கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசிப்பு:'பெரிய‌ எழுத்து'

Wednesday, December 17, 2008

'பெரிய‌ எழுத்து' சிறுக‌தைத் தொகுப்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வாழும் த‌.ம‌ல‌ர்ச்செல்வ‌னால் தொகுப்ப‌ட்ட‌ 12 சிறுக‌தைக‌ள் கொண்ட‌ ஒரு தொகுப்பு. போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம். தொட‌ர்ச்சியான‌ போர்சூழ‌லில் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இல‌த்தீன் அமெரிக்கா நாடுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள‌து ஆதிக்க‌தைக‌ளின் நீட்சிக‌ளோடு நிகழ்கால‌த்தை ம‌றைமுக‌மாய் உண‌ர்த்தும்வித‌மாய் எழுந்த‌ மாய‌ யதாத்த‌ எழுத்துக்க‌ளைப்போல‌, ஏனின்னும் தீவிர‌மான‌ -யதார்த்த‌ எழுத்தைத்தாண்டிய‌- எழுத்து முறை ஈழ‌த்திலிருந்து எழ‌வில்லையென்ப‌து ந‌ம் எல்லோருக்கும் முனனாள் உள்ள‌ ச‌வால். அண்மைக்கால‌மாய் மாய‌ ய‌தார்த்த‌க் க‌தைக‌ளை இராக‌வ‌ன், திசேரா போன்ற‌வ‌ர்க‌ள் எழுத‌ முய‌ற்சிக்கின்றார்க‌ள். அவ்வாறான‌ நீட்சியில் வ‌ருகின்றவ‌ர்தான் த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன். அவ‌ரே முன்னுரையில் கூறுவ‌தைப்போல‌, 'எல்லாம் போக‌ க‌தை என‌க்குள் உருவாகிக்கொண்டிருக்கின்ற‌ கால‌த்தில் இத்தொகுப்பு வ‌ந்திருக்கின்ற‌து. நான் க‌ட‌க்க‌ வேண்டிய‌ தூர‌ம் க‌ண்ணுக்கெட்டாத தூர‌த்திலுள்ள‌து' என்ப‌தை விள‌ங்கிக்கொண்டால், இக்க‌தைக‌ளை ஒரு ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சியென‌வும் அடுத்துவ‌ரும் தொகுப்புக்க‌ளில் சிற‌ந்த‌ க‌தைக‌ளை எழுதலாம் என்று ந‌ம்புவ‌த‌ற்கான‌ புள்ளிக‌ள் இத்தொகுப்பில் தென்ப‌டுகின்ற‌ன‌.

இத்தொகுப்பில் சில‌ க‌தைக‌ளை ஈழ‌த்து நிலைமைக‌ளின் கார‌ண‌மாக‌ சேர்க்க‌வில்லையென‌வும், எழுதிய‌ ஒரு க‌தைக்காய் ஒரு கும்ப‌லின் தாக்குத‌லிலிருந்து ம‌யிரிழையில் த‌ப்பினேன் என்ற‌ குறிப்புக்க‌ளோடே நாம் இத்தொகுப்பில் நுழைவ‌து நேர்மையாக‌விருக்கும். இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் பொதுப்ப‌ரீட்சை எழுத‌முடியாது அக‌தியாய் அலைந்த‌ ம‌ல‌ர்ச்செல‌வ‌னின் க‌தையொன்று இத்தொகுப்பில் இல்லாத‌து உண்மையிலேயே இழ‌ப்புத்தான். இத்தொகுப்பின் முத‌ற்க‌தை 'ம‌ஞ்ச‌ள் வரி க‌றுப்பு வ‌ரி' துட்ட‌கைமுனு எல்லாள‌ன் க‌தையை மீள‌வும் வேறொரு கோண‌த்தில் பார்க்கிற‌து. துட்ட‌கைமுனு என்ப‌வ‌ன் ஒரு 'கிழ‌ட்டுப் புலி'யைப் பிடிக்கின்றான், அது நிக‌ழ்கால‌த்தில் வ‌ழ‌க்கில் இல்லாத‌ மொழியைப் பேசுகிற‌து. புலி பேசும் மொழியை அறிய‌ மொழி அறிஞ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள். 'நீ பிடித்திருக்கும் இது புலிய‌ல்ல‌, ஒரு முதிய‌வ‌ன்' என்கின்ற‌ன‌ர் அவ‌ர்க‌ள். இல்லை கிழ‌ட்டுப் புலிதானென‌ துட்ட‌கைமுனு குர‌லெழுப்பிக்கொண்டிருக்கின்றான‌. மொழி அறிஞ‌ர்க‌ள் இறுதியில் முன்னொரு கால‌த்தில் பேச‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் மொழியையே இக்கிழ‌வ‌ன் பேசுகின்றான் என்கின்றார்க‌ள். இக்கிழ‌ட்டுப்புலியால் ம‌க்க‌ளுக்கு ஆப‌த்து; சிறைக்குள் அடைக்க‌வேண்டுமென‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுக்கும் துட்ட‌கைமுனுவிட‌ம் அவ்வாறு நிரூபிக்க‌ உரிய‌ சாட்சிய‌ங்க‌ள் இல்லையென‌ நீதிம‌ன்ற‌ம் அக்கிழ‌வ‌னை விடுத‌லை செய்கின்ற‌து. இறுதியில் துட்ட‌கைமுனு அக்கிழ‌வ‌னைக் கூண்டிலிருந்து விடுவித்து வ‌ட‌க்கு நோக்குப் போகும்ப‌டித்துர‌த்தி விடுகின்றான். கிழ‌வ‌ன் ஒரு ப‌தினெட்டு வ‌ய‌து இளைஞ‌னாக‌ மாறியப‌டி வ‌ட‌க்கிற்குப் போவ‌தை துட்ட‌கைமுனு திகைத்த‌ப‌டி பார்த்த‌ப‌டியிருக்கின்றான். இன்ன‌மும் செதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ வ்ந்திருக்க‌லாம் என்றாலும் இத்தொகுப்பிலிருக்கும் முக்கிய‌மான‌ ஒரு க‌தையென‌க்க் குறிப்பிட‌வேண்டும்.

'பெரிய‌ எழுத்து' க‌தை, புதுமையை எழுத்தில் விரும்புகின்ற‌ ப‌டைப்பாளிக்கும் ப‌ழ‌மையை இன்ன‌மும் பிடித்துக்கொண்டிருக்க‌ விரும்பும் ப‌டைப்பாளிக‌ளுக்குமிடையிலிருக்கும் முர‌ண்பாடுக‌ளை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கின்ற‌ க‌தை. ம‌ல‌ர்செல்வ‌னுக்கு ஜே.பி.சாண‌க்கியாவின் க‌தைக‌ள் அதிக‌ம் பிடிக்கும் போலும். இக்கதை முழுதும் அவ‌ர‌து ப‌டைப்புக்க‌ளைப் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளே வ‌ருகின்ற‌ன‌. த‌மிழ‌வ‌னின் 'ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளும்', கோண‌ங்கியில் 'பாழி'யும் கூட‌ வ‌ருகின்ற‌ன‌. சாண‌க்கியாவின் மீதோ ந‌வீன‌/பின் ந‌வீன‌ எழுத்து முறைக‌ள் மீதோ ஈர்ப்பிருப்ப‌தில் த‌வ‌றுமில்லை. அதை நாம் இன்னொருவ‌ர் மீது திணித்த‌லை அல்ல‌து நாம் விரும்புவ‌தை பிற‌ரும் விரும்ப‌வேண்டும் என்று எண்ணுவ‌தை ஒரு வாசிப்பு நிலை சார்ந்த‌ வ‌ன்முறையாக‌வே பார்க்க‌வேண்டியிருக்கிற‌து. இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணை வாசிப்ப‌தில் விருப்ப‌ம‌ற்ற‌ அல்ல‌து இர‌ம‌ணிச்ச‌ந்திர‌னை வாசிப்ப‌தோடு திருப்திகொள்கின்ற‌வ‌ராக‌ இருப்ப‌து ப‌டைப்பாளிக்கு அலுப்பூட்டுகின்ற‌து. ஒருநாள் வித்தியாச‌மாய், எழுததாளனின் துணைவியார் வ‌ழ‌க்கமாய் வாசிக்கும் வெகுச‌ன‌ நூலைப்படிக்காது வேறொரு நூலை வாசிப்ப‌தைப் பார்த்து இவ் எழுத்தாள‌ன், சாண‌க்யாவின் 'ஆண்க‌ளின் ப‌டித்துறை'யை வாசிக்க‌க்கொடுக்கின்றான‌. துணைவியார், 'பொம்பிளய‌ப் ப‌ற்றி ஜே.பி.சாண‌க்யா என்ன‌ எழுதியிருக்கான்? செருப்ப‌லை அடிப்ப‌ன் அவ‌னை' என்ப‌தை இதொரு இன்னொரு வாச‌க‌ரின் பார்வையென‌ ஏற்றுக்கொள்ள‌முடியாது போவ‌தில்தான் எம‌க்கு ம‌ல‌ர்ச்செல‌வ‌னோடான‌ முர‌ண்க‌ள் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் ஆண்க‌ளே இதுவ‌ரையும் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்ற‌ புரித‌ல் வ‌ந்தால் நாம் இக்க‌தையின் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணைவியின் குர‌லை ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டியிருக்கின்ற‌து. இவவிட‌ய‌த்தில் அல்ல‌, வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான‌ போர்னோ போன்ற‌வை கூட‌ இதுவ‌ரைகால‌மும் ஆண்க‌ளுக்காய் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தென‌ சில‌ பெண்க‌ள் பெண்க‌ளுக்கான‌ த‌னித்த‌ போர்னோக்க‌ளையை உருவாக்க‌ முய‌ற்சிக்கின்ற‌போது, ஆண் ப‌டைப்பாளிக‌ளால் பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் எழுதிவிட‌முடியும் என்று இன்ன‌மும் ந‌ம்பிக்கொண்டிருக்க‌முடியுமா என்று இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளி யோசித்திருப்பாராயின் 'செருப்பால‌டிப்ப‌தையும்' ஒரு உட‌ன‌டி எதிர்வினையாக‌ புரிந்துகொள்ள‌லாம். ஒரு ப‌டைப்பாளிக்கு த‌ன் ப‌டைப்பு குறித்த‌, த‌ன‌து தேர்வுகள் குறித்த‌ க‌ர்வ‌மோ பெருமையோ இருப்ப‌தில் த‌வ‌றேதுமில்லை. ஆனால் த‌ன்னைச் சுற்றியிருப்போரும் அப்ப‌டியே இருக்க‌வேண்டும் என்று விரும்புவ‌து அல்ல‌து தான் நினைத்துக்கொண்டிருப்ப‌வை ம‌ட்டுமே மேன்மையான‌து என்று நினைக்கும்போதுதான் நாம் கேள்விக‌ள் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌ன‌. இந்த‌க்க‌தையின் பேசுபொருளைப் போல‌வே இன்னொரு க‌தையான‌ 'க‌விதை + க‌தை = அப்ப‌றை'யும் பாலிய‌ல் சுத‌ந்திர‌மாய் பேச‌ப்ப‌ட‌ முடியாத‌ அவ‌தியைப் ப‌ற்றிப் பேசுகின்ற‌து. ஆனால் க‌தை முழுதும் சுகிர்த‌ராணியின், க‌லாவின், ச‌ண்முக‌ம் சிவ‌லிங்க‌த்தின், ற‌ஷ்மியின் க‌விதைக‌ள் நிர‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப் பேசியிருக்கின்றார்க‌ள் நான் எழுதினால் ம‌ட்டுமா பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென்ற‌ ஒரு ப‌ரிதாப‌க்குர‌லை அக்க‌தை வேண்டி நிற்கின்ற‌து. ஈழ‌த்தில் எஸ்.பொ எத்த‌னையோ த‌சாப்த‌ங்க‌ளுக்கு முன்னே 'தீ'யிலும் 'ச‌ட‌ங்கிலும்' இவ‌ற்றை நிக‌ழ்த்திக்காட்டிவிட்டார் என்ப‌தையும் ம‌ல‌ர்ச்செல‌வ‌னுக்கு நினைவுபடுத்த‌வேண்டியிருக்கிற‌து.

'குறி நீள்கின்ற‌ ம‌ர‌ம்' கிழ‌க்கில் ந‌ட‌க்கும் சிங்க‌ள‌க்குடியேற்ற‌ங்க‌ளைப் ப‌ற்றி ம‌றைமுக‌மாய்ப் பேசுகின்ற‌து. ஒர‌ளவு இன‌த்துவேச‌மாய் மாறிவிட‌க்கூடிய‌ க‌தையாக‌ இருந்தாலும், இக்க‌தையின் பேசுபொருள் முக்கிய்மான‌தொன்றே. 'நரிச்சிங்க‌ங்க‌ள்' என்ற‌ க‌தை தேர்த‌ல் அர‌சிய‌லில் இற‌ங்கி ம‌க்க‌ளை ஏமாற்றுகின்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை ந‌க்க‌ல‌டித்து எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'ம‌ண்' க‌தை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ட‌ற்க‌ரையோர‌ங்க‌ளில் ம‌ண‌ல் அள்ள‌ப்ப‌ட்டு க‌ட‌ல்ரிப்பால் நீரால் விழுங்க‌ப்ப‌ட‌விருக்கும் கிராம‌ங்க‌ளைச் சூழ‌கின்ற‌ அபாய‌ங்க‌ள் குறித்துப் பேசுகின்ற‌து. த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன் ஏற்க‌ன‌வே ஒரு க‌விதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கின்றார் என்று ஏற்க‌ன‌வே கேள்விப்ப‌ட்டிருக்கின்றேன். இஃது அவ‌ரின் இர‌ண்டாவ‌து தொகுப்பாய் இருக்க‌க்கூடும். ஈழ‌த்தின் இன்றைய‌ அவ‌ல‌ நிலைக்குள்ளிலிருந்து இவ்வாறான‌ ப‌டைப்பூக்க‌ ம‌னோநிலையைத் த‌க்க‌வைப்ப‌தென்ப‌து அவ்வ‌ளவு இல‌குவில்லை. ஈழ‌த்துக்கும் வெளியுல‌கிற்குமான‌ தொட‌ர்புக‌ளில் பெரும் இடைவெளிக‌ள் வ‌ந்துவிட்ட‌த‌ன்பின், இவ்வாறான‌ தொகுப்புக்க‌ள் அங்கிருக்கும் சாதார‌ண‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌னோநிலையில் இருக்கின்றார்க‌ள் எனப‌தை நாங்க‌ள் அறிய‌வாவ‌து உத‌வ‌க்கூடும். அந்த‌வ‌கையில் ஈழ‌த்திலிருந்து வெளியாகும் ப‌டைப்புக்க‌ளை 'ந‌ம‌து உள்ளொளி க‌ட‌ந்த‌ ஞான‌த்தால்' ம‌ட்டும் பார்க்காது, முன்னேயிருக்கும் நிலைமைக‌ளை முன்வைத்தும் பார்க்க‌க்கூடிய‌தாய் நம‌து வாசிப்பு முறைக‌ளை மாற்றிக்கொள்வ‌தும் அவ‌சிய‌மாகின்ற‌து.

2 comments:

அருண்மொழிவர்மன் said...

//போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம்//

உண்மைதான். கருத்து சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுவிட்ட அந்த பூமியில் இருந்து எத்தனை திறமையான கலைஞன் ஆக இருந்தாலும் கூட முழுமையான ஒரு படைப்பை செய்யமுடியாது. நீங்கள் சொன்ன “பெரிய எழுத்தை” இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. அதனால் என்னால் எதுவித விமர்சனத்தையும் முன்வைக்கமுடியவில்லை. இங்கே அந்த புத்தகம் கிடைக்கின்றதா?. அப்படி கிடைத்தால் எங்கே என்று சொல்லுங்கள்.

12/17/2008 08:41:00 PM
இளங்கோ-டிசே said...

அருண்...,
நீங்க‌ள் கோபி கிருஷ்ண‌னின் 'இடாகினிப் பேய்க‌ள்' வாங்கிய‌ அன்றுதான் செல்வ‌த்திட‌ம் இத்தொகுப்பை வாங்கியிருந்தேன். பெரிய‌ எழுத்தின் ஒன்றிர‌ண்டு பிர‌திக‌ளைத்தான் அங்கே பார்த்த‌தாய் ஞாப‌க‌ம். கிடைக்காவிட்டால் சொல்லுங்க‌ள்; ச‌ந்திக்கும்போது இப்புத்த‌க‌த்தைக் கொண்டுவ‌ந்து த‌ருகின்றேன். ம‌ற்ற‌து ஜெய‌மோக‌னின் 'கொற்ற‌வை' தேடிக்கொண்டிருக்கின்றேன்; இருந்தால் சொல்லுங்க‌ள் :-).

12/18/2008 08:53:00 AM