கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 79

Thursday, March 13, 2025

 

ண்மையில் எழுதிய 'அறமெனப்படுவது யாதெனில்' என்ற கட்டுரைக்கு நண்பரொருவர் தனிப்பட்டு 'I have a mixed different perspective on the topic you've written, but it's good to read your post to have an idea of other side' என்று சொல்ல, அது குறித்து நம்மிடையே ஓர் சிறு உரையாடல் போயிருந்தது. இறுதியாக நான் சொன்னது, 'இது ஒரு சிக்கலான உரையாடல். எவரும் இதுதான் சரியான பக்கம் என்று அவ்வளவு எளிதாகத் தீர்ப்பளிக்க முடியாது. இவ்வாறான விடயங்களில் எவரும் பாதிக்கப்படாது எந்தளவுக்கு பாதுகாப்பான வெளிகளை உருவாக்குவதென்பதற்காகவே நாம் தொடர்ச்சியாக உரையாடல்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருந்தேன். மேலும் இவ்வாறான உரையாடல்களில் வர்க்கம், பாலினம் போன்ற பல்வேறு விடயங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தக்கூடியவை. அவற்றைத் தவிர்த்தும் உரையாட முடியாது.

தில்லையின் 'தாயைத்தின்னி'யில், தாயைத்தின்னி தமிழ் பேசும் இன்னொரு சமூகத்து ஆண் மீது காதல் கொள்கின்றார். அவர் ஒரு கவிஞர். தாயைத்தின்னி அவள் சம்பந்தப்பட்டிருக்கும் படமொன்றின் 'டப்பிங்' கொடுப்பதற்காக கொழும்புக்கு இந்தக் கவிஞரோடு போகின்றாள். ஒரு விடுதியில் அவள் தங்கி நிற்கும்போது நடப்பது ஒரு பாலியல் வன்புணர்வு. பேசுவதற்காகக் காத்திருந்த தாயைத்தின்னி என்ன நடக்கின்றது என்று உணரமுன்னரே அந்தக் கவிஞரால் நிகழ்த்தப்படுவது அப்பட்டமான ஒரு பாலியல் வன்புணர்வு.

இதை நாம் 'இலக்கியத்தின் பேரால்' புனிதப்படுத்த முடியுமா? இந்த நாவல் auto-fiction வகையில் எழுதப்பட்டிருப்பதால், இந்தக் கவிஞர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராகக் கூட இருக்க முடியும். அப்படியெனில் இவர்களைப் போன்றவர்களை வாசகர்களாகிய நாம் எவ்வாறு அணுகுவது? ஆகக்குறைந்தது இப்படிச் செய்துவிட்டோமோ என்று அந்தக் கவிஞர் தன் குற்றவுணர்வை அடைந்திருப்பாரா? இது இலக்கியச் சூழலில் மட்டுமில்லை; அனைத்து இடங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனதான். ஆனால் நமக்கு இலக்கியச் சூழலே நெருக்கமாக இருப்பதால் நாம் இது குறித்து தொடர்ந்து பேச வேண்டியிருக்கின்றது.

நான் 'அறமெனப்படுவது யாதெனில்' கட்டுரையில், அருந்ததி ரோயும், பார்வதியும் செய்யும் உரையாடல்களை கவனப்படுத்தியிருப்பேன். பார்வதி, ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்படங்களை, அவர் மீது வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீறி எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டிருப்பார். அருந்ததி ரோய், அதற்கான பதிலில், அலிஸ் மன்றோ கூட தனது பிள்ளை, அவரது இரண்டாவது கணவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டபோது அலிஸ் மன்றோ கண்டுகொள்ளாது விட்ட விடயம், இப்போது பொதுவெளிக்கு வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அப்படியெனில் அலிஸ் மன்றோவின் எழுத்துக்களை எப்படி இப்போது வாசித்துப் பார்ப்பதென்ற கேள்விகளும் இருக்கின்றன என்பார் ரோய்.

அதேசமயம், கடந்தகாலங்களில் ஒரு கலைஞர் செய்த இவ்வாறான விடயங்களுக்காக அவர்களை விலத்தி வைக்கின்றமாதிரியோ அல்லது ஆகக்குறைந்தது விமர்சனங்களோடு ஏற்றுக்கொள்வது மாதிரியோ, மேற்குலகில் இருப்பது போன்ற சூழல் நமது தமிழ்ச்சூழலில் இருப்பதில்லை. பெரும்பாலும் நம் சூழலில் அந்தப் படைப்பாளிகள் தவறுகளே செய்யாதவர்களாக புனிதப்படுத்தப்படுகின்றார்கள். மேலும் இதிலிருக்கும் முரண்நகை என்னவென்றால் இந்த உண்மைகளைச் சொல்ல வரும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகள் போல ஆக்கும் சாமர்த்தியமும் நம்மில் பலருக்குக் கைவந்திருக்கின்றது.

ந்த ஆண்டுக்கான ஓஸ்காரில் பதினொரு பிரிவுகளுக்காக Emile Perez திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இது ஆங்கிலமொழிப் படமுமல்ல. ஒரு வேற்றுமொழிப்படம் இத்தனை பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஒரு சாதனையெனக் கூடச் சொல்லலாம். ஆனால் படத்தில் நடித்த நடிகையின் கடந்தகாலத் தவறுகளாலும், மெக்ஸிக்கோக்காரர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாக எழுந்த எதிர்ப்பாலும், இரண்டே இரண்டு பிரிவுகளில் மட்டும் நேற்று ஒஸ்கார் விருதுகளை இப்படம் வென்றிருக்கின்றது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் பிரிவுகளில் இப்படம் வெல்லவில்லை என்பதோடு, 'வேற்றுமொழி'ப் படப் பிரிவில் கூட இப்படம் சிறந்தபடம் என்ற விருதைப் பெறமுடியாத பரிதாப நிலையை வந்தடைந்திருந்தது. ஒருவகையில் கடந்தகால 'பசித்த பேய்கள்' உங்களை வந்து நிகழ்காலத்தில் வேட்டையாடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம்.

நாம் ஆண்கள். நாம் எவ்வாறு நம்மை நல்லவர்களாக்க முயற்சித்தாலும் நமக்கிருக்கும் 'ஏஜென்சிகள்' நம்மையறியாமல் வெளிவந்துவிடும். அது குறித்து நாம் தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டும். தில்லையின் 'தாயைத்தின்னி'யில் சுவிஸில் புலம்பலரசன் என்றொரு இலக்கிய/செயற்பாட்டாளர் வந்து அந்த 'அவளிடம்' நாம் சேர்ந்து வாழ்வோமா எனக் கேட்கின்றார். அவர் 'சேர்ந்து வாழ்வது' எனக் கேட்பது தனது உடலை அடைவதற்கான எளிய வழி என்பது அவளுக்குப் புரிகிறது. நல்லது தோழர் அப்படியே வாழ்வோம். ஆனால் ஒரெயொரு கண்டிஷன். நான் வேலை செய்யாமல் வீட்டில் இருப்பேன். உங்களுக்கு அது சம்மதமா?' என்று அவள் கேட்டதுடன் புலம்பலரசன் ஓடியே விடுகின்றார். ஆக ஆண்களுடைய ஏஜென்சிகள் எவ்வாறெல்லாம் தந்திரமாக பெண் உடல்களை மோகிக்க விரும்புகின்றன என்பதை தில்லை இதில் நுட்பமாகப் பதிவு செய்கின்றார்.

தாயைத்தின்னியை கொழும்பில் வன்புணர்வு செய்தவனுக்கும், சுவிஸில் 'சேர்ந்து வாழலாமா' எனக் கேட்பவனுக்கும் இடையில் இருப்பது மெல்லிய இடைவெளிதான். ஆனால் தாயைத்தின்னி இந்த விடயங்களை எப்படி எதிர்கொள்வது என்று இப்போது கற்றுக்கொண்டுவிட்டதால் சுவிஸில் புலம்பலரசனை எளிதாக எதிர்கொள்கின்றார். இந்தத் 'தெளிதல்'களை பலர் தமது வாழ்க்கைக் காலத்தில் ஏதோ ஒரு காலப்பகுதியில் பெற்றுக்கொள்கின்றனர். அந்தப் புரிதலை அடைவதற்காக அவர்கள் நடக்கவேண்டிய பாதையும், அவர்கள் அனுபவிக்க வேண்டிய வேதனையுந்தான் நீண்டதாக இருக்கின்றது. ஆகவேதான் நாம் இவ்வாறான விடயங்களை தொடர்ந்து பொதுவெளிகளில் வெளிப்படையாக உரையாட வேண்டியிருக்கின்றது.
***********

'அறமெனப்படுவது யாதெனில்' கட்டுரையை வாசிக்க:
https://djthamilan.blogspot.com/2025/03/77.html?m=1

 

(Mar 03, 2025)

0 comments: