1.
நஹீப் மஹ்பஷ் எழுதிய 'அரேபிய இரவுகளும் பகல்களும்' (Arabian Nights and Days), 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதைகளைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். 'ஆயிரத்தொரு அரேபிய கதைகளின்' இறுதியில் சுல்தான்(ஷாகிரியார்), கதைகளைச் சொல்லும் ஷஹாரஜாத்தைக் கொல்லாது, மன்னித்து மணமுடிக்கப் போவதாக முடிகிறது. இங்கே, 'அரேபிய இரவுகளும் பகல்களும்' நாவலில் மணவிழாவிற்கான கொண்டாட்டங்களோடு, நாட்டின் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கதை தொடங்குகின்றது. ஆனால் சுல்தானை மணமுடிக்க இருக்கும் ஷஹரஜாத் உண்மையில் நாடு நிம்மதியாக இல்லையென தனக்குத் தெரிந்த, நாட்டில் நிகழும் கதைகளைச் சொல்லத் தொடங்குகின்றார். பூதங்களும் (Genie) அதிகாரம் மிக்க மனிதர்களும், மாறி மாறிக் கொலைகளையும், வன்புணர்வுகளையும் செய்ய நாடே கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதாய் ஷஹாரஜாத்தின் பார்வை வழியே கதை சொல்லப்படுகின்றது. 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில்' ஒவ்வொரு கதைகளின் முடிவிலிருந்தும் இன்னொரு கதை கிளைத்தெழுவதுபோல, இந்நாவலிலிலும் அநேக அத்தியாயங்களில் ஒரு கதாபாத்திரத்தின் கதை முடிய இன்னொரு புதிய பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய கதாபாத்திரத்தின் வழியே கதை சொல்லப்படுகின்றது. இதற்கு நிகரான ஒரு கதைசொல்லல் முறையே ஒர்ஹான் பாமுக்கின், 'எனது பெயர் சிவப்பிலும்'' (My name is Red ) பின்பற்றப்படுவதை நாம் கவனிக்கலாம். இறுதியில் பூதங்கள் அல்லது பூதங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களே நாட்டின் அதிகாரமிக்கவர்களாய் மாறுவதாய் கதை முடிக்கப்பட்டிருக்கும்.
உண்மையில் இந்நாவல், 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின்' நீட்சி எனச் சொல்லப்பட்டாலும் இது ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதையை நிகழ்காலத்திற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்கின்றது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் துஷ்பிரயோகத்தினால் ஒரு நாடே கொந்தளிப்பாக மாறி, அச்சமும் பீதியும் எல்லா இடங்களிலும் பரவிப் பாய்கின்றது என்பதை இந்நாவல் மிக நுட்பமாக பதிவு செய்கிறது. இந்தக் கொந்தளிப்பின் நிமித்தம் அநீதியானவர்கள் மட்டுமின்றி நேர்மையானவர்களும் பலியிடப்படுகின்றனர் என்பதை இந்நாவலில் எக்குற்றங்களையும் செய்யாத அலாவுதீன் போன்றோர் வீணே தூக்குத் தண்டனைக்கு ஆளாவதை உதாரணங்களாய் எடுத்துக் கொள்ளலாம். அலாவுதீனில் ஆசானாய் இருந்து, தன் மகளான சூபிடாவை மணமுடித்து வைக்கின்ற சீக்கிடம் (Sheikh), ஏன் அலாவுதீன் அநியாயமாய்க் கொல்லப்பட்டார் எனக்கேட்கப்படும்போது, 'I prayed to Almighty God and gave myself over to death, relinquishing all hope in human beings. When night fell I heard a movement at the surface of the hole. As I listened to it the mouth of hole was opened and I saw a large animal like dragon. It let down its tail to me and I knew that God had sent it to rescue me. I clung on to its tail and it drew me up. Then a voice from the heavens called out to me, "We have saved you from death with death." (p 171) என ஒரு மரணத்தைக் தவிர்க்க இன்னொரு மரணமே வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. அந்த மரணம் இன்னொரு அப்பாவியான அலாவுதீனின் மரணமாக இங்கே அமைந்திருக்கிறது.
மாயத்தன்மை நிறைந்த புதிர்கள் நிறைந்த உலகிற்கு இந்நாவல் வாசிக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது. ஒருவர் கொல்லப்படுவதற்கு அல்லது கொலையாளியாவதற்கு எப்போதும் உறுதியான காரணங்கள் இருப்பதேயில்லை. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடில்லாது ஒரு சிறுசந்தேகம் அல்லது முன்பகை ஒருவருக்கு உடனேயே தீர்ப்பளித்து மரணதணடனை கொடுக்க்கப்படுவதற்கு போதுமாயிருக்கிறது. இந்நாவலை நாம் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து உருவாகும் எந்தத் தலைமையிடமும், எந்த நாட்டோடும் கூட பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். நஹீப் மஹ்பஷின் கதைசொல்லும் முறையின் ஆளுமை மொழிபெயர்ப்பினூடாகவே சிலாகிக்க முடிகிறதென்றால் மூலமொழியில் இன்னும் வனப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சிலவேளைகளில் பூதங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுத்து கொலைகளைச் செய்யத் தூண்டிவிட்டு இடைநடுவில் அவர்களைக் கைவிட்டு விடுகின்றன. பிறசமயங்களில் அவர்களுக்கு மறுபிறப்புக் கொடுத்து அவர்கள் வாழ்ந்த நகரங்களில் வேறு நபர்களாக உருமாற்றி வாழவும் விடுகின்றன. அவ்வாறான பொழுதுகளில் தமக்குத் தெரிந்த மனிதர்கள் எல்லோரும் அந்நியராகப் போகும் விந்தைகளை மஹ்பஷ் அழகாக விவரிக்கின்றார். இன்னொருவிதத்தில் பார்த்தால் இது எப்போதும் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய 'இருத்தலியச் சிக்கல்'தான் என்பதாகவும் வாசித்துக்கொள்ளலாம்.
2.
'Veronica Guerin' திரைப்படம் ஒரு பத்திரிகையாளரின் கதையைச் சொல்லும் படம். அயர்லாந்தின் வறுமையை தமக்குச் சாதகமாக்கி பதின்மர்களை அதிகம் குறிவைத்து இயங்கிய போதைமருந்து மன்னர்களை அம்பலப்படுத்தி எழுதிய வெரோனிக்கா என்கின்ற பெண்ணே இதில் முக்கிய பாத்திரமாக வருகிறார். . எதற்கும் அஞ்சாது உண்மைகளை எழுதுவேன் என உறுதியாக இருந்த வெரோனிக்காவை அவரது 38 வயதிலேயே இந்தப் போதைமருந்துக் கும்பல் கொலை செய்தது. ஆனால் வெரோனிக்காவின் மரணம் ட்பளினையே உலுக்கி சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய வழிகோலியிருக்கிறது. Criminal Assets Bureau Act வெரோனிக்காவின் மரணத்தின் பின் அறிமுகப்படுத்தபட்டு, சட்டவிரோத செயல்களைச் செய்து வரும் பணத்தால் வாங்கும் சொத்து எதுவாயினும், அவை அனைத்தும் அரசால் சுவீகரிக்கப்படும் எனகின்ற சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் நிமித்தம் பல போதைமருந்துக் கும்பல்களின் தலைவர்களின் சொத்துக்கள் அயர்லாந்தில் பறிக்கப்பட்டிருக்கின்றது. இச்சட்டத்தின் பின்னர் பதின்மர்களிடையே இருந்த போதைமருந்துப் பயன்பாடு அடுத்தடுத்த வருடங்களில் 15% மாக அயர்லாந்தில் குறைந்ததாக இப்படத்தின் முடிவில் கூறப்படுகின்றது. இச்சட்டம் அமுலாக்கப்பட்டதைப் போல வெரோனிக்காவின் கொலையோடு சம்பந்தப்பட்ட பலருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. வெரோனிக்காவின் கொலை 1996ல் நிகழ்ந்திருந்தாலும் சென்ற வருடம் கூட இதுவரை தலைமறைவாக ஓடி ஒளித்திருந்த ஒருவர் பிடிபட்டுமிருக்கிறார்.
வெரோனிக்கா ஒரு மகனுக்குத் தாயாக இருந்தபோதும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உண்மையை வெளிக்கொணர்வேன் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர். கொலைப் பயமுறுத்தல்கள் மட்டுமில்லாது, அவரது வீட்டுக்கு வந்து அவரைத் தொடையில் சுட்டபோதும் அச்சமின்றி எழுதிக்கொண்டிருந்த வெரோனிக்காவை, இப்படி இனியும் எழுதுவதை நிறுத்தச் சொல்கிறார் அவரின் கணவர். அப்போது, 'தெருக்களில் போய் அங்கே போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் பதின்மர்களைக் கண்ட என்னைப் போன்ற ஒருவராய் நீ இருந்தால் உன்னால் கூட இவற்றை எழுதாமல் சும்மா இருக்கமுடியாது' என்று தன் கணவருக்குக் கூறுகின்றார். அதுபோல் செய்தி சேகரிப்பதற்காய் போதைமருந்துக் கும்பலின் தலைவர் ஒருவரிடம் செல்லும்போது மிகமோசமாய் தாக்கப்படுகின்றார். நிகழ்ந்ததை வெளியே சொன்னால் உனது மகனை வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலையும் செய்வோமென வெரோனிக்கா அவரால் பயமுறுத்தப்படுகின்றார். இவ்வளவு நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் இயங்கிக்கொண்டிருந்த வெரோனிக்காவை ஒரு பகல்பொழுதில் காரில் போகும்போது கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொல்கின்றனர். இத் திரைப்படம் முடிகின்றபோது Sinead O'Connor ன் 'One more day' ( http://www.youtube.com/watch?v=mFyiWlp13a8&feature=related ) ஒலிக்கும்போது ஒரு கணமாவது வெரோனிக்காவின் வாழ்வை மீள நினைக்காமல் இருக்கமுடியாது. ஜனநாயக வழிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்ற ஒரு நாட்டில், ஒரு பத்திரிகையாளர் கொலைசெய்யப்படும்போது பெரும் கொந்தளிப்பே நிகழ்கின்றது. ஆனால் எத்தனையோ நேர்மையான பத்திரிகையாளர்கள் கொலைசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமற்போகின்றபோதும் அதுகுறித்த அசமந்தப்போக்கும் மூடிமறைப்புக்களுமே இலங்கை போன்ற 'சனநாயக சோசலிச' நாடுகளில் நிகழ்வதையும் நாம் இந்தக் கணத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
3.
வண்ணநிலவனின் வாசிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த 'கம்பாநதி'யையும், 'ரெயினீஸ் ஐயர் தெரு'வையும் அண்மையில்தான் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது . இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் வாசித்த வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்' தந்த நெருக்கமும் நெகிழ்ச்சியும் என்றைக்குமே மறக்கமுடியாது. 'கடல்புறத்தை இப்போது மீண்டும் வாசித்தால் அதே அனுபவத்தைத் தருமா என்பதும் சந்தேகமே. 'கடல்புரத்திலும்' , 'ஜே ஜே சில குறிப்புகளை'யும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வாசித்தாலும், ஜே.ஜே. சில குறிப்புகள் பின் தங்கிவிட இன்றும் கடல்புறத்தில்' மனதில் மிதந்துகொண்டிருக்கிறது.
'கம்பா நதி' ஒரு வேலையைத் தேடுகின்ற இளைஞனின் கதையோடு அவனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை விபரிக்கின்றது. இக்கதையில் வேலைக்காய் நேர்முகத்திற்காய் போகின்ற இளைஞனின் அவஸ்தைகளை நம்மில் அநேகர் சந்தித்திருக்கக் கூடியவை; அனுபவித்திருக்கக் கூடியவை. வேலை தேடிக்கொண்டிருக்கும் பாப்பையாவின் இன்னமும் திருமணம் முடிக்காத அக்கா சிவகாமி, பாப்பையா விரும்புகின்ற கோமதி, பாப்பையாவையோ சிவகாமியையோ பற்றி அக்கறையில்லாது குடியும், இன்னொரு மனைவியும் வைத்துக்கொண்டு திரிகின்ற பாப்பையாவின் தகப்பன் சங்கரன்பிள்ளை...என இந்நாவலில் வரும் பாத்திரங்களை எல்லாம் நாம் சந்தித்திருக்கக் கூடியவர்கள், சிலவேளைகளில் அந்தப் பாத்திரங்களில் ஒருவராக நாமே இருக்கக்கூடியவர்களும் கூட. நகரும் வாழ்க்கை எல்லா அவமானங்களையும் தோல்விகளையும் தின்று செரித்திருக்கக்கூடியதுதான், ஆனால் அவ்வப்போது சிறுபொறி பழைய நினைவுகளை சரசரவென்று பற்றவைத்துவிடுகின்றது. கோமதியின் திருமணத்தின்போது மிதமிஞ்சிக் குடித்து தெருவில் கிடக்கிற சங்கரன்பிள்ளை, அவளுக்கு அவரின் மகனான பாப்பையாவை மீள நினைக்கும்படி செய்துவிடுவதும் அப்படித்தான்.
'கம்பாநதி'யில் குறிப்பிடப்படுகின்ற ரெயினீஸ் ஜயர் தெரு, டாரதி எல்லாம் வண்ணநிலவன் இரண்டு வருடங்களுக்குப் பின் எழுதுகின்ற 'ரெயினீஸ் ஐயர் தெரு'வில் விரிவாக வருகின்றார்கள்/வருகின்றது. இன்னொருவிதமாக இது 'ரெயினீஸ் ஐயர் தெருவில்' இருக்கும் குடும்பங்களைப் பற்றிய விரிவான கதை எனச் சொல்லலாம். 'கம்பாநதி'யில் நதி எல்லோரும் குவிகின்ற ஒரு மையமாக வருகின்றதோ அவ்வாறே 'ரெயினீஸ் ஐயர் தெரு'வில் ஒரு தெரு முக்கிய பாத்திரமாய் வருகின்றது. வழக்கமாய் ஒரு தெருவில் இருக்கும் குடும்பங்களிடையே வரும் சண்டைகளும், சச்சரவுகளும், சமாளிப்புக்களும், கள்ளத்தனங்களும், உளவறிதல்களும் இந்நாவலில் மெல்லியதாகச் சித்தரிக்கப்படுகின்றது. ரெயினீஸ் ஐயர் தெருவில் வழமைபோல பெய்கின்ற மழையோடு நாவல் நிறைவுபெறுகிறது. மழைக்காலத்தில் மனிதர்களை நம்மால் ஒருபோதும் வெறுக்கமுடியாது என்று நாவலில் கூறப்படுவதுபோல வாசிக்கும் நம்மாலும் இந்நாவலின் பாத்திரம் எதனையும் வெறுக்கமுடியாதுதான் இருக்கிறது. ஆனால் இந்நாவலில் வரும் 'கல்யாணி அண்ணன்' என்கின்ற பாத்திரம் ஏன் எப்போதும் ஒரு தேவதூதரைப் போல 'வித்தியாசமாகச்' சித்தரிக்கப்படுகின்றது என்பதுதான் புரியவில்லை.
