1.
நாம் எத்தனையோ இடங்களுக்கு நம் வாழ்வில் பயணித்திருப்போம். அவ்வவ்விடங்களின் இயற்கையினதோ, கட்டிடக்கலையினதோ அழகைக் கண்டு மனஞ்சிலிர்த்து இரசித்துமிருப்போம். ஆனால் எப்போதாவது நாம் நின்று இரசிக்கும் இடத்தின் நிலவியலும் வாழ்வியலும் எவ்வாறு சில தசாப்தங்களுக்கோ, நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்ததுண்டா? அவ்வாறு பிரபல்யம் வாய்ந்த ஒரு தேவாலயத்தின் வரலாற்றையும், அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களையும் விரிவாகப் பேசுகின்ற ஒரு நாவல்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் 'துயில்'.
இத்தேவாலயம் பிற்காலத்தில் (அல்லது நிகழ்காலத்தில்) நோய்மையுற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் ஓரிடமாய்த் திகழ்வதால் நோய்மை பற்றியும் இந்நாவலில் பேசப்படுகின்றது. ஆக ஒரு தேவாலயத்தின் வரலாற்றை மட்டுமின்றி நோய்மையுற்றவர்களினதும், நோய் தீர்ப்பவர்களினதும் உளவியலையும் பேசுவதால் தமிழில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு நாவலாகிவிடுகின்றது 'துயில்'. தொக்காடு என்ற தேவாலயமே இந்நாவலில் வரும் அனைத்துப் பாத்திரங்களையும் இணைக்கும் மையச் சரடாக இருக்கிறது. தொக்காடு தேவாலயத்தின் திருவிழாவிற்குச் செல்வதற்கு தயாராகும் மாந்தர்களோடு தொடங்கும் நாவல், இறுதியில் தொக்காடு தேவாலயத்தின் தேர்த்திருவிழாவோடு நிறைவுபெறுகிறது. இந்த இடைவெளியில் ஐநூறு பக்கங்களுக்கும் மேலாய் நீளும் நாவலில் பல்வேறு திசைகளில், பல்வேறு மாந்தர்களினூடாக கதைகள் நகர்கின்றன மட்டுமின்றி இருவேறு நூற்றாண்டுகளுக்கும் அத்தியாயங்கள் மாறி மாறி அலையுறும்போது வாசிப்பு இன்னும் சுவாரசியமாகின்றது.
தொக்காடு தேவாலத் திருவிழாவில் கடற்கன்னி ஷோ நடத்துவதற்காய் தன் மனைவி சின்னராணி மற்றும் மகள் செல்வியோடு புகைவண்டிக்காய் காத்திருக்கின்ற அழகரோடு கதை ஆரம்பிக்கின்றது. தொலைவிடங்களிலிருந்து தொக்காடு போகின்ற அனைவரையும் இணைக்கின்றதாய் இந்த ரெயில் பயணம் இருக்கின்றது. அந்த ரெயில் முழுதும் அழகர் குடும்பத்தோடு பல்வேறு பிணிகளால் பீடிக்கப்பட்டு சமூகத்தால் விலத்தப்பட்ட பலர் பயணிக்கின்றனர். அழகருக்கு எப்படி தான் கடல்கன்னி ஷோ திருவிழாவில் நடத்தி நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற கனவு இருக்கின்றதோ அதேபோன்றே இந்நோயாளிகளும் இத்தேவாலயத்திற்குப் போவதென்பது தம் பிணியை ஏதோவொரு வகையில் தீர்க்கும் அல்லது குறைக்கும் என்கின்ற நம்பிக்கையைத் தம் வசம் வைத்திருப்பவர்களாய் இருக்கின்றார்கள். நீளும் இந்த ரெயில் பயணத்தில் பிறகு தேவாலயத்திற்குக் காணிக்கை கொடுப்பவர்களும் ஏறிக்கொள்கின்றார்கள். கூடவே வெயிலும்/வெம்மையும் ஒரு பாத்திரமாய் எல்லா நிலைகளிலும் வந்து கொண்டிருக்கின்றது. எஸ்.ராமகிருஷ்ணனின் அநேக படைப்புக்களில் வெயில் ஒரு முக்கிய இடத்தை எடுத்திருப்பதை அவரது நாவல்களை வாசிக்கும் நாமனைவரும் அறிவோம். வெயிலை இந்தளவு விரிவாகவும் உக்கிரமாகவும் எஸ்.ராவைப் போல வேறெந்தப் படைப்பாளியும் தமிழில் எழுதியிருக்கமாட்டாரெனவே நம்புகின்றேன். நாவலின் பாத்திரங்களினூடாக வெயில் விபரிக்கப்படும்போது வாசிக்கும் நம் விழிகளிலும் விரல்களிலும் வெம்மை ஏறுவது போன்ற உணர்வைத் தவிர்க்கவும் முடிவதில்லை.
அழகரின் மகள் செல்வி இரயில் பெட்டியெங்கும் காற்றைப்போல சுழித்துச் சுழித்து ஓடிக்கொண்டிருக்கின்றாள். நோயாளிகள்/நோயற்றவர்கள் என்ற பாகுபாடில்லாது எல்லா மனிதர்களோடும் ஒட்டிக்கொள்ளவும் அவள் செய்கின்றாள். அவ்வாறான ஒரு பொழுதில் ஒரு தொழுநோயாளியால் செல்விக்கு கதையொன்று சொல்லப்படுகின்றது. தொக்காடு தேவாலயத்திற்கு அருகில் மரங்களின் திருவிழா வருடந்தோறும் நடைபெறும் எனவும், அத்திருவிழாவில் எல்லா இடங்களிலிருந்தும் மரங்கள் சென்று அங்கே ஒன்று கூடுமெனவும், தான் அந்த திருவிழாவை தன் சிறுவயதில் கண்டிருக்கின்றேன் எனவும் அந்தத் தொழுநோயாளி செல்விக்குக் கதை கூறுகின்றார். செல்வி இந்தக்கதையை எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள நாம் துயிலில் இறுதி அத்தியாயங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
நீளும் இந்த ரெயில் பயணத்தோடு அழகரின் சிறுவயதுக் கதையும் கூறப்படுகின்றது. அழகர் தன் தாயை சிறுவயதிலேயே இழந்துவிடுகின்றார். அவரின் தந்தையார் ஒரு தியேட்டரில் காவலாளியாக வேலை செய்கின்றவராக இருக்கின்றார். அழகரின் வீட்டில் சமையல் ஒருபோதும் நிகழ்வதில்லை; அருகிலுள்ள ஒரு சாப்பாட்டுக் கடையிலேயே மூன்று நேரமும் அழகர் சாப்பிட தந்தை ஏற்பாடு செய்திருக்கின்றார். குடிகாரராகவும் இருக்கும் அழகரின் தகப்பன் தியேட்டரில் இரவுக்காட்சிகள் முடிந்தவுடன் அதிகவேளையில் அங்கேயே இரவில் உறங்கிவிடுபவராகவும் இருக்கின்றார். தனியே வீட்டில் உறங்கும் அழகருக்கு இரவு அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. ஒருநாள் இரவு அழகர் தந்தை தங்கும் தியேட்டருக்கு இரவில் போகின்றார். அங்கேயே உறங்கிவிடும் அழகருக்கு, அவ்விரவில் தன் தகப்பனாருக்கும் சாப்பாட்டுக்கடைக்காரரின் மனைவிக்கும் இருக்கும் இரகசிய உறவு தெரிந்துவிடுகின்றது. தகப்பனும் அப்பெண்மணியும் சல்லாபிக்கும் காட்சியையும் அழகர் கண்டுவிடுகின்றார். அப்பெண்மணி அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும், தகப்பன் அழகர் தம்முறவைக் கண்டதற்காய் அடித்து உதைக்கின்றார். அதன் நிமித்தம் கோபம் கொள்ளும் அழகர் சாப்பாட்டுக்கடைக்காரரின் வீட்டுக்குக் கல்லெறிகின்றார். இனியும் இங்கிருந்தால் தகப்பன் தன்னைக் கொல்லாமல் விடமாட்டார் என அஞ்சும் அழகர் ஊரைவிட்டு ஓடுகின்றார். அன்று தொடங்கும் அழகரின் ஓட்டம் நாவல் முடியும்வரையில் ஓரிடத்தில் தங்கமுடியாத வாழ்வின் ஓட்டமாய்ப் படிமமாக்கப்படுகின்றது.
இவ்வாறாக ஊரை விட்டோடும் அழகர் இன்னொரு நகரத்திலுள்ள சாப்பாட்டுக் கடையில் வேலை செய்யத் தொடங்குகின்றார். அந்தச் சாப்பாட்டுக்கடையும் தன் வீழ்ச்சியைச் சந்திக்கும்பொழுதில் ஜக்கி என்னும் பெண்மணியைச் சந்திக்கின்றார். அப்போது அழகருக்கு பதினாறு வயது. தனக்கு உதவி செய்ய தன்னோடு கூட வந்துவிடுகின்றாயா எனக் கேட்கும் ஜக்கியோடு அழகர் போய்விடுகின்றார்.
ஜக்கி, தனது தங்கை டோலி மற்றும் பல பெண்களையும் இணைத்து பாலியல் தொழில் செய்கின்றார். அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்கின்றவராக இருக்கும் அழகருக்கு முதன்முதலான பாலியல் உறவும் அங்கிருக்கும் பெண்களில் ஒருவரோடு நிகழ்கிறது. வாடிக்கையாளரின் விருப்பத் தேர்வாக இருக்கும் ஜக்கியின் தங்கை டோலி ஒருநாள் காணாமற்போக ஜக்கி மனம் உடைந்து போகின்றார். இறுதியில் தான் இனித் தொழில் செய்யப்போவதில்லையென தன்னிடம் இருக்கும் பெண்களுக்குப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து அவர்களை அனுப்பிவிடுகின்றார். தன் பூர்வீக ஊர் போகும் ஜக்கியோடும் தானும் வரப்போகின்றதாய் கூறும் அழகரை 'என்னோடு வந்தால் உன் வாழ்வு சீரழிந்துவிடும் என்னைவிட்டுப் போய்விடு' என ஜக்கி அழகருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைக்கின்றார். அழகர், தான் முதன் முதலில் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்ணோடு சேர்ந்து ஊரூராய்ச்சென்று நாககன்னி ஷோ நடத்துகின்றார். ஒருநாள் அந்தப்பெண்ணும் அழகரைக் கைவிட்டு விட்டு வேறு யாரோ ஒருவரோடு ஓடிவிடுகின்றார். இறுதியில் தான் செய்யும் வேலையை மாற்றிக் கூறி சின்னராணியைத் திருமணஞ் செய்கின்றார். திருமணத்தின்பின்னே சின்னராணிக்கு அழகரின் உண்மை முகம் விளங்குகின்றது. வேறு வழியில்லாத காரணத்தால் அழகரின் வற்புறுத்தலில் தனது வாழ்வை நொந்தபடி கடற்கன்னியாக வேடம் போட்டு ஊரூராய் சின்னராணி அழகரோடு செல்லத் தொடங்குகின்றார்.
இன்னொரு கிளைக்கதையாக ஜக்கி, டோலியின் சிறுவயதுக் கதைகள் கூறப்படுகின்றன. ஜக்கி/டோலியின் தந்தை ஒரு தமிழராகவும், தாய் ஒரு மலையாளியாகவும் இருக்கின்றார்கள். தந்தையின் மீது பெருவிருப்புள்ள ஜக்கியால் தந்தை நோயுற்று மரணமுறுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வறுமையாலும், உரிய உதவியுமில்லாததால் ஜக்கியும் டோலியும் பாலியல் தொழில் செய்யத் தள்ளப்படுகின்றார்கள் என்பதாய் அவர்களின் கதை நீளும்.
2.
இவ்வாறு அழகர்,சின்னராணி, செல்வி, ஜக்கி, டோலி என 1980களில் நிகழும் பல கதைகள் சங்கிலி இணைப்புக்களாய் நீளும்போது, இவற்றுக்குச் சமாந்தரமாய் 1870களில் நிகழும் ஏலன் பவர் என்கின்ற இயேசுவிற்கு தன்னை அர்ப்பணித்த மருத்தவரின் கதையும் கூறப்படுகின்றது. ஏலன் பவர் அமெரிக்காவில் மருத்துவம் படித்தவர். அங்கேதான் அவர் முதன்முதலாக மருத்துவம் படிக்க வருகின்ற இந்தியப் பெண்ணைச் சந்திக்கின்றார். சேவை செய்வதில் மிகுந்த விருப்புள்ள ஏலன் பவர் உலகின் பல்வேறு பகுதிகளில் மருத்துவராகப் பணியாற்றி, இறுதியில் தொக்காட்டிற்கு வருகின்றார்.
வெயில் எரிக்கும் தொக்காட்டில் எவருமே, (ஆங்கிலேய) மருத்துவம் அறிந்த ஏலன் பவரைத் தேடி வரவில்லை. ஏலன் பவரும் அவருக்கு உதவியாய் இருக்கும் சீபாளி என்கின்ற சிறுமியும் நோயாளர்களுக்காய்ப் பல மாதங்களாய் காத்திருக்கின்றார்கள். ஏலன் பவருக்கு மருத்துவம் செய்ய இடத்தை ஒழுங்கு செய்யும் பாதருக்கும் ஏலன் பவர் மீது ஒருவகையான வெறுப்பே இருக்கின்றது. தமக்கான நோயையும் தம் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டிருக்கும் தொக்காட்டு மக்களுக்கு நோயிலிருந்து விடுதலை என்பது குறித்து அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள். தன்னிடம் மருத்துவம் பார்க்க வருவதற்கு மக்களை ஈர்க்கவேண்டுமென்றால் முதலில் அவர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்கிற புரிதலை ஏலன்பவர் கண்டடைகின்றார். ஆனால், தேவாலயத்திற்கு அருகிலிருக்கும் மருத்துவனைக்கு வந்தால் பாதரைப் போல ஏலன் பவரும் தங்களை மதம் மாற்றிவிடுவார் என மக்கள் அஞ்சுகின்றனர். அந்த அச்சத்தைப் போக்கி, தான் மதம் மாற்றமாட்டேன் நீங்கள் உங்கள் மதநம்பிக்கையுடன் இருந்தபடியே மருத்துவம் பார்க்க வரலாம் என்கின்றார் ஏலன் பவர். காலப்போக்கில் அம்மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும், அவர்களில் ஒருவராகவும் மாறிவிடும் ஏலன்பவர், எது நடந்தாலும் தன் இறப்புவரை தொக்காடு மக்களோடு இருக்கப் போவதாய் நினைத்துக்கொள்கின்றார்.
தமது நோய் குறித்து அறியாமையால், நீண்டகாலமாய் இருந்த மக்களின் சில நோய்களைத் தீர்த்து வைக்கின்றார் ஏலன்பவர். ஆனால் இதைத் தேவாலயத்தின் பாதர், இயேசுவின் அருளாலேயே இந்த அற்புதங்கள் நிகழ்கின்றன என மதம் மாற்றும் தன் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றார். இந்நோய்கள் அறிவியலால்தான் தீர்ந்திருக்கின்றன மதத்தினால் அல்ல என்ற குழப்பம் ஏலன் பவருக்கு வந்தாலும் அவர் இவ்விடயத்தை அதன்போக்கிலேயே விட்டுவிடுகின்றார்.
(இன்னும் வரும்)
ஆனி/2011
நன்றி: தீராநதி (செப்ரெம்பர்/2011)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்பு டிசே தமிழன்
9/06/2011 02:28:00 AMதுயில் பற்றி மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி
மிக்க அன்புடன்
எஸ்ரா
‘’விளிம்பு மனிதர்களை விமர்சிப்பது சுலபம் விளம்பில் நின்று பார்த்தால் தான் தெரியும்’’ என்ற விக்ரமாதித்தனின் கவிதை வரி ஞாபகம் வந்தது. துயில் நாவல் குறித்த உங்கள் பதிவு மிகவும் அருமை. நான் துயில் நாவல் வாசித்திருக்கிறேன். தங்கள் பதிவை வாசித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஞாபகமூட்டிய பதிவு. இந்த ஆண்டின் சிறந்த நாவலாக துயிலை தைரியமாக கூறலாம். அற்புதமான பகிர்வு. நன்றி.
9/07/2011 11:55:00 AMஅன்பின் ராமகிருஷ்ணன்,
9/08/2011 08:43:00 AMஉங்கள் பின்னூட்டத்திற்கும், இப்பதிவை உங்கள் தளத்தில் மீளப்பதிந்தமைக்கும் நன்றி.
அன்புடன், டிசே
நன்றி சித்திரவீதிக்காரன். எத்தனையோ படைப்புக்களை வாசிக்கின்றோம்; ஒரு சில நாவல்கள் நம் மனதிற்கு மிக நெருக்கமாகி விடுகின்றனத்தான் அல்லவா?
9/08/2011 10:54:00 PMPost a Comment