1.
பானுபாரதியின் 'பிறத்தியாள்' தொகுப்பு. போர்க்காலச் சூழலில் உயிர்த்திருத்தலுக்கான தத்தளிப்பையும், புலம்பெயர் வாழ்வினது நெருக்கடிகளையும், அதிகம் கவனிக்காது புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் அகவுலகத்தையும் பேசுகின்றது. இத்தொகுப்பிலுள்ள 31 கவிதைகளில் அரைவாசிக் கவிதைகள் ஈழத்தில் இருந்தபோதும், மிகுதிக் கவிதைகள் புலம்பெயர் தேசத்திலிருந்தும் எழுதப்பட்டிருக்கின்றன. 'அமைதிபடை'யாக இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எப்படி தமது முகமூடிகளைக் கழற்றி அழிவின் சித்திரங்களை வரைந்தார்கள் என்பதை ஈழத்திலிருந்தபோது பானுபாரதி எழுதிய சில கவிதைகள் பதிவு செய்கின்றன. கலாவின் சர்ச்சைக்குரிய கவிதையான 'கோணேஸ்வரிகள்', ஆடைகளைக் கழற்றி அம்மாவின்/தங்கையின் யோனிகளை, ஒடுக்கும் இராணுவத்தின் 'பசி'க்குத் திறக்கச் சொல்லி ஒருவித இயலாமையுடனும் கோபத்துடனும் எழுதப்பட்டிருக்கும்.. அதற்கு நிகரான அறச்சீற்றத்துடன் 'ஏய் பாரதமே/ எல்லைகள் தாண்டி/வெண்கொடிகள் நாட்டுவதிருக்கட்டும்/முதலில்/ உன்புத்திரரின் வேகம் தணியுமட்டும்/பிசைந்து உருட்டி விளையாட/திரண்ட உன் முலைகளை/ அவர்களுக்குக் கொடு' (ப 29) என்கின்ற பானுபாரதியின் 'வெடிகுண்டு பிசையும் பாண்டவர்' கவிதையும் எழுதப்பட்டிருக்கிறது. கால அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது கலாவின் கவிதைக்கு முன்பாக பானுபாரதியின் கவிதை எழுதப்பட்டிருகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்திய இராணுவ காலத்தின் கொடுமிருளை, வெளியுலகிற்குத் தெரியாத அச்சம் சூழ்ந்த நாட்களை, நாளாந்த சம்பவங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் பானுபாரதி நுட்பமாகப் பதிவு செய்கின்றார். 'தெரு நாய்கள் கூட/ கடலை எண்ணெயின் நாற்றம்/ தூரத்தில் வரவே/ வாலை மடக்கி/ யோனியைப் பொத்திக் கொண்டோட/பழக்கப்பட்டு விட்டன' (ப 24) என்கிறார். நாய்களே இவ்வளவு அச்சமுறுகின்றது என்றால் அங்கு வாழும் மாந்தர்களின் நிலை பற்றி நாம் எதுவும் விரித்துக் கூற வேண்டிய அவசியமே இல்லை. அதேபோல் இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் எழுதுவதற்கான பேசுவதற்கான சுதந்திரம் எந்தளவில் மட்டுப்பட்டிருந்தது என்பதை 'ஒரு கவிதையையோ/ காகிதத்தையோ/ அல்லது சிறு குறிப்பையோ/பெண்ணின் மர்மப் பிரதேசங்களென/ சுட்டப்படும் இடங்களில் கூட/ மறைத்து வைப்பதென்பது/ தற்கொலைக்குச் சமமான செயல்' (ப 24) என்ற வரிகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறான ஒரு கொடுங்காலத்தில் தான் இன்றும் காஷ்மீர், மணிப்பூர், ஈராக், ஈழ மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவூட்டிக் கொள்ளலாம்
புலம்பெயர் வாழ்வு குறித்தும் அநேக பெண் படைப்பாளிகளிலிருந்து மாறுபட்ட ஒரு பார்வையை பானுபாரதியின் கவிதைகள் தர முயற்சிக்கின்றன. வசந்தி ராஜா, 'தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம். என் மகள்களுக்கும். நம் பெண்களுக்கும்' எனப் பிரகடனப்படுத்தும்போது, பானுபாரதியோ இன்னமும் ஈழத்திலிருந்தபோது தாங்கியிருந்த சிலுவைகளையே இன்னும் சுமக்க வேண்டியிருக்கின்றது என்கிறார். 'ஏய் கள்ள ஞானிகளே' என்ற கவிதையில் 'சிலுவையில்/ அறையப்பட்டபடியே புணரப்பட்டேன்/நித்தியத்தின் பெயரால்' என புலம்பெயர் தேசத்திலும் பாலின வித்தியாசத்தால் ஒடுக்குதல் நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகின்றார்.
அதேபோல் தனி ஈழம் கேட்டுப் போராடிய இயக்கங்களின் சனநாயக மறுப்பைப் பற்றியும் பானுபாரதி பல இடங்களில் குறிப்பிடுகின்றார். 'எலும்பும் நெருப்பும்' கவிதையில் 'ஒன்றுமட்டும் புரிந்தது/எங்கையாவது எதையாவது/புதைத்தலே இவர்களுக்குத் தெரிந்தவை'(ப 38) எனக் கேலி செய்கின்றார். மேலும் ஈழப்போர் முடிவுக்கு வந்த 2009ல் எவரெவர் என்ன அரசியல் செய்தாலும் பிரச்சினையில்லை, ஆனால் 'அதற்காக நீங்கள்/எங்கள் வாழ்வை/ மீண்டும்/பாயாய் விரித்து/ படுத்துருள முடியாது கண்டீரோ' (ப 74) என எச்சரிக்கவும் செய்கிறார்
2.
புலம்பெயர முன்னர் தமக்கான விடுதலை தனிநாட்டுப் போராட்டம் மூலம் வருமென நம்புகின்ற படைப்பாளி, பல்வேறு இயக்கங்களின் பெருக்கங்களிலும், அவர்களின் 'நாட்டாமை'த்தனங்களாலும் அந்த நம்பிக்கையை இழந்துவிடுகின்றார். தனக்கான இனியான விடுதலை என்பது பெண் என்பதன் அடையாளத்தின் மூலமே கண்டடையப்படும் என்ற ஒரு புள்ளியைப் 90களின் பின்பான கவிதைகளில் வந்தடைகின்றார். தன்னைப் போன்ற பெண்கள் வீட்டில் சிறைப்படுத்தப்பட்டு, தங்களைச் சிறைப்படுத்தியவர்களே பெண் விடுதலை வேண்டுமென்ற ஊர்வலங்களில் முன்னிற்கும் முரணை 'வண்டுகளின் தலைமறைவில்' எள்ளி நகையாடுகின்றார். அதுபோல இன்னொரு கவிதையில் ஆணை ஓரிடத்தில் தரித்து நிற்கும் நிலமாகவும், பெண்ணைக் கோபமாய் ஓடிக்கொண்டிருக்கும் அருவியாகவும் உவமிக்கின்றார். இவ்வளவு ஆவேசம் இருந்தும் இறுதியில் 'வாளெடுத்த பெண் தெயவங்களெல்லாம்/ நிலத்தடியிலும் அருவியிலும்/ கடலிலும் சங்கமமாகி/ சாதிக்கொரு/ பிள்ளை பெற்றுக்கொண்டன' (ப 20) என்கின்ற சோகத்தையும் சொல்கின்றார்.
பெரியார் பெண் விடுதலைக்கான ஒரு முன் நிபந்தனையாக 'ஆண்மை' ஒழிக்கப்படுவது குறித்துப் பேசுகின்றார். அதுபோலவே பானுபாரதியும் 'அம்மிக் கல்லில் அடித்து நொறுக்கப்படும்/ சிதறு தேங்காய் போல/ ஆண்மை நொறுக்கி' வரும் திராணியுள்ள ஆண்களோடே தன்னால் சுதந்திரமாகப் பேசிக் களிக்கமுடியுமெனக் கூறுகின்றார்.
சங்ககாலம் தொடங்கி தமிழில் கவிதைக்கென நீண்ட பராம்பரியம் உண்டு. நெடுங்காலமாய்ப் பெண்களின் பங்களிப்பு கவிதைகளில் இருந்தபோதும் அதை அவ்வளவாக பேசாது விட்ட மரபும் தமிழருக்கு உரித்தானதே. இன்றைய காலத்தில் ஒருவிதமாய் உறைந்துபோயிருக்கும் ஈழக்கவிதையின் ஊற்றுக்களை திறந்து முன்னகர்த்திக்கொண்டிருப்பவர்கள் பெண் கவிஞர்களே என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.அவ்வாறான ஓர் ஊற்றை பானுபாரதின் 'பிறத்தியாள்' திறந்து வைத்திருக்கின்றது என்பதைத் துணிந்து கூறலாம். முக்கியமாய் ஈழத்தமிழரின் கவிதைப்பரப்பில் இன்றைய காலத்தில் நிறையப் பெண் படைப்பாளிகளின் தொகுப்புக்கள் வெளிவரத் தொடங்கியிருப்பது மிகவும் உற்சாகம் தரக்கூடியது. பாலின அடிப்படையில் ஒரு பெண்ணாகவும், சாதிய அடுக்குமுறையில் ஒரு தலித்தாகவும் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற பானுபாரதியின் கவிதைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றது
(பதிப்பகம்: கருப்புப் பிரதிகள்)
-Nov 09, 2010
1 comments:
innamum vaasithikondirukiren.
12/18/2010 11:24:00 PMnalla eluthu.
but...
entha Camp neenkal?
neenkal thurokiya?
allathu oru iruppu vaathiyaa?
sary vudunka sir,
keep on writing plsssss
urs
soorya
Post a Comment