கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன்

Sunday, March 27, 2011



-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)

ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின் அழிவின் துரத்தல்களாக வெளிப்படுகின்றன. கடலோரத்து கத்தோலிக்கத் தமிழ்க் கிறிஸ்தவமும் தமிழ் இஸ்லாமியமும் தமிழ் இந்து சமய அடையாளஙகளுடனான மோதல்களாகவும் வெளிப்பட்டுக் கொள்கின்றன. தமிழ் அடையாளங்களினூடே ஆதிக்கச் சாதிகளின் செல்வாக்கும் சமூகரீதியான ஒடுக்குமுறை தலித்துக்களின் மீது நிகழ்வதும் படிநிலை சாதீய கட்டுமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்கின்றன. இவற்றின் சூழலில் உயிர் அழிப்பையும், உடல் சிதைப்பையும் புலம்பெயர் படைப்புலகம் முன்னெடுத்துச் செல்கிறது.

இரண்டாயிரத்திற்குப் பிறகான ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளிலும் புலம்பெயர் எழுத்துக்களிலும் நிலவியல்சார் ஒலிகளும் மண்சார்ந்த பெருந்துயர்களும் அனுபவ வெளியினூடே நீக்கமற நிறைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தீவிரமாக எழுதும் ஏறத்தாழ முப்பது கவிஞர்களையாவது அடையாளம் காட்டமுடியும்.

கிளிநொச்சி, வன்னிப்பகுதியின் பிரதேச அடையாளம் சார்ந்த போர்வதைத் துயரத்தையும் குழந்தைமையின் நிராதரவையும் தீபச்செல்வனின் பதுங்குகுழியொன்றில் பிறந்த கவிதை இவ்வாறாக எழுதிச் செல்கிறது. 'நான் கடும் யுத்தப் பேரழிவின்/ பிறந்ததாய்/ அம்மா சொன்னாள்/ எனது குழந்தையை நான் இந்தப் பதுங்கு குழியில்தான்/பிரசவித்திருக்கிறேன்.'

துவக்குகளின் அதிகாரமும் ராணுவ ஆதிக்கமும் பதற்றங்களே வாழ்வாகிப்போன யாழ்ப்பாண மண்ணின் சிதைந்த வாழ்வை, முகங்களைக் கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள் நடமாடத்தொடங்கிய பிறகு, குழந்தைகள் தெருக்களை இழந்தன என சித்தாந்தன பதிவு செய்கிறார்.

ஈழத்தின் கிழக்குப் பிரதேச வாழ்வுலகத்திலிருந்தும் அனுபவ வெளியிலிருந்தும் உருவாகிய அனார், பஹிமா ஜவஹான், அலறி, றஷ்மி உள்ளிட்ட கவிஞர்கள் படைப்புத் தளத்தில் தீவிரமாக இயங்குகிறார்கள். கவிதைப் புனைவின் வெளிப்பாட்டில் எதிர் அழகியலையும் மாற்றுபிரதிகளின் உருவாக்கத்தையும் செய்கின்ற ரியாஸ் குரானாவின் எழுத்துக்களும், இவ்வகையில் முக்கியமானவை.

இன்றின் புலம்பெயர் கவிதை எழுத்தைப் பேச முற்பட்டால் வ.ஜ.ச செயபாலன், சேரன், தமிழ்நதி, இளங்கோ, திருமாவளவன், த.அகிலன், நிவேதா, மாதுமை எனப் படைப்பாளிகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. எண்பதுகளில் எழுதத் துவங்கிய பழைய தலைமுறைப் படைப்பாளிகளிலிருந்து, சமகாலப் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் என இவ்வரிசை தொடர்கிறது.

முப்பது வயதே நிரம்பிய ஈழத்து இளம்படைப்பாளியான இளங்கோ யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்துப் போர்ச்சூழலில் தன் இளவயதிலேயே அலைக்கழிப்புக்கும், இடம்பெயர்வுக்கும் ஆளாகி தாயக மண்ணிலேயே அகதியாக அலைந்தவர். தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். ஈழத்தில் தான் வாழ்ந்த இருப்பிடம் இராணுவ உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வருவதால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ மண்ணின் உறவுகளையோ பின்னாட்களில் பார்க்க முடிந்ததில்லை என எழுதுவார்.

டிசே தமிழன் எனும் மாற்றுப்பெயரில் இணைய தளங்களிலும், இலக்கிய இதழ்களிலும் படைப்பாளியாகவும் விமர்சகராகவும் அறியப்பட்டவர். இளங்கோ டாட் நெட் வலைப்பக்கத்திலும் இவரது எழுத்துக்களை வாசிக்க முடியும். பின்காலனியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலை எனக் கோட்பாடு சார்ந்த விவாத நிலைகளிலும் படைப்பிலக்கிய வெளிகளிலும் தொடந்த தனது உரையாடல்களின் மூலமாகப் புதிய திறப்புக்களைச் செய்பவர்.

தொன்மவியல் கதாபாத்திரங்கள் மீதான வரலாற்றை அழித்துத் திரும்பவும் சமகாலச் சூழலில் எழுதப்படும் மறு வ‌ர‌லாறாக‌ இளங்கோவின் கவிதைப் புனைவு உருவாகிறது. புத்தர் கவிதைப் பரப்பெங்கும் பன்மை மாதிரியாய் உருவெடுக்கிறார். தமிழ் அடையாள மீட்பில் விகாரையிலிருந்து வெளியேறிய புத்தரும் பங்கெடுத்துக் கொள்கிறார். பூமியெங்கும் பரப்பிவைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஒற்றைக் காலினை இழந்து ஊர் வைரவர் புத்தருக்கு அடைக்கலம் கொடுத்து, தெய்வநிலையிலிருந்து புனைவு நீக்கம் செய்து ஒரு கிராமத்து மனிதனின் சகலவிதமான ஆசாபாசங்களோடு கள்ளுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

புனித விகாரையிலிருந்து வெளியேறிய புத்தர் தனது நீங்கலுக்கான காரணமாகச் சீடர்களான பெளத்த பிக்குகளின் நிலைப்பாடு முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களது முன் படைக்கப்பட்ட குவளைகளில் நிரம்பி இருப்பது ரத்தம்.  இந்த ரத்தம் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தமென்பதை வாசகன் தன்னுணர்வாக புரிந்துகொள்ள முடிகிறது. தியானமும் துறவும் அர்த்தமற்ற வெளிப்பரப்பில் பொருளற்றுப் போகின்றன.

'நேற்று என்கனவில்/ புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்/ சிவில் உடை அணிந்த அரசகாவலர் அவரைக் கொன்றனர்/ யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே/ அவரது சடலம் குருதியில் கிடந்தது' என எண்பதுகளில் நுஃமான் எழுதிய புத்தனின் கொலை கவிதையையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். ஹம்சத்வனியின் புத்தனின் நிர்வாணம் என்றதொரு கவிதை 'மூடிய விழிகளைத் திறந்து பார்த்தபோது/அவனது கால்களை நனைத்தது குருதி ஆறு/ உலகை வெறுத்து போதி மரத்தில் தூக்குப்போட்டுச் செத்தான் புத்தன்' எனப் புத்தனின் மரணத்தைப் பேசியது. பூர்வீக பெளத்தம் அரச பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளதை இக்கவிதைகள் குறிப்பீடு செய்கின்றன.

இளங்கோவின் கவிதையில் தான் நம்பிய துறவும் தியானமும் அதன் பூர்வீகச் சாரத்தை இழந்துவிட்ட சமகால இருப்பின் துயரம் நெட்டித்தள்ள வனம் நீங்கி புத்தன் பதற்றத்துடன் தன் இல்லம் நோக்கித் திரும்புகிறார். மற்றுமொரு கவிதையில், சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து தூசி தட்டியபடி புத்தர் உயிர்த்தெழுந்து வருவதும் நிகழ்கிறது. நவீன வாழ்வியல் சூழலின் நெருக்கடிகளில் மறு உயிர்ப்பு பெற்ற புத்தரால் ராப் பாடலுக்கு ஆடவும் தெரிகிறது. எனினும் ஒரு கவிதையின் முடிவு இவ்வாறாக எழுதப்படுகிறது.

நேரம் நள்ளிரவைக் கடந்தபோது
வெறுமையான மதுக் கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும் துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும் எனது நான்கு வயது மகளும்
காணாமற் போயிருந்தனர்

ஈழத்துச் சூழலில் நிகழும் சிறார் கடத்தலும் அவர்கள் மீதான வன்முறையும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு அழிக்கப்பட்ட பெண்குழந்தைகளின் துயரமும் மாற்று உருவில் இவ்வரிகளினூடே உயிர்ப்பு பெற்றுள்ளது.

அரச வாழ்வையையும் யசோதரா, ராகுலன் என மனைவி குழந்தை குடும்பத்தையும் விட்டு விலகி சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது எதுவெனும் கேள்வி தொடர்ந்து கேட்டபடி இருக்கிறது. புத்தனின் கண்களில் பெருகும் அமைதி இதயத்தில் உயிர்ப்புடன் கசிந்து பரவுகிறது என்றாலும் புத்தனின் மனைவி யசோதரா ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போதுதான் அந்த அறையிலிருந்து யதோதராவுக்குத் தெரியாமலேயே புத்தர் வெளியேறுகிறார். இந்தப் புறக்கணிப்பின் வெளிப்பாடாகவே இளங்கோவின் யசோதரா மறு உருவாக்கம் பெறுகிறாள். வரலாற்றின் சொல்லப்படாத, மெளனப்படுத்தப்பட்ட பக்கங்களிலிருந்தும் புனைவு கட்டி எழுப்பப்படுகிறது. அறியப்படாத கதை மாந்தர்களின் வருகை நிகழ்வுகளின் சுழல்களோடும் ரணங்களோடும் நானை அழித்த இன்னொன்றாக கவிதைக்குள் பிரதிநித்துவம் பெறுகிறது.

யசோதரா இந்த வகையில் புனிதங்களையும் பராம்பரிய பெருமைகளையும் இழந்துபோன ஒரு அகதி சித்திரத்தின் புலம்பெயர்ந்த குறியீடு. மூலைக்கடை முடக்குத்தெரு பெஞ்சில் வரலாற்றில் தன்னந்தனிமையாய் புத்தனால் கைவிடப்பட்ட யசோதரா தென்படுகிறாள். அகதியாக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட யசோதராவின் இருப்பு சோகமயமானது. பெண் சார்ந்த இருப்பும் காயங்களும் வேறுவிதமானவையென கூறிய யசோதரா செய்யாத தொழிலுக்காகச் சம்பளம் பெறுவதில்லை எனவும் கூறுகிறாள். நவீனத்துவ மேலை வாழ்வின் சாயல் யசோதராவின் மீதும் படர்கிறது. நெடுமிரவில் கண்கூசா வெளிச்சத்தில் கிறீக் உணவும் வைனும் அருந்தி தன் உணர்வுகளை சிகரெட் புகைக்குள் மறைத்தபடி உரையாடிக் கொண்டிருப்பவளாகவும் மாறுகிறாள்.

தமிழ்நதி தன் கவிதையொன்றில் யசோதராவைச் சித்திரப்படுத்துகையில் சாளரத்தின் ஊடே அனுப்பிய/ யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை/ பெளர்ணமி நாளொன்றில் அவன் புத்தனாகிறான்/ இவள் பிச்சியாகினாள்-- என எழுதிச் செல்வார். சுழலும் ஒளிவட்டங்களின் பின்னாலிருக்கிறது கவனிக்கப்படாத இருட்டென புத்தனின் மீதும் துறவற ஞானத்தின் மீதும் விமர்சனக் குறிப்பை முன்வைத்து யசோதராவின் மறைக்கப்பட்ட அவலத்தை தமிழ்நதி உணர்த்துகிறார்.

புத்தனோடு தொடர்புறுத்தப்பட்ட தொன்மக் கதையாடல்களில் குவேனியும் கவிதைக்குள் மறு உருவாக்கம் பெறுகிறாள். முதல் சிங்கள மன்னனாகக் கருதப்படும் விஜயனால் முன்னர் திருமணம் செய்யப்பட்டு பாண்டிய நாட்டு இளவரசியை இரண்டாவதாக மணந்து அரசனாக முடிசூட்டிய பின் நாட்டைவிட்டே துரத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்ட தீவொன்றின் குலராணி குவேனி. குவேனியும் புத்தனும் பெளத்த பழங்குடி மரபின் இரு அடையாளங்கள். சங்கமித்ராவின் ஆவேசமும் ஊழிநடனமும் புத்தரின் நட்பிற்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடாகப் படர்கின்றன. அரசமரக்கிளைக்குப் பதிலாக சங்கமித்ராவின் கரங்களில் கொடும் ஆயுதங்கள் முளைக்கின்றன. இந்தக் கொலை வதைப்படலத்தில் புத்தர் குவேனி எனும் இரு சடலங்கள் காலப்பெருவெளியில் மிதக்கின்றன.

வன்முறையும் மரணமும் இருப்பின் யதார்த்தம். இதன் மீள் பிரதியாக்கமே வெவ்வேறான அளவீடுகளில் வெவ்வேறான தொன்மக் கதையாடல்களுடனான கதாபாத்திரங்களோடு கவிதையில் புனைவாய் மாறுகின்றன. யுத்ததிற்கும் அமைதிக்குமான போராட்டம் எல்லையில்லாப் பெருவெளியில் தொடர்ந்து நடக்கிறது. அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான இந்த ஈர்ப்பு சிங்கள இனவாதமாகவும் ராணுவ மேலாதிக்கமாகவும் தமிழர்களின் மீதான இன அழிப்பாகவும் சமகால வாழ்வில் அர்த்தம் பெறுகின்றன.

இளங்கோவின் கவிதைகள் தொடர்ந்து மரணத்தின் பதற்றத்தை எழுதிச் செல்கின்றன. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியும் தூரமும் குறைந்து கொண்டே வருகின்றது. மகிழ்ச்சியும் துயரமும் இடைவிடாது துரத்தியவண்ணம் உள்ளது.

'ரைபிளை துடைத்தபடிக்கு/ காதலிக்கு முத்தம் கொடுப்பேன்' என முற்றுபெறாத காதலுக்கும் யுத்தத்திற்குமான உணர்வெழுச்சி வ.ஜ.ச.செயபாலனின் வரிகளில் முன்பு வெளிப்பட்டது. இளங்கோவின் கவிதை இவ்வுணர்ச்சியை வேறு விதமாகப் பிரதியாக்கம் செய்கிறது. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியை அக்கவிதை வரிகள் இவ்வாறு எழுதிச் செல்கிறது.

ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை

இந்த முத்தம் காத‌ல‌ன்-காதலி என்ற ஒற்றைப் பரிமாணத்தைத் தாண்டி குழந்தைக்குத் தந்தை கொடுக்கும் முத்தமாகவும், மகனுக்குத் தாய் கொடுக்கும் முத்தமாகவும், போராளிக்குக் காதலி கொடுக்கும் முத்தமாகவும் இன்னும் பலவாகவும் அர்த்தங்களைப் பல்கிப் பெருக்கி உணர்த்துகிறது.

இரு முத்தங்களுக்கு இடையே கூட மரணம் காத்திருக்கிறது. இது இருப்பின் இல்லாமை சார்ந்த வெளிப்பாடாகும்.

இளங்கோவின் மற்றுமொரு கவிதை இவான் என்னுமொரு சிறுவனைப் பற்றியது. அந்த நீள் கவிதையை இவ்வாறாக வாசித்தும் பார்க்கலாம்.

இன்னமும் உருகிவழியும்
வெம்மையைத் தவிர்க்க
ஏசி நிறையுமென் அறையினுள் நுழைகிறான்
இவான் என்னுமொரு சிறுவன்
வெறுமையையும் முடிவிலா கவலையையும்
அறையினுள் அலையவிட்டு
மேசையில் குழந்தையொன்றின்
குருதி தோய்ந்த படத்தை
வெறித்துக் கொண்டிருப்பவனைக் கண்டு
பதற்றம் நிரம்புகிறது அவனது விழிகளில்
......
......

வந்த இவான்
இடையில் எங்கே போனானென
பதற்றத்துடன் வீடு திரும்புகையில்
முன்னர் மேசையிலிருந்த
குருதி தோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது.

யதார்த்தமும் புனைவும் ஒரு விசித்திரமாக மாறி நிகழும் வன்முறையின் துயரத்தைப் பதிவு செய்கிறது. மேசையின் மீது இருந்த குருதி தோய்ந்த படம் குழந்தையொன்றின் உடலாக மாறுகிறது. இருப்பிற்கும் இல்லாமைக்குமான நுண் உரு இது. சிறார் மரணங்களின் வருத்தமிகுந்த வலி நுட்பமான மொழியினூடாகக் கவிதைப் படிமமாக மாற்றுகிறது.

நாட்டார் தெய்வ -- பெளத்த கலாச்சாரங்களின் சந்திப்பு இளங்கோவின் கவிதைகளில் நிகழ்கிறது. மிதிவெடியில் காலை இழந்த ஊர் வைரவர் என்கிற கிராமப்புற நாட்டார் தெய்வ அடையாளம் மட்டுமல்ல, பிள்ளையாரெனும் பெருங்கதையாடலாகிவிட்ட கணேசரின் இருப்பும் பத்திரகாளியின் ஊழி நடனமும் கவிதைக்குள் நடமாடுகின்றன. தமிழர்களின் பாதுகாவலற்ற பதற்றமான இருப்பை இளங்கோவின் வரிகள் இவ்வாறாக கோணேசரின் குறியீட்டு மொழியின் வழி உணர்த்திச் செல்கிறது.

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

தமிழ் மூதாதைக்கவி கணியன் பூங்குன்றன் பேசிய யாதும் ஊரே யாவரும் கேளீர், விரிந்த தோழமை பூண்ட மண்ணின் உறவு சமகாலத்தில் சொந்த மண்ணை இழந்த நாடற்றவனின் துயரத்தோடு முரண்படுவதை இளங்கோவின் கவிதை வலிமிகுந்த சொற்களால் உருவாக்குகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்
ஒற்றப் பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்

கணியனுக்கு வாய்த்த ஊர், புலம் பெயர்ந்த ஈழத்தமிழனுக்குக் கிடைக்காமல் போனதுதான் வலிமிகுந்த துயரம்.

சங்கத் தமிழ்த் தொன்ம கதாபாத்திரங்களில் ஒன்றான புறநானூற்று வீரத்தாய் படிமம் இளங்கோவின் கவிதைகளில் மறு உருவாக்கம் பெற்றுள்ளது. போரில் எதிர்களை வீழ்த்த முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான் என்றால் இரு முலைகளையும் அறுத்தெறிவேன் என்ற புறநானூற்றுத்தாய் போருக்காவும் அதன் வெற்றிக்காகவும் எதிரியின் அழிப்பிற்காகவும் சபதமேற்கிறாள். இத்தகைய போரின் மீது ஏற்றப்பட்டிருக்கும் புனிதங்களின் எதிர்மாறான தரப்பாக இளங்கோவின் கவிதை இயங்குகிறது. இது மிகை புனைவு தளத்தில் இயங்கும் கவிமொழியிலிருந்து வேறுபட்டது. யதார்த்த தளத்தில் போரின் வன்கொடுமையால் அழிக்கப்பட்ட மக்கள் வாழ்விலிருந்தும் சிதைவிலிருந்தும் பெரும் துயரிலிருந்தும் மறுதரப்பாய் இக் கவிமொழி இயங்குகிறது. போரில் இறந்துபோன தனது பிள்ளைகளை நினைவுகூரத் தன் முலைகளை அறுத்தெறிகிறாள் இந்தத் தாய். இளங்கோவின் கவிதைப் படிமம் இவ்வாறாக உள் எழுச்சியில் உருவாகி ஒரு புறச்சித்தரிப்பாய் உருவாகி நிற்கிறது.

புறமுதுகிட்டு பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தோத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை நினைவுகூர்கிறாள்
தன் முலைகளை அறுத்தெறிந்து.

என்றாலும் இன்னொருவித மன எழுச்சியில் சங்க இலக்கியத்தின் அகத்துறையான காதலையும், காமத்தையும், பசலை படர்ந்த பிரிவின் துயரத்தையும் பேசுகிற பெண்ணாக இருப்பதற்கு மாற்றாகப் போர்க்களத்தின் வாளாகவும், கவச‌மாகவும் உருமாறும் பெண்ணை முன்னிறுத்தவும் செய்கிறது.

'பின்னிரவில் மயிலிறகு வீசி/ மடியில் கிடக்கும்/ பிரிவில் பசலை படிந்து வெம்பித் தவிக்கும் / சங்ககாலப் பெண்ணுமல்ல நீ/ போர்க்களத்தில் வீசுகின்ற வாளாகவும்/ தாங்குகின்ற கவசமாகவும் மாறிவிடத் துடிப்பவளின்/ மொழி கிள்ளிப் புனைவேன் கவிதை.'

இவை இரட்டை மனநிலைகளால் கட்டமைக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுநிலைகளாக இளங்கோவின் கவிதைக்குள் உணரலாம். ஒன்று போரின் சாவுகளுக்கு எதிரானதாகவும் மற்றொன்று சாவினைத் தடுக்கும் போரின் தரப்பாகவும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.

(தொடரும்...நீளங்கருதி)

(27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

0 comments: