'...இவன் பிற்காலத்தில் தேவாரம் பாடுவதை நிறுத்திவிட்டு உதைபந்தாட்டத்தில் பிரபல்யம் அடைந்தவன். அவனுடைய இலட்சியம் எல்லாம் எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவையும் பிரயோகித்து பந்தை உயரத்துக்கு அடிப்பது. குறிப்பாக அது சூரியனிடம் போக வேண்டும்; குறைந்தபட்சம் அதை மறைக்க வேண்டும். பார்வையாளர்கள் எல்லாம் கழுத்தை முறித்து இரண்டு நிமிடம் மேலே பார்க்க வேண்டும். எதிர் சைட்டில் கவிழ்த்து வைத்த ப வடிவத்தில் ஒரு கோல் போஸ்ட் இருப்பதோ, அதற்குள் பந்தை அடித்தால் ஒரு கோல் கிடைக்கும் என்பதோ, கோல்களை எண்ணியே வெற்றி நிச்ச்யிக்கப்படுகின்றது என்பதோ அவனுக்கு பொருட்டில்லை. பந்து காலில்பட்டால் அது உயரத்துக்கு எழும்பவேண்டும் என்பதே குறிக்கோள்.
(பக்கம் 45)
1.
எல்லோருக்கும் சொல்வதற்கு நிறையக் கதைகள் கைவசமிருக்கின்றன. அவ்வாறு தமது கதைகளை எழுத்தில் பதிவு செய்தவர்கள் என்று பார்த்தால் அவர்கள் மிகக்குறைவே. அந்தக் குறைவானவர்களிலும் நுட்பமாகவும், சுவாரசியமாகவும் தம் கதைகளைப் பகிர்ந்துகொண்டவர்களென்றால் இன்னும் மிகச் சொற்பமே. தமிழ்ச்சூழலில் சாதாரணங்களின் கதையை அசாதாரணமாக்கிய கதைசொல்லியாக மட்டுமில்லாது, நாம் கடந்துவந்த/தவறவிட்ட எளிய விடயங்களைக் கூட அழகியலோடு பதிவுசெய்தவர்களில் முக்கியமான ஒருவர் அ.முத்துலிங்கம். பெரும்பான்மையான ஈழத்தமிழ் படைப்பாளிகளின் எழுத்துக்களின் உள்ளே -உலர்ந்துபோன நதியாய் வறண்டுபோன- அங்கதத்தை மிக முக்கிய கூறாய் தன் படைப்புக்களில் முன்னிலைப்படுத்தியவர் அ.முத்துலிங்கம். இவ்வாறாக அவர் படைப்புக்களில் ஊற்றெடுக்கும் நகைச்சுவையும், எளிமையான வார்த்தைகளிலான கதை சொல்லலும், அளவுக்கதிமான வர்ணனையில்லாது நறுக்கென்று சம்பவங்களைக் கடந்துசெல்லலுமே அ.முத்துலிங்கத்திற்கு பரவலான வாசகர்களைக் கொண்டுவந்து சேர்த்துமிருக்கின்றது. ஈழப்போர் உக்கிரமடைய முன்னரான 83ற்கு முன் (70களில்) பொருளாதார நிமித்தம் இடம்பெயர்ந்த அ.முத்துலிங்கத்தின் எழுத்து நடைக்கு வெவ்வேறு தேசங்களில் பணிபுரிநத/வாழ்ந்த அனுபவமும், அந்நாடுகளின் பண்பாட்டுச் சூழலும் இன்னும் வளஞ்சேர்ப்பவையாக இருக்கின்றன.
'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' ஒரு நாவலெனக் குறிப்பிடப்பட்டாலும், இஃதொரு புனைவு சேர்ந்தூட்டப்பட்ட சுயசரிதைக்குறிப்புகள் என்பதை எளிதாக ஒருவர் அடையாளங்கண்டுகொள்ள முடியும். இந்நாவல் ஆரம்பிப்பதற்கு முன், 'இந்நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனையே. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டுபிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்' என்று வீணாக ஒரு பக்கத்தை அ.முத்துலிங்கம் வீணடித்தற்கு பதில், இஃதொரு ஆட்டோ பிகசன் (Auto-Fiction) என்று ஒற்றை வரியில் எழுதிவிட்டு நகர்ந்திருக்கலாம். மேலும் நாவலெனக் குறிப்பிடப்படும் (உண்மை கலந்த நாட்குறிப்புகள்/ நாவல்/ அ.முத்துலிங்கம்) ஒரு படைப்பில் 'உண்மை'களை வாசகர் தேடக்கூடும் என்று அ.மு அஞ்சுமளவுக்கு வாசகர் மீது அ.முவிற்கு நம்பிக்கையில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது.
ஒரு படைப்புக்குள் நுழையமுன்னர் இவற்றையெல்லாம் பார்க்கவேண்டுமா என்ற அலுப்பு வாசிக்கும் நமக்கு ஏற்படலாம். எவ்வாறு ஜெயமோகனின் படைப்புக்களுக்குள் போவதற்கு முன்னர், எப்படி அவரது முன்னுரைகள் எம்மைச் சோர்வடையச் செய்யுமோ அவ்வாறே, இவ்வாறான அதிகப் பிரசங்கங்களும் வாசிப்பதற்கு முன் இடையூறுகளாய் விடுகின்றன. அநேகமாய் தமிழ்ச்சூழலில் எழுதுகின்ற படைப்பாளிகள் எல்லோருமே, தம் படைப்புக்கள் தொகுப்பாய் பதிப்பிக்கப்பட்டபின் அது வாசகர்களுக்குச் சொந்தமாகிவிடுகின்றது என்பதை மட்டும் அடிக்கடி நினைவூட்டிவிட்டு, அதேபோக்கில் வாசகர்களையும் தாம் நினைப்பது மாதிரியே வாசிக்கவேண்டும் என்றும் பாடசாலை ஆசிரியர்களைப் போல அதட்டுகின்றனர்.
2.
'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' யாழ்ப்பாணத்தில் (கொக்குவிலில்) ஆரம்பித்து கொழும்புக்கு நகர்ந்து பிறகு ஆபிரிக்காக் கண்டநாடுகளான சியரா லியோன், சோமாலியா, கென்யாவுக்கும், ஆசிய கண்ட நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கும், பின்னர் வட அமெரிக்காக் கண்ட நாடுகளான கனடா, ஜக்கிய அமெரிக்காவென பலவேறு நிலப்பரப்புகளை ஊடுருவிச் செல்கின்றது. ஆரம்பத்திலிருந்தே கதைசொல்லியே எல்லாக் கதைகளிலும் வருகின்றார். சில இடங்களில் அவரே ஒரு பாத்திரமாகவும், சில இடங்களில் அவர் ஒதுங்கி நின்று பிறரது கதையைக் கூறுபவராகவும் இருக்கின்றார். நாவலென்ற வடிவம் குறித்து பலவேறு விதமான நிலைப்பாடுகள் இருக்கும்போது இஃதொரு நாவல் வடிவததைச் சேர்ந்ததா இல்லையா என்ற வாத பிரதிவாதங்களை ஒதுக்கிவைத்துப் பார்த்தாலும், இந்நாவல் பல்வேறு சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு என்ற எண்ணமே வாசிக்கும்போது வருகின்றது. நாற்பத்தைந்து அத்தியாங்கள் கொண்ட ஒரு நாவலாக இது இருந்தாலும், ஒவ்வொரு அத்தியாங்களுக்கும் தலைப்பு இடப்பட்டிருக்கின்றது. இன்றைய நாவல் உலகில் இவ்வாறு ஒவ்வொரு அத்தியாங்களுக்கும் தலைப்பிட்டு வருவது என்பது மிக அரிதே.
இவற்றையெல்லாம் தவிர்த்து நாவலுக்குள் நாம் நுழைந்தால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வாசிப்பவரை அவர்கள் அறியாது சிரிக்க வைப்பதற்கு அ.முத்துலிங்கத்திற்கு ஒரு சம்பவமோ, சிலவேளைகளில் சில வரிகளோ கூட போதமானதாயிருக்கின்றது. வாசிக்கும் நீங்கள் இந்நாவலை எத்தகைய சூழ்நிலையில் விரித்து வாசிக்கத் தொடங்கினாலும் உங்களையறியாமலே சிரிக்க வைத்துவிடும் நுட்பத்தில்தான் அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் முக்கியத்துவம் வாய்ந்தாகிவிடுகின்றது. முதல் அத்தியாயத்தில் நல்லூர்
கோயில் திருவிழாவில் தொலைகின்ற அம்மாவைப் பற்றிய கதை, எனக்கு சிறுவயதில் வாசித்த முல்க்ராஜ் ஆனந்தனின் பெற்றோரைத் தொலைத்த குழந்தையொன்றின் கதையை நினைவுபடுத்தினாலும், இவ்வாறான விழாக்களில் குழந்தைகள்/பெற்றோர் தொலைவதும், கண்டுபிடிக்கப்படுவதுமென -சொலவதற்கென- எல்லோரிடம் நிறையச் சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதல் சில அத்தியாங்கள் அம்மா,அய்யா, அக்கா, ஆசிரியர், பாடசாலை போன்றவற்றைச் சுற்றியும், கைவிசேடம் பெறுதல், போர்ததேங்காய் அடித்தல் போன்ற ஒரளவு யாழ்ப்பாணத்துக்குரியதான பண்பாட்டுச் சூழல் பற்றியும் பேசுகின்றன.
அறுபதுகளில் எழுதப்பட்ட எஸ்.பொவின் சடங்கு, யாழ் மத்தியதர வர்க்கத்தின் பாலியல் சார்ந்த அவதிகளை மிக நுட்பமாக பதிவு செய்ததோடு, யாழ்ப்பாணப் பெண்களின் சுய இன்பம் காணுதல் குறித்தும் பேசியிருக்கின்றது. அதேபோன்று அ.முத்துலிங்கத்தின் இந்நாவலிலும் ஒரு அத்தியாயம், ஐம்பதுகளில் பாடசாலை விடுதிகளிலிருந்த ஆண்களுக்கிடையிலான ஓரினப்பால் உறவுகளைப் பற்றி (மறைமுகமாய்ப்) பேசுகின்றது. ஒருவித அக்கறையோடு அ.முத்துலிங்கம் இதைப் பதிவுசெய்தாலும், எஸ்.பொ சடங்கில் பதிவு செய்ததைப் போலவன்றி, இவ்வாறான விடயங்களைப் பதிவு செய்வதில் ஒரு வித தயக்கம் அ.முவிற்கு அவரவளவிலேயே இருக்கின்றது என்பது போல, வாசிக்கும்போது தோன்றுகின்றது. ஆனால் இந்த விடுதிகளில் சிங்கள மாணவர்கள் தங்கியிருந்ததையும், பல பாடசாலைகளில் வேறு நாடுகளிலிருந்து (இந்தியா, சிங்கப்பூர்) வந்து ஆசிரியர்கள் கற்பித்ததையும் அறியும்போது -போரோடு பிறந்த தலைமுறையைச் சேர்ந்த- எங்களுக்கு மிகப்பெரும் கனவாகத்தான் தெரிகின்றது.
மிக இள வயதிலேயே (13) கதைசொல்லியின் தாயார் இறந்துவிட மூத்த அண்ணாவின் அரவணைப்பிலேயே இவரது குடும்பம் வளர்கின்றது. கதைசொல்லியின் அண்ணா கொழும்பில் இருக்கும்போது அவருக்கு வருகின்ற பெயர் தெரியாத நோயிற்கு, எந்தச் சிகிச்சையும் பயனளிக்காது அவர் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடைகின்றவேளையில், யாரோ தற்செயலாய் வரும் ஒருவரின் அறிவுரையில் அண்ணா படுக்கும் கட்டிலோடு ஒரு ஆடு கட்டிவிடப்படுகின்றது. அந்த ஆடு அண்ணாவின் அறைக்குள்ளேயே ஒன்றாக இருந்து சில வாரங்களில் இறந்துபோகையில் எவராலும் குணப்படுத்த முடியாத அண்ணாவின் நோய் குணமடைகின்றது. அந்த ஆடுதான் நோயை தன்னோடு எடுத்துச் சென்றிருக்கும் என்றும், ஆனால் பிற்காலத்தில் அந்த ஆட்டைப் பற்றிக் கேட்டால் முகம் இருளடைகின்ற அண்ணாவின் பாத்திரமும் மாய யதார்த்த வகைக்குள் அடங்கக்கூடியது. அதேபோன்று பின் அத்தியாயங்களில் பொஸ்ரனில் கதைசொல்லியின் மகள் நீண்ட காலத்திற்கு கருத்தரிக்காது இருக்கும்போது, அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளின் நம்பிக்கைப்படி குதிரைக்கு உணவூட்டினால் பெண் கர்ப்பமடைவாள் என்பதற்கிணங்க, கதைசொல்லியுடன் சென்று மகள் உணவூட்டுவதும், பின்னர் மகளுக்கு ஒரு மகள் பிறக்கும்போது எப்போது மகள் கருவுற்றிருப்பார் என்று பின்னோக்கிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட குதிரைக்கு உணவூட்டிய காலத்தில்... என்று கதைசொல்லி வியப்பதும் பகுத்தறிவுக்கு அப்பால் மனம் நீட்சியடைந்து வியந்துகொள்கின்ற பகுதிகளாகும்.
1958ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இனக்கலவரத்திலிருந்து கொழும்பிலிருந்து தப்பி கப்பலில் கதை சொல்லி யாழ் செல்கின்றார் . பிறகு மீண்டும் ஒரு வருடத்தில் கொழும்புக்குத் திரும்பி, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நண்பனுக்கு 'காதல் துரோகி'யாவதும், பின்னர் சாட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகி சிங்களவர்கள் நிர்வகிக்கும் நிறுவனத்தில் -கணக்காய்வாளராகப் பணிபுரிகையில்- நடக்கும் சம்பவங்களும் சுவாரசியமானவை. இலங்கையில் இருக்கும்போது நிறுவனங்களில் கணக்கு வழக்குகளில் நடக்கும் தகிடுதித்தங்கள் போன்று ஆபிரிக்கா நாடுகளிலும் நடக்கும்போது அவற்றை எப்படி எதிர்கொள்கின்றார் என்பதும், கடந்துபோகின்றார் என்பதையும்... அவற்றுக்கூடாக அம்மக்களின் குடும்ப விழுமியங்களையும், பண்பாட்டுச் சூழல்களையும் சொல்ல முயல்வதுமென நாவலின் நடுப்பாகங்கள் நகர்கின்றன. பெரும் நிறுவனங்களில் இருக்கும் அதிகாரிகள் இவ்வாறான திருட்டுகளைச் செய்யும்போது, வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை விட வங்கிகளை நிர்வகிப்பவர்களே அதிகம் கொள்ளையடிப்பவர்கள் என்றொரு கவிஞர் ஏதோவொரு புரட்சிச்சூழலில் சொன்னது நினைவில் வந்துபோகின்றது.
3.
நாவலின் பிற்பகுதி கதைசொல்லி எப்படி கனடாவிற்கு வந்து இன்னொரு புதிய சூழலுக்குத் தன்னை தகவமைத்துக் கொள்கின்றார் என்பதையும், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தனது மகள்/பேரப்பிள்ளை என்பவர்களினூடான அனுபவங்களையும் பேசுகின்றன. யாழில் அத்தியாவசியமான சைக்கிள், இங்கே பொழுதுபோக்கிற்காய் ஆகிப்போனது பற்றிப் பேசும் ஓர் அத்தியாயத்தில், கதை சொல்லி சைக்கிளை எப்படி ஓடப்பழகினார் என்ற பகுதி மிகுந்த நகைச்சுவையானது. இந்த அத்தியாயம், வாசிக்கும் எல்லோரையும் அவரவர் தாங்கள் சைக்கிளை முதன் முதலாய் ஓடிப்போன காலத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லும் தன்மை வாய்நத்து.
ஓரிடத்தில், கதைசொல்லி தனது டயரியில் இறந்துபோன நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை அழிக்கும்போது, இப்போது உயிருடன் இருப்பவர்களை விட உயிருடன் இல்லாதவர்களின் எண்ணிக்கையே அதிகமாய் இருக்கின்றது என்கின்றபோது சட்டென்று உணர்வு நிலை மாறி மிகப்பெரும் வெறுமை நம்மையும் தொற்றிக்கொள்கின்றது. அதேபோன்று இன்னொரு அத்தியாயத்தில் புத்தக வாசிப்பைப் பற்றிக்குறிப்பிடும்போது, கதைசொல்லி தனக்கு மிகப்பிடித்தமாய் ஏதாவது வரிகளை யாராவது எழுதியிருந்தால் தனக்கு கையால் தலையில் அடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று சொல்லி, இப்போது 'என்னையறியாமல் தலையில் அடிப்பதும் அதிகமாகிக்கொண்டு வருகின்றது. என்னுடைய எஞ்சிய வாழ்நாள் மட்டும் குறைந்து போகின்றது' என்று முடிக்கும்போது மனதொரு கணம் கனத்து நகர்கின்றது.
நகைச்சுவையும் -அவ்வப்போது எள்ளலும்- இந்நாவல் முழுதும் தொடர்ந்து ஒரு நதியாக ஓடி வாசிப்பவர்களைக் குளிரவைத்துக்கொண்டேயிருக்கிறது. இந்நாவலில் வரும் கதா மாந்தர்களின் பலவேறுவிதமான அழுக்காறுகளையும், கசடுகளையும் இந்தப் பகிடி ஆறு அள்ளியெறிந்துகொண்டு போவதால் அநேகமான மனிதர்களை அவர்களின் இயல்புகளோடு நேசிக்க முடிகின்றது. அ.முத்துலிங்கத்தின் கதையுலகில் வெறுக்கப்பட்ட மனிதர்கள் என்று எவருமே இருப்பதில்லை. இங்கும் கொழும்பில் கதைசொல்லி தனது வேலை நேர்காணல் ஒன்றுக்குப் போவதற்காய் மடித்து வைத்திருந்த புதிய ஆடைகளை, இரவில் தங்கி நின்ற நண்பன் விடிகாலையில் அபகரித்துச் செல்லும்போது மட்டுமே கொஞ்சம் கோபம் காட்டப்படுகின்றதே தவிர குறிப்பிடும்படியாக வேறெந்த வெறுப்பின் சாயல் கூட இந்நாவலில் இல்லை. அதேபோன்று கு.வன்னியகுலசிங்கம் தமிழ் கொங்கிரசுக்காய் கொக்குவிலில் போட்டியிட்டபோது, தேர்தலில் வாக்குப் போடுவதை உற்சாகப்படுத்துவதற்காய் -அணிந்து செல்வதற்கு மட்டுமே நகைகளைக் கொடுக்க- அதை அப்படியே அபகரித்து சுன்னாகத்தில் ரெயினேறி கொழும்பில் மகனோடு சேர்கின்ற திரவியம் மாமி ஒரு கள்ளியாகக் கூடச் சித்தரிக்கப்படாமல் -களவைக் கூட பிடிபடாமல் செய்வது என்றறியாத அவரது அப்பாவித்தனமே- வாசிப்பவர்களிடையே படியவிடப்படுகின்றது. கள்ளம் பிடிபட்டு பொலிஸ் அவரைக் கொழும்பு ஜெயிலுக்கு கூட்டிச் செல்லப்படும்போது கூட, அவர் கேட்கின்ற கேள்வி, 'கு.வன்னியகுலசிங்கம் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாரா?' என்பதுதான். அந்தக்கேள்வியோடு அந்த அத்தியாயம் முடிகின்றபோது களவு என்ற விடயமே அங்கே காணாமற்போய்விடுகின்றது.
இவ்வாறான மிக நுட்பமாய் கதையை எப்படிககொண்டு போவது குறித்தும், எப்படி முடிப்பது பற்றியும் அறிந்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் சில இடங்களில் முக்கியமான விடயங்களைக் கூட -மிக எளிமையாக- மெல்லிய நகைச்சுவையால் -கடந்துவிடச் செய்கின்றார். முக்கியமாய் எல்லோரைப் போலவும் அம்மாவில் அதிக பாசம் கொள்கின்ற கதைசொல்லி, அவரது பதின்மூன்றாவது வயதில் ஏற்படுகின்ற அம்மாவின் இழப்பை மிக எளிதாகக் கடந்துபோய்விடுகின்றார். அதேபோன்று 1958 கலவரத்தின்போது கொழும்பில் அகதியாக்கப்படுகின்ற கதைசொல்லி அந்த அத்தியாயத்தோடு சிங்கள தமிழ் பிரச்சினையை மறந்து போய்விடுகின்றார். மீண்டும் இறுதி அத்தியாயங்களில் 'சுவர்களுடன் பேசும் மனிதர்' பகுதியில் மட்டுமே மொழி,ஈழம் பற்றி நினைவூட்டப்படுகின்றன (ஒரு மொழி நீண்ட காலமாய் உயிருடன் இருக்கவேண்டுமாயின், அந்த மொழியை முன்நிலைப்படுத்தும் ஒரு அரசு வேண்டுமென்பது இங்கே வலியுறுத்தப்படுகின்றது). 1983 இனப்படுகொலையின்போது, கதைசொல்லி ஈழத்திலிருந்து ஏற்கனவே புலம்பெயர்ந்ததால் அதன்பின்னரான காலங்களை எழுதுதல் கடினமென எடுத்துக்கொண்டாலும், கதைசொல்லி நேரடியாகப் பாதிப்புற்ற 58 கலவரம் பற்றிக்கூட மனதில் பதியும் படியாக எழுதிவிடவில்லை என்பதை ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும்.
அதேபோன்று இந்நாவலில் 'வளைக்காப்புக்காய் வீடு திரும்பும் மனைவி' (ப 108) குறித்தெல்லாம் வருகின்றது. ஈழத்தில் வழகத்தில் இல்லாத சொற்றொடர்கள்/வழக்குகள் வருவதற்கு அ.முத்துலிங்கம் தனது பிரதியைத் திருத்தக்கொடுத்த, தமிழகத்து 'நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும்' நண்பரோ அவரது துணையோ காரணமாயிருக்கூடும். மேலும் 'கேர்ணல்' (ப 77) என்றெல்லாம் திரிசங்கு நிலையில் சொற்கள் வருகின்றன. ஈழத்து வழக்கில் 'கேணல்' என்றோ அல்லது ஆகக்குறைந்து இந்திய வழக்கில் 'கர்னல்' என்றாவது எழுதாமல், இப்படி வருவது அச்சுறுத்துகின்றது. இன்னொரு இடத்தில் தனது தம்பியை வாசகருக்கு அறிமுகப்படுத்தும்போது 'இவன் எங்கள் வீட்டின் கோமாளி' என்று அறிமுகப்படுத்தப்படுகின்றார். நானறிந்தவரை ஈழத்தில், குடும்பத்திலுள்ளவர்கள் தம் குடும்ப உறுப்பினர்களை 'கோமாளி' என்று அறிமுகப்படுத்துவதை அறிந்திலேன். இவன் 'நல்ல பகிடிக்காரன்' அல்லது 'சரியான குழப்படிக்காரன்' என்று அழைக்கப்படுவார்களே தவிர 'கோமாளி' என்ற வழக்கு இருப்பதாய் நானறியேன். அதேபோன்று கம்பராமாயணத்தில் ஆறுகளைப் பற்றிப் பேசும் ஆற்றுப்படலம் என்று ஓரிடத்தில் வருகின்றது. ஆனால் ஆற்றுப்படலம் என்பது ஆறுகளைப் பற்றிப் பேசுவதல்ல. அது ஒரு புலவன் தான் அரசனொருவனிடம் பெற்ற பொற்கிழியைப் போல இன்னொரு புலவனையும் போய்ப் பெறுக என்று ஆற்றுப்படுத்துவதையே ஆற்றுப்படலத்தில் உள்ளடக்குவதாய் கூடவே என்னோடு இந்நாவலை வாசித்த நண்பர் குறிப்பிட்டார் (எனது கம்பராமாயண அறிவு, அதன் சில பகுதிகளை என்னுடைய பத்தாம் வகுப்போடு வாசித்தது மட்டுமே).
4.
சிறுகதைகளைப் போலவன்றி நாவலுக்கு நிலப்பரப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உலகில் இன்று வியந்தோந்தப்படும் எந்த நாவலை எடுத்தாலும், அவற்றில் வரும் பாத்திரங்களைப் போலவே கதை நிகழ்கின்ற நிலப்பரப்புகளும் முக்கியத்துவம் உடையதாகவே இருக்கின்றன. நாம் வாழ்விலே காணவே முடியாத பிரதேசங்களில் எல்லாம் நாமும் நடமாடிக்கொண்டிருப்பதான எண்ணத்தை எத்தனையோ படைப்புக்கள் நமக்குள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அ.முத்துலிங்கம் இந்நாவலில் ஆகக்குறைந்து அவருக்கு அதிகம் பரிட்சயமான அந்தக்காலத்து யாழ்ப்பாணத்தைக்கூட கூட அவ்வளவு விரிவாக காட்சிப்படுத்தவில்லை. கொக்குவில் பகுதியில் இருக்கும் ஒழுங்கைகளையும், புகையிலை அவிக்கப்படும் குடிசைகளுக்கும் அப்பால் அவரது ஊர் கூட விரிவாகச் சித்தரிக்கப்படவில்லை. அது கூட பரவாயில்லை. யாழ்ப்பாணத்தவர்களின் பண்பாட்டுச் சூழலில் முக்கிய கூறாக இருந்த சாதி பற்றிய குறிப்புகள் கூட இந்நாவலில் இல்லை. 80களின் பின்பான ஈழ ஆயுத இயக்கங்களின் எழுச்சியின் பின், சாதி ஒரு மறைபொருளாக இருந்தது என்று ஒரளவுக்கு ஒப்புக்கொண்டாலும், 50/60களில் சாதிய ஒடுக்குமுறை மிகக் கொடூரமாகவும், அதற்கெதிரான போராட்டங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெடித்துக் கிளம்பியும் இருந்திருக்கின்றன. ஆகக்குறைந்தது. பாடசாலையில் ஆசிரியர்களால்,சில மாணவர்கள் வெறுக்கப்படுவதையும் நக்கலடிக்கப்படுவதையும் குறிப்பிடுகின்ற அ.முத்துலிங்கம், யாழ் சூழலின் அதன் உண்மையான காரணமாக பெரும்பான்மையாக அம்மாணவர்களின் சாதியே காரணம் என்பதையாவது ஒளிவுமறைவின்றி நேரடியாகக் கூறியிருக்கலாம். யாழ்ப்பாணத்தவர்களின் ஒவ்வொரு சின்னச் சின்ன விடயத்திலும் சாதி முக்கிய கூறாய் உட்பொதிந்திருப்பதை எவராலும் எளிதாக உய்த்துணரமுடியும். இவற்றையெல்லாம் எழுதாமல் ஒருவர் யாழ்ச் சூழலை பதிவு செய்ய முடியாதா? என்று நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் நாம் விரும்பியோ/விரும்பாமலோ சாட்சியாக இருந்திருக்கின்றோம் என்றால், இன்றைய காலத்திலாவது இவற்றை விமர்சிக்காது நாசூக்காய்த் தவிர்த்து நாம் யாழ்ப்பாணம் பற்றிக் கதை சொன்னால், அது யாருக்காய், யாரைப் பற்றிய கதைகள் என்ற கேள்வியை எழுப்புதலும் தவிர்க்க முடியாதே இருக்கின்றது.
இவ்வாறானவற்றோடு அ.முத்துலிங்கத்தின் நாவல் எனச்சொல்லப்படும் இதை வாசிப்பவர்கள், 75 சிறுகதைகள் உள்ளடக்கிய அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் (2004) என்ற தொகுப்பை ஏற்கனவே வாசித்திருந்தால், இதன் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றம் எதையும் எதிர்பார்க்கமுடியாது என்பதே மிகப்பெரும் பலவீனமாகக் கொள்ளவேண்டியிருக்கின்றது. சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி வரும் அ.முத்துலிங்கம் ஒரு நாவலை எழுதியிருக்கின்றார் என்று உற்சாகத்தோடு வாசிக்க வரும் ஒரு வாசகருக்கு இந்நாவலில் வடிவத்திலோ, கதை சொல்லும் முறையிலே எத்தகைய புதிய வளர்ச்சியையும் கண்டறிய் முடியாது இருக்கின்றது. அத்தோடு புன்னகைக்க வைப்பதால் மட்டுமே ஒரு படைப்பு சிறந்த படைப்பாக உலகில் கொண்டாடப்படுகின்றதா என்று பார்த்தால் அவ்வாறிருப்பவை மிக அரிதே என்பதே யதார்த்தமாயிருக்கிறது. ஈழப்படைப்பாளிகளில் பிறரைப் போலவன்றி பலவேறு நாடுகளின் பண்பாட்டுச் சூழலில் வாழவும், பல்வேறு உலகப்படைப்பாளிகளை நிறைய வாசிக்கவும், சந்திக்கவும் செய்கின்ற அ.முத்துலிங்கத்தால் ஏன் இன்னும் மனதை நெருடுகின்ற படைப்புத்தர முடியவில்லை என்ற வினா அ.முத்துலிங்கத்தை வாசிக்கும் பல வாசகர்களுக்கு எழவே செய்யும். அ.முத்துலிங்கம் நன்கு பண்பட்ட மண்ணை, வளமான உரத்துடன், வீட்டுக்குள்ளேயே ஒரு பூந்தொட்டியிலே பல செடிகளை நாட்டித் தந்திருக்கின்றாரே தவிர, கட்டற்ற எல்லைகளுடன், காடொன்றில் எல்லாக் காலநிலைகளுடனும் போராடி ஆழ வேர் பரப்பி கிளை பரப்புகின்ற ஒரு விருட்சத்தை எப்போது தருவார் என்பதை -இந்த நாவலில் அல்ல- இனி வருங்காலங்காலங்களில்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கின்றது.
என்றாலும் இப்போது என்ன, இந்நாவலில் கதை சொல்லி ஓரிடத்தில் கூறுவார், தனக்கு கல்கியை சிறுவயதில் வாசித்தபோது கல்கியைப் போல எழுதவேண்டும் என்றும், பின்னர் ஜேம்ஸ் ஜோய்ஸை வாசித்தபோது ஜோய்ஸை எழுதவேண்டும் என்றும், இன்னும் கொஞ்சக்காலம் செல்ல புதுமைப்பித்தன் ஆக்கிரமிக்க புதுமைப்பித்தனைப்போல எழுதவேண்டும் என்றும் ஆசைப்பட்டதாகவும் குறிப்பிடுவார். அதைப் போலத்தான் அ.முத்துலிங்கத்தின் படைப்புக்களை வாசிப்பவர்களில் (என்னைப் போன்ற) ஒரு சிலராவது அ.முத்துலிங்கத்தைப் போல சொற் சிக்கனமாகவும், எளிமையாகவும் அதே நேரத்தில் மெல்லிய புன்னகை வரச்செய்வதுமாய் எழுதிவிடவேண்டுமென மானசீகமாய் நினைக்கச்செய்வார்கள் என்பதும் இயல்பே.