நிகழ்ச்சிக‌ள் போன்ற‌வ‌ற்றில் இவ்வாறான‌வ‌ர்களிட‌மிருந்துதான் குறைந்த‌விலையில் போதைப்பொருட்க‌ள் வாங்கி த‌ங்க‌ள் இன்ப‌த்துக்காய் பாவிக்கின்றார்க‌ள். இப்போது இந்த‌ பொதுப்புத்தியின் குர‌ல்க‌ளைக் கொண்ட‌வ‌ர்களிட‌ம் நாம் கேள்விக‌ளைக் கேட்போம்; நீங்க‌ள் இவ்வாறு பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளிட‌ம் போவ‌தை/ போதைப் பொருட்க‌ளை உப‌யோகிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் போவ‌தை நிறுத்துவீர்க‌ளா என்றால் எதாவ‌து சாட்டுக்க‌ளைச் சொல்லித் த‌ப்பிவிடுவார்க‌ள். இனி இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளிட‌ம் வ‌ருவோம். த‌ம‌து உட‌ல்நிலை/சுகாதார‌ம் குறித்து க‌வ‌லையில்லாத‌ ஒரு பாலிய்ல் தொழிலாளிக்கு பாலிய‌ல்நோய் (STD, AIDS) வ‌ந்தால் அது எத்த்னைபேருக்குத் தொற்றும்? அல்ல‌து இவ்வாறான‌ பாலிய‌ல் நோயோடு இப்பாலிய‌ல் தொழிலாள‌ர்களிட‌ம் ஒருவ‌ர் உற‌வுகொண்டால் அந்த‌ப்பெண்க‌ளின்/ஆண்களின் நிலை என்ன‌வாவ‌து? இவ்வாறான‌ இன்னும் ப‌ல‌ கேள்விக‌ளை நாம் நிதான‌மாய் எழுப்பிக்கொண்டாலே நாம் இந்த‌ப்ப‌ட‌த்தின் அவ‌சிய‌த்தைத் தெளிவாக‌ விள‌ங்கிக்கொள்ள‌லாம். இப்ப‌டம் கிட்ட‌த்த‌ட்ட‌ நான்கு ம‌ணித்தியால‌த்திற்கும் மேலான‌து. 45 நிமிட‌ங்க‌ள‌ சுருக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌மாக‌த் திரையிட‌ப்ப‌ட்டிருந்த‌து. இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌க்க‌ளை எப்ப‌டி விள‌ங்கிக்கொள்வ‌து, அவ‌ர்க‌ளின் உட‌ல்ந‌ல‌த்தைப் பராம‌ரிப்ப‌து என்று ம‌ருத்துவ‌க்க‌ல்லூரிக‌ளிலே க‌ற்பிப்ப‌த‌ற்கும்/விவாதிப்ப‌த‌ற்குமே எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌தென‌ இப்ப‌ட‌த்தில் தெருத்தாதியாக‌ வ‌ந்த‌ ஒருவ‌ர் (Caroline Brunt) ப‌ட‌ம் முடிந்த‌பின்ன‌ர்- சொன்னார். அதேச‌ம‌ய‌ம் இன்னும் எந்த‌ அர‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னையோ. ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌மோ இவ் ஆவ‌ண‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளுக்குள் உள்வாங்கிக்கொள்ள‌வில்லை என்ப‌தையும் குறிப்பிட‌, Ryerson Universityயில் க‌ற்பிக்கின்ற‌(?) ஒரு பேராசிரிய‌ர் ம‌ட்டும் தாங்க‌ள் இவ்வாறான‌ அணுகுமுறையை த‌ங்க‌ள் பாட‌த்திட்ட‌த்தில் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் சேர்க்கின்றோம் என்றார். பின் ந‌வீன‌த்துவ‌ சூழ‌லை விள‌ங்கிக்கொள்ள‌ ம‌றுக்குகின்ற‌ ம‌ன‌ங்க‌ளால் அவ்வ‌ள‌வு இல‌குவாய் இதை ஏற்றுக்கொள்ள‌ முடியாதுதான். அதேச‌ம‌ய‌ம் திரையிடாத‌, ஆனால் போதை ம‌ருந்து எடுக்கின்ற‌ ம‌ருத்துவ‌த்தாதிக‌ளும் இப்ப‌ட‌த்தில் உரையாடியிருக்கின்றார்க‌ள் என்ற‌போது சபையிலிருந்த‌ சில‌ருக்கு அதிர்ச்சியாக‌வே இருந்த‌து (மீண்டும் 'அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் X இவ‌ர்க‌ள் கெட்ட‌வ‌ர்க‌ள்' என்ற‌ துவித‌ எதிர்நிலைக‌ளை நினைவுப‌டுத்துவோம்). வீட‌ற்ற‌வ‌ர்க‌ள் பாலியல‌ தொழிலாள‌ர்கள் ம‌ட்டுமில்லை அதைவிட‌ போதைப்பொருட்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் மிக‌ப்பெரும் ச‌த‌வீத‌ம் அவ‌ர்க‌ளுக்கு வெளியே இருக்கின்றார்க‌ள் என்ப‌தே ய‌தார்த்த‌ம் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், வைத்திய‌ர்க‌ள என்ற‌ ச‌மூக‌த்தில் 'அந்த‌ஸ்து' பெற்ற‌வ‌ர்க‌ளில் நிறைய‌ப்பேர் போதைப்பொருட்க‌ளைப் பாவிக்கின்றார்க‌ள் என்ப‌தை Caroline ச‌பைக்கு நினைவுப‌டுத்திய‌தை நாமும் நினைவில் கொண்டால் 'இந்த‌ Homeless people/prostitute என்றாலே இப்ப‌டித்தான்...' என்ற‌ ந‌ம‌து வ‌ழ‌மையான‌ க‌தையாட‌லை நிறுத்திவிட‌வும் கூடும்.

(இத்திரைப்ப‌ட‌ விழாவுக்கு ஐந்து த‌மிழ்ப் பெண் க‌விதைக‌ளின் குர‌ல்க‌ளினூடாக‌ வெளிவ‌ந்த‌ Breasts என்ற‌ ப‌தினைந்துநிமிட‌ விவ‌ர‌ண‌ப்ப‌ட‌ம் திரையிட‌ப்ப்ப‌ட்டிருந்த‌து. அதைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைக்க‌வில்லை)
ப‌ட‌ங்க‌ளுக்கு ந‌ன்றி: Regent Park Film Festival & Pathivukal

(...வ‌ள‌ர்ம‌திக்கு)

ஜும்பா ல‌கிரியின் Unaccustomed Earth

Friday, November 07, 2008

-வாழ்வின் ம‌டிப்புக்க‌ளும் க‌த‌க‌த‌ப்பாய்த் துயில‌ முய‌லும் ம‌ன‌ங்க‌ளும்-

புல‌ம்பெய‌ர்வு என்ப‌து ஆதிகால‌த்திலிருந்தே நிக‌ழ்ந்து வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌வேறு காரண‌ங்க‌ளால் புல‌ம்பெய‌ர்வு நிக‌ழ்ந்தாலும், போரும் பொருளாதார‌ நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ண‌ங்க‌ளாக‌ப் புல‌ம்பெய‌ர்வில் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. மேற்குல‌கில் அந்நிய‌ர்க‌ளாக‌ (outsiders) வாழும் அவ‌ல‌ங்க‌ளை எட்வேர்ட் சைய‌து (Out of Place: A Memoir) போன்ற‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை, வி.எஸ். நைபால், ச‌ல்மான் ருஷ்டி, எம்.ஜி.வ‌ஸாஞ்ஜி போன்ற‌வ‌ர்க‌ளின் புதின‌ங்க‌ளும் பேசியிருக்கின்ற‌ன‌. அநேக‌ பொருளாதார‌ அக‌திக‌ளுக்கு, எப்போது திரும்பிப் போனாலும் ஒரு நாடும் ஒரு ஊரும் ஒரு வீடும் இருப்ப‌துபோல‌, போரின் ச‌ம்ப‌ந்த‌மான‌/உயிர் அச்சுறுத்த‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு -அவ்வாறான‌ க‌டைசி ந‌ம்பிக்கை- வாய்ப்ப‌தில்லை. ச‌ல்மான் ருஷ்டி, த‌ஸ்லிமா ந‌ஸ்ரின் போன்ற‌வ‌ர்க‌ள் இர‌ண்டாம் வ‌கையின‌ர். ஜும்பா ல‌கிரி முத‌லாம் வ‌கையைச் சேர்ந்த‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாது, புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ரும் கூட‌. என‌வே ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ளில் புல‌ம்பெய‌ர்ந்த‌ இரண்டாம் த‌லைமுறையின‌ரின் பார்வை அதீத‌மாய் இருப்ப‌தும் இய‌ல்பான‌தே.


அண்மையில் வெளியான‌ ஜும்பா ல‌கிரியின் Unaccustomed Earth சிறு/குறுங்க‌தைக‌ளின் ஒரு தொகுப்பாகும். புல‌ம்பெய‌ர்ந்த‌ முத‌லாம்/இர‌ண்டாந் த‌லைமுறையின‌ரே முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாகின்ற‌ன‌ர். ஜும்பா ல‌கிரியின் க‌தைக‌ளில் இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு ம‌ட்டுமில்லை முத‌லாந்த‌லைமுறைக்குக் கூட‌, புல‌ம்பெய‌ரும் புதிய‌ சூழ‌ல் -போரால‌ அடித்துத் துர‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைப் போல‌- பெரும் த‌த்த‌ளிப்புக்க‌ளையோ, அல்ல‌ல்க‌ளையோ த‌ருவ‌தில்லை. மிக‌ எளிதாக‌வே புல‌ம்பெய‌ர் அமெரிக்க‌/அய்ரோப்பிய வாழ்வுக்கு, ஜும்பா ல‌கிரியின் க‌தாபாத்திர‌ங்க‌ள‌ த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக் கொண்டுவிடுகின்ற‌ன‌ர். பொருளாதார‌ஞ் சார்ந்த‌ இட‌ம்பெய‌ர்வு என்ப‌தால் இத்தொகுப்பிலுள்ள‌ அநேக‌ பாத்திர‌ங்க‌ள் ச‌மூக‌த்தில் 'ம‌திக்க‌ப்ப‌டும்' தொழில்க‌ளையே (வைத்திய‌ர்க‌ளாக‌/பொறியிய‌லாள‌ர்க‌ளாக‌/ பேராசிரிய‌ர்க‌ளாக) செய்கின்ற‌ன‌ர். மேலும் இத்தொகுப்பில் இந்தியாவின் உய‌ர்த‌ர‌ அல்ல‌து ம‌த்திய‌ உய‌ர்த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் ம‌ட்டுமே தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். அதொரு பிர‌ச்சினையில்லை, ஆனால் ஒரே மாதிரியான‌ ம‌னித‌ர்க‌ளும் ஒரே வ‌கையான‌ சூழ‌ல்க‌ளும் தொட‌ர்ச்சியாக‌ ப்ல‌வேறு க‌தைக‌ளில் வ‌ரும்போது வாசிக்கும்போது அலுப்பு வ‌ருவ‌தைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை. எல்லாக் க‌தைக‌ளும் ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌, இனி மொழியின் விளையாட்டு இல்லாது புதுவ‌கைப் ப‌டைப்புக்க‌ள் சாத்திய‌மில்லை என்ப‌து உண்மைதானோ என்று எண்ணும்ப‌டி ஜும்பா ல‌கிரியின் இத்தொகுப்பிலுள்ள‌ லினிய‌ர் வ‌கை எழுத்துக்க‌ளை வாசிக்கும்போது அடிக்க‌டி தோன்ற‌த்தான் செய்கின்ற‌து.

தொகுப்பிலிருக்கும் முத‌லாவ‌து க‌தையான‌ Unaccustomed Earth, அப்பா-ம‌க‌ள் உற‌வு ப‌ற்றி உரையாட‌ முய‌ல்கின்ற‌து. இர‌ண்டாவ‌து பிள்ளை க‌ருவிலிருக்கும் ரூபாவும், ம‌னைவியை இழ‌ந்த‌ த‌ந்தையுமே முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாகின்ற‌ன‌ர். பென்சில்வேனியாவில் த‌னியே இருக்கும்/அய்ரோப்பா ந‌க‌ரங்க‌ளுக்கும் அடிக்க‌டி சுற்றுலா செல்லும் ரூபாவின் த‌ந்தையார், ரூபாவும் அவ‌ர‌து க‌ண‌வ‌ரும் சிய‌ட்டிலில் வாங்கியிருக்கும் புது வீட்டுக்கு வ‌ருகின்றார். தாயாரைப் போல‌ த‌ன் த‌ந்தை பெரிதாக‌ த‌ன‌க்கு உத‌வ‌ப்போவ‌தில்லையென்று தெரிந்திருந்தாலும் த‌ன‌து வ‌சதிக்கும் த‌ந்தையின் ச‌வுக‌ரிய‌த்திற்குமாய் த‌ந்தையைத் த‌ன‌து வீட்டிலேயே ரூபா த‌ங்க‌ வைக்க‌ முய‌ற்சி செய்கின்றார். சிறுவ‌ய‌தில் தானும் த‌ம்பியும் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ உட‌னிருந்து எல்லாவ‌ற்றையும் தாயார் செய்துகொண்டிருக்க‌, த‌ந்தையார் தானும் த‌ன‌து வேலையுமாக‌ த‌ங்க‌ளைவிட்டு வில‌கிப்போன‌து ரூபாவிற்கு இத்த‌ருண‌த்தில் ப‌ய‌முறுத்துகின்ற‌து. முத‌லில் உட‌ன்ப‌டாவிட்டாலும் வ‌ங்காளியான‌ ரூபா, அமெரிக்க‌ வெள்ளையின‌த்த‌வ‌ர் ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்ய‌ விரும்பும்போது பெற்றோர் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். த‌ன‌து ம‌க‌ள் -குழ‌ந்தைக‌ளின் நிமித்த‌ம்- வேலைக்குப் போகாது வீட்டிலிருப்ப‌தைப் பார்க்கும் ரூபாவின் த‌ந்தை 'இப்ப‌டியே இருப்ப‌து உன‌து எதிர்கால‌ வாழ்வுக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌' என்று எச்ச‌ரிக்கை செய்கின்றார். இப்ப‌டித்தான் த‌‌ன‌து ம‌க‌ள் இருக்க‌ப்போகின்றார் என்றால் அவ‌ர் க‌ல்க‌த்தாவிலேயே யாராவ‌து வ‌ங்காளியைத் திரும‌ண‌ஞ்செய்துவிட்டு இருந்திருக்கலாம் என்று த‌ந்தை நினைக்கின்றார். அப்பாவிற்கும் ம‌க‌ளுக்குமான‌ இடைவெளியை ரூபாவின் முத‌ல் ம‌க‌ன் குறைக்கின்றான். பேர‌ன்மீது ப‌ற்று வைக்கும் த‌ன‌து த‌ந்தையார் இனித் த‌ன்னோடு நிர‌ந்த‌ர‌மாக‌த் த‌ங்கிவிடுவார் என்று நினைக்கும்போது த‌ந்தையார் அப்ப‌டியிருக்க‌ த‌ன‌க்கு விருப்ப‌மில்லையென‌ ரூபாவின் வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுகின்றார். அவ‌ர் அவ்வாறு ம‌க‌ளோடு இருக்க‌ விரும்பாத‌த‌ற்கு த‌ந்தை - ம‌க‌ள் இடைவெளி ம‌ட்டுமில்லை,த‌ன‌து தாய் இற‌ந்த‌பின் த‌ந்தையின் வெளிநாட்டு சுற்றுலாக்க‌ளில் அவ‌ருக்கு முகிழ்ந்த‌ இன்னொரு பெண்ணின் உற‌வும் ஒருகார‌ண‌ம் என்ப‌தை ‍ -ஒரு உரிய‌முறையில் சேர்க்க‌ப்ப‌டாத‌ த்பால‌ட்டையில்- மூல‌ம் ரூபா இறுதியில் க‌ண்டுகொள்கின்றார்.