பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' தொகுப்பை முன்வைத்து...
1.
நம் எல்லோருக்குமே கதைகளைக் கேட்பது என்றால் பிடிக்கும். சிறுவயதுகளில் இருந்தே பாட்டிமார்கள், தாய்மார்கள் சொல்கின்ற கதைகளுக்கிடையில் நாம் வளர்ந்துமிருப்போம். சிலர் தங்கள கதைகளை, தங்களுக்குத் தெரிந்தவர்களோடு பேசிப் பகிர்ந்துகொள்கின்றார்கள். வேறு பலரோ தங்களுக்குள்ளேயே, கதைகளைச் சொல்லிக் கரைத்தபடி, வாழ்ந்து முடித்துவிட்டுப் போகின்றார்கள். இன்னுஞ் சிலரோ எழுத்தின் மூலம் தங்களுக்குத் தெரிந்த கதைகளைப் பதிவு செய்கின்றார்கள்.
சில கதைகள், நாம் வாழ்ந்திராத நிலப்பரப்புக்களையும் வாழ்க்கை முறைகளையும், அறிமுகப்படுத்துகின்றன. புதிய மனிதர்கள் புதிய நிலபரப்பில் புதிய வாழ்க்கை முறைகளோடு, நமக்கான வாசிப்பு வெளியில் பிரவேசிக்கும்போது, நாம் இன்னும் உற்சாகத்தோடு, அந்தக் கதைகளை வாசிக்கத் தொடங்குகின்றோம். 'ஒரு அகதி உருவாகும் நேரம்', என்கின்ற கருணாகரமூர்த்தியின் இத்தொகுப்பு, நாம் ஏற்கனவே அறிந்திருக்கூடிய மனிதர்களை புதிய நிலப்பரப்புகளினூடாக அறிமுகப்படுத்துகின்றன. வித்தியாசமான சவால்களையும், தடுமாற்றங்களையும் இம்மனிதர்களுக்கு புதிய வாழ்க்கைமுறை கொடுக்கின்றன. இவ்வகையான நிலப்பரப்பில் நிகழும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும், படைபாளி மிகுந்த எள்ளல் கலந்த நடையுடன், வாசிக்கும் நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றார். இங்கே, நமக்கு ஏற்கனவே அறிமுகமான மனிதர்கள் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இக்கதைகளில் வரும் முக்கிய பாத்திரங்களில் அநேகர், தமிழ் பேசும் ஈழத்தமிழர்களாய் இருக்கின்றனர். மற்றது, எங்களைப் போலவே இக்கதைகளில் வரும் மனிதர்கள் வெளிநாடுகளுக்கு போராலோ, பொருளாதார நிமித்தத்தாலோ புலம்பெயர்ந்தவர்கள்
இத் தொகுப்பில் குறுநாவல், சிறுகதை, நாவல் என்கின்ற பல்வேறு வடிவங்களில் கதைகள் இருக்கின்றன. முதலில் ஒர் அறிமுகத்திற்காய் தொகுப்பிலுள்ள, மூன்று கதைகளையும் மேலோட்டமாய்ப் பார்ப்போம். 'மாற்றம்' என்கின்ற சிறுகதை, ஒரு அக்காவுக்கும் தம்பிக்கும் இடையில் நிகழ்கின்ற கதை. ஊரில் இருக்கும்போது அக்கா, தம்பிக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றார். தம்பியின் படிப்பில் அக்கறை கொள்வதிலிருந்து, அவரது ஆளுமை வளர்ச்சி வரை அக்காவின் பாதிப்பு தம்பியில் இருக்கின்றது. அக்கா நிறையப் புத்தகங்கள் வாசிப்பவராய், அவை பற்றி விவாதிப்பவராய், தம்பியின் கெட்ட பழக்கங்களைத் திருத்துபவராய் எனப் பல்வேறு வகைகளில் தம்பியை வசீகரிப்பவராய் (அக்கா) இருக்கின்றார். ஆனால் அவ்வாறிருக்கும் அக்கா, திருமணத்தின் பின் அவரது விருப்புகளுக்கு, எதிராக மாறிப்போபவராய் இருப்பதுதான் தம்பிக்குத் திகைப்பளிக்கிறது.
அக்கா திருமணமாகி கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். ஜேர்மனியிலிருந்து நீண்டகாலத்திற்குப் பிறகு அக்காவைச் சந்திக்க தம்பி வருகின்றார். அக்கா, முன்பு அவர் வெறுத்த அசைவ உணவை உண்பவராக, அத்தான் புகைபிடிப்பதையும், குடிப்பதையும் ஏற்றுக்கொள்பவராக, புத்தகங்கள் வாசிப்பதை மிகவும் குறைத்துக்கொண்டிருப்பவராக இருப்பது கண்டு தம்பிக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது. இது தான் முன்பு கண்ட அக்கா, அல்லவென தம்பி நிலை குலைகின்றார். அந்த அதிர்ச்சியோடே, தம்பி மீண்டும் ஜெர்மனிக்குப் புறப்படுகின்றார் என்பதோடு இந்தச் சிறுகதை முடிகின்றது. இத்தொகுப்பில் இருப்பதிலேயே மிக எளிமையான கதையாக இதுதான் எனக்குத் தோன்றுகின்றது. இங்கே ஒரு அக்கா, தான் முந்தி நம்பிய கொள்கைகளுக்கு முரணாக இருப்பது பெரிய விடயமில்லை. முற்போக்கு முற்போக்கு என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ ஆண்கள், திருமணத்தின் பின் தாங்கள் சொல்லிக்கொண்டிருந்தற்கு எதிரான வாழ்வு வாழும்போது, பெண்கள் மாறிக்கொண்டிருப்பதில் விந்தை எதுவும் இருப்பதாய் தோன்றவில்லை.
அதிலும் நமது சமூகத்தில், பெண்களுக்கான இடத்தை எப்படிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்று நாம் ஒருகணம் நிதானமாய் யோசித்துப் பார்த்தோம் என்றால்,. இந்தக் கதையில் வரும் அக்காவின் மாற்றத்தை நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியும். கதையில் வரும் தம்பி, அக்கா ஏன் இப்படி மாறிவிட்டார் என்று அக்காவை நோவதைவிட்டு விட்டு, அக்காவை எவையெவை எல்லாம் மாற்றியிருக்கும் என்று புறச்சூழல்களைப் பற்றி யோசித்திருப்பாராயின் அதுவே அதிக நியாயமாயிருக்கும். ஏதோ ஒரு நேர்காணலில் லீலா மணிமேகலை சொல்வார், 'இந்த முற்போக்கு பேசும் ஆண்களின் மனைவிமார்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், கணவர்மார்களுக்கு வீட்டிலிருந்து, தோசை சுட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பது மட்டுந்தான்' என்று. முற்போக்கு பேசும் ஆண்களின் துணைவிமார்களே இப்படியிருக்கும்போது, இந்தக் கதையில் வரும் அக்கா, தனக்கு வாய்க்கும் சாதாரண ஒரு கணவரோடு, தனது விருப்பங்களின்படி வாழமுடியுமென எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? இன்னுமே தமக்கான துணைகளை, தாங்களே தேடிக்கொள்ளும் சுதந்திரத்தை, பெண்களுக்கு முழுதாய்க் கொடுக்காத நம் தமிழ்ச் சமூகத்தில், இவ்வாறான அக்காவை, படைப்பாளி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை அவ்வளவாய் ஏற்றுக்கொள்ள முடியாது போலத்தான் தோன்றுகின்றது.
'ஒரு அகதி உருவாகும் நேரம்', வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் இரண்டு ஏஜெண்டுகளின் கதையைச் சொல்கின்றது. அநேகமாய் தமிழ்க்கதைப் பரப்பில், இவ்வாறு, ஆட்களை தலைமாற்றி அனுப்பும் ஏஜெண்டுகளின் கதை, எதிர்மறையாகவே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தக் குறுநாவலில், ஏஜெண்டுகளுக்கும் மனிதாபிமானம் இருக்கின்றது என்று இன்னொரு பக்கம் சொல்லப்பட்டிருப்பதில், கவனிக்கத்தக் கதையாக இது மாறிவிடுகின்றது. கதை முழுவதுமே சட்டநாதன் என்பவரை, எப்படியாவது ஜரோப்பிய நாடொன்றுக்கு இரண்டு ஏஜெண்டுகள் அனுப்ப முயற்சிப்பது என்பதைப் பற்றியே கூறப்பட்டிருக்கும். சட்டநாதன் ஒரு அப்பாவி. ஒவ்வொரு முறை அனுப்பும்போதும், ஏதோ ஒன்றைப் பிழையாகச் செய்துவிட்டு திரும்பவும் ஏறிய இடத்துக்கே வந்துவிடுகின்றவராக இருக்கின்றார். இப்படியாக, ஐந்தோ அல்லது ஆறாவது முறையாக சிங்கப்பூரிலிருந்து பிரான்சுக்கு சட்டநாதனை அனுப்ப, இடைய்ல் வழமைபோல ஏதோ 'கோல்மால்' செய்ததால், கொழும்பில் வலுக்கட்டாயமாய் இறக்கிவிடப்பட்டு விடுகின்றார். இத்தோடு கதை முடிந்துவிடுகின்றது.. 'ஒரு அகதி உருவாகும் நேரம்' ஏஜெண்டுகளின் பிரச்சினைகளை மட்டுமில்லாது, இவ்வாறு அனுப்பப்படுபவர்களுக்கு உள்ள கஷ்டங்களையும் விவரிக்கின்றது. வெளிநாடுகளுக்கு கள்ளமாய் வந்து இறங்குவது எல்லாம், அவ்வளவு ஒன்றும் எளிதில்லை. இவ்வாறு நாடு கடப்பதற்காய், எத்தனையோ பேர் தங்கள் உயிர்களைத் தொலைத்திருக்கின்றார்கள் என்பதையும், இன்னும் எத்தனையோ பேர்கள் பெயரறியாச் சிறைகளில், இன்றும் வாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் விளங்கிக்கொண்டால் எங்களால் இந்தக்கதையின் பின்னாலுள்ள அவலங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கதையை அலுப்பில்லாது வாசிக்க, ஒருவித எள்ளல் தன்மை கலந்து சொல்லியிருப்பதில் கருணாகரமூர்த்தி என்ற படைப்பாளி வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே கூறவேண்டும்.
2.
ஒரு நாவலெனச் சொல்லப்படக்கூடிய, வாழ்வு வசப்படும் என்ற கதைதான், இத்தொகுப்பிலுள்ள கதைகளில் என்னை அதிகம் கவர்ந்த கதையெனச் சொல்லுவேன். 80களின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து ஜேர்மனிக்கு அகதிகளாய் அடைக்கலங்கேட்டு, ஒரே அறையில் தங்கியிருக்கும் ஐந்தாறு இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. இன்னொருவகையில் சொல்லப்போனால், இந்தக்கதை எமது புலம்பெயர் வாழ்வின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணம் எனவும் சொல்லலாம். புலம்பெயர் வாழ்க்கை என்பது பொதுவான ஒன்றல்ல. நாம் புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப அவை வேறுபடுபவை. உதாரணமாய் கனடா, இங்கிலாந்து போன்றவற்றுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கும், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கும், இடையிலான வாழ்க்கை என்பது வித்தியாசமானது. கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, ஆகக்குறைந்தது, ஏற்கனவே கற்றுக்கொண்ட, அடிப்படை ஆங்கிலத்தை வைத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முடிந்திருந்தது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவற்றுக்குப் போனவர்கள், மொழியிலிருந்து எல்லாவற்றையும் புதிதாகவே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்களுடைய புலம்பெயர்வு எம்மைவிட வித்தியாசமானது மட்டுமின்றி, மிகவும் கஷ்டமானதும் கூட. எனவே 'புலம்பெயர் வாழ்வு' என்ற ஒற்றைவரிக்குள், எல்லோருடைய வாழ்வையும், பொதுவாகப் பார்க்கும் நிலையையும், நாம் மாற்றவும் வேண்டியிருக்கிறது.
'வாழ்வு வசப்படும்' நாவலின் கதையை வாசிக்கும்போது, உடனே எனக்கு நினைவுக்கு வந்த இன்னொரு விடயம், அருந்ததி இயக்கிய முகம் திரைப்படம். அதுவும் இவ்வாறான இளைஞர்களின் புலம்பெயர் வாழ்வைப் பற்றியே கூறுகின்றது. இன்று ரொரண்டோவில் வீதிக்கு வீதி சாப்பாட்டுக்கடைளில் இடியப்பம் கிடைக்கின்றன. ஆனால் இந்தச் சாப்பாட்டுக்கடைகள், எவ்வாறு எல்லாம் முதலில் ஆரம்பித்திருக்கும் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா? அவ்வாறு புலம்பெயர் வாழ்வின் மூலத்தைத் தேடிப்போகின்ற கதைதான், வாழ்வு வசப்படும். எமது புலம்பெயர் வாழ்வின் ஆரம்பத்தை -முக்கியமாய் ஜேர்மனியப் புலம்பெயர்வை- பதிவு செய்தது என்றவகையில் இது ஒரு முக்கியாமான கதையே.
இந்நாவலில் வரும் இளைஞர்களின் மூலமாக புலம்பெயர் வாழ்வின் புதிய வாழ்வு முறையும், இன்னமும் கைவிடப்படாத ஊரின் நினைவுகளும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த நாவலில் வரும் எல்லாப் பாத்திரங்களும் அவரவர் இயல்பில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். பலமும் பலவீனங்களும் கொண்டவர்களே மனிதர்கள். எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் இல்லாத மனித வாழ்க்கை என்பது ஒரு போதும் சாத்தியமில்லை. இவற்றோடு இந்தக்கதையில், நாம் எல்லாவற்றையும் இழந்து அக்திகளாக வந்திருந்தாலும், இன்னமும் வாழ விருப்பும் உயிர்த்தலைப் படைப்பாளி அழகாகப் பதிவு செய்கின்றார். அவலங்களுக்கும், தத்தளிப்புக்களுக்கும் இடையில், வந்துபோகின்ற அருமையான தருணங்களை, நகைச்சுவையாக கருணாகரமூர்த்தி சொல்லிப் போவதுதான், இந்நாவலோடு, இன்னும் நம்மை நெருக்கம்டைய வைக்கிறது போலும்.
சில பலவீனங்களும் இந்நாவலில் இல்லாமலில்லை. முக்கியமாய் இக்கதையில் வரும், அத்வைதனை, படைப்பாளி கதாநாயகத் தோற்றத்தோடு கட்டியமைக்க முயற்சிப்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அத்வைதனின் பாத்திரத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும், அவரை ஒரு நாயகத்தன்மைக்கு கட்டியமைப்பதற்கும் வேறுபாடுகளுண்டு. நவீனத்துவ சூழலில், அத்வைனின் பாத்திரம் பாராட்டப்பட்டிருக்ககூடும். பின் நவீனத்துவ சூழல் பற்றி அறிந்த ஒரு படைப்பாளி, அத்வைனை மாசு மறுவற்றவராக ஏன் காட்ட முயற்சிக்கின்றார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. மற்றது இந்நாவலில் சில இடங்களில் ஆங்கிலத்தில் கதைப்பது அப்படியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. சில இடங்களில் ஆங்கிலத்தில் உரையாடல் நிகழும்போது அடைப்புக்குறிக்குள் தமிழில் தரப்பட்டிருக்கின்றது. இன்னும் வேறு சில இடங்களில் ஆங்கில உரையாடலை அப்படியே தமிங்கிலிஷில் எழுதபட்டிருக்கின்றது (தமிங்கிலிஷ் என்று எதைக் குறிப்பிடுகின்றேன் என்றால், ஆங்கில உரையாடலை அப்படியே ஆங்கிலத் தமிழில் எழுதுவதை). ஒரு நாவலில், இவ்வாறான விடயங்களில் படைபாளி கவனங்கொள்ளவேண்டும். மூன்று வடிவங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உரையாடல்களை எழுதியிருந்தால், வாசிப்பவருக்கு அதிகம் இடைஞ்சலிருக்காது என்று நம்புகின்றேன்.
மற்றது இந்த நாவலின் ஆரம்பத்தில் வரும் பைபிள் வாசகமான, 'சோரம் போதலும் பிறரைச் சோரம் போகத் தூண்டுதலும் பாவமாகும்' என்பதோடு வரும் முரண்பாடு. முதலில் ஏன் படைப்பாளி இவ்வாசகத்தை இந்நாவலுக்குப் பாவிக்கின்றார் என்பதில் கேள்விகளுண்டு. இரண்டு பெண்கள் தங்கள் வாழ்வைத் தாங்கள் விரும்பியபடி தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். அதை எப்படி நாங்கள் சோரம் போகின்றார்கள் என்று அடையாளப்படுத்த முடியும்? மற்றது 'கற்பு', 'சோரம்' போவது பற்றியெல்லாம், இன்னும் இந்த நூற்றாண்டிலும் உரையாடிக்கொண்டிருப்பது அவசியமா என்பது பற்றியது. சாதியின் பெயரால், மதத்தின் பேரால், இனத்தின் பேரால் எத்தனையோ மனிதர்கள் கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கொண்டிருக்கும்போது சோரம் போவது எல்லாம் பெரிய விடயங்களா என்ன? எப்படி அகராதியில் நாம் புதிய வார்த்தைகளைக் காலத்துக்குக் காலம் சேர்க்கின்றோமோ, அவ்வாறே நமது வழக்கிலுள்ள தேவையற்ற சொறகளான, கற்பு, சோரம் போதல் போன்றவற்றையும் அகராதிகளிலிருந்து அகற்றவும் வேண்டியிருக்கிறது.
இவ்வாறான சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வாழ்வு வசப்படும் நாவல் தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய கதைப்பரப்பைத் திறந்துவிட்ட, முக்கியமான ஒரு படைப்பு என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம்.
3.
இப்போது இந்தத் தொகுப்பின் கதைகளைத் தவிர்த்து வேறு சில விடயங்களைப் பார்ப்போம். இத்தொகுப்பில் கதைகளுக்குள் நுழையமுன்னர் இரண்டு அணிந்துரைகளையும், கருணாகரமூர்த்தியின் முன்னுரையையும் கடந்துவரவேண்டியிருக்கிறது. அதுவும் கருணாகரமூர்த்தியின் உரை, தொகுப்பிலுள்ள கதைகளைப் பற்றி பேசுகின்றன. முன்னுரையில் பின் நவீனத்துவ சூழல் பற்றி அறிந்திருக்கும் இந்தப் படைப்பாளி கூட, தனக்கான பிரதியை வாசகர் கண்டறிவதற்கான சுதந்திரத்தை மறுப்பது போன்ற தோற்றப்பாட்டை முன்னுரையில் கொடுக்கின்றார். அதுவாவது பரவாயில்லை, ஜெயமோகன் தனது உரையில் வழமைபோல 'பெரும்பான்மையான ஈழத்தவர் படைப்புக்கள் தட்டையானது ஒற்றைத் தன்மையானது' என்று திருவாய் மொழிகின்றார். ஜெயமோகனின் திருவாக்குகள் குறித்து நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் என்ன பிரச்சினையென்றால் கருணாகரமூர்த்தியிய்ன் 96களில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் கூறியது மாதிரி, 2000ன் ஆரம்பத்தில் நான் உட்பட, பிற நண்பர்கள் அவருடன் விவாதித்த பதிவுகள் விவாதக் களத்திலும், இப்படியே கூறியிருக்கின்றார். அண்மையில் கூட இந்தக்கருத்துக்களை மீண்டும் எங்கையோ கூறியதாய் வாசித்தது நினைவு. இவர் இப்படி கிளிப்பிள்ளையாக, காலங்காலமாய் ஒன்றையே ஏன் ஒப்புவித்துக்கொள்கின்றார் என்பதுதான், எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. ஈழத்திலக்கியமோ, புலம்பெயர் இலக்கியமோ பெரிதாகச் சொல்லும்படியாக எதையும் சாதிக்கவில்லை என்றாலும், ஜெயமோகன் ஒப்பாரி வைப்பதுபோல அவ்வளவு கீழானதாகவும் இல்லை.
ஜெயமோகனுக்கு கைலாசபதி, சிவத்தம்பி என்றால் வேம்பங்காய் சுவைதான் நினைவுக்கு வரும். ஆகவே அவர்கள் முன்மொழிந்த முற்போக்கு இலக்கியத்தையும், கணேசலிங்கத்தையும் ஒருபிடி பிடிக்காவிட்டால் ஜெயமோகனுக்கு இரவுகளில் நித்திரை வருவதில்லைப் போலும். ஆனால் என்ன பரிதாபம் என்றால் ஈழத்திலக்கியமோ, புலம்பெயர் இலக்கியமோ, அந்தக் காலகட்டத்தை தாண்டி எங்கையோ நகர்ந்துவிட்டது. இன்றைய கடும் போர்ச் சூழலுக்குள்ளிலிருந்து இராகவன், திசேரா, மலர்ச்செல்வன் போன்றோர் எழுதிக்கொண்டிருப்பதை ஜெயமோகன் அறிந்திருப்பாரா தெரியாது, அல்லது புலம்பெயர்ச்சூழலில் -தமிழகத்தில் அவ்வளவாய் அறிமுகமாகாத- பார்த்திபன், மைக்கல், சித்தார்த்த 'சே' குவேரா, நிருபா போன்றவர்கள் எழுதிக்கொண்டிருப்பதை வாசித்திருக்கின்றாரா என்றும் கேள்விகள் கேட்கவேண்டியிருக்கிறது.
முதலில் ஜெயமோகன், விஷ்ணுபுர காலத்தைத் தாண்டி, இன்றைய காலத்துக்கு வந்து ஈழத்திலக்கியம் குறித்த தனது வாசிப்பை நீட்சிப்பாரானால், அவரது கிளிப்பேச்சுக்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கவேண்டிய தொல்லையிருக்காது. மேலும் ஜெயமோகன் பல இடங்களில் முன்வைப்பதைப் போல, ஒரு படைப்பாளி தொடர்ச்சியாகவோ அல்லது நிறையவோ எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒரு பாடலே, நூற்றாண்டுகள் தாண்டியும் கணியன் பூங்குன்றனை நாம் நினைவில் வைத்துக்கொள்ளப் போதுமாய் இருக்கிறது. அவ்வாறே பல ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் நாம் நினைவில் வைக்கக்கூடிய சில நல்ல படைப்புக்களையாவது தந்திருக்கின்றார்கள். வேண்டுமானால், தலையணை சைஸில் புத்தகம் எழுதுகின்றவன்/ள் மட்டுமே படைப்பாளி என்று ஜெயமோகன் கூறுவாராய் இருந்தால், 'ஆம் அய்யா, நாம் எதையுமே படைக்கவில்லை' என்று இரண்டு கைகளையும் உயர்த்திவிடவேண்டியதுதான். இங்கே ஜெயமோகனைப் பற்றி அதிகம் உரையாடத்தேவையில்லை. ஆனால் அவருக்கு எங்கு எங்கெல்லாம் இடங்கிடைக்கிறதோ அங்கே எல்லாம் கிளிப்பிள்ளையாக இப்படிப் பேசிக்கொண்டிருப்பதை சகித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதற்காகவேனும் அவரது நண்பர்கள் அதிகமுள்ள இவ்வாறான இடங்களிலாவது நாம் எதிர்வினை செய்யவேண்டியது அவசியமாகின்றது.
கருணாகரமூர்த்தியின் வாழ்வு வசப்படும், நாவல் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 25 வருடங்களாகின்றது. இன்றும் அந்தப்பிரதியை சுவாரசியமாக வாசிக்கக்கூடியதாகவும், புதியது போன்றும் இருக்கின்றதென்றால் இந்த நாவலுக்கு இன்றும் ஒரு முக்கிய இடமுண்டு என்றேதான் எடுத்துக் கொள்ளவேண்டும். கருணாகரமூர்த்தியை, எஸ்.பொ, அ.முத்துலிங்கம் என்கின்ற ஒரு தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கின்றேன். இவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய பொதுத்தன்மை என்னவென்றால் இவர்கள் படைப்பில் இயல்பாய் வந்துவிடுகின்ற எள்ளல் மற்றும் நகைச்சுவைத் தொனிகளாகும். ஒரு வாசகரை அலுப்படையச் செய்யாது, சுவாரசியமாக வாசிக்கச் செய்யக்கூடிய எழுத்தாற்றல் இவர்களிடமிருக்கின்றது. அந்தத் தொடர்ச்சியில் வருபவர் ஷோபாசக்தி. இவர்கள் அனைவரும் ஒரு தொடர்ச்சி என்கின்றேனே தவிர, இவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய தனித்துவமான வேறுபாடுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது என்பதையும் நினைவூட்டிக்கொள்கின்றேன்.
'தமிழின் சிறப்பு தொன்மையில் இல்லை தொடர்ச்சியில் இருக்கிறது' என்பது எவ்வளவு அழகான ஒரு வாக்கியம். அந்தவகையில் இன்று புதிதாய் எழுதப்போகின்றவர்களுக்கு எம் முன்னோடிகளில் வழிகாட்டல்கள் அவசியமாகின்றது. அந்த முன்னோடிகளின் கரம் பிடித்து அவர்கள் நடந்த பாதையில் நடந்து, அதற்கப்பாலும் அவர்களைத் தாண்டிப் போவதே, புதிதாய் எழுதுகின்றவர்களுக்கு முன்னாலுள்ள சவாலாகும். எஸ்.பொ, தேவகாந்தன், அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி என்கின்ற நீளும் பட்டியல் எம் முன்னே விரிந்து கிடக்கிறது. இம்முன்னோடிகளின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து பலவற்றைக் கற்றுக்கொள்வதும், தேவையில்லாத சிலவற்றை நிராகரிப்பதுமே இவர்களுக்கு நாம் கொடுக்ககூடிய அதி கூடிய மதிப்பாய் இருக்கும்.
(பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புகள்: ஆய்வும் அறிமுகமும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
நன்றி: கோடை இணைய இதழ்
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"இவர் (ஜெயமோகன்) இப்படி கிளிப்பிள்ளையாக, காலங்காலமாய் ஒன்றையே ஏன் ஒப்புவித்துக்கொள்கின்றார் என்பதுதான், எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது."
6/01/2009 01:17:00 PMஎன்னால் அதை ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது:)
தமிழ்நதி,
6/02/2009 09:32:00 AMஇவர்,அகிம்சை அகிம்சை என்று அண்மைக்காலமாய் எங்களை இம்சைப்படுத்திக்கொண்டிருப்பதைத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்களோ தெரியவில்லை :-).
Post a Comment