1.
யமுனா ராஜேந்திரனின் 'அரசியல் இஸ்லாம்' என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாமோடு சம்பந்தப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் ஒரு தொகுப்பு எனலாம். பாலஸ்தீனப் பெருங்கவியான மஹ்முத் தர்வீஸிலிருந்து, ஈரானிய இயக்குநனரான அப்பாஸ் கியரோஸ்மியின் படங்களைப் பற்றி மட்டுமில்லாது, ஃபூக்கோ, ழான் போத்ரிலார் போன்றோர் முஸ்லிம் நாடுகளின் மீது முன்வைத்த கருத்துக்களை இடையீடு செய்வதுவரை பல்வேறு தளங்களில் யமுனா எழுதியிருக்கின்றார். இன்றைய இஸ்லாம் பற்றி அறிய விரும்புகின்றவர்களுக்கு 'அரசியல் இஸ்லாம்' என்கின்ற நீண்ட கட்டுரை நல்லதொரு திறப்பெனலாம். இஸ்லாமிலிருக்கும் பன்மைக்குரல்களை தலிபானின் அடிப்படைவாதத்தால் நாம் மூடி மறைக்க முடியாது என்பதற்காகவேனும் 'அரசியல் இஸ்லாமை'யும், 'சதாம் விட்டுச் செல்லும் மரபை' யும் வாசிக்க வேண்டும். அதேவேளை இஸ்லாமை முன்வைத்து ஒரு பகுதியாகப் பரவிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தை செப்ரெம்பர் பதினொன்றையும், இலண்டன் சுரங்கப் பாதையில் நடந்த குண்டுவெடிப்புக்களையும் முன்வைத்து விரிவாக யமுனா எழுதுகின்றார். அது மட்டுமின்றி ஈரானியப் புரட்சி 60களில் நிகழ்ந்தபோது ஃபூக்கோ முன்மொழித்த கருத்துக்கள், எப்படி பின்வந்த ஈரானிய அடிப்படைவாத அரசினால் நிராகரிக்கப்பட்டு ஈரானியப் பெண்ணியல்வாதிகளும், இடதுசாரிகளும் துடைத்தழிக்கப்பட்டார்கள் என்பதையும் இத்தொகுப்புக் கவனப்படுத்துகின்றது.
'அழிவின் பின்பான பயணம்' என்கின்ற இலண்டன் சுரங்கப்பாதைக் குண்டுவெடிப்புக்குப் பிறகு யமுனா தான் பயணிக்கும் இலண்டன் சுரங்கப்பாதையினூடாக பயணித்து எழுதுகின்ற கட்டுரை வாசிப்பவருக்கு நெருக்கத்தைத் தரக்கூடியது. இக்குண்டு வெடிப்பிற்கான காரணங்களை எல்லாத் திசைகளிலிருந்தும் அலசும் யமுனா, இறுதியில் 'இம்மாதிரி இளைஞர்களும், தாய்மார்களும் நான் வாழும் இலண்டன் புறநகரில் மட்டுமல்ல பாக்தாத், பலூஜா பேருந்துகளிலும் மேட்ரிட்டிலும் நியூயோர்க் சுரங்க இரயில்களிலும் பயணம் செய்தபடிதான் இருப்பார்கள். நமது கண் முன்பே அவர்கள் மரணமுறுகிறபோது நமது மனம் சுக்கல் சுக்கலாகித்தான் போகிறது' என முடிக்கும்போது நாமிருக்கும் இடத்தின் அமைதிக்காய் மட்டுமில்லை உலகின் பதற்றமிருக்கும் எல்லா நாடுகளிலிருக்கும் மக்களைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என்கின்ற புரிதலுக்கு வந்திருப்போம்.
கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரம் எதுவாக இருக்கும் என்பதை ஒரு அடிப்படைவாதியான தியோ வான்கோ, ஒரு முஸ்லிம் இனத்தவரால் ஹொலண்டில் கொல்லப்பட்டதை முன்வைத்து 'வின்செண்ட் வான்கோவின் இரத்தம்' என்கிற கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. இஸ்லாமில் பெண்கள் பணிந்துபோதல் பற்றி எடுக்கப்பட்ட குறும்படமான Submissionற்காய் தியோ ஒரு முஸ்லிம் அடிப்படைவாதியால் கொல்லப்படுகின்றார். பெண் ஒடுக்குமுறை குறித்து உரத்துப் பேசப்படவேண்டும் என்பதில் மறுபேச்சில்லை என்றாலும், பெண்களை ஒடுக்குதல் முஸ்லிம் சமுகத்தில் மட்டுமா இருக்கின்றதா ஏனைய மத/இன மக்களிடையே இல்லையா என யமுனா எழுப்புகின்ற கேள்வியும் முக்கியமானது. இக்கட்டுரையில் சீக்கிய சமூகத்தின் வழிபாட்டிடமான குருத்துவாராவில் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் நடைபெறுகின்றன எனச் சித்தரித்து இலண்டனில் அரங்கேற்றப்பட்ட Dishonourஐ நிகழ்த்தவிடாது எப்படி சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதையும் நாம் கவனித்தாகவேண்டும். இறுதியில் அந்நாடகத்தை அரங்கேற்றாது விலத்திக்கொள்வதாக அந்நாடகாசிரியர் தெரிவித்துமிருக்கின்றார்.
இத்தொகுப்பில் யமுனா குறிப்பிடாவிட்டாலும் இதே பிரச்சினைதான் தீபா மேத்தா வர்ணாசியில் 'வோட்டர்' படத்தை எடுத்தபோது இந்து அடிப்படைவாதக் கும்பல் படத்தை எடுக்கவிடாது தடுத்துமிருந்தது. ஆக, முஸ்லிம் மதமென்றில்லை, எல்லா மதங்களும் தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி வன்முறையைத்தான் கையாள்கின்றது என்பதை நாம் கவனித்தாக வேண்டும். மேலும் பல்வேறு உதாரணங்களைக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை இஸ்லாம் பற்றிய வெறுப்புணர்வில் இருப்பவர்களை சற்றுத் தம் கோணங்களை மீறிச் சிந்திக்க வைக்கும் என்றே நினைக்கின்றேன். அதேபோன்று அடிப்படைவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்கின்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை எவ்வாறு தீர்வாக அமையாதோ அவ்வாறே ஒரு அடிப்படைவாததிற்கு இன்னொரு அடிப்படைவாதத்தால் நாம் தீர்வுகளைக் கண்டுவிடமுடியாது. இங்கே ஒருவர் முஸ்லிம் எதிர்ப்பைச் செய்து ஒரு அடிப்படைவாதியாக இருக்க, அவரைக் கொலை செய்கின்ற மற்றொருவரும் இன்னொரு அடிப்படைவாதியாக இருக்கின்றார்; இறுதியில் இருவரின் வாழ்க்கையும் பறிபோய்விடுகின்றன என்பதுதான் பரிதாபம். இக்கட்டுரைக்கு 'வின்செண்ட் வான்கோவின் இரத்தம்' என யமுனா தலைப்பிடுவதுதான் சற்றுக் குழப்பமாக இருக்கின்றது. கொல்லப்பட்ட அடிப்படைவாதியான தியோ வான்கோ, வின்செண்ட் வான்கோவிற்கு ஏதோ ஒருவகையில் உறவுக்காரராக இருக்கின்றாரே தவிர, இருவருக்கும் சிந்தனை அடிப்படையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றது; இவ்விருவரையும் புதிதாய் அறிகின்ற ஒரு புதிய வாசகருக்கு ஓவியரான வின்செண்ட் வான்கோ பற்றிய தவறான புரிதலை இதுதரக்கூடும்; தலைப்பை மாற்றியிருக்கலாம்.
2.
ஃபூக்கோ பற்றியும் ழான் போத்திரிலார் பற்றியும் யமுனா எழுதிய கட்டுரைகள் சில புள்ளிகளில் முக்கியமானது என்றாலும் அவை ஏதோ முன்முடிவுகளோடு எழுதப்பட்டதோ என்கின்ற தொனியைத் தருகின்றன. ஃபூக்கோ ஈரானில் கலாசாரப் புரட்சி நிகழும்போது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார் என்பதை நாமனைவரும் அறிகின்ற உண்மை. அது பின்னாளில் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்தபோது அதுகுறித்து வெளிப்படையாக ஃபூக்கோ ஓர் உரையாடலை நிகழ்த்தவில்லை என்பதை நாம் அவர் மீதான விமர்சனமாக முன்வைக்கலாம். ஆனால் ஃபூக்கோ தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்களை நாம் விமர்சிக்க முடியாது. எனெனில் இன்று நம்மில் பலர் 'அரபு வசந்தங்களை' வரவேற்றபடிதான் இருக்கின்றோம். அவை நாளை எந்தப்புள்ளியில் போய்ச் சேரும் என்பது எவருக்குமே தெரியாது. அத்தகைய ஒரு புள்ளியிலேயே ஃபூக்கோவும் ஈரானியப் புரட்சியை அவர் விரும்பும் மிகப்பெரும் கலாசாரப் புரட்சியாக பெண்களுக்கு ஓரினப்பாலருக்கு அதிக நன்மைகளை விளைவிக்குமென நம்பி, தன் கருத்துக்களை முன்வைக்கின்றார்.
ஃபூக்கோவின் இந்நம்பிக்கையைப் புரிந்துகொள்ள எனக்கு தெரிதாவே உதவுகின்றார். எனெனில் அவரே 'எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல' எனக் குறிப்பிட்டு விரிவாகப் பேசுகின்றவர். மேலும் 'எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியதும்' என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா. ' (http://www.djthamilan.blogspot.ca/2008/02/blog-post_18.html). இதே நிலைப்பாடிலோ அல்லது இதற்கு கிட்டவாகவோ ஒரு எதிர்காலத்தை ஈரானியப் புரட்சியின்போது ஃபூக்கோவும் எண்ணியிருக்கக் கூடும். அதன்வழி தன் கருத்துக்களை முன்வைத்திருக்கவும் கூடும்.
ஆகவே ஃபூக்கோ மீது அவரது ஆரம்பக் கருத்துக்களுக்காய் நாம் விமர்சனம் வைப்பது எந்தளவுக்கு நியாயமானது என யமுனா யோசிக்கவேண்டும். அதே போன்று ழான் போத்ரிலாரைப் பற்றியும் 'பிம்ப அரசியலில்' மிகவும் எளிமைப்படுத்திய பார்வையை யமுனா முன்வைக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. ழான் போத்ரியாரைப் பற்றி நான் மிகவும் குறைவாகவே வாசித்திருக்கின்றேன். அவரின் ஒரு புத்தகம் பற்றிய என் வாசிப்பை இங்கே (http://www.djthamilan.blogspot.ca/2008/05/blog-post_08.html) பதிவு செய்திருக்கின்றேன். நான் வாசித்த போத்ரிலாருக்கும் யமுனா முன்வைக்கும் போத்ரிலாருக்கும் வித்தியாசங்கள் வாசிப்பில் இருக்கின்றன.
3.
யமுனாவை உயிர்நிழலில் அவரெழுதிய காலங்களிலிருந்து அவதானித்தே வருகின்றேன். அவரின் தொடக்கக்கால கட்டுரைகள் நீளமாகவும் மிகவும் வறட்சித்தன்மையாகவும் எனக்குத் தெரிந்தது என்பதை மறைக்காது குறிப்பிடவேண்டும். அன்றைய காலத்தில் மட்டுமின்றி இன்றும் அப்படியே நீளம் நீளமாகவும் உலர்ந்த தன்மையிலும் எழுதும் இன்னொருவர் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார். அவர் பெயரைக் கூறலாந்தான். ஆனால் தான் மட்டுமே செய்கின்ற புரட்சியைக் குலைக்க வந்த குரங்குகள் என வசை பொழிந்தொரு கட்டுரை எழுதிவிடுவார் என்பதால் அவர் பெயரை இங்கே தவிர்க்கின்றேன். ஆனால் பிறகான காலங்களில் யமுனாவின் கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசித்து வந்திருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை அவரின் கட்டுரை மொழி பின்னாளில் மாறியிருக்கின்றதெனவே நினைக்கின்றேன். யமுனாவின் கட்டுரைகளில் சிலபொழுது விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் பரந்த வாசிப்பு, பல விடயங்களை ஒரு கட்டுரையில் இணைக்கின்ற நேர்த்தி என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆக நான் பின் தொடர்கின்ற ஒரு கட்டுரையாளர் பற்றிய எனது விமர்சனத்தையும் வைத்தாக வேண்டும் அல்லவா?
புலம்பெயர்ந்த தேசத்துக்கு வரும் பல இந்தியப் படைப்பாளிகள் அவ்வப்போது சில அதிரடி அறிக்கைகள் விடுவார்கள். சிலர் இங்கே வரும்போது அறிக்கை எறிவார்கள், வேறு சிலர் இந்தியாவிலிருந்தே வெடிப்பார்கள். இதை வெங்கட்சாமிநாதன், இடையில் தேவசகாயகுமார், 'என்றும்' ஜெயமோகன் என இந்த வரிசையில் முன்னணியில் நிற்க அடிபடுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அந்த எறிகுண்டு எப்படியிருக்குமெனில் 'தமிழகத்திலேயே என்னைவிட வேறெவருமே ஈழப்படைப்புக்களை இந்தளவு விரிவாகவும் ஆழமாகவும் நிறையவும் வாசித்தவர்கள் இல்லை' என்பது. எனக்கு இவ்வாறான 'காமடிகளை'க் கேட்கும்போது, இனி இந்தியாவுக்கு இலங்கையிலிருந்தோ, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்தோ அல்லது புலம்பெயர்தேசங்களிலிருந்தோ செல்பவர்கள் இந்தியாவில் போய் இறங்கியவுடன், 'ஆமாம், என்னைவிட இந்தியப்படைப்புக்களை வேறெவரும் வாசித்ததில்லை, நாங்கள் கூறுவதே சரி, நீங்கள் ஒருவரும் எதிர்த்து வாய் திறக்கக்கூடாது' என உரத்துச் சொல்லவேண்டும் என நினைப்பேன். அப்போதெனினும் இவர்களின் வாய்த் துடுக்கு அடங்குகிறதா எனப் பார்க்கவேண்டும். ஆம் நண்பர்களே, இறுதியில் அதுதான் நிகழ்ந்தது. அண்மையில் கனடாவுக்கு வந்த யமுனாவும் இவ்வாறான ஒரு அதிரடி 'ஸ்டேட்மெண்டை' வீசினார் எனக் கேள்விப்பட்டபோது.....!
.............
2 comments:
அன்புள்ள டி.சே.தமிழன், அரசியல் இஸ்லாம் புத்தக விமர்சனத்துக்கு எனது நன்றி. உங்களது அபிப்பிராயங்களை நான் மதிக்கிறேன். நான் கனடாவில் பேசியதாகச் சொல்வது எந்தத்தருணம் என்பதும் நான் பேசியது என்ன என்பதும் பிழையாக முன்வைக்கப்பட்டிருப்பதால் அதனைக் குறித்து மட்டுமே தெளிவுபடுத்த விரும்;புகிறேன்.
8/17/2012 08:35:00 PMஅகந்தையில் இருந்த நான் பேசவில்லை. 18 ஆண்டுகள் கழித்து ஏன் நான் கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலுக்கு விமர்சனம் எழுதவேண்டும் என ஒரு கேள்வி வந்தது. அந்த விமர்சனத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் நோக்கம் கொண்ட கருத்து அது என நான் நினைக்கிறேன். அப்போதுதான் நான் சொன்னேன் : ஈழம் குறித்து வெளியான நாவல்கள் அனைத்தும் குறித்தும் தனியனாக நான் எழுதியிருக்கிறேன். எப்போது எதை எழுத வேண்டும் எனக் கேட்க எவருக்கும் உரிமை இல்லை என்றேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் வெறுமனே கேள்விகள் மட்டுமே கேட்கத்; தெரிந்த மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய விமர்சனம் அல்லது சுயவிமர்சனம் எனும் அளவில் உருப்படியாக ஒரு பத்தி கூட அறிவுபூர்வமாக, வெளிப்படையாக (நக்கலுக்கு எந்தவித அரசியல் பெருமதியும் இல்லை) எழுதவில்லை, நான் அறுபது கட்டுரைகள் அது பற்றி எழுதியிருக்கிறேன். அது 700 பக்கத்தில் தொகுப்பாகவும் வருகிறது எனக் குறிப்பிட்டேன்.
அபத்தமான கேள்விகளுக்கான எதிர்விணையாக நான் எனது வாசிப்பையும் எழுத்தையும் குறிப்பிட்டேனேயல்லாது எழுந்தமானமாக இதனை நான் எதனையும் கோரிக்கொள்ளவில்லை. மேலாக, டி.சே. இந்த எனது வாசிப்பும் எழுத்தும் எனது உளநெருக்கடியில் தோன்றியவையேல்லாது எதனையும் கோரிக்கொள்வதற்கு என நான் தேர்ந்து கொண்டது இல்லை. சமகால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும் அதிலிருந்து விடுபடும் யத்தனத்திலும்தான் நான் வாசிக்கிறேன் எழுதுகிறேன். பூக்கோ,போத்ரிலாரை விடவும் எனக்கு இன்றைய ஈhரனியப் புரட்சி குறித்த புரிதல்களும், போத்ரிலாரை விடவும் ஊடகம் குறித்த சோம்ஸ்க்கியின் செயல்பாடும்தான் எனக்கு முக்கியம். வேறுவகையில் என்னால் இவர்களைப் பார்த்திருக்க முடியாது. மறுபடி நன்றி. அன்புடன் ராஜேந்திரன்
விரிவான விளக்கத்திற்கு நன்றி யமுனா.
8/21/2012 02:55:00 PMPost a Comment