கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கனடாத் தேர்தல் - மேலும் சில குறிப்புகள்

Sunday, April 24, 2011

1.
இம்முறை தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து -அடிக்க‌டி ந‌டைபெறும் தேர்த‌ல் க‌ணிப்பில்- வ‌ல‌துசாரிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌ ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி கிட்ட‌த்த‌ட்ட‌ 40% முன்ன‌ணியிலும், லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் 30%, ம‌ற்றும் என்டிபிக் க‌ட்சியின‌ர் 20% என் ச‌ற்றுக் கூடியும் குறைந்தும் இருந்தார்க‌ள். க‌ன‌டாவின் மொத்த‌ பாராளும‌ன்ற‌ இருக்கைக‌ளான‌ 308ல் மூன்றில் ஒருப‌ங்கு ஒன்ராறியோ மாகாண‌த்திலேயே (106) இருக்கின்ற‌து. அத‌ற்கு அடுத்து குயூபெக் மாகாண‌த்தில் 75 இருக்கைக‌ளும், பிரிடடிஷ் கொல‌ம்பியா மாகாண‌த்தில் 36 இருக்கைக‌ளும் இருக்கின்ற‌ன‌. இருக்கைக‌ளின் அடிப்ப‌டையில் வைத்துப் பார்க்கும்போது ஒன்ராறியோ மாகாண‌த்தில் எந்த‌க் க‌ட்சி, கூட‌ இருக்கைக‌ளைப் பெறுகின்ற‌தோ அதுவே எளிதாக‌ ஆட்சிய‌மைக்கும் என்ப‌தை நாம் புரிந்துகொள்ள‌லாம். மேலும் க‌ன‌டாவில் ஒரு க‌ட்சி பெரும்பான்மை ஆட்சிய‌மைக்கின்ற‌தென்றால் ஒன்ராறியோ மாகாண‌த்தில் பெரும்பான்மையான‌ இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றினால் ம‌ட்டுமே சாத்தியமாகக் கூடிய‌து.

சென்ற‌ தேர்தலில் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி 143 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றிய‌து. 155 இருக்கைக‌ளுக்கு மேல் எடுத்தாலே பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளால் அமைக்க‌முடியும் என்றாலும், அவ‌ர்க‌ள் கட‌ந்த‌ 2004ல் 99 இருக்கைக‌ளுட‌ன் தொட‌ங்கி 124(2006), 143(2008) என‌ ஏறுமுக‌த்திலேயே இருக்கின்றார்க‌ள். ஆக‌ இப்போது தேர்த‌லை அறிவித்த‌தும் அந்த‌ ஏறுமுக‌த்தை த‌க்க‌வைத்து ஒரு பெரும்பான்மை அர‌சை அமைப்ப‌தே என்ப‌து எவ‌ரும் அறிந்திருக்க‌க்கூடிய‌ 'இர‌க‌சிய‌மே'. ஆனால் நிலைமை இப்போது அவ்வ‌ள‌வு சொல்லிக்கொள்ளும்ப‌டியாக‌ வ‌ல‌துசாரிக‌ளுக்கு இல்லை என்ப‌துதான் யதார்த்த‌ நிலைமை.

சென்ற‌ தேர்த‌லில் லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் ந‌ல்ல‌ வ‌ழிகாட்டியுள்ள‌ த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுக்காத‌தாலும், ம‌க்க‌ள் மாற்ற‌ங்க‌ளை வேண்டிய‌தாலும் -க‌ட‌ந்த‌ 20 வ‌ருட‌ங்க‌ளின் பின்- ஒரு மோச‌மான‌ தோல்வியை லிப‌ர‌ல் க‌ட்சி தேர்த‌லில் ச‌ந்தித்தது. அதனால் 77 இருக்கைக‌ளை ம‌ட்டுமே எடுக்க‌ முடிந்திருந்தது. அதேசமயம் லிப‌ர‌லைப் ப‌டுகுழியில் த‌ள்ளினாலும் ம‌க்க‌ள் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சிக்கு ஒரு பெரும்பான்மையைக் கொடுக்க‌த் த‌யாராக‌வில்லை. குயூபெக்கில் ப்ளொக் குயூபெக்குவா 49 இருக்கைக‌ளையும், என்டிபி க‌ன‌டா முழுவ‌தும் 37 இருக்கைக‌ளையும் பெற்று வ‌ல‌துசாரிக‌ளின் த‌னிப்பெரும்பான்மை அர‌சுக் க‌ன‌வைக் க‌லைத்த‌ன‌ர்.

இம்முறை க‌ட‌ந்த‌ தேர்த‌லைப் போல‌வ‌ன்றி சிக்க‌ல‌ற்ற‌ ஒரு த‌லைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சி தேர்ந்தெடுத்திருக்கின்ற‌து. அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ யாரை விரும்புகின்றீர்க‌ள் என்ற‌ க‌ருத்துக்க‌ணிப்பின்போது லிப‌ர‌ல் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும், ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும் அண்ண‌ள‌வாக‌ ஒரே விருப்பையே (30%)தெரிவித்திருக்கின்றார்க‌ள். ஆனால் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் விட‌ அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ என்டிபி த‌லைவ‌ருக்கு (68%) மிகக் கூடிய‌ விருப்பைத் தெரிவித்திருக்கின்றார்க‌ள் என்ப‌து சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம்.

என்டிபி க‌ட்சியின் மக்கள் செல்வாக்கைக் க‌ன‌டா முழுவ‌த‌ற்குமாய்ப் பார்க்கும்போது, ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி ம‌ற்றும் லிப‌ர‌ல் க‌ட்சிக்கு அடுத்த‌தாக‌ மூன்றாவ‌து நிலையிலே இருக்கின்ற‌து என்ப‌தை நாம‌றிவோம். ஆனால் இப்போது இன்னொரு சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் க‌ள‌ம் திற‌க்க‌‌ப்பட்டிருக்கின்ற‌து.

குயூபெக் மாகாண‌த்தில் க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ ப்ளொக் குயூபெக்குவாவே அதிக‌ இருக்கைக‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌து. சென்ற‌ தேர்த‌லில் 75 இருக்கைக‌ள் உள்ள‌ குயூபெக் மாகாண‌த்தில் 49 இருக்கைக‌ளை ப்ளொக் குயூபெக்குவாவும், மிகுதி 25 இருக்கைக‌ளில் லிப‌ர‌ல் (14), ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி (10), என்டிபி (1) ம‌ற்றும் சுயாதீன‌க்க‌ட்சி(1) என‌க் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. சென்ற‌வார‌ம் வ‌ரை க‌ருத்துக்க‌ணிப்பில் ப்ளொக் குயூபெக்குவாவிற்கு அடுத்து இர‌ண்டாவ‌தாக‌ நின்ற‌ என்டிபி, இப்போது குயூபெக் மாகாண‌த்தில் ப்ளொக் குயூபெக்குவாவை விட‌ முன்ன‌ணியில் நிற்கின்ற‌து என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. என்டிபி முன்ன‌ணியில் நிற்கும்போது அதிக‌மாய் லிப‌ர‌ல்க‌ட்சியின‌ர‌தும், ப்ளொக் குயூபெக்குவாவினதும் வாக்குக‌ள் பிரிந்துபோகும் என்ப‌தால் இத‌னால் என்டிபியை விட‌ ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சியே இன்னும் சந்தோசப்படும்.

மேலும் பிரிவினையை வ‌லியுறுத்தும் ப்ளொக் குயூபெக்குவாவை எப்போதும் வெறுக்கும் வ‌ல‌துசாரிக‌ளுக்கு, இந்த‌ச் செய்தி பழம் நழுவி பாலில் விழுந்த‌மாதிரி இனிக்க‌வும் கூடும். ஆனால் இந்த‌ச் செய்தி சிறுபான்மையின‌ரின் குர‌ல்க‌ள் பொதுவெளியில் உர‌த்து ஒலிக்க‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க்கு அவ்வ‌ளவு உவ‌ப்ப‌தைத் த‌ராது என்பது உண்மையே. ஒர‌ள‌வு இட‌துசாரிக‌ளாய் இருக்க‌க்கூடிய‌ என்டிபியின‌ர் குயூபெக்கில் மிக‌ப்பெரும் எழுச்சி பெறுவ‌து ம‌கிழ்வாய் இருந்தாலும், அந்த‌ எழுச்சி இன்னொரு சிறுபான்மையின‌ருக்குத் பாதகம் விளைவித்து விடும் என்கின்றபோது யோசிக்க‌வேண்டியிருக்கும்.

2.
இந்தத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் ரொரண்டோ பெரும்பாகத் தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள். ஒருவர் பழமைவாதக்கட்சியின் சார்பிலும், இன்னொருவர் என்டிபியினர் சார்பிலும் போட்டியிடுகின்றார். நீண்டகாலமாய் ஒன்ராறியோ மாகாணம் லிபரல் கட்சியாகவே இருந்துவந்திருக்கின்றது. பழமைவாதக்கட்சியினர் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்ராறியோவில் செல்வாக்குப் பெற்று வருகின்ற இக்காலத்திலும் இன்னமும் அவர்கள் ரொரண்டோ ந‌க‌ராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் லிபரலை அசைக்கவே முடியாதிருக்கின்றது. ரொரண்டோ ந‌க‌ரில் லிபரலைத் தவிர என்டிபியினர் இரு தொகுதிகளில் வென்றிருக்கின்றனர். அதில் ஒருவர் என்டிபியின் கட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, லிபரல் கட்சியினர் வெல்லும் சாத்தியம் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் இரு தமிழ் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்களை கடந்த காலத்த்தேர்தலை முன்வைத்து ஆராய்வோம்.

ஸ்காபரோ Rouge Valleyல் தமிழரான ராதிகா சிற்சபேசன் புதிய ஜனநாயக் கட்சி (என்டிபி) சார்பாகப் போட்டியிடுகின்றார். இத்தொகுதியிலும் தமிழர்கள் உள்ளிட்ட ஆசியா இனத்தவர்களே நிறைய இருக்கின்றார்கள்.1988ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து லிபரல் கட்சி வேட்பாளர்களே வென்றுவருகின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் இம்முறை நீண்டகாலமாக லிபரல் கட்சி சார்பில் வென்ற டெரிக் லீ என்பவர் போட்டியிடாததால் புதிய ஒரு வேட்பாளரை லிபரல் கட்சி நிறுத்தியிருக்கின்றது. அவரும் ஒரு ஆசியா இனத்தவரைச் சேர்ந்தவராக இருப்பதால் அவரே வெல்வதற்கான சந்தர்ப்பம் நிறைய உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் ராதிகா சிற்சபேசன் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை விட அதிக வாக்குக்குப் பெற்று இரண்டாம் இடத்தை பெறக் கூடும். எனெனில் தமிழர்களும், தொடர்ச்சியாக என்டிபியினருக்கு வாக்களிப்பவர்களும் ராதிகாவிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் நிறைய இருப்பதால் கணிசமான வாக்குகளை அவ‌ர் பெறலாம். அதே சமயம்,  இந்தியாப் பின்னணியில்  லிபரல் கட்சி வேட்பாளரும், பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் இருப்பதால் அவர்களின் வாக்குகள் இருகட்சிக்கும் பிரிந்து போனால், ராதிகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. பழமைவாதக் கட்சியில் போட்டியிடும் மார்லின் ஒரு க‌வுன்சில‌ருக்கு உத‌வியாள‌ராக‌ இருப்பதால் அவருக்கும் கணிசமான வாக்குகள் விழக்கூடும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

Scarborough - Rouge River
2008 Results
Party            Candidate               Votes               Vote Share (%)
LIB               Derek Lee               23,716            58.23
CON            Jerry Bance              9,160              22.49
NDP             Ryan Sloan              5,954              14.62
GRN            Attila Nagy              1,567               3.85
LTN            Alan Mercer             331                 0.81

2006 Results
Candidate             Party           Vote Count      Vote Share
Derek Lee             LIB              30285               65.62% 
Jerry Bance           CON            9432                 20.44%
Andrew Brett        NDP             4972                10.77%
Serge Abbat         GRN             754                   1.63%
Yaqoob Khan      IND               467                   1.01%
Alan Mercer         LTN              243                   0.53%

 3.
பழமைவாதக்கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற இராகவன் என்ற பெயரை அண்மையில் தேர்தலுக்காய் மாற்றிய கவன் பரஞ்சோதியின் தொகுதியான ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியைப் பார்ப்போம். 2006ல் பழமைவாதக்கட்சி நீண்டகாலத்தின் பின் லிபரலைத் தோற்கடித்து பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்தபோது....ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில்...

2006 Results
DISTRICT: Scarborough Southwest

Candidate                     Party               Vote Count       Vote Share
Tom Wappel                 LIB                 19930              47.83%
Vincent Veera               CON               10017              24.04%
Dan Harris                    NDP                9626                23.1%
Valery Philip                 GRN                1827                4.38%
Trevor Sutton                IND                 147                  0.35%
Elizabeth Rowle            COM                120                  0.29%

2006ல் இத்தொகுதியில் வின்சன்ட் வீரசுந்தரம் என்ற தமிழரே பழமைவாதக் கட்சி சார்பில் பேட்டியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் இத்தொகுதியில் நீண்டகாலமாய் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த ரொம் மீண்டுமொருமுறை எளிதாகத் தேர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அதேசமயம், என்டிபி கட்சி சார்பில் போட்டியிட்ட டானும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். அவருக்கும் வின்சனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 500 வாக்குகளே ஆகும். ஆகவே பழமைவாதக்கட்சியினரும் என்டிபியினரும் கிட்டத்தட்ட சமமான செல்வாக்கையே இத்தொகுதியில் பெற்றிருக்கின்றார்கள் என்பதை அறியமுடியும். இத்தொகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர்களும், பிலிப்பைன்காரரர்களும் வாழ்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இனி 2008ல் நடந்த தேர்தலைப் பார்போம்:
Scarborough Southwest
Party       Candidate                      Votes               Vote Share (%) 
LIB          Michelle Simson             15,480             41.77
CON       Greg Crompton              10,900             29.41
NDP        Alamgir Hussain             7,024               18.95
GRN        Stefan Dixon                  3,507               9.46
IND         Fatique Kabir                 150                  0.40

                                           க‌ட‌ந்த‌ 2008 தேர்தலில் லிபரல் புதிய வேட்பாளரைக் களத்தில் இற‌க்கிய‌து. அதேபோன்றே பழமைவாதக்கட்சியினரும், என்டிபியினரும் புதிய வேட்பாளரையே தேர்தலில் நிறுத்திய‌து. இம்முறையும் லிபரல் கட்சி வேட்பாளரான மிசேலே வென்றாலும், என்டிபினருக்கு கிடைத்த வாக்குகள் வீதமும் லிபரல் கட்சியினரின் வாக்கு வீதமும் குறைந்திருப்பதைக் காணலாம். மேலும் பழமைவாதக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒரு சிறுபான்மையினரைச் சேர்ந்தவரோ அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.  இப்போது 2011ல் நடக்குந் தேர்தலில் லிபரல் கட்சி, சென்றமுறை வெற்றி பெற்ற மிஷைலையே களத்தில் இறக்குகின்றது. பழமைவாதக் கட்சி சார்பில் கவன் பரஞ்சோதி வாக்குக் கேட்கின்றார். இதைவிட சுவாரசியமான விடயமாக என்டிபி 2006 தேர்தலில் கணிசமான வாக்குகள் (9626) பெற்ற‌ டானையே இந்தத் தேர்தலில் மீண்டும் களமிறக்குகின்றது.

எனவே இத்தேர்தல் தொகுதி ஒரு மும்முனைப் போட்டியுள்ள தேர்தலாக மாறக்கூடிய சாத்தியங்களே அதிகமுள்ளது என நினைக்கின்றேன். இம்முறை பழமைவாதக்கட்சிக்கு தமிழர்கள் நிறையப்பேர்கள் வாக்களிக்கும் சாத்தியம் உண்டெனினும், பழமைவாதத்தை பேணும் வெள்ளையினத்தவர் ஒரு நிறமுள்ள (coloured person) முகத்திற்கு வாக்களிப்பார்களா என்ற சுவாரசியான கேள்வியும் இருக்கின்றது.

பழமைவாதக்கட்சியினருக்குத்தான் குழப்பமே தவிர, என்டிபியினருக்குக் குழப்பம் இருக்கப்போவதில்லை. எனெனில் என்டிபியினருக்கு வாக்களிக்கும் அநேகருக்கு அடுத்த தெரிவாக இருப்பது லிபரல் கட்சியோ கிறீன் கட்சியோ தவிர ஒருபோதும் பழமைவாதக் கட்சியாக இருக்கப்போவதில்லை. எனவே பழமைவாதக்கட்சியின் சார்பில் போட்டிடும் கவன் பரஞ்சோதி தொடர்ந்து பழமைவாதக்கட்சியினருக்கு வாக்களிப்பவரிடமும், தமிழர்களிடமுமே தனது வெற்றி வாய்ப்புக்காய்க் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

4.
தமிழர்கள் கனடிய அரசியல் களத்திற்கு இன்றைய காலங்களில் வருவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் நாம் அவ்வாறு வாக்காளர்களாய் வரும் வேட்பாளர்கள் தமது கல்வி,செல்வாக்கு என்பவற்றால் தேர்தல் களத்திற்கு வருகின்றார்களா அல்லது உண்மையாகவே சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவும், அரசியலில் ஆர்வம் இருப்பதாலும் வருகின்றார்களோ என்று கவனிக்கவேண்டும். நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன். மேலும் தொடக்கத்தில் கிடைக்கும் தோல்விகளை எண்ணிச் சோர்வடையாது, தொடர்ந்து இவர்கள் ஆர்வத்துடன் அரசியலில் இருப்பார்களாயின்  கனேடிய அரசியல் ஒரு இடம் இவர்களுக்குக் கிடைக்கப்போவதை எவராலும் தடுக்க முடியாது.

இறுதியாக ஏப்ரல் 22 நடந்த தேர்தல் கணிப்பின்படி, பழமைவாதக் கட்சி - 37.8%, லிபரல் கட்சி - 26.1% என்டிபி - 23.7%, ப்ளொக் குயூபெக்குவா - 7.4% மற்றும் கிறீன் கட்சி - 3.5% வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கின்றன.

என்டிபியினரின் செல்வாக்கு அண்மைக்காலமாய் அதிகரித்தாலும், அது லிபரல் கட்சியினரும், ப்ளொக் குயூபெக்குவாவினதும் வாக்குகளைப் பிளவு செய்தே பெறுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இன்னமும் பழமைவாதக்கட்சி வலுவான 10% ற்கு அதிகமான முன்னணியில் இருப்பதை கவனித்தாகவேண்டும். இந்த 10% இடைவெளி வலதுசாரிகளுக்கு ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க வழிகொடுக்குமா என்பதைக் கண்டறிய நாம் மே 02 வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது.

 ராதிகா சிற்சபேசனின் வேட்பாளர் அறிமுகம்:




(நன்றி: CBC.Ca -கருத்துக்கணிப்புக்களுக்கும், கடந்த தேர்தல் வாக்குகளின் தரவுகளுக்கும்...)

0 comments: