கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 78

Wednesday, March 12, 2025

 

மகாலத்தில் எழுதும் முன்னோடி படைப்பாளிகளில் அனைத்துப் படைப்புக்களையும் வாசித்திருக்கின்றேன் என்றால் ரமேஷ் பிரேதன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரின் பெயர்களைச் சொல்வேன். எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், துயில் போன்ற நாவல்களுக்குப் பிறகு வந்தவை அவரின் தொடக்க கால நாவல்களுக்கு இணை வைக்கக்கூடியவை அல்ல என்பது வாசிப்பு. ரமேஷ்-பிரேம் இரட்டையர்களாக இருந்து எழுதும்போது வாசிக்கவும் எழுதவும் வந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அவர்கள் எழுத்துக்களில் எல்லோரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது. ஆனால் அந்தத் திகைப்பே வசீகரமாக அவர்களைப் பின் தொடரச் செய்தது. இப்போது பிரித்து வந்து விட்ட ரமேஷ் பிரேதனின் ஒவ்வொரு புதிய படைப்புக்களையும் தவறவிடாது வாசித்து வருகின்றேன். அதை ஒரு மாணவர் தன் 'முன்னோடி' ஆசிரியருக்குக் கொடுக்கும் மரியாதையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரேதன் போன்றவர்களின் எழுத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட, ஒரு குறுகிய வட்டத்தில் ஆட்டோ பயோகிரபி பாணியில் எழுதப்படும் சாரு நிவேதிதாவின் அனைத்து நாவல்களையும் இவற்றுக்கு சமாந்திரமாக வாசித்துக் கொண்டிருக்கின்றேன் என்பதும் ஆச்சரியமானது. நான் எழுத/வாசிக்க வந்த என் பல்கலைக்கழகக் காலங்களில் நண்பர் மைக்கேலினால் எஸ்.ராவின் 'உபபாண்டவமும்', சாருவின் 'ஸீரோ டிகிரி'யும் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதிருந்து இரண்டு பேரினது நாவல்களையும் தவறவிடாது வாசித்துக் கொண்டே வருகின்றேன்.

ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால், அவ்வாறு தொடக்க காலத்தில் சுவாரசியமாக வாசித்த பல படைப்பாளிகள் பின்னாட்களில் என் வாசிப்புப் பட்டியலில் இல்லாமற் போயிருக்கின்றனர். சற்று நகைச்சுவை போன்று இருந்தாலும், எஸ்.ரா, சாரு போன்றவர்களில் தொடக்ககால சிறந்த படைப்புக்களை வாசித்ததால், பின்னர் அவர்களின் சரிந்து வீழ்ந்த எழுத்துக்களை வாசிக்கும்போது அதையும் ஒரு கற்றலாக எடுத்துக் கொள்ளலாம் என நண்பர்களிடம் சொல்வதுண்டு. இவர்களை அவ்வளவு விரும்பி தொடக்க காலத்தில் வாசித்ததால், எஸ்.ரா 'பதினை'யும், சாரு 'தேகத்தை' எழுதியபோதும், இவ்வளவு நன்றாக எழுதியவர்களே இப்படி எழுதும்போது நாம் நமக்கான நாவல்களைப் பயமின்றி எழுதலாம் என்று நம்பிக்கையையும் அவர்களே தந்திருக்கின்றார்கள். ஆக ஒரு படைப்பாளியின் சரிவிலிருந்தும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தமக்கான inspiration எடுத்துக் கொள்ளவும் முடியும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். 

 

மேலும் இன்றைய கால புதிய படைப்பாளிகள்/வாசகர்கள், நீண்டகாலமாக எழுதும் ஒரு முன்னோடி எழுத்தாளரின் வீழ்ச்சியுற்ற படைப்புக்களை மட்டும் வாசித்து எளிதாக/எள்ளலாக அந்தப் படைப்பாளிகளைக் கடந்து செல்வதையும் அவதானித்திருக்கின்றேன். ஒருவரை நிராகரித்துச் செல்வதற்கு நமக்கான அனைத்துச் சுதந்திரமும் இருக்கிறது. ஆனால் நாம் ஒரு படைப்பாளியை முழுதாக வாசித்து நிராகரிக்கின்றோமா, அல்லது அவரின் ஓரிரு படைப்புக்களை முன்வைத்து மட்டும் அந்தப் படைப்பாளியை நிராகரிக்கின்றோமா என்று கேட்பது நமக்கு மிக அவசியமென நினைக்கின்றேன்.

சாருவின் அனைத்து நாவல்களையும் ('நான் தான் ஔரங்ஸேப்' நீங்கலாக) வாசித்திருக்கின்றேன். 'ஔரங்ஸேப்' இணையத்தில் தொடராக வந்தபோது கால்வாசிப்பகுதியை வாசித்திருக்கின்றேன். ஆனால் நாவலாக வந்தபின் இன்னும் வாசிக்கவில்லை. கடந்த வருட இதே குளிர்காலத்தில் அவரது 'பெட்டீயோ'வை வாசித்திருக்கின்றேன். இலங்கையைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டதால் அதை வாசிக்கும் பெரும் ஆர்வமிருந்தது. அதைப் பற்றிய என் வாசிப்பு எவ்வாறானதென்று முகநூலில் என்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

இந்தக் குளிர்காலத்தில் சாருவின் 'அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு'வை வாசித்து முடித்தேன். இந்த நாவலில் புதிதாக ஒன்றுமில்லை. சாரு ஏற்கனவே பேசியவை/எழுதவைதான் இதிலும் இருக்கின்றது. பல அத்தியாயங்கள் ஏற்கனவே அவரின் இணையத்தளத்தில் 'போகின்றபோக்கில் எழுதப்பட்டவையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டவையும் கூட. இந்த நாவலில் சுருக்கத்தை இங்கே எழுதி நாமெல்லாம் கஷ்டப்படக் கூட தேவையில்லை. சாரு சில நாட்களுக்கு முன் எழுதிய இந்தப் பதிவின் 'பற்றிக்கொள்ள ஒரு தோள்' ( https://charuonline.com/blog/?p=15418) விரிவான வடிவந்தான் 'அன்பு' நாவல்.

இப்படி சாரு ஒரு குறுகிய வட்டத்தில் நின்று எழுதினாலும், அவரின் மொழி அலுப்பில்லாது வாசிக்குமளவுக்குச் சுவாரசியமானது. ஒன்றையே திருப்பத் திருப்பச் சொல்கின்றார் என்று வாசிக்கும் மனதுக்குத் தெரிந்தாலும் சிரித்துக்கொண்டு வாசிக்கவும் முடிகிறது. இந்தவகையான ஆட்டோ நரேட்டிவ் (auto narrative) எழுத்து வகைமைக்குத் தமிழில் பலர் முன்னுதாரணமாக இருந்தாலும் நம் பெரும்பாலானோருக்குத் தெரிந்தவர் என்பதற்காக நகுலனை இங்கே எடுத்துக் கொள்கிறேன் ஏன் நகுலனை இப்போது வாசிக்கும்போதும் அவர் காலத்திலிருந்து நழுவிப்போகாமல் இருக்கின்றார் என்றால், நகுலன் இந்த எழுத்து வகைமையை அகவயமாக்கிக் (subjective) கொண்டார். சாருவின் எழுத்தோ இதைப் புறவயமாக்கிக் (objective) கொண்டது. நகுலன் இந்த வாழ்வு ஏன் இப்படி இருக்கின்றது, இந்த மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது மட்டுமில்லாது, தான் ஏன் இப்படி இருக்கின்றேன் என்று தன்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பி அகவயமாக எழுதிச் செல்கிறார். சாருவோ வாழ்வின் அனைத்தும் தன் மீது புறவயமான காரணிகளால் தனக்குள் திணிக்கப்படுகின்றதென சொல்கின்றவராக, ஒரு கட்டத்தில் ஒரேமாதிரிப் பேசிப்பேசி புலம்புகின்றவராகவும் ஆகிவிடுகின்றார்.

ந்த 'அன்பு' நாவலில் கதைசொல்லியின் மனைவியாக வருகின்ற வைதேகியை இனியில்லை என்றளவுக்கு சாரு திட்டுகின்றார். சும்மா திட்டெல்லாம் இல்லை, எமக்கு எதிரியாக இருப்பவர்களைக் கூட இப்படித் திட்டுவோமா என்றளவுக்கு கெட்டவார்த்தைகளால் மனைவி வைதேகியை, பெருமாள் 'அன்பு'வில் வைகின்றார். குடும்பவாழ்க்கை சிறை/சலிப்பானது என்பது நம்மெல்லோருக்கும் -அது ஆண்/பெண் என்ற பாகுபாடில்லாது- அனைவருக்குந் தெரியும். அதையே திருப்ப திருப்ப ஞாபகப்படுத்தியபடி குடும்பமென்கின்ற அமைப்பில் இருக்கும் அனைத்து 'வசதி'களையும் பாவித்தபடி இருக்கும் ஒருவர் அதைத் திட்டினால் எமக்குச் சிரிப்பு வராதா என்ன?

இதேயே சாரு அகவயமாக 'அன்பு'வில் வரும் பெருமாள் தன்னை நோக்கியே கேள்வி கேட்கின்ற ஒரு பாத்திரமாக அமைத்திருந்திருந்தால், நாவல் வேறுவிதமான வடிவத்தை/தேடலை நோக்கி நகர்ந்திருக்கும். இவ்வாறு குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டு ஓர் ஆண் பெண்ணையோ, ஒரு பெண் ஆணையோ திட்டிச் சலித்துக்கொள்ளுவதைத்தான் இவ்வாழ்வில் நாமெல்லோரும் செய்து கொண்டிருக்கின்றோம். அதை அப்படியே ஞாபகப்படுத்த நமக்கு இன்னொரு நாவல் தேவையா என்ன? எனவே 'பெட்டீயோ' போல சாருவின் இந்த 'அன்பு' நாவலும் வாசிப்பில் ஏமாற்றமளிப்பதாக ஆகிவிடுகின்றது.

சாரு இந்த நாவலிலும் (சில கட்டுரைகளிலும்), 'நான் என் மனைவியை அடிப்பவனா' என்று யாரோ ஒருவர் கேட்டிருக்கின்றார், எவ்வளவு அபத்தமான கேள்வியென்று அதற்காய் வெகுண்டெல்லாம் எழுந்திருக்கின்றார். முதலில் அடிப்பது போன்ற பெளதீகமான வன்முறை மட்டுந்தான் குடும்ப வன்முறைக்குள் வருமென்பதில்லை. ஒருவரை வார்த்தைகளால் கூட வன்முறை (verbal abuse) செய்யமுடியும்.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்தபடி 'அன்பு' என்று சொல்லியபடி வைதேகி வார்த்தைகளால் தன் மீது வன்முறை செய்கின்றார் என்று நாவலில் புலம்புகின்ற பெருமாள், இந்தக் குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்து வெளியேறும் எந்த ஒரு சிறுகாலடியைக் கூட எடுத்து வைக்காமல் இருக்கின்றாரே, அது ஏன் என்று யோசித்தால் இந்த நாவல் கட்டியமைக்கப்பட்டிருக்கும் அபத்தம், நமக்கு இன்னும் நன்கு புரியக்கூடும்.

***************

 

( Feb 21, 2025)

0 comments: