கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஜும்பா ல‌கிரியின் Unaccustomed Earth

Friday, November 07, 2008

-வாழ்வின் ம‌டிப்புக்க‌ளும் க‌த‌க‌த‌ப்பாய்த் துயில‌ முய‌லும் ம‌ன‌ங்க‌ளும்-

புல‌ம்பெய‌ர்வு என்ப‌து ஆதிகால‌த்திலிருந்தே நிக‌ழ்ந்து வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌வேறு காரண‌ங்க‌ளால் புல‌ம்பெய‌ர்வு நிக‌ழ்ந்தாலும், போரும் பொருளாதார‌ நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ண‌ங்க‌ளாக‌ப் புல‌ம்பெய‌ர்வில் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. மேற்குல‌கில் அந்நிய‌ர்க‌ளாக‌ (outsiders) வாழும் அவ‌ல‌ங்க‌ளை எட்வேர்ட் சைய‌து (Out of Place: A Memoir) போன்ற‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை, வி.எஸ். நைபால், ச‌ல்மான் ருஷ்டி, எம்.ஜி.வ‌ஸாஞ்ஜி போன்ற‌வ‌ர்க‌ளின் புதின‌ங்க‌ளும் பேசியிருக்கின்ற‌ன‌. அநேக‌ பொருளாதார‌ அக‌திக‌ளுக்கு, எப்போது திரும்பிப் போனாலும் ஒரு நாடும் ஒரு ஊரும் ஒரு வீடும் இருப்ப‌துபோல‌, போரின் ச‌ம்ப‌ந்த‌மான‌/உயிர் அச்சுறுத்த‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு -அவ்வாறான‌ க‌டைசி ந‌ம்பிக்கை- வாய்ப்ப‌தில்லை. ச‌ல்மான் ருஷ்டி, த‌ஸ்லிமா ந‌ஸ்ரின் போன்ற‌வ‌ர்க‌ள் இர‌ண்டாம் வ‌கையின‌ர். ஜும்பா ல‌கிரி முத‌லாம் வ‌கையைச் சேர்ந்த‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாது, புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ரும் கூட‌. என‌வே ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ளில் புல‌ம்பெய‌ர்ந்த‌ இரண்டாம் த‌லைமுறையின‌ரின் பார்வை அதீத‌மாய் இருப்ப‌தும் இய‌ல்பான‌தே.


அண்மையில் வெளியான‌ ஜும்பா ல‌கிரியின் Unaccustomed Earth சிறு/குறுங்க‌தைக‌ளின் ஒரு தொகுப்பாகும். புல‌ம்பெய‌ர்ந்த‌ முத‌லாம்/இர‌ண்டாந் த‌லைமுறையின‌ரே முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாகின்ற‌ன‌ர். ஜும்பா ல‌கிரியின் க‌தைக‌ளில் இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு ம‌ட்டுமில்லை முத‌லாந்த‌லைமுறைக்குக் கூட‌, புல‌ம்பெய‌ரும் புதிய‌ சூழ‌ல் -போரால‌ அடித்துத் துர‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைப் போல‌- பெரும் த‌த்த‌ளிப்புக்க‌ளையோ, அல்ல‌ல்க‌ளையோ த‌ருவ‌தில்லை. மிக‌ எளிதாக‌வே புல‌ம்பெய‌ர் அமெரிக்க‌/அய்ரோப்பிய வாழ்வுக்கு, ஜும்பா ல‌கிரியின் க‌தாபாத்திர‌ங்க‌ள‌ த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக் கொண்டுவிடுகின்ற‌ன‌ர். பொருளாதார‌ஞ் சார்ந்த‌ இட‌ம்பெய‌ர்வு என்ப‌தால் இத்தொகுப்பிலுள்ள‌ அநேக‌ பாத்திர‌ங்க‌ள் ச‌மூக‌த்தில் 'ம‌திக்க‌ப்ப‌டும்' தொழில்க‌ளையே (வைத்திய‌ர்க‌ளாக‌/பொறியிய‌லாள‌ர்க‌ளாக‌/ பேராசிரிய‌ர்க‌ளாக) செய்கின்ற‌ன‌ர். மேலும் இத்தொகுப்பில் இந்தியாவின் உய‌ர்த‌ர‌ அல்ல‌து ம‌த்திய‌ உய‌ர்த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் ம‌ட்டுமே தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். அதொரு பிர‌ச்சினையில்லை, ஆனால் ஒரே மாதிரியான‌ ம‌னித‌ர்க‌ளும் ஒரே வ‌கையான‌ சூழ‌ல்க‌ளும் தொட‌ர்ச்சியாக‌ ப்ல‌வேறு க‌தைக‌ளில் வ‌ரும்போது வாசிக்கும்போது அலுப்பு வ‌ருவ‌தைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை. எல்லாக் க‌தைக‌ளும் ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌, இனி மொழியின் விளையாட்டு இல்லாது புதுவ‌கைப் ப‌டைப்புக்க‌ள் சாத்திய‌மில்லை என்ப‌து உண்மைதானோ என்று எண்ணும்ப‌டி ஜும்பா ல‌கிரியின் இத்தொகுப்பிலுள்ள‌ லினிய‌ர் வ‌கை எழுத்துக்க‌ளை வாசிக்கும்போது அடிக்க‌டி தோன்ற‌த்தான் செய்கின்ற‌து.

தொகுப்பிலிருக்கும் முத‌லாவ‌து க‌தையான‌ Unaccustomed Earth, அப்பா-ம‌க‌ள் உற‌வு ப‌ற்றி உரையாட‌ முய‌ல்கின்ற‌து. இர‌ண்டாவ‌து பிள்ளை க‌ருவிலிருக்கும் ரூபாவும், ம‌னைவியை இழ‌ந்த‌ த‌ந்தையுமே முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாகின்ற‌ன‌ர். பென்சில்வேனியாவில் த‌னியே இருக்கும்/அய்ரோப்பா ந‌க‌ரங்க‌ளுக்கும் அடிக்க‌டி சுற்றுலா செல்லும் ரூபாவின் த‌ந்தையார், ரூபாவும் அவ‌ர‌து க‌ண‌வ‌ரும் சிய‌ட்டிலில் வாங்கியிருக்கும் புது வீட்டுக்கு வ‌ருகின்றார். தாயாரைப் போல‌ த‌ன் த‌ந்தை பெரிதாக‌ த‌ன‌க்கு உத‌வ‌ப்போவ‌தில்லையென்று தெரிந்திருந்தாலும் த‌ன‌து வ‌சதிக்கும் த‌ந்தையின் ச‌வுக‌ரிய‌த்திற்குமாய் த‌ந்தையைத் த‌ன‌து வீட்டிலேயே ரூபா த‌ங்க‌ வைக்க‌ முய‌ற்சி செய்கின்றார். சிறுவ‌ய‌தில் தானும் த‌ம்பியும் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ உட‌னிருந்து எல்லாவ‌ற்றையும் தாயார் செய்துகொண்டிருக்க‌, த‌ந்தையார் தானும் த‌ன‌து வேலையுமாக‌ த‌ங்க‌ளைவிட்டு வில‌கிப்போன‌து ரூபாவிற்கு இத்த‌ருண‌த்தில் ப‌ய‌முறுத்துகின்ற‌து. முத‌லில் உட‌ன்ப‌டாவிட்டாலும் வ‌ங்காளியான‌ ரூபா, அமெரிக்க‌ வெள்ளையின‌த்த‌வ‌ர் ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்ய‌ விரும்பும்போது பெற்றோர் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். த‌ன‌து ம‌க‌ள் -குழ‌ந்தைக‌ளின் நிமித்த‌ம்- வேலைக்குப் போகாது வீட்டிலிருப்ப‌தைப் பார்க்கும் ரூபாவின் த‌ந்தை 'இப்ப‌டியே இருப்ப‌து உன‌து எதிர்கால‌ வாழ்வுக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌' என்று எச்ச‌ரிக்கை செய்கின்றார். இப்ப‌டித்தான் த‌‌ன‌து ம‌க‌ள் இருக்க‌ப்போகின்றார் என்றால் அவ‌ர் க‌ல்க‌த்தாவிலேயே யாராவ‌து வ‌ங்காளியைத் திரும‌ண‌ஞ்செய்துவிட்டு இருந்திருக்கலாம் என்று த‌ந்தை நினைக்கின்றார். அப்பாவிற்கும் ம‌க‌ளுக்குமான‌ இடைவெளியை ரூபாவின் முத‌ல் ம‌க‌ன் குறைக்கின்றான். பேர‌ன்மீது ப‌ற்று வைக்கும் த‌ன‌து த‌ந்தையார் இனித் த‌ன்னோடு நிர‌ந்த‌ர‌மாக‌த் த‌ங்கிவிடுவார் என்று நினைக்கும்போது த‌ந்தையார் அப்ப‌டியிருக்க‌ த‌ன‌க்கு விருப்ப‌மில்லையென‌ ரூபாவின் வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுகின்றார். அவ‌ர் அவ்வாறு ம‌க‌ளோடு இருக்க‌ விரும்பாத‌த‌ற்கு த‌ந்தை - ம‌க‌ள் இடைவெளி ம‌ட்டுமில்லை,த‌ன‌து தாய் இற‌ந்த‌பின் த‌ந்தையின் வெளிநாட்டு சுற்றுலாக்க‌ளில் அவ‌ருக்கு முகிழ்ந்த‌ இன்னொரு பெண்ணின் உற‌வும் ஒருகார‌ண‌ம் என்ப‌தை ‍ -ஒரு உரிய‌முறையில் சேர்க்க‌ப்ப‌டாத‌ த்பால‌ட்டையில்- மூல‌ம் ரூபா இறுதியில் க‌ண்டுகொள்கின்றார்.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ Hell - Heaven, அமெரிக்காவில் குடிபெய‌ர்ந்திருக்கும் ஒரு குடும்ப‌த்திற்குள் ந‌ட்பாக‌ நுழையும் ஒரு இளைஞ‌னைப் பின் தொட‌ர்ந்து செல்கின்ற‌து. க‌தை முழுவ‌தும் அக்குடும்ப‌ததில் அவ்விளைஞ‌ன் நுழையும்போது சிறுமியாக‌ இருக்கும் ஒருவ‌ரால் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. ஹார்வாட்டுக்குப் ப‌டிக்க‌ வ‌ரும் பிர‌ணாப் -ஓரே ஊர் என்ற‌ப‌டியால்- இக்குடும்ப‌த்தோடு இன்னும் நெருக்க‌மாகின்றான். அப‌ர்ணாவின் குடும்ப‌மும் வேறு எந்த‌ வ‌ங்காளிக்குடும்ப‌மும் அருகில்லாத‌தால் அவ‌னை அர‌வ‌ண‌த்துக் கொள்கின்ற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ அவ‌ன‌து வ‌ய‌திலிருக்கும் திரும‌ண‌மான‌ அப‌ர்ணாவிற்கு ம‌ணமாகி குடும்ப‌ அமைப்பு த‌ருகின்ற‌ அச‌தியில் பிர‌ணாப் மீது ஒரு ஈர்ப்பு உருவாகின்ற‌து; இவ்வாறு ப‌ர‌வ‌ச‌ததை த‌ந்துகொண்டிருக்கும் அவ்விளைஞ‌ன் ஒரு வெள்ளைக்கார‌ப் பெண்ம‌ணியைத்(டெபுரா) திரும‌ண‌ம் செய்ய‌ப்போகின்றான் என்கின்ற‌போது அப‌ர்ணா மிகுந்த‌ அவ‌திக்குள்ளாகின்றார்.. அத்திரும‌ண‌த்தை ம‌ன‌த்த‌ளவில் ஏற்றுக்கொள்ள‌ ம‌றுத்து ஒருமுறை எண்ணெய்யை ஊற்றி த‌ற்கொலை செய்யும் எண்ணத்திற்கு அருகில் சென்று அப‌ர்ணா த‌ப்பியுமிருக்கின்றார் என்ப‌து பின்ன‌ர் தெரிகின்ற‌து. மிகுந்த‌ பொருளாதார‌ வ‌ச‌தியிருக்கும் பிர‌ணாப் த‌ன‌து திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌ சில‌வ‌ருட‌ங்க‌ளில் டெபுராவை விட்டுவிட்டு வேறு ஒரு வ‌ங்காளிப் பெண்ணைத் திரும‌ண‌ஞ்செய்துகொள்கின்றார். பிர‌ணாப் டெபுராவை கைவிட்டு இன்னொரு திருமணம் செய்யும்போது, டெபுரா அப‌ர்ணாவோடு நெருக்க‌மாகின்றார். இப்பிரிவின் நிமித்த‌ம் க‌வ‌லைப்ப‌டும் டெபுராவை அப‌ர்ணா ஆறுத‌ற்ப‌டுத்தும்போது, டெபுரா தான் பிர‌ணாப்பை திரும‌ண‌ஞ்செய்த‌போது, த‌ன‌க்கு பிர‌ணாப் அப‌ர்ணாவுட‌ன் நெருக்க‌மாக‌ப் ப‌ழ‌குவ‌து குறித்து பொறாமை இருந்த‌து என்று தெரிவிக்கின்றார். எனினும் அப‌ர்ணா த‌ன‌க்கு பிர‌ணாப்வோடு இருந்த‌ அதீத‌ ஈர்ப்பு ப‌ற்றி டெபுராவிட‌ம் வெளிப்ப‌டையாக‌ ஒப்புக்கொள்ள‌வில்லை. பிர‌ணாப் டெபுராவைத் திரும‌ண‌ஞ்செய்த‌போது த‌ற்கொலை செய்ய‌ முய‌ற்சித்த‌துப‌ற்றிக்கூட‌ எவ‌ருக்குமே சொல்ல‌வில்லையென்கின்றார். இவ்வ‌ள‌வு க‌தையையும், அப‌ர்ணாவின் ம‌க‌ள் த‌ன‌து காத‌ல் வாழ்வு க‌ருகிவிட்ட‌தே என்று ம‌ன‌மொடிந்து வ‌ருத்த‌ப்ப‌டும்போதே அப‌ர்ணா இப்ப‌டி வெளிப்ப‌டையாக‌ த‌ன‌து க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றி ம‌க‌ளிட‌ம் ம‌ன‌ந்திற‌ந்து பேச‌த்தொட‌ங்குகின்றார்


மூன்றாவ‌து க‌தையான‌ A choice of Accommodation மிக‌ச்சாதார‌ண‌ ஒரு க‌தை. த‌ம‌து இர‌ண்டு குழ‌ந்தைக‌ளை பெற்றோரின் ப‌ராம‌ரிப்பில் விட்டுவிட்டு த‌ம‌க்கான‌ த‌னித்த‌ நேர‌த்தைக் க‌ழிக்க‌வென‌ -ஒரு ப்ழைய‌ க‌ல்லூரித்தோழியின் திரும‌ண‌த்துக்கு- இன்னொரு ந‌க‌ருக்கு ஒரு த‌ம்ப‌தியின‌ர் புற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். திரும‌ண‌த்தின்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து... அவ‌ர்க‌ள் தாம் திட்ட‌மிட்ட‌ த‌னித்த‌ நேர‌த்தைத் த‌ங்க‌ளுக்காய் ‍குற்ற‌வுண‌ர்வில்லாது‍ செல‌விட்டார்க‌ளா என்ப‌து ப‌ற்றி அக்கதை நீளும்.


நான்காவ‌து க‌தையான‌ Only Goodness, அக்கா ‍ த‌ம்பிக்கு இடையிலான‌ உற‌வு ப‌ற்றிப் பேசுகிற‌து. ப‌டிப்பில் மிக‌த்திற‌மையான‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் இருவ‌ரும் பல‌க‌லைக் க‌ழ‌க‌த்திற்குச் செல்லும்போது இர‌ண்டு வித்தியாச‌மான‌ வாழ்வைத் தெரிவு செய்கின்றார்க‌ள். அக்கா ப‌டித்துப்ப‌ட்ட‌ம்பெற‌ த‌ம்பி மிதமிஞ்சிய‌ குடிப்ப‌ழ‌க‌த்தால் வ‌ளாக‌ப் ப‌டிப்பை இடைநிறுத்துகின்றார். .த‌ம்பியின் குடிப்ப‌ழ‌க்க‌ம் த‌ன்னால் ஏற்ப‌ட்ட‌து என்ற் குற்ற‌வுண‌ர்வு த‌ம‌க்கைக்கு ஏற்ப‌டுகின்ற‌து. எனெனில் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது த‌ம்பி ப‌தின்ம‌வ‌ய‌திலிருக்கும்போதே அக்கா தான் குடிக்கும்போது ஒரு துணையாய்த் த‌ம்பிக்கும் குடிக்க‌ப் ப‌ழ‌க்கியிருந்தார். ஒழுங்கான‌ வேலையில்லாது பெற்றோருட‌ன் த‌ங்கியிருந்த‌ த‌ம்பி, ஒரு கிறிஸ்ம‌ஸ் விடுமுறையின்போது, த‌ன்னைவிட‌ மூத்த‌ -ஒரு குழ‌ந்தையுள்ள‌ விவாக‌ரத்தான‌- அமெரிக்க‌ப்பெண்ணைத் திரும‌ண‌ஞ்செய்ய‌போகின்றேன் என்கின்றார். குடும்ப‌ம் ம‌றுக்கின்ற‌து. இத‌ற்கிடை யில் அக்கா இர‌ண்டாவ‌து ப‌ட்ட‌த்திற்காய் இங்கிலாந்து சென்று ப‌டிக்க‌ப்போகும்போது அங்கே ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தான் -15 வ‌ய‌து வித்தியாச‌முள்ள‌‍- க‌லையில் நாட்ட‌முள்ள‌ ஒருவ‌ரோடு உற‌வு முகிழ்ந்து அவ‌ரைத் திரும‌ண‌ஞ் செய்ய‌விரும்பும்போது பெற்றோர் அக்க‌லைஞ‌னின் அந்த‌ஸ்துக‌ண்டு திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். திரும‌ண‌ம் அமெரிக்காவில் ந‌டைபெறும்போது த‌ம்பிக்கும்-தக‌ப்ப‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டிருக்கும் விரிச‌ல், த‌ம்பி கூட‌க்குடித்துவிட்டு க‌தைக்கும்போது விருந்துக்கு வ‌ந்திருக்கும் அனைவ‌ருக்குந் தெரிகின்ற‌து. அக்கா த‌ன‌து திரும‌ண‌த்தை வேறு திசைக்கு அழைத்துவிட்டுச் சென்றுவிட்டான் என்று த‌ம்பியோடு கோபிக்கின்றார். த‌ப்பி அத்தோடு வீட்டை விட்டு ஓடிப்போய், எங்கே த‌ங்கியிருக்கின்றார் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றார் என்ற‌ எந்த‌ செய்தியுமில்லாது த‌லைம‌றைவாகிவிடுகின்றார். பெற்றோரும் த‌ம‌க்கையும் நாள‌டைவில் த‌ம்பியை ம‌ற‌க்க‌த் தொட‌ங்கிவிடுகின்ற‌ன‌ர். த‌ம‌க்கை இல‌ண்ட‌னில் நிர‌ந்த‌ர‌மாக‌ த‌ங்கிவிட‌, பெற்றோரும் த‌ம‌து முதிய‌ ப‌ருவ‌த்தின் நிமித்த‌ம் இந்தியாவுக்கு மீள‌வும் செல்கின்ற‌ன‌ர். நீண்ட‌ நெடும் வ‌ருட‌ங்க‌ளுக்கு பின், அக்காவிற்கு ஒரு குழ‌ந்தை பிற‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில், தொலைந்துபோயிருந்த‌ த‌ம்பியிட‌மிருந்து ஒரு க‌டித‌ம் வ‌ருகின்ற‌து. மீண்டும் அக்கா‍ த‌ம்பி உற‌வு புதிப்பிக்க‌ப்ப‌ட்டு, அக்கா த‌ன‌து குழ‌ந்தையைப் பார்க்க‌ இல‌ண்ட‌னுக்கு வ‌ர‌ச்சொல்கின்றார். இங்கிலாந்து வ‌ரும் த‌ம்பி, தான் த‌ற்போது ஏற்க‌ன‌வே ச‌ம்ம‌த‌ம் கேட்ட‌ பெண்ணோடும் அவ‌ர‌து குழ‌ந்தையோடும் சேர்ந்து வாழ்வ‌தாக‌வும், அப்பெண்ணின் உத‌வியால் தான் குடிப்ப‌ழ‌க்க‌த்திலிருந்து வெளியே வ‌ந்துவிட்டேன் எனவும் சொல்கின்றார். அக்காவின் குழ‌ந்தை மீது மிகுந்த‌ பிரிய‌த்துட‌ன் த‌ம்பியிருக்கின்றார். 

இர‌வுண‌வின்போது அக்காவும் க‌ண‌வ‌ரும் வைன் அருந்தும்போது கூட‌ தான் குடிப்ப‌ழ‌க்க‌த்திலிருந்து விடுப‌ட்ட‌தால் எதையும் குடிப்ப‌தில்லையென‌ வைன் குடிப்ப‌தைக்கூட‌ ம‌றுக்கின்றார். த‌ங்கி நிற்கும் இர‌ண்டு வார‌ங்க‌ள் கிட்ட‌த்த‌ட்ட‌ முடிகின்ற‌போது, தான் குழ‌ந்தையை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்கின்றேனெனக் கூறி, த‌ம‌க்கையையும், க‌ண‌வ‌ரையும் வெளியே போய் த‌னியே நேர‌ததைச் செல‌விட‌ச் சொல்கின்றார் த‌ம்பி. த‌ம‌க்கையும், அவ‌ர‌து க‌ண‌வ‌ரும் வெளியே போய் தியேட்ட‌ரில் ப‌ட‌மும் பார்த்துவிட்டு உண‌வும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது த‌ங்க‌ள‌து குழ‌ந்தை குளிக்கும் tubல் த‌னித்து விளையாடிக்கொண்டிருப்ப‌தைப் பார்த்துத் திகைக்கின்ற‌ன‌ர் . த‌ம்பி எங்கேயென‌த் தேடும்போது வீட்டிலிருந்த‌ ம‌து முழுவ‌தையும் குடித்துவிட்டு சுய‌நினைவு இல்லாது த‌ம்பி தூங்கிப் போயிருப்ப‌தைக் காண்கின்ற‌ன‌ர். மிக‌வும் கோப‌ங்கொள்ளும் த‌ம‌க்கையும் க‌ண‌வ‌ரும் த‌ம்பியை அடுத்த‌நாளே வீட்டைவிட்டுப் போகச் சொல்கின்ற‌ன‌ர். இறுதியில் இதுவ‌ரைகால‌மும் எவ‌ருக்குஞ் சொல்லாது ம‌றைத்து வைத்திருந்த‌ ‍-த‌ன்னாலேயே மிக‌ இள‌வ‌ய‌திலிருந்து த‌ம்பி குடிக்க‌ப்ப‌ழ‌கினார்- என்ற‌ உண்மையைக் குற்ற‌வுண‌ர்வோடு த‌ம‌க்கை த‌ன‌து க‌ண‌வ‌ருக்குச் சொல்ல‌த் தொட‌ங்குகின்றார்.


'ஹேமாவும் கெள‌சிக்கும்' என்ற‌ நெடுங்க‌தை மூன்று ப‌குதிக‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. முதலாம் ப‌குதி ஹேமாவால் சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌வும், இர‌ண்டாம் ப‌குதி கெள்சிக்கால் சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌வும், மூன்றாம் ப‌குதி மூன்றாம் ம‌னித‌ரான‌ க‌தை சொல்லியால் கூற‌ப்ப‌டுவ‌தாக‌வும் எழுத‌ப்ப‌ட்டுள்ளது. ஹேமாவின‌தும், கெள்சிக்கின‌தும் குடும்ப‌ங்க‌ள் கேம்பிரிஜிட்டில் அருக‌ருகில் வ‌சிக்கின்ற‌ன‌ர். ஹேமா பிற‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளில் கெள‌சிக்கின‌து குடும்ப‌ம் ப‌ம்பாயிற்கு திரும்பிச் செல்கின்ற‌து. ஹேமா ப‌தின்ம‌வ‌ய‌திலிருக்கும்போது மீண்டும் கெள‌சிக்கின் குடும்ப‌ம் மாஸ‌சூட்டிற்குப் பம்பாயிலிருந்து புல‌ம்பெய‌ர்கின்றன‌ர். ஒழுங்கான‌ ஒரு வீடு வாங்கும்வ‌ரை ஹேமாவின் வீட்டிலேயே கெள‌சிக்கின் குடும்ப‌ம் த‌ங்குகின்ற‌து. ஹேமா இப்போது ப‌தின்ம‌ங்க‌ளில் இருக்கின்றார். கெள‌சிக்கின் மீது ஈர்ப்பிருந்தாலும், கெள‌சிக் ஒதுங்கிப் போகும் மிகுந்த‌ அமைதியான‌ சுபாவ‌மான‌வ‌ராய் இருக்கிறார். கெள‌சிக்கின் பெற்றோரால் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு உண்மை கெள‌சிக்கால் ஹேமாவிற்குச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. கெள‌சிக்கின் தாயார் புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்டு வாழ்வின் க‌டைசிக்க‌ட்ட‌த்தில் இருக்கிறார். வாழ்நாட்க‌ளைத் த‌ள்ளிப்போடும் மேல‌திக‌ சிகிச்சைக்காக‌வே கெள‌சிக்கின் குடும்ப‌ம் அமெரிக்காவிற்கு இட‌ம்பெய‌ர்ந்திருக்கின்ற‌து. கெள‌சிக்கின் குடும்ப‌ம் வேறு இட‌ம் எடுத்துப்போய், அங்கே அவ‌ரின் தாயாரும் இற‌ந்துபோக‌, கெள்சிக் ‍ஹேமாவிற்கு இடையிலான‌ தொட‌ர்புக‌ள் அறுப‌டுகின்ற‌ன‌.


இர‌ண்டாம் ப‌குதியில் கெள‌சிக் க‌தை சொல்கின்றார். கெள்சிக் வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருக்கும்போது க‌ல்க‌த்தா சென்ற‌ த‌க‌ப்ப‌ன், தான் ம‌றும‌ண‌ம் செய்ய‌விருப்ப‌தைத் தெரிவிக்கின்றார். பிற‌கான‌ சில‌ மாத‌ங்க‌ளில், கெள்சிக்கின் த‌ந்தை த‌ன‌து புது ம‌னைவியையும் ‍‍அப்பெண்ணிற்கு முத‌ற் திரும‌ண‌த்தில் பிற‌ந்த‌ இர‌ண்டு ம‌க‌ள்க‌ளையும் அமெரிக்காவிற்குக் கூட்டிவ‌ருகின்றார்.. அச்சிறுமிக‌ளைத் த‌ன‌து த‌ங்கைக‌ளாக‌ ஏற்றுக்கொள்ளும் கெள‌சிக், பிற‌கு த‌ன‌து வீட்டில் த‌ன் வெளி புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளால் அப‌க‌ரிக்க‌ப்ப‌டுவ‌தாய் நினைத்து வீட்டை விட்டு ஓடிவிடுகின்றார் (புற‌ப்ப‌டுகின்றார்). பிற‌கு வ‌ளாக‌ ப‌ட்ட‌ம‌ளிப்பின்போதுதான் த‌ந்தையைச ச‌ந்திக்கின்றார். ப‌ட்ட‌த்தின் பிற‌கு என்ன‌ செய்வ‌து என்று குழ‌ம்பி தென்ன‌ம‌ரிக்காவை ந‌ண்ப‌ரொருவ‌ருட‌ன் சுற்றிப்பார்க்க‌ப்புற‌ப்ப‌டுகின்றார். பிற‌கான‌ நாட்க‌ளில் புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தில் ஆர்வ‌முள்ள‌ கெள‌சிக் சுயாதீன‌ப் புகைப்ப‌ட‌க்காராய் வேலை செய்ய‌த்தொட‌ங்கி, போர் ந‌ட‌க்கும் முக்கிய‌ முனைக‌ளுக்குப் போய் ப‌ட‌ங்க‌ளை எடுத்து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌த்தொட‌ங்குகின்றார்.. இவ்வேலையான‌து ஓரிட‌த்தில் நிர‌ந்த‌ர‌மாயில்லாத‌தால் தென்ன‌ம‌ரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா, ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் என‌ மாறி மாறி இட‌ங்க‌ளை கெள‌சிக்கிற்கு மாற்ற‌வேண்டியிய‌தாயிருக்கின்ற‌து. யாசீர் அர‌பாத்தின் ம‌ர‌ண‌த்தை ப‌ட‌மெடுக்க‌ வ‌ந்து அய்ரோப்பா ந‌க‌ரொன்றில் த‌ங்கிய‌ பிற‌கான‌ கால‌த்தில்தான் கெள‌சிக் ஹேமாவைச் ச‌ந்திக்கின்றார்


மூன்றாம் பகுதியில் கதை ஆரம்பிக்கும்போது ஹேமா கலாநிதிப் பட்டத்திற்கு ஆய்வு செய்கின்றவராய் வளர்நது விடுகின்றார். ஹேமாவின் பெற்றோர் வ‌ங்காள‌ம் போய்விடுகின்ற‌ன‌ர்; ஹேமாவுக்கும் 35 வ‌ய‌தைத் தாண்டிவிடுகின்ற‌து. பெற்றோர் ம‌க‌ள் ப‌டிப்பு ஆய்வு ச‌ம்ப‌ந்த‌மாய் திரும‌ண‌ம் குறித்து யோசிக்க‌வில்லை என‌ நினைக்கின்ற‌ன‌ர். ஆனால் ஹேமாவிற்கு இன்னொரு ம‌ண‌மான‌ வெள்ளைக்கார‌ பேராசிரிய‌ருட‌ன் உற‌விருக்கின்ற‌து. த‌ன‌க்காக‌ அவ‌ர் த‌ன‌து குடும்ப‌த்தை விட்டுவருவார் என்று ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாய் எதிர்பார்க்கும் ஹேமா, யதார்த்தத்தில் அது நிகழாதெனத் தெரிந்து இறுதியில் பெற்றோரின் பேசித் தீர்மானித்த‌ திரும‌ண‌த்துக்குச் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். ந‌வீன் என்ற‌ பொறியிய‌ல்துறை பேராசிரிய‌ருட‌ன் விரைவில் க‌ல்க‌த்தாவில் திரும‌ண‌ம் ந‌ட‌ந்து ஹேமா நவீனுடன் அமெரிக்காவிற்கு குடிபெய‌ர‌ இருக்கின்றார். ஒரு விடுமுறைக்காய் இத்தாலிக்குப் போகும் ஹேமா, த‌ற்செய‌லாக‌ கெள‌சிக்கைச் ச‌ந்திக்கின்றன‌ர். கெள‌சிக் ஹொங்கொங்கில் ஒரு ச‌ர்வ‌தேச‌ப் ப‌த்திரிகையில் ஆசிரிய‌ர் பொறுப்பை ஏற்ப‌த‌ற்கு அய்ரோப்பாவிலிருந்து த‌ன‌து வ‌சிப்பிட‌த்தைக் காலிசெய்துவிட்டுப் போக‌ கெளசிக் ஆய‌த்த‌மாகின்றார். ஹேமாவுக்கும் கெளசிக்கும் உட‌ல்சார்ந்த‌ உற‌வு முகிழ்கின்ற‌து. இறுதியில் த‌ன்னோடு ஹொங்கொங்கிற்கு வ‌ந்துவிடும்ப‌டி கெள‌சிக் கேட்ப‌தை ஹேமா ம‌றுக்கின்றார். வேலையில் சேர‌முன்ன‌ர் கெள‌சிக் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றார். கிறிஸ்ம‌ஸ் கால‌த்தில் ஹேமாவுக்கும் ந‌வீனுக்கும் திரும‌ண‌ம் ந‌டைபெற‌ கெள்சிக் தாய்லாந்துக் க‌ட‌ற்க‌ரையில் ஹேமா இல்லாத் துய‌ர‌த்தில் பொழுதைக் க‌ழிக்கிறார். கிறிஸ்ம‌ஸ் தின‌த்தில் வ‌ந்த‌ ட்சுனாமியில் கெள்சிக் பரிதாபமாக இற‌ந்துபோகின்றார். திரும‌ண‌ம் முடித்து அமெரிக்க‌ வ‌ரும் ஹேமாவிட‌ம் -கெள்சிக்கையும், ஹேமாவையும்- அறிந்த‌ ந‌ண்ப‌ர் கெள்சிக்கின் ம‌ர‌ண‌ங்குறித்த‌ சிறுசெய்தி நியூயோர்க் ரைமிஸில் வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். எந்த‌ அடையாள‌மின்றி கெள‌சிக் -ஹேமாவின் வாழ்விலிருந்தும்- எல்லோரின‌து வாழ்விலிருந்தும் அடித்துச் செல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார். உள‌மும் உட‌லும் கெள்சிக்கோடு ப‌கிர்ந்து ஹேமா நினைவுக‌ளைத் த‌ன‌க்குள் புதைத்துவிட்டு இன்னொரு வாழ்க்கைக்கு த‌யாராவ‌தோடு க‌தை நிறைவுபெறுகின்ற‌து.


ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் புல‌ம்பெய‌ர்வில் ஒரு ப‌க்க‌த்தை ‍ஒருவ‌கை எல்லைக்குள் நின்று சொல்கின்ற‌ன‌.அதேபோன்று புல‌ம்பெய‌ர்வின் பாதிப்புக்க‌ள்/ப்ய‌ன்க‌ள்/சிதைவுக‌ள்/மீள்எழுத‌ல்க‌ள் குறித்து Edwidge Danticat (Brother, I'm dying, Behind the Mountains), M.G.Vassanji (No New Land, The In-Between World of Vikram Lall) போன்ற‌வ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ள் மிக‌ விரிவாக‌ப் பேசுகின்ற‌ன‌. வித்தியாச‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌லும் அங்கீக‌ரித்த‌லும் என்ற‌வ‌கையில் மேற்கூற‌ப்ப‌ட்ட‌ வித்தியாச‌மான‌ ப‌டைப்புக்க‌ள்/ப‌டைப்பாளிக‌ள் த‌ம‌க்கிடையிலான‌ ஊடாட்ட‌ங்க‌ளையும் இணைவுக‌ளையும் அறிந்துகொண்டு மேலே செல்ல‌ முய‌ற்சிப்பார்க‌ள் என்றே தோன்றுகின்ற‌து. ஜூம்பா ல‌கிரியின் இத்தொகுப்பிலுள்ள‌ அநேக‌ க‌தைக‌ளில் பிரித‌லும், சேர்த‌லும் (அநேக‌மாய் திரும‌ண‌ங்க‌ள்) நிறைய‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. எல்லாக் க‌தைக‌ளிலும் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளோ அல்ல‌து துணைப்பாத்திரங்க‌ளோ வெள்ளையின‌த்த‌வ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்துகொள்கின்ற‌ன. ஆனால் அதேச‌ம‌ய‌ம் அவ்வாறான‌ க‌ல‌ப்புக் க‌லாசார‌த்தில் எழும் சிக்க‌ல்க‌ள் ப‌ற்றி அதிக‌ம் பேச‌ப்ப‌டாத‌து மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌மாய் ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ளில் இருக்கின்றன‌. முக்கிய‌மாய் தென்கிழ‌க்காசியா ச‌மூக‌த்திலிருந்து வ‌ரும்/வ‌ள‌ரும் த‌லைமுறையின‌ருக்கு எவ்வாறு க‌லாசார‌ம்/ப‌ணபாடுக‌ள் திணிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் ந‌ன‌கு அறிவோம். என‌வே த‌ம்ம‌ளவில் ஒரு பாத்திர‌ம் இன்னொரு க‌லாசார‌த்தில் துணையைத் தேர்நதெடுக்கும்போது மிக‌ப்பெரும் ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்தே ஆக‌வேண்டியிருக்கின்ற‌து. அவ்வாறான‌ ப‌க்க‌ங்கள் இத்தொகுப்பிலுள்ள‌ க‌தைக‌ளில் த‌வ‌ற‌விட‌ப்பட்டிருக்கின்ற‌ன‌ அல்ல‌து இல‌குவாய் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. அதேபோன்று இன்னொரு க‌லாசார‌த்திலிருந்து வ‌ரும் துணைக‌ள் தென்னாசியாக‌ க‌லாசார‌ங்க‌ளை எப்ப‌டி எதிர்கொள்கின்ற‌ன‌ர்/ஏற்றுக்கொள்கின்றன‌ர் என்ப‌து குறித்த‌ புள்ளிக‌ளும் ம‌வுன‌மாக்க‌வேப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறான‌ கேள்விக‌ள் ஏன் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌து என்றால், ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் அனைத்திலும் (அவ‌ரது ஒரே நாவ‌லான‌ The Namesakeல் கூட‌) வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளை துணையாக‌க் கொண்ட‌ பாத்திர‌ங்க‌ள் அள‌வுக்கு மீறி வ‌ருகின்ற‌ன‌. சில‌வேளைக‌ளில் இந்தியாவிலிருந்த‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாம்/மூன்றாம் த‌லைமுறையைச் சேர்ந்த‌ வ‌ங்காளிக‌ளிடையே இதொரு இய‌ல்பான‌ வ‌ழ‌க்காய் இருக்க‌க்கூடுமோ என்ன‌வோ தெரிய‌வில்லை.


இவ்வாறான‌ கேள்விக‌ளைத் த‌விர்த்துவிட்டுப்பார்த்தால், ஜும்பா ல‌கிரியின் பாத்திர‌ங்க‌ள் ப‌ல‌ கீழைத்தேய‌ ந‌ம்பிக்கைக‌ளை மிக‌ எளிதாக‌ உடைத்துவிட்டு ந‌க‌ர்ந்துவிடுகின்ற‌ன‌. முக்கிய‌மாய் திரும‌ண‌த்துக்கு முன்பான‌ உட‌ல் சார்ந்து எழும் உற‌வுக‌ள‌ குறித்து எந்த‌ப்பாத்திர‌மும் அள‌வுக்கு மீறிக் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை; இய‌ல்பான‌ போக்கில் அதை ஏற்றுக்கொண்ட‌ப‌டி ந‌க‌ர்ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. மேலும் அநேக‌ பாத்திர‌ங்க‌ள் ப‌தின்ம‌ங்க‌ளைத் தாண்டிய‌வுட‌ன், த‌ம்ம‌ள‌வில் வீழ்ந்தும்/எழுந்தும் த‌ம‌க்கான‌ தனிப்ப‌ண்புக‌ளை ‍ -பெற்றோரின் த‌ய‌வில் அல்லாது- தாங்க‌ளாக‌வே வ‌ள‌ர்த்துவிடுகின்ற‌ன‌. இம்மாற்ற‌மான‌து புல‌ம்பெய‌ர்ந்த‌ முத‌ற்த‌லைமுறைக்கு மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்தாலும், புலம்பெய‌ர்ந்த‌ மேற்குச்சூழ‌ல் இதை எளிதாக‌க் க‌ற்றுக்கொடுத்துவிடுகின்ற‌து என்ப‌தே ய‌தார்த்த‌மாகும். இத்தொகுப்பிலுள்ள‌ பெரும்பாலான‌ க‌தைக‌ள் நியூயோர்க்க‌ரில் வ‌ந்திருந்த‌ன‌ என்றாலும் வாசிக்க‌ ஒர‌ள‌வு சுவார‌சிய‌மாய் இருக்கும் ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் ஒரேவ‌ட்ட‌த்தில் சுழ‌லாம‌ல் மேலும் த‌ன‌து எல்லைக‌ளை நீட்டிக்கும்போது இன்னும் ப‌ல‌ உச்ச‌ங்க‌ளை எட்ட‌க்கூடும்.


(Grace Shureக்கு...)

0 comments: