1.
ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவரான சாந்தன் நெடுங்காலமாக எழுதி வருகின்றவர். ஈழத்தில் முற்போக்கு அலை, வீச்சுடன் இருந்த எழுபதுகளில் அதனுள் எற்றுப்பட்டுப்போகாமல் தனக்குரிய கதை சொல்லும் முறையை இவர் தனித்துவமாய்க் கொண்டவர். சாந்தனின் தொடக்க கால கதைகள் -அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவதைப் போல-பேருந்துகளிலும் புகைவண்டிகளிலும் நிகழ்பவை. எளிய மனிதர்களும், சாதாரண சம்பவங்களும் சாந்தனின் கதையுலகத்தில் பெரும்பாலும் நுழைந்தாலும் அவர்களை/அவற்றை மறக்கமுடியாதவர்களாய் மாற்றிக்கொள்வதில்தான் சாந்தன் என்னும் படைப்பாளி முக்கியம் உடையவராகவிடுகின்றார். சாந்தன் தனது பாத்திரங்களின் வர்ணனைகளுக்கு அதிக இடம் எடுத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான அவரது கதைகள், ஏதோ இரண்டு மனிதர்கள் கதைத்துக்கொண்டிருக்கும்போது -இடையில் நுழைகின்ற மூன்றாவது மனிதன் எப்படி உரையாடலில் பங்குகொள்வானோ- அப்படியே சடுதியாக கதைகள் ஆரம்பித்து அதிகம் அலட்டலில்லாது சொல்ல வந்ததைக் கூறிவிட்டு அதேவேகத்தில் முடிந்தும்விடுகின்றன. அதனாலேயே அவரது அதிக சிறுகதைகள் ஒரு சில பககங்களிலோ (சிலவேளைகளில் ஒரு பக்கத்தில் கூட) முடிந்துவிடுகின்றவையாக இருக்கின்றன. குறுநாவல்களின் அத்தியாங்களுக்குக் கூட அதிக பக்கங்களைச் செலவழிக்க விரும்புவதில்லை சாந்தன். அதனால் என்ன, குறைந்த பக்கங்கள் கொண்ட கதைகள் என்றாலும் சாந்தனின் கதைகள் சுரீரென்று எங்கோ மனதில் குத்திவிட்டு நகரத்தான் செய்கின்றன.
ஒரு படைப்பாளி என்பவர் எப்போதும் விசாலமான மனதோடு இருக்கவேண்டும். தொடர்ச்சியாக சுற்றியிருப்பவை குறித்து அவதானித்து, வேண்டியவற்றை எடுத்தும் வேண்டாதவற்றை வடிகட்டியபடியும் இருக்கவேண்டும். படைப்பாளிகள் பல்வேறு மொழிகளை அறிந்துவைத்திருப்பதும், வித்தியாசமான கலாசாரப்பின்னணிகளில் வாழ நேர்கின்றபோதும், படைப்புக்கள் பன்மைத்துவமாய் முகிழும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றன சிலர் எங்குபோனாலும் கிணற்ற்துதவளையாக தமது கலாசாரமும் மொழியும் மட்டுமே உயரியது என்று கத்திக்கொண்டிருப்பார்கள், அவர்களை இப்போதைக்கு மறந்து விடுவோம். சாந்தனுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நன்கு தேர்ச்சி இருக்கின்றது; இரஷ்யமொழியை விரும்பிக் கற்றுமிருக்கின்றார். அதன் நிமித்தம் மொஸ்கோவுக்கு -சோவியத்து ஒன்றியத்தின் அழைப்பின்பேரில்- பயணித்துமிருக்கின்றார். 1966 - 1980 வரை கட்டுப்பெத்தை, கொழும்பு, திருக்கோணமலை போன்ற யாழ்ப்பாணத்தைத் தாண்டிய நகரங்களில் வாழ்ந்த சாந்தனின் அனுபவங்களும், ஆரம்பகாலங்களில் அவருக்கு அதிக ஈர்ப்பிருந்த மார்கசிசமும் அவரது படைப்புலகிற்கு இன்னும் வளத்தைக் கொடுக்கின்றன சொந்தமண்ணைவிட்டுப் பிரிவதில்லையென்ற வைராக்கியத்தில். -1980களின் பின் யாழை விட்டு வெளியேறவிட்டாலும்- அவரால் ஈழத்தில் எல்லா மக்களையும் படைப்பின் மூலம் நேசிக்க முடிகின்றது.
'விளிம்பில் உலாவுதல்' என்கின்ற இத்தொகுப்பில் சாந்தனின் அய்ந்து குறுநாவல்கள் இருக்கின்றன. அவை 1984 லிருந்து 2007 வரை பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டவை. எந்த ஒரு படைப்பும் அது சார்ந்த நிலப்பரப்பையும் கதைக்கான சமுக அரசியல் காரணங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ உணர்த்திக்கொண்டேயிருக்கும். புனைவுகளினூடாகக் கூட, ஒரு காலகட்டத்தின் வரலாற்றைப் படிக்கலாம் என்று சில சிந்தனையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இன்றைய சில ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் நிலத்தில் காலூன்றா வானத்துப் பறவைகளாகிவிடுகின்றனர் என்பதும் ஒருவகை அவலமே.
சாந்தனின் கதைகளில் வரும் சாதாரண மனிதர்களினூடாக அந்தக்கால அரசியல் சூழல்களும், நிகழ்த்தப்படுகின்ற நிலப்பரப்புகளும் துல்லியமாகக் காட்டப்படுகின்றன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாய் அரசியல் பதற்றங்களோடேயிருக்கும் ஈழத்தில் ஒவ்வொரு பிரதேசமும் அதற்குரிய அரசியலைக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களும் கொழும்பில் இருப்பவர்களும் வெவேறு சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதேபோன்று யாழில் இருப்பவர்களுக்கும் மட்டக்கிளப்பில் இருப்பவர்களுக்குமான சூழல் வெவ்வேறு வகையானது. யாழ்ப்பாணத்தில் ஒருகாலகட்டத்திற்குப் பிறகு முற்றுமுழுதாக தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கின்றனர். மலையகப் பகுதிகளிலும், கொழும்பிலும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தோடு வாழ்பவர்களுக்கான சூழல் முற்றிலும் வேறுவிதமானவை. மட்டக்கிளப்பு, திருக்கோணமலை, அம்பாறை போன்ற எல்லைக் கிராமங்களிலும், குடியேற்றத்திட்டங்களோடும் வாழ்பவர்களுக்கான சூழல் இவையெல்லாவற்றையும் விட இன்னும் வித்தியாசமானவை. யாழில் நிறையக் காலம் வாழ்ந்தாலும்,வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்நதிருந்ததால் சாந்தனின் கதைகள் அவை சொல்லப்படுகின்ற சூழலில் காலூன்றியே கதை சொல்கின்றன.
2.
இத்தொகுப்பிலுள்ள முதற்கதையான 'ஆரைகள்' கொழும்பின் பின்புலத்தில் நிகழ்கின்றது. 1977 கலவரம் முடிந்து மீண்டு வந்து வேலை செய்யும்போது தமிழர்களுக்கிடையில் இருக்கும் சாதி பார்த்து பழகும்/ கூடச்சேர்ந்து தேநீர் குடிக்கும் பழக்கங்களை இனங்காட்டுகின்றது இக்கதை. எத்தகைய அசாதரண சூழ்நிலையாய் இருந்தால் என்ன, தொழில்சங்க அமைப்புக்களாய் இருந்தால் என்ன, இவற்றை மீறி ஈழத்தமிழர்களின் மனங்களிடையே ஊடுருவியுள்ள சாதி ஒருபோதும் மறைவதேயில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்துகின்றது. நான்கு வருடங்களாய் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தும் கதைசொல்லியைப் பார்த்து சிறிதும் புன்னகைக்காத தனபால் இறுதியில் கதைக்கத் தொடங்குகின்றார். அதற்கு அவர் கூறும் காரணம் 'கனநாளைக்குப் பிறகு இவன் மூர்த்திதான் சொன்னான், எட போய்யா, அவன் சுண்டியெடுத்த வெள்ளாளன் எல்லோ எண்டு'. ஒரு உயர்ந்த சாதிக்காரன் இன்னொருவனோடு உரையாடுவதற்கான முன் நிபந்தனையாக இருக்கவேண்டியது, மற்றவரும் உயர்ந்த சாதிக்காரராய் இருக்கவேண்டும் என்பதை நினைத்து, கதை சொல்லி ஏளனமாய்ச் சிரித்துக்கொள்வதோடு கதை முடிந்துவிடுகின்றது.
இரண்டாவது கதையான 'உறவுகள் ஆயிரம்' ரஷ்யாவில் நிகழ்கின்றது. கதை சொல்லி, கொழும்பிலிருந்த காலத்தில், விருப்பின்பேரில் ரஷ்ய மொழி கற்க, அவரை ரஷ்யாவைச் சுற்றிப் பார்க்க அழைக்கின்றார்கள். ஈழத்தில் இளைஞர்கள் இயக்கங்களாய்த் தங்களை தகவமைத்துக் கொள்கின்ற காலகட்டம் அது. மிகவும் கஷ்டப்பட்டு வேலையிலிருந்து விடுமுறை எடுத்து கதைசொல்லி ரஷ்யாவுக்குப் பயணிக்கின்றார். அங்கே பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பல்வேறும மொழிகளைப் பேசுபவர்களோடு பழகும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தவேளையில் கேரளாவிலிருந்த வந்த கீதாவுக்கும் கதை சொல்லிக்கும் இடையில் மெல்லிய காதல் முகிழ்வது அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் வெளிநாட்டுப்பயணத்தைக் கூடக் குதூகலிக்க முடியாது இடையில் இலங்கையிலிருந்து ஒரு செய்தி(வதந்தி) பரவுகின்றது. கட்டுநாயக்காவில் போய் இறங்குகின்ற தமிழர்களையெல்லாம் இலங்கை அரசு பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கிறதென்று. அந்த அவதிகளினால் கதைசொல்லியின் காதல் கைநழுவிப் போவதையும் எப்படி கதைசொல்லி போய் கட்டுநாயக்காவில் இறங்கப்போகின்றார் என்ற பதைபதைப்பதையும் இக்கதை பதிவுசெய்கின்றது. இக்கதையை வாசிக்கும்போது சட்டென்று மனதில் வந்து தோன்றியது அசோகமித்திரனின் 'ஒற்றன்' நாவல். எங்கிருந்தோ வந்து புதிய சூழலில் கொஞ்சகாலம் நட்பாய்ப் பழகி, பிறகு என்றென்றைக்குமாய் அவர்களில் ஒருவரையும் பார்க்கமுடியாது பிரிகின்ற சூழல் மிகுந்த நெகிழ்ச்சி தரக்கூடியது. அசோகமித்திரனின் 'ஒற்றனும்', சாந்தனின் 'உறவுகள் ஆயிரமும்' வெவ்வேறு கதைப் பரப்பைக் கொண்டிருந்தாலும், இரண்டிலும் கதைசொல்லிகள் தங்களுக்கு இதுவரை பழக்கப்படுத்தாத புதிய நாடொன்றுக்கு முதன்முறை போகின்றனர். அத்தோடு தாங்கள் இதுவரை பார்த்தறியாத மனிதர்களையும், கலாசாரங்களையும் தங்கள் பார்வையிலிருந்து பார்த்து எந்த முன்முடிவுகளும் எடுக்காது, அம்மனிதர்களை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்வதுமெனவும்... ஒத்த தன்மையுடையவனாய் இருக்கின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவு'களை வாசித்த நிலப்பரப்புக்கு தாங்கள் உண்மையில் நிகழ்காலத்தில் இருக்கின்றோம் என்று கீதாவும் கதைசொல்லியும் உரையாடும் பகுதியும், கீதா காதலுடன் ஒரு மலையாளப் பாடலை குழுவாய் இருக்கும்போது பாடுவதை அப்படியே என்றென்னைக்குமாய் கதைசொல்லி நினைவில் வைத்திருப்பதுமான பகுதியும் வாசிப்பவருக்கு நெகிழ்ச்சி தரக்கூடியவையாகும்.
'மனிதர்களும் மனிதர்களும்' என்கின்ற கதை 1977ம் ஆண்டு கலவரம் நிகழும்போது கொழும்பில் சிக்கிக்கொண்ட சில குடும்பங்களின் கதையை அந்தப் பதற்றங்களோடு முன்வைக்கின்றது. கொழும்பில் இருப்பது சாத்தியமில்லை என்கின்ற நிலையில் அங்கிருக்கும் தமிழ்மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு புறப்படத்தொடங்குகின்றார்கள். அவ்வாறானவர்கள் முதலில் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டு கப்பலில் ஏற்றிச் செல்லப்படுகின்றார்கள். அஃதொரு நெடிய பயணம். இவ்வாறு போவதை விரும்பாத சில குடும்பங்கள் புகைவண்டியில் போவதற்குத் தீர்மானிக்கின்றனர். இரவிலிருந்து விடிகாலை வரை ஊரடங்குச் சட்டம். இவற்றினூடாக கதைசொல்லியும் அவரது மனைவியும் இன்னொரு குடும்பமும் தப்பிப் போகின்றார்கள் என்பதைப் பற்றியதே இக்கதை. கதையில் இத்தகைய அவதிகளுக்குள்ளும் தங்களைக் காப்பாற்றும் ஒரு சிங்கள ஆட்டோக்காரருக்கும் அவரின் உதவிக்குமாய் கதை சொல்லி நெகிழ்வது மொழிகளையும், இனங்களையும் தாண்டிய மனிதர்களுக்குள்ள காருண்யத்தைத் தெளிவாகக் காட்டுகின்றது
'எழுதப்பட்ட அத்தியாயங்கள்' குறுநாவல் சுதுமலையில் புலிகளின் தலைமையை இந்திய இராணுவ உலங்குவானூர்த்திகள் ஏற்றிச்செல்வதற்கான காத்திருப்பில் தொடங்கும் கதை கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நோக்கி முன்/பின்னாக நகர்கின்றது. அவ்வவ்போது வந்து போகும் சமாதான முயற்சிகளில் மக்கள் நம்பிக்கை கொள்வதையும், இவ்வாறான வானூர்த்திகளே தனக்கு நெருக்கமானவர்களை முந்தைய ஆண்டுகளில் பலியும் எடுத்தும் இருக்கின்றது என்பதையும் கதைசொல்லி நினைவுகூர்கிறார். காத்துக்கொண்டிருக்கும்போது வழமைபோல அரசியலும் பேசப்படுகின்றது. ஒரு காலத்தில் நம்பிக்கை தரக்கூடியதாய் இருந்த இடதுசாரி இயக்கத்தில் தான் இணைந்ததையும், அதிலிருந்த சில அர்ப்பணிப்புள்ள தலைவர்களைப்பற்றியும் கதைசொல்லி அசைபோடுகின்றார். வடக்கு கிழக்கிற்கு இணைப்புக்கு ஒரு மக்கள் வாக்கெடுப்பை வைப்பதுபோல ஏன் வடக்கும் கிழக்கும் முழு இலங்கையிலிருந்து பிரிந்துபோவதற்கான ஒரு தேர்தலை இவர்கள் நடத்தக்கூடாதென ஒரு இடதுசாரி வினாவச் செய்ததை கதை சொல்லி அசைபோடுகின்றார். இந்த சமயத்தில் ஒருவர் 'நீங்கள் யாரோடு?' என்று கேட்கும்போது கதைசொல்லி 'நான் சனங்களோடு' என்று கூறுவதோடு மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய போராட்டம் இடைநடுவில் சிதைந்துபோனது குறித்தும் கவலைப்படுகின்றார். ஈழ அரசியலில் உனது நிலைப்பாடு என்னவென்கின்றபோது, 'சனங்கள் எதைத் தீர்மானிக்கின்றார்களோ, அதுதான். என்னைப் பொறுத்தளவிலை தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். அவர்களுடைய சுயநிர்ணய உரிமை மறுக்கப்படமுடியாதது. எந்தவித சுரண்டல்கள் பாகுபாடுகள், அடக்குமுறைகள், அடிமைத்தனங்களுக்கும் ஆளாகாமல் இறைமையோடும் கெளரவத்தோடும் நாங்கள் வாழ ஏற்ற வழி எந்த வழி ஏற்றது என்பதைத் தெரிவு செய்கிற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எந்த விதத்திலென்றாலும் அவர்களுக்கு நியாயமும் பாதுகாப்பும் இருக்கவேண்டும். பிரச்சினை தீரவேண்டும் அதுதான் முக்கியம்' என்று கதைசொல்லும் பகுதி இன்றைய காலத்திற்கும் பொருந்தக்கூடியதே.
'அடையாளம்' என்கின்ற கதை, நீண்ட காலம் கதைசொல்லி யாழ்ப்பாணத்தில் இருந்துவிட்டு நண்பரொருவரின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு ஒருவாரம் செல்கின்றதைப் பற்றிய கதை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் கதைசொல்லிக்கு கொழும்பு மிகுந்த பதற்றத்தைத் தருகின்றது. பொலிஸ் பதிவு, பாதுகாப்புச் சோதனைகள் போன்றவற்றையெல்லாம் மிகுந்த பயத்துடனேயே எதிர்கொள்கின்றார். வீதியில், லொட்ஜில் சந்திக்கும் தமிழர்களெல்லாம் தனது பழையகாலத்தை நினைவுபடுத்தி பொலிசில் சிக்கவைத்து வைத்துவிடுவார்களோ என்ற பதற்றம் தொடர்ந்தபடியே அவருக்கு இருக்கின்றது. என்றாலும் கிட்டத்தட்ட பதினைந்துவருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் சிங்கள் நண்பர் எவ்வித மாற்றமில்லாது நட்புடன் இருப்பது கதைசொல்லிக்கு நிம்மதியாக இருக்கிறது.
இந்தியாவிலிருக்கும் சொற்ப வாரத்திலும் எப்போது கொழும்புக்குத் திரும்பிப் போவது.., அங்கே என்ன நடக்கின்றது என்று அந்தரத்தோடே கதைசொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றார். அந்தப்பயணத்தின்போது நீல பத்மநாபன், அருந்ததி ரோயையெல்லாம் சந்திப்பதாகக் கூறப்படுகின்றது. கட்டுநாயக்காவில் வந்து இறங்கும்போது இவரை ஏற்றிச்செல்ல எவருமில்லாது ஓட்டோவொன்றில் செல்லும்போது கதைசொல்லிக்கும், ஒரு சிங்கள முதியவருக்கும், இவர் முதன்முதலான் சுவைக்கும் பியருக்கும் இடையில் நிகழும் உரையாடல் நினைவில் நிற்கக்கூடியது. தன்னையொரு தமிழனாக சோதனைச்சாவடிகளில் காட்டாதிருக்க பியரைக் கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக்கொண்டு இருப்பது காப்பாற்றும் என்று இவர் நம்புகின்றார். இறுதியில் பார்த்தால் அந்த பியர் கானில் 'ப்ளு ரைகர்' என்ற பெயருடன் புலிப்படமொன்றும் இருக்க தனது அசட்டுத்தனம் கதைசொல்லிக்கு புரிகின்றமாதிரி கதை முடியும்.
சாந்தன் இதுவரை தமிழில் 15 தொகுப்புக்களையும், ஆங்கிலத்தில் 4 தொகுப்புக்களை வெளியிட்டிருக்கின்றார். சாந்தனின் எழுபதுகளின் வந்த தொகுப்பைப் பார்க்கும்போது அங்கே வரும் கதைசொல்லிகள் பயணத்தை உற்சாகமாய் மேற்கொள்பவர்களாய்... நினைத்த நேரத்தில் கொழும்பிலிருந்து யாழுக்கும், திருமலைக்கும் போகக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் இறுதியாய் வந்த இததொகுப்பில் உள்ள கதைகளில் (80களின் நடுப்பகுதிக்கு பின்) இப்பயணங்கள் எவ்வளவு அல்லல்களுக்கும் பதற்றங்களுக்குமிடையில் நிகழ்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். உண்மையில் இந்தப் 'பயணங்களின் கதை'களினூடாகக் கூட நாம் ஈழத்தின் அரசியல் நிலவரங்களைப் புரிந்துகொள்ள முடியும். எவ்வாறு தமிழர்களுக்கான அரசியல் சூழல் ஈழத்தில் மாறிக்கொண்டிருந்த்ன என்பதை சாந்தனின் 70களின் கொழும்புச் சூழலை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள் முக்கிய சாட்சிகளாகும். சாந்தனின் யாழுக்கு அப்பால் வாழ்ந்த சூழ்நிலை சிங்கள மக்களை வெறுத்தொதுக்காமல் தமிழர்களின் மீதான பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை மட்டுமே கூறக்கூடியதாக இருப்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இந்த அய்ந்து குறுநாவல்களில் -சாந்தனின் ஏனைய அநேக சிறுகதைகளைப் போலவே- எந்தப் பிரச்சாரத்தொனியும் புலப்படவில்லை. 'எழுதப்பட்ட அத்தியாயங்கள்' கதையில் கூட அரசியல் வெளிப்படையாகப் பேசப்படுவது, யாழ் சூழலில் அவ்வாறு மக்கள் இருப்பது இயல்பான ஒன்றெனக் காட்சிப்படுத்துவதற்கேயாகும். 1977ம் இனக்கலவரத்தில் தப்பிப்போவதன் பதற்றத்தைத் 'மனிதர்களும் மனிதர்களும்' கதையில் தக்கவைத்திருந்தாலும் புகைவண்டியில் ஏறுவதோடு கதையை சாந்தன் முடித்துவிடுகின்றார். தேவைக்கதிமகாய் புகைவண்டிப்பயணத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்றேல்லாம் விபரிக்கவில்லை. அநேகமான கதைகளில் சாந்தன் வாசிப்பவருக்கான வெளியை கதை முடிந்தபின்னும் தருகின்றார். உதாரண்மாய் 'உறவுகள் ஆயிரம்' கதையில், கதை சொல்லி கட்டுநாயக்காவில் போயிறங்கும்போது என்ன நிகழப்போகின்ற பதற்றத்தை வாசிப்பவரிடையே படியவிட்டாலும், கதை மொஸ்கோவில் விமானம் ஏறுவதோடு முடிந்துவிடுகின்றது. கட்டுநாயக்காவில் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வெளி வாசகருக்கு திறந்துவிடப்படுகின்றது. கட்டுநாயக்காவில் இறங்கி எளிதாக வெளியேறியவர் ஒருமாதிரியும், அங்கே சோதனைக் கெடுபிடிகளால் சிக்குப்பட்டு அல்லற்பட்டவர் வேறொரு மாதிரியுமாய் இக்கதையை வாசித்து முடிப்பதற்கான வெளி தரப்படுகின்றது.
'உறவுகள் ஆயிரம்' கதையில் கறுப்பினத்தவர்களை 'நீக்ரோக்கள்' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகின்றது.இன்றைய வழக்கில்லாத, ஒரு இனத்துவேச வார்த்தையாக மதிப்பிடப்படுகின்ற இவ்வார்த்தையை சாந்தன் அடுத்த பதிப்பிலாவது திருத்திக்கொள்ளவேண்டும். அத்தோடு 'ஆரைகள்' கதையில் கொழும்பு போன்ற பல்லினச்சூழலில் இருந்துகொண்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்டும் சாதி பார்ப்பதை சாந்தன் கேலி செய்தாலும், அதை முழுமையாக தெளிவாக மறுக்காமல் இவ்வாறான விடயங்களை ஒரு ஏளனப் புன்னகையால் எளிதாகக் கடந்துவிடமுடியுமா என்பதும் கேள்விக்குரியது. எனெனில் நாம் சாதி குறித்த கதையாடல்களில் மிகத் தீவிரமாகவே எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது.
ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாய் யாழ் சூழலில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சாந்தனுக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச்சூழலில் கொடுக்கப்படவில்லையெனவே எண்ணத்தோன்றுகின்றது. சனங்களுக்கான கதையை அந்தச் சனங்களில் ஒருவராய் போர்ச்சூழலுக்குள் நின்று எழுதிக்கொண்டிருப்பவர்களை நமது தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் கவனித்ததாய் வரலாறுகளும் இல்லை என்பதும் உண்மையே. ஈழத்தின் அரசியல் வரலாற்றை -புனைவுகளினூடாக- அறிந்துகொள்ள விரும்புவர்கள், 1970களிலிருந்து 2000 வரையான சாந்தனின் கதைகளை வாசித்தால் தமிழர்கள் எவ்வாறு வரலாற்றில் நுட்பமாய் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதையறிய முடியும். அதேபோன்று தமிழர்களின் அரசியல் வரலாற்றில் விடப்பட்ட தவறுகளும், இழைக்கப்பட்ட துரோகங்களும் கூட சாந்தனின் கதைகள் பூடகமாய் பதிவுசெய்வதையும் நாம் கவனிக்கவேண்டும். சாந்தனைப் போன்ற பல்லின மொழி மக்களோடு பரிட்சமுடைய படைப்பாளிகளின் குரல்களை இலங்கை அதிகார வர்க்கங்களோ, தமிழ்ப்போராட்ட இயக்கங்களோ அதிகம் செவிமடுத்திருந்தால் நாம் இன்றைய பேரழிவுக்கு வந்திருக்கமாட்டோமோ என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கவும் முடிவதுமில்லை. சாந்தனின் கதைகள், பிறரை நேசிப்பதற்கான விசாலமனதையும், எதிர்க்கருத்தாய் இருந்தாலும் செவிகளைத் திறந்து வைத்துக் கேட்பதையும்தான் வேண்டி நிற்கின்றன போலத் தெரிகின்றது.
இக்கட்டுரைக்காய் மேலதிகமாய் உதவியவை:
காலங்கள் (1984)
ஒரே ஒரு ஊரிலே (1975)
விக்கிபீடியா (சாந்தனின் புகைப்படம்)
(கூர் 2010ம் ஆண்டு தொகுப்பிற்காய் எழுதியது)

4 comments:
சாந்தனை மிகச் சிறுவயதில் இருந்தே அறிவேன். அவரும் நானும் ஒரே ஊரில் வசித்து வந்தது அதற்கு முக்கிய காரணம். சாந்தன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் படிக்கும் மாணவர்களுக்கு என்று ஒரு கட்டுரைப் புத்தகம் எழுதி இருந்தார். அது தான் நான் முதன் முதல் படித்த அவரது எழுத்து. அதே நேரம் நான் படித்த பாடசாலையின் முக்கிய தினங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அவர் தயாரித்த / நெறிப்படுத்திய நாடகங்கள் இடம்பெறும். அதில் சுப்பன்ண்ணாவும் சோமன்னாவும் என்ற நாடகம் இப்போதும் மறக்க முடியாதது.
1/04/2010 11:45:00 PMஅவரது சிறு கதைகளை அண்மையில்தான் படித்தேன். நீங்கள் சொன்னது போலவே மிகச் சிறிய, ஆனால் போதுமான தாக்கத்தைக் கொண்டிருந்த கதைகள்.
உங்கள் புத்தக விமர்சனங்கள் எனக்கு அதிகம் பிடிக்கும்.... நீண்டகாலத்துக்குப் பிறகு அப்படி ஒன்று.
நன்றி டிசே
நன்றி அருண்.
1/09/2010 03:48:00 PM....
சாந்தனை சிறுவயதிலிருந்தே அறிவீர்களென்றால் உங்களுக்கு அவரைப் பற்றிச்சொல்ல நிறைய இருக்கும். நேரம் இருக்கும்போது அவற்றை எழுதுங்கள்.
சாந்தனின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும். அவர் புத்தகங்களை மீண்டும் தேடிப் படிக்க வேண்டும் போல் உள்ளது.
7/20/2018 12:29:00 AMஇருக்க கீழே உள்ளது எழுதிய விடயத்திற்கு நேரடியாக தொடர்புபடாதது,
'அய்ந்து' என்று எழுதுகிறீர்கள். 'அய்ந்து' என்பதற்கும் "ஐந்து" என்பதற்கும் இடையில் உச்சரிப்பில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ( அல்லது நான் மட்டுந்ததானா ?)

Post a Comment