'ஐயோ, ஹேமா அக்கா கிணத்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.
பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்திலை கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும், தாரளமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன சனியனுக்கு நீங்கள் சண்டை பிடிக்கிறியள் என்டொரு ஆமிக்காரன் சனத்தை செக்பொயின்றில் வைத்து பரிசோதித்துப் பார்க்கும்போது கேட்டதாயும் ஒரு கதையிருந்தது. அவன் அப்படிகேட்டதிலையும் பிழையில்லைத்தான். நல்ல தோட்டக்காணிகள், நிறைய பனைமரங்கள், ஆடு மாடுகள் என்று எங்கடை ஊரிலை சனங்கள் இருந்தபோது அவனுக்கு அப்படித் தோன்றியதில் பிழையுமில்லை.
நாங்கள் கத்து கத்தென்று கத்த அண்டை அயலிலிருந்த சனமெல்லாம் கிணற்றடியில் கூடிவிட்டது. விழுந்த கிணறு ஒரு பங்குக்கிணறு. ஆனால் பங்கிருக்கிறவையள், இல்லாதவையள் என்டு ஊரிலையிருக்கிற எல்லாச் சனமும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்கடை ஊர் மண், சனம் சாதி பார்க்கிற மாதிரி வஞ்சம் எதுவும் செய்ததில்லை. யார் தோண்டினாலும் நல்ல தண்ணியைத் தந்துகொண்டிருந்தது. இலங்கை ஆமியின் ஒபரேஷன் லிபரேசனோடு தொடங்கிய பொம்மரடியிலிருந்தும் பலாலியிலிருந்தும், காங்கேசந்துறையிலிருந்தும் அடிக்கின்ற ஷெல்லடியிலிருந்தும் தப்புவதற்கென நானும் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கடை வீட்டு செவ்விளநீர் மரத்தடிப் பக்கமாய் வெட்டத் தொடங்கிய பங்கருக்குள்ளேயே ஆறடி வரமுன்னரே தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்திருக்கின்றது. டொங்கு டொங்கு என்று அலவாங்கு போட உறுதியாயிருக்கும் சுண்ணாம்புக் கல்லுக்குள்ளிலிருந்து எப்படித்தான் இப்படி நல்ல சுவையான தண்ணீர் வருகின்றதென்பது எனக்கும் அந்த வயதில் சரியான வியப்பாய்த்தானிருக்கும். ஹேமாக்கா விழுந்த கிணறு தண்ணியள்ளுகின்ற கிணறு என்டபடியால் அந்தளவு ஆழ்ப்பமில்லை. ஆனபடியால் தப்பிவிட்டா. இப்போ யோசிக்கும்போது ஹேமாக்கா தான் உயிரோடும் இருக்கோனும் ஆனால் அதேசமயம் தனது எதிர்ப்பையும் காட்டவேண்டுமென சமயோசிதமாய் யோசித்துத்தான் இந்தக்கிணற்றுக்குள்ளை குதித்திருப்பா போல... இல்லை, தன்ரை உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அவான்ரை வீட்டுக்கு இரண்டு வீடுகள் தாண்டிக்கிடந்த ஆழ்ப்பமான கிணத்துக்குள்ளையெல்லோ குதித்திருக்கவேண்டும். அந்தக்கிணத்துக்குள்ளை குதித்தால் சனம் உயிரோடு தப்பமுடியாதளவுக்கு அந்த மாதிரி ஆழ்பபமாயும், அடியில் நிறையப் பாசியுமாயும் அது இருந்தது.
'ஹேமாக்கா வெளியே வாங்கோ, வெளியே வாங்கோ' என்டு நாங்கள் கிணத்துக்கட்டைச் சுற்றி குஞ்சைப் பருந்திட்டைப் பறிகொடுத்த கோழி மாதிரி கத்திக்கொண்டிருந்தோம். ஹேமாக்கா என்ன கட் வுமனா இல்லை சுப்பர் வுமனா... சும்மா அப்படியே விர் என்று கிணத்துக்குள்ளையிலிருந்து பறந்துவர. யாரோ ஒராள் நல்ல மொத்தமான கயிறையெடுத்து கிணத்துக்குள்ளை விட அவா அதைப் பிடித்து ஏறி வரமாட்டேனென அடம்பிடித்துக்கொண்டிருந்தா. அவாவை எப்படி வெளியே எடுக்கிறது என்டு எல்லோருக்கும் பெரிய பிரச்சினையாய்ப் போயிட்டுது. அதைவிட பரபரப்பாய் வந்த சனமெல்லாம் ஏன் இந்தப் பெட்டை கிணத்துக்குள்ளை குதித்தாள், அதற்கான காரணம் என்னவென்டு ஆராயத்தொடங்கிவிட்டது. பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாய் இருளத்தொடங்கிவிட்டது. ஹேமாக்காவும் கீழே விட்ட கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேயேறி வரமாட்டென அடம்பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறா. யாராவது பெடியனை கிணத்துக்குள்ளை இறக்கி அவனைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்கலாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு குமர்ப்பெட்டையாயிருப்பது 'கற்பு' சார்ந்த பிரச்சினையாகவும் சனத்துக்கு இருக்கிறது. வயதுபோன கிழடுகளை இறக்கலாந்தான். ஆனால் ஹேமாக்காவின் பாரத்தை தங்கடை தோளிலை தாங்கிக்கொண்டு கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறுவதற்குள் கிழடுகளுக்கு சீவன் இருக்குமா என்பதும் கேள்விக்குரியதுதான். ஒரு தற்கொலை முயற்சி தப்பித்துவிட்டது என்ற நிம்மதிப்பெருமூச்சை தெரிந்தே செய்கின்ற ஒரு கொலையில் பரீட்சித்துப் பார்க்க சனத்துக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை. எனவே கிழவர்களையும் இறக்கமுடியாது. ஆக இவ்வாறாக ஹேமாக்காவை வெளியே எடுப்பது பெரும் சிக்கலாகிவிட்டது. வெளியே நிற்கிற சனம் என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து சலித்தே ஹேமாக்கா தான் இந்தக்கிணத்துக்குள்ளை குதிக்கமுன்னர் தன் முடிவை ஆழ மறுபரிசீலனை செய்திருக்கலாம் என்டு கூட நினைத்திருக்கலாம்.
கடைசியாய், இரண்டுபக்கமும் கையிருக்கிற கதிரையிலை நான்கு கயிறைக் கட்டி ஒரு பெட்டியை இறக்கிறமாதிரித்தான் கதிரையை இறக்கிச்சினம். ஹேமாக்கா கதிரையிருந்து நாலு கயிற்றில் இரண்டு கயிற்றைக் கையிரண்டாலும் பிடிக்க, வெளியிலிருந்து சனம் தூக்கத்தொடங்கிச்சினம். சூரன்போரிலை சூரனையும் முருகையும் அங்கால் பக்கம் இங்கால பக்கம் ஆட்டுகின்ற மாதிரி கிணத்தின்றை உட்சுவரிலை அடிபட்டு அடிபட்டு ஹேமாக்கா வெளியே வந்திருந்தா. அவாவைப் பார்க்கச் சரியாய்ப் பாவமாயிருந்தது. மழைக்காலத்திலை நனைகின்ற கோழிக்குஞ்சுகள் மாதிரி பாவாடை சட்டை எல்லாம் நனைந்து கூனிப்போயிருந்தா. அத்தோடு சனமெல்லாம் ஒரே மாதிரியாய்ப் பார்த்த பார்வை அவாவையின்னும் கூனிக்குறுகச் செய்திருக்கும்.
2.
ஹேமாக்கா கிணற்றில் விழுந்தற்கான காரணத்தை சனம் அலசிப் பிழிவதற்கு முன்னரே எனக்கு அதற்கான காரணம் தெரிந்திருந்தது. உண்மையிலேயே சனம் ஹேமாக்காவைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றினால் நானுமோர் சாட்சியாக ஏற்த்தான் வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறான பொழுதில் மவுனமாய் இருந்திருப்பேனே தவிர ஹேமாக்காவிற்கு எதிராய் எதுவும் சொல்லியிருக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்வேன். எனெனில் ஹேமாக்கா அவ்வளவு நல்லவா; எனக்கும் அவாவை எங்கடை அமமாவிற்கு பிறகு அப்படிப் பிடிக்கும்.
எங்கடை வீட்டையும், ஊரிலையிலிருந்த பள்ளிக்கூடத்தையும் பிரிப்பது ஒரு ரோட்டுத்தான். கல்லு நிரப்பி தார் ஊற்றி சமதளமாய் அமைப்பதுதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூறமுடியாது. ஒரு வெள்ளவாய்க்காலாய் இருந்து காலப்போக்கில் ஒரு ஒழுங்கையாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மழை பெய்ந்து வெள்ளம் ஓடுகின்ற வேலையில் வாழைக்குற்றியில் வள்ளம் விடுவதற்கு மிக உகந்த இடமெனச் சொல்லலே இன்னும் சாலச் சிறந்தது. அவ்வாறு எங்கள் வீடுகளையும், பள்ளிகூடத்தையும் பிரிக்கின்ற ஒழுங்கையினூடு நீங்கள் செல்வீர்களாயின் 'ட'வடிவில் நீங்கள் வலது கைப்பக்கமாய் திரும்பினால் ஒரு ஹொஸ்டலைக் காண்பீர்கள். அங்கேதான் தூர இடங்களிலிருந்து படிக்கின்ற பெடியன்கள் படித்துக்கொண்டிருப்பார்கள். ஹொஸ்டலிலிருந்து பின்பக்கமாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்பவும் பூட்டியபடியே இருக்கும். எனவே ஹெஸ்டலுக்குப் போவதற்கு அல்லது அங்கிருந்து வெளியே வருவதற்கோ நீங்கள் உயரம் பாயதலில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். எனெனியில் மதிலேறிக் குதிக்கவேண்டும். என்னைப் போன்றவர்கள் ஹொஸ்டலில் படம் போடும்போது, படம் தொடங்கியபின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக்குதித்துப் போய்விடுவோம். படம் தொடங்கப்போகின்றதென்றால் ஹொஸ்டலில் இருக்கும் அண்ணாமார்கள் விசிலடிப்பார்கள். நாங்கள் முன்னேறிப்பாய்வதற்குத் தயாராய் ஹொஸ்டல் மதிலடிக்கடியில் நின்றுகொண்டு இருப்போம். ஆனால் நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும். இவ்வாறாக நிறையப் படங்களைப் பார்த்திருக்கின்றோம். சில அண்ணாக்களின் பிறந்தநாள் கொண்டாடங்களில் கலந்துகொண்டிருக்கின்றோம்.
ஹொஸ்டலிருக்கும் பெடியங்களுக்கு சிலவேளைகளில் கரண்டில்லாவிட்டால் குளிக்கத் தண்ணியில்லாது போய்விடும். அப்போதுமடடும் பின்பக்க கேற் திறக்கப்பட்டு எங்கள் வீட்டுக்கிணறுகளில் குளிக்க ஹொஸ்டல் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படுவார்கள். ஹொஸ்டல் பெடியங்கள் குளிக்க வாறாங்கள் என்டால், எங்கடை ஊரும் அல்லோலகல்லோலப்பட்டுவிடும். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், ஊரிலையிருக்கிற குமர்ப்பெட்டையளுக்குத்தான் உள்ளூற மகிழ்ச்சி ததும்பியோடியபடியிருக்கும். அதுவரை வீட்டிலை அம்மாமார் 'பிள்ளை தண்ணியள்ளிக்கொண்டு வாங்கோ' என்டால் கூட ஓடிப்போய் ஒளித்துக்கொள்பவர்கள் கூட் ஹொஸ்டல் பெடியங்கள் குளிக்க வாறாங்கள் என்டால் வாளியோடு கிணத்தடிக்கு அடிக்கடி போவதும் வருவதுமாய் இருப்பார்கள். கிணத்தடியில் விழிகளும், புருவங்களும் நிகழ்த்துகின்ற உரையாடல்களுக்கு காப்பியங்களின் சுவை கூட நிகரானவையா என்பது சந்தேகந்தான். ஹொஸ்டல் பெடியங்களுக்கும் நன்கு தெரியும், தாங்கள் இரகசியாய்ப் பெண்களால் இரசிக்கப்படுகின்றோம் என்று. எனவே ஹொஸ்டலை விட்டு வரும்போது ஏதோ பெரிய ஊர்வலம் வாற மாதிரி கத்திக் குழறி தங்களை வரவை பறைசாற்றிக்கொண்டே வருவார்கள். இன்னுஞ்சிலர் உற்சாகத்தின் மிகுதியில் சேர்ட் எல்லாம் கழற்றி கையில் வைத்தபடி தமது 'ஆண்மையை' காட்டமுயற்சிப்பார்கள். அந்த நேரத்தில் எத்தனையோ வீடுகளின் வாசல்களில் இருந்து வெளிவந்த பெருமூச்சுக்களின் வெப்பத்தில் அடுப்புகளில் தீ கூட பற்றியெரிந்திருக்கலாம்.
இப்படி குளிக்க வந்த பொழுதிலோ அல்லது வேறு சந்தர்ப்பத்திலோதான் ஹேமாக்காவிற்கும் வசீகரன் அண்ணாவுக்கும் நேசம் முகிழ்ந்திருக்கவேண்டும். அவர்களுக்கிடையிலான ஊடாட்ட்டங்களுக்கு நானொரு தூதுவனாக மாறவேண்டியிருந்தது. கடிதப்பரிமாற்றங்கள், உடனடிச் செய்திகள் அல்லது திட்ட மாற்றங்கள் என்று பல்வேறு பரிணாங்களில் ஊழியம் செய்து அவர்களின் காதலுக்கு நானொரு தவிர்க்கமுடியாத தீவிர தொண்டனானேன். இவ்வாறான ஊழியங்களுக்கு ஹேமாக்கா தங்கடை வீட்டில் நின்ற மரங்களிலிருந்து விளாம்பழங்கள், தோடம்பழங்களையும், ஆலமரத்தடிச் சந்தியிலிருந்த முருகன் விலாஸில் எட்னா, கண்டோஸ் வகையான சொக்கிலேட்டுக்களையும், வாய்ப்பன்களையும் போண்டாக்களையும் சன்மானமாக அளித்து தனது அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தியிருந்திருக்கிறார்.
ஒருநாள் இப்படித்தான் ஹேமாக்காவும், வசியண்ணாவும் ஹெஸ்டல் மதிலடியில் சந்திப்பதாய் ஏற்பாடு. வழக்கம்போல நிகழ்வதுபோல ஹேமாக்கா என்னை மதிலால் தூக்கிப்பிடிக்க நான் விசிலடித்து வசியண்ணாவுக்கு சிக்னல் அனுப்பினேன். இவ்வாறான சந்திப்புக்கள் நல்லாய்ப் பொழுதுபட்டு இரவு மூடுகின்ற ஏழுமணியளவில்தான் நடக்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் சன நடமாட்டம் குறைவாயிருக்கும். அத்தோடு சனம் கண்டாலும் யாரென்று முகம் பார்க்காது தப்பியோடக்கூடியதாகவும் இருக்கும். நான் மதிலுக்குள்ளால் எட்டிப்பார்த்து வசியண்ணா வாறாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். குரலை வைத்துத்தான் அடையாளம் காணக்கூடியளவுக்கு அன்று நல்ல இருட்டு. என்னுடை விசில் சத்தம் கேட்டு வந்த வசியண்ண என்ரை கையைப் பிடித்தார். ஆனால் இப்படி ஒருநாளும் இறுக்கமாய்ப் பிடிப்பதில்லையே என்று 'ஆ... கை நோகின்றதென்று' நான் சொல்ல, 'யாரடா நீ உனக்கெனன இந்த நேரத்திலை இங்கே வேலை?' என்று ஒரு குரல் கேட்டது. இது நிச்சயமாய் வசியண்ணாவின் குரலில்லை. 'ஐயோ இது ஹொஸ்டல் வோடனின்ரை குரலெல்லோ' என்டு எனக்கு உடம்பு நடுங்கத் தொடங்கிவிட்டது. தப்பியோடலாம் என்டால் மனுசன் கையையும் விடுகிறதாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் தூக்குபிடித்துக்கொண்டு நிற்கிறா. 'எதற்கடா இப்ப விசிலடித்தாய்?' என்டு அந்த மனுசன் உறுமுகிறது. பகல் வேளைகளில் நாங்கள் பக்கத்திலையிருக்கிற பற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது ரெனிஸ் போல் சிலவேளைகளில் ஹொடலுக்குள் விழுவதுண்டு. அவ்வாறான தருணங்களில் நாங்கள் மதிலுக்கு இங்காலை நின்று பந்தை எடுத்துத்தாங்கோ என்று கத்துவோம். அப்படியொருத்தரும் எடுத்துத் தர இல்லையெண்டால் நாங்களாவே மதிலேறிக் குதித்து பந்தை எடுப்போம். அப்படி இறங்கியெடுக்கும்போது வோடனின் கண்ணில்பட்டால் பந்து எடுக்கவந்தோம் என்று சொல்லித் தப்பிவிடுவதுண்டு. இப்ப வோடன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு 'யாரடா நீ யாறறை மோனடா நீ'? என்டு வெருட்ட, எனக்கு எல்லா அறிவும் கெட்டு, 'ரெனிஸ் போல் விழுந்துவிட்டது எடுக்கவந்தன்' என்டு வாய்தவறி உளறிவிட்டேன். இந்த இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட வருவாங்கள், வேறேதோ விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்டு வோடனுக்கு இப்ப நல்லா விளங்கிட்டுது. சனியன் பிடித்த மனுசன் என்னை விடுவதாயில்லை. இனியும் இப்படிக்காரணஞ் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லாவற்றையும் போட்டுக் கொடுக்கவேண்டிவரும் என்றநிலையில் சட்டென்று வோடனின் பிடியிலிருந்து ஒரு கையை உதறியெடுத்து நல்லாய் 'நொங்கென்று' அவற்றை தலையில் குட்டினேன். மனுசனுக்கு நொந்திருக்கவேண்டும்; மற்றக் கையின் பிடியைத் தவறவிட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்களைப் பின் தொடர்ந்து வருகின்றமாதிரி பின்னங்கால் தலையில்பட எங்கடை வீடுகளுக்கு ஓடிவந்து சேர்ந்திருந்தோம்.
எப்படிப் பத்திரமாய் பொத்தி பொத்தி வைத்தாலும் எந்த விஷயம் என்டாலும் ஒருநாள் வெளியே வரத்தானே செய்யும். அப்படித்தான் ஒருநாள் ஹேமாக்கா-வசியண்ணா காதலும் ஹேமாக்கா வீட்டுக்கு தெரியவர. இரண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி. அவா பிடிவாதமாய் வசியண்ணாவைத்தான் காதலிப்பன் கலியாணங்கட்டுகிறன் என்டு நின்டிருக்கிறா. இரண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டிவைத்திருக்கினம். இனி பிடிவாதத்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விடத்தான் ஹேமாக்கா இப்படி கிணத்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப ஹேமாக்காவின் காதல் ஊருலகத்திற்கு எல்லாம் தெரியவந்துவிட்டது. இப்படியாக ஹேமாக்கா-வசியண்ணா விடயத்தில் ஒரு முடிவும் காணமுடியாது இழுபறியாக போனபோதுதான் இந்தியன் ஆமிப் பிரச்சினை வந்தது. பள்ளிக்கூடமெல்லாம் பூட்ட ஹெஸ்டலிலிருந்த பெடியங்களும் தங்கள் தங்கள் ஊருகளுக்குப் போகத் தொடங்கிட்டினம். ஹேமாக்காவின் பெற்றோருக்கும் அப்பாடா இந்தப்பிரச்சினை இப்படிச் சுமுகமாய் முடிந்துவிட்டதே என்டு பெரிய நிம்மதி. ஊர்ச்சனத்தின் வாய்களும் இப்போது ஹேமாக்காவின் கதையைவிட இந்திய ஆமிப்பிரச்சினையைப் பற்றித்தான் அதிகம் மென்று துப்பத் தொடங்கிவிட்டது. சண்டை தொடங்கியதால், எனக்கும் பள்ளிக்கூடம் இல்லையென்டபடியால் நானும் ஹேமாக்கா வீட்டிலைதான் அதிகம் பொழுதைக் கழிக்கத்தொடங்கினேன். இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங்கி எங்கடை ஊர்ச் சனமெல்லாம் உணவில்லாது சரியாய்க் கஷ்டப்பட்ட காலத்தில். மக்களைத் தங்களுக்குள் உள்ளிழுக்கவேண்டுமென்றால் அவ்வப்போது நிவாரணம் வழங்கவேண்டும் -உலகத்திலுள்ள எல்லா அதிகார அரசுகளும் நினைப்பதுபோல- இந்தியன் ஆமியும் தங்கடை முகாங்களுக்குச் சனத்தைக்கூப்பிட்டு சாமான்கள் கொடுப்பானக்ள். ஒரு வீட்டிலையிலிருந்தும் வயசுக்கு வந்த பெடியன் பெட்டைகளை இந்த விடயங்களுக்கு அனுப்புவதில்லை; 'எதுவுமே' நடக்காலமென்ற பயந்தான். ஆகவே பத்துவயசுக்குள்ளையிருந்த என்னைப் போன்றவர்கள்தான் ஆமிக்காரன் தருகின்ற நிவாரணத்துக்கு கியூவிலை நிற்பம். ஒருமுறை ஆமிக்காரன் தன்ரை ஹெல்மெட்டாலை அள்ளியள்ளி கோதுமை மாவை நிவாரணமாகத் தந்தபொழுதில்தான், காவலில் நின்ற இன்னொரு ஆமிக்காரன் என்னைக் கூப்பிட்டு ஒரு கூலிங் கிளாஸைத் தந்தான். எனக்கென்டால் அந்தமாதிரிச் சந்தோசம். அவ்வளவு பேர் கியூவிலை நிற்கேக்கை எனக்கு மட்டும் ஆமிக்காரன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான ஏதோ வித்தியாசமானவனாய்த்தானே இருக்கவேண்டும். நான் ஊருக்குள்ளை ஓடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிறங்கி ஆமிக்காரன் எனக்கு 'கூல்டிங்' கிளாஸ் தந்துவிட்டான் என்று பெருமையடித்துக்கொண்டிருந்தேன். 'அது 'கூல்டிங்' கிளாஸ் இல்லையடா கூலிங் கிளாஸ்' என்று ஹேமாக்கா தான் திருத்தினா. 'உங்களுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்கவில்லை என்டு பொறாமை அதுதான் நான் சொல்வதை நீங்கள் பிழையெண்டிறியள்' என்று நான் சொல்ல ஹேமா சிரித்துக்கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிறது எவ்வளவு அழகு. அவாவின்ரை பற்களின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவங்கடை வீட்டிலை தனியே இருக்கேக்கே இந்தியன் ஆமிக்காரன்கள் செக்கிங்குக்கு என்டு வந்தாங்கள். செக்கிங்கில் வந்த ஆமிக்காரங்களில் எனக்கு கூலிங்கிளாஸ் தந்த ஆமிக்காரனுமிருந்தான். நான் அப்போதும் அந்த கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த ஆமிக்காரன், bomb bomb என்டான். எங்கையோ குண்டை ஒளித்துவைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல என்டு முதலில் நினைத்தேன். No Sir No Bomb என்டு ஹேமாக்கா தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னா...ஆமிக்காரன் bomb bomb என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருந்தான். you bomb என்டான்....ஹேமாக்கா bomb ஒளித்துவைத்திருக்கிறா என்டமாதிரி அவாவோடை மார்பைப் பிடித்தான்....அக்காவிற்கு என்ன செய்வதென்டு திகைப்பு....நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறன் என்டு ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வந்திருக்கோனும். you bomb you bomb என்டு சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த அறைக்குள்ளை ஹேமாக்காவைக் கொண்டு போனான்...நான் விளையாடுகின்றமாதிரி பாவனை செய்துகொண்டு ஓரக்கண்ணால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் பூட்டப்படும். ஆமிக்காரனுக்கு 'செக்கிங்குக்காய்' அடுத்த வீட்டுப் போகும் அவசரமோ அல்லது கொக்கி போட்டு அறையை மூடினால் நான் கத்தி சனத்தைக் கூட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது...மெல்லியதாய் கதவைச் சாத்தினான்...அதனால் அறை முழுதாய் மூட்ப்படாது கொஞ்சம் நீக்கலுடன் திறந்தபடியிருந்தது. you bomb bomb என்டு ஹேமாக்காவின் சட்டையைக் கழற்றச் சொன்னான். பிறகு அக்காவைச் சுவரோடு அழுத்தியபடி ஆமிக்காரனின் பின்புறம் அங்குமிங்குமாய் அசைவதுமட்டுமே தெரிந்தது. ஆமிக்காரன் 'செக்கிங்' முடித்துப்போனபோது எனக்கு அவன் தந்த கூலிங்கிளாஸ் பிடிக்கவில்லை. வீட்டை அதைக் கொண்டுபோய் அம்மம்மா பாக்கு இடிக்கிற கட்டையாலை அதை அடித்து உடைத்தேன்.
இந்தியன் ஆமி வெளிக்கிட வந்த பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் வசியண்ணா ஒருநாள் எங்கடை ஊருக்கு வந்திருந்தார். எல்லாச் சனியனும் இந்தியன் ஆமிக்காலத்தோடு ஒழிந்துவிட்டதென நினைத்த ஹேமாக்காவின் பெற்றோருக்கு வசியண்ணா தனக்கு ஹேமாக்காவைக் கலியாணங்கட்டித்தரக்கேட்பதற்காய் வந்திருந்தது அதிர்ச்சியாயிருந்தது. ஏற்கனவே எடுத்த முடிவையே திரும்பவும் சொன்னார்கள். 'ஏலாது' என்டு ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய்ச் சொன்னதோடு, வசியண்ணா திரும்பி அவற்றை ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்த ஒருபொழுதில் ஹேமாக்காவைக் காணவில்லையென்று ஊரெல்லாம் தேடத்தொடங்கியது. பிறகு ஹேமாக்கா வசியண்ணாவோடு சேர்ந்து ஓடிப் போய்விட்டா என்பது எல்லோருக்குந் தெரியவந்தது. 'ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இடத்திற்கு ஓடிப்போனவா?' என்டு அம்மாட்டை நான் கேட்டதற்கு, 'சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்டுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்களில் அப்படி ஹேமாககா ஓடிப்போனதற்கு வசியண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தை அறிந்தேன். ஊரிலையிருந்து சனம் கொழும்புக்குப் போய்விட்டு வருகுகின்றபோது ஹேமாக்காவும், வசியண்ணாவும் கிளிநொச்சிப் பக்கமாய் இருக்கினம் என்டு தகவலை அறிந்து சொல்லிச்சு.. நாளடைவில் ஹேமாக்காவை மறக்க வைக்கும்படி போர் எங்கடை ஊர்ப்பக்கமாய் திரும்பவும் உக்கிரமாகத் தொடங்கியது.
4.
95ம் ஆண்டு யாழில் நிகழ்ந்த பெரும் இடம்பெயர்வின்போது எங்களுக்கு முதலில் அடைக்கலந்தந்தது ஹேமாக்கவும் வசியண்ணாவுந்தான். காட்டையும் குளத்தையும் அண்டியிருந்த அவையளின்றை மண்ணால் மெழுகிப் பூசியிருந்த வீடு உண்மையிலேயே அந்த நேரத்திலே சொர்க்கமாய்த்தானிருந்தது. சில மாதங்கள் ஹேமாக்கா வீட்டையிருந்துவிட்டு நாங்கள் தனியே இன்னொரு இடத்திற்குப் போயிருந்தோம். ஆனால் அதிகமாய் ஒவ்வொரு பின்னேரமும் நான் ஹேமாக்கா வீட்டுப்பக்கமாய் வந்துபோய்க்கொண்டிருந்தேன். பதின்மங்களில் இருந்த பருவம். எல்லாவற்றையும் மூர்க்கமாய் நிராகரித்துக்கொண்டு நான் மட்டும் சொல்வது/செய்வதே சரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த காலமது. நானும் வசியண்ணாவும் அடிக்கடி அரசியல் பேசி சூடாகிக் கொண்டிருப்போம். அவருக்கு எங்கடை பிரச்சினையில் நிதானமாய் இந்தியாவை அணுகியிருக்கவேணும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. அதாவது இந்தியாவோடு அணுசரணையாய் இருந்திருந்தால் எங்கடை பிரச்சினை எப்பவோ தீர்ந்திருக்குமென்பது அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. எங்கடை இந்த முரண் அரசியல் விவாதங்களை சிலவேளைகளில் செவிமடுக்கிற ஹேமாக்கா, 'உங்கள் இரண்டுபேராலையே ஒரு விசயத்துக்கு பொதுவான முடிவுக்கு வரமுடியாது இருக்கும்போது எப்படித்தான் எங்கடை சனத்துக்கு எல்லாம் பொதுவாய் வாற தீர்வு கிடைக்கப்போகின்றதோ தெரியாது' என்று சிரித்துக்கொண்டு சொல்லுவா.
ஒருநாள் இப்படித்தான் வழமைபோல அரசியல் பேசி நான் மிகவும் கொந்தளித்துக்கொண்டிருநத நேரம். அந்த நேரத்தில் வசியண்ணாவை அடித்தால் கூடப் பரவாயில்லை என்றமாதிரி அவர் மீதான கோபம் நாடி நரம்புகளில் ஏறிக்கொண்டிருந்தபோது என்னையறியாமலே, 'நீங்கள் ஒரு மனுசரே, எங்கடை ஹேமாக்காவை இந்தியன் ஆமி கெடுத்தாப்பிறகும் அவங்களைச் சப்போர்ட் பண்ணிக்கொண்டிருக்கிறியள்' என்றேன். எனக்கே நான் என்ன சொன்னேன் என்று அறியமுடியாத உணர்ச்சியின் கொந்தளிப்பு. யாரோ கன்னத்தில் படாரென்று அறிந்தமாதிரி சட்டென்று எங்கள் எல்லோருக்குள்ளும் தாங்கிக்கொள்ளவே முடியாத மிகப்பெரும் மவுனம் கவிழ்ந்திருந்தது. அதுவரை வாஞ்சையோடு என்னைப் பார்க்கும் ஹேமாக்காவின் விழிகள் அப்படியே உறைந்துபோயிருந்தது; என்ன விதமான உணர்ச்சியென்று இனம்பிரித்தறியா முடியாதளவுக்கு நான் குற்றத்தின் கடலுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தேன். எதுவுமே சொல்லாமல் எவரிடமும் முறையாக விடைபெறாது நான் வீட்டை போய்ச் சேர்ந்திருந்தேன்.
அடுத்த நாள் விடிய அம்மா, 'டேய் தம்பி ஹேமாக்கா குளத்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு சனம் சொல்லுது... ஓடிப்போய் என்ன நடந்ததெண்டு பார்த்திட்டு வான்று படபடவென்டு கையால் தட்டி எழுப்புகிறா. நான் வோடன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட வேகமாய் என்ன நடந்தது என்டு அறிய சைக்கிளையெடுத்துக்கொண்டு ஓடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்டும் நடந்திருக்கக்கூடாது என்டு எஙகடை ஊர் வைரவரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குளத்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வருகினம். 'ஐயோ ஹேமாக்கா குளத்துக்குள்ளை குதிச்சிட்டா எல்லோரும் ஓடிவாங்கோ' என்டு சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்ப கத்தமுடியாது நான் உறைந்துபோய் நிற்கின்றேன். வசியண்ணா என்ரை கையைப்பிடித்துக்கொண்டு, 'இந்தியன் ஆமி உம்மளை கெடுத்தது பற்றி இதுவரை ஏன் என்னட்டை சொல்லேலை என்டு மட்டுந்தான் கேட்டனான் வேறொன்றுமே கேட்கவில்லை. ஒன்டுமே பேசாமல் இருந்தவா இப்படிச் செய்வா என்டு நான் கனவிலையும் நினைத்துப் பார்க்கவிலலை என்று நடுங்கும் குரலில் சொல்லிக்கொண்டு இருந்தது எனக்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிறது. 'ஹேமாக்கா எழும்புங்கோ நான் வந்திருக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா உங்களுக்கு அன்டைக்கு ஆமி அப்படிச் செய்ததைப் பார்த்தபோது நான் அவ்வளவு காலமும் கவனமாய்ப் பொத்திவைத்திருந்த கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கினவன்.... நீங்கள் எப்பவும் எங்கடை ஹேமாக்காதான். எழும்புங்கோ...எழும்புங்கோ' என்டு மனம் விடடுக்குழறி அழவேண்டும் போல இருக்கிறது. கொலைகளைச் செய்தவர்களால் மனதை லேசாக்க அழமுடியவதில்லை; உள்ளுக்குள்ளேயே மறுகி உருகி தங்களின்ரை பாவங்கள் எப்பவாவது கரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.