நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

கவிதைகளில் நகரும் வரலாறு

Monday, June 11, 2012


'Every poem is an attempt to reconcile history and poetry for the benefit of poetry.’
– Octavio Paz

விதையிற்குத் தமிழில் நீண்ட பராம்பரியம் இருக்கிறது. தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட தொடரோட்டம் அது. கவிதைகளிற்கும் ஈழத்துத் தமிழர்களுக்கும் இடையில் இன்னும் நெருங்கிய உறவிருக்கிறது. போராட்டங்களுக்கான அழைப்புக்களையும், சுவரொட்டி வாசகங்களையும் மட்டுமில்லாது போராட்டங்கள் திசைமாறிப் போகின்ற விமர்சனங்களையும் கவிதைகளே அதிகம் முன்வைத்திருக்கின்றன. நாளாந்த வாழ்வு எந்தக் கணத்திலும் அறுபடலாம் என்கிற பதற்றம் உள்ள சூழ்நிலையில் எளிதாய் வாசிக்கவும், தங்கள் கருத்துக்களைப் பரப்புரை செய்யவும் கவிதை மிகச் சிறந்த ஊடகமாய் ஈழத்தில் இருந்து வந்திருக்கின்றது. இங்கே நான் பரப்புரை எனச் சொல்வது தமிழ்நாட்டில் வானம்பாடிகளின் கவிதை வகைமையை அல்ல. இல்லாத புரட்சியை வலிந்து திணிப்பதற்கு மாறாக ஈழத்துக் கவிதைகளை அதன் சூழ்நிலையே பிரசவித்து, மெருகுபடுத்தி, கண்ணீரும் குருதியுமாய் வாசிப்பவருக்கு பரிமாற்றம் செய்திருக்கின்றன.

போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவளவிற்கு கவனிக்கத்தொரு நீண்ட பெண் கவிஞர்களின் தொடர்ச்சி ஈழத்தில் இருக்கின்றது. இன்னமும் அந்தப் பரம்பரை 'சொல்லாத சேதி'களில் தொடங்கி 'ஒலிக்காத இளவேனில்' ஆகி, 'பெயரிடாத நட்சத்திரங்கள்' எனத் தொடர்ந்து ஓளிர்ந்து கொண்டிருக்கின்றது. அநேக பெண் கவிஞர்கள் -தொகுப்புக்களின் எண்ணிக்கையில் அல்ல, கவிதைகளின் தரத்தில்தான் என- சில தொகுப்புக்களோடு உறங்குநிலைக்குப் போய் விட, ஆண் கவிஞர்களோ நிறையத் தொகுப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விடயம் நல்லதா அல்லதா என்பதைக் கவிதையின் இரசனையாளர்களுக்கு விட்டுவிட்டு அண்மையில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளைப் பார்ப்போம்

சேரனின் இரண்டு தொகுப்புக்கள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. ‘காடாற்று’ சேரனின் ஏழாவது கவிதைத் தொகுப்புஇத்தொகுப்பிலிருக்கும் அநேக கவிதைகள் 2009 மே மாதப் பேரழிவிற்குப் பிறகு எழுதப்பட்டவை என கவிதைகளில் காலம் குறிப்பிடாமலிருப்பினும் கவிதைகளை வைத்துத் துணிந்து கூறலாம். மற்றத் தொகுப்புA Second Sunrise’ என்கின்ற ஆங்கிலத் தொகுப்பு. இதுவரை சேரன் எழுதிய கவிதைகளில் 50 கவிதைகள் தமிழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ‘காடாற்று’ என்பது  ஒருவகையில் நீத்தார் கடன் செய்வது. 1981ல் சேரனின் முதலாவது தொகுப்பானஇரண்டாவது சூரிய உதயம்’ போராட்டத்திற்கான அழைப்பாய் இருந்திருக்கின்றது. இன்று ஈழத்தில் தமிழருக்கான போராட்டம் எங்கெங்கோ எல்லாம் -நாம் எவரும் நினைக்காதபடி- அலைபாய்ந்து காடாற்றில் உள்ள முதற் கவிதையானஊழி’யில் வந்து நிற்கின்றது. ஒருவகையில் இதுவரையான சேரனின் கவிதைத் தொகுப்புக்களை வைத்து, ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு மெல்லிய கோட்டையேனும் வரைந்து பார்க்க முடியும்.

சங்கக் கவிதைகளிலிருந்து எப்படி அன்றைய கால வாழ்வை ஒரளவுக்கு மீட்டுயிர்க்க முடிகிறதோ, அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலங்களாய் நடந்த ஆயுதப்போராட்டத்தை எதிர்காலத்தில் ஒருவர் ஆராய இக்கவிதைகளும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாய் மாறிவிடவும் கூடும்.. 1980களில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதிலிருந்து பல ஆவணக்காப்பகங்கள் போரின் நிமித்தம் கைவிடப்பட்டதன் பின், இன்றுவரை எஞ்சியிருக்கும், எளிதாய்க் காவிக்கொண்டிருக்கக் கூடியதுமான பதிவுகளாய் எஞ்சியிருப்பது கவிதைகள் மட்டுமாய்த்தான் ஈழத்தமிழருக்கு இருக்கின்றன. இந்த வகைக் கவிதைகளே இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து பாலஸ்தீன நிலப்பரப்புக்கள் வரை தோற்றுப் போன புரட்சிகளை மட்டுமின்றி, இன்னமும் முடிந்துவிடாத போராட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

காடாற்று தொகுப்புஊழி-கடல்- திணை மயக்கம்’ என மூன்று பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. 'எங்களுடைய காலத்தில்தான்/ ஊழி நிகழ்ந்தது...' எனத் தொடங்குகின்ற கவிதை  ‘அகாலத்தில் கொலையுண்டோம்/சூழவர நின்றவர்களின் நிராதரவின் மீது’ என மேற்சென்று இறுதியில் 'எல்லோரும் போய்விடோம்/கதை சொல்ல யாரும் இல்லைஇப்போது இருக்கிறது/காயம்பட்ட ஒரு பெரு நிலம்/ அங்கு மேலாய்ப் பறந்து செல்ல/ எந்தப் பறவையாலும் முடியவில்லை' என இறந்தவர்களின் குரலில் சேரனால் கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.

உடல் என்கின்ற கவிதை..
.'கடலோரம் தலை பிளந்து கிடந்த
உடல்.

இறப்பினும் மூட மறுத்த கண்களின்
நேர்கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு.
ஆச்சரியம்.
தவிப்பு.
தந்தளிப்பு.
கொதிப்பு.
ஆற்றாமை.
முடிவற்ற ஒரு பெருங்கனவு.

இந்த உடல் எவரின் உடலமென்று வாசிப்பவருக்குச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.

A Second Sunrise தொகுப்பிலிருக்கும் Colour என்கின்ற கவிதை பற்றி எனக்கிருக்கும் ஒரு விமர்சனத்தையும் இங்கே வைக்க வேண்டியிருக்கின்றது. இது ‘நிறம்; என்கின்ற  பெயரில் ஏற்கனவே ‘மீண்டும் கடலுக்கு’ தொகுப்பில் வந்த கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பே. இக்கவிதையில் வீட்டற்றவன் அல்லது இரந்து காசு கேட்கும் ஒருவன், தெருவில் தனக்கு சில்லறைகளை அளிப்பவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றான். அந்த சமயம் கவிதைசொல்லி சில்லறை எதையும் அவனுக்குப் போடாமற் போகும்போது, அவன்  கெட்டவார்த்தையை துவேசத்துடன் சேர்த்துப் பேசுகிறான் (F*** you, Paki) என்பதாய் கவிதை நீளும்.

