-இளங்கோ
1.
நீண்டகாலமாய் கவிழ்ந்திருந்த குளிர்காலம் மெல்ல மெல்ல விலக, குழந்தமைக்காலக் குதூகலத்தோடு சனங்கள் தெருக்களில் பெருந்திரளாய் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இவன் ஏழாவது மாடியிலிருந்து ரொறொண்டோவின் முக்கிய தெருக்கள் சந்திக்கும் டன்டாஸ் ஸ்குயரைப் பார்த்தபோது ஏதோ எறும்புக்கள் நிரை நிரையாக மறைவிடத்தை விட்டு வெளியே வருவதுபோல மனிதர்கள் மிகச் சிறிதாகத் தென்பட்டார்கள். இப்படியொரு மனித எறும்பாக மாறி தானும் பெரும் திரளுக்குள் கலக்காது, தூரத்திலிருந்து எல்லாவற்றையும் விலத்திப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் அனைத்துப் பிரச்சினைகளும் காரணமென்ற நினைப்பு மேலிட, சலித்துக்கொண்டு மீண்டும் தான் வேலை செய்துகொண்டிருந்த உணவகத்தின் அடுப்பங்கரைக்குள் இவன் நுழைந்தான். ஒரு பத்து நிமிட சிறிய இடைவேளைக்குள், அடுப்படியில் வந்து குவிந்த சாப்பாட்டுக் கோப்பைகளைப் பார்க்கும்போது திகைப்பாக இருந்தது. இனி இக் கோப்பைகளை தேய்த்து நீரில் அலம்பி dish washerற்குள் போட்டெடுத்துத் துடைத்து வைக்கும்வரை ஒர் இயந்திரமாகவே மாறவேண்டியிருக்கும். தொலைவிலிருந்து அவதானித்தபோது டன்டாஸ் ஸ்குயரில் சனங்கள் தெரிந்ததைப்போல, தானும் இந்தக் கோப்பைகளைக் கழுவிக் கழுவி பெரும்பாரத்தை இழுத்துத் தவிக்கும் ஓர் எறும்பு போல ஆகிக்கொண்டிருக்கின்றேனோ என்ற நினைப்பு இவனுக்குள் பரவத்தொடங்கியது.
இப்படித் தீவிரமாய் யோசிப்பதுதான் இவனுக்கு பெரும் சித்திரவதையாக நாளடைவில் மாறியிருந்தது. தனது சிந்தனைகள் அங்குமிங்குமாய் அலைவுற்று ஒரு பெரும் வலையில் சிக்கித் திணறுவதைத் தவிர்க்கும்பொருட்டு, இவன் கழுவுகின்ற கோப்பைகளோடு உரையாடத் தொடங்கிவிடுவான். ஆனால் அங்கு கோப்பைகளோடு நிகழும் உரையாடல்கள் கூட இந்தக் கோப்பையில் என்ன சாப்பாடு தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்பட்டிருக்கும்? அதைச் சாப்பிட வந்தவர் யாராயிருப்பார்? தனித்துச் சாப்பிட வந்தவரா அல்லது வேறு யாரோடும் சேர்ந்து சாப்பிட வந்தவரா? என்று கேள்விகள் இவனது மூளைக்குள் பல இலையான்களைப் போல பறக்கத் தொடங்கிவிடும். ச்சீய்..தூ... என்று நினைவின் இலையான்களைத் துரத்தத்தொடங்கினாலும் அவ்வளவு எளிதில் அவனை விட்டு இலையான்கள் தூர விலகியோடுவதில்லை. ஓர் இலையானை அடித்துக்கொல்ல அது இன்னும் நூறு முட்டைகளை இட்டுவிட்டுச் சாவதுபோல, ஓரு தீர்க்கமுடியா வியாதியாய் இவ்வாறான எண்ணங்கள் அவனுக்குள் சடைத்துக் கிளைவிடத் தொடங்கிவிடும்..
2.
கனடாவிற்கு வந்தபோது அவனுக்கு எல்லாமே ஆச்சரியமாயிருந்தது. மார்கழியில் பொழிந்துகொண்டிருந்த கனடாப் பனி மட்டுமில்லை, பின்பு அது நிலத்தில் திரட்சியான வெண்முகில்கள் வந்திறங்கியதுமாதிரி பலநாட்களாய் உறைந்து கிடப்பது வரை எல்லாமே புதிய அனுபவமாய் இருந்தது. படிக்கப் போயிருந்த பள்ளிக்கூடம் கூட வியப்பைத் தனக்குள் புதைத்து வைத்திருந்தது. ஆசிரியர்கள் வகுப்பிற்குள் வரும்போது எழும்பி நிற்கத்தேவையில்லை என்பதிலிருந்து எழுதும் மேசையில் பிருஷ்டத்தைப் பதித்து, கால்களை அந்தரத்தில் தொங்கவைத்துக்கொண்டே வாத்திமாரோடு கேள்விகளைக் கேட்கலாம் என்பதுவரை எல்லாமே புது அனுபவமாகத்தான் இருந்தது. பள்ளிக்கூடத்தில் இவன் கணிதப்பாடங்களுக்கு மிகவும் விரும்பிச் செல்வான்; வகுப்பிலும் இவன் கணிதம் நன்றாகச் செய்பவர்களில் ஒருவன் என்கிற மதிப்பும் இருந்தது. இதற்கான வரலாறு பெரிதொன்றுமில்லை, மற்றப் பாடங்களுக்கு ஆங்கிலமொழி அத்தியாவசியத் தேவையாக இருந்தது; கணித்ததில் எண்களோடு மட்டுமே ஒளித்துப் பிடித்து விளையாட மட்டுமே வேண்டியிருந்தது.
ஈழத்தில் இவனுக்கு சிவசம்பு என்றொரு கணித வாத்தி வாய்த்திருந்தார். மனுசனின் மனோநிலை கனடா காலநிலைபோலத்தான் இருக்கும். எப்போது நல்ல நிலையில் இருப்பார் எப்போது கொதிக்கின்ற எண்ணெய்யாக இருப்பார் என்று எவரும் எளிதாக அறிந்துவிடமுடியாது. அதுவும் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது அவரின் மனைவியோடு பிணக்குப்பட்டு வந்திருந்தால், அன்று வகுப்பில் கொப்பிகள் விளாங்காய்க்கு எறிகின்ற கல்லுகள் மாதிரி வகுப்புக்கு வெளியே பறக்கத் தொடங்கிவிடும். ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் இப்படி பலிக்கடாவாக வேண்டும். பிறகு வகுப்புக்கு வெளியே வேள்விக்குத் தயாராய் நிற்கிற ஆடு மாதிரி வகுப்பு முடிகிறவரை தலைகுனிந்து அவமானத்துடன் நிற்கவேண்டும். சிவசம்பு வாத்தியின்ரை இந்த அக்கிரமத்தாலேயே பல பெடியங்களுக்கு கணித பாடம் தொடங்கப்போகின்றது என்றாலே -கனடாத் தமிழ்க்கடைகளில் உறைப்பு மிகுந்த கொத்துரொட்டியைத் தின்றபின் வயிற்றுக்கு வரும் உபத்திரம்போல- கலக்கமாயிருக்கும்.
இவனது வகுப்பில் தமிழ்ப் பெட்டையொருத்தி இருந்தாள். சும்மாவே அழகுதான், ஆனால் அது போதாதென்று ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கலரில் அலங்காரம் செய்துகொண்டுவருவாள். ஒருநாள் சிவப்புவர்ணத்தில் ஆடைகள் அணிந்துவருகின்றாள் என்றால் கழுத்தில் போட்டிருக்கும் செயின், கால்/கை விரல் நகங்கள், ஏன் சிலவேளைகளில் தலைமயிர் கூட அணிந்திருக்கும் ஆடைகளின் வர்ணத்திற்கு ஏற்ப மாறியிருக்கும். உணவு இடைவெளிகளில் டொமினோ, பிளக் ஜக் என்று காசு வைத்துச் சூதாடும் பெடியங்கள் சிலர் கூட, அவள் இன்றைக்கு என்ன கலரில் வருவாள் என்பதை வைத்து சூதாடும் அளவிற்கு அவளின் அழகும் அலங்காரமும் பாடசாலை வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்தது. இப்படி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகச்செய்யும் அவளுக்கு பிடிக்காத ஒரு விடயமிருந்தது, அது கணிதம்.
இந்த ஒரு விடயத்தால்தான் இவனோடு அவள் முதன்முதலில் பழகத்தொடங்கினாள். அவ்வப்போது தரப்படும் வீட்டுவேலைகள், அசைன்மென்ட்கள், குயிஸ்களில் கொஞ்சம் நல்ல புள்ளிகள் பெற்றுவிட்டால் பிறகு இறுதிப்பரீட்சை அவ்வளவு செய்யாவிட்டாலும் கவலைப்படத்தேவையில்லை. சிலவேளைகளில் சில கணக்குகளை இவன் விளங்கப்படுத்தும்போது அவள் எங்கையாவது வேடிக்கை பார்த்தோ அல்லது போட்டிருக்கும் அலங்காரத்தைச் சரி செய்தோ கொண்டிருப்பாள். இதைப்பார்த்து இவனுக்கு எரிச்சல் வந்து, 'இப்படி அலங்காரம் போடுகின்ற நேரத்தில் கொஞ்ச நேரத்தையாவது கணக்குப்படிக்க பயன்படுத்தினால் நன்றாகச் செய்யலாமே' எனக் கூறுவான். 'இவ்வளவு சிரத்தையாக அலங்காரம் செய்வதால் உன்னைப் போன்ற பெடியங்கள் எல்லாம் திரும்பித் திரும்பிப் பார்க்கின்றீர்கள், கணக்கு நன்றாகச் செய்தால் யார் என்னைக் கவனிக்கப்போகின்றீர்கள்?' என்று லொஜிக்காய் கேட்டு இவனை மடக்குவாள். உண்மைதான். வகுப்புக்கு வந்து Doriots பையை உடைத்து அதிலிருந்து சிப்ஸை ஒவ்வொன்றாய் வாய்க்குள் எடுத்துப் போடும்போது அவள் உதடுகளினதும் சிப்ஸினதும் கடும் சிவப்பு வர்ணம் இவனை வேறெந்த உலகிற்கோ அழைத்துப் போவதை இவனால் மறைக்கமுடியாதுதான். இவர்களுக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் இரஷ்யப் பினபுலத்தைக் கொண்டவர். ஒஸ்ரோஸ்விஸ்கி என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வாய்க்குச் சுளுக்கு வந்துவிடும், ஆனால் அவரின் பெயரிலுள்ள 'விஸ்கி' போல மிகவும் கனிவான மனுசன். மேலும் இவள் பாடம் நடக்கும்போது பாடத்தைக் கவனிக்காது எதையாவது செய்துகொண்டிருந்தால் கூட, ஒஸ்ரோஸ்விஸ்கி வாத்தி ஊரில் இவனுக்கு வாத்திமார் செய்வதுபோல,அவளை வகுப்பில் எழும்பி நிற்கச்சொல்லியோ, வகுப்பை விட்டு வெளியே போகச் சொல்லவோ -முக்கியமாக- பிரம்பை எடுத்து அடிக்கவோ மாட்டார்.
3.
இந்த இடம்பெயர்வு முன்னைய காலங்களில் நிகழ்ந்தது போல அல்லவென எல்லோருக்கும் நன்கு விளங்கிவிட்டது. இனிமேல் நிரந்தரமாக இந்த ஊரை... படித்த பாடசாலையை... விட்டுப்பிரியப் போகின்றோம் என்ற கவலை இருந்தாலும் அதை மேவியதாக கொடூர யுத்தம் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருந்தது. இராணுவம் முன்னேறி புதிய இடங்களைப் பிடித்து முகாம் அமைத்தபின் குண்டுச் சத்தங்கள் சற்று ஓய்ந்தது மாதிரி இருந்தது. மழை நின்றாலும் தூவானம் நிற்காதது போல அவ்வவ்போது இராணுவமும் இயக்கமும் முட்டுப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பெடியள் பாதைகளைக் கிளியர் செய்துகொடுக்க, ஊர்ச்சனம் வீடுகளிலும் தோட்டங்களிலும் விட்டுவந்த உடைமைகளை எடுத்துவரத் தொடங்கியிருந்தனர். அப்போதுதான் இவன் தன் பாடசாலை அதிபரை நீண்ட நாட்களுக்குப்பிறகு கண்டான்.
சண்டை மூளாத பகுதியில் அதிபரின் வீடிந்தும் ஏன் இங்கு வந்து இந்தாள் கஷ்டப்படுகிறது என்றுதான் முதலில் நினைத்தான். ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் பாடசாலையில் அதிபராய் அவர் இருந்தாலும் இவனுக்கும் அவருக்குமான உறவு என்பது தனித்துவமானது. சிலசமயங்களில் சிலவிடயங்களுக்கு எவ்வளவு காரணங்களைச் சொன்னாலும் போதாமை இருப்பதுபோல அதிபருடான தனது உறவு எப்படி முகிழ்ந்ததென்பதை நினைக்கும்போதும் இவனால் ஒரு தெளிவான பதிலைக் கண்டறிய முடியாதிருக்கும்..
கடந்தகாலத்தைப் பற்றி இப்போது நினைத்தாலும், அவனுக்கு அது சூறாவளி வந்து ஓர் உலுக்கு உலுக்கி விட்டுப்போனதைப் போல விதிர்விதிர்க்கச் செய்கிறது. அக்கொடுங்காலம் இந்திய இராணுவம் ஈழத்தில் வந்து முகாங்கள் அமைத்த காலமாய் இருந்தது. இயக்கம், சாதாரண பெடியங்கள் போல சாரத்துடனும், மறைக்கப்பட்ட கிரனைட்டுமாகத் திரிந்துகொண்டிருந்தது. இவனது அப்பாவிற்கு கொழும்பில் கடையொன்றில் வேலை. பிரச்சினைகள் தீவிரம் ஆக ஆக வந்து போகும் பாதை அடிக்கடி மூடப்பட அப்பா ஊருக்கு வந்தே மாதங்கள் பல ஆகியிருந்தது. வறிய சூழல் என்றாலும் அவனது அம்மாவிற்கு எல்லோருக்கும் இயன்றளவு உதவவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமிருந்தது. இயக்கத்திலிருந்த பெடியங்களுக்கு அவரவர்களின் வீட்டில் கூட உள்நுழைய அனுமதிப்பதில்லை; எனெனில் எப்போதும் இந்தியன் ஆமி இயக்கத்துக்குப் போன ஆக்களின் வீட்டைக் கழுகுக்கண்ணோடு கண்காணித்துக்கொண்டிருக்கும். இயக்கப் பெடியங்கள் வீட்டை வந்து போனாங்கள் என்று கேள்விப்பட்டால் பிறகு அக்குடும்பங்களின் நிலைமை விபரீதமாகிவிடும். ஒரு பிள்ளையைத்தான் நாட்டுக்கு தலைமுழுகிவிட்டாச்சு, மற்றப் பிள்ளைகளையாவது ஒழுங்காய் வளர்த்து ஆளாக்குவோம் என்ற எண்ணமே அன்றையகாலத்தில் பல பெற்றோர்களுக்கு இருந்தது. தம் சாவை நாட்கணக்கில் ஒத்திப்போட்டு, இந்தியன் ஆமிக்கு ஒழுங்கைகளுக்குள் நுழைந்து சுழித்துப்போட்டு வாழ்ந்துகொண்டிருந்த இயக்கப் பெடியங்களுக்கு அன்றன்றைய சாப்பாடு கிடைப்பது என்பது பெரும் திண்டாட்டமாய் இருந்தது.
ஆபத்து பின்வீட்டுக்குள் பதுங்கி நின்றாலும், பெடியங்களுக்கு அவித்துக் கொட்டாமல் இருக்கமாட்டேன் என அவனது அம்மா இயக்கத்திற்கு சமைத்துக்கொடுக்கத் தொடங்கினார். அநேகமாய் பெடியள் இரவில்தான் வருவார்கள். அவனது ஊரில் மின்சாரம் என்ற ஒரு சாமானே இல்லாததால் சனமெல்லாம் ஆறு ஏழு மணிக்கே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு எட்டு ஒன்பது மணிக்குள் உறங்கப் போய்விடும். சாப்பிட வருகின்ற பெடியங்கள் தனித்து வரமாட்டார்கள். இரண்டு மூன்று பேராய்த்தான் சேர்ந்து வருவார்கள். ஒருவன் சாப்பிட மற்றொருவன் இரண்டு வீடுதள்ளி நின்று ஆமியின் நடமாட்டம் தென்படுகின்றதா எனச் சென்றி பார்ப்பான். பிறகு சென்றி பார்த்தவன் சாப்பிட, ஏற்கனவே சாப்பிட்டவன் ஆமியின் அசைவுகள் தெரிகிறதா என இருளில் விழியெறிந்து உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி வருகின்ற பெடியங்களில் சிலர் தங்களது பெற்றோரைக் கண்டு வருடங்கள் சிலவாகியிருக்கும். அவர்கள் சாப்பிட்டபடி தங்களது அம்மாக்களின் நினைவுகளை இவனது அம்மாவோடு பகிர்ந்து நெகிழ்ந்தபடி நிற்பார்கள். சில பெடியங்கள் உணர்ச்சிப்பெருக்கில் 'அம்மா இவ்வளவு பெரும் ஆபத்தையும் பார்க்காது எங்களுக்கு சாப்பாடு சமைத்து தருகிறியள். உங்களுக்கு என்ன அம்மா நாங்கள் கைமாறாய்த் தரப்போகின்றோம்?' என்பார்கள். இவனது அம்மாவும், இவனைக் காட்டி 'இவன் உங்களின் வயதுக்கு வரும்போது என்னைவிட்டு விட்டு இவனும் உங்களைப் போல இயக்கமென ஒளிந்து திரியாமல் நிம்மதியாய் வாழ இந்தக் கோதாரிப்பட்ட பிரச்சினை எல்லாம் கெதியாய்த் தீரவேண்டும்' என்பார். அவர்கள் இந்த வார்த்தைகளைக் காற்றுடன் காவிக்கொண்டு இருட்டினில் மறைவார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல, ரோந்து போகின்ற இந்தியன் ஆமிக்கு பெடியங்கள் பல இடங்களில் அடிக்கத் தொடங்கிவிட்டாங்கள். இரண்டு பக்கமும் தினம் இழப்புக்களாய் இருந்தது. இது போதாதென்று இயக்கம் தங்களைத் தவிர வேறு இயக்கம் இருக்கக்கூடாது என்று மற்ற இயக்கப் பெடியங்களையும் போட்டுத் தள்ளத்தொடங்கிவிட்டது. இவனது அம்மா இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு, சாப்பிட வருகின்ற பெடியங்களிடம் இவைபற்றி விசாரிப்பார். 'அவங்கள் எல்லாம் எங்கடை இலட்சியத்தைக் காட்டிக்கொடுக்கின்ற துரோகிகள் அம்மா' என்பார்கள். 'யாராய் இருந்தாலும் அவங்களையும் என்னைப் போன்ற அம்மாக்கள்தானே பெத்ததுகள், எல்லோரும் எங்களுக்குப் பிள்ளைகள்தானே தம்பிகமார்' என அம்மா மெல்லிய குரலில் சொல்வாள். மேலும் தொடர்ந்து கதைக்கப்போனால் சில பெடியங்கள் சாப்பாட்டின் இடைநடுவில் கோபத்துடன் எழும்பிப் போய்விடுவார்கள். இதற்காகவே பிறகு அம்மா இவ்வாறான விடயங்களைக் கதைப்பதை நிறுத்தி அவர்களின் கதைகளை மட்டும் கேட்கத் தொடங்கினார்.
4.
ஒரு நாள் ஐந்தாறு ஆமி இவங்களின் ஊர்ப்பக்கமாய் ஜீப்பில் விடியக்காலை வந்திருக்கிறார்கள். பெடியள் இரைக்காய் இரவோடு இரவாய் கண்ணிவெடியைப் புதைத்துவிட்டு காத்திருந்திருக்கின்றார்கள். ஜீப் கண்ணிவெடியில் அகப்பட்டுத் தடம்புரள, தப்பியோடிய ஆமியையும் துரத்திச் துரத்திச் சுட்டிருக்கின்றார்கள். இப்படி ஆறு ஆமி ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்டது அதுவே முதல் தடவையாக இருந்தது. இந்தியன் ஆமிக்காரர்கள் இராணித்தேனீயைச் சூழும் தேனீக்கள் போல ஊரைச் சுற்றி வளைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிக நெருக்கடியின்றி சும்மா களத்தில் இறக்காத, கொடும் கூர்க்காப் படையும் கூட வந்திருந்தது. ஊர்ச்சந்தியில் போற வாற சனத்திற்கு யாரிதைச் செய்தது எனக்கேட்டுக் கேட்டுப் பயங்கர அடியாம், வீடுகளிலிருக்கும் பெடியங்களையும் பிடித்துக் கொண்டு போகின்றாங்களாம் என்று கதைகள் எல்லாத் திசைகளிலிருந்து பரவத்தொடங்கின. வீட்டில் அம்மாவும் இவனுந்தான் தனித்திருந்தனர். 'அம்மாளாச்சியே எங்கடை சனத்துக்கு ஒரு பிரச்சினையும் வராது காப்பாத்து' என அம்மா முனகிக்கொண்டிருந்தார். கிளுவை வேலிகளை வெட்டி வெட்டிக் கொண்டு சிறு சிறு குழுக்காய் ஆமி ஒழுங்கைகளுக்குள் உள்நுழைந்து வரத்தொடங்கிவிட்டார்கள். இந்திய இராணுவத்திற்குரிய ஒருவகை வாசனைக்கு ஒவ்வாது நாய்களும், மாடுகளும் சத்தம் போடத்தொடங்கிவிட்டன. இனி நடக்கப்போகும் சம்பவங்களுக்குச் சாட்சியாய் தான் இருக்கப்போவதில்லையெனச் சூரியன் கரும்மேகத்தைப் போர்த்திக்கொண்டு பதுங்கத் தொடங்கியது. இவனது வீட்டுக்குள்ளும் ஒரு ஆமிக் குரூப் ஏறிவிட்டது. வழமையாய் ரோந்து வருகின்ற ஆமிக்குழுவாய் இது இல்லை. அவர்கள் அடிக்கடி ரோந்து வருகின்றபடியால் அவர்களின் முகம் இவனுக்குப் பரிட்சயமாய் இருந்தது. அந்தக் குழுவில் தமிழ் பேசும் ஆமியொருவர் இருந்ததால் அவரே பிறரைக் காவலுக்கு விட்டுவிட்டு வழமையான தேடுதல்களை வீட்டுக்குள் நடத்துவார். 'மற்ற ஆமி அப்படி ஏதும் தேடுதல் நடத்த வீட்டுக்குள் வந்தால் நீங்கள் ஒருவரும் உள்ளே நிற்கவேண்டாம், முற்றத்தில் வந்து நில்லுங்கள், அதுவே பாதுகாப்பானது' என்று ஒருமுறை அவர் அம்மாவிடம் கூறியிருந்தார். வேறு சில வீடுகளில் உள்ளே பெண்கள் இருந்தபோது ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் அவருக்கும் தெரிந்திருக்கும் போலும். ஆனால் இம்முறை வந்த ஆமிக்குரூப்பில் அந்த தமிழ் ஆமியையோ அல்லது வேறெந்த தெரிந்த முகத்தையோ காணாதது அம்மாவிற்குப் படபடப்பை இன்னும் கூட்டிவிட்டது.
ஆமி உள்ளே தம் தேடுதல் வேட்டையைச் செய்யட்டுமென இவனும் இவனது அம்மாவும் முற்றத்தில் வந்து நின்றபோது சட்டென்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆமியோடு ஒரு தலையாட்டியும் கூடவே வந்து இறங்கினார். இந்திய அரசு நிவாரணம் தருகின்ற அரிசி பையைத் தலைகீழாக தலையாட்டியின் முகத்தில் கவிழ்த்து, கண்களுக்கு மட்டும் ஓட்டை போட்டிருந்தனர். அவ்விழிகளில் மரண பயம் பிதுங்கிக்கொண்டிருந்தது, ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகின்றது என்று இவனது உள்மனம் சொல்லத் தொடங்கியது. இதுவரை தன் துடிப்பைக் காட்டாது பதுங்கியிருந்த இதயம், இப்போது அதைக் கையில் வைத்து உற்றுப் பார்ப்பதுபோல அதிவேகமாய்த் துடிக்கத் தொடங்கியதை இவனால் உணரமுடிந்தது.
தலையாட்டி தன் தலையை மேலும் கீழுமாய் 'ஓம்' என்பதற்கு அடையாளமாய் அம்மாவைப் பார்த்து ஆட்டினான். அதைத் தொடர்ந்து ஒரு கூர்க்கா அம்மாவின் தலைமயிரைப் பிடித்து ஜீப்பில் வலுக்கட்டாயமாய் ஏற்றத்தொடங்கினான். அம்மா, 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்னை எதற்கு ஜீப்பில் ஏத்துகிறியள்' எனக் கத்தினாள். அவளின் அலறல், நிசப்தம் பெருகிவழிந்த வெளியை ஒரு கத்தியைப் போல கிழித்துக்கொண்டு போனது. ஜீப்பில் ஏறாது தன் கால்களை நிலத்தோடு தேய்த்துக்கொண்டு அம்மா பிடிவாதமாய் நிற்கிறாள். ஒரு நேரம் சாப்பிடாது விரதம் இருந்தாலே சோர்ந்துவிடும் அம்மாவிற்கு எவ்வாறு இந்தப் பெரும் பலம் வந்தென இவனுக்குத் திகைப்பாக இருந்தது. அம்மாவின் பிடிவாதத்தைக் கண்ட, இன்னுமொரு கூர்க்கா ஜீப்பில் அவளை ஏற்றத் துணைக்கு வருகின்றான். தன் தோளில் அவனது கை படிவதைத் தவிர்க்க அம்மா வாயால் அவனின் கையைக் கடித்துவிடுகின்றாள். வெறிகொண்ட நாய்போல அந்தக் கூர்க்க்கா வெகுண்டெழுந்து அம்மா வீட்டில் அணிந்திருந்த 'சோட்டி'யைக் கிழித்துவிடுகின்றான். எங்கிருந்தோ வந்திற்றோ தெரியாது இவ்வளவு பெரும் மூர்க்கம். தேங்காய் வெட்டுவதற்காய் முற்றத்தில் கிடந்த கத்தியைத் தூக்கிக்கொண்டு 'வேசை மவனே' என அவனை வெட்ட அம்மா ஓடினாள். அந்த சொற்ப இடைவெளிக்குள் காற்றை விட விரைவாய்த் தோட்டாக்கள் உமிழப்பட்டிருந்தன. அவனுக்கு மட்டுமில்லாது இயக்கப் பெடியங்களுக்கும் அம்மாவாயிருந்த அம்மா நிலத்தில், குருதியில் சரிந்துபோயிருந்தாள்.
பிறகு நடந்ததெல்லாம் யாருடைய சொற்களைக் கேட்டு அவன் செய்தது மட்டுமே. எல்லோரையும் தவிர்த்து அம்மாவோடு மட்டும் இவன் தனியே உரையாடத் தொடங்கினான். அம்மாவின் குரல்கள் இரவில் மட்டுமில்லாது பகலிலும் கேட்கத் தொடங்கின. அம்மா எப்போதும் தன்னை அருவமாய் பின் தொடர்ந்துகொண்டிருக்கின்றாள் என்பதை இவன் மிகத் தீவிரமாய் நம்பத்தொடங்கினான். அம்மாவிற்கு நடந்தது அறிந்து அவனது அப்பா கொழும்பிலிருந்து வந்திருந்தார். அவரோடு இவனால் அதிகம் ஒட்ட முடியவில்லை. காலம் செல்லச் செல்ல அம்மா உள்ளிட்ட இறந்த இயக்கப்பெடியள் பலரின் பல்வேறுவகையான குரல்கள் இவனுக்குள் பல்கிப் பெருகத்தொடங்கின. பாடசாலைக்குப் போனாலும் இவனால் பாடங்களில் கவனஞ்செலுத்தமுடியவில்லை, அம்மா சுடுபட்டுச் செத்ததை பல்வேறு நிலைகளில் வைத்துப் பார்க்கத் தொடங்கினான். எந்தத் தருணம் நிகழாது இருந்திருந்தால் அம்மா காப்பாற்றப்பட்டிருப்பாள் என்பது பற்றி அதிகம் யோசிக்கத் தொடங்கினான்
5.
இவ்வாறு இவன் தனக்குள்ளேயே தன்னையே தொலைத்துக்கொண்டிருந்த காலத்தில்தான் பாடசாலை அதிபர் இவனில் தனிப்பட்ட கவனம் எடுக்கத் தொடங்கினார். இவனின் தந்தையும் ஊரிலிருந்து ஒன்றும் செய்யமுடியாது என கொழும்புக்கு மீண்டும் செல்ல இவன் அவனின் அம்மம்மாவோடு இருக்கத் தொடங்கினான்.
உள்மனக்குரல்களை உற்றுக்கேட்கப் பழகிய இவன் நாளடைவில் அவை அழைத்துச் செல்லும் திசைகளிற்கு எல்லாம் அலையத்தொடங்கினான். சில இடங்கள் அவன் இதுவரை போயிருக்காத இடங்களாய் இருக்கும். காரணம் எதுவுமின்றி எப்படி இங்கே வந்தடைந்தான் எனப் புதிய இடங்களைக் கண்டு இவன் திகைப்பான். எல்லோரையும் விட அவனது பாடசாலை அதிபருக்கே அவனது பிரச்சினைகள் துல்லியமாகப் புரியத் தொடங்கின. பாடசாலை முடிந்தபின் தினமும் தன் வீட்டுக்கு வரச் சொன்னார் அதிபர். நான்கு மைல்கள் சைக்கிள் உழக்கி இவன் போவான். அங்கு அவரும் அவரது மனைவியும் அழகாய்ப் பராமரித்த தோட்டத்தில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்வதும், இளைப்பாறுவதுமாய் பொழுதுகள் கழியத்தொடங்கின. 'உன்னால் படிப்பில் கவனஞ்செலுத்த முடியவில்லையென்றால் உனக்குப் பிடித்தது வேறு என்ன என யோசித்து அதில் கவனஞ்செலுத்தப்பார் என்றார் அதிபர் ஒருநாள். மனதை ஒருங்கே குவிக்கும்போதுதான் குரல்கள் கேட்கின்றன எனவே உடலை முன்னிறுத்தும் உதைபந்தாட்டத்தில் இவன் கவனஞ்செலுத்தத் தொடங்கினான். இடதுகால் பழக்கமுடையவனாகவும், விரைவாக ஓடுபவனாகவும் இருந்ததால் உதைபந்தாட்டத்தில் இவனால் பிரகாசிக்க முடிந்தது. அவன் எதிரணி வீரர்களைச் சுழித்துப் பந்தைக் விரைவாய்க் கொண்டுபோகின்றவனாய் இருந்ததால் 'சுழியன்' என்ற பட்டப் பெயர் கூட அவனுக்கு வைக்கப்பட்டது. அதிபர் ஒருநாள் அவனுக்கு ரவுனிலிருந்து அன்றைய காலத்தில் பிரபல்யமாயிருந்த மரடோனாவின் ஜேர்சியை வாங்கிக்கொண்டு வந்து அன்பளிப்பாகத் தர இவன் நெகிழ்ந்தான். மெல்ல மெல்ல அவனின் உள்மனக்குரல்கள் அடங்கிப்போக இயல்புக்கு வரத்தொடங்கினான்.
6.
மீண்டும் சண்டைகள் தொடங்கிவிட்டன. இந்தமுறை இலங்கை இராணுவத்தோடு. ஊரை விட்டு இரவுகளில் வெளியேறுவதும் பகலில் வருவதுமாய் இருந்த காலம் போய் முற்றுமுழுதாக ஊரைவிட்டு நீங்க வேண்டியதாகப் போய்விட்டது இவனுக்கு. ஒரு புதன்கிழமை வீட்டிலிருக்கும் மிச்ச உடைமைகளையும் எடுக்க வந்தபோதுதான் அதிபரைக் கண்டு, ஏன் இந்தாள் இங்கே வந்து நிற்கிறது என்று யோசித்தான். பிறகு அவருடன் கதைத்தபோதுதான் மாணவர்களின் சான்றிதழ்களையும் முக்கிய ஆவணங்களையும் எடுக்க வந்திருக்கின்றார் என்பது தெரிந்தது. அதையெல்லாம் எடுத்தபின் இடம்பெயர்ந்திருந்த பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களையும் எடுக்கவேண்டுமென அதிபர் ஒற்றைக்காலில் பிடிவாதம் பிடித்தபடி நின்றார். அங்கே பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டிருந்த இயக்கப் பெடியங்களும், வீடு பார்க்க வந்த சனங்களுந்தான் இந்தநிலையில் பெரிய பொருட்களை நகர்த்தமுடியாது, வேறொரு சமயத்தில் அதைச் செய்யலாம் என்று அதிபரைச் சமாளித்து அனுப்பிவைத்தார்கள்.
'நிலைமை போகின்றபோக்கைப் பார்த்தால் இன்னும் மோசமாக ஆகும் போல இருக்கிறது. நீயும் இங்கிருந்தால் இயக்கத்திற்குத்தான் போகவேண்டிவரும். வெளிநாட்டுக்குப் போகின்ற வழியைப் பார்' என அதிபர் இவனைப் பார்த்து அக்கறையாகச் சொன்னார். அதுதான் அவரை இவன் இறுதியாகப் பார்த்தது. இடம்பெயர இடம்பெயர அந்தந்த இடங்களில் இருந்த பாடசாலைகளில் தற்காலிகமாய் இவன் படிக்கத்தொடங்கினான். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த இன்னொரு பாடசாலையோடு இணைந்து இவனது ஊர்ப்பாடசாலையும் எங்கோ தொலைவில் கொஞ்சப்பிள்ளைகளோடு இயங்கந்தொடங்கியது. இவனால்தான் அங்கே போய்ப் படிக்க முடியவில்லை.
7.
கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா இவனைக் கொழும்புக்கு வரச்சொன்னார். அம்மா அப்பாவை திருமணஞ்செய்தபோது சீதனமாய்க் கொடுக்கப்பட்ட காணியை விற்று, இவனின் தகப்பன் ஏஜன்சிக்கு கனடாவிற்குப் போகப் பணம் கட்டினார். ஏழு மாதமாய் நாலைந்து நாடுகளில்அலைந்து திரிந்து இறுதியில் கனடாவிற்கு வந்து அஸைலம் அடித்தான்.
புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய காலநிலையோடு, ஆங்கிலமொழியும் தெரியாது அவதிப்பட்டபோது, உள்ளே இதுவரைகாலமும் அடங்கிப்போயிருந்த குரல்கள் மீண்டும் கரகரக்கத் தொடங்கின. அவனது அம்மா பொழியும் பனிக்குள் இடையிடையே தோன்றி அவனை மீண்டும் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார். ஊரில் போலவன்றி இங்கே குரல்களைப் பின் தொடர்ந்து சென்று, தொலைந்த இடங்களில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வருவது என்பது மிகக் கடினமாக இருந்தது. திசை கேட்டு ஒழுங்காய் வந்து சேர்வதற்கு இவனுக்கு மொழியும் தோலின் நிறமும் ஒரு தடையாக இருந்தது. பூச்சியத்துக்கு கீழே 20 பாகைக்குப் போகும் காலங்களில் கூட உரிய ஆடைகள் அணியாது, வீட்டுக்குள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குரல்களைப் பின் தொடர்ந்து போகின்றவனாகவும் ஆகியிருந்தான்.
நண்பன் ஒருவனின் உதவியால் அதிபரின் தற்காலிக முகவரியைப் பெற்று அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினான். தான் மீண்டும் குரல்களைக் கேட்கத் தொடங்கியிருப்பதாகவும், முக்கியமாய் தன்னால் ஆங்கிலம் இல்லாது இங்கே ஒருவேலையும் செய்ய முடியாது இருக்கின்றது என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தான். அதிபரின் பதில் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் அவனிற்கு அது மிகவும் இதமாயிருந்தது. ஆங்கிலம் கற்றுக்கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமில்லையென, தான் ஆங்கிலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை கடிதத்தில் இவனுடன் அவர் பகிர்ந்துகொண்டார். இலங்கையைப் போல அன்றி, உள்ளிலிருந்து ஒலிக்கும் குரல்களுக்கு கனடாவில் உரிய சிகிச்சை முறைகள் வைத்திருப்பார்கள் அவற்றை அணுகிப்பெறுக என்ற அதிபரின் தொடர்ச்சியான அறிவுரையை ஏற்று இவன் வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்கத் தொடங்கினான்.
8.
கனடாவின் வாழ்க்கைச் சூழலுக்கேற்று தன்னைத் தகவமைக்கவும், ஆங்கிலம் ஒரளவு பிடிபடவும், அவன் பாடசாலைக்கு விருப்புடன் செல்லத் தொடங்கினான்.. கணிதத்தில் மீதிருந்த ஆர்வந்தான் இப்போது இந்தப் பெட்டையையும் இவனோடு நெருங்க வைத்திருக்கிறது. அவளுக்கும் இவனைப் பிடித்திருக்கிறது போலும். இப்படியிப்படி இன்னின்ன கலரில் நீ ஆடைகள் அணிந்தால் இன்னும் பளிச்செனத் தெரிவாய் என அடிக்கடி கூறவும் தொடங்கினாள். இவன் ஒரு காதலர் தினத்தன்று அநேகமான ஆண்கள் கொடுப்பதுபோல ஒரு சிவப்பு ரோஜாவும் வாழ்த்தட்டையும் கொடுத்து ப்ரபோஸ் செய்துகொண்டான். 'நீ கணிதம் சொல்லித் தரும்வரை நான் உன்னைக் காதலிக்கத்தானே வேண்டியிருக்கிறது, வேறு வழியில்லை' என நக்கலடித்து வாங்கிக்கொண்டாள். இவனுக்கு அவள் அப்படிச் சொன்னது கேட்டு முகம் சுருங்கிப்போனது. அதைக் கண்டு, 'இல்லை, எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது, இல்லாவிட்டால் ரோஜாவை வாங்கிக்கொள்வேனா?' என அவனைத் தேற்றி ஒரு முத்தங்கொடுத்தாள். அன்று முதன் முதலாக அவளின் கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு அவள் வீடுவரை நடந்து போயிருந்தான்.
பிரியமான பெண்ணும், போரில்லாச் அமைதியான நிலைமையும் கனடாவில் இருந்தும் கூட, இலையுதிர்காலங்களிலும் -சூரியன் முகங்காட்டாது புதைந்திருக்கும்- பனிக்காலங்களிலும் அம்மா இவனோடு அதிகம் பேசத்தொடங்குவதை இவனால் தவிர்க்க முடிவதில்லை. 'இயக்கப் பெடியள் சாப்பிட வீட்டை வரப்போகிறாங்கள், தம்பி கெதியாய் இந்த வெங்காயத்தை வெட்டித்தாடா..' என்றோ இல்லை 'உந்தப் புளியங்கோதை உடைத்து புளியைத் தண்ணியில் கரைத்துத் தா, குழம்பு கொதிச்சிட்டுடா' என்றோ நெருங்கி வந்து கேட்கத் தொடங்கிவிடுவார். அம்மாவில் அவனுக்கு அவ்வளவு பாசம். எனவே அம்மா நீங்கள் தள்ளிப்போங்கோ என்று சொல்லாமல் அவர் கதைப்பதையெல்லாம் அவன் பொறுமையாகச் செவிமடுக்கத் தொடங்கிவிடுவான்.
உயர்கல்லூரி முடிந்து அடுத்து கொலீயிற்கா அல்லது யூனிவேசிட்டியிற்கா போவது என்ற குழப்பம் இவனுக்கு வந்தது. தனக்கு படிப்பிலிருந்து ஒருவருட இடைவெளி வேண்டுமெனச் சொல்லி உணவகம் ஒன்றில் முழுநேரமாய் வேலை செய்யத் தொடங்கினான். அவள் தான் யூனிவர்சிட்டிக்கு போகப் போகின்றென தொலை தூர வளாகம் ஒன்றில் அனுமதி எடுத்துப் போய்விட்டாள். இவன் டன்டாஸ் ஸ்குயருக்கு அருகிலிருக்கும் உணவகம் ஒன்றில்தான் வேலை செய்யத் தொடங்கினான். முதலாம் வருடம் படிப்பு முடித்து அவள் இவனைச் சந்தித்தபோது சொல்லவேண்டிய எதையையோ தொண்டைக்குள் வைத்துக்கொண்டு தவிப்பது போலத்தெரிந்தது. 'என்ன..தயங்காமல் சொல்லு?' என்றான். 'நாங்கள் உயர்கல்லூரியில் ஆரம்பத்தில் இருந்ததுபோல நல்ல நண்பர்களாய் இருந்துவிடுவோமா' என்றாள் அவள். இவனுக்கு கழுவதற்கு காத்திருந்த ஒரு நூறு சாப்பாட்டுக் கோப்பைகள் நிலத்தில் ஒரேநேரத்தில் சிதறிவிழுந்தது மாதிரியான உணர்வு நெஞ்சிற்குள் எழத் தொடங்கியது. 'ஏன் நான் உன்னோடு சேர்ந்து படிக்க வராததா, காரணம்? ' என இவன் கேட்டான். 'அப்படியில்லை, நீ இன்னமும் உன் அம்மாவோடு உரையாடிக்கொண்டிருப்பதுதான் எனக்கு மிகவும் அச்சமூட்டுகிறது. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை முக்கியம் அல்லவா?' என்றாள். 'Are you seeing someone?' என இவன் கேட்க. 'Hmm, May be' என்றாள் அவள். Now I know the reason Bitch' என்றான் இவன். 'Really, When we had sex, I was your soul, Now I'm a F***ing Bitch. I know guy's philosophy. Get a Life' எனக் கூறிவிட்டு அவள் மறைந்தாள்.
9.
இவன் மீண்டும் நீண்டநாட்களின் பின், தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லா வேதனைகளையும் கொட்டி அதிபருக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான். அதிபர், தான் இப்போது பாடசாலை அதிபர் பொறுப்பிலிருந்து இளைப்பாறி இலங்கை அரசின் அபிவிருத்தி சம்பந்தமான ஒரு துறையில் வேலை செய்வதாக எழுதியிருந்தார். 'சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு இப்போது நிலைமை சுமூகமாய் இருக்கிறது, உனக்கு கனடாவிலிருப்பது கஷ்டமென்றால் இலங்கைக்கு வா, தான் ஏதாவது ஒரு வேலை எடுத்துத் தருகின்றேன்' எனக் கூறியிருந்தார். 'கனடா என் கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் என்னைப் பிணைத்து வைத்திருக்கிறது, விரைவில் அவற்றை அறுத்தெறிந்துவிட்டு வருகின்றேன்' என நம்பிக்கையுடன் இவன் பதில் எழுதினான்.
பருவம் மாறி இலைகள் உதிர்ந்துகொண்டிருந்த ஒருநாள், எரிபொருள் நிலையத்தில் தனது கார் இடைநடுவில் பெற்றோல் இல்லாது நின்றுவிட்டது, இந்தக் கலனின் பெற்றோல் நிரப்பவேண்டுமெனக் கேட்டு பெற்றோலை நிரப்பினான். தன் காதலியும் தானும் பாடசாலை முடிந்து, நடந்துவரும் புல்வெளியில் படுத்தபடி கருஞ்சாம்பர் வானத்தை நீண்டநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு 'அம்மா நான் உங்களிட்டை கெதியாய் வாறன்' எனச் சொல்லியபடி உடல் முழுதும் பெற்றோலை ஊற்றித் தீயைப் பற்ற வைத்தான்.
இவன் தன் அடையாளங்களை முற்றாக அழித்துக்கொண்ட மூன்றாம் நாளில் அதிபரும் இனந்தெரியாத நபர்களால் அவரின் வீட்டில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அதிபராயிருந்த பாடசாலையில் படித்த மாணவன் ஒருவன் தான் அதிபரைச் சுட்டதெனவும், அவனுக்கு இவனைப் போன்ற முகச்சாயல் இருந்ததாகவும் சனங்கள் தங்களுக்குள் இரகசியமாய்க் கதைத்துக் கொண்டார்கள்.
(ஆடி,2010)
நன்றி: காலம், இதழ் 36
(thanks- abstract art)
(மீரா பாரதிக்கு...)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தங்கள் பதிவு ரசிக்க வைக்கிறது
12/01/2010 10:09:00 AMவாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/
Post a Comment