எல்லோருக்கும் மிகப் பிடித்தமான, எப்போதும் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கும் அலீஸ் இளவயதில் இறப்பது, எஸதர் சித்திக்கு அவரின் பெறாமகனாய் இருக்கின்ற சாம்சனோடு உடல் சார்ந்த உறவு இருப்பது, எப்போதும் குடியும், தறுதலையுமாய் இருக்கும் தியோடர், முதிர்ந்த தம்பதிகளான ஆசீர்வாதம் - ரெபேக்காளுக்கு உதவி செய்வதற்கு ஒருபோதும் தயங்காதது.... என வாழ்க்கை வித்தியாசமான மனிதர்களையும் அவர்களின் விசித்திரமான மனோநிலைகளையும் வரைந்துகொண்டே இருக்கிறது. இருதயத்து ரீச்சர் வீட்டுக்குள் குறுக்கு மறுக்குமாய் ஓடும் கோழிகளும், மழை பெய்யும் நாட்களில் நீரை ஊறச்செய்ய வாசல்களில் விரிக்கும் சாக்குப்பைகளும் ஊர்களில் வாழ்ந்திருப்பவர்க்கு இன்னும் நெருக்கத்தைத் தரும் படிமங்கள். ஆனால் பெரிய பிள்ளையாக ஆகும் ஜீனோ, 'அம்மாவோ இன்னொரு மனுஷியாகத் தெரிந்தாள். மிக மோசமான, தாழ்ந்த குலப் பெண்ணாக அம்மா இருந்தாள்' என நினைக்கும்போதுதான் சற்று நெருடுகின்றது. வயதுக்கு வரும் பெண்களுக்கு அம்மாவுடனான ஒரு விலகல் ஏற்படலாம். ஆனால் அது ஏன் 'மோசமான, தாழ்ந்த குலப்பெண்ணாக' சித்தரிக்கப்படுகின்றது என யோசிக்கும்போது இது ஜீனோவின் உள்மனக்குரலா அல்லது வண்ணநிலவனின் விருப்புச்சார்ந்த ஒலிப்பா என கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் 'தாழ்ந்த குலம்' பற்றிய வர்ணிப்புக்கள் வருகின்றது. நாவல் எழுதப்பட்ட 81களில்தான் இந்தப் 'பிரக்ஞை'கள் இல்லையென்பதை ஒரு சாட்டாக முன்வைத்தாலும், நான் வாசித்த நர்மதா பதிப்பாக 2001ல் வந்த மறுபதிப்பிலாவது திருத்தி எழுதியிருக்கலாமென நினைக்கிறேன். சாதாரண நிகழ்வுகளின் விடுபட்டவைகளை நுட்பமாகச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி என மதிப்பிடப்படுகின்ற வண்ணநிலவன்...எப்போதும் மனிதர்களை அவர்களின் பலங்களோடு அன்றி அவர்களின் பலவீனங்களோடும் நேசிக்கச் சொல்லும் வண்ணநிலவன், இவ்வாறான 'தாழ்ந்த சாதி' என எழுதுவதும், தாழ்ந்த சாதி அல்ல தாழ்த்தப்பட்ட சாதிகளாக்கியதே ஆதிக்கசாதிகள் தான் என்பதை உணர மறுப்பதுதான் என்னளவில் வியப்பாயிருக்கிறது. வண்ணநிலவன் என்ற படைப்பாளியின் இந்தப் பலவீனங்களோடு (இவ்வாறான விடயங்களை அவர் மாற்றவேண்டுமென தெளிவாய் வலியுறுத்தியபடியும்) எனக்கு கம்பா நதியும், ரெயினீஸ் ஐயர் தெருவும் பிடித்திருந்தன என்பதையும், அவை எழுதப்பட்ட காலங்களில் அவை ஒரு பாய்ச்சல்தான் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
4.
இவ்வருடத்திற்கான 'இயல்விருது' எஸ்.பொன்னுத்துரைக்கு வழங்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சி தருகின்ற செய்தி. ஈழத்து இலக்கியம் சார்ந்து சில விடயங்களை விரிவாக எழுதுவதற்காய் எனக்குப் பிடித்தவர்களை பட்டியலிட்டபோது, ஒரு முக்கோணத்தின் மூன்று நுனிகளில் வருகின்றவர்களாய் மு.தளையசிங்கத்தையும், பிரமிளையும், எஸ்.பொவையுமே குறியிட்டு வைத்திருக்கிறேன். அந்த முக்கோணத்தை இன்னுமிரண்டு கோடுகளால் நீட்டித்து சாய்சதுரமாய் ஆக்கினால் அதில் வரக்கூடியவர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் என்பதாய்த் தீர்மானித்திருந்தேன். அவர்களுக்குள்ளால் மேலும் விரியக்கூடியது முற்போக்கு இலக்கியக்க்காரர்களின் பட்டியல்.
1999ன் பிற்பகுதியில் என நினைக்கிறேன். முதன் முதலாக செல்வத்தின் 'வாழும் தமிழ்' கண்காட்சியிற்கு சென்றபோது இரண்டு நூற்களை வாங்கினேன். ஒன்று சு.ராவின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றது எஸ்.பொவின் 'ஆண்மை'. அதுவரை பாலகுமாரனை ஒரு குருவாய் நினைத்து அவரின் படைப்புக்களுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்தவனை கை நீட்டி இன்னொரு திசையில் அழைத்துச் சென்றவர்கள் சு.ராவும், எஸ்.பொவும்தான். அதேபோன்று எஸ்.பொவை 2000ல், காலச்சுவடு 'தமிழ் இனி' நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் கனடாவில் சந்திக்க முடிந்திருந்தது. அப்போது எஸ்.போ புலம்பெயர் இலக்கியத்தை எவரெஸ்டின் சிகரத்தில் ஏற்றிவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு உலக நாடுகளாய் சென்று தமிழ் ஊழியம் செய்துகொண்டிருந்த காலகட்டம். ஒரு முழுநாள் நிகழ்வாய் எஸ்.பொ அந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார். கனடாவில் இருந்த பல்வேறுபட்ட படைப்பாளிகளை ஒரேயிடத்தில் சந்தித்த பொழுது அது. அப்படி ஒரு அரங்கு நிறைந்த/நிறைவான கூட்டத்தை அதன்பின்னர் எப்போதும் கண்டதுமில்லை. பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் விட எஸ்.பொவின் அன்றைய காலத்தில் வெளிவந்த படைப்புக்கள் எல்லாவற்றையும் ('தீ', 'சடங்கு', 'இனி') போன்றவற்றையும் வாங்க முடிந்திருந்தது. எஸ்.பொவின் 'ஆண்மை'யை வாசித்த இன்பத்தில் அவரைத் தொடர்ந்து பின் தொடர்ந்தபடியே இருந்தேன். பிறகு இன்னொரு கூட்டம் இது தமிழில் பட்டம் பெறப்படிப்பவர்கள் படிக்கும் இடத்தில் நடந்தது. எஸ்.பொ எப்படி முதல் நிகழ்வில் தன்னை கைலாசபதி,சிவத்தம்பி எப்படி புறக்கணித்தார்கள் என்று விரிவாகப் பேசினாரோ இங்கேயும் அதேயே பேசினார். படித்துக்கொண்டிருந்த சில பெண்கள் சிவத்தம்பியிடமும் படித்தவர்கள். ஆகவே அவர்கள் தம் குருவை விட்டுக்கொடுக்காது எஸ்.பொவை திரும்பிக் கேள்விகள் கேட்டு மடக்கினார்கள். எஸ்.பொவும் கோபம் வந்து 'என்னிடம் கேள்வி கேட்பதுபோல நீங்கள் சிவத்தம்பியிடம் கேட்டிருந்தீர்களா?' எனத் திருப்பி மடக்கினார். இரண்டு தரப்பிடமும் தீ பற்றாத குறைதான். இரண்டு கூட்டங்களின் அனுபவத்தின்படி எஸ்.பொ என்ன பேசுவார் என்ற 'வித்தை' கைவரப் பெற்றதால், அவரைப் பின் தொடர்வதைவிட எனக்குப் பிடித்த அவரின் படைப்புக்களைப் பின் தொடர்வதே சிறந்தது என -அவரின் கூட்ட உரைகளுக்குப் போவதை மறந்துவிட்டு- வாசிப்பில் கவனஞ்செலுத்தினேன்.
எஸ்.பொ ஒரு சிறந்த கதை சொல்லி. அதை மறுத்துக் கூறும் எவரோடும் எங்கும் உரையாடுவதற்குத் தயாரகவே இருக்கின்றேன். சமஸ்கிருத வார்த்தைகள் அளவுக்கதிகமாய் அவரது படைப்புக்களில் சிலவேளைகளில் பெருக்கெடுத்தாலும் அவர் தன் படைப்புக்கள் புதிய சொற்கள் பலதை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அதற்கு அவர் கற்றிருக்கக்கூடிய பைபிள் கைகொடுத்திருக்கலாம்தான். எனினும் அதைத் தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய நுட்பம் எஸ்.பொவுக்கு மிக எளிதாக வாய்த்திருக்கிறது. சடங்கில் மிக நுட்பமாய் பதியப்பட்ட யாழ்ப்பாணிகளின் வாழ்க்கையை நாம் மறந்துவிடக்கூடுமா என்ன? ஆனால் நான் விதந்தோத்துகிற எஸ்.பொதான் கட்டுரையாக எழுதக்கூடிய 'மாயினியை' ஒரு மோசமாக நாவலாகத் தந்திருக்கின்றார் என்பதையும் மறந்துவிடமுடியாது. மரபார்ந்த மார்க்சியர்களை கேள்வி கேட்டு எழுதியபோது -அவ்வப்போது சண்டைபிடிப்பதும் கட்டியணைப்ப்துமாய் - இருக்கின்ற நண்பர் 'நீயெல்லாம் எஸ்பொ ஏற்கனவே வைத்திருக்கும் பட்டுக்குஞ்சத்தையே தலையில் போடத்தான் லாயக்கானவன்' என்றபோது....எந்தப் பட்டமும் விரும்பாதபோதும் இந்தக் குஞ்சம் எனக்குப் பிடித்தமாய்தான் இருந்தது. ஆக, இவ்வாறு எனக்குப்பிடித்த எஸ்.பொவுக்கு, ஒரு சிறந்த படைப்பாளியான அவருக்கு, இயல் விருதுக்குழு இயல்விருதை வழங்கி தன்னைக் கவுரவித்திருக்கிறது எனத்தான் சொல்லவேண்டும்.
நிகழ்வு முடிந்து எஸ்.பொ போய்க்கொண்டிருக்கின்றார். 'ஆண்மை'யில் இருக்கும் கதையில் அக்கா என்கிற கதாபாத்திரம் மிக இளவயதான ஒரு சிறுவனிடம் (உடல்) உறவு வைத்திருக்கிறார். இதையெல்லாம் கதையில் எழுதுவது நியாயமா? என ஒரு அப்பாவியாய் எஸ்.பொவிடம் கேட்கிறேன். எஸ்.பொ ஒரு முறை என்னை உற்றுப் பார்த்தார். பிறகு. 'இதெல்லாம் யதார்த்தில் நடந்திருக்கிறது. அதைத்தான் எழுதினேன், தவறு சரியெல்லாம் கதைகளில் அடங்காது' என்கிறார். எனக்கு அந்தக் கதையை வாசித்தபோது, அதில் பட்டும்படாமலும் கதையில் வரும் அக்காவுக்கும் சிறுவனுக்கும் உறவு இருந்தென்பது விளங்கியது, அதை உறுதிப்படுத்தத்தான் எஸ்.பொவிடம் கேட்டேன். நான் நினைத்தது சரிதான் என என் வாசிப்புப் பற்றிய நம்பிக்கையில் உற்சாகமடைந்தேன். எஸ்.பொ அடுத்த நிகழ்வொன்றுக்காய் தன் உறவினர்கள் புடைசூழ யாரோ போட்டிருந்த மாலை கழுத்தில் தொங்க நடந்துபோய்க்கொண்டிருந்தார்.
...............................
*கடதாசிப்பூவின் இன்னொருபெயர் போகன்வில்லா
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment