-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)
(முந்தைய பாகத்திற்கு)
புராதனமாக வாழ்ந்து அனுபவித்த மண்ணின் கலாச்சாரமும், வன்முறை பிதுக்கித்தள்ள சொந்த மண்ணைவிட்டு ஐரோப்பிய மண்ணைப் புகலிடமாக்கி வாழ்தலில் உருவான புலம்பெயர் சூழலின் கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று நினைவடுக்குகளிலும் மொழியடுக்குகளிலும் ஊடுருவிப் பரவுகின்றது. மேற்கத்திய வாழ்வு முறைக்கு ஆளாக்கப்பட்ட அகதி வாழ்வில் தன் பூர்வீக பண்பாட்டிலிருந்து பிடுங்கி வெளியே வீசப்பட்ட செடியின் இலைகள், கொம்புகள் உலர்ந்து போயிருந்தாலும் அதன் வேர்களில் ஈரப் பசபசப்பு இருப்பதைப் போன்று புகலிடக் கலாச்சாரச் சூழலின் அழுத்தத்தின் அடி ஆழத்தில் சொந்த பண்பாடு உரையாடலாய்க் குவிந்து கிடக்கிறது. இதன் நிலப்பரப்பு, ஞாபகங்களின் உள் அடுக்குகளிலிருந்து உருவாகிறது. இளங்கோவின் கவிதைகளிலும் இந்தப் பூர்வீகப் பண்பாட்டு வேர்களும் அழிக்கப்படாத ஞாபங்கங்களும் நெருக்கம் கொள்கின்றன.
மரணத்திற்குள் வாழ்தலையும், வாழ்தலுக்குள் மரணத்தையும் இளங்கோவின் கவிதைகள் பேசுகின்றன. தனது அப்பாவின் அப்பா தற்கொலை செய்த அந்தக் கிணற்றிலேயே தானும் ஒருநாள் தற்கொலை செய்வேன் என்றிருந்த துயரத்தையும் மரணத்தை உருவாக்கும் போரிலிருந்து தப்பித்தன் வழியாகத் தனக்கு வாழ்தலை உருவாக்கியுள்ள பெருந்துயரத்தையும் இளங்கோவின் கவிதை எழுத்துக்களில் பதிவு செய்கிறது.
அப்பாவின் அப்பா கோபத்தில்
தற்கொலைத்த அங்கேதான்
என்றோவோர் நாள் தவறி வீழ்ந்து
என் வாழ்வு முடியப்போகிறதென்று
நினைத்த பொழுதில்
ஆயுள் அதிகமெனத் துரத்தியது போர்
ஈழத்து ஒழுங்கைகளில் பின்மாலைப் பொழுதொன்றில் கரங்கள் கோர்த்து குதூகலமாய் நடந்ததொரு பிள்ளைப் பிராயம், ஒரு மழைக்காலத்தில் ஒற்றை வயலின் தந்தியின் சுருதியில் பெருங்குரலெடுத்துப் பாடிய ஆதிமொழியின் பாடலையும் பத்திரப்படுத்துகிறது. தனது இல்லாமையை அம்மாவுக்கு ஞாபகப்படுத்தக் கூடும் நத்தையைப் போல சுருண்டுகிடக்கும் போர்வையையும், மல்லிகைப் பூ வாசம் கமழந்தபடி இருந்திருக்கும் அந்த மண்ணில் கிளித்தட்டு விளையாட்டில் குழப்படி செய்த நண்பனைப் பறநாயேயென விளித்த உயர்சாதித் திமிரின் குரலும், இராணுவத்தால் சிதைக்கப்பட்ட தோழிக்கு முன்பொருகாலம் நாவற்பழம் பொறுக்கிக் கொடுத்த நினைவுகளுமென இந்தப் பூர்வீக மண்ணின் ஞாபகங்கள் எல்லாவித சந்தோசங்களுடனும் ஆற்றுப்படுத்த முடியாத துயரங்களுடனும் வரைபடமாய் விரிகிறது. தென்னை சூழந்த கடற்கரையில், ஊரின் ஞாபகம் அலையலையாய்க் கிளம்ப விழிகள் இரண்டிலும் ஈரம் கசிந்த ஒரு நாடற்றவனின் குறிப்பாக இந்த எழுத்துக்கள் உருக்கொண்டு அலைகின்றன.
புலம்பெயர் மண்ணில், நோயுற்றிறந்த அம்மம்மாவை நினைவுபடுத்தி அடிக்கடி பஸ்ஸில் பயணிக்கும் தமிழ் மூதாட்டியின் தனிமை, அலைச்சல், துயரம், மெளனம் தொடர்கிறது. அந்நியப்பட்டுப் போன அப்பெண்ணைக் கடந்துபோகும் மனது, இந்த வயதான பெண்களுக்கு எங்கள் சொந்த மண்ணில் எப்படியொரு வாழ்வு இருந்திருக்கக் கூடும் என ஏக்கம் ஒன்றைப் பதிலாகக் கூறுகிறது. சித்ரா பவுர்ணமியன்று ஊர் வைரவர் கோயில் ஞாபகத்திற்கு வருகிறது.
மூன்றாம் தத்தைக் கடந்துவிட்டால் வாழ்வு சுபம் என அடிக்கடி சொன்ன அம்மாவின் வார்த்தைகளும், கீரிமலைக் கேணியில் பாசி வழுக்கி மூழ்கி அதிசயமாய்த் தப்பிப் பிழைத்ததையும், ஒற்றை எஞ்சினுடன் பதினொரு படகுகளில் சவாரி செய்து, தாய் தேசத்திலிருந்து மீண்டு சென்ற கடலின் தத்தையும் ஞாபகச் சூழல்களில் எழுதிச் செல்கிற இளங்கோவின் வரிகள் புலம்பெயர் சூழலில் ஆழ்கடல் தேடி மாறி மாறி வலிக்கும் கானாய் சவாரி உடனான உரையாடலையும் நிகழ்த்திக் காட்டுகிறது. இரு வேறு வாழ்வுலகங்களின் சந்திப்பு இது.
இளங்கோவின் கவிதை முன்னிலைப்படுத்தும் தான் என்பதற்கு மாற்றான மற்றமை பல்வித நிலைகளில் வாசகனுடன் தொடர் உரையாடலை நிகழ்த்துகிறது. காதலின் பிரிவாகவும் அதுவே மற்றொரு நிலையில் புலம்பெயர்தலின் பிரிவாகவும் இணை நிலையில் இயங்குகிறது. இக்கவிதைகளில் வெளிப்படும் நீ/உன் என்பதான எதிர்தரப்பு குறித்த நானின் புரிதல், சிதைவுகளின், அவநம்பிக்கையின் பதற்றத்தின் வரிகளாக விரிவடைகின்றன. இந்த 'நீ'யும் ஒற்றைத்தன்மையை மீறி இயங்குகிறது. ஒரு பெண்ணின் கடந்தகால துயர் நிறைந்த வாழ்வும் புலம்பெயர்ந்த மனிதனின் துயர் பெருக்கெடுத்து ஓடும் வாழ்வும் இங்கு சந்தித்துக் கொள்கின்றன. வெறுமையின் தடங்களை அழிப்பதன் மர்மமாய் ஏதோ ஒரு பெண்ணின் வருகை நிகழ்கிறது. அந்த 'நீ' யாரேனும் ஒருவனின் காதலியாகவோ அல்லது குழந்தையொன்றின் தாயாகவோ கூட இருக்க நேர்கிறது. தனிமையின் வலி உச்சப்படுகையில் அதனை ஒரு பூச்செடியாக வளர்த்து பகிரமுடியாத ஆசைகளையும் பிரியங்களையும் அச்செடியின் இலைகளாகவும் கனிகளாகவும் மலர வைக்கிறது. அந்த 'நீ'யின் வருகையில் செடியின் உயிர் சாம்பல் நிற முயலாய் உருமாறுகிறது.
'எவரையும் அனுமதித்திராத/ என் தோட்டமடையும் புதர் படர்ந்த ஒற்றையடிப் பாதையில் மலர்ந்து வந்து/ பிரியம் கூறுகையில் செவியிரண்டும் சிலிர்க்க/ ஒரு சாம்பல் நிற முயலாய் மாறிவிடுகிறது/ எனது செடி.'
இந்த மாற்றுத்தரப்பின் 'நீ' ஒரு ஆண்மையத்தின் பாலியல் அதிகாரத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கித் தவிக்கும் குரலாகவும் சன்னதமாக ஒலிக்கிறது. சென்றமுறை மாதவிலக்கு நேரத்தில் நெஞ்சில் தலைசாய்த்து கூந்தல் கோதிய முன்னிராப் பொழுதில் பரிவோடு இருப்பதைப் போல் பிறகும் நீ இருப்பாயா என்று அவனிடம் இறைஞ்சுகிறது. பாலியல் கலவியில் ஆடைகள் களைந்த மூன்றாம் ஜாமத்தில் தன் மூக்குத்தியை மூர்க்கமாய் பிடுங்கி எறியாமலிருக்க வேண்டிக் கொள்கிறது.
என்றாலும் இந்த இருப்பு நிலையற்ற உறவாய் மாறிவிடுகிறது. புரிதலற்ற, முரண்பட்ட, எதிரிடையாய் மோதுகின்ற ஒன்றான இந்த உறவுச் சிதைவின் கோலம் அழிக்கப்பட்ட சுவடின் ரூபமாகிறது. முதுகைக் காட்டிக் குழ்ந்தையாய்ப் போர்வையில் சுருண்டிருக்கும் அவளை விரல்களால் தீண்டவோ இழுத்து அணைப்பதற்கோ உரிய சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஒட்டியிருப்பதை வெட்டி விடலாமென்றால் ரத்தம் தெறிக்கக் கத்தியை முதலில் யார் வீசுவதென்ற தயக்கமும் இருக்கிறது.
இந்த விலகலும் பிரிவும் இளங்கோவின் படிமங்களால் தொட்டுணர்த்தப்படுகிறது. அது அந்திவானத்தில் எதிர்த்திசைகளில் சிறகடித்துப் பறந்துபோய்த் துயர்களை மீட்டிய இரண்டு குருவிகளாகிறது. தேவாலயத்தின் உச்சியிலிருந்து பலகணியில் கரையொதுங்கிய புறாவின் சிறகுகளாகிறது. இந்தச் சிதைவின் படிமம் இன்னொரு தளத்தில் கந்தகவெடியையும், ரத்தச் சகதியையும் சுமந்தபடி ஒற்றைச் சிறகுடன் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன.
இளங்கோவின் கவிதைகளில் மரணத்தின் பயம் தொற்றிக் கொள்கிறது.
யன்னலோரத்தில் - நேசம்
நிரம்பி வழிந்த பொழுதில்
தந்திட்ட ஐந்தூரியச் செடி
இரையைக் கவ்வத் துடிக்கும்
மரநாயொன்றின் வன்மத்துடன்
அசையாதென்னைக் கவனிக்கிறது.
நேசத்தின் வெளிப்பாடு கொலை வெறிப் பகையாக உருமாறுகிறது. கொலைகளும் மரணங்களும் இடைவிடாது துரத்தியபடி இருக்கின்றன. ஓநாயின் பற்களில் பிரியம் வைத்தவர்கள் கோரமாய்த் தொங்குகின்றார்கள். ஒழுங்கு தவறாத லயத்தில் வேலை, உறக்கம், கணினி வாசிப்பு என்பதைப் போலக் கொலைகள் நிகழ்தலும் அன்றாட நிகழ்வாகிப் போகிறது. எனக்கொரு கொலை நிகழாக் காலம் வேண்டுமென மனது யாசிக்கிறது. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் தொங்கும் உறைந்துபோன பனியாக மனது இறுகுகின்றது. ஒவ்வொரு காலையும் தற்கொலை செய்வதற்கான தருணமாக மாறுகிறது.
புலம்பெயர் சூழலின் முக்கியப் பிரச்சினைகளாக, ஈழத்தின் நீட்சியாகத் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான படுகொலைகளும் புலம்பெயர்ந்த தமிழ் யுவதிகளின் தர்கொலைச் சாவுகளும் உறவின்மைகளும் மனோவியல் சிக்கல்களும் எழுகின்றன. இந்த வகை கனடிய தமிழ்ச்சூழலின் குரூர இறப்பின் எதார்த்த சுவடுகளை இளங்கோவின் கவிதைகளில் உணரலாம். அந்நியப்பட்டுப் போன மனத்தின் அவலம் சமூகம் நிறுவிய ஆதிக்கங்களின், ஒழுங்குகளின் புழுக்கம் தாங்காமல்
'கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றி வாழ முடியா
எனது சுயத்தை போதையுடன்'
எனச் சொல்லி சமரசப்படுத்துக்கொண்டு ஒரு விளிம்புநிலை வாழ்வைத் தேர்வு செய்துவிடுகிறது.
புலம்பெயர் வாழ்வு கலாச்சாரச் சிதைவை எதிர்கொள்கிறது. பாலியல் நெருக்கடியும் முரண்பாடும் மனத்தின் பிளவுகளும் உந்தித் தள்ளுகின்றன. நடுநடுங்கியபடி விரகமெழும் உறைபனிக்காலத்தில் கொஞ்சம் கொச்சைத்தமிழும் அதிகம் ஆங்கிலமும் நாவில் சுழலும் அன்புத் தோழியுடன் மரபுகளைச் சிதைத்தபடி கலவியும் கிறங்கலுமாய்க் கழிகிற வாழ்வு பதிவாகிறது. மழைக்காலத் தெருவில், திசைகள் தெரியாப் புராதனத் தெருக்களில், ஒளியின் அரூப நடனத்துடன் பயங்களற்றுப் பயணிக்கிறது. மதுவருந்தி மயங்கும் வெள்ளியிரவுகள், நள்ளிரவுக்கப்பால் தொடர்கிற மதுவும் நடனமும், மதுபான விடுதியில் கோப்பையை நிறைக்கும் மது, நரம்புகளைத் துளைக்கும் இசை, எனக் களியாட்டங்களாய்ப் புராதன உலகத்திலிருந்தும் புலம்பெயர் உலகத்திலிருந்தும் வேறுபட்ட மூன்றாவது வெளி உருவாகிறது. புத்தர் கூட, அருந்துவதற்கு மிதமாய்க் கலந்து வைத்திருந்த வோட்காவைப் பகிர்ந்தபோது ஒவ்வொரு மிடறும் தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்று கூறுகிறார். சில நேரங்களில் குறியென விறைத்து நிற்கும் துப்பாக்கி முனையின் நினைவு அச்சுறுத்துகையில் கலவியும் காமமும் கூடப் பயம் சார்ந்த வாழ்தலின் குறியீடாகவும் அதிகாரத்தின் பயமுறுத்தலாகவும் உருமாறிவிடுகிறது.
வீடற்றவர்களை நகரம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு செர்ரிப்பூ உதிர்ந்து நிலத்தை வந்தடைவதற்குள் கட்டவேண்டிய கடன் ரசீதுகள் மலைபோல் குவிகின்றன என்பதான புலம்பெயர்ந்தவர்களின் பொருளியல்சார் வாழ்வியல் நெருக்கடியும் வாழ்தலை துரத்துகின்றன. தரிசாகிக் கொண்டிருக்கும் மனத்தில் நீயொரு மரம் நட முயல்கிறாய் இதில் தளிரொன்று அரும்புவது அவ்வளவு இலகுவல்ல என வெறுமையின் தடத்தை வரைந்து காட்டுகிறது.
வாழ்தலை எதிர்நோக்கிய இருப்பிற்கு மாற்றாக மரணத்தை எதிர்நோக்கிய உடல்களின் இருப்பு தயாராகி விடுகிறது. இங்கு உடல்கள் எழுதும் காவியத்தின் முடிவாக மரணம் உருவகப்படுத்தப்படுகிறது. சுற்றிவளைக்கும் துப்பாக்கிகளுக்குக் காணிக்கையாக்கி சவப் பெட்டிகளுக்குள் சடலங்கள் அடுக்கப்படுகின்றன.
இருப்பின் சமன் குலைவு நிகழ, எதிர்பார்க்கப்பட்ட மரணம் என்பதைவிட எதிர்பார்க்கப்படாத தற்செயல் மரணமாக நிகழ்தலை மனது அறிவிக்கிறது. இது எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி குணடடிபட்டு இறக்கும் மரணம் என்பதைத் தாண்டி எதிரிகளை அழிப்பதற்கு உடலையே குண்டாக்கி அழிவின் எல்லையை எட்டும் மரணமாகிறது. எந்தவித அடையாளமற்ற, பெயரற்ற வனாந்தரத்தில் நிகழும் மரணமாக உருமாறுவதற்கும் மனம் தயார் நிலையாகிறது.
தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன் - எனது மரணத்தை.
இளங்கோவின் கவிதைகளில் இடம்பெறும் அழகியல் படிமங்களில் ஒன்று பனி.
இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது குளிர்
நிழல்களைப் போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்
இந்த வரிகள், கடந்தகாலத்தின் துயர் மிகுந்த வரலாற்றை ஞாபகப்படுத்துகிறது. இது ஈழமக்கள் மீது ஏவப்பட்ட ராணுவ வன்முறைகள், படுகொலைகள், பாலியல் சிதைப்புகள், கூட்டு வன்புணர்ச்சி, பலாத்காரம் என்பதான எல்லைகளினூடே பயணப்படுகின்றது.
வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா
எனத் தொடரும் வரிகளில் ஈழப்பெண் கோணேஸ்வரியைப் பத்து இலங்கை காவலர்கள் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கூட்டுப்புணர்ச்சி செய்து அடையாளம் தெரியாமல் சிதைக்க, யோனியில் கிரானைட் வைத்து வெடிக்கச் செய்த வன்கொடுமை மெளன வரலாய்ப் புதைந்துள்ளது.
இலங்கை ராணுவம் மட்டுமல்ல பன்னாட்டு ராணுவம் இலங்கைக்குள் நிகழ்த்தும் தமிழன் மீதான இன அழிப்பும் மிகக் கொடூரமானது. உள்நாட்டுப் போர்ச்சூழலில் முன்பு அமைதியை நிலைநாட்டுவதற்காய் சென்ற அமைதிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமையும் இளங்கோவின் வரிகள் விமர்சனம் செய்கிறது.
எதிர்வீட்டு அக்காவின் ஆடைக்குள்
குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள்
முலைகள் திருகிக் கூட்டாய்ப் படர்கையில்
அசையாய்ச் சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்
இந்த வகை இழப்பீடுகளுக்கு மாற்றாக எதை முன்வைப்பது? அழிக்கபப்டும் உடல்களும் வாழ்வும் பழி தீர்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்கிற கேள்வி சமகால வாழ்வியல் தளத்தில் எழுப்பப்படுகிறது. எல்லா வாசல்களும் மூடப்பட்ட பதற்றமான சூழலில் மிச்சமிருக்கும் முள்வேலிகளுக்குள் வாழும் தமிழர்களின் மறுகுடியேற்றம் என்பதான சிந்தனையோட்டங்களே மிஞ்சுகின்றன. ஒரு படைப்பு நிலையில் நிகழும் சாத்தியம் என்பது பழிதீர்க்கும் படலமாகவே புனைவு எழுத்தில் தோற்றம் கொள்கிறது.
வரலாற்றின் இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும் எழுந்து வந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும் இந்தப் பாவிகளை
என எழுதிச் செல்லும் இளங்கோவின் எழுத்தில் அழிக்கப்பட்டவற்றின் தீவிர அரசியல் மேலெழும்பி வருகிறது.
பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன், தேவதைகள் மழைக்காலத்தில் அனுப்பிய நாககன்னியுடன் பிணைந்து மலர்வித்த குழந்தைகளின் குதூகலத்தை வந்திறங்கிய கடற்கொள்ளையர்கள் அபகரிக்கின்றனர். விரும்பியதைப் புனைந்து விரும்பியதை அருந்தி இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை வன்மத்துடன் புணரத் துடித்த குறிகளின் வசீகரப் பேச்சால் ஆதிமனிதன் தன் சுயத்தைத் தொலைக்கிறான. ஒரு அமாவாசை இரவில் நாககன்னியும் பச்சைக்குத்தப்பட முடியா குழந்தைகளும் கொன்றொழிக்கப்படுகின்றனர். இந்த நாககன்னி தொன்மம் இழந்துபோன ஈழத்தின் குறியீடு. கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனத்தின் வரலாறு. அழிக்கப்பட்ட வரலாறு புனைவின் உச்சமாகி நம்முடன் செயலூக்கத்திற்கான உணர்வெழுச்சியைப் பகிர்ந்துகொள்கிறது.
(27.11.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)