‘காடுகளை அவன் இழந்தான்
கடலில் அவன் கலங்கள் மூழ்கிற்று
வானில் அவனது வல்லபம் அழிவுற்றது
வீரர்களை அவன் இழந்தான்
வெளியில் சொல்லாதிருந்தான்
-
என்றுமே மண்ஒட்டா மீசை அவனது.
உள்மனதில் ஊடாடியதைக்
கண்களில் யாராகிலும் கண்டீர்களா
அந்தக் கண்களில்...'
என எழுதுகின்றார்.
அதேபோன்று ‘போர்க்காட்சிகள்’ என்ற கவிதையில்
'எதிரிக்கு நீரில் வந்த கண்டத்திற்கு
வானில் நின்றும் அவன் பழிதீர்த்தான் -
வானவூர்திகள் இலக்கைத் தவறிச் சரியாக
வணக்கத் தலங்களில் சாவை இறக்கின.
அபயமுடன் வந்தோருடன் ஆண்டவரும் மாண்டார்...
மட்பாண்டச் சில்லுகளாய்த் தெருவில்
சிதறிக் கிடந்தீரே கடவுளரே'
இந்தக் கவிதையை மிக நெருக்கமாய் உணர போர்நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எளிதாய் முடியும். புலிகளும் இலங்கை இராணுவமும் போர்க்களத்தில் சமபலத்துடன் நின்று போரிட்ட காலங்களில் புலிகள் ஏதோவொரு பெரும் தாக்குதலை இராணுவம் மீது நடத்தினார்களென்றால் உடனேயே சிங்கள இராணுவத்தின் வான்கலங்கள் தமிழர் பிரதேசங்களில் கண்மூடித்தனமாய் விமானத் தாக்குதல்களை நடத்தும். இவ்வாறான தாக்குதல்களில் அநேகமாய் இறந்துபோவர்களாய் அப்பாவி மக்களே இருப்பார்கள். இந்தக் கவிதையில் இராணுவம் கடலில் ஏற்படும் தம் இழப்புக்களுக்குப் பழிவாங்க மிலேச்சனத்தமாய் வானால் தாக்குதல் நடத்த இறுதியில் வழிபாட்டுத் தலத்தில் தஞ்சமடைந்த மக்களோடு கடவுளும் அநாதரவாய்ப் பிணமாய்க் கிடந்தாரென்ற படிமத்தை றஷ்மி தத்ரூபமாய்க் கொண்டு வருகின்றார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு கவிஞர்களைப் போல அல்லாது இன்னமும் யாழ்ப்பாணத்தில் போரின் எல்லாவற்றையும் மெளனசாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டிருந்த பா.அகிலனின் ‘சரமகவி’களும் அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இது அவரது இரண்டாவது தொகுப்பு. முதலாவது தொகுப்பான ‘பதுங்குகுழி நாட்கள்’ தமிழ்ச்சூழலில் அதிகம் கவனத்தைப் பெற்ற தொகுப்பு. இந்த இரண்டாவது தொகுப்பின் வடிவமைப்பே வித்தியாசமானது. ஈழத்தமிழருக்கு நீத்தார் கடன் செய்யும்போது இறந்தவர் நினைவாக 'கல்வெட்டு' என்கின்ற சிறுநூல் வெளியிடும் மரபு –முக்கியமாய் யாழ்ப்பாணம்
போன்ற இடங்களில்- இருக்கின்றது. அதில் காலமாகிப்போனவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறும் இன்னபிறவும் இணைக்கப்பட்டிருக்கும். அவ்வாறான ஒரு கல்வெட்டு அமைப்பில் ‘சரமகவிகள்’ தொகுப்பு வந்திருக்கின்றது. தொகுப்பின் உள்ளேயும் முகமில்லாத ஒரு மனிதரின் படம் கார்பன் தாளை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் நிகழ்ந்த பேரழிவில் கொல்லப்பட்ட எண்ணற்ற மனிதர்களுக்கான கல்வெட்டுத்தான் இதுவென நம்மால் எளிதாய் விளங்கிக் கொள்ளமுடியும்.
இத்தொகுப்பில் ஒரு பகுதியான 'வைத்தியசாலைக் குறிப்புகள் (வவுனியா மற்றும் திருகோணமலை மார்ச்-2009). ஈழத்து இறுதிப்போரைப் பற்றி வெளிவந்த அசையும்/அசையாப் படங்களைப் போன்று மிகுந்த உக்கிரமான படிமங்களுடன்
எழுதப்பட்டிருக்கின்றன, இக்கவிதைகள் வாசிப்பவரை ஒருகணமேனும் நிலை குலையச் செய்து மனித அறங்கள்
மீது நம்பிக்கையிழந்து போகவே செய்யும்..
அதில் ஒரு கவிதையான 'பொதி இலக்கம் 106ம் பிறவும்' இல்
'முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை.
இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலை தொட முதல்
முறிந்தன என்புகள்
"குழந்தைகள் போலும்"
மூடையாய் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.’
இதன் பின் எதைத்தான் எழுதி நம் துயரத்தைத் தீர்த்துக் கொள்வது?
தாயுரை 04 முடிவுற்ற போரின் விளைவுகளைச் சித்தரிக்கின்றது,
முடிவடையாத நள்ளிரவுகளில்
கிழிந்த பிளந்த நிலங்கள்
உதிரம் காண்கின்றன.
கேவல்களின் சதுப்புக் கூடாரங்களில்
யாருக்காகக் காத்திருக்கின்றன
குழந்தைகள்
தனயரில்லை,
தந்தையரில்லை,
முற்றுப்பெறவில்லை
எதுவும்.
பாதமற்ற கால்களால்
வாழ்வைக் கடந்து செல்கின்றார்கள்
நாதியற்ற மனிதர்கள்
முன்னரிங்கிருந்தன
வீடுகள்
முன்னரிங்கிருந்தன
கிராமங்கள்
வரலாற்றின் மெளனத்துக்கு முன்னால்
கடல் கொண்டதே ஒரு யுகம்.
இதுதான் இன்றைய போருக்குப் பின்பான நிலைதான் இல்லையா? 'பாதமற்ற கால்களால் வாழ்வைக் கடக்க வேண்டியிருக்கின்றது அந்த நாதியற்ற மனிதர்களுக்கு. தந்தையர்களை, தனயர்களை, கணவர்களை மட்டுமின்றி எத்தனை பிள்ளைகள் தம் தாயையும் இழந்து எவருமற்று தனியர்களாய்ப் போயிருக்கின்றார்கள் என நினைக்கும்போது வரும் துயரம் சொல்லி மாளாதது.
ஈழத்துக் கவிதைப் பரப்பில் -ஏலவே கூறியதுமாதிரி- தொடர்ச்சியுள்ள பெண் கவிஞர்களின் பரம்பரையில், புதிதாய் வந்து சேர்ந்திருப்பவர் மயூ மனோ. அவரின் முதலாவது தொகுப்பான 'நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை' அண்மையில் வெளிவந்திருக்கின்றது. அநேக முதற்தொகுப்புக்களுக்கு இருக்கும் வியப்புக்களோடும் பதற்றங்களோடும் அது வந்திருக்கின்றது.
இரு காதல் ஒரு காதலில் முதலாவது கவிதை
இரு நிழல்கள்
ஒன்று இவள்/ சற்றிறங்கிய மேகம்
தூறிக்கொண்டிருந்தது
கூடவே மரமும்
கரைந்து ஒன்றாகி
ஒரு நிழல்
காதல்
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கவிதை.
அது போல இலங்கை பாடத்திட்டத்தில் எப்படி தமிழர்களின் வரலாறு எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது என்பதை 'ஒரு ரூபாய் இலங்கைப் படம்' கவிதை சித்தரிக்கின்றது. 'என்னைத் தன் பிரசையாய்/ இயல்பாய் ஏற்றுக் கொள்ளும்/ என் நாட்டை/ தேடிச் சலிக்கின்றேன்/ என்கின்றது. போருக்குப் பின்பான இன்றைய நாட்களில் இன்னுமின்னும் எப்படி பெரும்பான்மையினரின் அரசியல் கொள்கைகள் பாடப்புத்தகங்களில் திணிக்கப்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் விரிவாக எடுத்துக் கூறத் தேவையில்லை.
மயூ மனோவின் இத்தொகுப்பில் கவனிக்கத் தக்கக் கவிதைகள் இருப்பதைப் போல தவிர்க்கப்படவேண்டிய கவிதைகளும் இருக்கின்றன. அது முதலாவது தொகுப்புக்களுக்குரிய தனித்தன்மைதான். எதைச் சேர்ப்பது எவற்றை விலக்குவது என்கின்ற குழப்பங்களின் நிமித்தம் வருவதுதான் இது. 'பெரும் வனாந்தரத்தில் பெய்ந்தோந்த மழை பற்றிய கவலை அல்லது குறிப்புகள் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை' என எழுதுமளவிற்கு மயூ தெளிவுடையவராக இருப்பவர் ஆதனால் அவரின் பயணம் தொடர்ந்து தனித்துவம் கொண்டதாய் அமையுமென்பதில் நாம் சந்தேகங்கொள்ளத் தேவையில்லை.
நன்றி: அம்ருதா- ஜூன் 2012
0 comments:
Post a Comment