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ Hell - Heaven, அமெரிக்காவில் குடிபெய‌ர்ந்திருக்கும் ஒரு குடும்ப‌த்திற்குள் ந‌ட்பாக‌ நுழையும் ஒரு இளைஞ‌னைப் பின் தொட‌ர்ந்து செல்கின்ற‌து. க‌தை முழுவ‌தும் அக்குடும்ப‌ததில் அவ்விளைஞ‌ன் நுழையும்போது சிறுமியாக‌ இருக்கும் ஒருவ‌ரால் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. ஹார்வாட்டுக்குப் ப‌டிக்க‌ வ‌ரும் பிர‌ணாப் -ஓரே ஊர் என்ற‌ப‌டியால்- இக்குடும்ப‌த்தோடு இன்னும் நெருக்க‌மாகின்றான். அப‌ர்ணாவின் குடும்ப‌மும் வேறு எந்த‌ வ‌ங்காளிக்குடும்ப‌மும் அருகில்லாத‌தால் அவ‌னை அர‌வ‌ண‌த்துக் கொள்கின்ற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ அவ‌ன‌து வ‌ய‌திலிருக்கும் திரும‌ண‌மான‌ அப‌ர்ணாவிற்கு ம‌ணமாகி குடும்ப‌ அமைப்பு த‌ருகின்ற‌ அச‌தியில் பிர‌ணாப் மீது ஒரு ஈர்ப்பு உருவாகின்ற‌து; இவ்வாறு ப‌ர‌வ‌ச‌ததை த‌ந்துகொண்டிருக்கும் அவ்விளைஞ‌ன் ஒரு வெள்ளைக்கார‌ப் பெண்ம‌ணியைத்(டெபுரா) திரும‌ண‌ம் செய்ய‌ப்போகின்றான் என்கின்ற‌போது அப‌ர்ணா மிகுந்த‌ அவ‌திக்குள்ளாகின்றார்.. அத்திரும‌ண‌த்தை ம‌ன‌த்த‌ளவில் ஏற்றுக்கொள்ள‌ ம‌றுத்து ஒருமுறை எண்ணெய்யை ஊற்றி த‌ற்கொலை செய்யும் எண்ணத்திற்கு அருகில் சென்று அப‌ர்ணா த‌ப்பியுமிருக்கின்றார் என்ப‌து பின்ன‌ர் தெரிகின்ற‌து. மிகுந்த‌ பொருளாதார‌ வ‌ச‌தியிருக்கும் பிர‌ணாப் த‌ன‌து திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌ சில‌வ‌ருட‌ங்க‌ளில் டெபுராவை விட்டுவிட்டு வேறு ஒரு வ‌ங்காளிப் பெண்ணைத் திரும‌ண‌ஞ்செய்துகொள்கின்றார். பிர‌ணாப் டெபுராவை கைவிட்டு இன்னொரு திருமணம் செய்யும்போது, டெபுரா அப‌ர்ணாவோடு நெருக்க‌மாகின்றார். இப்பிரிவின் நிமித்த‌ம் க‌வ‌லைப்ப‌டும் டெபுராவை அப‌ர்ணா ஆறுத‌ற்ப‌டுத்தும்போது, டெபுரா தான் பிர‌ணாப்பை திரும‌ண‌ஞ்செய்த‌போது, த‌ன‌க்கு பிர‌ணாப் அப‌ர்ணாவுட‌ன் நெருக்க‌மாக‌ப் ப‌ழ‌குவ‌து குறித்து பொறாமை இருந்த‌து என்று தெரிவிக்கின்றார். எனினும் அப‌ர்ணா த‌ன‌க்கு பிர‌ணாப்வோடு இருந்த‌ அதீத‌ ஈர்ப்பு ப‌ற்றி டெபுராவிட‌ம் வெளிப்ப‌டையாக‌ ஒப்புக்கொள்ள‌வில்லை. பிர‌ணாப் டெபுராவைத் திரும‌ண‌ஞ்செய்த‌போது த‌ற்கொலை செய்ய‌ முய‌ற்சித்த‌துப‌ற்றிக்கூட‌ எவ‌ருக்குமே சொல்ல‌வில்லையென்கின்றார். இவ்வ‌ள‌வு க‌தையையும், அப‌ர்ணாவின் ம‌க‌ள் த‌ன‌து காத‌ல் வாழ்வு க‌ருகிவிட்ட‌தே என்று ம‌ன‌மொடிந்து வ‌ருத்த‌ப்ப‌டும்போதே அப‌ர்ணா இப்ப‌டி வெளிப்ப‌டையாக‌ த‌ன‌து க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றி ம‌க‌ளிட‌ம் ம‌ன‌ந்திற‌ந்து பேச‌த்தொட‌ங்குகின்றார்


மூன்றாவ‌து க‌தையான‌ A choice of Accommodation மிக‌ச்சாதார‌ண‌ ஒரு க‌தை. த‌ம‌து இர‌ண்டு குழ‌ந்தைக‌ளை பெற்றோரின் ப‌ராம‌ரிப்பில் விட்டுவிட்டு த‌ம‌க்கான‌ த‌னித்த‌ நேர‌த்தைக் க‌ழிக்க‌வென‌ -ஒரு ப்ழைய‌ க‌ல்லூரித்தோழியின் திரும‌ண‌த்துக்கு- இன்னொரு ந‌க‌ருக்கு ஒரு த‌ம்ப‌தியின‌ர் புற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். திரும‌ண‌த்தின்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து... அவ‌ர்க‌ள் தாம் திட்ட‌மிட்ட‌ த‌னித்த‌ நேர‌த்தைத் த‌ங்க‌ளுக்காய் ‍குற்ற‌வுண‌ர்வில்லாது‍ செல‌விட்டார்க‌ளா என்ப‌து ப‌ற்றி அக்கதை நீளும்.


நான்காவ‌து க‌தையான‌ Only Goodness, அக்கா ‍ த‌ம்பிக்கு இடையிலான‌ உற‌வு ப‌ற்றிப் பேசுகிற‌து. ப‌டிப்பில் மிக‌த்திற‌மையான‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் இருவ‌ரும் பல‌க‌லைக் க‌ழ‌க‌த்திற்குச் செல்லும்போது இர‌ண்டு வித்தியாச‌மான‌ வாழ்வைத் தெரிவு செய்கின்றார்க‌ள். அக்கா ப‌டித்துப்ப‌ட்ட‌ம்பெற‌ த‌ம்பி மிதமிஞ்சிய‌ குடிப்ப‌ழ‌க‌த்தால் வ‌ளாக‌ப் ப‌டிப்பை இடைநிறுத்துகின்றார். .த‌ம்பியின் குடிப்ப‌ழ‌க்க‌ம் த‌ன்னால் ஏற்ப‌ட்ட‌து என்ற் குற்ற‌வுண‌ர்வு த‌ம‌க்கைக்கு ஏற்ப‌டுகின்ற‌து. எனெனில் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது த‌ம்பி ப‌தின்ம‌வ‌ய‌திலிருக்கும்போதே அக்கா தான் குடிக்கும்போது ஒரு துணையாய்த் த‌ம்பிக்கும் குடிக்க‌ப் ப‌ழ‌க்கியிருந்தார். ஒழுங்கான‌ வேலையில்லாது பெற்றோருட‌ன் த‌ங்கியிருந்த‌ த‌ம்பி, ஒரு கிறிஸ்ம‌ஸ் விடுமுறையின்போது, த‌ன்னைவிட‌ மூத்த‌ -ஒரு குழ‌ந்தையுள்ள‌ விவாக‌ரத்தான‌- அமெரிக்க‌ப்பெண்ணைத் திரும‌ண‌ஞ்செய்ய‌போகின்றேன் என்கின்றார். குடும்ப‌ம் ம‌றுக்கின்ற‌து. இத‌ற்கிடை யில் அக்கா இர‌ண்டாவ‌து ப‌ட்ட‌த்திற்காய் இங்கிலாந்து சென்று ப‌டிக்க‌ப்போகும்போது அங்கே ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தான் -15 வ‌ய‌து வித்தியாச‌முள்ள‌‍- க‌லையில் நாட்ட‌முள்ள‌ ஒருவ‌ரோடு உற‌வு முகிழ்ந்து அவ‌ரைத் திரும‌ண‌ஞ் செய்ய‌விரும்பும்போது பெற்றோர் அக்க‌லைஞ‌னின் அந்த‌ஸ்துக‌ண்டு திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். திரும‌ண‌ம் அமெரிக்காவில் ந‌டைபெறும்போது த‌ம்பிக்கும்-தக‌ப்ப‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டிருக்கும் விரிச‌ல், த‌ம்பி கூட‌க்குடித்துவிட்டு க‌தைக்கும்போது விருந்துக்கு வ‌ந்திருக்கும் அனைவ‌ருக்குந் தெரிகின்ற‌து. அக்கா த‌ன‌து திரும‌ண‌த்தை வேறு திசைக்கு அழைத்துவிட்டுச் சென்றுவிட்டான் என்று த‌ம்பியோடு கோபிக்கின்றார். த‌ப்பி அத்தோடு வீட்டை விட்டு ஓடிப்போய், எங்கே த‌ங்கியிருக்கின்றார் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றார் என்ற‌ எந்த‌ செய்தியுமில்லாது த‌லைம‌றைவாகிவிடுகின்றார். பெற்றோரும் த‌ம‌க்கையும் நாள‌டைவில் த‌ம்பியை ம‌ற‌க்க‌த் தொட‌ங்கிவிடுகின்ற‌ன‌ர். த‌ம‌க்கை இல‌ண்ட‌னில் நிர‌ந்த‌ர‌மாக‌ த‌ங்கிவிட‌, பெற்றோரும் த‌ம‌து முதிய‌ ப‌ருவ‌த்தின் நிமித்த‌ம் இந்தியாவுக்கு மீள‌வும் செல்கின்ற‌ன‌ர். நீண்ட‌ நெடும் வ‌ருட‌ங்க‌ளுக்கு பின், அக்காவிற்கு ஒரு குழ‌ந்தை பிற‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில், தொலைந்துபோயிருந்த‌ த‌ம்பியிட‌மிருந்து ஒரு க‌டித‌ம் வ‌ருகின்ற‌து. மீண்டும் அக்கா‍ த‌ம்பி உற‌வு புதிப்பிக்க‌ப்ப‌ட்டு, அக்கா த‌ன‌து குழ‌ந்தையைப் பார்க்க‌ இல‌ண்ட‌னுக்கு வ‌ர‌ச்சொல்கின்றார். இங்கிலாந்து வ‌ரும் த‌ம்பி, தான் த‌ற்போது ஏற்க‌ன‌வே ச‌ம்ம‌த‌ம் கேட்ட‌ பெண்ணோடும் அவ‌ர‌து குழ‌ந்தையோடும் சேர்ந்து வாழ்வ‌தாக‌வும், அப்பெண்ணின் உத‌வியால் தான் குடிப்ப‌ழ‌க்க‌த்திலிருந்து வெளியே வ‌ந்துவிட்டேன் எனவும் சொல்கின்றார். அக்காவின் குழ‌ந்தை மீது மிகுந்த‌ பிரிய‌த்துட‌ன் த‌ம்பியிருக்கின்றார். 

இர‌வுண‌வின்போது அக்காவும் க‌ண‌வ‌ரும் வைன் அருந்தும்போது கூட‌ தான் குடிப்ப‌ழ‌க்க‌த்திலிருந்து விடுப‌ட்ட‌தால் எதையும் குடிப்ப‌தில்லையென‌ வைன் குடிப்ப‌தைக்கூட‌ ம‌றுக்கின்றார். த‌ங்கி நிற்கும் இர‌ண்டு வார‌ங்க‌ள் கிட்ட‌த்த‌ட்ட‌ முடிகின்ற‌போது, தான் குழ‌ந்தையை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்கின்றேனெனக் கூறி, த‌ம‌க்கையையும், க‌ண‌வ‌ரையும் வெளியே போய் த‌னியே நேர‌ததைச் செல‌விட‌ச் சொல்கின்றார் த‌ம்பி. த‌ம‌க்கையும், அவ‌ர‌து க‌ண‌வ‌ரும் வெளியே போய் தியேட்ட‌ரில் ப‌ட‌மும் பார்த்துவிட்டு உண‌வும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது த‌ங்க‌ள‌து குழ‌ந்தை குளிக்கும் tubல் த‌னித்து விளையாடிக்கொண்டிருப்ப‌தைப் பார்த்துத் திகைக்கின்ற‌ன‌ர் . த‌ம்பி எங்கேயென‌த் தேடும்போது வீட்டிலிருந்த‌ ம‌து முழுவ‌தையும் குடித்துவிட்டு சுய‌நினைவு இல்லாது த‌ம்பி தூங்கிப் போயிருப்ப‌தைக் காண்கின்ற‌ன‌ர். மிக‌வும் கோப‌ங்கொள்ளும் த‌ம‌க்கையும் க‌ண‌வ‌ரும் த‌ம்பியை அடுத்த‌நாளே வீட்டைவிட்டுப் போகச் சொல்கின்ற‌ன‌ர். இறுதியில் இதுவ‌ரைகால‌மும் எவ‌ருக்குஞ் சொல்லாது ம‌றைத்து வைத்திருந்த‌ ‍-த‌ன்னாலேயே மிக‌ இள‌வ‌ய‌திலிருந்து த‌ம்பி குடிக்க‌ப்ப‌ழ‌கினார்- என்ற‌ உண்மையைக் குற்ற‌வுண‌ர்வோடு த‌ம‌க்கை த‌ன‌து க‌ண‌வ‌ருக்குச் சொல்ல‌த் தொட‌ங்குகின்றார்.


'ஹேமாவும் கெள‌சிக்கும்' என்ற‌ நெடுங்க‌தை மூன்று ப‌குதிக‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. முதலாம் ப‌குதி ஹேமாவால் சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌வும், இர‌ண்டாம் ப‌குதி கெள்சிக்கால் சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌வும், மூன்றாம் ப‌குதி மூன்றாம் ம‌னித‌ரான‌ க‌தை சொல்லியால் கூற‌ப்ப‌டுவ‌தாக‌வும் எழுத‌ப்ப‌ட்டுள்ளது. ஹேமாவின‌தும், கெள்சிக்கின‌தும் குடும்ப‌ங்க‌ள் கேம்பிரிஜிட்டில் அருக‌ருகில் வ‌சிக்கின்ற‌ன‌ர். ஹேமா பிற‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளில் கெள‌சிக்கின‌து குடும்ப‌ம் ப‌ம்பாயிற்கு திரும்பிச் செல்கின்ற‌து. ஹேமா ப‌தின்ம‌வ‌ய‌திலிருக்கும்போது மீண்டும் கெள‌சிக்கின் குடும்ப‌ம் மாஸ‌சூட்டிற்குப் பம்பாயிலிருந்து புல‌ம்பெய‌ர்கின்றன‌ர். ஒழுங்கான‌ ஒரு வீடு வாங்கும்வ‌ரை ஹேமாவின் வீட்டிலேயே கெள‌சிக்கின் குடும்ப‌ம் த‌ங்குகின்ற‌து. ஹேமா இப்போது ப‌தின்ம‌ங்க‌ளில் இருக்கின்றார். கெள‌சிக்கின் மீது ஈர்ப்பிருந்தாலும், கெள‌சிக் ஒதுங்கிப் போகும் மிகுந்த‌ அமைதியான‌ சுபாவ‌மான‌வ‌ராய் இருக்கிறார். கெள‌சிக்கின் பெற்றோரால் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு உண்மை கெள‌சிக்கால் ஹேமாவிற்குச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. கெள‌சிக்கின் தாயார் புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்டு வாழ்வின் க‌டைசிக்க‌ட்ட‌த்தில் இருக்கிறார். வாழ்நாட்க‌ளைத் த‌ள்ளிப்போடும் மேல‌திக‌ சிகிச்சைக்காக‌வே கெள‌சிக்கின் குடும்ப‌ம் அமெரிக்காவிற்கு இட‌ம்பெய‌ர்ந்திருக்கின்ற‌து. கெள‌சிக்கின் குடும்ப‌ம் வேறு இட‌ம் எடுத்துப்போய், அங்கே அவ‌ரின் தாயாரும் இற‌ந்துபோக‌, கெள்சிக் ‍ஹேமாவிற்கு இடையிலான‌ தொட‌ர்புக‌ள் அறுப‌டுகின்ற‌ன‌.


இர‌ண்டாம் ப‌குதியில் கெள‌சிக் க‌தை சொல்கின்றார். கெள்சிக் வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருக்கும்போது க‌ல்க‌த்தா சென்ற‌ த‌க‌ப்ப‌ன், தான் ம‌றும‌ண‌ம் செய்ய‌விருப்ப‌தைத் தெரிவிக்கின்றார். பிற‌கான‌ சில‌ மாத‌ங்க‌ளில், கெள்சிக்கின் த‌ந்தை த‌ன‌து புது ம‌னைவியையும் ‍‍அப்பெண்ணிற்கு முத‌ற் திரும‌ண‌த்தில் பிற‌ந்த‌ இர‌ண்டு ம‌க‌ள்க‌ளையும் அமெரிக்காவிற்குக் கூட்டிவ‌ருகின்றார்.. அச்சிறுமிக‌ளைத் த‌ன‌து த‌ங்கைக‌ளாக‌ ஏற்றுக்கொள்ளும் கெள‌சிக், பிற‌கு த‌ன‌து வீட்டில் த‌ன் வெளி புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளால் அப‌க‌ரிக்க‌ப்ப‌டுவ‌தாய் நினைத்து வீட்டை விட்டு ஓடிவிடுகின்றார் (புற‌ப்ப‌டுகின்றார்). பிற‌கு வ‌ளாக‌ ப‌ட்ட‌ம‌ளிப்பின்போதுதான் த‌ந்தையைச ச‌ந்திக்கின்றார். ப‌ட்ட‌த்தின் பிற‌கு என்ன‌ செய்வ‌து என்று குழ‌ம்பி தென்ன‌ம‌ரிக்காவை ந‌ண்ப‌ரொருவ‌ருட‌ன் சுற்றிப்பார்க்க‌ப்புற‌ப்ப‌டுகின்றார். பிற‌கான‌ நாட்க‌ளில் புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தில் ஆர்வ‌முள்ள‌ கெள‌சிக் சுயாதீன‌ப் புகைப்ப‌ட‌க்காராய் வேலை செய்ய‌த்தொட‌ங்கி, போர் ந‌ட‌க்கும் முக்கிய‌ முனைக‌ளுக்குப் போய் ப‌ட‌ங்க‌ளை எடுத்து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌த்தொட‌ங்குகின்றார்.. இவ்வேலையான‌து ஓரிட‌த்தில் நிர‌ந்த‌ர‌மாயில்லாத‌தால் தென்ன‌ம‌ரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா, ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் என‌ மாறி மாறி இட‌ங்க‌ளை கெள‌சிக்கிற்கு மாற்ற‌வேண்டியிய‌தாயிருக்கின்ற‌து. யாசீர் அர‌பாத்தின் ம‌ர‌ண‌த்தை ப‌ட‌மெடுக்க‌ வ‌ந்து அய்ரோப்பா ந‌க‌ரொன்றில் த‌ங்கிய‌ பிற‌கான‌ கால‌த்தில்தான் கெள‌சிக் ஹேமாவைச் ச‌ந்திக்கின்றார்


மூன்றாம் பகுதியில் கதை ஆரம்பிக்கும்போது ஹேமா கலாநிதிப் பட்டத்திற்கு ஆய்வு செய்கின்றவராய் வளர்நது விடுகின்றார். ஹேமாவின் பெற்றோர் வ‌ங்காள‌ம் போய்விடுகின்ற‌ன‌ர்; ஹேமாவுக்கும் 35 வ‌ய‌தைத் தாண்டிவிடுகின்ற‌து. பெற்றோர் ம‌க‌ள் ப‌டிப்பு ஆய்வு ச‌ம்ப‌ந்த‌மாய் திரும‌ண‌ம் குறித்து யோசிக்க‌வில்லை என‌ நினைக்கின்ற‌ன‌ர். ஆனால் ஹேமாவிற்கு இன்னொரு ம‌ண‌மான‌ வெள்ளைக்கார‌ பேராசிரிய‌ருட‌ன் உற‌விருக்கின்ற‌து. த‌ன‌க்காக‌ அவ‌ர் த‌ன‌து குடும்ப‌த்தை விட்டுவருவார் என்று ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாய் எதிர்பார்க்கும் ஹேமா, யதார்த்தத்தில் அது நிகழாதெனத் தெரிந்து இறுதியில் பெற்றோரின் பேசித் தீர்மானித்த‌ திரும‌ண‌த்துக்குச் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். ந‌வீன் என்ற‌ பொறியிய‌ல்துறை பேராசிரிய‌ருட‌ன் விரைவில் க‌ல்க‌த்தாவில் திரும‌ண‌ம் ந‌ட‌ந்து ஹேமா நவீனுடன் அமெரிக்காவிற்கு குடிபெய‌ர‌ இருக்கின்றார். ஒரு விடுமுறைக்காய் இத்தாலிக்குப் போகும் ஹேமா, த‌ற்செய‌லாக‌ கெள‌சிக்கைச் ச‌ந்திக்கின்றன‌ர். கெள‌சிக் ஹொங்கொங்கில் ஒரு ச‌ர்வ‌தேச‌ப் ப‌த்திரிகையில் ஆசிரிய‌ர் பொறுப்பை ஏற்ப‌த‌ற்கு அய்ரோப்பாவிலிருந்து த‌ன‌து வ‌சிப்பிட‌த்தைக் காலிசெய்துவிட்டுப் போக‌ கெளசிக் ஆய‌த்த‌மாகின்றார். ஹேமாவுக்கும் கெளசிக்கும் உட‌ல்சார்ந்த‌ உற‌வு முகிழ்கின்ற‌து. இறுதியில் த‌ன்னோடு ஹொங்கொங்கிற்கு வ‌ந்துவிடும்ப‌டி கெள‌சிக் கேட்ப‌தை ஹேமா ம‌றுக்கின்றார். வேலையில் சேர‌முன்ன‌ர் கெள‌சிக் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றார். கிறிஸ்ம‌ஸ் கால‌த்தில் ஹேமாவுக்கும் ந‌வீனுக்கும் திரும‌ண‌ம் ந‌டைபெற‌ கெள்சிக் தாய்லாந்துக் க‌ட‌ற்க‌ரையில் ஹேமா இல்லாத் துய‌ர‌த்தில் பொழுதைக் க‌ழிக்கிறார். கிறிஸ்ம‌ஸ் தின‌த்தில் வ‌ந்த‌ ட்சுனாமியில் கெள்சிக் பரிதாபமாக இற‌ந்துபோகின்றார். திரும‌ண‌ம் முடித்து அமெரிக்க‌ வ‌ரும் ஹேமாவிட‌ம் -கெள்சிக்கையும், ஹேமாவையும்- அறிந்த‌ ந‌ண்ப‌ர் கெள்சிக்கின் ம‌ர‌ண‌ங்குறித்த‌ சிறுசெய்தி நியூயோர்க் ரைமிஸில் வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். எந்த‌ அடையாள‌மின்றி கெள‌சிக் -ஹேமாவின் வாழ்விலிருந்தும்- எல்லோரின‌து வாழ்விலிருந்தும் அடித்துச் செல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார். உள‌மும் உட‌லும் கெள்சிக்கோடு ப‌கிர்ந்து ஹேமா நினைவுக‌ளைத் த‌ன‌க்குள் புதைத்துவிட்டு இன்னொரு வாழ்க்கைக்கு த‌யாராவ‌தோடு க‌தை நிறைவுபெறுகின்ற‌து.


ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் புல‌ம்பெய‌ர்வில் ஒரு ப‌க்க‌த்தை ‍ஒருவ‌கை எல்லைக்குள் நின்று சொல்கின்ற‌ன‌.அதேபோன்று புல‌ம்பெய‌ர்வின் பாதிப்புக்க‌ள்/ப்ய‌ன்க‌ள்/சிதைவுக‌ள்/மீள்எழுத‌ல்க‌ள் குறித்து Edwidge Danticat (Brother, I'm dying, Behind the Mountains), M.G.Vassanji (No New Land, The In-Between World of Vikram Lall) போன்ற‌வ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ள் மிக‌ விரிவாக‌ப் பேசுகின்ற‌ன‌. வித்தியாச‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌லும் அங்கீக‌ரித்த‌லும் என்ற‌வ‌கையில் மேற்கூற‌ப்ப‌ட்ட‌ வித்தியாச‌மான‌ ப‌டைப்புக்க‌ள்/ப‌டைப்பாளிக‌ள் த‌ம‌க்கிடையிலான‌ ஊடாட்ட‌ங்க‌ளையும் இணைவுக‌ளையும் அறிந்துகொண்டு மேலே செல்ல‌ முய‌ற்சிப்பார்க‌ள் என்றே தோன்றுகின்ற‌து. ஜூம்பா ல‌கிரியின் இத்தொகுப்பிலுள்ள‌ அநேக‌ க‌தைக‌ளில் பிரித‌லும், சேர்த‌லும் (அநேக‌மாய் திரும‌ண‌ங்க‌ள்) நிறைய‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. எல்லாக் க‌தைக‌ளிலும் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளோ அல்ல‌து துணைப்பாத்திரங்க‌ளோ வெள்ளையின‌த்த‌வ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்துகொள்கின்ற‌ன. ஆனால் அதேச‌ம‌ய‌ம் அவ்வாறான‌ க‌ல‌ப்புக் க‌லாசார‌த்தில் எழும் சிக்க‌ல்க‌ள் ப‌ற்றி அதிக‌ம் பேச‌ப்ப‌டாத‌து மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌மாய் ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ளில் இருக்கின்றன‌. முக்கிய‌மாய் தென்கிழ‌க்காசியா ச‌மூக‌த்திலிருந்து வ‌ரும்/வ‌ள‌ரும் த‌லைமுறையின‌ருக்கு எவ்வாறு க‌லாசார‌ம்/ப‌ணபாடுக‌ள் திணிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் ந‌ன‌கு அறிவோம். என‌வே த‌ம்ம‌ளவில் ஒரு பாத்திர‌ம் இன்னொரு க‌லாசார‌த்தில் துணையைத் தேர்நதெடுக்கும்போது மிக‌ப்பெரும் ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்தே ஆக‌வேண்டியிருக்கின்ற‌து. அவ்வாறான‌ ப‌க்க‌ங்கள் இத்தொகுப்பிலுள்ள‌ க‌தைக‌ளில் த‌வ‌ற‌விட‌ப்பட்டிருக்கின்ற‌ன‌ அல்ல‌து இல‌குவாய் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. அதேபோன்று இன்னொரு க‌லாசார‌த்திலிருந்து வ‌ரும் துணைக‌ள் தென்னாசியாக‌ க‌லாசார‌ங்க‌ளை எப்ப‌டி எதிர்கொள்கின்ற‌ன‌ர்/ஏற்றுக்கொள்கின்றன‌ர் என்ப‌து குறித்த‌ புள்ளிக‌ளும் ம‌வுன‌மாக்க‌வேப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறான‌ கேள்விக‌ள் ஏன் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌து என்றால், ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் அனைத்திலும் (அவ‌ரது ஒரே நாவ‌லான‌ The Namesakeல் கூட‌) வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளை துணையாக‌க் கொண்ட‌ பாத்திர‌ங்க‌ள் அள‌வுக்கு மீறி வ‌ருகின்ற‌ன‌. சில‌வேளைக‌ளில் இந்தியாவிலிருந்த‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாம்/மூன்றாம் த‌லைமுறையைச் சேர்ந்த‌ வ‌ங்காளிக‌ளிடையே இதொரு இய‌ல்பான‌ வ‌ழ‌க்காய் இருக்க‌க்கூடுமோ என்ன‌வோ தெரிய‌வில்லை.


இவ்வாறான‌ கேள்விக‌ளைத் த‌விர்த்துவிட்டுப்பார்த்தால், ஜும்பா ல‌கிரியின் பாத்திர‌ங்க‌ள் ப‌ல‌ கீழைத்தேய‌ ந‌ம்பிக்கைக‌ளை மிக‌ எளிதாக‌ உடைத்துவிட்டு ந‌க‌ர்ந்துவிடுகின்ற‌ன‌. முக்கிய‌மாய் திரும‌ண‌த்துக்கு முன்பான‌ உட‌ல் சார்ந்து எழும் உற‌வுக‌ள‌ குறித்து எந்த‌ப்பாத்திர‌மும் அள‌வுக்கு மீறிக் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை; இய‌ல்பான‌ போக்கில் அதை ஏற்றுக்கொண்ட‌ப‌டி ந‌க‌ர்ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. மேலும் அநேக‌ பாத்திர‌ங்க‌ள் ப‌தின்ம‌ங்க‌ளைத் தாண்டிய‌வுட‌ன், த‌ம்ம‌ள‌வில் வீழ்ந்தும்/எழுந்தும் த‌ம‌க்கான‌ தனிப்ப‌ண்புக‌ளை ‍ -பெற்றோரின் த‌ய‌வில் அல்லாது- தாங்க‌ளாக‌வே வ‌ள‌ர்த்துவிடுகின்ற‌ன‌. இம்மாற்ற‌மான‌து புல‌ம்பெய‌ர்ந்த‌ முத‌ற்த‌லைமுறைக்கு மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்தாலும், புலம்பெய‌ர்ந்த‌ மேற்குச்சூழ‌ல் இதை எளிதாக‌க் க‌ற்றுக்கொடுத்துவிடுகின்ற‌து என்ப‌தே ய‌தார்த்த‌மாகும். இத்தொகுப்பிலுள்ள‌ பெரும்பாலான‌ க‌தைக‌ள் நியூயோர்க்க‌ரில் வ‌ந்திருந்த‌ன‌ என்றாலும் வாசிக்க‌ ஒர‌ள‌வு சுவார‌சிய‌மாய் இருக்கும் ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் ஒரேவ‌ட்ட‌த்தில் சுழ‌லாம‌ல் மேலும் த‌ன‌து எல்லைக‌ளை நீட்டிக்கும்போது இன்னும் ப‌ல‌ உச்ச‌ங்க‌ளை எட்ட‌க்கூடும்.


(Grace Shureக்கு...)