பொதுப்புத்தியில் இப்படி வீடற்றவர்களையும் இரந்து காசு கேட்பவர்களைப் பற்றியும் என்னவிதமான அபிப்பிராயங்கள் இருக்கும் என்பதைப் பற்றி விதந்து கூறத்தேவையில்லை. கனேடிய அரசு வழங்கும் நலவாழ்வு சம்பந்தமான உதவித்தொகை இருந்தாற் கூட -ஒருவர் ஒழுங்கான வேலையில்லாதவிடத்தில்- அந்தப் பணத்தை வைத்து மட்டும் உயிர் வாழ்ந்துவிட முடியாது என்பதே இங்கு யதார்த்தம். சாதாரண வீட்டு வாடகையே அரசு கொடுக்கும் நலஉதவியை விட மேலதிகமாய்த்தான் ரொறொண்டோ போன்ற பெருநகரங்களில் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் ஆராய்ந்தறியாமல், பல விசயங்களைத் தெரிந்த என் நண்பர்கள் கூட இந்த வீடற்றவர்களைப் பார்த்து 'ஏன் இவர்கள் எதையாவது ஒரு வேலை செய்து பிழைக்கலாந்தானே' என எளிதாகக் கூறிவிட்டுச் செல்கின்றவர்களாய் இருக்கின்றார்கள்இதே மாதிரியான கருத்தையே Occupy Wall street நீட்சியிலும் கனடாவிலும் முற்றுகைகள் நீண்டபோது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒழுங்காய் ஒரு முழுநேர வேலையில்லாதவர்கள் தான் என்ற கருத்து பலரால் பரப்புரை செய்யப்பட்டதும் நினைவு கூரக்கூடியது..

இன்றைய நெருக்கடியும், போட்டியுமுள்ள உலகில் ஒழுங்கான ஒரு வேலையை எடுப்பது என்பது கூட எவ்வளவு கடினமென்று நம்மில் பலருக்குச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை. ஆக இப்படியான விளிம்புநிலை மனிதர்கள் பற்றி நாம் விமர்சனங்களை வைக்கும்போது மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அதுவும் மானுடவியல்/சமூகவியல் சார்ந்த பேராசிரியராக இருக்கும் சேரனுக்கு இதைப்பற்றிச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை. இவ்வாறு எழுதப்பட்டிருப்பதை யாரேனும் ஒருவர், இது தனிப்பட்ட ஒருவரின் அனுபவம் என்ற ரீதியில் எடுத்துக்கொள்ளக் கூடாதா எனக் கேட்கலாம்; ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதந்தான். ஆனால் சேரன் போன்ற பொதுச்சமூகத்தில் நீண்டகாலம் இயங்குகின்ற ஒருவர் இவ்வாறு எழுதுகின்றார் என்றால் அது சோர்வையே தரக்கூடியது. ஆகவேதான் இது குறித்து கேள்வியெழுப்புதல் அவசியமென நினைக்கிறேன்.. மேலும் எம் சமூகத்தில் சும்மா கெட்டவார்த்தை சொல்லும்போதே ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் பெயரை முன்னே போட்டு (ப**** பு***) எனத் திட்டும்போது, அதற்கெதிராய்க் கொதித்தெழாது, எந்தச் சலனமும் செய்யாது -எருமைத்தோலின் மீது மழைபெய்தது மாதிரி- கடந்துபோவதாகவே நம் 'தமிழ்கூறும் நல்லுலகம்' இருக்கின்றது என்பதையும் இக்கணத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

(இன்னும் வரும்)
நன்றி: 'அம்ருதா'- ஜூன் 2012

1 comments:

இக்பால் செல்வன் said...

அருமையான பதிவு. சேரனின் புதிய நூல்களை இன்னும் படிக்கவில்லை .

கனடாவின் வீடற்றவர்கள் குறித்த கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்..

மீண்டும் வருவேன் நன்றிகள்.

கூகிள் நண்பர்கள் பட்டியை இணைத்தால் நலம்

6/14/2012 09:55:00 PM